Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெய் பீம்’ முழக்கத்தை முதலில் வழங்கியது யார்? அது எப்படி தொடங்கியது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’ஜெய் பீம்’ முழக்கத்தை முதலில் வழங்கியது யார்? அது எப்படி தொடங்கியது?

  • துஷார் குல்கர்னி
  • பிபிசி மராத்தி
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பாபு ஹர்தாஸ்
 
படக்குறிப்பு,

பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பாபு ஹர்தாஸ்

கடந்த சில நாட்களாக 'ஜெய் பீம்' சினிமா பற்றி நிறையவே பேசப்படுகிறது. சூர்யாவின் இந்தப் படம் ஒரு விளிம்புநிலை சாதியை சேர்ந்த பெண்ணின் நீதிக்கான போராட்டத்தை சித்தரிக்கிறது.

மகாராஷ்டிராவில் அம்பேத்கர் இயக்கத்தின் லட்சக்கணக்கான தொண்டர்களும், அம்பேத்கருடன் உணர்வுபூர்வமான பந்தம் கொண்டவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது 'ஜெய் பீம்' என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவின் மூலை முடுக்கிலும் ஜெய் பீம் என்ற சொல் குறித்து ஆயிரக்கணக்கான பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது இந்தச்சொல் மக்களை உணர்ச்சி கொள்ளச் செய்கிறது.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் உண்மையான பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அம்பேத்கர் இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவரை கெளரவிக்கும் வகையில் அவரை 'ஜெய் பீம்' என்று அழைக்கின்றனர். ஜெய் பீம் என்பது வெறும் வாழ்த்துச் சொல் மட்டுமல்ல, இன்று அது அம்பேத்கர் இயக்கத்தின் முழக்கமாக மாறிவிட்டது. அம்பேத்கர் இயக்கத்தின் ஆர்வலர்கள் இந்த சொல்லை, இயக்கத்தின் உயிர்நாடி என்று வர்ணிக்கிறார்கள்.

வாழ்த்துக்கூறல் மற்றும் மரியாதையைக்குறிக்கும் இந்தச்சொல் புரட்சிகர உணர்வின் அடையாளமாக எப்படி மாறியது? இந்தப்பயணம் மிகவும் சுவாரசியமானது. இந்த முழக்கம் எப்படி உருவானது, இந்தியா முழுவதும் எப்படிப்பரவியது?

ஜெய்பீம் முழக்கத்தை அளித்தவர் யார்?

ஜெய் பீம் என்ற முழக்கம் முதன்முதலில் அம்பேத்கர் இயக்கத்தின் தொண்டரான பாபு ஹர்தாஸ் எல்என் (லக்ஷ்மண் நாக்ராலே) என்பவரால் 1935 இல் உருவாக்கப்பட்டது. பாபு ஹர்தாஸ் மத்திய மாகாண - பரார் பரிஷத்தின் உறுப்பினராகவும், பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துக்களைப் பின்பற்றும் உறுதியான தொண்டராகவும் இருந்தார்.

நாசிக்கின் காலாராம் கோவிலில் நடந்த சண்டை மற்றும், சாவ்தார் ஏரி சத்தியாகிரகம் காரணமாக டாக்டர் அம்பேத்கரின் பெயர் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்தது. இதற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் டாக்டர் அம்பேத்கரால் முன்னணிக்கு கொண்டு வரப்பட்ட தலித் தலைவர்களில் பாபு ஹர்தாஸும் ஒருவர். ராமச்சந்திர க்ஷிர்சாகரின் 'தலித் மூவ்மெண்ட் இன் இண்டியா அண்ட் இட்ஸ் லீடர்ஸ்' என்ற புத்தகத்தில், பாபு ஹர்தாஸ் முதலில் 'ஜெய் பீம்' கோஷத்தை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக விரோதிகளை கட்டுக்குள் கொண்டு வரவும், ஒவ்வொரு கிராமத்திலும் சமத்துவக் கருத்துகளைப் பரப்பவும் அம்பேத்கர், 'சம்தா சைனிக் தளத்தை' நிறுவினார். சம்தா சைனிக் தளத்தின் செயலராக இருந்தவர் பாபு ஹர்தாஸ்.

ஜெய் பீம்' தமிழ் திரைப்படத்தில் நடிகர் சூர்யா.

பட மூலாதாரம்,JAI BHIM

'ஜெய் பீம்' முழக்கம் எப்படி உருவானது என்ற கேள்விக்கு பதிலளித்த தலித் சிறுத்தைகள் அமைப்பின் இணை நிறுவகர் ஜே.வி.பவார், "பாபு ஹர்தாஸ், கமாட்டி மற்றும் நாக்பூர் பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்களின் ஒரு அமைப்பை உருவாக்கினார். ஒருவரையொருவர் சந்திக்கும்போது நமஸ்கார், ராம் ராம் அல்லது ஜௌஹர் மாயாபாப் என்பதற்குப் பதிலாக 'ஜெய் பீம்' என்று கூறி வாழ்த்துமாறு இந்த அமைப்பின் தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டார்,"என்று குறிப்பிட்டார்.

" முஸ்லிம்கள் 'சலாம் அலைக்கும்' என்று சொல்லும்போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக 'அலைக்கும் சலாம்' என்று சொல்லப்படுவது போல, 'ஜெய் பீம்' என்ற வாழ்த்துக்கு பதில் சொல்லும்போது 'பால் பீம்' என்று சொல்ல வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார், அவர் உருவாக்கிய பாதை லட்சியப்பாதையாக மாறியது."என்று அவர் கூறினார்.

ராஜா தாலே, நாம்தேவ் தசல் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதோடு, கூடவே பவார், தலித் சிறுத்தைகள் அமைப்பு பற்றிய புத்தகத்தையும் வெளியிட்டார்.

"1938 ஆம் ஆண்டு, அவுரங்காபாத் மாவட்டத்தின் கன்னட் தாலுகாவில் உள்ள மக்ரான்பூரில் அம்பேத்கர் இயக்கத்தின் தொண்டரான பாவுசாகேப் மோரே, ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் பாபாசாகேப் அம்பேத்கரும் கலந்துகொண்டார். பாபு ஹர்தாஸ் இந்த முழக்கத்தை எழுப்பியபோது பாவுசாகேப் மோரே இதை ஆதரித்தார்,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பேத்கர்

அம்பேத்கர் நேரடியாக 'ஜெய் பீம்' என்று அழைக்கப்பட்டபோது

அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலேயே 'ஜெய் பீம்' என்ற வாழ்த்து தொடங்கியது. இயக்கத்தின் ஆர்வலர்கள் ஒருவரையொருவர் 'ஜெய் பீம்' என்று அழைத்துக் கொண்டனர். ஒரு ஆர்வலர் அம்பேத்கரை நேரடியாக 'ஜெய் பீம்' என்று அழைத்தார் என்று மகாராஷ்டிர மாநிலமுன்னாள் நீதிபதி சுரேஷ் கோர்போடே, கூறுகிறார். .

சுரேஷ் கோர்போடே, செஷன்ஸ் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும், விதர்பாவில் உள்ள தலித் இயக்க அறிஞரும் ஆவார். பாபு ஹர்தாஸின் பணிகள் பற்றி எழுதியுள்ள அவர், அது குறித்து விரிவுரையும் ஆற்றியுள்ளார்.

"மஹாராஷ்டிரா முழுவதும் தலித்துகளின் மேம்பாட்டிற்காக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தொடங்கிய இயக்கத்தில் பல இளைஞர்கள் தாமாக முன்வந்து பங்கேற்றனர். அவர்களில் ஒருவர் பாபு ஹர்தாஸ் எல்என்,"என்று அவர் கூறுகிறார்.

கடிதம்

ஜெய் பீம் கோஷம் உருவாக்கிய பாபு ஹர்தாஸ் எல்.என்.

"பாபு ஹர்தாஸ் இளமைப் பருவத்திலிருந்தே சமூகப் பணியில் ஆர்வம் கொண்டிருந்தார். 1904ல் பிறந்த அவர் 1920ல் சமூக இயக்கத்தில் சேர்ந்தார். நாக்பூரில் உள்ள பட்வர்தன் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் படித்தார். அவர் 'ஜெய் பீம் கோஷத்தை உருவாக்கியவர்' என்று அவர் அழைக்கப்படுகிறார். அம்பேத்கரால் ஈர்க்கப்பட்டு பாபு ஹர்தாஸ், 1924 இல் கமாட்டியில் 'சந்த் சோக்மேலா தங்கும்விடுதியை' நிறுவினார். இது கிராமப்புற மாணவர்களுக்கு தங்குமிடத்தை வழங்கியது. பகலில் வேலை செய்யும் மாணவர்களுக்கு இரவுப் பள்ளிகளையும் அவர் தொடங்கினார். ஆங்கிலம் கற்றுத்தரவும் ஆரம்பித்தார்,"என்று சுரேஷ் கோர்போடே குறிப்பிட்டார்.

"அவர் 1925 இல் பீடித் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். விதர்பாவின் தலித் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தேந்து இலைகளை சேகரித்து, பீடி ஆலைகளில் வேலை செய்தனர், கூடவே வீடுகளிலும் பீடி தயாரித்தனர். பீடி தயாரிப்பாளர்களும் ஒப்பந்தக்காரர்களும், தொழிலாளர்களைச் சுரண்டினர். தொழிலாளர்களுக்கு உரிய பணத்தைக்கொடுங்கள் என்று அப்போது அவர் கூறினார்."

பீடி தொழிலாளர் சங்கத்தின் பணி விதர்பாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ராமச்சந்திர க்ஷிர்சாகரின் 'தலித் மூவ்மெண்ட் இன் இண்டியா அண்ட் இட்ஸ் லீடர்ஸ், 1857-1956' என்ற புத்தகத்தில் , 1930-ல் மத்தியப் பிரதேச பீடி தொழிலாளர் சங்கத்தை ஹர்தாஸ் நிறுவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பீடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"1932 ஆம் ஆண்டு கமாட்டியில் 'தீண்டப்படாதார் ' இயக்கத்தின் இரண்டாவது அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வரவேற்புக் குழுவின் தலைவராக பாபு ஹர்தாஸ் இருந்தார். அவர் டாக்டர் அம்பேத்கருக்கு பெரிய வரவேற்பு அளித்தார்,"என்று கோர்போடே தெரிவித்தார்.

1927ல் 'மஹாரத்' என்ற சிறு இதழை ஹர்தாஸ் ஆரம்பித்ததாக வசந்த் மூன் தனது 'பஸ்தி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் கிடைக்கிறது. கெயில் ஓம்வெட்த்,' பஸ்தி' என்ற சொல்லை 'தீண்டப்படாதவராக வளர்வது' என்று மொழிபெயர்த்துள்ளார்.

சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பை திரும்பிய டாக்டர் அம்பேத்கர். (நவம்பர் 18, 1951)

அம்பேத்கர் சொன்னார் - என் வலது கை போய்விட்டது

"பாபு ஹர்தாஸ், ஒரு கவிஞர் மற்றும் எழுத்தாளர்."என்று வசந்த் மூன் எழுதியுள்ளார்.

அம்பேத்கரின் சுதந்திர தொழிலாளர் கட்சி 1937 சட்டமன்றத் தேர்தலில் ஹர்தாஸை வேட்பாளராக நிறுத்தியதாக அவர் எழுதுகிறார். ஒரு செல்வந்தர் அவருக்கு எதிராக போட்டியிட்டார். இந்த நபரை வசந்த் மூன் 'லாலா' என்று அழைக்கிறார்.

ஹர்தாஸைத் தொடர்பு கொண்ட ஒருவர் வேட்புமனுவை திரும்பப்பெறச் சொன்னார். இதற்காக அவருக்கு பணம் தருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஹர்தாஸ் அதை மறுத்துவிட்டார்.

"நான் அம்பேத்கருக்காக நிற்கிறேன். இப்போது எங்களுக்கான உரிமை கிடைக்கும்."என்று அவர் சொன்னார்.

வசந்த் மூனின் புத்தகத்தில் உள்ள இந்தக் கதை இத்துடன் முடிவடையவில்லை. லாலா, பாப்பு உஸ்தாத் என்ற வலிமையான மல்யுத்த வீரரை பாபு ஹர்தாஸிடம் அனுப்பினார். அவர் பாபு ஹர்தாஸிடம், "உங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்காக சேட்ஜி பத்தாயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதை நீங்கள் வாங்கிக்கொள்ளவில்லை என்றால், அவர் உங்களைக் கொன்றுவிடுவார்," என்று கூறினார்.

"எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அவர் தப்ப மாட்டார் என்று எனக்குத் தெரியும்," என்று ஹர்தாஸ் பதிலளித்தார். "அது வேறு விஷயம். ஆனால் நீங்கள் இறந்துவிட்டால் அதனால் உங்களுக்கு என்ன பயன்," என்று பாப்பு உஸ்தாத் கூறினார். அப்படியும் ஹர்தாஸ் பின்வாங்கவில்லை. "அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று கூறிவிட்டு பாப்பு உஸ்தாத் வெளியேறினார்.

ஜெய்பீம் கொடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேட்டின் பணமும் அதிகார பலமும் இருந்தபோதிலும், பாபு ஹர்தாஸ் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய மாகாணங்களின் கவுன்சில்-பரார் உறுப்பினரானார். 1939 இல் காசநோய் காராணமாக அவர் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் தலித்துகள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். கமாட்டி மற்றும் நாக்பூர் பகுதியில் இருந்து தலித்துகள் வந்திருந்தனர். இதனுடன், பண்டாரா மற்றும் சந்திரபூர் பகுதிகளைச் சேர்ந்த பீடித் தொழிலாளர்களும் இறுதி அஞ்சலி செலுத்த கமாட்டிக்கு வந்தனர்.

"அவரது மரணத்திற்குப் பிறகு, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், 'எனது வலது கை போய்விட்டது' என்று கூறினார்," என குறிப்பிடுகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி கோர்போடே.

கமாட்டியில் உள்ள கர்ஹன் ஆற்றங்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஹர்தாஸின் நினைவிடம் கமாட்டியில் அமைந்துள்ளது.

"ஹர்தாஸ் ஒரு வால் நட்சத்திரத்தைப் போல வானத்தில் பிரகாசித்தார். அவருடைய ஒளி மற்றவர்களுக்கு பாதையைக்காட்டியது. ஆனால் ஒரு நொடியில் அவர் மறைந்துவிட்டார்,"என்று மூன் எழுதியுள்ளார்.

சுபோத் நாக்தேவின் மராத்தி திரைப்படமான 'போலே இந்தியா ஜெய் பீம்' , பாபு ஹர்தாஸின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

'ஜெய் பீம்' , ஏன் சொல்லப்பபடுகிறது?

"பாபாசாகேப் அம்பேத்கரின் பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அவரது பெயரை சுருக்கமாக உச்சரிக்கும் வழக்கம் ஆரம்பத்தில் மகாராஷ்டிராவில் இருந்தது. படிப்படியாக இந்தியா முழுவதும் அவர் ஜெய் பீம் என்று அழைக்கப்படலானார்," என்று எழுத்தாளர் நரேந்திர ஜாதவ் விளக்குகிறார்.

டாக்டர் ஜாதவ் 'Ambedkar- Awakening India's Social Conscience ' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்நூல் 'அம்பேத்கரின் கருத்தியல் தன்மை' என்று அழைக்கப்படுகிறது.

"ஜெய் பீம் என்ற சொல்லை கொடுத்தது பாபு ஹர்தாஸ். இது எல்லா தலித்துகளுக்கும் வெற்றிக்கு குறைவானதல்ல. பட்டியல் சாதிகள் மற்றும் பட்டிலின பழங்குடி மக்களின் சுயமரியாதையைத் தூண்டி, மனிதர்களாக வாழ்வதற்கான உரிமையையும் வழியையும் அம்பேத்கர் ஏற்படுத்திக் கொடுத்தார்," என்று டாக்டர் ஜாதவ் தெரிவித்தார்.

'ஜெய் பீம் ஒரு முழுமையான அடையாளம்'

ஜெய் பீம் என்ற முழக்கம் ஒரு அடையாளமாக மாறிவிட்டது என்று மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான உத்தம் காம்ப்ளே கூறுகிறார்.

"ஜெய் பீம் என்பது வெறும் வாழ்த்து மட்டும் அல்ல. அது ஒரு முழுமையான அடையாளமாக மாறியுள்ளது. இந்த அடையாளத்தின் பல்வேறு நிலைகள் உள்ளன. 'ஜெய் பீம்' என்பது போராட்டத்தின் பகுதியாக மாறியது. அது ஒரு கலாசார அடையாளமாகவும், அரசியல் அடையாளமாகவும் ஆனது. புரட்சியின் ஒட்டுமொத்த அடையாளமாக அது மாறிவிட்டது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

"இதன் மூலம் ஜெய் பீம்', இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டது. சூர்யாவின் படத்தைப் பார்த்தால் 'ஜெய் பீம்' என்ற வார்த்தை நேரடியாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியும். மாறாக ஜெய் பீம் என்பது புரட்சியின் அடையாளமாக காண்பிக்கப்படுகிறது," என்கிறார் அவர்.

மறுபுறம், மூத்த பத்திரிகையாளர் மது காம்ப்ளே 'ஜெய் பீம்' என்ற வார்த்தையை அம்பேத்கர் இயக்கத்தின் தயார்நிலையின் அடையாளமாகக் காண்கிறார்.

"'ஜெய் பீம்' என்று சொல்வது வணக்கம் என்று சொல்வது போல எளிதானது அல்ல. ஒருவர் அம்பேத்கரின் சித்தாந்தத்துடன் நெருக்கமாக இருக்கிறார் என்பது இதன் பொருள். 'போராட வேண்டிய அவசியம் உள்ள இடத்தில் 'நான் போராடுவேன்' என்று இந்த வார்த்தை சொல்கிறது," என்று மது காம்ப்ளே சுட்டிக்காட்டுகிறார்.

பஞ்சாப் பாடகி கின்னி மாஹி
 
படக்குறிப்பு,

பஞ்சாப் பாடகி கின்னி மாஹி

மகாராஷ்டிராவிற்கு வெளியே 'ஜெய் பீம்' கோஷம் எப்போது தொடங்கியது?

உத்தரபிரதேசம், பிகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற ஹிந்தி பேசும் மாநிலங்களில் 'ஜெய் பீம்' முழக்கத்தை எளிதாகக் கேட்க முடிகிறது.

அம்பேத்கரின் கருத்துகள் பஞ்சாபிலும் பரவியுள்ளன. இங்கு கோஷங்கள் எழுப்பப்படுவது மட்டுமல்லாமல், பிரபல பாடகி கின்னி மாஹியும், தனது சேலையை ஒன்பது முறை மாற்றி 'ஜெய் பீம்-ஜெய் பீம், போலோ(சொல்லுங்கள்) ஜெய் பீம்' என்று பாடியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இளம் தலித் தலைவரான சந்திரசேகர் ஆசாத், தனது அமைப்புக்கு 'பீம் ஆர்மி' என்று பெயரிட்டுள்ளார். டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் அதாவது CAA க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தபோது, முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பாளர்கள் டாக்டர் அம்பேத்கரின் படங்களை கையில் ஏந்தியிருந்தனர். 'ஜெய் பீம்' என்ற முழக்கம் எந்த ஒரு சமூகத்திற்கும், புவியியல் எல்லைக்கும் மட்டுமே சொந்தமானதல்ல என்பதை இது உணர்த்துகிறது.

இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பதில் அளித்த டாக்டர் நரேந்திர ஜாதவ், "பாபாசாகேப்பின் முக்கியத்துவம் மற்றும் கருத்துக்கள் பரவியதால், இந்த முழக்கம் எல்லா இடங்களுக்கும் பரவியது. மண்டல் கமிஷனுக்குப் பிறகு, நாட்டில் ஒரு கருத்தியல் எழுச்சி ஏற்பட்டது. தலித்துகள் மத்தியில் மட்டுமல்ல, எல்லா ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்பட்டது," என்று குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/india-59325148

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.