Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹேமு விக்ரமாதித்யா வரலாறு: முகலாய படைகளைத் தோற்கடித்து டெல்லியை கைப்பற்றிய இந்து அரசர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹேமு விக்ரமாதித்யா வரலாறு: முகலாய படைகளைத் தோற்கடித்து டெல்லியை கைப்பற்றிய இந்து அரசர்

  • ரெஹான் ஃபசல்
  • பிபிசி செய்தியாளர்
20 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஹேமு விக்ரமாதித்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 44வது கட்டுரை இது.)

ஹரியாணா மாநிலம் ரேவாரியில் வசித்தவர் ஹேமு. இடைக்கால இந்தியாவில் போட்டி முஸ்லிம் ஆட்சியாளர்களிடையே குறுகிய காலத்திற்கு 'இந்து ராஜ்ஜியத்தை' நிறுவிய பெருமை ஹேமுவுக்கு உண்டு. அவர் தனது முழு வாழ்க்கையிலும் மொத்தம் 22 போர்களை வென்றுள்ளார். இதன் காரணமாக, சில வரலாற்றாசிரியர்கள் அவருக்கு 'இடைக்கால இந்தியாவின் சமுத்திர குப்தா' என்ற பட்டத்தை வழங்கினர். ஹேமு 'இடைக்காலத்தின் நெப்போலியன்' என்றும் அழைக்கப்பட்டார்.

அவர் ஒரு சிறந்த போர்வீரராகவும் திறமையான நிர்வாகியாகவும் இருந்தார். அவரது போரிடும் திறமையை அவரது நண்பர்களுடன் கூடவே அவரது எதிரிகளும் அங்கீகரித்தனர். பிரபல வரலாற்றாசிரியர் ஆர்.பி.திரிபாதி தனது 'ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தி முகல் எம்பயர்' புத்தகத்தில், "அக்பரின் கைகளில் ஹேமுவின் தோல்வி துரதிர்ஷ்டவசமானது. விதி அவருக்கு சாதகமாக இருந்திருந்தால், அவருக்கு இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது" என்று எழுதுகிறார்.

மற்றொரு வரலாற்றாசிரியர் ஆர்.சி. மஜும்தார், ஷேர்ஷா பற்றிய தனது புத்தகத்தின் ஒரு அத்தியாயமான 'ஹேமு - எ ஃபர்காட்டன் ஹீரோ'வில், "பானிபத் போரில் ஒரு விபத்து காரணமாக ஹேமுவின் வெற்றி தோல்வியாக மாறியது. இல்லையெனில் அவர் டெல்லியில் முகலாயர்களின் இடத்தில் ஒரு இந்து சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அமைத்திருப்பார்,"என்று எழுதியுள்ளார்.

 

ஹேமு விக்ரமாதித்யா

பட மூலாதாரம்,SPL

எளிய குடும்பத்தில் பிறந்தவர்

ஹேம் சந்திரா, 1501 ஆம் ஆண்டு ஹரியானாவில் உள்ள ரேவாரியில் உள்ள குதப்பூர் கிராமத்தில் பிறந்தார். அவரது குடும்பம் மளிகை வேலைகளை செய்து வந்தது. அக்பரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் அபுல் ஃபசல், ஹேமுவை 'ரேவாரியின் தெருக்களில் உப்பு விற்பவர்' என்று இழிவாக விவரிக்கிறார்.

ஆனால் அவரது தொழில் எதுவாக இருந்தாலும், ஷேர்ஷா சூரியின் மகன் இஸ்லாம் ஷாவின் கவனத்தை ஈர்ப்பதில் அவர் வெற்றி பெற்றார் என்பதில் சந்தேகமில்லை. விரைவில் அவர் பேரரசரின் நம்பிக்கைக்குரியவராக ஆனார் மற்றும் நிர்வாகத்தில் அவருக்கு உதவத் தொடங்கினார். பேரரசர் அவரை உளவுத்துறை மற்றும் அஞ்சல் துறையின் தலைவராக்கினார். பின்னர் இஸ்லாம் ஷா, அவரிடம் ராணுவ திறமைகளைக்கண்டார். இதன் காரணமாக ஷேர்ஷா சூரியின் காலத்தில் பிரம்ஜித் கெளருக்கு கொடுக்கப்பட்டிருந்த இடத்தை, தனது ராணுவத்தில் அவர் ஹேமுவுக்கு அளித்தார்.

ஆதில் ஷாவின் ஆட்சியின் போது, ஹேமுவுக்கு 'வக்கில்-இ-ஆலா' அதாவது பிரதமர் அந்தஸ்து கிடைத்தது.

 

அக்பரின் நீதிமன்றத்தில் அக்பர்நாமாவை சமர்ப்பிக்கும் அபுல் ஃபஸல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அக்பரின் நீதிமன்றத்தில் அக்பர்நாமாவை சமர்ப்பிக்கும் அபுல் ஃபஸல்

டெல்லியை கைப்பற்றினார்

ஹுமாயூன் திரும்பி வந்து டெல்லியின் அரியணையைக் கைப்பற்றி விட்டார் என்ற செய்தி ஆதில் ஷாவுக்கு கிடைத்ததும், முகலாயர்களை இந்தியாவிலிருந்து விரட்டும் பொறுப்பை ஹேமுவிடம் ஒப்படைத்தார்.

ஹேமு 50,000 பேர், 1000 யானைகள் மற்றும் 51 பீரங்கிகள் கொண்ட தனது படையுடன் டெல்லியை நோக்கிச் சென்றார். கால்பி மற்றும் ஆக்ராவின் ஆளுநர்களான அப்துல்லா உஸ்பெக் கான் மற்றும் சிக்கந்தர் கான் ஆகியோர் பயந்து தங்கள் நகரங்களை விட்டு வெளியேறினர்.

கே.கே.பரத்வாஜ் தனது 'ஹேமு நெப்போலியன் ஆஃப் மெடிவல் இந்தியா' என்ற புத்தகத்தில், "டெல்லியின் முகலாய கவர்னர் டார்தி கான் ஹேமுவை தடுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். ஹேமு 1556 அக்டோபர் 6 ஆம் தேதி டெல்லியை அடைந்து துக்ளகாபாதில் தனது படையுடன் முகாமிட்டார். அடுத்த நாள் அவருக்கும் முகலாய ராணுவத்திற்கும் இடையே போர் நடந்தது. அதில் முகலாயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். டார்தி கான் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, அக்பரின் ராணுவம் ஏற்கனவே இருந்த பஞ்சாபை நோக்கி ஓடினார். ஹேமு வெற்றியாளராக டெல்லியில் நுழைந்து, தலைக்கு மேல் ஒரு அரச குடையுடன் இந்து ராஜ்ஜியத்தை நிறுவினார். புகழ்பெற்ற மகாராஜா விக்ரமாதித்யா என்ற பட்டப்பெயரை ஏற்றுக்கொண்டார். அவர் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டு, தொலைதூர மாகாணங்களில் கவர்னர்களை நியமித்தார்."என்று எழுதியுள்ளார்.

 

ஹேமு விக்ரமாதித்யா

பட மூலாதாரம்,MITTAL PUBLICATIONS

டார்தி கானை கொன்ற பைராம் கான்

அக்பரின் 14வது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 1556 அக்டோபர் 13 ஆம் தேதி, டெல்லியில் ஏற்பட்ட தோல்வி பற்றிய செய்தி அவரை எட்டியது. அப்போது அக்பர் பஞ்சாபில் உள்ள ஜலந்தரில் பைராம் கானுடன் இருந்தார். அக்பர் தனது இதயத்தில், டெல்லியை விட காபூலுக்கு முக்கியத்துவம் அளித்தார். ஆனால் இதற்கு பைராம் கான் உடன்படவில்லை.

அக்பரின் வாழ்க்கை வரலாற்றான 'அக்பர் ஆஃப் ஹிந்தோஸ்தானில்' பார்வதி ஷர்மா, "அக்பருக்கு முன் இரண்டு வழிகளே இருந்தன. ஒன்று அவர் ஹிந்துஸ்தானின் பேரரசராக வேண்டும் அல்லது காபூலின் வசதிகளுக்கு திரும்பிச்சென்று பிராந்திய பேரரசராக இருக்க வேண்டும். டார்தி கான் டெல்லியில் ஏற்பட்ட தோல்விக்குப்பிறகு அங்கிருந்து ஓடி. அக்பரின் முகாமை வந்தடைந்தார். அக்பர் அப்போது வேட்டையாடச் சென்றிருந்தார். பைராம் கான் டார்திகானை தன் கூடாரத்திற்கு வருமாறு சொன்னார். சிறிது நேரம் பேசிவிட்டு, மாலைப் தொழுகை செய்ய பைராம்கான் எழுந்தார். அப்போது பைராம் கானின் ஆட்கள் கூடாரத்திற்குள் நுழைந்து டார்திகானைக் கொன்றனர். அக்பர் வேட்டையிலிருந்து திரும்பியதும், பைராம் கானின் அடுத்த நிலை அதிகாரி பீர் முகமது, டார்தி கானின் மரணச் செய்தியை அவரிடம் கூறினார். பைராம் கான் அக்பருக்கு பீர் மூலம் ஒரு செய்தியை அனுப்பினார். 'எனது இந்தச்செயலை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். போரிலிருந்து தப்பியோடியவர்களின் கதி என்னவாகும் என்று இதன் மூலம் மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்" என்பதே அந்த செய்தி.

 

ஹேமு விக்ரமாதித்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹேமு பெரும் படையுடன் பானிபத்திற்கு அணிவகுத்துச் சென்றார்

மறுபுறம், முகலாயர்கள் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர் என்பதை அறிந்த ஹேமு, தனது பீரங்கிகளை பானிபத் நோக்கி அனுப்பினார். அலி குலி ஷைபானியின் தலைமையில் 10000 பேர் கொண்ட படையை பானிபத் நோக்கி பைராம் கான் அனுப்பினார். ஷைபானி,உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர். பிரபலமான போராளிகளில் ஒருவராக அவர் கருதப்பட்டார்.

அக்பரின் வாழ்க்கை வரலாற்றான 'அக்பர்நாமா'வில் அபுல் ஃபஸல் எழுதுகிறார்.

"ஹேமு டெல்லியை விட்டு மிக வேகமாகப் புறப்பட்டார். டெல்லியிலிருந்து பானிபத் வரை, 100 கி.மீ.க்கும் குறைவான தூரமே இருந்தது. அந்தப் பகுதியில் கடும் வறட்சி நிலவியது. அதனால் வழியில் மனிதர்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. ஹேமுவின் படையில் 30,000 அனுபவம் வாய்ந்த குதிரை வீரர்கள் மற்றும் 500 முதல் 1500 யானைகள் இருந்தன. யானைகளின் தும்பிக்கையில் வாள் மற்றும் ஈட்டிகள் கட்டப்பட்டிருந்தன. மேலும் போர் திறன்களில் தேர்ச்சி பெற்ற வில்லாளர்கள் அவற்றின் மேல் அமர்ந்திருந்தனர்."

" முகலாய ராணுவம் போர்க்களத்தில் இதற்கு முன்பு இத்தனை பெரிய யானைகளைப் பார்த்ததில்லை. அவை எந்த பாரசீக குதிரையையும் விட வேகமாக ஓட முடியும். மேலும் குதிரையையும் , குதிரை மீது சவாரி செய்பவரையும் தனது தும்பிக்கையால் தூக்கி காற்றில் வீச முடியும்."

ஹேமு, ராஜபுத்திரர் மற்றும் ஆப்கானியர்களின் பெரும் படையுடன் பானிபத்தை அடைந்தார். ஜே.எம்.ஷிலத் தனது 'அக்பர்' என்ற புத்தகத்தில், "அக்பர் இந்த சண்டையில் இருந்து சிறிது தூரத்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டார். பைராம் கானும் இந்த சண்டையில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக்கொண்டு சண்டையின் பொறுப்பை தனது சிறப்பு நபர்களிடம் ஒப்படைத்தார்."என்று எழுதியுள்ளார்.

 

ஹேமு விக்ரமாதித்யா

பட மூலாதாரம்,MURTY CLASSICAL LIBRARY OF INDIA

ஹேமுவின் வீரம்

ஹேமு தலையில் கவசம் அணியாமல் போர்களத்தில் நுழைந்தார். சத்தமிட்டுத் தனது வீரர்களின் உற்சாகத்தை உயர்த்திக் கொண்டிருந்தார். அவர் தனது யானையான 'ஹவாய்' மீது அமர்ந்திருந்தார்.

பதாயுனி தனது 'முந்தகப்-உத்-த்வாரீக்' புத்தகத்தில் , "ஹேமுவின் தாக்குதல்கள் மிகவும் நுணுக்கமாக இருந்தன. முகலாய ராணுவத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் அது பீதியை உருவாக்கியது. ஆனால் மத்திய ஆசியாவின் குதிரைப்படையை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் ஹேமுவின் யானைகளைத் நேரடியாக தாக்குவதற்குப் பதிலாக, பக்கவாட்டில் இருந்து தாக்குதல் நடத்தினர். யானையின் மீது இருந்த வீரர்களை கீழே தள்ளி, வேகமாக ஓடும் தங்கள் குதிரைகளின் கால் அடியில் அவர்களை மிதிபடச்செய்தனர்,"என்று கூறியுள்ளார்.

இந்த போரை விவரிக்கும் அபுல் ஃபஸல், "இரண்டு படைகளும், மேகங்களைப் போல உறுமி, சிங்கங்களைப் போல கர்ஜித்து, ஒருவரையொருவர் தாக்கின. அலி குலி ஷைபானியின் வில்லாளர்கள் எதிரி மீது அம்புகளைப் பொழிந்தனர். ஆனால் அப்போதும் போர் அவர்களுக்கு சாதகமாக திரும்பவில்லை," என்று எழுதுகிறார்.

 

ஹேமு விக்ரமாதித்யா

பட மூலாதாரம்,JUGGERNAUT

"முதலாவது பானிபத் போரில் வெறும் 10,000 வீரர்களுடன் இப்ராஹிம் லோதியின் 100,000 வீரர்களை எப்படித் தன் தாத்தா பாபரின் படை தோற்கடித்தது என்று அக்பர் அப்போது நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் பாபரிடம் அப்போது ஒரு ரகசிய ஆயுதம் அதாவது துப்பாக்கி குண்டு இருந்தது என்பது அக்பருக்கும் தெரியும். ஆனால் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அக்பரிடம் எந்த ரகசிய ஆயுதமும் இல்லை. அதற்குள் துப்பாக்கி குண்டுகள் மிகவும் பொதுவானதாகிவிட்டதால், போர் துவங்குவதற்கு முன், அக்பர் தனது பீரங்கித் தலைவரிடம் ஹேமுவின் உருவ பொம்மையை குண்டுகளால் நிரப்பி எரிக்கும்படி கட்டளையிட்டார். தனது வீரர்களின் மன உறுதி இதன்மூலம் அதிகரிக்கும் என்று அவர் நினைத்தார்.,"என்று பார்வதி ஷர்மா எழுதியுள்ளார்.

 

ஹேமு விக்ரமாதித்யா

ஹேமுவின் கண்ணில் பாய்ந்த அம்பு

திடீரென்று ஏற்பட்ட ஒரு அதிசயம் முகலாய ராணுவத்திற்கு சாதகமாக அமைந்தது. முகலாய ராணுவத்தின் வலது மற்றும் இடது பக்கங்களில் ஹேமு பீதியை உருவாக்கினார். அலி குலி ஷைபானியின் வீரர்கள் ஹேமுவின் ராணுவத்தின் மீது அம்புகளை பொழிந்து அழுத்தத்தை குறைக்க முயன்றனர். அவர்களது ஒரு அம்பு இலக்கைத் தாக்கியது.

அபுல் ஃபஸல், "ஹேமு குதிரையேற்றம் கற்றுக் கொள்ளவே இல்லை. ஒருவேளை இதுவே அவர் யானையின் மீது அமர்ந்து போர் புரிந்ததற்குக் காரணமாக இருக்கலாம். தளபதி யானையின் மீது இருந்தால், எல்லா வீரர்களும் அவரை தூரத்தில் இருந்தே பார்க்கமுடியும் என்பதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். மேலும் ஹேமு கவசம் ஏதும் அணியவில்லை. அது ஒரு துணிச்சலான ஆனால் விவேகமற்ற முடிவு. சண்டையின்போது பாய்ந்த ஒரு அம்பு திடீரென்று ஹேமுவின் கண்ணைத் துளைத்து அவரது தலைக்குள்ளே மாட்டிக் கொண்டது," என்று எழுகிறார்.

ஹர்பன்ஸ் முகியா தனது 'தி முகல்ஸ் ஆஃப் இந்தியா' என்ற புத்தகத்தில் முகமது காசிம் ஃபெரிஷ்டா கூறியதாக இவ்வாறு எழுதுகிறார்- "இந்த விபத்துக்குப் பிறகும், ஹேமு மனம் தளரவில்லை. அவர் தனது கண்ணில் இருந்து அம்பை பிடுங்கி, தனது கைக்குட்டையால் கண்ணை மூடினார். பிறகு தொடர்ந்து சண்டையிட்டார். அவரிடம் இருந்த அதிகார பசி, அக்பரைக் காட்டிலும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல."

 

ஹேமு விக்ரமாதித்யா

பட மூலாதாரம்,BLACKWELL PUBLISHING

ஹேமுவின் தலையை துண்டித்த பைராம் கான்

ஆனால் சிறிது நேரத்தில் ஹேமு யானையின் அம்பாரியில் மயங்கிச் சாய்ந்தார். இது போன்ற போரில் தளபதி காயமடையும் போதெல்லாம், அவரது படையின் போரிடும் ஆர்வம் குறைந்து விடுகிறது. அக்பரும் பைராம் கானும் போர்க்களத்தை அடைந்தபோது, அவர்களது வீரர்கள் சண்டையிடாமல் வெற்றியைக் கொண்டாடுவதைக் கண்டனர்.

நிஜாமுதீன் அகமது தனது 'தபாகத்-இ-அக்பரி' என்ற புத்தகத்தில், " ஒரு யானை, யானைப்பாகன் இல்லாமல் அலைவதை ஷா குலிகான் கண்டார். அவர் தனது பாகனை யானை மீது ஏறச்சொல்லி அனுப்பினார். அவர் யானை மீது ஏறியதும், படுகாயமடைந்த ஒருவர் அம்பாரியில் மயங்கி கிடப்பதைக் கண்டார். கவனமாகப்பார்த்தபோது அந்தக் காயம்பட்டவர் வேறு யாருமல்ல, ஹேமுதான் என்பது தெரிந்தது. முழு விஷயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த குலிகான், பேரரசர் அக்பர் முன் யானையை இழுத்துச் சென்றார். அதற்கு முன் ஹேமுவை சங்கிலியால் கட்டிப்போட்டார்," என்று குறிப்பிடுகிறார்.

"20க்கும் மேற்பட்ட போர்களில் வெற்றி பெற்ற ஹேமு, ரத்தம் வழியும் நிலையில் 14 வயது அக்பர் முன் நிறுத்தப்பட்டார். எதிரியை தன் கைகளால் கொல்லும்படி, சமீபத்தில் பேரரசராக ஆன அக்பரிடம் பைரம் கான் கேட்டுக் கொண்டார். அக்பர் காயப்பட்ட ஹேமுவைப்பார்த்து தயங்கினார். 'நான் ஏற்கனவே இவரை துண்டு துண்டாக வெட்டிவிட்டேன்' என்று சாக்குப்போக்கு சொன்னார். சுற்றி நின்ற சிலர், பைராம் கானின் கருத்தை ஆதரித்து, ஹேமுவைக் கொல்லும்படி அக்பரை தூண்டினர். ஆனால் அக்பர் அசையவில்லை."என்று அபு ஃபஸல் கூறியுள்ளார்.

 

ஹேமு விக்ரமாதித்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அக்பர் காயமடைந்த ஹேமுவை தனது வாளால் தொட்டதாக ஃபெரிஷ்தா கருதுகிறார். ஆனால் வின்சென்ட் ஏ. ஸ்மித் மற்றும் ஹர்பன்ஸ் முகியா ஆகியோர், அக்பர் தனது வாளை ஹேமு மீது செலுத்தியதாக நம்புகிறார்கள். ஆனால் பைராம் கான் தனது வாளால் ஹேமுவின் தலையை வெட்டினார் என்பது பொதுவான கருத்து.

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம்

நிரோத் பூஷண் ராய் தனது ' சக்ஸஸர்ஸ் ஆஃப் ஷேர்ஷா' என்ற புத்தகத்தில், "ஹேமு எப்போதும் இந்துக்களையும் முஸ்லிம்களையும் தனது இரு கண்களாகக் கருதினார். பானிபத்தில் அவர் இந்தியாவின் இறையாண்மைக்காக முகலாயர்களுடன் போரிட்டார். அவரது ராணுவத்தின் வலது பக்கத்தின் பொறுப்பை ஏற்றிருந்தவர் ஷாதி கான் காக்கர். இடது பக்கத்தை வழிநடத்தினார் ராம்யா,"என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பார்.

 

PARSHURAM GUPTA

பட மூலாதாரம்,PARSHURAM GUPTA

வின்சென்ட் ஏ. ஸ்மித் அக்பரின் வாழ்க்கை வரலாற்றில் , "அக்பர் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது நரம்புகளில் ஓடும் ஒரு துளி ரத்தமும் இந்திய ரத்தம் அல்ல. அவரது தந்தையின் பக்கத்திலிருந்து அவர் திமுர்லாங்கின் ஏழாவது தலைமுறை. அவரது தாயார் பாரசீக வம்சாவளியைச் சேர்ந்தவர். மாறாக, ஹேமு இந்திய மண்ணைச் சேர்ந்தவர் மற்றும் இந்தியாவின் சிம்மாசனத்திலும் இறையாண்மையிலும் அதிக உரிமை கொண்டவர். க்ஷத்திரியராகவோ அல்லது ராஜபுத்திரராகவோ இல்லாவிட்டாலும், ஹேமு தனது நாட்டின் சுதந்திரத்திற்காக போர்க்களத்தில் தனது இறுதி மூச்சை விட்டார். இதைவிட சிறப்பான முடிவு எந்த மனிதனுக்குக்கிடைக்கும்?"என்று எழுதியுள்ளார்.

ஒரு மளிகைக் கடையில் இருந்து டெல்லியின் அரியணை ஏறுவது என்பது அந்த நாட்களில் மிகப்பெரிய விஷயம். விதி விளையாடி, அவரது வெற்றியை தோல்வியாக மாற்றாமல் இருந்திருந்தால், இந்தியாவின் வரலாறு வேறு விதமாக இருந்திருக்கும்.

https://www.bbc.com/tamil/india-61772221

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.