Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏவுகணை சோதனை: பாகிஸ்தானுக்கு பாராட்டு, இந்தியாவுக்கு சில கேள்விகள் - ஓர் அலசல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏவுகணை சோதனை: பாகிஸ்தானுக்கு பாராட்டு, இந்தியாவுக்கு சில கேள்விகள் - ஓர் அலசல்

  • சஹர் பலோச்
  • பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத்
10 நிமிடங்களுக்கு முன்னர்
 

இந்தியா பாகிஸ்தான் எல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்," என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2022ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பாகிஸ்தானின் மியான் சன்னுவில் வெடிமருந்து நிரப்பப்படாத காலியான இந்திய ஏவுகணை கலன் (பிரமோஸ் போன்ற வடிவிலானது) "தற்செயலாக" விழுந்த பிறகு, பாகிஸ்தான் "தீர்க்கமாக சிந்தித்து வெளிப்படுத்திய எதிர்வினையை" பாராட்ட இந்திய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த உறுப்பினரான சுஷாந்த் சிங்கின் பயன்படுத்திய வார்த்தைகள் இவை.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை பாராட்டிய ஒரே இந்தியர் சுஷாந்த் சிங் மட்டுமல்ல. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான உறவுகள், சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அணுசக்தி திறன்களை கருத்தில்கொள்ளும்போது, இந்த 'தற்செயலான ஏவுகணை' சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே மோதலுக்கு வழி வகுத்திருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆனால் இப்படி நடக்கவில்லை. பாகிஸ்தான் அரசுக்கே இதன் பெருமை சாரும் என்று பல இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் ராணுவ நிபுணர்களும் கூறுகின்றனர். குறிப்பாக இந்தியா இதை ஏற்றுக்கொள்ள இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்ட சூழ்நிலையில் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

பாகிஸ்தானின் கானேவால் மாவட்டத்தில் உள்ள மியான் சன்னு நகரில் மார்ச் 9ஆம் தேதி எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அதிவேகமாக பறந்துவந்த பொருள் ஒன்று உள்ளூர் குடியிருப்பு பகுதி மீது விழுந்தது.

பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையின் (ISPR) தலைமை இயக்குநர் ஜெனரல் மேஜர் பாபர் இஃப்திகார், மார்ச் 10 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் "மியான் சன்னுவில் விழுந்த அதிவேகப் பொருள் அநேகமாக இந்திய ஏவுகணையாக இருக்கலாம்" என்று கூறினார்.

அடுத்த நாள், மார்ச் 11 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், "வழக்கமான பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது" என்று ஒப்புக்கொண்டது. மேலும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

"ஒரு பெரிய நகரத்தை நோக்கி ஏவுகணை சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்?"

 

ISPR

பட மூலாதாரம்,ISPR

இது குறித்து புது டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சுஷாந்த் சிங் பிபிசியிடம் பேசினார்.

"இந்த ஏவுகணை ஒரு பெரிய நகரத்தை நோக்கிச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதுதான் இப்போது விவாதத்தின் மையமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை," என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என்று சுஷாந்த் கூறினார்.

"அப்படி இருந்தபோதிலும், எல்லைக்கு அப்பாலில் இருந்து வந்த ஏவுகணை தற்செயலாக ஏவப்பட்டதா இல்லையா என்பதை எந்த பாதுகாப்பு அமைப்பும் கணிக்க முடியாது."என்கிறார் அவர்.

"எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிடம் கேட்கப்படும் கேள்விகள்

பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், மார்ச் 11ஆம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," 40,000 அடி உயரத்தில் இருந்து சூப்பர்சானிக் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் வந்தது. இந்த ஏவுகணை ஏவப்பட்ட பிறகு, அது தவறுதலாக ஏவப்பட்டது என்று சொல்ல இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் ஆயின,"

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த ஏவுகணை தொடர்பான இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை, சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது மார்ச் 11-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏவுகணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் குறித்து கவலை தெரிவித்த மொயீத் யூசுப், இந்த நேரத்தில் இந்தியாவில் 'பாசிச சித்தாந்தம்' பின்பற்றப்படுவதாகவும், அதன் கீழ் 2019 இல் பாகிஸ்தானைத் தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் இதேபோன்ற சில கேள்விகளை கேட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்தச் சம்பவம் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு பதில் கிடைப்பது மிகவும் முக்கியம். ஏவுகணை தற்செயலாக ஏவப்படுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் உள்ளன என்பதை இந்தியா தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக இந்த சம்பவம் குறித்த விவரங்களை பாகிஸ்தானுக்கு தெரிவிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் விழுந்த ஏவுகணையின் வகை மற்றும் விவரம் என்ன என்பதை பாகிஸ்தானிடம் இந்தியா தெரிவிக்க வேண்டும். அந்த ஏவுகணை எந்தப் பாதையில் சென்றது, எப்படி திடீரென பாகிஸ்தானுக்கு வந்தது என்பது குறித்தும் இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிடம் பாகிஸ்தான் பல கேள்விகளை கேட்டுள்ளது. உதாரணமாக, வழக்கமான பயிற்சிகள் மற்றும் பராமரிப்பின் போது கூட இந்தியாவில் ஏவுகணைகளை எப்போதும் ஏவுவதற்கு தயார் நிலையில் வைக்கப்படுகிறதா என்றும் வினவப்ட்டுள்ளது. ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதை இந்தியா உடனடியாக பாகிஸ்தானுக்கு ஏன் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் பாகிஸ்தானால் அறிவிக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்ட பிறகே இந்தியா இது குறித்து தெரிவித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான குறுகிய தூரம் மற்றும் பதிலடி கொடுக்க ஆகும் குறைவான நேரம் காரணமாக, இதுபோன்ற எந்தவொரு சம்பவமும், இரு தரப்பிலும் 'தாக்குதல்' என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. அணுவாற்றல் திறன் கொண்ட நாடுகளிடையே இதுபோன்ற சம்பவங்களை சர்வதேச சமூகம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உள்நாட்டு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த இந்தியா எடுத்துள்ள முடிவு போதாது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துள்ளதாகவும், எனவே இந்த சம்பவத்தின் உண்மைகளை கண்டறிய கூட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இஸ்லாமாபாத் கூறுகிறது.

அணு ஆயுதத்திறன் கொண்ட இரு நாடுகளுக்கிடையே பிரச்னை அதிகரித்தால், பிராந்தியத்தில் நிச்சயமற்ற சூழ்நிலை எவ்வாறு உருவாகும் என்பது குறித்து பல நிபுணர்களும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

"இரு நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன, அதை பயன்படுத்த முடியும் என்று பேசுவது பொறுப்பற்றதாகும். மேலும் பீதியை உருவாக்கி சண்டையை மூட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவகிறது,"என்று இந்திய ராணுவ இதழான 'ஃபோர்ஸ்' ஆசிரியர் பிரவீன் சாஹ்னி தெரிவித்தார். .

"ஒரு ஜனநாயக அரசிடம் இருக்கவேண்டிய விவேகத்துடன், இந்த விஷயத்தில் பாகிஸ்தான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டது. ஆனால் இந்தியா மீது எழுப்பப்பட்ட கேள்விகளை மென்மையாக்கக்கூடாது. கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால் ஆயுதங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பதிலடி கொடுப்பது கொடுப்பதை வலியுறுத்துவது சரியல்ல," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.இந்த கவனக்குறைவை கருத்தில் கொண்டு, இந்தியாவின் ஏவுகணைகள் உண்மையில் ராணுவத்தின் கைகளில் உள்ளதா அல்லது வேறு யாருடைய கைகளிலாவது உள்ளதா என்பதையும் இந்தியா தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

"இந்தியாவின் அறிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது"

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த சுஷாந்த் சிங், "இது ஏன் நடந்தது என்பதை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தாத வரை இது ஒரு மேலோட்டமான அறிக்கைதான். மேலும் விசாரணையின் முடிவுகள் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்,"என்று குறிப்பிட்டார்.

"இந்திய டிஜிஎம்ஓவின் ஹாட்லைனில் இருந்து கூட எந்த செய்தியும் வழங்கப்படவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

எந்தவொரு அசாதாரண சூழ்நிலையிலும் உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு பாகிஸ்தானின் டைரக்டர் ஜெனரல் மிலிட்டரி ஆபரேஷன்ஸ் (டிஜிஎம்ஓ) மற்றும் இந்திய ராணுவத்திற்கும் இடையே உள்ள ஹாட் லைன் தொடர்பை பயன்படுத்தமுடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

ஏவுகணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த சம்பவத்திற்குப் பிறகு, இது இந்தியத் தேர்தலுடன் தொடர்புடையதா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது. சில அறிக்கைகளில் இந்த சம்பவம் 'மோதியின் சதி' என்றும் முன்னிறுத்தப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத்தேர்தல்கள் மார்ச் 7 ஆம் தேதி முடிந்து, மார்ச் 10 ஆம் தேதி முடிவுகளும் வெளியாகிவிட்டன.

பிபிசியிடம் பேசிய சுஷாந்த் சிங், தேர்தலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். "இது குறித்து பாகிஸ்தானிடம் அதிகாரபூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அது நடந்திருந்தாலும், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்," என்றார் அவர்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏவுகணைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் செயல்முறை என்ன?

கடந்த 17 ஆண்டுகளில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆறு பெரிய தாவாக்கள் எழுந்துள்ளன. அவை பேச்சுவார்த்தை மற்றும் சர்வதேச தலையீடு மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. ஏவுகணை தற்செயலாக ஏவப்பட்டதான அறிக்கையை, இரு நாடுகளிலும் உள்ள வல்லுநர்கள் கவலையுடன் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே, அணுசக்தி மற்றும் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

1999 பிப்ரவரி 21 ஆம் தேதி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்த வகை பாலிஸ்டிக் ஏவுகணையையும் சோதனை செய்வதற்கு முன், இரு நாடுகளும் பரஸ்பரம் தகவல் தெரிவிக்க வேண்டும் என இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்முடிவு செய்யப்பட்டது. தரை அல்லது கடல் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை ஏவுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இரு நாடுகளும் பரஸ்பரம் அறிவிக்க வேண்டும். மேலும் அறிக்கை வெளியிடும் பொறுப்பு இரு நாடுகளின் வெளியுறவு அலுவலகம் மற்றும் ஹை கமிஷன்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி பாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுத தளங்களின் பட்டியலை பரிமாறிக்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது.

மேலும், எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஆயுதம் ஏந்திய போர் விமானம் பறந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

 

ஏவுகணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்றாவது ஒப்பந்தம் அணுசக்தி விபத்து தொடர்பானது. இரு நாடுகளிலும் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், பரஸ்பரம் தெரிவிக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது.

கடந்த 17 வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தான போதிலும், ஆயுதங்கள் கொள்முதல் மற்றும் கையிருப்பு போன்றவற்றில்

வேகமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு என்னவென்றால், பல புதிய ஆயுதங்கள் இந்த ஒப்பந்தங்களின் கீழ் இல்லை.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து முறையாக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனால் க்ரூயிஸ் ஏவுகணைகள் போன்ற புதிய ஏவுகணைகள் குறித்து இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று ஏரோ ஸ்பேஸ் அண்ட் செக்யூரிட்டி ஸ்டடீஸ் மையத்தின் இயக்குனர் சையத் முகமது அலி பிபிசியிடம் தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டில், க்ரூயிஸ் ஏவுகணை பரிசோதனை குறித்து இரு நாடுகளும் பரஸ்பரம் முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பாகிஸ்தான் பேசியது. ஆனால் இந்தியா அதை ஆதரிக்கவில்லை.

2005, ஆகஸ்ட் 11 ஆம் தேதி ' பாபர் ' என்று பெயர் சூட்டப்பட்ட முதல் க்ரூயிஸ் ஏவுகணையை பாக்கிஸ்தான் சோதித்தது. அதன் பிறகு பாபரின் நவீன வடிவத்தையும் பாகிஸ்தான் உருவாக்கியது. அதன்பிறகு ஏர் லாஞ்ச் க்ரூயிஸ் ஏவுகணை 'ராத்' ம் வந்தது. அதேபோல் இந்தியாவும் பிரம்மோஸ் உள்ளிட்ட க்ரூயிஸ் ஏவுகணைகளை தயாரித்தது.

பிரமோஸில் நான்கு வகைகள் உள்ளன. இதில் நிலத்தில் இருந்து நிலம், வானத்தில் இருந்து நிலம், கடலில் இருந்து நிலம், மற்றும் கடலுக்கு அடியே உள்ள இலக்குகளை தாக்கவல்ல ஏவுகணைகள் அடங்கும்.

"ஆயுதங்களை சேமித்து வைப்பதை விட, அதை பராமரிப்பதும் பாதுகாப்பதும் இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது" என்கிறார் சையது முகமது அலி.

இந்த நேரத்தில் க்ரூயிஸ் ஏவுகணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், இதனால் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். ஏவுகணை "தற்செயலாக" ஏவப்பட்டது என்ற இந்தியாவின் அறிக்கையையும் அவர் ஏற்கவில்லை.

"துணியால் துடைக்கும்போது ஏவுகணை சென்றுவிட்டது என்பது போன்ற விபத்து அல்ல இது. மாறாக இது பல கேள்விகளை எழுப்புகிறது" என்கிறார் அலி.

சுத்தம் செய்யும் போது பட்டன் அழுத்திவிட்டது, ஏவுகணை ஏவப்பட்டது என்பதோடு மட்டும் இது தொடர்புடையது அல்ல என்று கூறிய அவர் தொழில்நுட்ப விஷயங்கள் மட்டுமல்லாது, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புடனும் தொடர்புடையது இது என்றார். இந்த ஏவுகணைகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன, இந்த ஏவுகணைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்ததோ அந்த அதிகாரி அல்லது அவரது குழுவினருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஏவுகணைகளை ஏவுவதற்கு யார் அனுமதி வழங்குகிறார்கள்? .இது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் இந்தக்கேள்விகளுக்கான பதில்களை அறிவது அத்தியாவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் ஏவுகணை அமைப்புகளையும், அணுசக்தித் திட்டத்தையும் பார்த்தால், இந்த அமைப்பு பாதுகாப்பான முறையில் இயக்கப்படவில்லை என்று தெரிகிறது என்றார் முகமது அலி.

இந்தச் சம்பவம் குறித்தும், இந்தியாவின் அணுவாற்றல் மற்றும் ஏவுகணை இயக்க முறைமை குறித்தும் சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. அதன் பிறகு பாதுகாப்பு திறன்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் 'அரிஹந்த்'ல், தற்செயலாக ஹாட்ச் திறக்கப்பட்டதால், அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலுக்குள் கடல் நீர் நுழைந்ததாக,2018 ஆம் ஆண்டு இந்திய நாளிதழான தி இந்துவில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கிறது. லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலின் சிறப்பு என்னவென்றால், இதை திடீர் தாக்குதலுக்காக பயன்படுத்தலாம்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் பாலாகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மறுநாள் பாகிஸ்தான் விமானப்படை பதிலடி கொடுத்தபோது, இந்திய விமானப்படை தனது சொந்த ஹெலிகாப்டர் ஒன்றை தற்செயலாக சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர்.

https://www.bbc.com/tamil/global-60734972

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.