Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் குறித்து செளதி அரேபியா மெளனம் காப்பதன் ரகசியம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் குறித்து செளதி அரேபியா மெளனம் காப்பதன் ரகசியம் என்ன?

  • சரோஜ் சிங்
செளதி

பட மூலாதாரம், REUTERS

1996 ல் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தபோது, செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் தாலிபன்களை முதலில் அங்கீகரித்தன.

இப்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் அடிமை சங்கிலிகளை உடைத்துவிட்டதாக கூறினார்.

மறுபுறம், ஐக்கிய அரபு அமீரகம் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனிக்கு அடைக்கலம் கொடுத்தது. ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம், "மனிதாபிமான அடிப்படையில் அதிபர் கனியையும் அவரது குடும்பத்தினரையும் தங்கள் நாட்டிற்கு வரவேற்றதாக" ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதுதவிர தாலிபனுடன் தொடர்புடைய எந்த ஒரு பெரிய அறிக்கையையும் அது வெளியிடவில்லை.

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தூதாண்மை அதிகாரிகளும் பாதுகாப்பாக ரியாத்துக்கு திரும்பியுள்ளதாக செளதி அரேபியா அரசு கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும் உறுதியற்ற சூழலை கருத்தில்கொண்டு வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவை எடுத்ததாக, செளதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான செளதி பிரஸ் ஏஜென்சி தெரிவிக்கிறது. .

ஆனால் இது தவிர, செளதி அரேபியா முழு விஷயத்திலும் மெளனம் காக்கிறது.

ஆப்கன் நிகழ்வுகள் நடந்து சுமார் ஒரு வாரம் கழித்து, திங்களன்று, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, செளதி வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது ஆப்கானிஸ்தான் விவகாரம் விவாதிக்கப்பட்டது. ஆனால் தாலிபன்கள் குறித்து இரு தரப்பிலிருந்தும் எதுவும் கூறப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், 1996 ல் தாலிபன்களுடன் இருந்த செளதி அரேபியா இன்று ஏன் அமைதியாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது?

செளதி அரேபியா - தாலிபன் உறவின் மத அடிப்படை

சுன்னி முஸ்லிம் நாடுகளில் பெரியவை செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரம். 

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடன் செளதி அரேபியா வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக செளதி அரேபியா தாலிபன்களுடன் உறவுகளைப் பேணி வருகிறது. ஆனால் 2018 ல் கத்தாரில் தாலிபன்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்து அது இடைவெளியை பராமரித்து வருகிறது. இருப்பினும், திரைக்குப் பின்னால் அந்த நாடு பேச்சுவார்த்தையில் தனது பங்கை வகித்திருக்கும் என்று நிபுணர்கள் கருத்துகின்றனர். 

"கடந்த 25 ஆண்டுகளாக செளதி அரேபியா தாலிபன்களுடன் மிக நல்ல உறவைக் கொண்டுள்ளது. அது இன்றுவரை நீடிக்கிறது," என்று செளதி அரேபியாவுக்கான முன்னாள் இந்திய தூதர் தல்மிஸ் அகமது கூறுகிறார்.

இந்த உறவின் அடிப்படை மதம் என்று அவர் கருதுகிறார். "செளதி அரேபியா எப்போதுமே தாலிபன்களை ஒரு இஸ்லாமிய இயக்கமாகவே பார்க்கிறது. இதன் அடிப்படையில் அது அவர்களை ஆதரிக்கிறது. செளதி அரேபியாவில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் தாலிபன்களுக்கு நிதியுதவி செய்துள்ளன. பல தாலிபன் தலைவர்கள் செளதி அரேபியா சென்று வந்துள்ளனர். அவர்கள் ஒன்றாக ஹஜ் மற்றும் உம்ரா செய்துள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.

செளதி அரேபியா - தாலிபன்கள் இடையே இரான்

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், மத அடிப்படையிலான நட்புக்கு ஒரு செயல்திட்ட அடிப்படையும் சேர்க்கப்பட்டுள்ளது. அதுதான் இரானின் கோணம்.

"கடந்த 10 ஆண்டுகளில் தாலிபன்களும் இரானும் நெருக்கமடைந்துள்ளனர். இரானும், தாலிபன்களுக்கு பணம் மற்றும் பயிற்சியுடன் உதவத் தொடங்கியது. இந்த விஷயம் செளதி அரேபியாவுக்கு எரிச்சலூட்டியது. செளதி அரேபியாவும், இரானும் நீண்ட காலமாக ஒன்றை ஒன்று எதிர்த்து வருகின்றன. மத்திய கிழக்கில் ஒரு பனிப்போர் என்று சில நிபுணர்கள் இதற்கு பெயரிட்டுள்ளனர். இரான் மற்றும் செளதி அரேபியா ஆகிய இரண்டுமே, யேமன், லெபனான் மற்றும் சிரியாவில் உள்நாட்டுப் போர்களில் தத்தமது பிரிவினருக்கு ஆதரவளித்து வருகின்றன. இந்த நெருக்கத்தை பாகிஸ்தான் நிறுத்தவேண்டும் என்று செளதி அரேபியா விரும்பியது.".

"ஆனால் அது நடக்கவில்லை. பாகிஸ்தானுக்கும் இரானுக்கும் இடையே 1400 கிமீ நீள எல்லை உள்ளது. பலூச் மக்கள் இருபுறமும் வாழ்கின்றனர். பாகிஸ்தானிலும் 20 சதவிகிதம் ஷியா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்த மூன்று காரணங்களால் பாகிஸ்தான் இரானுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டாயத்தின் பேரில், செளதி அரேபியா தாலிபன்களுடன் நெருக்கமடையத்தொடங்கியது."என்று தல்மிஸ் அகமது கூறினார்.

சர்வதேச ஸ்டாக்ஹோம் சமாதானஆராய்ச்சி கழகத்தின் (SIPRI) கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் செளதி அரேபியாவின் ராணுவ பட்ஜெட் 5700 கோடி டாலராகும். இது முழு உலகத்தின் ராணுவ பட்ஜெட்டில் 2.9 சதவிகிதம். செளதி அரேபியா இவ்வளவு பணம் செலவழிக்க ஒரு முக்கிய காரணம் இரானுடனான பகை.

கடந்த 10 ஆண்டுகளில் செளதி அரேபியாவுக்கும் தாலிபன்களுக்கும் இடையிலான நட்பு அதிகரித்துள்ளது என்று தல்மிஸ் அகமது கூறுகிறார். அவர்கள் இப்போதும் நெருக்கமாகவே இருக்கிறார்கள், ஆனால் வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் தங்கள் நட்பை பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை. இதற்கு அமெரிக்கா முக்கிய காரணம் என்று அவர் நம்புகிறார். அமெரிக்காவிற்கும் தாலிபன்களுக்கும் இடையிலான பகைமை வெளிப்படையானது. ஆனால், அமெரிக்கவுடனான சிறந்த உறவுகள் செளதி அரேபியாவிற்கு அவசியமானது கூடவே அது ஒரு நிர்ப்பந்தமும் கூட.

செளதி மற்றும் அமெரிக்கா

பட மூலாதாரம், GETTY IMAGES

 

செளதி அரேபியாவிற்கும் தாலிபனுக்கும் இடையிலான நட்பில் அமெரிக்க கோணம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் ஏ.கே.பாஷாவும் தல்மிஸ் அகமதுடன் உடன்படுகிறார்.

தாலிபன் பிரச்சனையில் செளதி அரேபியாவின் மெளனத்தில் உள்ள அமெரிக்க கோணம் மிக முக்கியமானது என்று பிபிசியுடனான உரையாடலில் அவர் கூறினார்.

"1979 இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது. அதற்கு எதிராக முஜாஹிதீன் படை தயாரானது. இந்த படையை உருவாக்குவதில், செளதி அரேபியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவுக்கு உதவின. பயிற்சி முதல் பண உதவி வரை அனைத்தையும், செளதி அரேபியா, அமெரிக்காவுக்கு அளித்தது. ஒசாமா உட்பட ஆயிரக்கணக்கான சுன்னி போராளிகள் இந்தப்படையில் பங்கேற்றனர். பின்லேடன் பின்னாளில் அல் காய்தாவின் தலைவரானார். பின்னர், இந்தப்படை 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்தது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை பரப்பியது,"என்று பேராசிரியர் ஏ.கே.பாஷா குறிப்பிட்டார்.

தாலிபன் செய்தியாளர் சந்திப்பு

பட மூலாதாரம், SERGEI SAVOSTYANOV\TASS VIA GETTY IMAGES

9/11 தாக்குதல்

2001 செப்டம்பர் 11 ஆம் தேதி தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையேயான உறவு மோசமடைந்தது. இந்தத்தாக்குதலில் மூவாயிரம் பேர் இறந்தனர். விமானத்தை கடத்திய 19 கடத்தல்காரர்களில் 15 பேர் செளதி அரேபியாவுடன் தொடர்புடையவர்கள்.

இதற்குப் பிறகு செளதி அரேபியாவின் உருவம் உலகத்தின் கண்களில் சிதைந்தது. செப்டம்பர் 11 தாக்குதலில் செளதி அரேபியாவின் தொடர்புக்காக அமெரிக்க குடிமக்கள் அதன்மீது வழக்குத் தொடர அனுமதிக்கும் மசோதாவை 2016 செப்டம்பரில் அமெரிக்க நாடாளுமன்றம். நிறைவேற்றியது.

இந்த மசோதாவை நிறுத்த வெள்ளை மாளிகை மற்றும் செளதி அரேபியா கடுமையாக முயன்றும் அது வெற்றிபெறவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், செளதி அரேபியா அமெரிக்காவில் தனது முதலீட்டை நிறுத்திக்கொள்ளும் என்றும் அந்த நாடு கூறியது.

"அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் நெருக்குதல்களுக்கு மத்தியில் செளதி அரேபியா, தாலிபன்களிடமிருந்து விலகி அமெரிக்காவை நெருங்கியது. தாலிபன்களுக்கான நிதி உதவியையும் நிறுத்தியது," என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.

கச்சாஎண்ணெய் மீதான செளதியின் ஆதிக்கத்தை அமெரிக்கா ஆட்டம்காணச்செய்ததால் செளதி அரேபியா அமெரிக்காவின் நெருக்குதலுக்கு அடிபணிந்தது. உள்நாட்டுப் பாதுகாப்பிற்காகவும் இது அமெரிக்காவை மிகவும் சார்ந்துள்ளது.

" அமெரிக்காவிற்கு நெருக்கமாக இருப்பதால்தான் செளதி அரேபியா, நிதானமாக ஆராய்ந்து அடி எடுத்துவைக்கிறது," என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.

அமெரிக்கா, செளதி அரேபியாவின் நிர்பந்தம் என்ன?

தாலிபன் ஆட்சிக்கு இதுவரை எந்த நாடும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கவில்லை. சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் அறிக்கைகள் தாலிபன்களுக்கு ஊக்கமளிப்பதாகக் கூறலாம். ஆனால் உலக நாடுகள் அனைத்தும் தாலிபன்கள் அமைக்கப்போகும் அரசை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றன.

படையினர்

"அமெரிக்காவுடன் செளதி அரேபியாவின் உறவுகள் இன்று இருப்பதை விட டொனால்ட் டிரம்பின் கீழ் சிறப்பாக இருந்தன. ஆனால் பைடன் நிர்வாகத்தின் கீழ் இந்த உறவுகள் சிறிது பலவீனமாகிவிட்டன."என்கிறார் தல்மிஸ் அகமது.

பைடன் நிர்வாகத்தின் முடிவுகள் இதற்குப் பின்னால் ஒரு பெரிய காரணமாக அவர் கருதுகிறார்.

"முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , யேமன் போரில் செளதி அரேபியாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்தது மட்டுமல்லாமல், செளதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக்கு முக்கியமானவை என்றும் விவரித்தார். ஆனால் பைடன் வந்தவுடன் செளதி அரேபியா மீது மனித உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பினார். அவர் யேமன் போரை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா ஆயுதங்கள் கூடக் கொடுக்காது என்றும் கூறினார். பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி இறந்த வழக்கும், செளதி அரேபியாவுக்கு தொல்லை கொடுக்கிறது," என்கிறார் அவர்.

செளதி ஆட்சியின் விமர்சகரான கஷோக்ஜி துருக்கியில் உள்ள செளதி கான்ஸலகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இதுமட்டுமல்லாமல், 2020 ல் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதாக பைடன் உறுதியளித்தார்.

இதன் காரணமாக , அமெரிக்காவில் தனது பிம்பத்தை பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் செளதி அரேபியா எடுக்காது, என்று தல்மிஸ் அகமது கூறுகிறார்.

முழு விவகாரத்திலும் செளதி அரேபியாவின் மெளனத்தை 'செயல்தந்திர வீரம்' என்று தல்மிஸ் அகமது விவரிக்கிறார்.

பைடன்

பட மூலாதாரம், GETTY IMAGES

உண்மையில், ஆப்கானிஸ்தானில் விஷயங்கள் வேகமாக மாறி வருகின்றன. ஒருபுறம், ஆகஸ்ட் 31 ஆம் தேதியை, தனது மக்களை வெளியேற்றுவதற்கான காலக்கெடுவாகக் கருதுமாறும், இல்லையெனில் மோசமான விளைவுகளுக்குத் தயாராக இருக்குமாறும் தாலிபன், அமெரிக்காவை எச்சரித்துள்ளது. 

மறுபுறம், ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில், தாலிபன்களுக்கு எதிரான எதிர்ப்பும் கிளம்பிவிட்டது. அந்த போராட்டத்திற்குப் பின்னால் ஆப்கானிஸ்தான் மக்கள் மட்டுமே உள்ளனரா அல்லது வேறு சில வெளிநாடுகளும் இதற்கு ஆதரவளிக்கின்றனவா என்பது குறித்து இதுவரை உறுதியாக எதுவும் தெரியவில்லை.

மூன்றாவது விஷயம் என்னவென்றால், தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள புதிய அரசின் வடிவம் என்ன என்பது இன்னும் தெளிவாக இல்லை. இந்த காரணத்திற்காகவும் செளதி அரேபியா எந்த அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்பு மெளனம் காக்கிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

https://www.bbc.com/tamil/global-58349819

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.