Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவும் அனுபவமும் : பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் கூத்த யாத்திரை நூல் - ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறிவும் அனுபவமும் : பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் கூத்த யாத்திரை நூல் - ஒரு பார்வை

 
AVvXsEi7kVHaDNq3EE-FAjTMk6iOI2gcRkz1XqlAl13znzav6CENxfyYUvJxS_J69sQggeyW8EgtfXk1JS89RYHRXS5y_m_ZVYwA6gxzjHIxG5DfnCRXbMUqqp_9WvOCE2tpypmBEuQdaQWrLWYWe9_sfWh_44ilmEB2Xu1u29J3NGc5VmN22mx0uxMQAdqW=w303-h333

 

-கவிக்கோ வெல்லவூர்க் கோபால்-
தேசியக் கலைஞர் சீ.கோபாலசிங்கம்

அறிவும் அனுபவமும் : பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் கூத்த யாத்திரை நூல் - ஒரு பார்வை

AVvXsEjX1OxOENZQAuJT1iLwDI64xoKPJT-En9BqJS48hYDZl8HBOIzwIMNR43t6hs7x4L2Wg6JCIGKZCLZsssqi1QcZRIzBOroTS7WdkSU_5boMo7vUinCL5I_E8lENMNQ1TryKGxRlZowH__gxnkqRNGZvzuhjsIJIy7Bv3CjQ5OFGAj3awtcyt34rNcQO=s320
மட்டக்களப்புத் தேசத்தின் முதன்மையான கல்வியாளர்களுள் ஒருவராகத் திகழ்பவர் பேராசிரியர் மௌனகுரு அவர்கள். அவருடன் கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலான நெருங்கிய தொடர்பு எனக்கு உண்டு. நான் 1957ல் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று வந்தாறுமூலை அரசினர் மத்திய கல்லூரிக்குச் சென்றபோது அவர் 9ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவருடன் ஏற்பட்ட அண்ணன் தம்பி எனும் மானசீக உறவு இன்றும் அப்படியே இருக்கின்றது. அதனால் அவரது உயிர்ப்பாக வெளிவந்திருக்கின்ற 'கூத்த யாத்திரை' தொடர்பாக ஒரு ஆய்வுப் பார்வையை பதிவிடும் ஆற்றல் எனக்கு முழுமையாக உண்டென்பதை நான் உணர்கின்றேன்.

தனது தாயின் வயிற்றில் தன் கருவோடு கூடவே ஒன்றிவளர்ந்த - நமது மண்ணின் பண்பாட்டு வாசனையின் பெருமை குறித்து எளிய பதங்களையும் இனிய சொல்லமைப்பினையும்கொண்டு படைக்கப்பட்ட இந்நூல் - கொண்ட கொள்கையில் தெளிவு, காலத்துக்குகந்த புதிய அணுகுமுறை, மறுத்துரைக்கமுடியாத கருத்துக்கள், மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது என்ற உண்மைநிலை என்பவற்றின் வெளிப்பாடாகி நிற்பதை படிப்போர் நிச்சயம் உணரவே செய்வர்.

இந்நூலில் இடம்பெற்றிருக்கும் அத்தியாயத் தலைப்புக்களாக கூத்தைக் கண்டமை, கூத்தைப் பழகியமை, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கூத்துப் பழக்கியமை, பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு வெளியே கூத்துப் பழக்கியமை, மட்டக்களப்பின் வடமோடி தென்மோடி ஆட்டங்களை மென்மேலும் அறிந்துகொண்டமை, யாழ்ப்பாணத்தில் கூத்துப் பழக்கியமை, கிழக்கில் சிங்கள மாணவர்க்கும் நோர்வேயில் வெளிநாட்டவர்க்கும் கூத்துப் பழக்கல், அனுபவங்களும் பயனும், நந்தவனத்திற்கு அழகு பல்வகைப் பூக்களே ஆகிய ஒன்பது  தலைப்புகளைப் பார்க்கிறோம். 

இதன்மூலம் அவர் வாசகர்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்தியிருப்பது அவரால் இதுவரை மெற்கொண்ட கூத்த யாத்திரை எவ்வளவு சிரமமிக்க கடின பணியாக அமைந்திருக்கின்றது என்பதனை உணர்த்திநிற்கின்றது. அத்தோடு அதன் உறுதிமிக்க அடித்தளத்தின்மேல் காலத்தின் தேவைகருதியும் கிழக்கின் கூத்துக்கலையின் நவீனமயமாக்கலின் அவசியம் கருதியும் மெற்கொண்ட மாற்றங்களை அவர் தான்கொண்ட கோட்பாட்டின் அடிப்படையில் கோடிட்டுக் காட்டுவதையும் காணமுடிகின்றது. அவரது பல்கோட்பாட்டுப் பரிச்சியமும் அவரது நீண்ட அனுபவமும் ஒன்றுதிரண்டு வெளிப்படுவது இந்நூலின் சிறப்பம்சம் எனலாம்.

இந்நூலின் முதல் அத்தியாயத்தைப் படிக்கும்போதே பல சுவரசியமான தகவல்களை நம்மால் உள்வாங்க ஏதுவாகின்றது. இவர் பிறக்கும் போது இவரது வீட்டின் அருகில் கமலாவதி நாடகம் எனும் கூத்தினை ஆடிக்கொண்டிருந்ததாகவும் அப்போது ஒலித்துக்கொண்டிருந்த கூத்துப்பாட்டும் மத்தாளம், சல்லாரி மற்றும் சலங்கை ஒலிகள் தனது பிரசவ வேதனையைப் போக்கியதாகவும் தனது தாயார் கூறியதை இங்கு அவர் நினைவுகூருகின்றார். கூடவே கூத்தர்களான தனது முன்னோரின் கதைகளைக்கூறி கூத்தில் தனக்குப் பேராசையை ஊட்டியவராக தனது பாட்டன் வாவா அப்புச்சி என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளையையும் மாமன் கந்தையாவையும் அவர் இனம்காணுகின்றார். இதில் பல கூத்தாட்டக்காரர்களையும் கூத்துத்தொடர்பான பல்வேறு அம்சங்களையும் பதிவுசெய்துள்ள அவர் கூத்தாட்ட முறைகளையும் விரிவாகப்; பட்டியலிடுகின்றார்.

இரண்டாவது அத்தியாயத்தில் கூத்துத் தொடர்பான பள்ளிக்கால நிiவுகளை இங்கு பதிவுசெய்கின்றார். இக்காலத்தில் நாமும் அதே பாடசாலையில் சிறவர்களாக பயின்றுகொண்டிருந்தமையினால் அவற்றை மீட்டிப்பார்க்க எம்மால் முடிகின்றது. அவர் சிவவேடன் பாத்திரம்தாங்கி ஆடிய 'பாசுபதஸ்திரம்' என்ற அந்த நாடகம் இப்போதும் எம்மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துகிடக்கின்றது.

அதன்பின்னர் பேராதனைப் பல்கலைகழகத்தில் அவரது கூத்தயாத்திரை தொடங்குகின்றது. அதுமுதலே அவரது பயணம் புதுப்புது வடிவங்கள் எடுப்பதை ஒவ்வொரு அத்தியாயமும் விரிவாகப் பேசிச்செல்கின்றது. இந்த அத்தியாயங்கள் ஊடாகத் தனிமரம் தோப்பாகாது என்பதனைப் பொய்ப்பித்து தனிமரம் தோப்பும் ஆகும் தோப்பையும் ஆக்கும் என்பதனை மெய்ப்பித்துக் காட்டிய பெருமை அவருக்கு உண்டு. இத்தகைய செயல்பாடுகள் இந்த நாட்டோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. கடல்கடந்த நாடுகளிலும் அவரது ஆற்றல் வியாபித்திருப்பதை பலரும் அறிவர். இதனை அறிய இந்நூலுக்கு அப்பாலும்நாம் செல்லவேண்டியுள்ளது.

சான்றாக  'அரங்கியலாளனாகவும் ஆய்வாளனாகவும் அறியப்படும் எனக்கான மாதிரிகளை தமிழ்நாட்டிலிருந்து தெரிவுசெய்தேன் என்பதைவிடவும் இலங்கையிலிருந்தே தேடி உருவாக்கிக்கொண்டேன். எனது ஆய்வுக்கான முன்னோடி கலாநிதி க.கைலாசபதி என்றால் அரங்கியல் துறைக்கு, பேராசிரியர் மௌனகுருவே எனக்கான முன்மாதிரி' என தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஆ.ராமசாமி ஒருபுறம் முன்னுரைக்க மறுபுறத்திலே சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு இவ்வாறு வழிமொழிகின்றார். 'ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் இவரது முக்கியத்துவத்தை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். மௌனகுருவால் மீட்டெடுக்கப்பட்ட கூத்துமரபின் அரங்கியற் சாத்தியப்பாடுகள் - அந்தக் கூத்துமரபு தொடர்ந்து வளரும், வாழும் அரங்கின் இன்றியமையா அங்கம் ஆக்கியமையில் மௌனகுருவின் இடம் முக்கியமானது. இந்த ஆட்ட மோடியைக் கல்வி அரங்கிற்கு கொண்டுசென்று வழக்கமான மோடிமைக்கு அப்பாலான ஆட்ட அரங்காக்கியுள்ளார் அவர். இதன்படி ஈழத் தமிழ் அரங்கு அதன் இயங்கு நிலையில் கூத்தின் மீளுருவாக்கம் என்ற சொல்லாடலானது பேராசிரியர் மௌனகுருவிடமிருந்தே தொடங்குகின்றது என்பதனை நம்மால் மறுதலிக்கமுடியாதுள்ளது.

நமது மண்ணினுடைய பழமை, வழமை, பண்பு, சமயம், தத்துவம், கலை, காவியம் அனைத்தின் சாரமும் அறிந்த நமது முன்னோர்கள் கூத்துக் கலையை பொழுதுபோக்குக்காக மட்டும் கட்டியெழுப்பவில்லை. அதனூடே நமது வாழ்வியல் தன்மையையும் இணைத்துக்கொண்டார்கள். அவர்களிட்ட அடித்தளத்தில் நின்று கொண்டு கருவிலேயே அதனை உயிர்ப்போடு உள்வாங்கி தனது இரத்தமும் சதையுமாக மாற்றிக்கொண்டவர் பேராசிரியர் மௌனகுரு என்பதனால் அவரது கூத்தின் மீளுருவாக்கம் என்பது ஒரு புரிதலை உண்டுபண்ணியிருப்பதாகவே பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். இதில் அவரது கூத்த யாத்திரையின் பதிவொன்றினையும் இங்கு தகவல்படுத்துவது பொருத்தமாக அமையும். 

பேராசிரியரின் கருவோடு கலந்துவந்த கூத்து பத்மாவதி நாடகம் (1953). அதிலே அவரது சின்னத்துரை அம்மாச்சி (மாமா) உருவாக்கிய தாளக்கட்டொன்றை அவர் பதிவிடுகின்றார். 

சரிகம பதநி தகுணதாம் தெய்ய

சரிகம பதகுண னே 

பரத ஜதிகள்போல் இத்தாளக்கட்டு அமைந்திருப்பதைப் பார்க்கின்றோம். நமது முன்னோர்களிடமும் இத்தகைய புத்தாக்க முயற்சி தோன்றியிருப்பதை இதன்முலம் நம்மால் உணரமுடிகின்றதல்லவா. பேராசிரியர் மிக்க துணிவோடு ஈடுபட்ட இச்செயல்பாடு அனைத்திலும் தனது கருத்தை, கனவை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, நம்பிக்கையை வெளியிடுவதற்கு அவருக்கு தோன்றாத் துணையாக நின்றுதவியது அவரது அணுகுமுறையும் அதில் படிந்திருந்த பார்வையும் அவற்றில் ஊடுருவிநின்ற காய்தல் உவத்தல் கடந்த அறிவியல் சித்தாந்தமுமே என்பதை நாம் முதலில்  மனம்கொள்ளவேண்டியுள்ளது.

பிறரது விருப்பு வெறுப்புகளால் ஒருவர் காணும் உண்மைநிலை பாதிக்கப்படுவதை இகழ்வாகக் கொள்ளமுடியாது. மனிதனுக்கு இயல்பாக நிறைந்த எல்லைகளுள் இதுவும் ஒன்று. இதனைத் தவிர்க்க முழுமனதுடன் செயல்படுவது ஒன்றுதான் செய்யக்கூடியதும் செய்யவேண்டியதும். கூத்த யாத்திரையில் பேராசிரியர் ஒன்பது தலைப்புகளில் நம்முடன் பேசுகின்றார். ஓரு வாசகன்  இதனை ஒரு எண்ணத் தொகுப்பாகக் கூறலாம். ஆனால் ஒரு ஆய்வாளனால் அப்படிக் கொள்ளமுடியாது. எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்குமென்பதுவும் புதுமைகள் உட்புகுந்துகொண்டுதான் இருக்குமென்பதுவும் இயங்கியல் கோட்பாடு. இந்த இயங்கியல் கொள்கையை யாருமே புறந்தள்ளமுடியாது. பாரம்பரியம் என்பது அப்படியே அசையாது நிற்பதல்ல. அதனது அறாத தொடர்ச்சியிலும் வளர்ச்சியிலுமே அதனால் தொடர்ந்து வாழமுடியும்.

இதுவரை நமக்குக் கிடைத்துள்ள சங்ககால நூல்களுள் மிகத் தொன்மைவாய்ந்தது தொல்காப்பியம். தொல்காப்பியர் தனது 8வது அதிகாரத்திலே 'மாத்திரை எழுத்தியல் அசைவகை எனா அ....' எனவரும் 1256ஆம் நூற்பாவில் செய்யுள் உறுப்புகளாக 34கினை வரையறை செய்கின்றார். அதில் 'விருந்தே இயைபே புலனே இழைபு எனா அப்...' எனவரும் பாடல் அடிமூலம் புதிதாகப் பிறக்கும் இலக்கியத்திற்கு 'விருந்து' எனப் பெயரிட்டு வரவேற்கின்றார். இதன்மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்னரேயே நாம் புதுமையை ஏற்றுக்கொண்டவர்களாகின்றோம். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில' என உரைத்த நன்னூலார் பவணந்தி முனிவரையும் 'சுவைபுதிது பொருள் புதிது வளம்புதிது சோதிமிக்க நவ கவிதை' எனப்பாடிய மகாகவி பாரதியையும் இதில் பொருத்திப் பார்க்கவும் நம்மால் முடிகின்றது. மேலும் இதில் பாரதத்தின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களது கவிதையொன்றினைப் பதிவிடுதல் இந்நூலுக்குப் பொருத்தமானதாக அமையும்.

உடைந்த கம்பிகள் மீட்டுவது வசந்தராகம்

கல்லின் இதயத்தில் பிறந்தது புதியமுளை

உதிர்ந்தன இங்கே பழுப்பு இலைகள்

இரவிலும் பாடுகின்றது குயில்

கிழக்கில் தெரிகிறது அருணோதயம்

நானோ புதியபாடலை இசைக்கிறேன்

கலைந்த கனவுகளையெண்ணி யார்வருந்துவது?

உள்ளிருந்து சீறிப்பாயும் கவலைகளால்

இமைகள் அடித்துக்கொள்ளலாம்

                தோற்றுவிட்டேன் எனச் சொல்லமாட்டேன்

காலத்தின் மண்டையோட்டில் 

                எழுதியதை அழித்துவிட்டு

               புதிய பாடலொன்று புனைவோம்!

நமது கூத்து மரபு தொடர்பில் 1943 தொடக்கம் இன்றுவரை இந்த நூல் விரிவாகவே பேசுகின்றது. இது ஒரு சிலருக்கு பேராசிரியரின் வாழ்க்கைப் பயணமாகக்கூட அமைந்திருப்பதாகத்தோன்றலாம். எனினும் ஊன்றிப் படிப்போர்க்கு நமது மண்ணின் மரபுவழிக் கலையின் காலத்தின் கட்டாயம் கருதிய வளர்ச்சிப் பயணமாகவே இதனைக் கொள்ளமுடியும்.  
 

 

http://www.battinews.com/2022/01/blog-post_581.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.