Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெடமுலான வம்சம்” ; டொன் அல்வின் ராஜபக்சவின் நான்கு மகன்மாரும் மூன்று பேரப்பிள்ளைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெடமுலான வம்சம்” ; டொன் அல்வின் ராஜபக்சவின் நான்கு மகன்மாரும் மூன்று பேரப்பிள்ளைகளும்-1

டி.பி.எஸ் ஜெயராஜ்
…………………………………
    பசில் ரோஹன ராஜபக்ச  ஜூலை 8, 2021 அவரது சகோதரர் ஜனாதிபதி கோதாபய  ராஜபக்சவினால் இலங்கை அரசாங்கத்தின் நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார். அந்த நியமனத்தை பெரிதும் பாராட்டிய பசிலின் ஆதரவாளர்கள் புதிய நிதியமைச்சரை, நாடு  மூழ்கிக்கொண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து அதை விடுவிக்கப்போகும் ‘ மீட்பர் ‘ என்று வர்ணிக்கிறார்கள்.கோட்பாட்டு பிடிவாதத்தை குறைவாக கொண்டவரும் கூடுதலான அளவுக்கு நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பவருமான பசில் காரியங்களைச் செய்விப்பதில் வல்லவர் என்று புகழ் பெற்றவர் என்று கூறப்படுகிறது. அத்துடன் நிதி விவகாரங்களை  இந்த கட்டத்தில் கையாளுவதற்கு சரியான தெரிவு அவரே என்றும் கூறப்படுகிறது.
 இதை அபத்தம் என்று அலட்சியம் செய்யும் ராஜபக்ச எதிர்ப்பு முகாம் பசில் ஒரு தீர்வு அல்ல, தற்போதைய நெருக்கடியின் தெளிவாகக்காணக்குடிய அடையாளம் மாத்திரமே என்று கூறுகிறது.இலங்கை விரைவாக ஒரு ” தோல்விகண்ட அரசாக” மாறிக்கொண்டுவருகிறது என்றும் சுட்டிக்காட்டும் அவர்கள் நோய்க்கு ஒரு மருந்தாக பசிலின் நியமனம் அவரது சகோதரர் ஜனாதிபதி ராஜபக்சவின் தோல்வியையே வெளிக்காட்டுகிறது.
image_5ff8382708-300x169.jpg
 
 இவையிரண்டும் அரசியல்ரீதியில் துருவமயப்பட்ட இலங்கையில் புதிய நிதியமைச்சர் நியமனம் தொடர்பிலான பரந்தளவு முரண்பட்ட நிலைப்பாடுகள் என்றால், பசிலின் உயர்வு உலகின் செல்வாக்குமிக்க ஊடகங்களில் சில பிரிவினர் மத்தியில் சுவாரஸ்யமான எதிர்வினையைக் கிளப்பியிருக்கிறது.இது ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் அதிகார மேலாதிக்கத்தை ஒரு தனிக்குடும்பம் அனுபவிக்கின்றதற்கு ஒரு பிரகாசமான உதாரணமாக விளங்குகின்றது. பெரும் செல்வாக்குமிக்க ” நியூயோர்க் ரைம்ஸில்” அதன் தெற்காசிய செய்தியாளர் முஷிப் மாஷால் எழுதிய கட்டுரையொன்றின் தலைப்பு ” இலங்கையில் அரசாங்கம் ஒரு குடும்ப நிறுவனம் பெருமளவுக்கு ஒரு குடும்ப நிறுவனம் போன்று தெரிகிறது” என்பதாகும். இந்தியாவின் மதிப்புமிக்க பத்திரிகையான ‘ த இந்து’ வின் கொழும்பு  செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் ” ராஜபக்சாக்கள்/ ஒரு அரசாங்கத்தில் நான்கு சகோதரர்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.
D._A._Rajapaksa.jpg
 
    மேற்குலக நோக்கில் இருந்து பார்க்கும்போது இலங்கை அரசியலில்  ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் ஒரு விசித்திரமான தோற்றப்பாடாக தெரிவது எவ்வாறெனினும் விளங்கிக்கொள்ளக்கூடியதேயாகும். இந்தியாவில் அரசியல் ஒரு குடும்பத்தின் வியாபாரமாக விளங்குவதற்கு பல உதாரணங்களைக் கூறலாம்.தெற்காசியாவிலும் அவ்வாறே. ஆனால்,இலங்கையில் அரசாங்கத்தின் உயர்பீடங்களை ஒரு தனிக்குடும்பம் ஆதிக்கம் செலுத்துகின்ற அளவுக்கு அந்த நாடுகளில் குடும்பங்களின் ஆதிக்கத்தை காண்பது அரிது.இலங்கை சட்டரீதியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகிற அரசாங்கங்களைக்கொண்ட ஒரு நாடு என்பதே இங்கு ” தனித்துவமான ” அம்சமாக நோக்கப்படவேண்டியதாகும்.
chamal2-300x300.jpg
 
 மத்திய கிழக்கில் அல்லது புரூனியில் அரசாங்கங்களை ஒரு குடும்பம் அல்லது அதன் அகன்ற குடும்பம் ஆதிக்கம் செலுத்துவது மிகவும் வழமையானதாகும்.இந்த நடைமுறை சில ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க சர்வாதிகார ஆட்சிகலும் காணப்படுகிறது. குறைபாடுகளுடனானதாக இருந்தாலும் இலங்கை ஒரு துடிப்பான ஜனநாயக நாடு என்பதே இங்குள்ள வித்தியாசமாகும்.இருந்தும் கூட இலங்கையில் ஒரு குடும்பம் அரசாங்கத்தின் மீது பரந்தளவிலான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது.அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற பட்ஜெட் நிதியில் 75 சதவீதமானவை ராஜபக்ச குடும்பத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் அமைச்சுக்களுக்கு உரியவையே.
Mahinda-Rajapakasa-3-300x150.png
 
  தற்போது ஒரு தலைமுறையைச் சேர்ந்த நான்கு ராஜபக்சாக்கள் ஜனாதிபதியாக, பிரதமராக, அமைச்சரவை அமைச்சர்களாக அரசாங்கத்தில் கோலோச்சுகிறார்கள்.ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கிறார்.பிரதமர் மகிந்த ராஜபக்ச பொருளாதாரக் கொள்கைகள் மற்றும்  திட்ட நடைமுறைப்படுத்தல், புத்தசாசன,மத, கலாசார விவகாரங்கள்,நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர்.பசில்  ரராஜபக்ச புதிய நிதியமைச்சர்.மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச அமைச்சரவையில் நீர்ப்பாசன அமைச்சராக இருக்கிறார்.தேசிய பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ, உள்விவகார இராஜாங்க அமைச்சராகவும் சமால் பதவி வகிக்கிறார்.
 
 
GOtabaya-1-300x150.jpg
 
basil1.jpg
 
 
 அடுத்து ராஜபக்ச குடும்பத்தின் இளைய தலைமுறையை பார்ப்போம்.மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை, டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சராக இருக்கிறார்.சமாலின் மகன் சுசீந்திர ராஜபக்ச முன்னர் ஊவா மாகாண முதலமைச்சராக பதவியில் இருந்தவர்.அவர் இப்போது பல அமைச்சுப்பொறுப்புக்களுடனான இராஜாங்க அமைச்சராக இருக்கிறார்.சேதன பசளை உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவு, மரக்கறி வகைகள், பழங்கள் மிளகாய்,  வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை, மேம்படுத்தல், விதை உற்பத்தி,விவசாயத்துக்கான உயர்தர தொழில்நுட்பம் ஆகியவை அவரின் பொறுப்பில் இருக்கின்றன.நாமலுக்கும் சசீந்திரவுக்கும் மேலதிகமாக இன்னொரு மைத்துனர்  நிபுண ரணவக்கவும் எம்.பி.யாக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.அவர் ராஜபக்சாக்களின் இளைய சகோதரி காந்தனி ரணவக்கவின் மகனாவார்.
ஏழு உறுப்பினர்கள்
…………………………………
இவ்வாறாக, ” மெடமுலான குடும்பத்தலைவர்” டொன் அல்வின் ராஜபக்சவின் ( டி.ஏ.ராஜபக்ச) குடும்பத்தின் ஏழு உறுப்பினர்கள் சமகால இலங்கையின் அரசியலில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள்.அவரது மகன்களில் கோதாபய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி,  மகிந்த முன்னர் ஜனாதிபதி, இப்போது பிரதமர், சமாலும் பசிலும் அமைச்சரவை அமைச்சர்கள்.அவரது பேரப்பிள்ளைகளில் நாமல் அமைச்சரவை அமைச்சர், சசீந்திர இராஜாங்க அமைச்சர்.இன்னொரு பேரன் நிபுண பாராளுமன்ற உறுப்பினர்.டி.ஏ.ராஜபக்ச இரு தசாப்தங்களாக அரச சபை உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.அந்த வருடங்களில் அவர் பிரதி அமைச்சராக, அமைச்சராக, பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளராக, பிரதி சபாநாயகராக அவர் பதவி வகித்தததை அடிப்படையாகக் கொண்டுபார்க்கும்போது விதைகள் மரத்தின் மிக உயரத்தில் இருந்து விழவில்லை என்று தோன்றுகிறது.
Namal-Rajapaksa-parliment-300x150.jpg
 
  ஆனால், டி.ஏ.ராஜபக்சவுக்கும் அவரது வாரிசுகளுக்கும் இடையில் ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதை  நிச்சயம் அவதானிக்கவேண்டும்.தனது பல  வாரிசுகளைப் போலன்றி,  டி.ஏ. ராஜபக்ச அமைச்சுப்பதவிகளுக்கு பேராசை கொண்டவரோ அல்லது அரசியல் அதிகாரத்தின் மீது வெறிகொண்டவரோ அல்ல.அதிகாரத்தின் மீதும் பதவிகள் மற்றும்  வரப்பிரசாகங்கள் மீதும் பேராசை இல்லாத ஒரு எளிமையான அரசியல்வாதியான அவரைப்போன்றவர்களைக் காண்பது அரிது. தன்னடக்கமான — பகடில்லாத டி.ஏ.ராஜபக்ச போன்ற அரசியல்வாதியொருவர் கடந்த காலத்தில் இலங்கை அரசியல் அரங்கில் வெற்றிகரமாக நடைபோட்டார் என்பதை நம்புவது கடினம்.டொன் அல்வின் ராஜபக்சவின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளின் கைகளில் அரசியல் அதிகாரம் மிகையாக இப்போது குவிந்துகிடக்கின்ற தற்போதைய நிலையையும் நம்புவது கஷ்டம்.
  இத்தகைய பின்புலத்திலேலே, இந்த கட்டுரை, குறிப்பாக டி.ஏ.ராஜபக்சவினதும்  பொதுவில் மெடமுலான ராஜபக்ச  குடும்பத்தையும் பற்றி கவனம் செலுத்துகிறது.இந்தக் கதை முன்னர் கூறப்பட்டதே எனினும் இங்கே திரும்பக்கூறுவது பொருத்தமானதே.கடந்த காலத்தில் ருஹுணு ராஜபக்சாக்களின் எழுச்சி பற்றி எழுதியிருக்கிறேன்.இந்த கட்டுரையை எழுதும்போதும் பழைய எழுத்துக்களில் தங்கியிருக்கிறேன்.
download-32.jpg
 
    ராஜபக்சாக்களைப் பற்றி இருவரிடமிருந்து நான் நேரடியாகவே விபரங்களை பல வருடங்களுக்கு முன்னர் பெற்றேன்.அவர்கள் இருவரும் இன்று உயிருடன் இல்லை. ஒருவர் சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான புத்திக குருகுலரத்ன.அவர் கடந்தமாதம் காலமானார்.தனக்கு தெரிந்தவற்றுக்கு அப்பால், ராஜபக்ச குடும்பத்தின் சில  உறுப்பினர்களுடன் கதைத்து கூடுதல்  தகவல்களைப் பெற்றுத்தருகின்ற அளவுக்கு பெருந்தன்மையை அவர் வெளிக்காட்டினார்.அடுத்தவர் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் குறைகேள் அதிகாரியுமான சாம் விஜேசிங்க.2014 ஆம் ஆண்டில் காலமான அவர் தெற்கைச் சேர்ந்தவர்.அத்துடன் ராஜபக்சாக்களுக்கு உறவுக்காரர்.டி.ஏ.ராஜபக்சவை அவர் மாமா என்றே அழைப்பார்.
  ருஹுணுவில் அசைக்கமுடியாத ஒரு  அரசியல் குடும்பமாக ராஜபக்சாக்களின் எழுச்சி டி.ஏ.ராஜபக்சவின் தந்தையும் மகிந்த மற்று சகோதரங்களின் பாட்டனாருமான டேவிட் விதானாராச்சி ராஜபக்சவுடன் தொடங்கியது.தென்பகுதியில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரக்கெட்டியவில் புதியங்கம கிராமத்தைச் சேர்ந்தவர் டொன் டேவிட் ராஜபக்ச.சிங்கள மன்னர்களின் புராதன ருஹுணு இராச்சியம் இன்று காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகல மாவட்டங்களாக இருக்கும் பகுதிகளை உள்ளடக்கியதாகும். டொன் டேவிட் அல்லது டி.டி.ராஜபக்ச  இஹல வலிகட கோரளை என்று அறியப்பட்ட கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களின் கொத்தணியின் மரபுவழி கிராமத்தலைவராவார்( விதான ஆராய்ச்சி).
 
                   (தொடரும்)

 

https://thinakkural.lk/article/128026

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெடமுலான வம்சம்” ; டொன் அல்வின் ராஜபக்சவின் நான்கு மகன்மாரும் மூன்று பேரப்பிள்ளைகளும்-2

டி.பி.எஸ் ஜெயராஜ்
…………………………………
image_5ff8382708-300x169.jpg
பிரிட்டிஷாரால் கடைப்பிடிக்கப்பட்ட கிராமத்தலைவர் என்ற அரை நிலப்பிரபுத்துவ பதவி நடைமுறை இப்போது கிராம நிலதாரி முறைமையினால் பதிலீடு செய்யப்பட்டுவிட்டது.இன்றைய கிராம நிலதாரிகள் அதிகாரமற்ற அரசாங்க ஊழியர்களாக இருக்கின்ற அதேவேளை, காலனித்துவகால  விதான ஆராச்சி அவரது அதிகாரத்தின் கீழ் இருந்த பகுதிகளில் ஒரு சிறு எதேச்சாதிகாரியாகவே செயற்பட்டார்.ராஜபக்ச குடும்பம் வாழ்ந்த பகுதி கிருவேவ/ கிருவப்பட்டுவ என்று அறியப்பட்ட பிரிவாகும்.அது பயிர்கள், மரக்கறி வகைகள்,தென்னந்தோட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை உள்ளூர்ப்பொருளாதாரத்தின் அடிப்படைகளாகக் கொண்ட ஒரு விவசாயப் பிரதேசமாகும். சேனைப்பயிர்ச்செய்கை வழமையானதாக இருந்தது.குரக்கன், தினை அல்லது சாமை பயிர்ச்செய்கை வழமையானதாக இருந்தது.பொதுவில் அந்த பிராந்தியம் ” குரக்கன் நாடு ” என்று  கருதப்பட்டது.
    டி.டி.ராஜபக்சவுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.மூத்தவர் டொன் கரோனிலிஸ் ராஜபக்ச அல்லது டி.சி.ராஜபக்ச.அவர் அந்த பகுதியின் மரணவிசாரணை அதிகாரியாக பதவி வகித்தார்.இரண்டாவது மகன் டொன் மத்தியூ ராஜபக்ச .இளைய மகன் டொன் அல்வின் ராஜபக்ச.நேரடியான தேர்தல் அரசியல் பிரவேசத்தை முதலில் செய்தவர் டொன் மத்தியூ ராஜபக்ச அலலது டி.எம். ராஜபக்ச. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரச சபை உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.அவருக்கு பிறகு இளைய சகோதரர் டொன் அல்வின் ராஜபக்ச அல்லது  டி.ஏ.ராஜபக்ச அரச சபை உறுப்பினரானார். சுதந்திரத்துக்கு பிறகு அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
  கிருவப்பட்டுவ ராஜபக்சாக்கள் பெரிதும் மதிக்கப்பட்ட பழைய தென்மாகாண கொவிகம குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் ஆழமான பௌத்த வேர்களைக் கொண்டர்கள். விவசாயத்துடன் ஒன்றித்துப் போனவர்கள்.காலனித்துவ ஆசான்களிடமிருந்து பதவிகளையும் வசதி வாய்ப்புக்களையும் பெற்ற வேறு சில முன்னணி சிங்கள குடும்பங்களைப் போலன்றி கிருவப்பட்டுவ ராஜபக்சாக்கள் மனவுறுதியுடன் சுதந்திரமானவர்களாக வாழ்ந்தார்கள்.
    அந்த திடகாத்திரமான சுதந்திரம் மற்றும் காலனித்துவ விரோத உணர்வுக்கு முதல் உதாரணம் ” ருஹுணுவின் சிங்கம்” என்று பிரபல்யமாக அறியப்பட்ட டி.எம்.ராஜபக்சவே.சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட 1931 ஆம் ஆண்டில் அரச சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டபோது அம்பாந்தோட்டை தொகுதியில் டி.எம்.ராஜபக்ச வி.எஸ்.விக்கிரமநாயக்கவை ஆதரித்தார்.அவர் தெரிவுசெய்யப்பட்டார்.1936 ஆம் ஆணடில் டி.எம்.ராஜபக்சவே நேரடியாக அரசியலில் இறங்கி தேர்தலில் போடடியிட்டார்.அந்தக்காலத்தில் வேட்பாளர்கள் தங்களது வாக்குப்பெட்டிகளுக்கு  வெவ்வேறு நிறங்களை  பயன்படுத்தினார்கள்.டி.எம்.மண்ணிறத்தை தெரிவுசெய்தார்.அது குரக்கன் நாட்டை அடையாளப்படுத்தும்   நிறமாகும்.அவர் 12,097 பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்றார்.
  டொன் மத்தியூ ராஜபக்ச
…………………………….
     டொன் மத்தியூ ராஜபக்ச ஒரு மக்கள் தலைவர்.அவர் ஒடுக்கப்பட்ட — வசதிகுறைந்த மக்களின் நலன்களுக்காகவே குரல்கொடுத்தார்.றொடியா சமூகத்தின் மேம்பாட்டுக்காக அவர் பாடுபட்டார்.கிருவப்பட்டுவவை அடையாளப்படுத்துவதற்காக முதலில் குரக்கன் நிறச்சால்வையை அணியும் நடைமுறையை ஆரம்பித்தவர் டி.எம்.ராஜபக்சவேயாவார்.இந்த நடைமுறை பிறகு அவரது சகோதரராலும் சகோதரரின் மகன்களாலும் பின்பற்றப்பட்டது.இன்றைய ராஜபக்சாக்களினால் அணியப்படும் ” சாட்டக ” வெறுமனே ஒரு நேர்த்தியான கவர்ச்சி எண்ணத்தின் அடிப்படயிலானதல்ல்.அந்த நடைமுறைக்கு ஆழமான அர்த்தமுடைய வேர்கள் இருக்கின்றன.
  துரதிர்ஷ்டவசமாக டி.எம்.ராஜபக்ச 1945 ஆம் ஆண்டில் 49 வயதில் காலமானார்.அந்த வேளையில் அவரது மூத்த மகன் லக்ஸ்மன்  வாக்களிப்பதற்கான தகுதி வயதை  (21)எட்டவில்லை.அதனால் தேர்தலில் போட்டியிடும் பொறுப்பு டி.எம்.மின் தன்னடக்கமான இளைய சகோதரர் டொன் அல்வின் ராஜபக்சவின் தோழில் வீழ்ந்தது.அவர் நவம்பர் 6, 1905 பிறந்தவர்.அவர்களது தந்தையார் டி.டி.ராஜபக்ச 1912 ஆம் ஆண்டில் இறந்தார்.டிஎம்.ராஜபக்ச சமூகசேவையிலும் அரசியலிலும் ஈடுபட்ட அதேவேளை, அவரது சகாதரர் டி.ஏ. ராஜபக்ச குடும்பத்தின் தொழிலான விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டார்.மூத்த சகோதரர் கொண்டகலவில் மகாகெதரவிலும் இளையவர் மெடமுலான மகாகெதரவிலும் வாழ்ந்தார்கள்.
  டொன் அல்வின் ராஜபக்சமாத்தறை  பலதுவவைச் சேர்ந்த டோனா டண்டினா சமரசிங்க திசாநாயக்கவை மணந்தார்.அவர்களுக்கு 6 ஆண் பிள்ளைகளும் மூன்று  பெண்பிள்ளைகளும் பிறந்தார்கள்.அவர்களின் பெயர்கள் சமால், ஜயந்தி,மகிந்த, ரியூடர்,கோதாபய,பசில், டட்லி,பிரீதி, காந்தனி.
  டி.எம்.ராஜபக்சவின் மறைவுக்கு பிறகு  கிருவப்பட்டுவ மக்கள் சகோதரரின் வழியைப் பின்பற்றி டி.ஏ.ராஜபக்ச அரசியலில் இறங்கவேணடும் என்று விரும்பினார்கள்.டி.எம்.ராஜபக்சவின் மகன்கள் லக்ஸ்மனும் ஜோர்ஜும் அந்த வேளையில் மிகவும் இளையவர்களாக இருந்தார்கள்.விவசாயத்துடன் திருப்திப்பட்டு வாழ்ந்துகொண்டிருந்த டி.ஏ. மறுத்தார்.இறுதியில் கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் குழுவொன்று டி.ஏ. உழுதுகொண்டிருந்த வயலுக்கு ஊர்வலமாகச் சென்றது.அவர்கள் தங்களிடமிருந்த நியமனப்பத்திரங்களைக்காட்டி அரச சபைக்கு தேர்தலில் போட்டியிடுமாறு டி.ஏ.யை வற்றுறுத்தினர்.டி.எம்.மின் இடத்தை அரசசபையில் டி.ஏ. நிரப்பவேண்டும் என்பதே கிராமத்தவர்களின் வலியுறுத்தல்.
டொன் அல்வின் ராஜபக்ச
…………………………..
D._A._Rajapaksa.jpg
இறுதியில் டொன் அல்வின் ராஜபக்ச இணங்கிக்கொண்டார்.கைகளிலும் கால்களிலும் இருந்த சேற்றை கழுவிவிட்டு அவர் நியமனப்பத்திரங்களில் கைச்சாத்திட்டார். அப்போது அங்கு நின்ற ஆதரவாளர்களில் ஒருவர் ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக தனது சால்வையை கழற்றி டி.ஏ.யின் கழுத்தில் அணிவித்தார்.அதற்கு பிறகு குரக்கன் சாட்டக பாரம்பரியம் தொடர்ந்தது.அம்பாந்தோட்டை தொகுதியை அரச சபையில் பிரதிநிதித்துவப்படுத்தி ஜூலை  14, 1945 போட்டியின்றி அவர் தெரிவு செய்யப்பட்டார்.
  டி.ஏ.ராஜபக்ச காலி றிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவர்.ஆங்கிலத்தில் திறமையுடையவர்.கல்லூரியின் உதைபந்தாடட அணியின் தலைவராகவும் கிரிக்கெட் அணியின் உப தலைவராகவும் இருந்தவர் .மொரட்டுவ பிரின்ஸ் ஓஃப் வேல்ஸ் கல்லூரியுடனான ஆட்டத்தில் அவர் நிகழ்த்திய சாதனை இன்னமும் முறியடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இருந்தாலும் முழுஅளவிலான விவசாயியாக வருதில் அவருக்கு எந்தவிதமான மனச்சங்கடமும் அவருக்கு இருந்ததில்லை.அரச சபைக்குள் ஆகஸ்ட் 8, 1945 பிரவேசித்து பதவிப்பிரமாணம் செய்தபோது டி.ஏ.விவசாயம் மற்றும் காணி தொடர்பான நிறைவேற்றுக்குழுவின் ஒரு உறுப்பினரானார்.
  டி.ஏ. ராஜபக்ச பாராளுமன்றத்தில் பெலியத்த தொகுதியை (1960 ஆம் ஆண்டு ஒரு குறுகிய காலம் தவிர)1947 தொடக்கம் 1965 வரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.1960 மார்ச் பொதுத்தேர்தலில் ஐ.தே.க.வின் டி.பி.அத்தபத்துவிடம் டி.ஏ. தோல்விகண்டார்.1965 பொதுத்தேர்தலிலும் மீண்டும் அதே அத்தபத்துவிடம் அவர் தோல்வி கண்டார்.1947 ஆம் ஆண்டில் ஐ.தே.க.வின் வேட்பாளராக பெலியத்தையில்  ராஜபக்ச போடடியிட்டு வெற்றிபெற்றார்.பிறகு அவர் 1965 வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராகவே தேர்தல்களில் போட்டியிட்டார்.
  டொன் அல்வின் ராஜபக்ச எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார்.பண்டாரநாயக்க ஜூலை 12, 1951 ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறினார்.பாராளுமன்றத்தில் அவர் கட்சிமாறியபோது ஐந்து பேர் ( ஏ.பி.ஜெயசூரிய, ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா ,ஜயவீர குறுப்பு ,டி.எஸ்.குணசேகர, டி.ஏ.ராஜபக்ச ) அவரைப் பின் தொடருவர் என்று கருதப்பட்டது.ஆனால், அந்த தருணம் வந்தபோது டி.ஏ.ராஜபக்ச மாத்திரமே் பண்டாரநாயக்கவை நிழல் போல் பின் தொடர்ந்து கட்சி மாறினார்.மற்றவர்கள் கட்சி மாற பயந்தாலும் பின்னர் பண்டாரநாயக்கவின் பக்கத்துக்கு வந்தார்கள். செப்டெம்பர் 2, 1951 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைக்கப்பட்டது.கட்சி தொடங்கப்படுவது பற்றிய அறிவித்தலில் கைச்சாத்திட்ட 44 பேரில் டி.ஏ.ஒருவர்.1952 மே பொதுத்தேர்தலில் புதிய கட்சியான சுதந்திர கட்சி ஒன்பது ஆசனங்களை வென்றது.வெற்றிபெற்றவர்களில் டி.ஏ. ஒருவர்.
டி.ஏ.ராஜபக்சவின் குணாதிசயங்கள்
……………………………
  இந்த வகையாக போற்றுதலுக்குரிய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் டி.ஏ.வெளிக்காட்டியபோதிலும் 1956 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட பண்டாரநாயக்க அரசாங்கத்திலோ 1960 ஜூலை அமைச்சரவையிலோ அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.விசுவாசத்தை வெளிக்காட்டிய போதிலும் சுதந்திர கட்சிக்குள் அவருக்கு உரிய இடம் நிராகரிக்கப்பட்டது என்றேமுதலில் நான் நினைத்தேன்.ஆனால், அவருக்கு பதவிகளை பெறுவதில்  ஆசை  இருக்கவில்லை என்று சாம் விஜேசிங்க மற்றும் புத்திக குருகுலரத்னவிடமிருந்து அறிந்துகொண்டேன்.ஏற்னெவே கூறப்பட்டதைப்போன்று  டி.ஏ. ராஜபக்சவின்  இந்த குணாதிசயங்கள் தற்போது அதிகாரத்தின் உச்சியில்  இருக்கும் அவரது வழித்தோன்றல்களின் குணாதிசயங்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றன.
15124870464_4a440f89f9_b-201x300.jpg
    1956 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க எந்தவொரு அமைச்சரவை பதவியையும் ( சி.பி.டி.சில்வாவுக்கு கொடுக்கவிருந்ததை தவிர) டி.ஏ.யுக்கு வழங்க தயாராகவிருந்தார்.ஆனால், டி.ஏ.உறுதியாக மறுத்துவிட்டார்.ஆனால், அவர் தனது பெறாமகன் லக்ஸ்மனுக்கு (டி.எம்.ராஜபக்சவின் மகன்) மாத்திரம் ஒரு பிரதியமைச்சர் பதவி கொடுக்கப்படவேண்டும் என்று விரும்பினார்.அதனால் லக்ஸ்மனுக்கு வர்த்தக, வாணிப பிரதியமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அந்த பொறுப்புகளுக்கான அமைச்சராக ஆர்.ஜி.சேனநாயக்க இருந்தார்.ஆனால், தங்காலை வழக்கறிஞர் விக்கிரமசூரிய தலைமையில் அம்பாந்தோட்டை மக்கள் பண்டாரநாயக்கவிடமும் டி.ஏ.யிடமும் ஆட்சேபத்தை தெரிவித்தனர்.அதனால், சி.பி.டி.சில்வாவின் கீழ் காணி, நீர்ப்பாசன, விவசாய பிரதியமைச்சராக பதவியேற்பதற்கு டி.ஏ.நிர்ப்பந்திக்கப்பட்டார்.
download-33.jpg
    1959 செப்டெம்பர் 26 எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்கவின் கொலையையடுத்து குறுகிய காலமே பதவியில் இருந்த கலாநிதி தஹாநாயக்காவின் அமைச்சரவையின்போது டி.ஏ.ராஜபக்ச விவசாய, காணி அமைச்சராக இருந்தார். கிறுக்குப்பிடித்த தஹாநாயக்கவினால்  பதவிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்கூட்டியே டி.ஏ.இரு வாரங்களில் அக்டோபர் 10 தனது பதவியை இராஜினாமா செய்தார்.பிரதமர் தஹாநாயக்க பல அமைச்சர்களை ஒரேயடியாக பதவிநீக்கிவிட்டு புதியவர்களை நியமித்துக்கொண்டிருந்த நேரம் அது.
  1960 ஜூலையில் சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார்.அவர் டி.ஏ. க்கு அமைச்சரவை பதவியொன்றை வழங்க முன்வந்தார்.ஆனால்டி.ஏ. ஏற்க மறுத்துவிட்டார். அதையடுத்து அவருக்கு சபாநாயகர் பதவியை கொடுக்க திருமதி பண்டாரநாயக்க முன்வந்தார் அதையும் அவர் ஏற்கவில்லை.மும்தாஜ் மஹாலை விடவும் மெடமுலானவில் உள்ள தனது வீட்டையே தான் விரும்புவதாக ராஜபக்ச தெரிவித்ததாக கூறப்படுகிறது.கொழும்பில் இருக்கும்போது சிராவஸ்தியில் இருந்த ஒரு அறையையே அவர் தொடர்ந்து பயன்படுத்தினார்.நவம்பர 6, 1962 பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரான வாரியப்பொல எம்.பி.ஏ.எம்.ஏ.அதிகாரி காலமானதையடுத்து அந்த பதவிக்கு டி.ஏ. ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.ஜனவரி 24, 1964 அமைச்சர் பதவியொன்றை ஏற்றுக்கொள்வதற்காக சபாநாயகர் ஆர்.எஸ்.பெல்பொல இராஜினாமா செய்தபோது அன்றைய பிரதி சபாநாயகர் ஹக் பெர்னாண்டோ சபாநாயகரானார். டி.ஏ. ராஜபக்ச பிரதி சபாநாயகரானார்.1964 டிசம்பரில் சிறிமாவோவின் அரசாங்கம் தோற்கடிக்கப்படும்வரை டி.ஏ. பிரதி சபாநாயகராக பதவியில் இருந்தார்.1965 தேர்தலில் தனது பெலியத்தை ஆசனத்தில் தோல்வி கண்ட டி.ஏ. ராஜபக்ச நவம்பர் 7, 1967 காலமானார்.
 
WhatsApp-Image-2021-07-15-at-05.45.35-30
 
மகிந்த ராஜபக்ச
…………………………….
 டி.ஏ. இறந்த பிறகு பெலியத்த தொகுதியின் சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியை தலைவி திருமதி பண்டாரநாயக்க அவரின் மூத்தமகன் சமால் ராஜபக்சவுக்கு வழங்க முன்வந்தார்.அதேவேளை, சமால் ராஜபக்ச பொலிஸ் சேவையில் ஒரு சப் இன்ஸ்பெக்டராக இணைந்துவிட்டார்.அதனால் அமைப்பாளர் பதவியை ஏற்க மறுத்த அவர் அதை .” மல்லி” மகிந்தவுக்கு கொடுக்குமாறு சிபாரிசு செய்தார்.மகிந்த மிகவும் இளையவர் என்பதால் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வார் என்று  ஆரம்பத்தில் தயங்கியசிறிமாவோ  பிறகு மனம்மாறி  1968 இல் மகிந்தவுக்கு பெலியத்த தொகுதி சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியைக் கொடுத்தார்.
  1970 மே பொதுத்தேர்தலில் ஐக்கிய முன்னணி மகத்தான வெற்றிபெற்றது.சுதந்திர கட்சிக்கு 91 ஆசனங்கள் கிடைத்தன. சமசமாஜ கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் முறையே 19 ஆசனங்களையும் 6 ஆசனங்களையும் கைப்பற்றின.பேர்சி மகேந்திர ராஜபக்ச தனது போட்டியாளரானஐ.தே.க.வின்  டாக்டர் ரஞ்சித் கே.பி.அத்தபத்துவை தோற்கடித்தார்.மகிந்தவுக்கு 23,103 வாக்குகளும் அத்தபத்துவுக்கு 16,477 வாக்குகளும் கிடைத்தன.1977 பொதுத்தேர்தலில் நிலைமை மாறியது.அத்தபத்துவுக்கு 24,289 வாக்குகளும் மகிந்தவுக்கு 17,896 வாக்குகளும் கிடைத்தன.மகிந்தவின் தந்தையார் டி.ஏ.ராஜபக்சவும் ரஞ்சித்தின் தந்தையார் டி.பி.அத்தபத்துவும் 1947 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்த்து போட்டிட்டுவந்தவர்கள் தங்களது மகன்மார் பெலியத்த எம்.பி.க்களாக வந்ததை பார்க்க அவர்கள் இருவரும் உயிருடன் இருக்கவில்லை.
  1985 இல் மகிந்தவின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச முல்கிரிகலை இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.சமாலின் தேர்தல் பிரசாரத்தை மகிந்தவே முன்னின்று நடத்தினார்.அப்போது  ஒரு துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றது.மகிந்த கைதுசெய்யப்பட்டு மூன்று மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.பிறகு நீதிமன்றம் அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்தது. மகிந்த விளக்கமறியலில் இருந்த நாட்களில் தான் அவரது தாயார் காலமானார்.தாயாரின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள அவர்  அனுமதிக்கப்படவில்லை.
  குடும்ப அரசியல்
……………………………..
 குடும்ப அரசியல் என்பது இனம், மதம், சாதி எல்லாவற்றையும் கடந்துஇலங்கை அரசியல் அரங்கில் பழக்கப்பட்டுப்போன ஒரு அம்சமாகிவிட்டது. இலங்கையின் அரசியல் குடும்பங்களின் பட்டியலை அகரவரிசை ஒழுங்கில் பார்ப்போமேயானால், கிழக்கில் அப்துல் மஜீதுகளில் இருந்து தெற்கில் யாப்பா அபேவர்தனாக்கள் வரை  இலங்கையில் குடும்ப அரசியலுக்கு இனம் ஒரு தடையல்ல என்பது தெரியவரும்.
  தேர்தல்களில் தேசிய மட்டம், மாகாண மட்டம், பிரதேச மட்டம் என்றுள்ள வேறுபட்ட மட்டங்களில் அரசியல்  வம்சங்கள் காணப்படுகிறது.வெவ்வேறு படிநிலைகளில் இந்த வம்சங்கள் இருக்கின்றன.பல பிராந்திய மற்றும் உப பிராந்திய அரசியல் குடும்பங்கள் இருக்கின்ற அதேவேளை, இலங்கையில் இதுவரை தேசிய மட்டத்தில் மூன்று பிரதான குடும்பங்களே அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்திருக்கின்றன.
  முதலாவது குடும்பம் டி.எஸ்.சேனநாயக்க, மகன் டட்லி சேனநாயக்க மற்றும் மருமகன் சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோரின் ” போத்தல வம்சம்”.இவர்களுடன் சேர்த்து அகன்ற குடும்பமாக ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்ப உறுப்பினர்களும் அமைந்தார்கள்.அடுத்தது எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, அவரது மனைவி சிறிமாவோ ரத்வத்தை பண்டாரநாயக்க , அவர்களது மகள் சந்திரிகா குமாரதுங்க, மகன் அநுரா பண்டாரநாயக்கவின் ” ஹொரகொல்ல” வம்சம்.போத்தல, ஹொரகொல்ல இரண்டு வம்சங்களும் 20 ஆம் நூற்றாண்டில்  சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை அரசியலில் பெரும்  முக்கியத்தவம் வாய்ந்தவையாக இருந்துவந்தன.
download-32.jpg
 
 மெடமுலான வம்சம்
……………………………….
  ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் வெளிக்கிளம்பிய மூன்றாவது அரசியல் குடும்பம் ஒரு வம்சத்தை வீழ்த்திவிட்டது.மற்றைய வம்சத்தையும் இல்லாமல்செய்துவிட அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அது தான் டி.ஏ.ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய மெடமுலான வம்சமாகும்.டொன் அல்வின் ராஜபக்சவின் மெடமுலான அரசியல் வம்சம் இலங்கை அரசியலில் நிலைபெறப்போகிறது.  (முற்றும்)

 

https://thinakkural.lk/article/128069

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.