Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு: தொடரும் மின்வெட்டு; அமைச்சர் சொன்ன மத்திய தொகுப்புதான் பிரச்னையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு: தொடரும் மின்வெட்டு; அமைச்சர் சொன்ன மத்திய தொகுப்புதான் பிரச்னையா?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
21 ஏப்ரல் 2022, 09:45 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

மின்சாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் ஏற்படும் திடீர் மின்வெட்டுகளால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். `மத்திய தொகுப்பில் இருந்து வரவில்லையென்றால் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. இதனை மாநில அரசு ஆராய வேண்டும்' என்கின்றன மின்வாரிய ஊழியர் சங்கங்கள். என்ன நடக்கிறது?

அமைச்சர் சொன்ன காரணம்

கோடைகாலத்தில் அளவுக்கு அதிகமான வெயில் சுட்டெரிப்பதால் மின்நுகர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. அதற்கேற்ப மின்விநியோகம் உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த 20 ஆம் தேதி இரவில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. இந்தத் திடீர் மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதனையடுத்து, மின்வாரியத்தின் செயல்பாடுகள் மீது கடும் விமர்சனங்களும் கிளம்பின.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இதுதொடர்பாக, இரவு 11.30 மணியளவில் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் ஒன்றைப் பதிவு செய்தார், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அதில், ` இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என விளக்கம் அளித்தார்.

ஆனாலும், பல மணிநேரம் மின்சாரம் தடைபட்டது. இதுதொடர்பாக அமைச்சரின் முகநூல் பக்கத்திலும் மின்தட்டுப்பாட்டால் கடந்த தி.மு.க ஆட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் பதிவிடப்பட்டன.

நான்கு கேள்விகள்

'' உண்மையில் என்ன நடந்தது?'' என மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநில தலைவர் ஜெய்சங்கரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` MOD (Merit Order Despatch of Electricity) என்ற ஒன்று உள்ளது. இதன்மூலம் மத்திய தொகுப்பில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மின்சார வாரியங்களும் தனியார் நிறுவனங்களும் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து கிரிட்டில் (Grid) இணைக்க வேண்டும் என்பதற்கான அளவுகோல் இது. அதாவது, ஒவ்வொரு மாநிலங்களின் மின்தேவையை சமாளிப்பதற்கான மத்திய அளவிலான ஏற்பாடாகப் பார்க்கப்படுகிறது.

மத்திய தொகுப்பில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும் எவ்வளவு மின்தேவை என்பதை பட்டியலிடுவார்கள். அதற்கும் அதிகமாக மின்நுகர்வு தேவைப்படும்போது சில இடங்களில் போதுமான அளவு மின்சாரம் கிடைக்காது. தனியார் உற்பத்தி நிறுவனங்களிலும், 300 மெகாவாட், 500 மெகாவாட் என உற்பத்தியை செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்படும். அப்படி ஒரு பிரச்னைதான், அமைச்சர் கூறும் 750 மெகாவாட் என்பது. இது தொழில்நுட்ப பிரச்னையாக இருந்தாலும் மத்திய தொகுப்பில் இருந்து வராவிட்டாலும் வேறொருவரிடம் இருந்து வாங்கித் தர வேண்டும். உதாரணமாக, மத்திய தொகுப்பில் இருந்து 5000 மெகாவாட் கொடுக்கிறார்கள், அதனை மட்டும் வாங்கினால் சரியாக இருக்காது. 7000 மெகாவாட் வாங்கினால்தான் சரியாக இருக்கும்'' என்கிறார்.

''மத்திய தொகுப்பில் இருந்து வராததுதான் காரணம்? என அமைச்சர் கூறுகிறாரே'' என்றோம். ''மத்திய தொகுப்பில் இருந்து வரவில்லையென்றால் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை விரும்பாத மத்திய அரசு செய்கிறதா எனவும் தெரியவில்லை. இதனை மாநில அரசு ஆராய வேண்டும்'' என்கிறார்.

"அனைத்து மாநிலங்களுக்கும் கோடைகாலத்துக்கான மின்தேவை என்பது அதிகமாக உள்ளது. அதற்கேற்ப கணக்கீடு செய்யாமல் இருந்திருக்கலாம். தமிழ்நாட்டில் பத்து நாள்களுக்கு முன்பு 17,100 மெகாவாட் என்பது ஒருமணி நேரத்துக்கான அதிகபட்ச மின் நுகர்வு எனக் கூறப்பட்டது. மே மாதம் இது இன்னும் அதிகமாகும். எதிர்காலத்தின் தேவையை கணக்கீடு செய்து ஒழுங்குபடுத்தாததுதான் பிரச்னைக்குக் காரணம். தொழில்நுட்பரீதியான காரணங்கள் தெரிந்தாலும் அதிகாரிகள் வெளியில் சொல்லப் போவதில்லை'' என்கிறார்.

''கோடைகாலத்தை சமாளிக்கும் வகையில் போதிய மின் உற்பத்தி உள்ளதா?'' என்றோம்.

''தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய்களைக் கொடுத்து மின்சாரத்தை வாங்கத்தான் போகிறார்கள். அதிகபட்சமாக ஒரு யூனிட்டை 20 ரூபாய்க்குகூட வாங்குகிறார்கள். இது தற்காலிக சமாளிப்பாக இருக்காமல் நிரந்தரமாக இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள ஆறு அனல் மின் நிலையங்களில் போதிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இங்கு 90 சதவீத அளவுக்கு உற்பத்தி செய்தால் தனியாரிடம் வாங்க வேண்டியதில்லை. தனியார் நிறுவனங்களில் மொட்டை மாடியில் சோலார் எனர்ஜியை தயாரிக்கலாம். அவர்கள் சுயஉற்பத்தியாளர்களாகவும் மாறுவார்கள். இதனால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை.

தவிர, சிப்காட், ஐ.டி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் காலியாக உள்ள நிலங்களில் சோலார் பேனல்களை அமைக்கலாம். தமிழ்நாட்டில் கிரீன் எனர்ஜியை கடலுக்கு நடுவிலும் அணைக்கு நடுவிலும் தயாரிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் ஜெர்மன் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டது. இதில் ஒருமுறை முதலீடு செய்தால் ஐந்து வகையான கிரீன் எனர்ஜியை தயாரிக்கலாம் எனவும் கூறப்பட்டது. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படப் போவதில்லை. தமிழ்நாட்டில் மிகப் பெரிய கடற்கரைப் பகுதிகள் உள்ளன. இதனை உண்மையிலேயே நடைமுறைப்படுத்தினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின்தேவையை சுயமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.

 

மின்சாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும், சோலார் பேனல்களை அமைப்பதை ஒரே ஒரு உத்தரவின் மூலம் நடைமுறைப்படுத்தலாம். இதனால் காலப்போக்கில் அனல்மின் நிலையங்களையும் மூடிவிடலாம்; மாசுபாட்டையும் தவிர்க்கலாம். அதற்கு அரசு முன்வர வேண்டும்'' என்கிறார்.

மின்வெட்டு தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மான கழகத்தின் தலைவரான ராஜேஷ் லக்கானியை தொடர்பு கொண்டபோது, அவர் அலுவல்ரீதியான கூட்டத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

தி.மு.க சொல்வது என்ன?

இதையடுத்து, தி.மு.கவின் செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, ''தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இருந்தாலும் மாநில அரசின் நிர்வாகத் திறமையால் சமாளிக்க முடிந்தது. தொழிற்சாலைகள் நிறைந்துள்ள மாநிலங்களுக்கும் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள வீடுகளுக்கும் போதிய அளவு மின்சாரம் கிடைக்கவில்லை. வரும் நாட்களில் கடும் தட்டுப்பாடை அவர்கள் எதிர்கொள்ள இருக்கிறார்கள். இதற்குக் காரணம், உதய் மின்திட்ட ஒப்பந்தங்களுக்குப் பின்னால் உள்ள குளறுபடிகள்தான்'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ''கொரோனா காலத்தைப் பயன்படுத்தி 10 ஆண்டுகளுக்கான நிலக்கரியை இருப்பு வைத்துள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால், இன்னும் ஆறேழு நாள்களில் வடமாநிலங்களில் மின்தட்டுப்பாடு வரவுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் அனல்மின் நிலையங்களில் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. நெய்வேலியில் இருந்து மத்திய தொகுப்புக்குச் செல்ல வேண்டிய மின்சாரமும் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. நேற்று (ஏப்ரல் 20) மின் தடை ஏற்பட்டவுடன் அமைச்சர் சாதுரியமாக கையாண்டு உடனடியாக தனியார் அமைப்புகளிடம் இருந்து மின்சாரத்தை வாங்கி சரிசெய்துள்ளார். நேற்று ஏற்பட்ட தடை என்பது மத்திய அரசின் பாராமுகத்தால் ஏற்பட்டதாகத்தான் '' என்கிறார்.

''மாற்று எரிபொருளில் அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்களே?'' என்றோம். ``மாற்றுமுறை மின்சாரத்தை தயாரிப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த எட்டு மாதத்தில் இதனைச் செயல்படுத்த முடியாது. அதற்கான அடித்தளத்தையும் போட்டுள்ளோம். இது செயல்பாட்டுக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகும். மாற்று மின்சாரம் குறித்த போதிய அக்கறை அரசுக்கு உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலும் இயங்க முடியும். அதேநேரம், மத்திய அரசை நாடாமல் இருக்க முடியாது. அதுதான் கூட்டாட்சி தத்துவம்'' என்கிறார்.

பா.ஜ.கவின் விமர்சனம்

தி.மு.க கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது, `` 2014 ஆம் ஆண்டில் இருந்துதான் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் தடையில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. திடீர் மின்வெட்டுக்குக் காரணம் மத்திய அரசு என்றால், கடந்த 8 ஆண்டுகளாக மத்திய தொகுப்பின் மூலம் தடையில்லா மின்சாரம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்தது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்'' என்கிறார்.

மேலும், '' தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தனியாரிடம் மின்சாரக் கொள்முதல் செய்வதில் மிகப் பெரும் தவறுகள் நடந்து வருகின்றன. சூரிய ஒளியின் மூலம் நடைபெறும் மின் உற்பத்திக்கு இவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் மத்திய அரசைக் குறைசொல்வது தவறானது. தி.மு.க ஆட்சியின் நிர்வாகக் சீர்கேட்டினால்தான் மின் தடை ஏற்படுகிறது'' என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-61175895

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் மின் தடை ஒரு செயற்கைத் தட்டுப்பாடா? செந்தில் பாலாஜி விளக்கமும் 3 கேள்விகளும்

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
47 நிமிடங்களுக்கு முன்னர்
 

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,SENTHIL BALAJI

'தமிழ்நாட்டில் இரு நாட்களாக ஏற்பட்ட மின் தடைக்கு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததுதான் காரணம்' என அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியுள்ளார். 'நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் கோடை காலத்தைக் கடப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஜூன் 15 ஆம் தேதியை கடந்துவிட்டால் காற்றாலை மின்சாரம் வந்துவிடும். அதுவரையில் செயற்கையான நிலக்கரி தட்டுப்பாட்டை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது' என்கின்றன மின் ஊழியர் சங்கங்கள்.

தமிழ்நாட்டில் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் தினம்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின் பராமரிப்பு என்ற பெயரில் சில மணிநேரங்கள் ஏற்படும் மின்வெட்டால் தொழிற்சாலைகளும் பெரிதளவில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக கடந்த 20 ஆம் தேதி இரவில் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டபோதும், 'விரைவில் மின்சாரம் வந்துவிடும்' என பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 20 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அதில், `மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது' எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்குக் கீழ், `கடந்த தி.மு.க ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்ததில் மின்வெட்டுக்குப் பங்கு உள்ளது' என்பன போன்ற கருத்துகளையும் சிலர் பதிவிட்டிருந்தனர்.

'மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வராததுதான் காரணம்' என அமைச்சர் கூறிய கருத்துக்கு பா.ஜ.க தரப்பிலும் விமர்சனங்கள் கிளம்பின.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்நிலையில், சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 'தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் மின்சாரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் நமது சொந்த உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மின் விநியோகம் தடைபட்ட நகரப் பகுதிகளில் நிலைமையை சமாளிக்கும் அளவுக்கு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன' என்றார். தொடர்ந்து அனல்மின் நிலையங்கள் தொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ' 2020-21 ஆம் ஆண்டில் அனல் மின்நிலையங்களின் உற்பத்தி என்பது 15,553 மில்லியன் யூனிட்டாக இருந்தது. அதுவே, 2021-22 ஆம் ஆண்டில் 20,331 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. அந்தவகையில், 31 சதவீதம் சொந்த உற்பத்தியை அதிகரிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன' என்றார்.

4 நிறுவனங்கள், ஒரு டன் நிலக்கரி 143 டாலர்

மேலும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை உயர்ந்தபோதும ஒரு டன்கூட தமிழ்நாடு அரசு இறக்குமதி செய்யவில்லை எனக் குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, 'உள்நாட்டு உற்பத்தியை வைத்து 31 சதவீத உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. புனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறனைவிட கூடுதலான அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் நிலக்கரி தேவை என்பது நாளொன்றுககு 72,000 டன் என்ற நிலையில் 48,000 முதல் 50,000 டன் மத்திய அரசு வழஙகி வருகிறது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 18 அன்று 30,317 டன் நிலக்கரியும் ஏப்ரல் 19 ஆம் தேதி 37,285 டன் எனக் குறைவான அளவு நிலக்கரிகளையே வழங்கும் சூழல் உள்ளது. தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு முதலமைச்சர் கூறியிருந்தார். அதன்படி, 4 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதில் நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. ஒரு டன் நிலக்கரி 137 டாலர் என்ற அளவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி உடன் சேர்த்து 143 டாலர் வருகிறது' என்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

மின் விநியோகம் தடைபட்டது என்பது 41 பகுதிகளில்தான், அங்கும் போர்க்கால அடிப்படையில் மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்தடை குறித்து அவர் பேசியபோது அ.தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த ஆட்சியில் 68 முறை இதேபோன்ற சூழல் நிலவியதாக குறிப்பிட்டார். மேலும், `' குஜராத், மகாராஷ்ட்டிரம், உ.பி ஆகிய மாநிலங்களில் மின்தடை என அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு தடையை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த ஓராண்டு காலத்தில் முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தல்கள் மூலம் சீரான மின்விநோயகம் நடந்து வருகிறது. நமது உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பா.ம.க உறுப்பினர் குறிப்பிட்டார். மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இதனால் தொழிற்சாலைகளுக்கு எந்தவகையிலும் மின்தடை ஏற்படாது. கடநத 2 நாள்களில் ஏற்பட்ட மின்விநியோக தடை என்பது மத்திய தொகுப்பில் இருந்து வராததால்தான்' என்றார்.

மூன்று கேள்விகள்

 

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,SENTHIL BALAJI

'' நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது?'' என மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநில தலைவர் ஜெய்சங்கரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''மத்திய தொகுப்பு மின்சாரம் என்பது அனல்மின் நிலையத்தை நம்பித்தான் உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 65 முதல் 70 சதவீதம் வரையில் நிலக்கரி மூலமாக அனல்மின் நிலையங்களில் தயாராகி வருகின்றன. இதற்கான நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் கொடுக்கிறது. ஓர் ஆண்டுக்கான நிலக்கரியை ஒதுக்கீடு செய்து மாதம்தோறும் கொடுத்து வருவது வழக்கம். கப்பல், ரயில் என சரக்குப் போக்குவரத்து மூலம் இவை செல்லும். இதில் மாநிலங்களுக்குத் தேவையான நிலக்கரியை கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால், செயற்கையான நிலக்கரி தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர்'' என்கிறார்.

மேலும், '' மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இல்லையென்றால் கிரிட்டில் (Grid) மின்சாரம் இருக்காது. இதனால் அந்தந்த மாநில மின்வாரியங்கள் வேறு நாடுகளில் இருந்து நிலக்கரியை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வாங்கப் பழகிவிட்டால் கோல் இந்தியா கம்பெனியில் இருந்து மாநிலங்களுக்குச் செல்லும் பங்கு என்பது குறைந்துவிடும். கோல் இந்தியா நிறுவனத்துக்கு நெய்வேலி உள்பட 13 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு சுரங்கத்திலும் நடக்கும் உற்பத்தியைக் குறைக்கும் முயற்சியில் இறங்க உள்ளனர்'' என்கிறார்.

தனியாருக்கு விற்க முயற்சி

 

தமிழ்நாடு மின்சாரம்

பட மூலாதாரம்,TANGEDCO

''இவ்வாறு செய்வதால் என்ன மத்திய அரசுக்கு என்ன லாபம்?'' என்றோம்.

''அனல்மின் நிலையங்களை மூடுவதுதான் மத்திய அரசின் ஒரே நோக்கம். இதுதொடர்பாக கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், `25 ஆண்டுகளுக்கு மேற்பட்டு செயல்படும் அனல்மின் நிலையங்களை மூட வேண்டும்' எனத் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மேட்டூர், தூத்துக்குடி, வட சென்னை ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவை 25 ஆண்டுகளைக் கடந்தாலும் 95 சதவீதத்துக்கும் மேல் உற்பத்தியை செய்கின்றன. ஆனால், 25 வருடம் எனக் குறிப்பிட்டு, தனியாருக்கு அவற்றை விற்கும் வேலைகளை செய்ய உள்ளனர். அங்கு புதிதாக ஓர் அனல்மின் நிலையத்தை நிறுவி, தனியாரிடம் இருந்தே நிலக்கரியை பெறுவதுதான் நோக்கம். மின் தடை ஏற்பட்டால் மாநில அரசுகளுக்கு மக்கள் மீது கெட்ட பெயர் வரும். அதனை அரசியல் ரீதியாக பா.ஜ.க வேறு மாதிரி பயன்படுத்திக் கொள்ளும்'' என்கிறார்.

'' அடுத்து வரும் நாள்களில் தமிழ்நாட்டின் மின்தேவையை சமாளிக்க முடியுமா?'' என்றோம்.

''மத்திய அரசு நிலக்கரியை கொடுக்காவிட்டால் மலேசியா உள்பட பிற நாடுகளில் இருந்து வாங்க உள்ளனர். நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் இந்தக் கோடை காலத்தைக் கடக்கும் பணிகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் இறங்கியுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி வரையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை வாங்குவார்கள். அதன்பிறகு காற்றாலை மின்சாரத்தில் இருந்து 2000 மெகாவாட் மின்சாரம் வந்துவிடும். கோடை காலம் முடிந்துவிட்டால் மின்நுகர்வும் குறைந்துவிடும் என அரசு நினைக்கிறது. இது வழக்கமான ஒன்றுதான். எங்களின் கோரிக்கை என்பது அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கக் கூடாது என்பதுதான். தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை 20 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். குறிப்பாக, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கூடுதல் விலை கொடுத்து வாங்குகின்றனர். சுயசார்பு உற்பத்தி இருந்தால் இதுபோன்ற சிக்கல்களைக் களையலாம்'' என்கிறார்.

பா.ஜ.க சொல்வது என்ன?

மத்திய அரசு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தமிழ்நாடு பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, ''மத்திய அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சில மின்ஊழியர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசிடம் நிலக்கரி இருப்பு என்பது போதுமான அளவுக்கு உள்ளது. மார்ச் மாதம் தமிழ்நாடு மின்சார வாரியம் கூறிய தகவலின்படி, '1.8 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இருப்பதால் நிலக்கரியை வாங்க வேண்டியதில்லை' என்றது. யுக்ரேன் போரால் நிலக்கரியை விநியோகம் செய்வதில் தாமதமாகலாம் என்பதால் பல மாநிலங்களும் வெளிநாடுகளில் வாங்கத் தொடங்கினர். இதனால் ஒடிஷாவில் கப்பல்கள் வரிசையில் நிற்கின்றன. இதனால்தான் தாமதம் ஏற்பட்டது'' என்கிறார்.

 

பாஜக எஸ்ஆர். சேகர்

பட மூலாதாரம்,S.R.SEKAR/FACEBOOK

 

படக்குறிப்பு,

எஸ்.ஆர். சேகர், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி

தொடர்ந்து பேசிய எஸ்.ஆர்.சேகர், ''கடந்த ஆகஸ்ட் மாதம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, 'செயற்கை மின்தட்டுப்பாடை ஏற்படுத்தி நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது' எனக் குற்றம் சுமத்தினார். அவர் சொன்னதைப் போலத்தான் செய்து வருகின்றனர். அதேபோல், அனல்மின் நிலையங்களை மூடும் திட்டத்தில் இருப்பதாக சிலர் பேசுகின்றனர். தொழில்நுட்பரீதியாக அதற்கான காலாவதியாகும் காலம் என்பது முக்கியமானது. தற்போதுள்ள நிலையின்படி அதனை சரிசெய்ய வேண்டும். குறிப்பாக, காலாவதியான அனல்மின் நிலையங்களில் உற்பத்தித் திறன் குறைந்தால் நிலக்கரியின் தேவை அதிகமாகும். அதைவிட சோலார் ஆற்றல் உள்பட பல்வேறு வகைகளின் மூலம் அதனை சரிசெய்யுங்கள் என்றுதான் மத்திய அரசு கூறி வருகிறது'' என்கிறார்.

மேலும், '' சட்டமன்றத்தில் செந்தில்பாலாஜி பேசும்போது, 'தமிழ்நாட்டில் மின் தடை இல்லை, பராமரிப்புக்காக நிறுத்துகிறோம்' என்கிறார்கள். 3 , 4 மணிநேரங்கள் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் மின் தடை வருமா? தி.மு.கவின் தோல்விகளை மறைப்பதற்கும் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர். மத்திய தொகுப்பில் இருந்து கொடுக்கப்படும் 750 மெகாவாட் என்பது தென்மாநிலங்களுக்கானது. அதில் தமிழ்நாட்டுக்கான பங்கு என்பது 200 மெகாவாட்தான். அப்படியே கிடைத்தாலும் அதன் அளவு என்பது மொத்த உற்பத்தியில் ஓரிரு சதவீதம்தான். அதற்கு மாற்று ஏற்பாடுகூட செய்யாத அரசாக தி.மு.க உள்ளது. புகார் கூறும் சங்கங்கள் எல்லாம் தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவை. அவர்கள் அவ்வாறுதான் பேசுவார்கள்'' என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-61188428

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.