Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது  — வி.சிவலிங்கம் — 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது (பகுதி 01)

தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது (பகுதி 01)

    — வி.சிவலிங்கம் — 

–           பிரதான கட்சிகள் புதிய அரசியல் யாப்பு பற்றி விவாதிக்கின்றன. 

–           இன்றைய அரசு உட்கட்சி விமர்சனங்களை ஒடுக்குகிறது. 

–           பாராளுமன்றம், மந்திரிசபை, நீதித்துறை போன்றன செல்லாக் காசாகியுள்ளன. 

–           ராணுவ ஆட்சியை நோக்கிய பாதை தெளிவாகிறது. 

–           தமிழ் அரசியல் தேசிய அளவிலான மாற்றங்களைக் காணத் தவறுகிறது. 

–           அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படப்போகும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களைத் தமிழ் அரசியல் காண மறுக்கிறது. 

மாற்றத்திற்கான தேவைகள் 

தமிழ் அரசியல் தனது எதிர்காலம் குறித்து மிக ஆழமான விவாதத்திற்குள் செல்வது தவிர்க்க முடியாதது. உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக தடையற்ற திறந்த பொருளாதாரக் கொள்கைகளும், கொரொனா நோயின் தாக்கங்களும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இப் பின்னணியில் இனவாத, பெருந்தேசியவாத சிந்தனையை முன்னெடுத்த சிங்கள பௌத்த தீவிரவாதம் தற்போது அதன் தோல்வியை நோக்கி பின்வாங்கிச் செல்கிறது. சர்வதேச அணுகுமுறைகளும் உள்நாட்டு அரசியலும் பாரிய மாற்றங்களுக்குள் சென்றுகொண்டிருக்கின்றன. இக் காலகட்டத்தில் மிகவும் பலவீனமான நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளும், அவற்றின் அரசியல் கோட்பாட்டுக் கூறுகளும் உள்ள நிலையில் எதிர்கால மாற்றங்களைச் சந்திக்கும் ஆற்றலைப் படிப்படியாக இழந்து வருகின்றன. இப் பலவீனங்களைப் பயன்படுத்தி நாட்டின் இதர தேசிய சிறுபான்மை இனங்களை நசுக்க பௌத்த சிங்கள பெருந் தேசியவாத இனவாத தீவிரவாத சக்திகள் ராணுவ உதவியுடன் செயற்பட்டு வருகின்றன. நாட்டின் ஜனநாயக கட்டுமானங்கள் படிப்படியாக பலவீனப்படுத்தப்படுவதால் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கான இறுதிப் பாதுகாப்புகளும் உடைந்து வருகின்றன. அரசுக் கட்டுமானங்களின் உயர் அடுக்குகளில் ராணுவ அதிகாரிகள் உட்கார்ந்துள்ளார்கள். தேர்தல் நடத்தப்படுமானால் தோல்வி நிச்சயம் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். இருப்பினும் பாதையை மாற்றத் தயாராக இல்லை. இவை யாவும் மியன்மாரில் (பர்மா) இடம்பெற்ற சம்பவங்களை, ஜனநாயகத் தேர்தல் முடிவுகளை மறுத்து, ராணுவப் பாதைக்கான கூறுகளின் செயற்பாட்டை நினைவு கூருகின்றன. இவ்வாறான ஆபத்து நிலமைகளை உடனடியாகத் தடுக்கும் உபாயங்கள் தோற்றுவிக்கப்படாவிடில் இதைவிட பல கஸ்டமான பயணங்களை நாடு எதிர்நோக்கலாம். இந்தியா மற்றும் மேற்கு நாடுகள் அவ்வாறான நிலமைகள் ஏற்படுவதை அனுமதிக்காது என எமக்குள் சில சமாதானங்களை முன்வைக்கலாம். ஆனால் உள்நாட்டு நிலமைகள் அதற்கான வாய்ப்புகளை வழங்கும்போது நிலமைகள் வேறுவிதமாக மாற வாய்ப்பு உண்டு.   

பெருந்தேசியவாதம் சிதைகிறது 

இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தாம் நாட்டின் பஞ்ச மகா பலவேகய என அழைக்கப்படும் தொழிலாளர், விவசாயிகள், மகாசங்கம், ஆசிரியர், ஆயர்வேத வைத்தியர் என்ற சமூகப் பிரிவுகளே தமது அடிப்படைகள் எனக் கூறிவந்தன. சமீப காலமாக ராணுவத்தையும் அச் சமூகப் பிரிவுக்குள் இணைத்தே பேசி வருகின்றனர். இதன் காரணமாகவே நாட்டின் நிலமைகளைக் கட்டுப்படுத்த ஹிட்லர் போன்ற ஒருவர் குறைந்தபட்சம் சிறிது காலத்திற்காவது தேவை என்ற கருத்துக்கள் உயர் மட்டங்களிலிருந்து சாதகமான ஊடகங்கள் மூலம் கசிய விடப்படுகின்றன. இருப்பினும் இவ்வாறான கனவுகளைக் கலைக்கும் விதத்தில் நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவும், அத் தீர்மானங்களை மேற்கொண்ட அரசின் உயர்மட்ட தலைமைகளின் தவறுகளும் எச் சமூகப் பிரிவினரைத் தமது ஆதரவு சக்திகள் எனக் கருதினார்களோ அதே சமூகப் பிரிவுகள் இன்று அரசுக்கு எதிராகத் தெருவில் இறங்கியுள்ளன. இம் மக்கள் அரசின் அணுகுமுறைகளை மாற்றும்படி கோரியும் அவை  சாத்தியப்படவில்லை. இத் தவறுகளுக்கான பிரதான காரணம் அரசாங்கத்தின் கொள்கைகளை அரச அதிகாரிகள் தவறாகப் புரிந்து கொண்டதன் விழைவு எனவும் வியாக்கியானப்படுத்தி தற்போது அரசாங்கத்தின் கவனம் அரச அதிகாரிகளுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. ஏனெனில் அரச அதிகாரத்தினை நாட்டின் சட்டவிதிகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்தி செல்வங்களைச் சுருட்டும் போக்கிற்குத் தடையாக அரச அதிகாரிகள் இருப்பதாகக் கருதுகின்றனர். அரச அதிகாரிகள் அரசுக்கு விரோதமாகச் செயற்படுவதாக அல்லது நாட்டின் பெருமளவு வருமானத்தை விழுங்குவதாகக் கூறி அதனைக் குறைக்க வேண்டும் என்கின்றனர். இந்த அதிகாரிகள் யார்? அரசும், அரசாங்கமும் வெவ்வேறானவை. அரசாங்கம் அரசு அதிகாரிகள் குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்துமாயின் அல்லது தனது ஊழல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருப்பதாக உணர்வார்களாயின் இவை குறித்துப் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன.  

அரசும்அரசாங்கமும் 

இந்த அரச அதிகாரிகள் மக்களிலிருந்து நாட்டின் சட்ட விதிப்படி செயற்பட தெரிவானவர்கள். மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருபவர்கள். அரசாங்கம் மாறினாலும் அரசின் செயற்பாடுகளை அரசியல் யாப்பு நெறிகளின் அடிப்படையில் மக்களின் நலன்களை நோக்கித் தொடர்ந்து எடுத்துச் செல்பவர்கள். இவர்கள் தமது நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு பலமுள்ள தொழிற்சங்கங்களில் உள்ளதாலும், அவை அரசாங்கத்தின் தன்னிச்சையான, அரசியல் மயப்படுத்தப்பட்ட கொள்கைகளை, செயற்பாடுகளை எதிர்த்து வருவதால் அவை தமது ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதி அவர்களின் பலத்தைக் குறைக்கவே இப் புதிய விவாதம் முன் முன்வைக்கப்படுகிறது. அவ்வாறானால் நாட்டின் தேவைக்கு அதிகமாக உள்ள ராணுவத்தினரையல்லவா முதலில் குறைக்க வேண்டும்! அதனைக் குறைக்க அரசு ஏன் முயற்சிக்கவில்லை? இங்குதான் உள்நோக்கம் தெளிவாகிறது. அரச அதிகாரிகளின் பலத்தைக் குறைத்து அந்த இடங்களில் ராணுவத்தை நிறுத்தத் திட்டம் வகுக்கப்படுகிறது. வெளிப்படையான ராணுவ ஆட்சி காணப்படாவிடினும், அரசின் சகல மட்டங்களிலும் சிவிலியன்களுக்குப் பதிலாக ராணுவம் உள்ளது.  

ராணுவமயமாகும் அரசுக் கட்டுமானம் 

அவ்வாறானால் நாடு எங்கு செல்கிறது?பாகிஸ்தான் அல்லது மியன்மார் போன்ற ராணுவ ஆட்சியை நோக்கி நாடு செல்கிறதா? அவ்வாறாயின் அரசியல் யாப்பின் செயற்பாட்டை இடைநிறுத்தும் ஆபத்துகள் உள்ளதா? என ஆராயும்போது நிராகரிக்க முடியாத நிலை உள்ளது. புதிய அரசியல் யாப்பு என்ற பெயரில் ராணுவ ஆட்சியைப் பின் கதவால் கொண்டுவரும் எத்தனிப்பாக நாம் ஏன் கருத முடியாது? ஜனவரி மாத ஆரம்பத்தில் ராணுவத்தினர் தமது இலச்சினைகள், செயற்பாடுகள் என்பவை குறித்த விபரங்களை உள்ளடக்கிய டயரிகள், கலன்டர்கள் போன்றவற்றை மக்கள் மத்தியில் விநியோகித்துள்ளனர். ராணுவம் நாட்டின் பல தேவைகளை நிறைவேற்றும் ஆற்றலுடையது என்பதை கொரெனா நோய்த் தடுப்பு, விவசாய உற்பத்தி, சேதனப் பசளைகள் தயாரிப்பு,கள்ளக் கடத்தல் தடுப்பு, போதை வஸ்து தடுப்பு, தேசத்தின் பாதுகாப்பு போன்றவற்றில் காத்திரமான வகையில் செயற்படுவதாகக் கூறும் வகையில் அந்த அன்பளிப்புகள் இருந்தன. இதன் பின்னணி என்ன?  

இம் மாற்றங்கள் தமிழ் அரசியலில் பிரதிபலிக்கவில்லையே ஏன்? 

இந்த ஆபத்துகள் மிக அண்மித்து வரும் பின்னணியில் தமிழ் அரசியல் இந்த ஆபத்துகளைக் கவனத்தில் கொண்டு பாரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை நோக்கிய பார்வையே இக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும். 

சுதந்திரத்திற்குப் பின்னதான கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்களைத் தொகுத்துப் பார்ப்பது இங்கு அவசியமானது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு தமிழ் அரசியல் தலமைகள் பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு,அதிகார பரவலாக்கம் என்பவற்றின் அடிப்படையில் புதிய அணுமுறையை நோக்கி தமது அரசியல் பார்வையைத் திருப்பியுள்ளதாக தெரிவித்தனர். இதன் அடிப்படையிலேயே 2009 இன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் தமது வாக்குகளையும் அளித்தனர். இருப்பினும் 2009 இல் எடுத்த இந்த முடிவுகள் தமிழ்க் கட்சிகள், மக்கள் மத்தியில் காத்திரமான வகையில் போய்ச் சேரவில்லை என்பதனை கடந்த 10 வருடகால தமிழ் அரசியலின் போக்குகள் உணர்த்துகின்றன. இதற்குப் பிரதான காரணம் ஒரு புறத்தில் மிகவும் உக்கிரத் தன்மையுள்ள சிங்கள பௌத்த பெருந் தேசியவாதமும், மறு பக்கத்தில் 30 வருட ஆயுதப் போராட்டத்தில் பிரிவினைவாதம் செலுத்திய ஆதிக்கமும் மாற்றங்களை நோக்கிய பாதைகளைத் தடுத்து வருகின்றன.   

தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாட்டு வடிவங்கள் 

இவை குறித்து தெளிவான பார்வை அவசியம். உதாரணமாக, தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகளை ஆராய்ந்தால் இவை நன்கு புலப்படும். தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டி என்பது பழமைக்கும், புதுமைக்குமான போட்டியாக நாம் வர்ணிக்க முடியும். இக் கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டி என்பது பழமை வாதத்தை அல்லது பிரிவினை உள்நோக்கங்களை முன்வைக்கும் மாவையை அப் பிரிவின் முகவராகவும், போரின் பின்னர் கட்சியில் இணைந்து தற்போது அதன் முன்னணிப் பேச்சாளராகச் செயற்படும் சுமந்திரனின் விவாதங்களை அவதானிக்கும்போது குறிப்பாக பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கம், அதிகார பகிர்வு என்ற சமஷ்டி அடிப்படைகளில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை எட்டுதல் என வரையறுக்கும் விவாதங்களாகும்.  

இவ் விவாதங்கள் என்பது கட்சிக்குள் ஜனநாயக அம்சங்கள் வலுவாக செயற்படுமானால் மிக ஆரோக்கியமான போக்கைத் தரலாம். ஏனெனில் இக் கருத்துக்கள் ஒரு புறத்தில் கடந்தகால சந்தேகங்களின் எச்சரிக்கை ஒலியாகவும், நவீன அணுகுமுறைகள் தோல்வியடையாமலும், அதேவேளை மாற்றங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் விதத்திலும் உறுதுணையாக அமையும். அத்துடன் இவ்வாறான ஜனநாயக அடிப்படையிலான விவாதங்கள் உட்கட்சி மட்டத்தில் நிலவுமானால் அவை சிங்கள பெருந்தேசியவாதிகளுக்கு மிகவும் சிக்கலான நிலமைகளைத் தோற்றுவிக்கும். அதாவது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைக் கோரி நிற்கும் சக்திகளுக்கு ஏற்றவாறான வகையில் முடிவுகள் மேற்கொள்ளப்படாவிடில் அவை பிரிவினைவாத சக்திகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்ற சமிக்ஞை கிடைக்கும். ஆனால் இவ்வாறான புரிதல் அக் கட்சிக்குள் உள்ளதா? என்பது பெரும் சந்தேகமே. ஏனெனில் தமிழ் அரசியலில் தொடர்ச்சியாகக் காணப்படும் வாக்குவங்கி அரசியல் அணுகுமுறை இவ்வாறான விளக்கங்களை நிராகரிக்கவே செய்யும். இதற்கான ஆரோக்கியமான வழிமுறை எதுவெனில் தமிழ் சமூகத்தில் உள்ள சிவில் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பிரிவினரைப் பலப்படுத்தி அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் செயற்படுவதுதான்.              

மூலோபாயதந்திரோபாய வழிமுறைகளின் அவசியம் 

இக் கட்டுரையின் தலைப்பில் குறிப்பிட்டவாறான மூலோபாய மற்றும் தந்திரோபாய மாற்றங்கள் என்பது தமிழ் அரசியலின் வரலாற்றுப் போக்கில் காணப்படும் பிரதான மாற்றங்களை அடையாளப்படுத்தி அவற்றின் அடிப்படையில் இன்றைய அரசியல் செயற்பாடுகளில் புதிய உபாயங்களை வகுப்பதாகும். இந்த உபாயங்கள் என்பது மூலோபாயம், தந்திரோபாயம் என்பவற்றில் காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். இலங்கையின் 40 ஆண்டுகால பொருளாதார கட்டுமான மாற்றங்களும், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி அரசியல் கட்டுமானமும், 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரும் தேசிய அளவில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்விலும் பாரிய தாக்கங்களை அவை ஏற்படுத்தியுள்ளது. இம் மாற்றங்களுக்கு ஏற்றவாறான காத்திரமான அரசியல் அணுகுமுறை மாற்றம் இதுவரை ஏற்படவில்லை.  

இதற்கான அடிப்படைக் காரணிகள் ஆராயப்பட வேண்டும். தமிழ் அரசியலில் காத்திரமான பங்களிப்பினை வழங்கிய மத்திய தர சமூகப் பிரிவினர் தற்போது புலம்பெயர்ந்துள்ளதாலும், சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினரே வாக்காளர்களாகவும், அரசியல் போக்கைத் தீர்மானிப்பவர்களாகவும் மாறியுள்ளதால் தமிழ் அரசியல் என்பது தீர்மானகரமான சக்தியாக வளர முடியவில்லை. உதாரணமாக, இன்றைய தமிழ் அரசியல் சூழலில் முன்னாள் போராளிகளாக இருந்தவர்களே இன்றைய அரசியலைத் தீர்மானிப்பவர்களாக உள்ளனர். இவர்கள் இயக்க அரசியலைத் தேர்தெடுத்தமைக்குப் பிரதான காரணம் அப்போதிருந்த மிதவாத அரசியல் தலைமைகளின் பொருளாதார அடிப்படைகளை உள்ளடக்காத வெறும் உணர்ச்சி அரசியலின் பெறுபேறுகளாகும். அவை இன்னமும் இந்த அரசியல் கூறுகளில் பிரதிபலிப்பதை நாம் காணலாம். பொருளாதாரப் பற்றாக்குறை, வருமானப் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு பிரச்சனைகள் என்ற அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து இன்று வரை தெளிவான திட்டமற்ற அணுகுமுறை காணப்படுவதும், தொடர்ந்தும் அரசியல் தேவைகளுக்கும், பொருளாதாரத் தேவைகளுக்குமிடையே தெளிவான கோட்பாட்டு அடிப்படையிலான தெரிவுகள் இல்லாமலிருப்பதும், தமிழ் அரசியல் இயங்கு சக்திகள் மத்தியில் இணக்கமற்ற போக்குகள் அதிகரித்து வெறும் உதிரிகளாக மாற்றமடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான அரசியல் பிளவுகளுக்கான பிரதான காரணம் நாட்டில் செயற்பாட்டிலுள்ள நவதாராளவாத திறந்த பொருளாதாரமாகும்.       

2009ம் ஆண்டின் பின்னதான மாற்றங்களின் பின்னணி 

2009ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் தமிழ் அரசியல் தலைமைகள் எடுத்த முடிவுகள் தற்செயலானது அல்ல, அதற்கு ஒரு வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பின்னதான தமிழ் அரசியலை நோக்கினால் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாகவே தமிழ் மக்கள் பங்களித்துள்ளார்கள். சிங்களப் பாராளுமன்றம் என்றும், அங்கு தீர்வுகளைப் பெற முடியாது என விவாதங்கள் இருந்த போதிலும் மக்கள் பாராளுமன்ற வாக்களிப்பில் பங்களித்துள்ளார்கள். போர்க் காலத்தில் ஏற்பட்ட தடைகளைத் தவிர சகல தேர்தலிலும் அபேட்சகர்கள் போட்டியிட்டுள்ளனர். ஏதோ ஒரு வகையில் அரசுடன் பேசியே வந்துள்ளனர். எனவே தமிழ்த் தேசியத்திற்கான தனியான தனித்துவமான சுயாதீனமான தேர்தல் அணுகுமுறை இருந்ததில்லை. பாராளுமன்றத்திற்கு வெளியில் குறிப்பிடத்தக்க போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. அரசியல் கட்சிகளின் வடிவங்களும், அதன் செயற்பாடுகளும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே செயற்பட்டன. போர்க் காலங்களிலும் இலங்கைப் பாராளுமன்றத்தை நோக்கிய அரசியல் அணுகுமுறைகளே செயல் வடிவங்களாக இருந்தன. அதாவது இலங்கைப் பாராளுமன்ற செயற்பாடுகள் தீர்வைத் தராது என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதற்குப் புறம்பான மாற்று அணுகுமுறைகள் பலம்பெறவில்லை.    

தமிழ் தேசியவாதத்தின் பலவீனங்கள் 

இன்று பலர் தமிழ்த் தேசியம் குறித்து சிலாகித்து வருகின்ற போதிலும் இத் தமிழ் தேசியத்திற்கே உரித்தான அல்லது தனித்துவமான சமூகக் கட்டுமானங்கள் எதுவும் இன்று வரை இல்லை. குறிப்பாக,தமிழ் அடையாளங்களைப் பேணும் அல்லது வளர்க்கும் சமூக, கலாச்சார, நிர்வாகக் கட்டமைப்புகள் இல்லை. அரசியலுக்கு வெளியில் சுயாதீனமான தமிழ் கலை, கலாச்சாரம், மொழியியல் போன்றவற்றை வளர்க்கும் நிறுவனங்கள் இல்லை. அதாவது அரச கட்டுப்பாடுகளுக்கு வெளியில் மக்களின் பங்களிப்பில் உருவான உள்நாட்டு சுயாதீன கட்டுமானங்கள் எதுவும் இல்லை. கடந்த காலங்களில் காணப்பட்ட சனசமூக நிலையங்கள்கூட இன்று இல்லை. அதே போலவே தனித்துவமான பொருளாதாரக் கட்டுமானங்களும் இல்லை. உதாரணமாக, கடந்த காலங்களில் கூட்டுறவு சங்கங்கள், கடற் தொழிலாளர் சங்கங்கள், நெசவாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் என உள்ளுர் அளவிலான சுயாதீன அமைப்புகள் செயற்பட்டன. இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியை எவ்வாறு எட்ட முடியும்?  

தமிழ் தேசியவாதத்தின் விளைவுகள் 

இவற்றிற்குப் பதிலாக அரச கட்டுமான இணைப்புகள் மிகவும் பலமான விதத்தில் வளர்ந்து வருகின்றன. உதாரணமாக நாட்டின் பிராந்தியங்கள் பெருந் தெருக்களின் மூலம் இணைக்கப்பட்டுப் பயண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதோடு, சந்தை நடவடிக்கைகளும் துரிதமடைந்துள்ளன. தொலைத் தொடர்பு சாதன வளர்ச்சி காரணமாக நாட்டின் வர்த்தகம், உல்லாசப் பயணத்துறை போன்றன ஒன்றுடன் ஒன்று இணைந்து வருகின்றன. மொத்தத்தில் தெருப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு வளர்ச்சி, இணைக்கப்பட்ட சந்தை ஏற்பாடுகள், பொதுக் கல்வித் திட்டங்கள், வர்த்தகம் மற்றும் தேசிய கொள்கை அமுலாக்கம் போன்றன காரணமாக மிகவும் இறுக்கமாக வலைப் பின்னல் போல பிராந்தியங்கள் ஒன்றில் ஒன்று தங்கி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டிய பிரதான அம்சம் எதுவெனில் தமிழ்ப் பகுதிகளில் அதற்கே உரித்தான தனித்துவமான, சுயாதீனமான சமூகக் கட்டுமானங்கள் என்பன படிப்படியாக அருகி ஒன்றிணைந்த இலங்கை என்ற பரந்த தேசிய கட்டமைப்பிற்குள் வலுவாக இணைந்துள்ளது. அரசியல் கலாச்சரம் என்பது ஒன்றிணைந்த இலங்கைத் தேசிய கட்டமைப்பிற்குள் மத்தியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே செயற்பாடுகள் அமைகின்றன.  

( தொடரும் ) 

 

https://arangamnews.com/?p=7154

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


 

தமிழ் அரசியல் மூலோபாய, தந்திரோபாய அரசியலின் தேவை (பகுதி-2)

    — வி. சிவலிங்கம் — 

spacer.png

போரிற்குப் பின்னதான தாக்கங்களும், மாற்றங்களும் 

சமீப காலமாக தமிழ்த் தேசியம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ள நிலையில் வெறுமனே கனவுகள் அல்லது அபிலாஷைகள் போன்றன மட்டும் சமூக மாற்றத்தைத் தருமா? என்ற கேள்விகள் எழுகின்றன. கடல் வளம், விவசாய நிலங்கள், இளைஞர் தொகை, வெளிநாட்டு வருமானம் போன்றன இருப்பதாக கூறுவதன் மூலம் மாற்றம் ஏற்படுமா? தமிழ்த் தேசியம் என்பது சமூகத்தின் பல்வேறு கூறுகளை இணைக்கும் அடிப்படைகளைக் கொண்டிருத்தல் அவசியம், அதற்கான பொது அடிப்படைகள் குறித்த விவாதங்கள் தேவை. அவ்வாறாயின் தமிழ் சமூகத்தின் இன்றைய இருப்புக் குறித்த தெளிவான ஆய்வு அவசியம். குறைந்த பட்சம் கிடைக்கும் புள்ளி விபரங்களின் அடிப்படையிலான குறைந்தபட்ச மதிப்பீடாவது அவசியம்.  

இவை குறித்து மேலோட்டமாகப் பார்த்தால் அவை நம்பிக்கை தருவனவாக இல்லை. மிக ஆழமான தலையீட்டின் அவசியத்தை உணர்த்துகின்றன. தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சனத்தொகைப் பலம் மிகவும் குறைந்துள்ளது. காலம் காலமாக இப் பிரதேசங்களில் செயற்பட்ட தனித்துவமான சமூக கட்டுமானங்கள் செயலிழந்துள்ளன. கல்வித் தளம் மிகவும் வேதனை தருவதாக உள்ளது. உள்ளுர் பொருளாதார உற்பத்தித் துறைகள் மிகவும் பலவீனமாகியுள்ளன. மீன்பிடித் தொழில் என்பது மிகவும் சுருங்கியுள்ளதோடு, அடுத்த தலைமுறையினர் அத் தொழிலைத் தொடர்வார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினரின் உளவியல் போக்கு மிகவும் மாற்றமடைந்துள்ளது. வெளிநாட்டு வருமானமும், திறந்த பொருளாதார வருகையும் ஒரு நுகர்வோர் சமூகமாக அவர்களை மாற்றியுள்ளது. வெளிநாட்டு வருமானங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கும் முயற்சிகள் குறைவடைந்துள்ளதால் இப் பகுதிகளின் பொருளாதாரம் என்பது குமிழ் பொருளாதாரமாக (Bubble economy) உள்ளது. அதாவது சுழற்சியிலுள்ள பணம் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படாமல், நுகர்ச்சிக்குச் செலவாகும்போது ஏற்படும் தாக்கம் குறித்து கல்விமான்களோ, அரசியல்வாதிகளோ கவலைப்படுவதாகவோ அல்லது எச்சரிப்பதாகவோ இல்லை. கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தி கடைகளும், வீடுகளும், போக்குவரத்து சொகுசு வாகனங்களும் அதிகரிக்கலாம். இவை வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் காட்டலாம். ஆனால் வெளிநாட்டு வருமானம் என்பது நிச்சயமற்றது என்பதால் அவை குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் இவை தற்காலிகமாக ஓர் வளர்ச்சி போல குமிழ் போல காணப்படலாம். ஆனால் அவை குறைவடையும்போது பாரிய சமூக நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏனெனில் வருமானப் பற்றாக்குறை வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும்போது சமூக நெருக்கடிகள் கூடவே ஆரம்பிக்கின்றன. இதுவே மேற்கு நாடுகளின் அனுபவமாக உள்ளது. இதற்குப் பிரதான காரணம் இப் பிரதேசங்களுக்கான சுயாதீன பொருளாதாரக் கட்டுமானங்களின் பற்றாக்குறையாகும்.  

பொருளாதார அடிப்படைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் 

இப் பற்றாக்குறைப் பொருளாதாரம் புதிய நிலமைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சேவைத் துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நுகர்ச்சி அதிகரிப்புக் காரணமாக வியாபார நிறுவனங்களின் வளர்ச்சி, உல்லாசப் பயணத்துறை காரணமாக ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகளின் அதிகரிப்பு என்பது சேவைத்துறையில் வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளது. இதனால் பாரம்பரிய விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டு சேவைத்துறையில் பலர் இணைவதால் விவசாயத்துடன் சார்ந்த கலாச்சார பாரம்பரியங்களும் படிப்படியாக மறைந்து செல்கிறது.  

வலுவிழந்த தேசியக் கோட்பாடு 

மேலே குறிப்பிட்ட விபரங்களை ஆராயும்போது தமிழ்த் தேசியம் என அழைக்கப்படும் கோட்பாடு அதன் உள்ளடக்கத்தைப் படிப்படியாக தொலைத்துச் செல்வதை நாம் அவதானிக்கலாம். இதன் காரணமாக தமிழ்பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்திற்குள் செல்வதும் மிகவும் சிக்கலாகி வருகிறது. ஏனெனில் தமிழ் பேசும் மக்கள் என அழைக்கப்படும் சமூகப் பிரிவினரின் அபிலாஷைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதைக் காணலாம். இதன் ஓர் பக்க விளைவே 13வது திருத்த அமுலாக்கத்திற்கு ஆதரவாக எழுந்த நிலமைகள் ஈற்றில் சிதைந்து சென்றமையாகும். இப் பிரச்சனையை நாம் ஆக்கபூர்வமாக அணுகுவது அவசியமானது. குறிப்பாக மலையக மற்றும் முஸ்லீம் மக்களின் அபிலாஷைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் கவனத்திற்குரியவை. இவை தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவை என்பதை விட இச் சமூகங்களின் இருப்பு என்பது பெரும்பான்மைச் சமூகங்களின் நல்லிணக்கத்தில் தங்கியிருப்பதை அங்கீகரிப்பது அல்லது புரிந்து கொள்வது முக்கியமானது.  

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செயற்படும் அரசியல் சக்திகள் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் காத்திரமான இணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் இந்த யதார்த்தத்தினைப் புரிந்து செயற்படுவது அவசியமானது. தமிழ்த் தேசியவாதம் என்பது அதன் அடிப்படை இலக்குகளை மாற்றுவதும், அதற்கு ஏற்றவாறான விதத்தில் கொள்கை, கோட்பாடுகளை மாற்றுவதும் தேவையாகிறது. இதனையே மூலோபாய மாற்றம் என்கிறேன். இம் மூலோபாய மாற்றத்தின் அவசியத்திற்கான சில காரணங்களை முன்வைக்கிறேன். 

–           படிப்படியாக வடக்கு, கிழக்கிற்கு வெளியில் இச் சமூகங்கள் தமது இருப்பை மாற்றி வருவதோடு, முதலீடுகளையும் ஆரம்பித்துள்ளன. இம் மக்கள் தமது கல்வியையும் சிங்களத்திற்கும், ஆங்கிலத்திற்கும் மாற்றி வருகின்றனர். இவை காலப் போக்கில் எவ்வாறு ஐரோப்பிய தேசங்களில் புலம்பெயர்ந்த மக்கள் தமது கல்வியாலும், பொருளாதாரத்தாலும் படிப்படியாக உயர் கட்டுமானங்களை நோக்கி நகர்ந்தார்களோ அவ்வாறான மாற்றங்கள் அங்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இவை ஒரு வகையில் நேர்மறை சாதகங்களாகும்.  

–           சிங்கள, பௌத்த தேசியவாத உணர்வுகள் பல வகைகளில் பலமடைந்து செல்கிறது. ஒரு புறத்தில் திறந்த பொருளாதாரத்தையும், மறு புறத்தில் இவ்வாறான குறும் தேசியவாதத்தினையும் எடுத்துச் செல்ல முடியாது. ஏனெனில் சுமுகமான  சந்தைப் பொருளாதாரத்திற்கு அவை மிகவும் இடையூறாகவே அமையும். இதுவே இன்று காணப்படும் பரிதாப நிலையாகும். ஓர் குறிப்பிட்ட பிரிவினர் தமது அதிகார இருப்பிற்காக இனவாதத்தைப் பேசிய போதிலும் அதிகாரக் குவிப்பும், பொருளாதாரக் குவிப்பும் அதன் பின்னணியில் செயற்படுவதை மக்கள் தற்போது தெளிவாகக் காண்கின்றனர். எனவே இனவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் அதிகார இருப்பின் ஆயுதம் என்பதும், அதனால் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மட்டுமல்ல, தேசத்தின் பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினரும் அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.  

–           தமிழ்த் தேசியம் என அதிகளவு அலட்டிக் கொள்கின்ற போதிலும் இத் தேசியவாதிகள் மத்தியில் குறைந்தபட்ச அளவிலான இணக்கம் இதுவரை இல்லையே!  மக்கள் படும் அவதிகளுக்கு தலைமை வழங்க இதுவரை முடியவில்லையே!  

–           ஒரு புறத்தில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத நெருக்கடிகளும், மறு பக்கத்தில் தமிழ்த் தேசியவாத சக்திகள் மத்தியிலே போட்டி, பொறாமைகளும் அதிகரித்துள்ள நிலையில் பொது நன்மை கருதி மாற்று யுக்திகள் பற்றி விவாதிப்பது தேவையாகிறது.  

தந்திரோபாய அரசியல் 

இவ்வாறான சிக்கலான நிலமைகளிலிருந்து மாற்றம் தேவையாயின் தமிழ் அரசியல் தனது அரசியல் அடிப்படைகளை புதிய நிலமைகளைக் கவனத்திலெடுத்து புதிய வகையில் 21ம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறான புதிய அடிப்படைகளை வகுக்க வேண்டும். இங்கு இரண்டு அம்சங்கள் குறித்து இக் கட்டுரை ஆராய்கிறது. அதாவது மூலோபாய (Strategical) மாற்றம் அடுத்தது தந்திரோபாய (Tactical) மாற்றம் என்பதாகும். மூலோபாய மாற்றத்திற்கான தேவைகள், அதற்கான அடிப்படைகள் குறித்த சில அம்சங்கள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது தந்திரோபாய  மாற்றங்கள் குறித்து அணுகலாம்.  

தந்திரோபாய அரசியல் முடிவுகளின் தேவை என்ன

ஏற்கெனவே குறிப்பிட்டவாறு பார்க்கையில் நாட்டின் தமிழ்த் தலைமைகளும், ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் தலைமைகளும் அல்லது மக்கள் பிரிவினரும் மிகவும் பலவீன நிலையில் அதாவது அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படைகளில் உள்ளனர். இச் சமூகங்களுக்குத் தலைமை தாங்கும் அரசியல் தலைமைகளும் மிகவும் பலவீனமாக உள்ளன. இப் பலவீனங்கள் என்பது கட்சிகளின் உட்கட்டமைப்பு, உட்கட்சி ஜனநாயகம், ஊழல் தாக்கங்கங்கள் என்பன சில காரணிகளாகும். சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகளின் அழுத்தங்களும் குறிப்பாக சமூகங்களைப் பிளவுபடுத்தி ஆளும் போக்கு அதிகமாக உள்ளது. சமீப காலமாக ராணுவத்தின் தலையீடு பல்வேறு விதங்களில் அரச கட்டுமானங்களில் தாக்கம் செலுத்துகிறது. இவை சிங்கள பௌத்த பெருந்தேசியவாத சக்திகளின் கருவியாகவே செயற்படுகிறது. இவ்வாறான அரசியல் வழிமுறையின் இன்னொரு சக்தியாக பௌத்த பிக்குகளின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. அவர்களும் தமது நலன்களை இப் பிளவுகளைப் பயன்படுத்தி அதிகாரத்தின் பகுதியை அனுபவிக்கின்றனர்  

இவ்வாறான போக்குகளை அரசியல் கோரிக்கைகளால் அல்லது பாராளுமன்ற உரைகளால் தடுத்துவிட முடியாது. இவை அரச நேரடி ஆதிக்கத்திற்கு வெளியில் இயங்குகின்றன. அரச அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், கட்சி ஆதரவாளர்கள் போன்ற பிரிவினரால் இயக்கப்படுகின்றன. அரச உயர்மட்டம் தெரிந்தும் தெரியாதது போல் செயற்படுகிறது. அதே வேளை பொருளாதார தாக்கங்களுக்குள் அகப்பட்டுள்ள மக்கள் இவற்றிற்கெதிராக தினமும் போராட்டம் நடத்தும் நிலையிலில்லை. இதனால் பாதிக்கப்படும் மக்கள் மட்டுமே போராடுகிறார்கள். இப் போராட்டங்கள் பரந்த மக்களின் ஆதரவைப் பெற முடியாததால் ஒடுக்கப்படுகின்றன அல்லது பலவீனமடைகின்றன. உதாரணமாக, மகாவலி ஆற்றுப் படுக்கைகளுக்கு அருகில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு உல்லாச பயணத்துறைக்கான உபசரிப்பு நிலையங்கள் கட்டப்படுகின்றன. இதனால் பல பயிர்ச் செய்கை நிலங்கள் கட்டிடங்களாக சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுகின்றன. குடிநீர் அசுத்தமாகிறது. இதனால் நெடுந்தூரம் குடிநீருக்காக மக்கள் அலைகின்றனர். இவற்றிற்கெதிராக நீதி மன்றம் சென்று போராட மக்களால் முடியவில்லை. இதுவே வடக்கு, கிழக்கிலுள்ள அழகிய கடற்கரை ஓரங்களிலுள்ள நிலங்களின் நிலையாகும். முக்கியமான கடற்கரைப் பகுதிகள் ராணுவத்தின் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையில் முட் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள காணிகள் பலவற்றில் ராணுவ குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் சாமான்ய வறுமைப்பட்ட மக்கள் குடியேற்றப்பட்ட நிலமைகள் மாறி ராணுவ நிரந்தர குடியிருப்புகளும், வருமானமீட்டும் தொழில் ஏற்பாடுகளும் நிறுவப்படுகின்றன. இதனால் சில தனியார் காணிகளுக்கும் பல ஆபத்துகள் உள்ளன.  

ஐக்கியமும்போராட்டமும் 

இவ்வாறான பல ஆபத்துகளை வெறுமனே ஆர்ப்பாட்டம் அல்லது சத்தியாக்கிரகம் நடத்தித் தடுத்துவிட முடியாது. அரசுடன் அல்லது எதிர்க்கட்சியுடன் அல்லது ஜனநாயக சக்திகளுடன் ஓர் புரிந்துணர்வுக்குச் செல்வதும், அரசாங்கத்தின் சமூக விரோத தீர்மானங்களால் பாதிக்கப்படும் மக்கள் மத்தியில் ஐக்கியம் தேவையாகிறது. கூட்டணி அமைப்பது என்பது பரஸ்பரம் நலன்களைப் பகிர்ந்து கொள்வதாகும். உதாரணமாக, முஸ்லீம் மக்களின் அல்லது மலையக மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு பலமான ஆதரவை வழங்கும்போது அவை தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும் பலமாக அமைகின்றன. எனவே இணைந்து செயற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு அதில் இணைந்து செயற்படுவதற்கான தந்திரோபாயங்களை வகுக்க முடியும். தந்திரோபாயம் என்பது பொதுவாகவே உடனடிப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளிலிருந்து ஆரம்பிக்க முடியும். இவ்வாறாக செயற்படும்போது நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான புரிந்துணர்வு அங்கிருந்தே ஆரம்பிக்கிறது. அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்பார்கள். அது மட்டுமல்ல, அரசியல் என்பது முடிந்ததை அடைவதற்கான ஒரு கலைவடிவம் என்றே கூறுகிறார்கள்.  

13வது திருத்த விவகாரம் 

மேற்குறித்த கருத்துக்களை மேலும் அழுத்துவது அவசியம் என்பதால் இன்னும் சில காரணங்களைத் தருகிறேன். சமீப காலமாக தமிழ் அரசியல் தலைமைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. உதாரணமாக, தமிழ்த் தேசிய நீக்க அரசியலை சுமந்திரன் மேற்கொள்வதாக தம்மைத் தேசியவாதிகள் எனக் கருதுவோர் குற்றம் சாட்டுகின்றனர். அவரை அரசாங்கத்தின் முகவராகவும் அடையாளப்படுத்துகின்றனர். 13வது திருத்தம் தொடர்பாக காணப்படும் விவாதங்கள் அவரை அத் திருத்தத்திற்கு எதிரான ஒருவராக காட்ட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இவ் வகை அரசியல் தமிழ் அரசியலின் கடந்தகால வாக்கு வங்கி அரசியலின் விளைபொருளாக உள்ளது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இவ்வாறாக அவமானப்படுத்துவது தமிழரசுக் கட்சியை இழிவுபடுத்துவதற்கு ஒப்பானது. அவ்வாறான ஒருவர் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக செயற்படுகிறார் எனக் கருதினால் அக் கட்சியை நோக்கி விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும். பதிலாக தனி நபரை நோக்கிய விமரசனங்கள் என்பது வேறு வகையில் நோக்கப்பட வேண்டியுள்ளது. தமிழ் அரசியலில் மிகவும் காத்திரமான பாத்திரத்தை வகிக்கும் அவரின் செல்வாக்கை சிதைக்கும் நோக்கமே பின்னணியில் செயற்படுகிறது. குறிப்பாகக் கூறுவதாயின் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்தும், அரசுக்கெதிரான சர்வதேச விசாரணைகள் குறித்தும் அவரது அபிப்பிராயங்கள் வாக்குவங்கி அரசியல் நடத்துவோரின் அபிலாஷைகளுக்கு இடையூறாகவே உள்ளன. விடுதலைப்புலிகளின் குற்றங்களையும் விசாரிக்கப்படுவது தவிர்க்கமுடியாதது என்பதைப் பலரும் அறிவர். அரசாங்கத்தை மட்டும் விசாரிக்க முடியாது. பிரச்சனையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். அவர் ஒரு மனித உரிமைவாதி என்ற வகையிலும், சட்டத்தரணி என்ற வகையிலும் அவ்வாறான அபிப்பிராயத்தை வெளியிடுவதே முறையானது. என்னை விசாரிக்கும்படி நான் ஏன் கேட்கவேண்டும்? என முறையிடுவது எந்த வகையில் நீதியைக் கோருவதாகும். அரசாங்கம் தனது குற்றங்களை மறைக்க சர்வதேச நீதியரசர்கள் தேவையில்லை எனக் கூறுவது போலவே நாமும் எதையோ மறைக்க இவ்வாறான விவாதங்களை நகர்த்துகிறோம். 

சமீப காலமாக தமிழ் அரசியலில் காணப்படும் 13வது திருத்தம் தொடர்பான விவாதங்கள் கட்சிகளுக்குள் பிளவு நிலையை ஏற்படுத்துவதற்கான முன்நகர்வாகவே காணப்படுகிறது. 13வது திருத்தம் அரசியல் யாப்பின் ஒரு பிரிவாக இருப்பதாலும், அதனை உருவாக்குவதில் இந்தியா செயற்பட்டதாலும் இந்தியாவிடம் அதன் செயற்பாட்டின் அவசியத்தை வற்புறுத்துவது அவசியமானதே. ஆனால் தமிழ் அரசியல் 13வது திருத்தத்திற்கு அப்பால் வெகுதூரம் சென்றுள்ளது. பல அறிக்கைகள், அரசியல் யாப்பு யோசனைகள், சகல கட்சிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகள் எனப் பல அம்சங்களில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து சிங்கள அரசியல் தலைமைகள் விலகிச் செல்ல அனுமதிக்க முடியாது. 13வது அரசியல் யாப்பில் இருப்பதால் அதனை அமுல்படுத்துவது அரசின் கடமை. ஜனாதிபதியின் சத்தியப் பிரமாணத்தில் அரசியல் யாப்பிற்கு விசுவாசமாகச் செயற்படுவதாகவே சத்தியம் பெறப்படுகிறது. எனவே ஜனாதிபதி அரசியல் அமைப்பின் பிரகாரம் செயற்படவில்லை எனில் நீதிமன்றத்தை நோக்கிச் செல்வதே பொருத்தமானது. இந்தியா அதனை எவ்வாறு வற்புறுத்த முடியும்? ஆனால் 13வது திருத்தம் என்பது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கையால் தயாரிக்கப்பட்ட ஆவணமாகும். அப்போதைய காலகட்டத்தில் காணப்பட்ட அரசியல் நெருக்கடிகள் அவ்வாறான அரைகுறை ஆவணத்தைத் தந்திருக்கலாம். ஆனால் அது பூரணமானது அல்ல எனக் கூறி புதிய ஒன்றை வரைவதாக அரசு கூறுமானால் அது குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் எச்சரிக்கையோடு இந்தியாவை அணுகி அதன் தார்மீக கடமையை வற்புறுத்துவது நியாயமானதே. இருப்பினும் இந்த ஒப்பந்தம் சுமார் 40 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் இடைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதுவே இன்று நடைபெற்றிருக்கிறது. ஆனாலும் இம் முயற்சிகளின்போது முஸ்லீம் மற்றும் மலையக கட்சிகளுடன் ஏற்பட்ட இணக்கம் என்பது 13வது திருத்த வற்புறுத்தலை விட முன்னேற்றகரமானது. அதனால் இணைந்த சகல தரப்பாரும் புதிய கோரிக்கைக்கான முயற்சியில் இறங்கி அதனை இந்தியாவிடம் கையளிப்பதற்கான தந்திரோபாயத்தை உருவாக்கியிருக்க வேண்டும்.  

மாற்று ஏற்பாடு தவறவிடப்பட்டுள்ளது 

அடுத்ததாக, தமிழ், முஸ்லீம், மலையக அரசியல் தலைமைகளிடையே 13வது திருத்தம் தொடர்பாக இந்தியாவை வற்புறுத்துவது தொடர்பாக சில உடன்பாடுகள் எட்டப்பட்ட போதிலும் இறுதியில் கைவிடப்பட்டன. இது மிகவும் துரதிர்ஸ்டமானது. உள்நாட்டு அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான புதிய வாய்ப்பாக அமைந்திருந்தது. நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சார்ந்த அரசியல் கட்சிகளிடையே 13வது திருத்தத்தினை மையமாக வைத்த புதிய கோரிக்கையாக அது அமைந்திருந்தது. அது இந்தியாவிற்கு செல்லாவிட்டாலும் உள்நாட்டில் புதிய பாதைக்கான திட்டமாக அமைந்திருந்தது. இந்தியாவிடம் சகல தரப்பினரும் தமது கோரிக்கைகளை புதிய விதத்தில் தயாரித்து வழங்கியிருக்க முடியும். 13வது திருத்த அமுலாக்கம் குறித்த புதிய வியாக்கியானமாக அது அமைந்திருக்கும். 13வது திருத்தத்தின் உள்ளடக்கத்தின் பொது அம்சங்களாக அடையாளப்படுத்தி அதனையும் சமர்ப்பித்திருக்க அல்லது புதிய உபாயங்களை வகுத்திருக்க முடியும். ஆனால் வாக்குவங்கி அரசியல் இம் முயற்சிகளையும் தோற்கடித்துள்ளது.      

அரசுடன் பேச்சுவார்த்தை 

ஆளும் தரப்புடன் பேசுவது என்பது எதுவும் வெட்கம்கெட்ட அணுகுமுறையல்ல. முதலில் நாட்டில் நிலவும் ஜனநாயக நடைமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கம் தேசிய இனப் பிரச்சனையில் எத்தனை மோசமான கொள்கைகளைக் கொண்டிருந்த போதிலும் தனது தீர்வாக எதை முன்வைத்தாலும் அவை குறித்து விவாதிக்க தமிழ் அரசியல் தலைமைகள் தயாராக வேண்டும். ஏனெனில் அரசியல் தீர்வு அல்லது சமாதானம் என்பது அரசுடன் பேசி முடிவு செய்யும் செயலாகும். எனவே எந்த அரசு பதவியிலிருந்தாலும் பேசுவது அவசியமானது. இவ்வாறாக அரசுடன் பேசுவது மக்களின் ஆதரவைப் பெறாவிடினும் தந்திரோபாய அடிப்படையில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது முக்கியமானது. அரசின் போலி முகத்திரையை அடையாளப்படுத்துவதற்கு இதுவும் தந்திரோபாயமாகும். வாக்குவங்கி அரசியலை நடத்துவோருக்கு இது பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கிய எந்த வாய்ப்புகளையும் பயன்படுத்தும் அரசியல் சாணக்கியம் தலைவர்களுக்கு அவசியம். 

முடிவுரை 

தமிழ் அரசியல் பழமைவாதிகள் அல்லது முன்னாள் அரசியல்வாதிகளால் மாற்றங்களைப் பிறப்பிக் முடியாது என்பதை தவறவிடப்பட்ட பல சந்தர்ப்பங்களின் தொகுப்பு உணர்த்துகிறது. கடந்த கால அரசியல் அனுபவங்கள் இன்றைய முயற்சிகளுக்குத் தடையாக இருக்க முடியாது. சர்வதேச பின்புலங்கள் பலமாக இருக்கையில் புதிய அரசியல் தலைமைகள் புதிய வகைகளில் பிரச்சனைகளை அணுகுவதும், அதற்காக புதிய மூலோபாய, தந்திரோபாயங்களை வகுப்பதும் தேவையாகிறது. எனவே கடந்தகால தோல்விகள், அனுபவங்கள் புதிய அணுகுமுறைகளுக்கு எச்சரிக்கையாக இருக்கலாமே தவிர அவை தடையாக இருக்க அனுமதிக்காமல் புதிய தலைமுறையினர் புதிய வழிகளில் பிரச்சனைகளை அணுக இடமளிக்கப்பட வேண்டும்.  

முற்றும்.                                

https://arangamnews.com/?p=7161

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.