Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுக் அருட்பிரகாசத்தின் 'A Passage North'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனுக் அருட்பிரகாசத்தின் 'A Passage North'

இளங்கோ-டிசே

I

எல்லாக் கதைகளும் எழுதப்பட்டுவிட்டதெனின், எந்தக் கதைகளைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஓர் விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை,  அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை  யாரேனும் எழுதப்போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகிவிடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பி எழுதிப்பார்த்ததால்தான்  அனுக் அருட்பிரகாசத்தின் 'வடக்கிற்கான பயணம்' (A Passage North) கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத 'மான் புக்கர் பரிசின் குறும்பட்டியல் வரை (short list)  அவரைக் கொண்டு சென்றிருக்கின்றது.

 

இந்த நாவல், நாம் சிக்கலான கதைக்களங்களை வைத்திருந்தும் நம்மால் தமிழில் எழுதும்போது  ஏன்பிறருக்கு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தமுடியாது  எழுதுகின்றோம் என்பதற்கு ஒரு முன் மாதிரியாக வைத்துப் பார்ப்பதற்கு நமக்கு ஏதோ ஒருவகையில் உதவி செய்யலாமென நினைக்கின்றேன் அல்லது ஆகக்குறைந்தது  போர் பற்றி எழுதும்போது, ஒரே பாதையில் எல்லோரும் செல்லாமல் சமாந்திரமாக இன்னொருபாதையில் எழுதிப் பார்ப்பதற்கு இது ஒருவகையில் நமக்கு ஓர் கையேடாக மாறவும் கூடும்.

 

Anuk%2BArudpragasam%2B-%2BA%2BPassage%2BNorth.jpg

A Passage North யின் கதையை எளிமையாகச் சொல்லிவிடமுடியும் போன்று தோற்றமளித்தாலும், அது சிக்கலான உள்மடிப்புக்களைக் கொண்டது என்பதை நிதானமாக வாசிக்கும்போது கண்டடைய முடியும். கிளிநொச்சியில் நிகழ்ந்துவிட்ட மரணத்தைக் கேள்விப்பட்டு, கொழும்பில் வாழும் கதைசொல்லி ரெயினில் வடக்குக்குப் போகின்ற பயணந்தான் இந்த நாவலின் கதை. பயணத்தைப் பற்றி எழுதினால், உடனேயே அது பயணக்கதையாக இருக்கவேண்டும் என்று 'கற்பிதம் செய்யப்பட்ட' ஒரு தமிழ்மனோநிலை பலருக்கு இருக்கும் (என்னுடைய நாவலையும் அப்படி  வாசித்து எழுதப்பட்ட சில குறிப்புகள் என் நினைவில் எழுகிறது). ஹெமிங்வேயின் பெரும்பாலான நாவல்களில் 'பயணம்' என்ற விடயத்தை எடுத்துவிட்டால் அங்கே நாவலென்ற ஒன்றே மிச்சமிருக்காது. போருக்குள் இருந்த நாமெல்லோரும் போரைப் பற்றி எங்கும்/எப்போதும் காவிக்கொண்டு திரியவேண்டும் என்கின்ற ஓர் மனோநிலையும் பலருக்கு இருக்கிறது. 'எனக்குத் தெரியாத ஒன்றையும் நான் எழுதுவதில்லை' என ப்யூகோவ்ஸ்கி ஓரிடத்தில் சொல்லியிருப்பார். ஆனால் நம்மில் பலருக்கு அரசியலை/போரை விட வாழ்வில் வேறு எதுவும் இருந்திடக்கூடாதென்கின்ற குறுகிய பார்வையும் இருக்கிறது. 

 

II

 

இந்நாவல் கொழும்பில் கதைசொல்லியின் வீட்டு வேலைக்கு கிளிநொச்சியில்  இருந்து வந்த ராணி என்கின்ற பெண், கிளிநொச்சியில் கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டாரென்ற செய்தியோடு தொடங்குகின்றது. கதைசொல்லியான கிரிஷான் அந்த மரண நிகழ்வுக்குப் போகின்றபோது அவரது ஞாபகங்களி, இந்த ராணியின் நினைவுகளும், அவரின் அப்பம்மாவின் நினைவுகளும், இந்தியாவில் இருக்கும் (முன்னாள்) காதலியின் நினைவுகளும் மாறி மாறி வெட்டி இடைவெட்டிச் செல்வதாகக் கதை சொல்லப்படுகின்றது.

 

எவ்வித திடீர் திரும்பங்களோ, நெஞ்சைப் பிழியும் சோக சித்தரிப்புக்களோ இல்லாது அனுக்  போரை போருக்கு வெளியில் நின்று நாம் எப்படிப் பார்க்கமுடியும் என்பதை இங்கே எழுதிச் செல்கின்றார். நாவலுக்குள் உடனே அவ்வளவு எளிதில் நுழையவோ அல்லது விரைவாக வாசித்துமுடிக்கவோ முடியாத ஒரு எழுத்து நடையை அவர் விரும்பியே தேர்ந்தெடுத்திருக்கின்றார். அந்த நடையும், அதன் நிமித்தம் வரும் விபரிப்புக்களுமே எத்தனையோ நாவல்களில் இருந்தும், இதை வித்தியாசப்படுத்தி புக்கர் பரிசு இறுதிச் சுற்றுவரை கொண்டு சென்றிருக்கின்றது (புக்கர் பரிசை அவர் வெல்வார், வெல்லவேண்டும் என்பது எதிர்பார்ப்பு).

 

இந்த நாவலில் எந்த உரையாடலும் இல்லை என்பது முதற் சிறப்பு. அதாவது கதாபாத்திரங்கள் தங்களுக்குள் பேசுவதைப் போன்ற எந்த சம்பாஷணையும் இல்லாது கிட்டத்தட்ட 300 பக்கங்கள் நீளத்திற்கு எழுதமுடியுமா என்று சற்று யோசித்துப் பாருங்கள். அதேபோன்று நீள நீளமான வசனங்கள். சிலவேளைகளில் ஒரு பக்கம் முழுதுமே முற்றுப்புள்ளியில்லாது வாக்கியங்கள் இருக்கும். இவ்வாறான நிறையப் பரிட்சார்த்த முயற்சி எடுக்கப்பட்டபோதும் அதைச் சோர்வில்லாது,  புதிய வகையில் அனுக் எழுதிக்கொண்டே போயிருப்பதால்தான் நாவலோடு இயைந்து நம்மால் போகமுடிகின்றது.

 

III

 

அனுக், இந்த நாவலில் நிறையச் சம்பவங்களுக்குப் போகாது, குறிப்பிட்ட சில சம்பவங்களை மட்டும் எடுத்து, அதை இன்னும் இன்னும் உடைத்துப் பார்த்து நுணுக்கி நுணுக்கி எழுதுகின்றார். கதைசொல்லி தன் இந்தியக் காதலியுடன் பெங்களூருவில் இருந்து டெல்கிக்கு ரெயினில் போகும்போது அவர்கள் இருவரும் எதிரெதிரில் உட்கார்ந்திருக்கும்போது, எதையுமே அவர்கள் பேசாமல் என்ன எண்ணங்கள் அவர்களுக்குள் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியே அவர் மூன்று நான்கு பக்கங்களுக்கு ஒருவித 'உறைநிலை'யில் வைத்து எழுதுகின்றார்.

 

வழமையான வாசக மனதென்றால் -அதுவும் தமிழ் மனது என்றால்- இதெல்லாம் ஒரு நாவலா என்று மூடிவைத்துவிட்டு 'சுடச்சுட அதிரவைக்கும்' நிகழ்ச்சியைக் கொண்டுவா என்று துடித்திருக்கும். இல்லாவிட்டால் இயக்கத்தில் இருக்கின்றாள் என்ற சந்தேகத்தில் ஒருத்தியை சிங்கள இராணுவம் பிடித்துக்கொண்டு போக, ஒரு ஜேம்ஸ்பாண்டின் சாகசத்தைப் போல ஒரு சிறுவன் அவர்களுக்கெதிரில் தோன்றி 'சடசடவென்று' சுட்டுப்போட்டுவிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக்கொண்டு போவதாய், போர் குறித்து தெரியாத வாசகர்க்குப் பாவனை செய்ய வைத்திருக்கும்.

 

CuNYPb-W8AEe0KP.jpg

அனுக் தனிப்பட்டு தான் மட்டுமில்லை, இந்த நாவலில் வரும் கதைசொல்லியும் இறுதியில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்குள் இருந்ததேயில்லையென முற்கூட்டியே அறிவிப்பதுடன், அடிக்கடி அதை நாவலுக்குள் ஞாபகப்படுத்தவும் செய்கின்றார்.  நாம் அறியாத ஒரு கலாசாரத்தின், ஒரு நிலத்தின், ஒரு பண்பாட்டின் - முக்கியமாக போர் நடந்த பகுதியின் மக்களில் ஒருவராக-  நம்மையும் ஒருவராக claim செய்வது மட்டுமில்லை, அப்படியான பாத்திரம் 'உண்மையில் இருந்ததுமாதிரி இப்போது உயிரோடிருப்பவர்களின் 'புகைப்படங்களை' எல்லாம் பிரசுரிப்பது வரை அனைத்துமே  கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியவை. இந்த நாவலில் அப்படிச் செய்வதற்கு எல்லாச் சந்தர்ப்பங்களும் இருந்தபோதும் அனுக் அதை செய்யாது தவிர்த்திருப்பதுதான் கவனத்தில் கொள்ளவேண்டியது.

 

IV

 

ராணி என்கின்ற கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண்மணிக்கு ஒரு கடந்தகாலம் இருக்கின்றது. அவருக்கு இருமகன்களும், ஒரு மகளும் இருக்கின்றார்கள்.  இயக்கத்தில் சேர்ந்த ஒரு மகன் இறுதியுத்தத்தில் காணாமற் போகின்றார். இன்னொரு மகன் இயக்க - இராணுவ எல்லையைக் கடக்கின்றபோது  ஷெல்துண்டுபட்டு ராணியின் மடியில் இறந்து போகின்றார். 

 

இவ்வாறான நிலைமைகளைப் பார்த்து மனம் பிறழ்ந்து வைத்தியசாலைக்கு அடிக்கடி  சென்று சிகிச்சை எடுக்கின்ற ராணியை, கதைசொல்லியான கிரிஷான் தற்செயலாகச் சந்திக்கின்றார். இதற்கு முன்னர் போர் குறித்து எதுவுமே தெரியாது, கொழும்பில் கொஞ்சம் வசதியான வாழ்வு வாழ்ந்து இந்தியாவுக்கு மேற்படிப்புப் போகின்ற கிரிஷான், ஏன் அங்கு காதலி இருந்தபோதும்  மேற்கொண்டு அங்கே இருக்க விரும்பவில்லை என்பதை அறிய, எம்மை அனுக் கிரிஷானின் அகவுலகிற்குள் அழைத்துச் செல்லும் இடங்களும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

 

போருக்குப் பின் வடக்கு/கிழக்கிற்கு அரசுசாரா நிறுவனத்தில் பணிசெய்வதற்குப் போகும் கிரிஷான் அதிலும் நம்பிக்கையிழந்து கொழும்பில் அம்மாவோடும், அப்பம்மாவோடு வெள்ளவத்தை பகுதியில் தனக்கான 'தனிமையில்' வாழ்ந்துகொண்டிருக்கும்போதே, அப்பம்மாவிற்கு உதவிக்கென அழைத்து வரப்படுபவரே ராணி.

 

ராணியின் கதையைச் சொல்ல பூசலார் நாயனாரின் கதையும், காதலியின் பிரிவைச் சொல்ல காளிதாசரின் மேகதூதத்தையும், இயக்கத்தின் உளவியலைச் சொல்ல 'எனது மகள் தீவிரவாதி' என்கின்ற பெண் கரும்புலி பற்றிய ஆவணப்படத்தையும் அனுக் துணைக்கு எடுத்துக் கொள்கின்றார். அதை மட்டுமில்லை,  இலங்கையில் யுத்தம் தொடங்கிய வரலாற்றைச் சொல்ல, குட்டிமணியின் கதையை, 83 ஆடி இனக்கொலையில் அவரின் கண்களுக்கு செய்யப்பட்ட அநியாயத்தை மிக நிதானமானவும் சொல்லிச் செல்கின்றார். அதுமட்டுமின்றி வடக்கிற்கான பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு படகுப்பயணத்தைச் செய்யாதீர்களென்று எச்சரிக்கை செய்யப்படும் விளம்பரத்தட்டிகளிலிருந்து கூட ஏன் இப்படி மக்கள் உயிரைக் கொடுத்து கடலினூடு போகவிரும்புகின்றார்கள் என்பதையும் வேறொரு திசையில் நின்று விபரிக்கின்றார்.

 

அதேபோன்று, ஏன் போராளிகளின் நடுகல்கள் வரலாற்றில் இருந்து புல்டோசர்கள் அழிக்கப்பட்டது என்ற கேள்வியிலிருந்து நினைவுகள், வடுக்கள், அழிவுகள்/அவமானப்படுத்தல்கள் பற்றியும் பேசுகின்றார். இத்தனை பேசியபிறகும் இந்த நாவலின் கதைசொல்லியான கிரிஷான் தந்தையார் எவ்வாறு கொல்லப்பட்டார் என்கின்ற ஒரு கதையையும் சொல்கின்றார். அது எதிர்பார்க்கப்படாத ஒன்று. ஆனால் அவ்வாறு ஆகுதலும் இயல்பென எழுதிச்செல்வதுதான் இந்த நாவலின் முக்கியமானது.

 

V

 

நாவலின் பிற்பகுதி மிக நிதானமாக ஒரு தமிழ் மரணச்சடங்கை விபரிக்கின்றது. நம் மரணச்சடங்கில் நிகழும் ஒவ்வொரு சிறுவிடயமும் சொல்லப்படும்போது, இதையெல்லாம் அறிந்த நமக்கு ஒரு அலுப்பு ஏற்பட்டாலும், அந்த நிகழ்வின் மூலம் நாவலை முடிக்கும்போது நாம் வேறொரு உலகினுள் நுழைகின்றோம். வேறு ஒருவரின் துயரம் நமதாகின்றது. நமது கடந்தகாலத்தில் இருந்த நாம் யார் என்பது மட்டுமின்றி நம் சமகாலத்து அலைச்சலின் இருப்புக் குறித்த கேள்விகளையும் இந்த நாவல் எழுப்புகின்றது. ஆகவேதான் தனிமனிதத் துயரம்/தேடல் நம் எல்லோர்க்கும் பொதுவான துயராக/தேடலாக விரிகின்றது. 

 

'எனது மகள் தீவிரவாதி' ஆவணப்படத்தில் அந்தப்பெண்கள் இருந்து பேசும் குளத்தை தாண்டிச் செல்லும் கதைசொல்லி சிலவருடங்களுக்கு முன் இதேயிடத்தில் இருந்துதானே அந்த இரு பெண்களும் கதைத்திருப்பார்கள் என்கின்றபோது நாம் வேறு 'காலவெளிக்குள்' நுழைகின்றோம். அதுமட்டுமின்றி சாவை நிச்சயித்த அவர்கள் அந்த ஆவணப்படம் வந்த சில காலத்திற்குள் எப்படியேனும் இறந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த 'வரலாற்றில்' என்ன இடம் இருக்கப்போகின்றது என்பதையும், எப்படி அவர்கள் தங்கள் இலட்சியத்தில்  உறுதியாக இருந்தார்கள் என்பதும் விபரிக்கப்படுகிறது . ஓர் அலையென போர் அவர்களை வந்து கவ்விப்பிடித்து இழுத்துப் போகாவிட்டால் அந்தப் பெண்களின் வாழ்வு எப்படியாக இப்போது இருந்திருக்குமென்று  நம்மையும் கிரிஷானூடாக, அனுக் அலைக்கழிக்க வைக்கின்றார். 

 

ராணியின் மரணங்கூட, அது கூட இயல்பாக நடந்திருக்குமா அல்லது அவர் போரின் வடுக்களால் தற்கொலையை நாடியிருப்பாரா என்ற கேள்வியைத் தொடக்கத்தில் இருந்து எழுப்பிக் கொண்டிருந்தாலும் அதை இறுதிவரை தெளிவாகச் சொல்லாது ஓர் இடைவெளியாகவே இந்நாவலில் விடப்பட்டிருக்கும். அது ஒருவகையில் போரில் பாதிக்கப்பட்ட, வலிந்து காணாமற் செய்யப்பட்ட உறவினர் எல்லோரினதும் வேதனையாகவும், முடிவிலாக் கேள்வியாகவும் நாம் வைத்துப் பார்க்கமுடியும். 

 

ராணி போருக்குள் இருந்து வந்தவுடன் ஓர் உடலாக மட்டுமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார், அவருடைய நினைவுகள் எல்லாம் போரோடு மனதிற்குள் உறைந்துபோய்விட்டன என்பதைப் பற்றிப் பேச, அனுக்கிற்கு தன் மனதிற்குள் பெருங்கோயில் கட்டி அங்கேயே கும்பாபிஷேகம் செய்ய சிவனை அழைத்த பூசலார் நாயனார் உதவிக்கு வருகின்றார். இவ்வாறு சமகாலத்தை அவர் கடந்தகாலத்தின் கலாசாரம்/பண்பாடு/வரலாற்றுப் புள்ளிகளினூடாகவும் கண்டடைய முயல்கின்றார். அதுவே இந்த நாவலுக்கு இன்னும் செழுமை கொடுப்பதாக இருக்கின்றது. 

 

அதுபோலவே கிரிஷானின் காதலியாக வரும் அஞ்ஜம் வருகின்ற பகுதிகளுங்கூட. அதனூடாக அனுக் செய்வது தனிமனித உறவுகள் பற்றிய ஒரு மிக நுட்பமான அறுவைச் சிகிச்சையாகும். 

 

VI

 

கொழும்பின் மரீன் டிரைவ் எனப்படும் கடலோரமாக நடந்தபடி, சிகரெட் பிடித்தபடி, விஸா பிள்ளையாருக்கெல்லாம் ஒரு கதை சொல்லியபடி தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டிருக்கும் ஒருவனை நீங்கள் எளிதில் உங்களுக்குரிய ஒருவராக அடையாளங்கண்டு கொள்ளத் தவறினால் இந்த நாவலுக்குள் நீங்கள் நுழைய மிகவும் சிரமப்படுவீர்கள். அந்த அலைச்சலை, தனி மனித இருத்தலில் அவதியை, வாழ்வின் அர்த்தம்/அர்த்தமின்மைகளின் கேள்விகளின் மீது ஒருசேர விருப்பும்/சலிப்பும் கொண்ட ஒரு வாசக மனதைக் தன்னகத்தே ஒருவர் கொள்ளாதிருப்பின் மிக எளிதாக இது ஒரு சோர்வூட்டக்கூடிய நாவலாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் இந்த நாவலுக்கு இருக்கின்றது. ஆனால் அதுவே என்னை ஈர்ப்பதால் இதை அண்மையில் வெளிவந்தவற்றில் நெருக்கத்திற்குரிய ஒன்றாகக் கொள்ளமுடிகின்றது,

 

அனுக்கின் முதல் நாவலை (The Story of a Brief Marriage)   தற்செயலாக வாசித்து உற்சாகங்கொண்டு, அதுவரை எந்த எழுத்தாளரையும் நேர்காணல் செய்யவிரும்பாத  என்னையே அவரை ஒரு நேர்காணல் செய்ய அன்றையகாலத்தில் செய்திருக்கின்றது . இப்போது அவரின் இந்த இரண்டாவது நாவல் வெளிவந்தபோது, ரொறொண்டோ நூலகத்தினர் இந்த நாவல் குறித்து ஒரு மெய்நிகர் சந்திப்பை ஒழுங்குசெய்தபோது, அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்டிருக்கின்றேன். அதில் முதல்கேள்வி, அவரது முதல் நாவல் ஒருநாளிலேயே நடந்து முடிகின்றததாக எழுதியிருக்கின்றார், இந்த நாவலையும் ஒருவாரத்திற்குள் முடிவதாக எழுதியிருக்கின்றார் (என நினைக்கின்றேன் எனச் சொன்னேன், அப்போது நாவலின் 100 பக்கங்களை மட்டுமே தாண்டியிருந்தேன்), அதற்கான ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என்று கேட்டிருந்தேன். 

 

இரண்டாவது அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யாரெனக் கேட்டிருந்தேன். நான் பொதுவாகத்தான் கேட்டிருந்தேன், அது தமிழ் எழுத்தாளர்கள் என்று விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் ஆங்கிலத்திலேயே சிறுவயதில் இருந்தே படித்தவர்.  தனது 20களில்தான் தமிழை வாசிக்கக் கற்றுக்கொண்டு தமிழில் புத்தகங்கள் வாசிக்கின்றேன் என்றார்.  தமிழில்தனக்குப் பிடித்த சில எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்லிவிட்டு தனக்கு இமையத்தின் எழுத்தின் அதிகம் பிடிக்கும் என்றார்.

 

மூன்றாவது நாவலை அனுக் இப்போதே எழுதத்தொடங்கிவிட்டார். அது ரொறொண்டோவிலும் நடக்கும் கதைக்களம் என்றவர்,விரைவில் ரொறொண்டோவுக்கு வரவிருப்பதாகவும் அந்த நிகழ்வில் சொல்லியிருந்தார். அவரை இங்கோ அல்லது இலங்கையிற்குப் போகும்போதோ சந்தித்து நிச்சயம் ஒருமுறை பேசவேண்டும். அதற்கு முன்னர் அவருக்கு மான் புக்கர் பரிசு கிடைத்துவிட்டதென்ற செய்தியைக் கேட்டால் இன்னும்  நன்றாக இருக்கும்.

 

***********************

(Oct 03, 2021)
 

 

http://djthamilan.blogspot.com/2021/10/passage-north.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.