Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் விக்கி - அரசு செய்யாததால் நாங்கள் செய்கிறோம்: ஜெயமோகன் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் விக்கி- அரசு செய்யாததால் நாங்கள் செய்கிறோம்: ஜெயமோகன் பேட்டி

சமஸ்

spacer.png

பெரும் வேலை ஒன்றில் இறங்கியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். ‘தமிழ் விக்கி’ எனும் பொதுத் தகவல் களஞ்சியத் தொகுப்பு இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கிறார்; விக்கிப்பீடியா போன்ற இணைய தளமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. 

எல்லாத் தகவல்களையும் தொகுத்து ஓரிடத்தில் அளிக்கும் முயற்சியானது மனிதகுலத்தின் மாபெரும் கனவுகளில் ஒன்று. எல்லாச் சமூகங்களிலும் தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் இத்தகு முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதுவும் ஆவணமாக்கலில் பெரும் அக்கறையும், தேவையும் நிலவும் தமிழ்ச் சூழலில் இத்தகு முயற்சிகள் போற்றுதலுக்கு உரியன. ஆனால், ஏற்கெனவே நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் அளப்பரிய முயற்சியால் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ‘தமிழ் விக்கிப்பீடியா’வுக்கு மாற்றாக ‘தமிழ் விக்கி’ உருவாக்கப்பட்டிருப்பதான அறிவிப்பானது, அந்த முயற்சி பொதுவெளியில் பார்வைக்கு வெளிவரும் முன்னரே விமர்சனங்களையும், வசைகளையும் வாரிக் குவிக்கக் காரணமாக அமைந்தது.

அமெரிக்காவில் புதிய தளத்தின் வெளியீட்டு விழாவுக்குத் திட்டமிடப்பட்டு ஜெயமோகன் அங்கே சென்றிருக்கும் சூழலில், விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களை விழாவில் பங்கேற்காமல் ஒதுங்கிக்கொள்ள யோசிக்கும் அளவுக்கு எதிர்க்குரல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. இன்று ‘தமிழ் விக்கி’ தொடக்க விழா நடைபெறும் சூழலில், ஜெயமோகனுடைய முயற்சி தொடர்பாக அவரிடம் பேசினோம்.

spacer.png
எப்போது இப்படி ஒரு முயற்சியில் இறங்க தலைப்பட்டீர்கள்? இதற்கான தேவை எங்கிருந்து எழுந்தது?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களியுங்கள் என்னும் ஓர் இயக்கத்தை அ.முத்துலிங்கம் ஆரம்பித்தார். அதையொட்டி நானும் விக்கியில் பங்களிப்பாற்றினேன். ஆனால், தமிழ்ச் சூழலில் உள்ள ஒரு சிக்கல் அங்கேயும் குறுக்கே வந்தது. நான் பதிவுகள் போட்டால், அது நான் போட்டது என்று தெரிந்தால், உடனே அதை அழிக்க ஒரு கூட்டம் வந்தது. அதனால், அனாமதேயனாகவே ஏராளமான பதிவுகளை எழுதிப்போட்டேன். ஆனாலும், சிக்கல்கள் வேறு வகையில் தொடர்ந்தன.

பொதுவாக விக்கிப்பீடியா அமைப்பிலேயே ஒரு  சிக்கல் உண்டு. ஒரு கூட்டம் ஒருங்கிணைந்தால், அதன் ஆசிரியர் குழுவைக் கைப்பற்றிக்கொள்ள முடியும். அவர்கள் புதியவர்களை உள்ளே விடாமல் அதை ஆட்சி செய்ய முடியும். தமிழில் அது நிகழ்ந்தது. விக்கிப்பீடியாவில் மிகப் பழமையான ஒரு பழந்தமிழ் மொழியைத் திணிக்க ஆரம்பித்தனர். உதாரணமாக, உங்கள் பெயரை ‘சமசு’ என்றுகூட ஒருவர் திருத்தலாம். இன்னொருவர் பெயரைத் திருத்த எவருக்கும் உரிமை இல்லை என்பதுகூட இவர்களுக்கு ஒரு பொருட்டு இல்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை ம.ச.சுப்புலட்சுமி என்று மாற்றுவார்கள். ஊர்ப் பெயர்கள், நூல் பெயர்கள்கூட இவர்களுடைய அடாவடிக்குத் தப்பவில்லை.

இப்படி மாற்றும் கூட்டத்துக்குத் தமிழில் எந்தப் பயிற்சியும் கிடையாது. இன்று எந்தத் தமிழறிஞரும் இப்படி எழுதுவதில்லை என்பதுகூட அந்தக் கூட்டத்துக்குப் புரியாது. சாதாரண தொழிற்கல்வி படித்து வேலைகளில் இருப்பவர்கள் தங்களைத் தமிழறிஞர்களாகக் கற்பிதம் செய்துகொள்ளும்போது ஏற்படும் விபரீதம் இது. இவர்களால் ஒரு பதிவை எழுதிப் போட முடியாது. ஆனால், பிறர் எழுதிப் போட்ட பதிவுகளை விருப்பம்போல அராஜகமாக மாற்றுவார்கள்.

இந்தக் கூட்டத்துக்கு இலக்கிய, பண்பாட்டு அறிவும் கிடையாது; தெரிந்தது எல்லாம் தமிழ் சினிமாவும் அரசியலும். விளைவாக இவர்கள் சினிமா, அரசியல் ஆளுமைகளைப் பெரியவர்களாக நினைப்பார்கள். இலக்கிய ஆளுமைகளைப் பற்றி ஒரு பதிவு போட்டால் உடனே வந்து அதைச் சுருக்கிவிடுவார்கள். ஏனென்றால், இவர்களுக்கு இலக்கியவாதியை தெரியவில்லை என்பதனாலேயே அந்த இலக்கியவாதி முக்கியமற்றவர் என நினைக்கிறார்கள்.

முறையான பதிவுகள் தமிழுக்குத் தேவை; அதேசமயம், இங்கு ஏற்கெனவே உள்ள அமைப்பில் அத்தகு சூழல் இல்லை என்ற நிலையிலேயே இப்படி ஒரு முயற்சியில் இறங்க முடிவெடுத்தோம்.

உலகளாவிய முயற்சியான விக்கிப்பீடியாவில் இந்திய அளவில் அதிகம் பங்களிக்கப்படும் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. எல்லோரும் பங்களிக்கும், திருத்தும் உரிமை பெற்ற ஒரு பொதுத் தளமாக அது செயல்படும்போது இந்தப் பண்புக்கேற்ப அதன் பலங்களோடு பலவீனங்களும் இருக்கத்தானே செய்யும்? ஆங்கிலத் தளமும்கூட பல தடைகளைத் தாண்டியே குறைந்தபட்ச  தரத்தை வந்தடைந்திருக்கிறது. அப்படியிருக்க ஏற்கெனவே இருக்கக் கூடிய அமைப்பில் நீங்கள் விரும்பக் கூடிய மாற்றங்களை முன்னெடுத்திருக்கலாமே? 

தமிழ் விக்கிப்பீடியா எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று பார்த்திருக்கிறீர்களா? மிகமிகமிகக் குறைவு. ஏனென்றால், பெரும்பாலானவை அரைகுறைச் செய்திகள். அபத்தமான நடை. பொருத்தமில்லாத சொற்கள். ஒரு பெரும் குப்பைக்கூடை அது. உலகளாவிய ஒரு பெரிய அரங்கு நம்மவர்களால் வீணடிக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

இவர்களுடன் போராடி மன்றாடி ஏற்கெனவே பத்தாண்டுகளை நான் வீணடித்திருக்கிறேன். என்னுடைய இணையதளத்தில் 2010 முதல் இவர்களுடன் நான் நடத்திய போராட்டத்தின் பதிவுகள் உள்ளன. போய்ப்பாருங்கள். இவர்களை மாற்றவே முடியாது என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் மொழியின் தேவையை உணர்ந்து நானும் என் நண்பர்களுமாக ‘தமிழ் விக்கி’யை ஆரம்பிக்க முடிவெடுத்தோம். நாங்கள் குறைந்தபட்சம் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகியவற்றுக்காவது ஒரு நல்ல தளம் உருவாக்கலாம் என முயற்சிக்கிறோம்.

நீங்கள் ‘தமிழ் விக்கி’ என்று பெயர் சூட்டியிருப்பது கடும் கண்டனத்தை உருவாக்கியிருக்கிறது. அது ஏற்கெனவே உள்ள தமிழ் விக்கிப்பீடியாவின் இடத்தைப் பறிக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. தன்னுடைய முயற்சிக்குப் புதிய பெயர் ஒன்றை ஜெயமோகன் சூட்ட வேண்டியதுதானே என்ற குரல்கள் நிறையக் கேட்கின்றன. நீங்கள் ஏன் விக்கி என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

விக்கி என்பது வட பசிபிக் தீவுக் கூட்ட மொழிகளில் ஒன்றான ஹவாயன் மொழி வார்த்தை. புதிய நிரல் மொழிகள் உருவாகிவந்த 1990களின் தொடக்கத்தில், நிரல் மொழிகளின் அமைப்புகளைப் பற்றி மின்னஞ்சல் மூலம் நடந்துவந்த உரையாடல்களைத் தொகுக்க ‘விக்கி விக்கி வெப்’ (Wiki Wiki Web) தளத்தைத் தொகுத்த வார்ட் கன்னிங்ஹாம் பயன்படுத்திய சொல் இது. விக்கி என்பது பொதுச் சொல். அதற்குக் காப்புரிமை கிடையாது. கன்னிங்ஹாம் அவர் அமைத்த விக்கி மென்பொருளை ஓபன் சோர்ஸாக வெளியிடுகிறார். அதை மாதிரியாகக் கொண்டு பல்வேறு விக்கி மென்பொருட்கள் வந்தன. டிவிக்கி, யூஸ்மோட்விக்கி, டிடிவிக்கி (TWiki, UseModWIki, DidiWiki) போன்றவை உதாரணங்கள். அந்த வகையிலேயே நாங்கள் ‘தமிழ் விக்கி’ எனும் பெயரைத் தேர்ந்தெடுத்தோம். விக்கி என்ற சொல்லை வெறும் பெயராகப் பார்ப்பவர்களே இப்படியெல்லாம் பேசுகிறார்கள். விக்கி என்பது ஒரு செயல்பாட்டின் பெயர்; விக்கி என்பது இன்று ஒரு பெரும் இயக்கம்.

ஆக்ஸ்போர்ட் அகராதி 2007இல் விக்கி என்ற சொல்லைப் பட்டியலிட்டது. இன்று விக்கி கருத்தியலை ஒத்த ஒரு வலைதளத்தை நிறுவ 81 முக்கியமான விக்கி மென்பொருட்களும் பல நூறு சிறு மென்பொருட்களும் உள்ளன. இன்று விக்கிப்பீடியா சார்ந்த அமைப்புகளை நிர்வகிக்கும் விக்கிமீடியா அறக்கட்டளையானது,  விக்கிப்பீடியா என்ற வார்த்தைக்கும், அவர்கள் தொடங்கிய தளங்களின் பெயர்களுக்கும் மட்டுமே உரிமையை வைத்திருக்கிறது. விக்கி என்ற வார்த்தைக்கோ, ஏற்கனவே இருந்த விக்கி மென்பொருளை பொதுப் பங்களிப்போடு மேம்படுத்தி அவர்கள் உபயோகிக்கும் மீடியா விக்கி மென்பொருளுக்கோ எவரும் உரிமையாளர் கிடையாது.

மேலும், கலைக்களஞ்சியம் வேறு, விக்கி வேறு. விக்கி என்பது இணையத்தில் உருவான ஒரு தனித்த ஒரு போக்கு - முன்பு இல்லாதது, முன்பு இயலாதது. கலைக்களஞ்சியம் என்பது ஓர் அறிஞர் குழுவால் உருவாக்கப்பட்டு முடிவுற்ற ஒரு நூல். விக்கி என்பது தொடர்ச்சியாக நிகழும் ஒரு கூட்டுச் செயல்பாடு. விக்கியின் பதிவுகள் வளர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். அதில் எந்தப் பதிவும் அறுதியானது அல்ல. அந்த வேறுபாட்டைக் குறிக்கவே விக்கி என்னும் சொல்லைக் கையாள்கிறோம்.

வேறு ஒரு பெயரைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், இந்த ‘ஃப்ரீ இண்டெலெக்சுவல் மூவ்மென்ட்’ எனும் அர்த்தம் வராமல் போய்விடும். ஒரு கேள்வி கேட்கிறேன், விக்கிலீக்ஸுக்கும், விக்கிபீடியாவுக்கு என்ன சம்பந்தம்? ஏன் அந்தப் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? ஏனென்றால், தகவல் என்பது ஒட்டுமொத்த மானுடத்துக்குமான சொத்து என்று நினைக்கக் கூடியவர்களால் இது நடத்தப்படுகிறது; ஆகையால், அந்தப் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.

நானும் அத்தகைய கொள்கையை உடையவன். என்னுடைய நூல்களில் பெரும் பகுதியை இணையத்தில் நீங்கள் இலவசமாகப் படிக்கலாம்; காரணம், அது ஓர் அறிவுச் செயல்பாடு; அது பொதுவெளியில் எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

நூல்களை அச்சாக்கிப் பதிப்பிக்கும்போது, அந்தப் புத்தகங்கள் விற்காமல் நஷ்டம் ஏற்படக் கூடாது என்ற காரணத்துக்காக மட்டுமே அந்த உரிமையைப் பொதுவாக்காமல் இருக்கிறேன். மற்றபடி இணைய வெளியில் என்னுடைய எல்லாத் தரவுகளுமே பொதுதான்.

ஆகவேதான், விக்கி எனும் வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். இன்று உலகம் முழுக்க இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விக்கி அமைப்புகள் இருக்கின்றன. அந்த வரிசையில் நாம் தமிழ் விக்கி எனும் பெயரையும் சேர்க்கிறோம்.

தமிழில் விக்கி என்பதற்கு அர்த்தம், தமிழில் உருவாக்கப்படக் கூடிய ஒரு பொதுவெளிக் கலைக்களஞ்சியம் அது என்பதுதான். பலரும் இந்த அடிப்படைகள் எதுவுமே தெரியாமல்தான் இங்கே பேசுகிறார்கள்; விமர்சிக்கிறார்கள்; கூச்சலிடுகிறார்கள்.

என்ன மாதிரியான கட்டமைப்பை நீங்கள் முன்னெடுக்கும் ‘தமிழ் விக்கி’க்குக் கொடுக்க திட்டமிடுகிறீர்கள்? அதாவது, இதன் செயலாக்கம் எப்படி இருக்கும்? யாரெல்லாம் இதற்குப் பங்களிப்பார்கள்? யாரெல்லாம் இதைத் திருத்துவார்கள்?

எங்கள் தளத்தில் இதன் ஆசிரியர் குழு, ஆசிரியர் கொள்கை எல்லாமே வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கும். ‘தமிழ் விக்கி’க்கு எனத் தனியான அளவுகோல்கள், மதிப்பீடுகள் ஏதும் இல்லை. சூழலில் இதுவரையிலான பொது விவாதம் வழியாக உருவாகிவந்து ஏற்கப்பட்டுள்ள பொதுவான அளவுகோல்களும் மதிப்பீடுகளுமே இங்கே பின்பற்றப்படும். இது விக்கிப்பீடியாபோல ஒரு பொதுத்தளம். இதன் உள்ளடக்கத்துக்குக் காப்புரிமை இல்லை. இதை எவரும் திருத்தலாம், எவரும் பங்களிக்கலாம். ஆனால், ஓர் அறிஞர் குழு அவற்றைப் பரிசீலித்த பின்னரே வெளியிடும். விக்கிப்பீடியாவிலும் இப்படியான பரிசீலனைக் குழு உண்டு. ஆனால் அந்தக் குழுவுக்கு முகம் இல்லை. எவர் வேண்டுமென்றாலும் அதில் இருக்கலாம். எங்களுடைய தளத்தில் நாடறிந்த அறிஞர்களே இருப்பார்கள். இதுதான் வேறுபாடு.

ஆசிரியர் குழு எப்படி இயங்கும்?

ஆசிரியர் குழு தொடர்ந்து வளருவதாக இருக்கும்; ஒவ்வொரு துறையாகச் சேரும்போது மேலும் ஆசிரியர்கள் வருவார்கள். புதிய ஆசிரியர்களை ஏற்கெனவே இருக்கும் ஆசிரியர்கள் கருத்தொருமிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுப்போம். புதிய ஆசிரியர்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.

விக்கிப்பீடியாவின் வரலாறானது பல நூற்றாண்டு கலைக்களஞ்சியமாக்க மரபின் தொடர்ச்சி. உலகின் அறிவையெல்லாம் ஓரிடத்தில் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்; அந்த இடத்தில் வந்தால் எல்லாம் கிடைக்கும் எனும் முயற்சிகள் அலெக்ஸாண்டரியா நூலக உருவாக்கக் காலம் தொட்டு தொடர்ந்து நடந்துவருகின்றன. மேற்கில் ‘என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா’ மட்டுமே 250 வருஷ சேகரத்தைக் கொண்டிருக்கிறது. இத்தகு மரபிலிருந்தே விக்கிப்பீடியா கிளை விடுகிறது; அந்த அடித்தளத்தின் மீதே தமிழ் விக்கிப்பீடியா உள்பட ஏனைய எல்லா மொழிகளின் விக்கிப்பீடியா தளங்களும் அமர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்தை ஒப்பிட ஏனைய மொழிகளில் கணிசமான கட்டுரைகள்  மொழிபெயர்ப்புகள்; நேரடியாக எழுதப்படுபவை குறைவு. ஆக, விக்கிப்பீடியாவின் மிக வெற்றிகரமான அம்சமே எல்லோரும் பங்களிக்கலாம் எனும் ஜனநாயகத்தன்மையும், ஆங்கில விக்கிப்பிடியாவின் ஓர் அங்கமாக அது இருப்பதும்தான். இப்போது நீங்கள் முன்னெடுக்கும் ‘தமிழ் விக்கி’ எந்த அளவுக்கு நேரடிக் கட்டுரைகளைக் கொண்டு இயங்கும்; எந்த அளவுக்கு நேரடி எழுத்து சாத்தியமாகும் என்று நினைக்கிறீர்கள்?

விக்கிப்பீடியாவில் இருக்கக் கூடிய தகவல்கள் மட்டும் இல்லை; எந்தக் கலைக்களஞ்சியமும் அதில் இருக்கக்கூடிய எந்தக் கட்டுரைகளும்  தகவல்களுடைய தொகுப்புதான். இதையன்றி ‘திறன் கலைக்களஞ்சியம்’ என்று சொல்வர்கள்; அதாவது, தனித் துறைகளுக்கான கலைக்களஞ்சியம்; அவை மட்டுமே அசல் எழுத்துகளை அதிகம் கொண்டிருக்கும். உதாரணமாக, மருத்துவத்துக்கான கலைக்களஞ்சியத்தைக் கூறலாம். குறிப்பிட்ட வகையான தகவல்கள் மட்டுமே அதில் இருக்கும். இத்தகைய கலைக்களஞ்சியங்கள் மட்டுமே நிபுணர்கள் எழுதக் கூடியதாகவும், அசல் கட்டுரைகளைக் கொண்டவையாகவும் இருக்கும். எங்களதும் பொதுக் களஞ்சியம் என்பதால், நாங்களும் தொகுத்திடவே செய்கிறோம். ஆனால், தொகுப்புப் பணியில் ஒரு வேறுபாடு இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை அவர்கள் வெவ்வேறு பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளில் இருந்தே அவர்களுடைய கட்டுரைகளை எழுதிப் பிரசுரிக்கிறார்கள். நாங்கள் எங்களுடைய கலைக்களஞ்சியத்தில் கூடுமானவரை மூலநூல்களில் இருந்து தகவல்களை எடுக்கிறோம். உரிய உசாத்துணைகளுடன் அதைக் கொடுக்கிறோம். நேரடிக் கட்டுரைகளுக்கும் கூடுதல் கவனம் கொடுக்கிறோம்.

உலகளாவிய அறிவுப் பங்களிப்பைப் பெறும் சமயத்திலும்கூட விக்கிப்பீடியா இயங்க பல நூறு கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை வெற்றிகரமாக அது திரட்டுகிறது என்றாலும், சிரமத்துடனேயே அந்தக் காரியம் நடக்கிறது. மேலும், அது இணையக் கட்டமைப்பு சார்ந்தும் தொடர்ந்து தொழில்நுட்பரீதியாகத் தன்னை வலுப்படுத்தியபடி முன்னேறிவந்திருக்கிறது. தமிழில் செய்ய வேண்டியன ஏராளம் என்றாலும், அதைச் செய்வதற்கான வளங்கள் - குறிப்பாக பொருளாதாரம் - பெரிய தடை. இதற்கெல்லாம்  என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

நாங்கள் இதற்கு மிகக் குறைவான நிதியைதான் எதிர்பார்க்கிறோம். எந்தச் செயலையும் குறைவான செலவில் செய்திட வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக இதுவரை கடைப்பிடித்திருக்கிறோம். பெரும்பாலும் நட்பார்ந்த குழுக்களுடைய பலன் பாராத உழைப்பால் இதைச் செய்வதால், செலவுகள் குறைவாகவே இருக்கும். அந்தச் செலவுகளை நண்பர்களுடைய நன்கொடைகள் மூலமாக ஈடுகட்டுவோம். இதற்காக ஒரு சிறு அறக்கட்டளை அமைத்து, பணத்தைச் சேகரிக்கலாம் என்று இருக்கிறோம். இப்போதைக்கு இது என் நண்பர்களின் கூட்டுமுயற்சி. ஒரு நாளுக்கு சராசரியாக ஐந்து மணி நேரம் பணியாற்றுகிறார்கள். குறைவான செலவு என்றால், மிகுதியான சுதந்திரம் என்பது என் புரிதல்.

நம் சமூகத்தில் படைப்பாளி மனோபாவத்திலிருந்து மிகவும் மாறுபட்ட ஒன்றாக அகராதி உருவாக்கம், களஞ்சிய உருவாக்கம் போன்ற பணிகள் பார்க்கப்படுவது வழக்கம். நீங்களுமே விதிவிலக்கு அல்ல. இப்போது உங்களுடைய இந்த ஆர்வம் ஆச்சரியம் அளிக்கிறது...

பொதுவாக எழுத்தாளர்கள், கற்பனையில் செயல்படக் கூடியவர்கள். கலைக்களஞ்சியம் தொகுப்புப் பணி போன்ற வேலைகளில் ஈடுபடக் கூடாது என்றே நானும் சொல்வேன். ஆனால், தமிழில் இப்படிப்பட்ட பணியில் ஈடுபட்ட முன்னோடிகளில் ஒருவரான பெரியசாமி தூரனே ஒரு பெரிய கவிஞர்தானே! ஏனென்றால், தேவையை உணருகிறவர்கள்தான் எப்போதும் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டி இருக்கிறது. அரசு இதைச் செய்யலாம்; ஆனால், செய்வதில்லை. கல்வித் துறை சார்ந்து இதைச் செய்ய முற்படும்போது ஒன்று அவர்களுக்கு அரசுத் துறை சார்ந்த கட்டாயங்கள் எழுகின்றன. குறிப்பாக, ‘ரெட் டேப்பிஸம்’ தாண்டி அவர்களால் அவ்வளவு எளிதாகப் பெரிய காரியம் ஒன்றைச் சுதந்திரமாகச் செய்திடக் கூடிய சூழல் இங்கே இல்லை. அப்புறம், வெளியாகக் கூடிய கருத்துகளுக்கு அவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழலும் அவர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. அதனால்தான் படைப்பாளிகள் இத்தகு பணியில் கால் பதிக்க வேண்டியிருக்கிறது. தமிழ் அறிவுச் செயல்பாடுகளில் இலக்கிய விமர்சனம், இலக்கிய அகராதி எல்லாமே இலக்கியவாதிகள்தானே செய்ய வேண்டி இருக்கிறது? ஏன் தமிழ் நவீன இலக்கியத்துக்கு என்று இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரே வரலாற்று நூல் 'நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்' நான் எழுதியதுதானே!

என்ன காரணம்? யாரும் செய்யாததால் நாம் செய்ய வேண்டி இருக்கிறது. தமிழ் அறிவுத் துறை என்பது சிறு பத்திரிகை அல்லது சிறு குழுக்கள் சார்ந்ததாகவே இன்றைக்கு வரைக்கும் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதில் நம்பிக்கையோடு செயல்படக் கூடிய எழுத்தாளர்கள்தான் இந்த விஷயங்களை முன்னெடுக்க வேண்டியும் இருக்கிறது!

இதுவரை தனிப்பட்ட வகையில் உங்கள் தரப்பில் எத்தனை கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள்; திருத்தியிருக்கிறீர்கள்? அது உண்டாக்கும் மனவோட்டம் என்னவாக இருக்கிறது?

தனிப்பட்ட முறையில் எவ்வளவு கட்டுரை என்று சொல்லக் கூடாது. கலைக்களஞ்சிய அறங்களில் ஒன்று அது. எல்லாக் கட்டுரைகளிலும் எல்லோரும் கை வைத்திருக்கிறார்கள். எனக்கு இது கற்கும் அனுபவம். ஆகவே மிகப் பெரிய ஊக்கத்தை அளிக்கிறது. உலகம் முழுக்க மிகப் பெரிய நாவலாசிரியர்கள் வரலாறு, தத்துவம் இரண்டையும் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள்தான். ஆய்வாளர் என்னும் தகுதி கொண்டவர்களும் பலர் உண்டு. இந்தியாவின் மாபெரும் நாவலாசிரியர்களில் ஒருவரான சிவராம காரந்து கன்னடத்தில் கலை, அறிவியல் இரண்டுக்கும் மாபெரும் கலைக்களஞ்சியங்களை உருவாக்கியவர். நான் எப்போதுமே இத்தகைய விரிவான வரலாற்று, தத்துவ வாசிப்பு கொண்டவன். குறிப்புகள் எடுத்துக்கொண்டு பல மாத காலம் ஆழ்ந்து வாசிப்பவன். இந்தக் களங்களிலிருந்து என்னை அறியாமலேயே எனக்குள் செல்லும் செய்திகள் பின்னர் இலக்கியமாக மாறுகின்றன.  இத்தகைய பரந்துபட்ட கல்வியானது, ஓர் இலக்கியவாதிக்கு, குறிப்பாக நாவலாசிரியனுக்கு மிக இன்றியமையாதது என்றே நினைக்கிறேன்.

இந்த முயற்சிக்கு எழுந்திருக்கும் எதிர்ப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் பொருட்படுத்தவில்லை. இன்றைக்குக் கூச்சலிடுபவர்கள் இன்னும் ஓராண்டில் எங்களுடைய இணையக் கலைக்களஞ்சியத்தின் செய்திகளையே விக்கிப்பீடியாவில் எடுத்துப் போட்டுக்கொள்பவர்களாக இருப்பார்கள் அல்லது அவற்றைப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள்!
 

https://www.arunchol.com/jeyamohan-interview-on-wiki-by-samas

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.