Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 2009, 2022: மஹிந்த ராஜபக்ஷ இலங்கை அரசியலில் பெற்ற உச்சமும் வீழ்ச்சியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 2009, 2022: மஹிந்த ராஜபக்ஷ இலங்கை அரசியலில் பெற்ற உச்சமும் வீழ்ச்சியும்

  • விக்னேஷ். அ
  • பிபிசி தமிழ்
10 மே 2022
 

மஹிந்த ராஜபக்ஷ

ஓரிடத்தில் நிலைமை மோசமாகிறது என்றால் 'பற்றி எரிகிறது' என்ற உவமையைப் பயன்படுத்துவோம். பொருளாதார நெருக்கடியால் போராட்டங்களைச் சந்தித்துவந்த இலங்கை இப்போது உண்மையாகவே பற்றி எரிகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட 2009ஆம் ஆண்டு மே மாதம் அரசியல் செல்வாக்கின் உச்சத்தைத் தொட்ட மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் போராட்டம் தீவிரமடைந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்வில் மறக்க முடியாத காலங்களாக அமைந்த இந்த இரண்டு மே மாதங்கள் குறித்துப் பாப்போம்.

மஹிந்த ராஜபக்ஷ: சரிந்த செல்வாக்கு, சாம்பலான வீடு

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து நேற்று விலகிய மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையிலிருந்து அவரது குடும்பத்தினருடன் நேற்று வெளியேறியதாகவும், விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் சென்று திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.

 

தீ வைக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் பூர்விக வீடு அரசு அருங்காட்சியகமாக உள்ளது.

பட மூலாதாரம்,BBC SINHALA

 

படக்குறிப்பு,

தீ வைக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் பூர்விக வீடு அரசு அருங்காட்சியகமாக உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருக்கும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் தங்கள் இளமைக் காலத்தைக் கழித்த அவர்களது பூர்விக வீடும் தீக்கிரை ஆக்கப்பட்டது. இலங்கையின் தெற்கு மாகாணத்தின் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள வீரகட்டிய எனும் கிராமத்தில் ராஜபக்ஷ குடும்பத்தின் பூர்விக வீடு உள்ளது.

அரசு அருங்காட்சியகமாக செயல்பட்டு வந்த அந்த வீடு மே 9 ஆம் தேதி தீக்கிரையாக்கப்பட்டது. முற்றிலும் எரிந்து முடிந்த அந்த வீடு இப்போது சாம்பல் மண்டபமாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. முதலில் வழக்கமான ஒரு கிராமத்து வீடாக இருந்த இந்த வீடு ராஜபக்ஷ சகோதரர்கள் அரசியல் செல்வாக்கு பெற்ற பின்னர் மறுநிர்மாணம் செய்யப்பட்டது; பின்னர் அருங்காட்சியகமாக அறிவிக்கப்பட்டது.

வீரகட்டிய கிராமத்தில் அமைத்திருந்த ராஜபக்ஷ சகோதரர்களின் பெற்றோரது சமாதிகளும், அவர்களது தந்தை டான் ஆல்வின் ராஜபக்ஷவின் சிலையும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களால் கடுமையான சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் தலைநகரான குருணாகல் நகரில் உள்ள, மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான வீடு ஒன்றுக்கும் நேற்று அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்புடைய இரு வீடுகள் மட்டுமல்லாது, தம்மைத் தாமே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று இலங்கை காவல்துறையால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் வீடும் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை தேர்தல் மாவட்டத்தை மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மேற்கு மாகாணத்தில் உள்ள கம்பஹா மாவட்டத்தில் அமைந்திருக்கும் நிட்டம்புவ பகுதியில் மே 9ஆம் தேதி பிற்பகல், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

 

எரிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் சனன்த் நிஷாந்தாவின் வீடு.

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

எரிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் சனன்த் நிஷாந்தாவின் வீடு.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அமரகீர்த்தி அத்துகோரலவின் வாகனத்தையும் அவரையும் ஒரு கும்பல் தாக்க முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்ப அருகே உள்ள கட்டடத்துக்குள் அவர் ஓடியதாகவும் அப்போது அவரை வன்முறை கும்பல் சூழ்ந்து கொண்டதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

ராஜபக்ஷவின் வீடுகள், பொலன்னறுவையில் உள்ள அமரகீர்த்தி அத்துகோரலவின் வீடு மட்டுமல்லாது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் என மொத்தம் 31 இடங்களுக்கு நேற்று இரவு தீவைக்கப்பட்டதாக 'தி மார்னிங்' எனும் இலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மே 9 வன்முறைகளின்போது அமரகீர்த்தி அத்துகோரல உள்பட இதுவரை ஏழு பேர் மரணமடைந்துள்ளது உறுதியாகியுள்ளது.

மேற்கண்ட வன்முறை மற்றும் தீவைப்பு நிகழ்வுகள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கொழும்பில் இருந்து பிபிசி தமிழுக்காகப் பணியாற்றும் செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் தெரிவிக்கிறார்.

வன்முறை எங்கு தொடங்கியது?

பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் இலங்கையில் ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

 

மஹிந்த ராஜபக்ஷ

 

படக்குறிப்பு,

மே 9 வன்முறைகளின்போது நாடு முழுவதும் பல இடங்களில் தீவைப்பு நிகழ்வுகள் நடந்தன.

மே 9 அன்று, கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் போராடியவர்களுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை அவர்கள் சேதப்படுத்தினர். எதிரெதிர் தரப்பினர் ஒரே இடத்தில் திரண்டதால் அங்கு காவல்துறையினர் மற்றும் ரானுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினரையும் மீறி இருதரப்பினரும் கற்கள், கட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு மோதிக்கொண்டனர். நேரடிக் கைகலப்பும் நடந்தது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களையும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தாக்குவது, அவர்கள் தலை முடியைப் பிடித்து இழுப்பது ஆகியவற்றைக் காட்டும் காணொளிகள் மற்றும் படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகின.

மகி ஜன பலவேகய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற எதிர் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச போராட்டம் நடந்த பகுதிக்கு வந்தார். அவரை ராணுவ அதிரடிப்படை வீரர்களும் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

காலி முகத்திடல் பகுதிக்குள் அவர் நுழைந்தபோது, அவரை நோக்கி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் கட்டைகளையும் தண்ணீர் பாட்டில்களையும் வீசினார்கள்.

பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் அமைதி காக்கும்படி நாட்டு மக்களுக்குக் கோரிக்கை வைத்த அடுத்த சில மணிநேரங்களிலேயே தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் மஹிந்த ராஜபக்ஷ.

ஆனாலும், காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்த செய்திகள் நாடு முழுவதும் தீயைப் போல பரவியது. அது மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு தீ வைப்பதில் போய் முடிந்தது.

உச்சத்தைத் தொட்ட மஹிந்த: பிரபாகரன் கொல்லப்பட்ட மே 2009

அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த மே மாதம் போல எதிர்ப்பும் சறுக்கலும் நிறைந்த மாதம், இதுவரை எதுவும் இல்லை. ஆனால், அவர் இலங்கையின் தற்கால அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்க உதவியதும் ஒரு மே மாதம்தான். அது 2009 மே.

இலங்கையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய உள்நாட்டுப்போர் தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை அரசுப் படைகள் வென்ற 2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் குறைந்தது ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்; சுமார் 20,000 பேர் காணாமல் போயினர்.

 

வேலுப்பிள்ளை பிரபாகரன்

 

படக்குறிப்பு,

வேலுப்பிள்ளை பிரபாகரன்

இலங்கை அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் பெரும் சவாலாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மே 17, 2009 அன்று நந்திக்கடலில் இலங்கை படைகளால் கொல்லப்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாக இருந்தார். 1970இல் தமது 24ஆம் வயதில் இலங்கை நாடாளுமன்றத்தில் நுழைந்த மூன்றாம் தலைமுறை அரசியல்வாதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு முன் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் இலங்கை பிரதமராக இருந்தார்.

ஒரு காலத்தில் மனித உரிமைகள் போராளியாக அறியப்பட்டு, அரசியலில் முக்கியத்துவம் பெற்ற மகிந்த ராஜபக்ஷ, 2009 மே மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில் நடந்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கு ஆதாரங்கள் இருப்பதாக ஐநா மற்றும் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் நடத்திய விசாரணைகளின் அறிக்கைகள் கூறின. ஆனால், வெளிநாடுகளில் எந்த அளவுக்கு ராஜபக்ஷ மீது கண்டனங்கள் எழுந்தனவோ, அதே அளவுக்கு அவருக்கு உள்நாட்டில் அரசியல் செல்வாக்கும் உயர்ந்தது.

குழந்தைப் போராளிகள், மனிதக் கேடயங்களைப் பயன்படுத்துதல் போன்ற போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டதாக அந்த அறிக்கைகள் கூறின. இது பௌத்த - சிங்கள பெரும்பான்மை மக்களிடையே அப்போதைய ஆளும் தரப்பால் கொண்டு சேர்க்கப்பட்டது. நாட்டில் தீவிரவாதத்தை அழித்துவிட்டதாகக் கூறியது மஹிந்த ராஜபக்ஷ தரப்பு.

விடுதலைப் புலிகளை வீழ்த்தியதில் இப்போதைய ஜனாதிபதியும், அப்போதைய பாதுகாப்புச் செயலருமாகிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அப்போதைய ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்கும் அதிமுக்கியமான பங்குண்டு என்றாலும் மஹிந்தவின் அரசியல் தலைமையால்தான் அது சாத்தியமானது என்று இலங்கையின் பெரும்பான்மை சமூகம் நம்பியது.

அதற்கு சான்று 2010இல் அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வென்றது. அவரிடம் அந்தத் தேர்தலில், எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைத்தவர் உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் மஹிந்தவிடம் கட்டளைகளைப் பெற்று பணியாற்றிய முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா.

இரண்டாவது முறை மஹிந்த ஜனாதிபதியானதும், அவரது சகோதரர், மகன் மற்றும் குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட அரசியல் பதவிகள் உள்ளிட்டவை, மக்களிடையே இருந்த அவரது செல்வாக்கிற்கு பலத்த சேதத்தை உண்டாக்கின.

இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி ஆக முடியாது என்ற இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் சரத்தை தமது இரண்டாவது பதவிக் காலத்தின்போது திருத்திய மஹிந்த, 2015 ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். ஆனால், பல எதிர்க் கட்சிகளின் கூட்டு வேட்பாளராகப் போட்டியிட்ட, பெரிய அரசியல் செல்வாக்கோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத மைத்திரிபால சிறிசேன இந்தத் தேர்தலில் மஹிந்தவை வீழ்த்தினார். (மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்ததும் அரசமைப்புச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டு இருமுறை ஜனாதிபதி பதவி வகித்தவர் மூன்றாவது முறை போட்டியிட முடியாது என்ற பழைய விதியே கொண்டுவரப்பட்டது.ஜனாதிபதி பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளில் இருந்து நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.)

ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதி பதவியில் மஹிந்த இருந்தார் என்பதால், 2019 ஜனாதிபதி தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை. இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து 2016இல் மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட மஹிந்தவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசவை வீழ்த்தி ஜனாதிபதியானார்.

 

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் நடந்த தேர்தல்களில் ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் அரசியல் செல்வாக்கு பெற்றது.

 

படக்குறிப்பு,

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் நடந்த தேர்தல்களில் ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் அரசியல் செல்வாக்கு பெற்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் இலங்கையை மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகையே அதிர வைத்தன. ஆறு வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த குண்டுவெடிப்புகளில் 269 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது ஆட்சியில் இருந்த ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் செல்வாக்கு சரிந்து அதலபாதாளத்திற்குச் செல்வதற்கு இந்த குண்டுவெடிப்புகள் காரணமாகின.

விடுதலைப் புலிகளை வீழ்த்திய கோட்டாபய ராஜபக்ஷ வலிமையான தலைவராகப் பார்க்கப்பட்டார். அவரது தேர்தல் வெற்றிக்கு பௌத்த - சிங்கள பெரும்பான்மை வாக்குகள் முதன்மையான காரணமாக அமைந்தன.

நவம்பர் 2019இல் கோட்டபாய ஜனாதிபதி ஆனதும், தோல்வியடைந்த சஜித் தரப்பைச் சேர்ந்த ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் சிறுபான்மை அரசின் பிரதமராகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, ஆகஸ்டு 2020இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமரானார்.

2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலையான சுனாமி தாக்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே இலங்கை பிரதமராக, முதல்முறை பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்ஷ, சுனாமியால் நாடு உருகுலைந்தபோதும், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது தடை இல்லாமல் இருக்கும் வகையில் நிர்வகித்ததாகப் பரவலாகப் பாராட்டப்பட்டார்.

உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்துக்குக் காரணமான ஒரு பொருளாதார நெருக்கடியே இன்று மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகக் காரணமாகியுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61392384

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.