Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.என்.அண்ணாதுரை நினைவு நாள்: இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட நாடு குறித்து முழங்கியவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சி.என்.அண்ணாதுரை நினைவு நாள்: இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட நாடு குறித்து முழங்கியவர்

15 செப்டெம்பர் 2018
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ARUNKUMARSUBASUNDARAM

பட மூலாதாரம்,ARUNKUMARSUBASUNDARAM

(செப்டம்பர் 15, 2018 அன்று பிபிசி தமிழில் வெளியான கட்டுரை அண்ணா நினைவு நாளான இன்று மறுபகிர்வு செய்ய்யப்படுகிறது.)

தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, மாநிலங்களவையில் 1962-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தமது முதலாவது உரையை ஆற்றினார். அப்போது நடந்த குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அண்ணாதுரை பேசிய உரையை அவரது நினைவு தினமான இன்று தொகுத்துவழங்குகிறோம்.

பெருமதிப்பிற்குரிய மன்றத் தலைவர் அவர்களே, இந்த அவையிலே பதிவு செய்யப்பட்ட கருத்துகளுடன் எனது கருத்துகளை எடுத்துரைக்க கிடைத்த வாய்ப்புக்காக உங்களுக்கு பெரிதும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த கூட்டத்தொடர் விவாதத்தில் பங்கேற்க முதலில் நான் சிறிது தயங்கினேன். ஏனெனில் இந்த அவையை கவனித்துக் கற்றுக்கொள்வதுதான் எனது ஆசையாக இருந்ததே தவிர, பேசிப் பிரச்னைகளைக் கிளறுவது அல்ல.

ஆனால், இந்த அவையில் நிலவும் இணக்கமான சூழ்நிலை மற்றும் இந்திய குடியரசு தலைவரைப் போற்றிக் குவியும் வாழ்த்துரை என்னையும் பங்கேற்க தூண்டியது. இப்போது அவரது உடல் குன்றியிருந்தாலும், குடியரசுத் தலைவரின் சுயநலமற்ற சேவைக்கு மற்றவர்களுடன் சேர்ந்து நானும் மரியாதை செலுத்திக் கொள்கிறேன்.

பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களை வாழ்த்தும்போது, நான் அவரின் அடியொட்டிச் செல்லும் தொண்டனோ அல்லது அவர் நெஞ்சம் நிறைந்து ஏற்றுக்கொண்டுள்ள அரசியல் கட்சியின் தத்துவங்களுக்கும் எனக்கும் எவ்வித ஒற்றுமையோ இல்லை என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

வெகு தூரத்தில் நின்றபடி, குடியரசு தலைவரின் சிறந்த முயற்சிகளைப் போற்றுகிறேன். அது ஒரு வகையில் எனக்கு பலத்தையும் மற்றொரு வகையில் பலவீனத்தையும் ஏற்படுத்துகிறது. அவருடன் இணைந்து சேவையாற்றினோம் எனக் கூறிக் கொள்வோருக்கு ஏற்படும் பெருமிதம், எனக்கு ஏற்படாதது பலவீனமாக இருக்கலாம்.

ஒரு கடமை உணர்ச்சி மிகுந்த கட்சிக்காரரை மற்றொரு கட்சிக்காரர் பாராட்டுவதாக இல்லாமல், தூரத்தில் இருந்து குடியரசுத் தலைவரின் பணியைக் கண்டு மகிழ்ந்து உண்மையாகப் பாராட்டுவதாக எனது மரியாதை இருப்பதை பலமாகக் கருதுகிறேன்.

நான் எனது மரியாதையை வெளிப்படுத்தும்போது, துரதிருஷ்டவசமாக குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் பெரிதும் ஏமாற்ற உணர்வே கிடைத்தது. அரசியல் சட்ட சரித்திர மாணவர்கள் என்ற முறையில், குடியரசுத் தலைவர் பேசினால், அது அரசாங்கமே பேசுவதாக அமையும் என்பதை அறிவோம். எனவே அந்த உரையில் ஏதாவது குற்றம் குறைகளை சுட்டிக்காட்டினால் அது குடியரசு தலைவருக்கு எதிரான தனிப்பட்ட கருத்தாக கருதக்கூடாது. கருத மாட்டார்கள் என்று மிகவும் நம்புகிறேன்.

குடியரசு தலைவர் என்றாலும் கூட, அரசு தெரிவிக்க வேண்டியதை சரியானபடி கூறவில்லை. எனவே, அது பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருதும் சில கருத்துகளை வெளிப்படுத்துகிறோம்.

"திட்டங்கள்" பற்றி "திட்டத்தின் தந்தை" என புகழப்படும் கிருஷ்ணமாச்சாரி எடுத்துரைத்ததை கேட்கும் பேறை நான் பெற்றுள்ளேன். குடியரசு தலைவர் உரையைப் படித்துப் பார்த்தால், அது ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டறிக்கை போல இருக்கிறதே தவிர, நம்பிக்கையையும், குறிக்கோளையும் அது எடுத்துக் கூறுவதாக அமையவில்லை.

நிறுவனத்தின் செயல்பாட்டறிக்கை என்று நான் குறிப்பிடுவதற்கு காரணம், அந்த நிறுவனம் இப்போது உறுப்பினர்களின் தேவையைக் கொண்டிருக்கிறது.

குடியரசுத் தலைவரின் உரைமீது பேசிய ஆளும் கட்சியினருக்கு அவர்களின் பேச்சில் ஒருவித பெருமிதமும், செருக்கும் இருப்பதை பார்த்தேன். 'ஓ... நாமும் மூன்று முறை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எனவே எது பேசினாலும் அது சரியாகத்தான் இருக்கும்; எதைச் செய்தாலும் சரியாக இருக்கும். எனவே சிறிய கட்சிகளுக்கு நம்மைத் தட்டிக் கேட்க உரிமை இல்லை" என்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எந்தக் கட்சிக்கும் வெற்றிக்களிப்பை அடைய உரிமை உண்டு. ஆனால், நல்ல அமைப்பு முறையும் சரியாகவும் கட்டமைக்கப்பட்ட காங்கிரஸ் போன்ற கட்சி பல்வேறு அக்கறையும் கொள்கைகளும் கொண்ட எதிர்க்கட்சி குழுக்களை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல என்பதையும் உங்கள் அனுமதியோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

காங்கிரசின் பலம் அதனிடம் இல்லை, எதிர்க்கட்சிகளின் பலவீனத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் பலம் இருக்கிறது.

எனவே, வெற்றியில் பெருமிதம் கொள்வதைக் காட்டிலும் ஆளும் கட்சி பணிவையும், ஜனநாயகத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே முதல் கருத்தைக் கூறும்போதே பொதுத்தேர்தலில் நடந்த ஊழல்களை இந்தத் தரப்பு உறுப்பினர்கள் எடுத்துக் கூறினார்கள்.

தேர்தலில் நடைபெற்ற ஊழல் முறைகளைப் பற்றி இந்தத் தரப்பு உறுப்பினர்கள் பேசியபோது ஆளும் கட்சியினர் அவற்றை நிரூபிக்க முடியுமா? என்று கேட்க எழுந்தார்கள். ஆதாரங்கள் மட்டும் எங்கள் கைக்குக் கிடைக்கும் நிலைமை இருந்தால், அய்யா, நாங்கள் இந்த அவையில் அவை குறித்துப் பேசிக்கொண்டிருக்காமல் அவர்களை (ஆளும் கட்சியினரை) நீதிமன்றங்களில் சமர்ப்பித்திருப்போம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

போதுமான வசதிகளற்ற வகையில் வைக்கப்பட்டுள்ள மற்ற கட்சிகளுக்கு, தக்க ஆதாரம் காட்டி நிரூபிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அந்த விஷயத்தில் நாங்கள் நீதி நடவடிக்கைகளை விட இந்த பிரச்னையில் உள்ளடங்கியுள்ள தத்துவத்தையே பெரிதாக வலியுறுத்துகிறோம்.

சில காலத்துக்கு முன்பு, பெரு தொழில் நிறுவனங்களிடம் இருந்து ஆளும் கட்சி நன்கொடை பெறுவது சட்டபூர்வமானதுதான் என்றாலும் அது ஒழுங்கீனமான செயல் என்று உயர் நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்ததை நாம் பார்க்கவில்லையா? அவ்வாறு பெறுவது சட்டபூர்வமானதாக இருக்கலாம். ஆனால், தங்களுக்கான ஆயுதங்களை டாட்டா மற்றும் பிர்லாக்களின் ஆயுத தளவாட கூடங்களில் இருந்து அவர்கள் பெற்றது முற்றிலும் தார்மீகமற்ற நிலை இல்லையா?

முந்த்ராஸ்களிடம் கூட நிதியைப் பெற சென்றதை தங்களுக்கு தகுதிக் குறைவானதாக அவர்கள் பார்க்கவில்லை. அவர்களின் தேர்தல் நிதி எங்கிருந்து சேர்ந்தது என்பதை இந்த நாடு மறந்து விட்டதா?

இந்த அடிப்படையில்தான் ஆளும்கட்சி பெருமிதப்படுகிறதா? மற்ற கட்சிகளிடமும் கூட இதுபோன்ற ஊழல் செயல்பாடுகள் இருப்பதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூறலாம். இந்த பரந்த துணைக்கண்டத்தின் மூத்த பெரும் கட்சி என்ற முறையில் உயரிய பாரம்பரிய மரபுகளை நிலைநாட்டுவது காங்கிரசின் தலையாய கடமை இல்லையா?

இந்த நேரத்தில் சமஸ்கிருத பண்டிட்களின் சொல் ஒன்று நினைவுக்கு வருகிறது. யதா ராஜா, ததா ப்ரஜா (அரசன் எவ்வழியோ, குடிகன்களும் அவ்வழியே).

மரபுகள் என்று எதை எல்லாம் காங்கிரஸ் உண்டாக்குகிறதோ, அவை அனைத்தையும் மற்ற கட்சிகள் பின்பற்றினாலும் பின்பற்றலாம்.

"பின்பற்றினாலும் பின்பற்றலாம்" என்ற வார்த்தையை நான் பயன்படுத்தக் காரணம், அந்த வார்த்தையில் "பின்பற்றாமல் இருந்தாலும் இருக்கலாம்" என்ற அர்த்தமும் அடங்கயிருக்கிறது.

எனவே எங்களின் முதல் கருத்தே இந்தத் தேர்தல் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும், நடைபெறவில்லை. மக்களின் விருப்பம், சட்டப்பூர்வமாக தெரிந்து கொள்ளப்படவில்லை.

அடுத்த தேர்தலின்போதாவது, இலவச போனஸ் வழங்கும் முதலாளிகளுடனும், லாப வேட்டைக்காரர்களுடனும், பர்மிட்காரர்களுடனும் தொடர்புகொள்ளாமல் கங்காதரன் சின்ஹா மற்றொரு நாளில் இங்கே குறிப்பிட்டதைப் போல, பொதுத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஆளும் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் பதவிக்கு வர முடியுமா என்ற நான் சவால் விடுக்கிறேன்.

எனவே, குடியரசுத் தலைவர் பேச்சின் ஒரு பகுதியில், நாம் அனைவரும் ஜனநாயக மரபுகளைக் கட்டிக் காக்க வேண்டுமென்று -

(உறுப்பினர்களின் கூச்சல்)

திரு.ராமா ரெட்டி (மைசூர்): இதற்கு ஏதாவது முன்மாதிரி இருக்கிறதா?

மாநிலங்களவை தலைவர்: ஆறு மாதங்களுக்கு முன் ராஜிநாமா செய்ய முன்மாதிரி இருக்கிறதா என கேட்கிறார்.

புபேஷ் குப்தா (மேற்கு வங்கம்): ஒருவரது கன்னிப்பேச்சில் குறுக்கிடுவதற்கு முன்னுதாரணம் இல்லை.

சி.என். அண்ணாதுரை: ஆமாம், இது எனது கன்னிப் பேச்சுதான், ஆனால், குறுக்கீடுகளால் கூச்சமடைபவன் நான் அல்ல. எனவே, அவற்றை விரும்புகிறேன்.

 

Gnanam

பட மூலாதாரம்,GNANAM

 

படக்குறிப்பு,

சட்டமன்றத்தில் அண்ணா ( அருகில் நெடுஞ்செழியன், கருணாநிதி , பின்னால் எம்.ஜி.ஆர்)

ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் - அண்ணாவின் விளக்கம்

இரண்டாவதாக, குடியரசுத் தலைவரின் உரையில் நான் மூன்று உன்னத தத்துவங்கள் மிளிருவதைக் காண்கிறேன் - ஜனநாயகம், சோஷலிசம், தேசியம்.

ஜனநாயகம் - ஜனநாயகத்தை பொறுத்தவரை, விகிதாசார பிரதிநிதித்துவ முறையும், அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயலுக்கு பொதுமக்களின் ஆதரவு உண்டா இல்லையா என்பதை அறிந்து கொள்ளும் வாக்கெடுப்பு முறையும் இந்த பெரிய துணை கண்டத்தில் அமல் ஆகாதவரை ஜனநாயகத்துக்கான எந்த பலனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. முந்தைய பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் ஜனநாயக கட்டமைப்பில் நிலவிய பற்றாக்குறையை சரி செய்ய செயல்பட்டது போல எந்தவொரு விளக்கமும் குடியரசு தலைவரின் உரையில் அமையவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அது தற்போது தேவையா இல்லையா என்பதை விட குறைந்தபட்சம் இப்போதாவது ஜனநாயகத்தின் அந்த மாண்பு பற்றி சுதந்திரமாக சிந்திக்க முயற்சிக்கலாம்.

சோஷலிசம் - சோஷலிசத்தை பொறுத்தவரை, இந்த அவையில் மற்றொரு நாளில் ஒரு புதுவித பொருளாக்கம் தரப்பட்டது. மிகப்பெரிய தொழில் அதிபர்களான டாட்டா மற்றும் பிர்லா போன்றோரின் தொழிற்சாலை. நிறுவனங்களைப் பற்றி ராமமூர்த்தி எடுத்துரைத்தபோது மற்றொரு மதிப்புக்குரிய உறுப்பினர், பங்குகளைப் பற்றியும் லாபங்களைப் பற்றியும் வியத்தகு விளக்கம் அளிப்பதை பார்த்தேன்.

கோடி கோடியாக லாபம் குவிக்கப்பட்டாலும், டாட்டா, பிர்லாக்களின் பணப்பெட்டிக்குள் போகாமல், பங்குதாரர்களுக்குப் போய்விடுவதை அவர் விவரித்தார். இதுதான் பொருளாதார விளக்கம் என்றால் நமக்கேன் பொதுத்துறை, தனியார்துறை என்ற இரண்டு, எனது மதிப்பிற்குரிய நண்பர் தனியார் துறைதான் பொதுத்துறை என்றும், டாட்டா பிர்லாக்களால் நிர்வகிக்கப்படும் தொழிற்சாலைகள் அனைத்தும் பொதுத்துறையைச் சேர்ந்தவை என்றும் கருதினால் பொதுத்துறை, தனியார் துறை என்று ஏன் வேறுபாடு காட்டவேண்டும்?

பங்குகளும் லாபங்களும் பிரிக்கப்பட்டுத் தரப்படுகிறது என்று பேசியபோது வேறு குறிக்கோளை நோக்கி, அவர் கூற வந்த குறிக்கோளை விட்டு எங்கேயோ கடந்து பேசினார்.

இந்த பிரச்னை பற்றி ஆராய நாம் அமைத்த குழுக்கள், பலமுள்ள தொழில் சாம்ராஜ்யங்கள் ஏக போக உரிமைகளின் மேல் வளர்ந்திருப்பதாக கூறின. பிரதமர் கூட இந்த பிரச்னை பற்றி கவனிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இரண்டு திட்டங்களினால் உற்பத்தியான வளம் எங்கே, எப்படிப் போயின என்பதை கண்டுபிடிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

தொடர்புடைய செய்திகள்

எனவே, இங்குள்ள சோஷலிசம் வேறு வகையானது என்று வாதிடுவதைவிட, அதற்கு வேறு ஏதாவது பெயரை வழங்கி விடலாம். சோஷலிசத்தின் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? அதற்கு உங்கள் சொந்த விளக்கத்தை ஏன் தருகிறீர்கள்? சோஷலிசம் என்பது சேமநலம் மட்டுமல்ல, சேம நலத்திற்கு உறுதி தருவது மட்டுமல்ல. சமத்துவத்தை உண்டாக்கப் பாடுபடுவதுதான் சோஷலிசம்.

லாஸ்கியின் கூற்றின்படி, சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவது அல்ல. எல்லோருக்கும் சமவாய்ப்புகளை வழங்குவது.

ஆனால், நமது நாட்டில், இங்கே சமவாய்ப்பு தரப்பட்டது அல்லது வழங்கி வருகிறோம் என்று நம்மால் கூற முடியுமா? தாழ்த்தப்பட்ட சமுதாயம், பிற்பட்ட சமுதாயம் என்பதெல்லாம் பின்னர் எதைக் குறிக்கின்றன?

ஹைதராபாத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மாநாடு நடைபெற்றபோது, அதில் பிரதமரும் ஜகஜீவன்ராமும் கலந்துகொண்டதாக சில காலத்துக்கு முன்பு பத்திரிகைகளில் படித்தேன். ஒருங்கிணைந்த கருத்தை வெளியிடாமல், பலதரப்பட்ட கருத்துக்களை அவர்கள் பேசினார்கள். பிரதமர் பேசும்போது, "இனிமேல் தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்பட்ட வகுப்பினருக்கும் தனித்தன்மைகள் வழங்கப்படக்கூடாது என்றார்"

ஆனால் ஜகஜீவன்ராம் பேசும்போது, "சமூகத்தின் அடிமட்டத்துக்கு விரட்டப்பட்ட அந்த சமூகத்தினருக்கு தொடர்ந்து சலுகைகள் தேவை" என்றார்.

இப்படி ஒரே கட்சியில் இருக்கும் இரண்டு பெரியவர்கள் இதுபோல முரண்பட்ட கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஆளும் கட்சிக்கும், மற்ற கட்சிகளுக்கும் கொள்கை வேற்றுமை இருப்பதில் ஏதாவது வியப்பு இருக்குமா?

எனவே இங்கு சோஷலிசத்திற்குத் தரப்படும் பொருளும் செயல்படும் முறையும் உண்மையான சோஷலிசத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லவில்லை.

இந்தியாவின் நண்பரும், இந்த அரசாங்கத்தின் ஆதரவாளரும் அமெரிக்காவின் தூதரும் பொருளாதார நிபுணராயுமிருக்கிற டாக்டர் கால்பிரெய்த், நமது சோஷலிசத்தைப் பற்றிக் கூறியுள்ளதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவர் இதை "அஞ்சலக சோஷலிசம்" என்று கூறியுள்ளார். ஏன் பேராசிரியர் கால்பிரெய்த் அவ்வாறு கூறினார்?

 

Gnanam

பட மூலாதாரம்,GNANAM

 

படக்குறிப்பு,

1967 வெற்றிக்குப் பின் முதல் திமுக அமைச்சரவை பதவியேற்பு

இந்தியாவைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்று நடத்தும் தொழில்கள் அதிக வருவாயை பெருக்கும் நோக்குடனேயே செயல்படவேண்டும் என்பதற்காகவே அப்படி அவர் வலியுறுத்திக் கூறினார்.

கிடைக்கும் லாபத்தை மீண்டும் தொழிலேயே போட்டு மறுமுதலீடாக்கி மக்கள் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அந்தப் பேச்சின் கருத்து. ஆனால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பாசனத் திட்டமானாலும் மின்சாரத் திட்டமானாலும் தொழில் திட்டமானாலும் பொதுத் துறையில் எதிர்பார்க்கும் அளவுக்கு லாபம் வருவதில்லை என்கிறார்.

சோஷலிசத்திற்கு நாம் அளிக்கும் முரண்பட்ட விளக்கத்தால்தான் இப்படி நிலைமை இருக்கிறது. ஏராளமான பொருள் பொதுத்துறையில் போடப்பட்டிருந்தாலும் அதற்காக செலவிடப்பட்ட உழைப்புக்கேற்ற ஊதியமோ, எந்த நேரத்திற்காக முதலீடு செய்யப்படுகிறதோ அந்த நோக்கமோ நிறைவேறுவதில்லை.

சிந்த்ரி, அல்லது பாக்ரா அல்லது மற்ற திட்டங்களைப்பற்றி மக்களிடம் சிந்துபாடி விவரிக்க மேற்கொள்ளும் முயற்சி கூட அந்த திட்டங்களின் இலக்கை எட்டும் அளவுக்கு இல்லை.

இப்படிக் கூறுவதால், நான் திட்டங்களின் எதிர்ப்பாளன் என்று நினைத்துவிடக் கூடாது. என் ஆதரவு அனைத்தும் திட்டங்களுக்கும் பொதுத்துறைக்கும் உண்டு. இவ்வளவு குறைவான லாபம் ஈட்டும் வகையிலும் இவ்வளவு சேதாரத்துடனும் பொதுத்துறை இல்லாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஊழலைப்பற்றிய வதந்திகள் நிறைய உலவுகின்றன. அதுபற்றி புள்ளி விவரங்கள் தரும் நிலையில் நான் இல்லை. ஆனால் ஊழலும் தவறான நிர்வாகமும், இதர கேடுகளும் பொதுத்துறையில் இருப்பதாக வதந்திகள் பரவலாக இருக்கின்றன.

எனவே, சோஷலிசம் என்ற குறிக்கோள் இருந்தாலும் அதை நோக்கி நாம் முன்னேறிச் செல்லவில்லை என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றே உணர்கிறேன்.

தேசியம் - எந்தக் கட்சியைச் சார்ந்திருக்க நான் பெருமை கொள்கிறேனோ அந்தக் கட்சிக்கு இது மிகவும் நெருங்கிய தொடர்புள்ளதாகும். இப்போது அதிக வழக்கத்திலிருக்கும் வார்த்தையை உபயோகிக்க வேண்டுமானால் அதை "தேசிய ஒருமைப்பாடு" என்று அழைக்கலாம்.

ஆனால் அது பற்றி பேசும் முன்பு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன்.

சுதந்திரம் பெற்று 15 ஆண்டுகள் கழித்து, தேசிய அரசாங்கம் ஒன்று 15 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய பின்னரும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு முயற்சி எடுத்துக் கொள்வது இதுவரை செய்து வந்த, சிந்தித்து வந்தவற்றுக்கு எல்லாம் எதிர்மறையாகி விட்டது, என்று தானே பொருள்?

தேசிய தலைவர்கள் இத்தனை நாள் செய்து வந்த முயற்சி அனைத்தும் கனியவில்லை என்று தானே பொருள்?

இன்றைக்கு மட்டும் ஏன் தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசவும், திட்டம் தீட்டவும் புறப்பட்டுள்ளோம்?

மக்கள் ஒன்றுபட்டபின் ஒருமைப்பாட்டுக்கு என்ன வேலை?

நாங்கள் தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறோம். ஆனால் இங்கு ஆங்கிலத்தை அறிந்தபோதும் உறுப்பினர்கள் ஹிந்தியில் பேசுவதையும், கேள்வி கேட்பையும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம்.

அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் மின்னுவதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன?

நீங்கள் ஹிந்தியை கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசிய ஒருமைப்பாட்டுக்கான வழியா?

தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லுவது முன்னுக்குப்பின் முரணான வாசகம் என்றுதான் கூறுகிறேன்.

 

Imran Quereshi

பட மூலாதாரம்,IMRAN QUERESHI

ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடு ஆகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் இப்போது ஒருமைப்பாட்டை வலியுறுத்த என்ன அவசியம் வந்தது?

காலநடையில் மறைந்து போன தத்துவங்களின் வறுமைதான் தேசிய ஒருமைப்பாடு.

எனவே, நாம் இது பற்றி மறுபடியும் சிந்திப்போம். நமக்கென அரசியலமைப்பு இருக்கிறது. பெரிய திறமைசாலிகள்தான் அரசியலமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் தேசியம் என்றால் என்ன என்பதை மறுபடியும் சிந்தித்துப் பார்க்க, மறு மதிப்பிட, புது விளக்கம் அளிக்க காலம் கனிந்து விட்டது.

இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக ஆகியுள்ள ஒரு நாட்டில் இருந்து நான் வந்திருக்கிறேன் என கோருகிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்குப் எதிரிகள் அல்ல.

நான் ஒரு திராவிடன். என்னை திராவிடன் என அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிரானவன் அல்ல.

ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிட்டது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான்.

என்னை திராவிட இனத்தை சேர்ந்தவன் என்று அழைத்துக் கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில திடமான, வித்தியாசமான கருத்து உள்ளது என நம்புகிறேன். சுயநிர்ணய உரிமையே எங்களின் தேவை.

இந்த அவையின் உறுப்பினர்கள் காட்டிய அன்பை பல நேரங்களில் பார்த்தேன். நான் இங்கு வந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. சில ஹிந்தி மொழி பேசும் உறுப்பினர்களால் ஏற்படுத்தப்படும் விரும்பத்தகாத செயல்களை அந்த அன்பு மறக்கடிக்க வைக்கிறது.

உங்களோடு ஒரே நாடாக இருக்கவும் எனக்கு விருப்பம்தான். ஆனால் ஆசை வேறு, யதார்த்தம் வேறு.

நாங்கள் ஒரே உலகத்தை விரும்புகிறோம். ஒரே அரசாங்கத்தை விரும்புகிறோம். எனினும் நாங்கள் தேசிய எல்லைகளை மறக்கத் தயாராக இல்லை.

இங்கு தாயாபாய் படேல் குஜராத் பற்றிப் பேசும்போது அனல் பறக்கப் பேசினார். தொழில் முன்னேற்றம் அடைந்த பகுதியைச் சேர்ந்த அவர், குஜராத்திலிருந்து வந்திருக்கிறேன். குஜராத்தைப் பற்றிப் பேசுகிறேன். என்றெல்லாம் பேசினார்.

எனது சென்னை மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வகையிலும் அது பிற்போக்கானது. இங்கே உங்களுக்கு நான்கு எஃகு ஆலைகள் உள்ளன. நாங்களோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு எஃகு ஆலை வேண்டும் என்று கூக்குரலிட்டு வந்துள்ளோம். அவர்கள் என்ன அளித்தார்கள்? கனரக இயந்திர இலாகாவை எங்கள் அமைச்சருக்கு தந்தார்கள். எஃகு தொழிற்சாலையை அல்ல.

சுப்பிரமணியம் இங்கு வராமலிருந்தால் எஃகு ஆலை வேண்டுமென்று அங்கிருந்து வலியுறுத்திக் கொண்டிருப்பார்.

இது ராஜதந்திரமா அல்லது விவேகமா அல்லது அரசியல் உத்தியா? எதுவென்று எனக்குப் புரியவில்லை. அவரை இங்கு அழைத்து வந்து, தென்னகத்தின் கோரிக்கைக்கு அவரையே பதில் பேச வைத்திருக்கிறீர்கள். இதைத்தான் பிரிட்டிஷாரும் செய்து வந்தார்கள்.

திராவிட நாடும் அண்ணாவும்

பிரி, ஆள், பண்டமாற்று நடத்தி பணம் வாங்கு, புள்ளி விவரங்களை வீசி வாதத்தைக் கெடு, போன்றவை பிரிட்டிஷ் ராஜ தந்திரத்தை போலத்தானே இருக்கிறது.

தவறான அடிப்படையில், குரோத மனப்பான்மையால் நாங்கள் பிரிவினையைக் கோரவில்லை. பிரிவினை என்றவுடன் வட பகுதியில் வாழ்வோரின் எண்ணத்தில், பாகிஸ்தான் பிரிவினைபோது நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிரிவினையால் ஏற்பட்ட கொடும் விளைவுகளை நான் அறிவேன். அவர்களுக்கு என் அனுதாபம் உண்டு. ஆனால் நாங்கள் கோரும் பிரிவினை, பாகிஸ்தான் பிரிவினையில் இருந்து மாறுபட்டது.

எங்கள் லட்சியம் பரிசீலனை செய்யப்பட்டால், அனுதாபத்தோடு அது கவனிக்கப்பட்டால் நம்மிடையே குரோத உணர்ச்சி ஏற்பட அவசியம் இருக்காது. அப்போது பின் விளைவுகள் ஏதும் இருக்காது.

அதிர்ஷ்டவசமாக, தென்னகம் ஒரு தனி பூகோள பகுதியைக் கொண்டுள்ளது. அதை நாம் தக்காண பீடபூமி என்றும், தக்காண தீபகற்பம் என்றும் அழைக்கிறோம். எனவே, பிரிவினையால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மக்கள் குடிபெயர மாட்டார்கள்.

எனவே, அகதிகள் பிரச்சனை இருக்காது. எனவே அமைதியாக ஆழ்ந்து, அனுதாபத்தோடு இந்தப் பிரச்சினைகளை பாருங்கள்.

ஜோஸப் மேத்தன் (கேரளா): தென்னகத்தின் மொழி என்னவாக இருக்கும்?

சி.என். அண்ணாதுரை: மொழி மற்றும் இதர விபரங்கள் அரசியல் நிர்ணய சபையில் தீர்மானிக்கப்படும். என்னதான் இங்கு இருக்கும் நிலையை எடுத்துரைத்தாலும், எங்களுக்கு அது கிடைக்காமல் போனாலும் இந்திய அரசின் மீதுதான் எங்கள் மக்கள் குற்றம்சாட்டுவார்கள்.

புதிய தொழிற்சாலைகள் உடனே ஏற்படுத்த முடியாததற்கு சில இயற்கையான காரணங்கள் இருக்கலாம். ஆனால் எந்த விநாடி, இரும்பாலை சேலத்தில் வைக்க மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி புதிய ரயில்பாதை போட மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வைக்க மறுக்கப்படுகிறதோ எந்த விநாடி புதியரயில் பாதை போட மறுக்கப்படுகிறதோ அந்த விநாடியே தென்னகத்து வீதியோர மனிதன் உடனே எழுந்து கூறுகிறான்.

இதுதான் டெல்லியின் போக்கு, வடக்கு ஏகாதிபத்தியத்தின் போக்கு. அந்த ஏகாதிபத்தியத்தில் இருந்து வெளியேறாதவரை உங்கள் நாட்டை நீங்கள் பாதுகாப்பாக செழிப்பாக முன்னேற்றமாக வைத்திருக்க முடியாது.

எனவே நான் இந்த அவையில் நான் பிரிவினை பற்றிப் பேசுகிறேன் என்றால் விழிப்புணர்வு மிக்கவர்களின் சார்பில் பேசுகிறேன் என்று பொருள்.

மீராபென் சில நாட்களுக்கு முன்பு கூறியதுபோல், பிரிட்டிஷாரை எதிர்த்தபோது உருவாகிய இயற்கை ஒற்றுமை நிலையானது என்று நினைக்கக்கூடாது.

பிரிவினைத் தத்துவம் அதற்குரிய சரியான மொழியில் கூறவேண்டுமென்றால் சுயநிர்யண உரிமை, உலகப்புகழ் பெற்ற தலைவர்களால் ஏன் இந்த துணை கண்டத்தின் நமது பிரதமராலேயே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

என் நினைவு சரியாக இருக்குமானால் காபுர்தாலா மைதானத்தில் நேரு அதிகாரப் பூர்வமாக இவ்வாறு கூறினார்.

ஒரு நிறுவனம் என்ற முறையில் காங்கிரஸ் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்திய யூனியனில் இருக்கவேண்டும் என்றே முயற்சி செய்யும். ஆனால் ஏதாவது ஒருபகுதி பிரிந்துபோக வேண்டுமென்றால் அதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்கும் என்று அவர் பேசினார்.

எனவே சுயநிர்ணய உரிமையை காங்கிரஸும் ஒப்புக்கொண்டிருக்கிறது.

நாட்டின் பிரதமர் ஆன பிறகும் தாராள சிந்தனையும், ஜனநாயக உணர்வும் நேருவின் நெஞ்சில் இன்னும் கனன்று விட்டு எரிந்து கொண்டிருப்பதாக நினைத்து இந்தத் துணிச்சலான வேண்டுகோளை விடுக்கிறேன்.

பிரிவினையால் இந்தியா பீடிக்கப்பட்டு விடக் கூடாது என்று உறுதியுடன் இருக்கும்போது ஏன் தீபகற்பத்துக்கு சுயநிர்ணய உரிமையை அளிக்கக் கூடாது? அப்படி முடிவெடுப்பது இந்தியாவின் தரத்தை மேம்படுத்துவதாக அமையும்.

"இந்தியா ஒன்று" என எண்ணுவோருக்கு, அது இங்கும் அங்கும் குழப்பம் மிகுந்த கதம்பப் பகுதிகளாக இருப்பதை விட, நேசம் வாய்ந்த பல நாடுகளாக இருப்பது நல்லது தானே?

இங்கு உறுப்பினர்கள் எழுந்து அந்தத் திட்டம் வேண்டும். இந்தத் திட்டம் வேண்டும் என்று பிரித்து வாதிடும்போது, "இந்தியா ஒன்று" என்பதையும் அது பிரிக்க முடியாதது என்பதையும் அவர்கள் மறந்து விடவில்லையா?

மராட்டிய நண்பர்கள் மராட்டிய மாநிலம் கோரியது போல, இந்தியா ஒன்று என்பதை மறந்துவிடவில்லையா? பெருபாரியை பிரித்து பாகிஸ்தானுக்கு வழங்கும்போது வங்காளிகள் கொதிப்படையவில்லையா?

ஒரிசாவின் கோரிக்கையால் பீஹார் கொதிப்படையவில்லையா? அஸ்ஸாம் மற்றும் வங்கம் ஆகிய இரு பகுதிகளுக்கு இடையே, மொழித் தகராறால் வெறுப்பு ஏற்படவில்லையா?

இவை எல்லாம் பிராந்திய நோக்கு என்று முற்றாக மறுப்பது இதையெல்லாம் பூசி மெழுகவே ஆகும்.

எனவே இந்த பிரச்னையைத் தெளிவாகப் பார்க்கவேண்டும் என்று அவையை கேட்டுக் கொள்கிறேன். நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த திராவிட பூமிக்கு சுயநிர்ணய உரிமை தாருங்கள்.

என்.எம்.லிங்கம்: உங்கள் தத்துவப்படி சுய நிர்ணய உரிமை தருவதானால், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுய நிர்ணய உரிமை கேட்பதுதானே? அது பொருத்தமாக இருக்கும்.

சி.என். அண்ணாதுரை: நீங்கள் அதற்கும் ஆதரவாகப் பேசலாம். ஆனால் நான், எனது திராவிட நாட்டுக்கு உரிமை கேட்கிறேன். அப்படிக் கேட்பது ஏதோ குரோதத்தால் அல்ல. அப்படி நாடு பிரிக்கப்பட்டால் சிறிய, ஒன்றுபட்ட, ஒரே மாதிரியான மக்கள் வாழும் நாடாக மாறும். எல்லா பகுதியும் கலந்து பழகி, வளர்ச்சிப் பூர்வமாக ஒன்றுபடுவார்கள். அப்போது பொருளாதார முன்னேற்றத்தையும், சமுதாய முன்னேற்றத்தையும் மிக நல்ல முறையில் எட்டலாம்.

டெல்லிக்கு நான் வந்து 10 நாட்களாகின்றன. எல்லா இடங்களிலும் நான் சுற்றித் திரியவில்லை ஆனாலும், நான் மரம் அடர்ந்த சாலைகளுக்கு, புதிய வீதிகளுக்கு, பூங்காக்களுக்கு சென்றேன். இங்கே ஒரு வீதிக்காவது தென்னாட்டைச் சேர்ந்தவரின் பெயரை வைக்க வேண்டுமென்ற எண்ணமே இந்திய அரசுக்கு தோன்றாதது ஏன்?

இந்த மனப்பான்மை, தென்னாட்டு மக்களை இரண்டாந்தர மக்களாக நீங்கள் கருதுவதைக் காட்டவில்லையா?

லட்சுமி மேனன் (வெளியுறவு இணை அமைச்சர்): தியாகராஜா மார்க் என்ற ஒரு சாலை இருக்கிறது. இதை வைத்து தென்னகத்தவர்களை இரண்டாம் தரமானவர்கள் என்று அர்த்தம் கொள்வதா?

ராமரெட்டி: சங்கீத வித்வான் தியாகராஜாவின் பெயரில் ஒரு சாலை இருக்கிறதே?

ஒரு உறுப்பினர்: இதைவிட உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?

(மேலும் பல குறுக்கீடுகள்)

சி.என். அண்ணாதுரை: லிங்கம் அவர்களின் வாதத்தை கண்டு வியக்கிறேன். ஒரு தியாகராயா வீதியால் அது சர் தியாகராயர் பெயரில் அமைந்ததோ அல்லது கீர்த்தனை புகழ் தியாகராயர் பெயரால் அமைந்ததோ எனத் தெரியவில்லை அவர் திருப்தி அடைவாரேயானால் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அதுமட்டும் தென்னகத்துக்குப் போதாது.

தெற்கே வாருங்கள், மோதிலால் நேரு சோலையில் உலவலாம். நேரு வாசக சாலையில் நுழையலாம், கமலா நேரு மருத்துவமனைக்குப் போகலாம்.

ராமாரெட்டி: இது ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது.

மாநிலங்களவைத் தலைவர்: ஆர்டர், ஆர்டர் அவர் தொடர்ந்து பேசட்டும்.

சி.என். அண்ணாதுரை: அபுல்கலாம் ஆசாத் சாலையில் வாகனத்தில் பயணிக்கலாம். அத்தகைய விஷயம் இங்கு ஏன் இல்லை? தெற்கே உள்ளவர்களின் எண்ணத்தைப் பாருங்கள். தெற்கை பற்றிப் பேசும்போது தெற்கத்திய நண்பர்களே எழுந்து, அப்படிப் பேசாதே. எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறார்கள்.

இது பய உணர்ச்சியால் வருவது தென்னகப் பிரதிநிதிகளாக இருப்பதால் ஏதாவது கேட்டால் பிரிவினை வாதிகளான திமுகவில் சேர்ந்து விட்டனரோ, என்று பிறர் அஞ்சுவார்களோ, அதனால் நமது அரசியல் எதிர்காலம் பாழ்பட்டுவிடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

எனவேதான் எழுந்து, அந்த வீதி இருக்கிறது என்கிறார்கள். இது எனக்குத் தெரியாதா? தென்னகத்தில் இருந்து வந்துள்ள மற்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அறிந்திருப்பது போலவே நானும் அந்த விவரங்களை அறிந்திருக்கிறேன்.

நான் ஒரு தேசிய கொள்கைக்காக பேசுகிறேன். குறுகிய மனப்பான்மைக்காக அல்ல, கட்சிக் கொள்கைக்காக அல்ல.

என்னுடைய பெருமைக்குரிய நாட்டுக்கு சுயநிர்யண உரிமை கோருகிறேன். அதன்மூலம், அந்த நாடு உலகுக்கு தனது பங்களிப்பை செலுத்தும். அய்யா எங்களுக்கென்று ஒரு தனிக் கலாசாரம் உண்டு.

திராவிட நாட்டிலில் இருக்கும் கலாசாரத்துக்கும் பிற பகுதிகளிலுள்ள கலாசாரத்திற்கும் மேலேழுந்தவாரியாக ஒற்றுமை நிலவலாம்.

இமய மலை முதல் கன்னியாகுமரி வரை ராமனும், கிருஷ்ணனும் வழிபடப்படுகிறார்கள். அதனால் இந்தியா ஒற்றுமைப்பட்டுள்ளது என்று தாங்கள் முன்பு ஒருமுறை பேசிய பாண்டித்யம் மிகுந்த வாசகங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அதேபோல உலகம் முழுவதும் மரியாதையுடன் பயத்துடனும் ஏசுநாதர் பிரார்த்தனை செய்யப்படுகிறார்.

இருந்தாலும் ஐரோப்பாவில் பலப்பல தேசிய நாடுகள் உள்ளன. புதிய, புதிய தேசிய நாடுகள் உலகில் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

ஆகையால், தென்னகத்தில் கொதித்தெழும் புதிய தேசிய இனம் பற்றி குடியரசு தலைவர் எதுவும் குறிப்பிடாதது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன்.

ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய இந்த மூன்றில் - ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது, சோஷலிசம் காரமற்றதாக்கப்பட்டிருக்கிறது, தேசியம் தவறான பொருளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

வரும் ஆண்டுகளில் புதிய எண்ண ஓட்டத்தின் விளைவாக தென்னகத்தின் தேவையும் தத்துவமும் புரிந்து கொள்ளப்பட்டு, நான் சார்ந்திருக்கும் திராவிட நாட்டுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உரையை நிறைவு செய்கிறேன்.

https://www.bbc.com/tamil/india-45527745

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.