Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.எஸ். தோனி - வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் ஆயிரம் வழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

MS-DHONI.jpg
 

 

சென்னை அணியின் தலைமையில் இருந்து தோனி விலகுகிறார் என்பதைக் கேட்க பலருக்கும் நம்ப முடியாமல் இருக்கிறதுஆனால் இதை பலரும் எதிர்பார்த்திருந்தனர் தான், இருந்தாலும் அதை நம்ப முடியவில்லை’. அடுத்தொரு ஆண்டு, அதற்குப் பிறகு மற்றொரு ஆண்டும், தோனி தலைமை தாங்கி இருந்தாலும் அவரால் மற்றொரு கோப்பையை சென்னைக்கு வாங்கிக் கொடுத்திருக்க முடியும் என அவர்கள் அறிவார்கள். ஆனால் அவருக்கு வயதாகிக் கொண்டே போகிறது, ஆனாலும் வயதின் எதிர்பார்ப்புகளை மீறி தம்மை ஆச்சரியப்படுத்தும் திறன் படைத்தவரும் அல்லவா தோனி! கடைசியில், ஜடேஜா இனி தலைவராக இருந்தால் என்ன கீப்பராக இருந்து அவரை வழிநடத்துபவராக தோனி இருப்பார் என்று அவர்கள் சுயசமாதானம் செய்து கொள்கிறார்கள். ஏனென்றால் தோனிக்குப் பிறகு அந்த மேஜிக் இல்லாத, அசாதாரணத்துவம் இல்லாத ஒரு வழக்கமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறும் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆரின் கடிகாரம் இன்னும் சமாதிக்குள் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் போன்ற ஒரு எதிர்பார்ப்பு இது. தோனி எனும் கடிகாரம் நின்று போகும் என ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  

 

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டின் மீது இந்தளவுக்கு தாக்கம் செலுத்திய மற்றொரு வீரர் தோன்றவில்லை - தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று மூன்று வருடங்கள் ஆகின்றன. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்றதும் அவர்களுடைய மதிப்பு .பி.எல் போன்ற தனியார் ஆட்டத்தொடர்களிலும் வெகுவாக வீழ்ந்து விடும். யுவ் ராஜ் சிங்குக்கு என்னானது என்று பாருங்கள். சுரேஷ் ரெய்னா இரண்டு பருவங்களில் சரியாக ஆடவில்லை என்றதும் அவரை எந்த .பி.எல் அணியும் இவ்வருடம் சீந்தவில்லை. கௌதம் கம்பீரைப் போல .பி.எல் ஆட்டங்களில் தன் தலைமையால் புகழ் பெற்ற தலைவரும் கூட அவரது ஆட்டநிலை நீடிக்கும் வரை தான் மதிப்புடன் இருந்தார். ஆனால் தோனியின் அணி தோல்வி அடைந்தாலும், அவர் இரண்டு மூன்று பருவங்களில் ரன் அடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் இருந்து அவர் மீதான மதிப்பு ஓரங்குலம் கூட கீழே இறங்குவதில்லை. அவரது நிதானம், அற்புதமான விக்கெட் கீப்பிங், எப்போதாவது அடிக்கிற சிக்ஸர்கள், பவுண்டரிகள் தொடர்ந்து  கொண்டாடப்படுகின்றன. 2007இல் சீனியர்கள் விலகிய நிலையில் ஒரு இளம் அணியைக் கொண்டே அவர் T20 உலகக்கோப்பையை வென்று காண்பித்தார்.  2011இல் உடற்தகுதி, ஆட்டநிலை உள்ளிட்ட போதாமைகள் கொண்ட ஒரு இந்திய அணியை அவர் உலகக்கோப்பையை வெல்ல வைத்தார். தோனியின் கீப்பிங், கள அமைப்புகள், பந்து வீச்சாளர்களை எதிர்பாராத நேரத்தில் கொண்டு வருகிற பாங்கு, கடைசி சில ஓவர்களில் திடீரென ஆவேசமாக அடித்தாடி ஆட்டத்தின் போக்கை மாற்றுவது என அவரது கிரிக்கெட்டின் எந்த பரிமாணத்தை எடுத்துக் கொண்டாலும் பொதுவான போக்குகளில் இருந்து விலகி தனதான ஒரு போக்கை நிறுவுகிற, அதில் வென்று நம்மை ஆச்சரியப்படுத்துகிற திறன் அவருக்கு இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எடுத்துக் கொள்வோம் - அந்த அணியில் மிகவேகமான வீச்சாளர்கள், சிறந்த கால்சுழலர்கள், ரோஹித், கோலியைப் போல சர்வதேச அனுபவமும் திறமையும் மிக்க இளைஞர்கள் இல்லை, ஒரு கட்டத்தில் அணியில் உள்ள வீரர்களில் அனேகமாக எல்லாரும் முப்பத்திரண்டு வயதுக்கு அதிகமானவராக இருந்ததால் களத்தடுப்பிலும் மின்னலாக செயல்பட மாட்டார்கள். இப்படி ஒரு சிறந்த .பி.எல் அணியில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்போமோ அவை எதுவுமே சென்னை சூப்பர் கிங்ஸில் இல்லை - ஆல் ரவுண்டர்களைத் தவிர. ஆனால் இந்த அணியைக் கொண்டே அவர் 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் .பி.எல் கோப்பையையும், 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றார். 2008, 2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சென்னை அணி ரன்னர் அப்பாகவும் வந்தது. அதாவது எட்டு முறைகள் சென்னை அணி இவரது தலைமையின் கீழ் இறுதிப் போட்டியை அடைந்திருக்கிறது. இப்படி வெற்றிகரமாக தனதான பாதையை அவர் அமைத்து வந்துள்ளததாலே தோனி இந்திய கிரிக்கெட்டின் தனி சகாப்தமாகவே மாறிப் போயிருக்கிறார். அதனாலே இந்திய ரசிகர்கள் அவரை கிரிக்கெட்டையும் கடந்த ஒரு சாதனையாளராக, நாயகனாகப் பார்க்கிறார்கள். கிரிக்கெட்டின் நடைமுறை எதிர்பார்ப்புகளை தொடர்ந்து மாற்றி எழுதுகிறவராக இதற்கு முன் சச்சினும் அவருக்கு முன்பு கவாஸ்கர், கபில் தேவ், பட்டோடி போன்றோரே இருந்திருக்கிறார்கள்இந்த மகத்தான வரிசையில் தான் ராஞ்சியின் தங்கமகனும், சென்னையின் தத்துமகனுமான தோனி வருகிறார்.   

 

தோனி இந்த அசாரணத்துவத்தை எப்படி எய்தினார்? ஒன்றுமில்லை, நாம் நமது தேடல்களைப் பற்றி எழுப்பியுள்ள பல தொன்மங்களை நாம் உதறி விட்டால், உன்னதம் என ஒன்று இல்லை என விளங்கி விட்டால் எதை அடைவதும் சாத்தியமே எனப் புரிந்து கொண்டார். உன்னதமான மட்டையாட்டம் என்பது தெளிவான திட்டமிடல், கடும் உழைப்பு, பிசிறற்ற இலக்கு ஆகியன கொண்ட மனிதச் செயலின் விளைவு மட்டுமே. அதுவும் போட்டி என்று வரும் போது அதில் பிழைகள், சறுக்கல்கள், தோல்விகள் வருவதைத் தவிர்க்க இயலாது. தோனி தனது ஆட்டத்தில் என்னென்ன பிரச்சனைகள், தடுமாற்றங்கள், எதிர்பாராமைகள் வரக் கூடும் என முன்கூட்டியே யோசித்தார். ஒவ்வொன்றுக்கும் ஒரு மாற்றுத் திட்டத்தை வகுத்துக் கொண்டார். ஒரு அணித்தலைவராக அவர் தன் பந்து வீச்சாளர்களிடம் வலியுறுத்தியது இதுவே என்று ரவிச்சந்திரன் அஷ்வின் கூறுகிறார் - “நீங்களாக எதையும் கட்டுப்படுத்த தேவையில்லை; ஒரு திட்டம் தோல்வியடைகிறதா அதற்கு ஒரு மாற்றுத்திட்டத்தை வைத்திருங்கள். அதுவும் சொதப்பினால் மற்றொரு மாற்று இருக்கிறதா என யோசியுங்கள். ஒவ்வொரு பந்துக்கும் plan a, plan b, plan c என தனித்தனியாக வைத்துக் கொள்ளுங்கள். ஆறு பந்துகளுக்கு பதினெட்டு சாத்தியங்கள், அவற்றுக்கு பதினெட்டு திட்டமிடல்கள்.” அதாவது ஆட்டத்தின் போக்கை முழுக்க நம் வசப்படுத்த வேண்டும் என முயன்றால் அது நம்மைக் கடுமையான அழுத்தத்துக்குஆளாக்குவதுடன் பல தவறுகளை செய்யவும் வைக்கும். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பல சங்கதிகளைக் கொண்டே ஒரு ஆட்டம். அங்கு மாறும் போக்குகளுக்கு ஏற்ப தன்னை தொடர்ந்து தகவமைக்கும் சாமர்த்தியம் கொண்டவனும், எதிர்பாராத சாத்தியங்களை அடையாளம் கண்டு அவற்றுக்காக தன்னைத் தயாரித்துக் கொண்டு காத்திருப்பவனே வெற்றியாளன் என்று தோனி நம்பினார். இதன் பொருள் ஒவ்வொரு வீரரும் எந்திரத்தனமாக ஒரு அட்டவணையை வைத்துக் கொண்டு அதன் படி ஆட வேண்டும் என்றல்ல.இதன் பொருள் ஒரு கணினியைப் போல எதிர்பாராமைகளின் எல்லா சாத்தியங்களை ஒருமுறை மனதுக்குள் பரிசீலித்து விட்டு அதற்குத் தயாராகி விட்ட பிறகு நமது தன்னிலையை மறந்து, நமது உள்ளுணர்வின் படி ஆட வேண்டும் என்பதே. ஒரு பந்து வீச்சாளர் ஒரு சரியான பந்தைப் போடுகிறார், மட்டையாளர் ஒரு படி மேலே போய் பிரமாதனமான ஷாட்டை அடிக்கிறார், சிக்ஸர். தோனி இதற்கு சற்றும் கலங்க மாட்டார். அது கடைசி இரண்டு பந்துகளில் ஏழு ரன்கள் எனும் நிலையில் தனது அணிக்கு எதிராக வந்த சிக்ஸர் என்றாலும் அலட்டிக் கொள்ள மாட்டார். அடுத்து மட்டையாளர் எங்கேயெல்லாம் அடிக்க முடியும், அவரை எப்படி ஏமாற்றலாம், அதற்கு என்ன உத்தி உள்ளது என யோசிக்க ஆரம்பித்து விடுவார். ஏனென்றால் இன்னொரு பந்து உள்ளதே, அந்த ஒருபந்தில் மூன்று, நான்கு சாத்தியங்கள் இருக்கின்றனவே, அவை பந்து வீச்சாளருக்கு மட்டுமல்ல, மட்டையாளருக்கும் எதிராகப் போகலாமே என யோசிக்க ஆரம்பிப்பார். அந்த மனநிலையை, மனத்திண்மையை, சமயோஜிதத்தை அவர் தன் பந்து வீச்சாளர்களுக்கும் கற்றுக் கொடுத்தார் என்பதே அவரை 50 ஓவர், 20 ஓவர் போட்டிகளில் ஒரு ஒப்பற்ற தலைவராக்கியது.

 

பிற வீரர்கள் ஒரு போட்டியை, அதில் அவர்கள் ஆடும் இன்னிங்ஸை, அதில் அவர்கள் பந்து வீசும் ஓவர்களை தாம் பிறரை வென்றாக வேண்டிய சந்தர்ப்பமாக மட்டுமே கண்டனர். ஒன்று நான் வெல்வேன் அல்லது அவர்கள் வெல்வார்கள் எனப் பார்த்தனர். ஆனால் தோனியோ இந்த வெற்றி / தோல்வி என்பதே பல நூறு சாத்தியங்கள், தெரிவுகளைக் கொண்ட ஒரு சதுரங்கம் எனக் கருதினார். இந்த இருமைக்கு நடுவே ஆயிரம் பாதைகள் திறந்து கிடப்பதை கவனித்தார். மிகப்பெரிய வெற்றியின் தோல்வியின் மத்தியில் ஒவ்வொரு தருணத்திலும் எந்த திசையில் திரும்புவது, என்ன முடிவெடுப்பது, இது இருக்கும் இடத்தில் அதையும், அது இருக்கும் இடத்திலும் இதையும் வைத்தால் அந்த வெற்றியோ தோல்வியோ தடம் மாறி விடும் என அவர் அறிந்தார். மட்டையாடும்போது இருபது ஓவர்களில் 140 என்பது பெரிய இலக்கு. ஆனால் 15 ஓவர்களில் விக்கெட்டைக் கொடுக்காமல் 75 ரன்களை அடித்து விட்டு மிச்ச 60 ரன்களை கடைசி ஐந்து ஓவர்களில் அடிக்க முடியுமா என்றால் முடியும். அப்போது எதிரணி கடும் அழுத்தத்துக்கு ஆகுமா என்றால் ஆகும்? இது குத்துச்சண்டையின் போது எதிராளியை குத்துகளை வீசிக் கொண்டே நம் அருகே வர வழைத்து நாக் அவுட் பண்ணுகிற முகமது அலி பாணியாகும். இதை தன் மட்டையாட்டத்தின் மூலமும் தலைமையின் வழியாகவும் இந்திய மட்டையாளர்களுக்கு கற்றுக் கொடுத்தவர் தோனி. (கோலி இதையே பின்னர் பின்பற்றி ஒரு சிறந்த இலக்கு விரட்டியாக மாறினார்.)

 

இந்தியா ஜெயிக்குமா தோற்குமா, சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் பத்து ரன்களை அடித்து ஆட்டத்தை வெல்லுமா என்றெல்லாம் பார்வையாளர்கள் கேட்டுக் கொண்டிருந்த இடத்தில் அந்த இரண்டு சாத்தியங்களுக்கும் இடையில் உள்ள ஆயிரம் பாதைகளை பார்க்கும்படி நமக்குக் காட்டித் தந்தவர் தோனியே

 

தோனியின் இளமை முதலான ஆட்ட வாழ்வைப் பார்க்கையில் இதுவே அவரது வாழ்க்கைப் பார்வை, தத்துவம் என நமக்குப் புரியும். மிக இளம் வயதில் கால்பந்தாட்ட கீப்பராக இருந்து கிரிக்கெட்டில் கீப்பரான போதும், பின்னர் வாழ்க்கைப்பாட்டுக்காக ரெயில்வேயில் சேர்ந்து டிக்கெட் கலெக்டராகி, அதன் பின்னர் ரெயில்வே ரஞ்சி அணியில் இடம் கிடைக்காமல் பீஹார் அணியில் இடம்பெற்று தனது பிரத்யேகமான ஸ்டைலால், தான் அடித்த ஏகப்பட்ட ரன்களாக் கவனிக்கப்பட்ட போதும், இந்திய அணியில் இடம்பெறுவதில் தாமதம் ஏற்பட்ட போதும் அவர் தன் வாழ்க்கையை சின்னச்சின்ன தருணங்களுக்கு மத்தியிலான தெரிவுகளாக மட்டுமே கண்டிருக்க வேண்டும். அதனால் தான் 23 டிசம்பர் 2004இல் வங்கதேசத்தில் நடந்த தொடரில் அறிமுக வீரராக களம் இறங்கி ரன் அவுட்டாகித் திரும்பிய போதும் அவர் அதை ஒரு முடிவாகக் கருதவில்லை. அப்போது தினேஷ் கார்த்திக் தான் அணியின் பிரதான கீப்பர். தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடும் வரை தோனிக்கு அணியில் இடமிருக்காது. ஆனால் பயிற்சியின் போது தனக்கு பந்து வீசி பயிற்சியளிக்க தோனி தயங்க மாட்டார், அவருக்கு தேர்வு குறித்த எந்த அச்சமும் இருந்ததாகத் தெரியவில்லை என்று தினேஷ் கார்த்திக் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். “நான் உனக்குப் போட்டியாளன், இருந்தாலும் எனக்கு பந்து வீசி ஏன் உன் நேரத்தை வீணடிக்கிறே?” என அவர் கேட்டதற்கு தோனி  நீங்க சரியா ஆடினாலும் ஆடா விட்டாலும் அது என் ஆட்டத்தைத் தீர்மானிக்காது. நான் அணியில் இடம்பெற முதலில் நான் நன்றாகஆடணும். அதன் பிறகு யாராலும் என்னைத் தடுக்க முடியாது என்றாராம். ஒருவேளை தினேஷ் கார்த்தி அந்த காலகட்டத்தில் தோனியை விட நன்றாக ஆடி சதங்களாகக் குவித்திருந்தால் தோனியின் நிலைமை என்னவாகி இருக்கும்? தோனி அதைப் பற்றி கவலைப்படாமல் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக ஆடுவதற்கு என்னவெல்லாம் தடைகள் வரும்அவற்றை எதிர்கொள்ள எப்படியெல்லாம் வியூகங்களை வகுக்கலாம் என்று யோசிப்பார். தன்னிடம் உள்ள தெரிவுகள் அத்தனையையும் தேர்ந்து செயல்படுத்திய பின்னரும் தன்னால் ஜெயிக்க முடியாவிடில் அதுவும் ஒரு ஜெயமே என்று தான் தோனிகருதுவார். கண்ணுக்குத் தெரிவன இரு பாதைகள், தெரியாதன எவ்வளவோ நுண் ஊடுபாதைகள். ஒரு பாதை முடிந்தால் அடுத்து எங்கு புகுந்து வெளிவர வேண்டும் என்பதை அது முடியும் முன்னரே திட்டமிட்டு இறங்குபவனுக்கு தோல்வியே இல்லை.

அது தான் தோனி! அதனால் தான் அவர் என்றுமே இந்திய கிரிக்கெட்டின் தல’!

 

நன்றி: உயிர்மை, ஏப்ரல் 2022

http://thiruttusavi.blogspot.com/2022/04/blog-post_11.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.