Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லக்பா ஷெர்பா - வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லக்பா ஷெர்பா - வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்

  • சுவாமிநாதன் நடராஜன் & பேட்ரிக் ஜேக்சன், லண்டன்
  • பிபிசி நியூஸ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் லக்பா ஷெர்பா

பட மூலாதாரம்,LHAKPA SHERPA

 

படக்குறிப்பு,

10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் லக்பா ஷெர்பா

தனது வாழ்நாள் முழுவதும் சவால்களை எதிர்கொண்டு வரும் லக்பா ஷெர்பா, தனது 48 வயதில், 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார்.

அவர் 10-வது முறையாகச் செய்துள்ள சாதனை, அவரது சகோதரரால் அறிவிக்கப்பட்டது. நேபாள அதிகாரிகள் அதை உறுதி செய்தனர். இதைச் செய்துள்ள முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

நேபாளைச் சேர்ந்த ஒற்றைத் தாயான லக்பா ஷெர்பா, ஒரு குகையில் தான் பிறந்தார். அவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. தொடக்கத்தில், அவர் வாயிற்காவலராகப் பணியாற்றினார்.

இதற்கு முன்னர் கடைசியாக, 2018-ஆம் ஆண்டில் 8,848.86 மீட்டர் உயரத்திற்கு இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

"முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தபோது, என் கனவை அடைந்ததைப் போல் உணர்ந்தேன்," என்று வியாழக்கிழமை அன்று எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு முன்னதாக பிபிசியிடம் கூறினார்.

மேலும், "இனி ஓர் இல்லத்தரசியாக என்னால் இருக்க முடியாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் ஷெர்பா கலாச்சாரம், ஷெர்பா பெண்கள் மற்றும் நேபாளி பெண்களின் நிலையை மாற்றியதைப் போல் உணர்ந்தேன். வீட்டிற்கு வெளியே இருப்பதை ரசித்தேன். அந்த உணர்வை அனைத்து பெண்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்," என்றார்.

லக்பா, பிபிசியால் 2016-ஆம் ஆண்டிற்கான 100 மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய, செல்வாக்குமிக்க பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் 10-வது முறையாகச் செய்த எவரெஸ்ட் மலையேற்ற குறித்த செய்தியை அவருடைய சகோதரர் மிங்மா கெலு ஷெர்பா தெரிவித்தார். அவர், லக்பா ஷெர்பா 6:15 மணிக்கு எவரெஸ்ட் உச்சியை அடைந்ததாகக் கூறினார். நேபாள சுற்றுலா துறை அதிகாரி பீஷ்ம குமார் பட்டராய், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் இந்தச் செய்தியை உறுதி செய்தார்.

முன்னதாக, அடிவாரத்தில் முகாமிட்டிருந்தபோது பிபிசியிடம் பேசிய, 15 வயதாகும் லக்பா ஷெர்பாவின் இளைய மகள் ஹைனி, தாயின் முன்னேற்றத்தை உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் கவனித்து வருவதாகக் கூறினார்.

"தன்னிடம் ஒன்றுமே இல்லாத போதிலும், அவர் இவ்வளவு சாதித்துள்ளார். அதற்காக, நான் என் அம்மாவை மிகவும் மதிக்கிறேன்," என்று ஷைனி கூறினார்.

இருப்பினும், லக்பாவின் கடின உழைப்பு மற்றும் சாதனைகள் இன்னும், செல்வம் மற்றும் அங்கீகாரமாக மாறவில்லை.

"நான் குகையில் தான் பிறந்தேன்"

கிழக்கு நேபாளத்தின் மகாலு பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4,000 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அவர் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். லக்பா, ஷெர்பா இனக்குழுவைச் சேர்ந்தவர். உயரமான இடங்களில் வாழப் பழகியிருந்த, நாடோடி திபெத்தியர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

 

மலையேறுவதற்காக தயாராகும் லக்பா ஷெர்பா (கோப்புப்படம்)

பட மூலாதாரம்,LHAKPA SHERPA

 

படக்குறிப்பு,

மலையேறுவதற்காக தயாராகும் லக்பா ஷெர்பா (கோப்புப்படம்)

"நான் குகையில் தான் பிறந்தேன். எனது பிறந்த தேதி கூட எனக்குத் தெரியாது. என் பாஸ்போர்ட் எனக்கு 48 வயதாவதாகக் கூறுகிறது," எனச் சிரித்துக் கொண்டே கூறியவர், "நான் மணிக்கணக்கில் நடக்க வேண்டியிருந்தது. சிலநேரங்களில் என் சகோதரர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக அவர்களை சுமந்து சென்றது நினைவிருக்கிறது. பள்ளிக்குச் சென்றதும் நான் திருப்பி அனுப்பப்படுவேன். அந்த நேரத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை," என்றார்.

மின்சார வசதியில்லாத அவருடைய கிராமத்தில், விவசாயமே பிரதானமாக இருந்தது.

"நான் எவரெஸ்டுக்கு பக்கத்திலேயே வளர்ந்தேன். என் வீட்டிலிருந்தே அதைப் பார்க்க முடிந்தது. எவரெஸ்ட் சிகரம் இப்போதும் என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்துகிறது," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

1953-ஆம் ஆண்டில் முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தை மனிதர்கள் அடைந்ததில் இருந்து, ஒவ்வோர் ஆண்டும் அதிகமான மக்கள் அந்தச் சிகரத்தை அடைய முயல்கின்றன. அவ்வாறு செய்பவர்கள் தவிர்க்க முடியாமல், ஷெர்பா இனக்குழுவைச் சேர்ந்த வழிகாட்டிகளையும் சுமைதூக்கிகளையும் பணியமர்த்துகின்றனர். ஆனால், சில ஷெர்பாக்கள், லக்பாவை போலவே, மலையேறுபவர்களாகவே மாறத் தொடங்கினார்கள்.

இந்த மாற்றம் எளிதில் நடந்துவிடவில்லை. லக்பாவின் பெற்றோர் அவருக்கு ஆதரவளிக்கவில்லை.

"எனக்குத் திருமணம் ஆகாது என்று என் அம்மா கூறினார். நான் ஆணின் இயல்புகளை கொண்டவளாக, விரும்பத்தகாதவளாக மாறுவேன் என்று அவர் என்னை எச்சரித்தார். கிராமவாசிகள், இதுவோர் ஆணின் வேலை என்றும் நான் அதை செய்ய முயன்றால் இறந்துவிடுவேன் என்றும் கூறினார்கள்," என்று லக்பா பிபிசியிடம் கூறினார்.

அவர் அந்தக் கவலைகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, 2000-ஆம் ஆண்டில் எவரெஸ்டின் மிக உயரமான சிகரத்தை அடைந்தார். 2003-ஆம் ஆண்டில், எவரெஸ்ட் சிகரத்தை மூன்று முறை ஏறிய முதல் பெண் என்ற சாதனையைப் புரிந்தார். அதைத் தொடர்ந்து மேலும் பல சாதனைகளை நிகழ்த்தினார்.

 

எவரெஸ்ட் உச்சியை அடையும்போது, தனது மகள்களான சன்னி மற்றும் ஷைனியைப் பற்றி நினைப்பதாக லக்பா ஷெர்பா கூறினார்

பட மூலாதாரம்,LHAKPA SHERPA

 

படக்குறிப்பு,

எவரெஸ்ட் உச்சியை அடையும்போது, தனது மகள்களான சன்னி மற்றும் ஷைனியைப் பற்றி நினைப்பதாக லக்பா ஷெர்பா கூறினார்

பல ஆண்டுகளாகக் கிடைக்காத அங்கீகாரம்

2003-ஆம் ஆண்டு மலையேறும்போது, அவருடைய சகோதரனும் சகோதரியும் உடன் இணைந்தனர். 8,000 மீட்டர் உயரமுள்ள சிகரத்தை ஏறிய முதல் மூன்று உடன்பிறந்தவர்களாகவும் அவர்கள் சாதித்தனர். அவர்களுடைய இந்தச் சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது.

பின்னர், அவர் ரூபேனியாவில் பிறந்து, அமெரிக்காவில் வாழும் மலை ஏறுபவரான ஜார்ஜ் டிஜ்மரெஸ்குவை மணமுடித்தார். பிறகு, அவரோடு இணைந்து ஐந்து முறை எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தைத் தொட்டார்.

திருமணத்திற்குப் பிறகு, அவர் அமெரிக்கா சென்றார். ஆனால், அந்த உறவு 2015-ஆம் ஆண்டில் விவாகரத்தில் முடிந்தது.

லக்பா இப்போது தனது இரண்டு மகள்களுடன் அமெரிக்காவின் கனெடிகட் மாகாணத்தில் வசித்து வருகிறார். இவருக்கு முந்தைய திருமண உறவில் பிறந்த ஒரு மகனும் உள்ளார்.

அவருடைய ஆரம்பப் பயணங்களின் போது அவர் உச்சத்தை அடையும்போது, அங்கு நேபாளத்தின் கொடியை நட்டு வைப்பார். இந்த முறை, அவர் அமெரிக்க கொடியை ஏந்திச் சென்றுள்ளார்.

இருப்பினும், அவருடைய சாதனைகள் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்க்கவில்லை. அவர் பல ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாமலே இருப்பதால், மிகக் குறைந்த ஊதியத்திலான வேலையைச் செய்து வருகிறார்.

"முதியவர்களைக் கவனித்துக் கொள்வது, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரங்களைக் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்கிறேன்," என்று அவர் தன் வேலை குறித்துக் கூறினார்.

 

லக்பா ஷெர்பா எவரெஸ்ட் அரசி என்றழைக்கப்படுகிறார். ஆனால், நடைமுறையில் அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படுகிறார்

பட மூலாதாரம்,LHAKPA SHERPA

 

படக்குறிப்பு,

லக்பா ஷெர்பா எவரெஸ்ட் அரசி என்றழைக்கப்படுகிறார். ஆனால், நடைமுறையில் அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படுகிறார்

"நான் பெரியளவில் பணம் சம்பாதிக்கவில்லை. என்னால் விதவிதமாக ஆடைகள் வாங்கவோ, முடி வெட்டவோ பணம் செலவழிக்க முடியவில்லை. என் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்கு மட்டுமே செலவழிக்க முடிந்தது. அதுபோக, எவரெஸ்டுக்குத் திரும்பி வரப் போதுமான பணத்தைச் சேமிக்க முடிந்தது."

அவர் மலையேறும் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இரண்டு முறை வழிகாட்டியாகச் சென்றார். சிலநேரங்களில் நண்பர்களும், குடும்பத்தினரும் அவருடைய பயணங்களுக்கு உதவினார்கள்.

மலையேறுவதில் "உள்ள அபாயங்களோடு ஒப்பிடும்போது, அதில் பலன்கள் எனப் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை," என்று அவர் கூறினார். ஆனால், மலையேற்றத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால், நேபாளின் மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும். அதிலிருந்து தப்பிக்க மலையேற்றம் உதவியதாக அவர் நம்புகிறார்.

அவர் ஆங்கிலம் நன்றாகப் பேசக் கற்றுக்கொண்ட பிறகு, நிதி ரீதியாக சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அவர் பல நிகழ்வுகளில் பேசினார், நேர்காணல்களில் பங்கெடுத்தார்.

அதைத் தொடர்ந்து 9-வது முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு அவருக்கு ஸ்பான்சர் கிடைத்தது. ஆனால், பத்தாவதாக இந்த முறை மலையேறுவதற்கு, கூட்டு நிதியுதவியின் மூலம் அவர் பணத்தைத் திரட்டினார்.

லக்பா எப்போதும் தனது வழக்கமான பிரார்த்தனையுடன் மலையேற்றத்தைத் தொடங்குவார். பாதுகாப்புக்கு மிகவும் முன்னுரிமை அளிக்கிறார்.

எவரெஸ்ட் சிகரத்தை ஏற முயலும்போது, 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, லக்பாவும் அவருடைய குழுவினரும் பனியால் பாதுகாக்கப்பட்ட உடல்களைக் கடக்க வேண்டும்.

 

எவரெஸ்ட் சிகரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"மலை தான் வானிலையைத் தீர்மானிக்கிறது. மலையோடு எங்களால் மல்யுத்தம் செய்ய முடியாது. எனவே மோசமான வானிலையின்போது நான் காத்திருப்பேன்.

8,000 மீட்டர்களைக் கடந்தபிறகு, நான் ஒரு ஜாம்பியைப் போல் உணர்ந்தேன். அனைத்தும் உறைந்துபோயிருக்கும். எதுவும் சாப்பிட முடியாது. இரவு நேரத்தில் உச்சியை ஏற முயல்வேன். அப்போதுதான் பகல் நேரத்தில் உச்சியிலிருந்து இறங்கலாம். அந்த நேரத்தில் மிகவும் பயமாக இருக்கும்," என்று அவர் தனது அனுபவம் குறித்துக் கூறினார்.

மலையேறுபவர்கள், உச்சியில் மிகக் குறைவான நேரமே இருக்க முடியும். லக்பாவை பொறுத்தவரை, 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இருக்க முடியும். அவர் மலையேறுவதை ஆதரிக்கும் அனைவரையும் பிரதிபலிக்கும் வகையில் ஒளிப்படங்களை எடுக்க மட்டுமே நேரம் இருக்கும்.

லக்பா, இந்த சீசனுக்குப் பிறகு ஓய்வு பெறும் திட்டம் எதுவும் தனக்கு இல்லை என்கிறார். உலகின் இரண்டாவது மிக உயரமான சிகரமான கே2-வில் ஏற அவர் விரும்புகிறார். எதிர்காலத்தில் தன் மகன், மகள்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏற வேண்டுமென நினைக்கிறார். ஏனெனில், மலையேறுவது தனக்குப் பிடித்தமானது. இதையே தான் செய்ய விரும்புவதாகக் கூறுகிறார்.

"என் வாழ்க்கை சவாலானதாக இருந்தது. மலைகள் எனக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தன. நான் மலையேறுவதை ஒருபோதும் கைவிட மாட்டேன். இளம் பெண்களும் இதைக் கைவிடக் கூடாது என்று நான் விரும்புகிறேன்," என்கிறார் லக்பா ஷெர்பா.

https://www.bbc.com/tamil/global-61451197

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.