Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி: இதுவரை நேரில் பார்க்காத கோபம் - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி: இதுவரை நேரில் பார்க்காத கோபம் - என்ன நடந்தது?

  • சரோஜ் சிங்
  • பிபிசி இந்தி
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

காங்கிரஸ்

பட மூலாதாரம்,SANSAD TV/ MAGNUM PHOTOS

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதற்கு முன் பல முறை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் தலைவர்களை குறிப்பாக, ராகுல் காந்தி, சோனியா காந்தியை ஆக்ரோஷமாக விமர்சித்திருக்கிறார். ஆனால், அந்த நேரத்தில் எல்லாம் நாடாளுமன்றத்தில் இருக்கும் தலைவர்களும், சில செய்தியாளர்களும் பார்த்த சோனியா காந்தியின் பாணியும், அவர் வழக்கமாக கடைப்பிடிக்கும் அமையான இயல்பும் இம்முறை முரணாக இருந்ததாக சோனியாவை நன்கு அறிந்த பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

காரணம், சோனியா காந்தியை இலக்கு வைக்கும் தனிப்பட்ட தாக்குதல்கள், சமீபத்திய ஆண்டுகளில் நடந்த அரசியலில் நடந்ததில்லை.

சோனியா காந்தியின் வெளிநாட்டு வம்சாவளி பிரச்னையாக இருந்தாலும் சரி, சோனியா காந்தி இந்திய பிரதமரானால் தன் தலையை மொட்டை அடித்துக் கொள்வேன் என்று அறிவித்த சுஷ்மா ஸ்வராஜ் காலமாக இருந்தாலும் சரி, சோனியா காந்தி பொது இடங்களில் எப்போதுமே அவரது தனிப்பட்ட கோபத்தை வெளிப்படுத்தியது கிடையாது. அந்தக் காட்சியைக் காண்பதே அரிது.

இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் குறிப்பிட்டு மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் கூறுகையில், "அது 80களில் நடந்தது. அப்போது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். அவரது ஹைதராபாத் வருகையின்போது சோனியா காந்தியும் உடனிருந்தார். அந்த பயணத்தின் போது விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல தலைவர்கள் வந்தனர். அப்போது சோனியா காந்தியிடம் ராஜீவ் கடிந்து கொண்டதாக ஒரு தலைவர் காதுகளில் கேட்டார். ஆனாலும், ராஜீவை எதிர்த்து ஒருவார்த்தை கூட சோனியா பேசவில்லை," என்றார்.

 

ரஷித் கித்வாய் 'சோனியா காந்தி: ஒரு வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில், சோனியா காந்தியின் குணம் குறித்து அவர் குறிப்பிடும்போது, "அவரும் மேனகா காந்தியும் அதிகம் பழகியதில்லை. மேனகா காந்தியைப் பற்றி இந்திரா காந்தியிடம் சோனியா காந்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் கூட, அதை காகிதத்தில் எழுதியே சொல்வார். அப்படியொரு பழக்கத்தை அவர் கொண்டிருந்தார்," என்று ரஷீத் கூறியுள்ளார்.

ஸ்மிருதியுடன் கோபம் காட்டியது ஏன்?

 

ஆதிர் செளத்ரி

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES

இந்த ஒட்டுமொத்த விவகாரமும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி வெளிப்படுத்திய சர்ச்சை கருத்தால் பெரிதானது.

சோனியா காந்தியை அமலாக்க இயக்குநரகம் கடந்த 3 நாட்களாக விசாரித்த நிலையில், அதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி புதன்கிழமை தர்னாவில் காங்கிரஸார் ஈடுபட்டிருந்தபோது, ஒரு செய்தி சேனலுடனான உரையாடலில், ஆதிர் ரஞ்சன் செளத்ரி இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவை குறிப்பிடும்போது இந்தியில் 'ராஷ்டிரபதி' என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபத்தினி என்றவாறு பேசினார்.

இந்த விவகாரம் தொலைக்காட்சிகளில் விவாதப்பொருளாயின. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், "ஆதிர் ரஞ்சன் செளத்ரி குடியரசு தலைவரை அவமதித்து விட்டார்," என்றும் "அவர் பதவி விலக வேண்டும்," என்றும் குரல் கொடுத்தனர்.

மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பிய இந்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "திரௌபதி முர்மூவின் பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அவர் காங்கிரஸ் கட்சியின் வெறுப்புக்கும், கேலிக்கும் ஆளானார். காங்கிரஸ் கட்சி அவரை பொம்மை என்றது. இந்த நாட்டின் மிக உயரிய அரசியல் சாசன பதவியை பழங்குடியின பெண்மணி அலங்கரிப்பதை இன்னும் காங்கிரஸால் ஏற்க முடியவில்லை. சோனியா காந்தியால் நியமிக்கப்பட்ட அக்கட்சியின் அவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன், குடியரசு தலைவரை அவமதித்ததால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த நிகழ்வுக்குப் பொறுப்பேற்று சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்," என்று கோபத்தோடு குரல் எழுப்பினார்.

இதற்கு எதிராக காங்கிரஸாரும் கூச்சலிட்டதால் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது மக்களவையில் ஆளும் கட்சியினர் இருந்த பகுதிக்குச் சென்ற சோனியா காந்தி அங்கிருந்த பாஜக எம்பி ரமா தேவியிடம் "எனது பெயரை ஏன் இழுக்கிறீர்கள்?" என்று கேட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

மேலும், சோனியா ரமா தேவியிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே ஸ்மிருதி இரானி இடைமறித்து நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அப்போது அவரை நோக்கி மிகவும் கோபத்துடன் பேசிய சோனியா, 'என்னுடன் பேச வேண்டாம்' என்று கூற, அவருக்கு அதே இடத்தில் பதிலளிக்கும் விதமாக ஸ்மிருதி இரானி கருத்துகளை வெளியிட்டதால் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையானது.

பொதுவாகவே, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தில் பேசும்போது, எதிர்கட்சி வரிசையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை இலக்கு வைத்தே விமர்சிப்பார்கள். ஆனால், அவைக்குள் சோனியா காந்தி இருந்தால் கூட அவரை நோக்கி நேரடியாக எதையும் பேச மாட்டார்கள்.

ஆதிர் ரஞ்சன் செளத்ரி விவகாரத்தில் சோனியா காந்தியின் பெயரை ஸ்மிருதி இரானி இழுத்த விதம் மற்றும் சூழ்நிலை இப்போது பல வகை விவாதங்களைத் தூண்டியிருக்கின்றன.

ஸ்மிருதியை முதலில் இலக்கு வைத்த காங்கிரஸ் தலைவர்கள்

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை பணப்பரிவர்த்தனையில் ஏய்ப்பு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சோனியா காந்தியிடம் இந்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன் விசாரணைக்காக சோனியா காந்தி ஆஜராகி வந்த வேளையில், ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினர் வேறொரு ஊழல் விவகாரத்தில் தொடர்புபடுத்தி காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, மகிளா காங்கிரஸ் தலைவர் நெட்டா டிசோசா ஆகியோர் கடந்த சனிக்கிழமை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, ஸ்மிருதி இரானியின் குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினர்.

மத்திய அமைச்சரவையில் இருந்து ஸ்மிருதியை நீக்குமாறும் அவர்கள் கோரினர்.

மேலும், கோவாவில் இரானியின் மகள் நடத்தும் மதுபான விடுதி 'ரெஸ்டாரன்ட் கம் பார்' போலி உரிமம் அடிப்படையில் இயங்கியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஆனால், தமது மகளுக்கு எதிர்கட்சியினர் குறிப்பிடும் சட்டவிரோத மதுபான விடுதியுடன் எந்தத் தொடர்பும் என்று ஸ்மிருதி இரானி திட்டவட்டமாக தெரிவித்தார்.

காங்கிரஸாரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் தாமோ தமது மகளோ குடும்பத்தினரோ அந்த உணவு விடுதியை நடத்தவில்லை. கல்லூரியில் படிக்கும் தமது மகளை காங்கிரஸார் தேவையின்றி அரசியல் விவகாரத்துக்குள் இழுக்கிறார்கள் என்றும் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டினார்.

தம்மையும் தமது மகளையும் களங்கப்படுத்தும் வகையில் காங்கிரஸார் நடந்து கொண்டதாகக் கூறி இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறார் ஸ்மிருதி இரானி.

இதற்கு முன்பும் வேறொரு சந்தர்ப்பத்தில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கருத்து தெரிவித்தபோதும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஸ்மிருதி.

 

காங்கிரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரசியல் சண்டை

"அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக சோனியா காந்தியை பாஜக இலக்கு வைக்கிறது. அதே நேரத்தில் ஸ்மிருதி இரானியின் மகள் தொடர்பாக பாஜகவை காங்கிரஸ் இலக்கு வைக்கிறது. இது இந்த இரு கட்சிகளுக்கு இடையே சமீபத்திய அரசியல் சண்டையாக மாறியிருக்கிறது," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அத்தீ ஃபட்னீஸ்.

இந்த அரசியல் சண்டை குறித்து அதிதீ கூறும்போது, இன்று சோனியாவுக்கும் ஸ்மிருதி இரானிக்கும் இடையே நடந்த மோதல்கள் இருவருக்கும் இடையிலான பழைய வரலாறின் தொடர்ச்சியே என்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சோனியா முழு நேர தீவிர அரசியலுக்கு வராத காலகட்டத்தில், அவர் பல்வேறு தரப்பினராலும் தனி மனித தாக்குதலுக்கு இலக்கானார். இத்தாலிய பெண்மணி, வெளிநாட்டவர் என்றெல்லாம் அவரை பலரும் விமர்சித்தனர். ஆனால், இப்போது செய்தது போல, தனிப்பட்ட முறையில் சோனியாவை யாரும் நேரடியாக விமர்சித்ததில்லை என்று கூறினார்.

கோவா விவகாரத்தைப் பொருத்தவரை, தமது மகளுக்கு எதிரான அடிப்படையற்ற விமர்சனங்கள் தவறு என்று ஸ்மிருதி நினைத்திருக்கலாம். காரணம், அவருக்கு அவரது மகள் அந்த அளவுக்கு முக்கியமானவராக இருக்கிறார் என்று அதிதீ ஃபட்னீஸ் கூறினார்.

இதுநாள் வரை, காங்கிரஸுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி ஏதோ ஒன்றை செய்து அரசியல் நடத்தி வந்தது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ஸ்மிருதி இரானி பற்றி கிடைத்த தகவலை அரசியலுக்கு அந்தக் கட்சி பயன்படுத்தி குற்றம்சாட்டியது. ஆனால், மகளுக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது எந்த தாயால் பொறுத்துக் கொள்ள முடியும்? அதுபோலத்தான் தன்னைப் பற்றி ஒரு விமர்சனம் வந்தபோது சோனியாவும் எதிர்வினையாற்றியிருக்கிறார் என்கிறார் அதிதீ ஃபட்னிஸ்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஆனால், இந்த விவகாரத்தை வேறு விதமாக மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங் பார்க்கிறார். "சோனியாவுக்கும் ஸ்மிருதிக்கும் இடையே நாடாளுமன்றத்துக்குள் நடந்த சண்டை உண்மையில் ஸ்மிருதிக்கும் ராகுலுக்கும் இடையே நடந்திருக்க வேண்டியது. அதில் தேவையின்றி சோனியா காந்தி இடையில் புகுந்து மாட்டிக் கொண்டு விட்டார்," என்கிறார் அவர்.

"ஸ்மிருதி இரானியாக இருந்தாலும் சரி, சோனியா காந்தியாக இருந்தாலும் சரி, இருவருக்கும் இடையே பல வருடங்களாக தனிப்பட்ட மனக்கசப்புகள் உள்ளன. ஸ்மிருதி இரானி தனது மருமகன் பற்றியும் மகன் ராகுல் காந்தி பற்றியும் ஸ்மிருதி அதிகம் பேசி விட்டதாக கருதுகிறார். அதுபோலவே, தமது மகள் பற்றி காங்கிரஸார் அதிகம் பேசி விட்டதாக ஸ்மிருதி கருதுகிறார். இத்தகைய சூழல்களால் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு இடையேயான அரசியல் தகராறு பரஸ்பரம் அவற்றின் தலைவர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

இந்திய அமலாக்கத்துறையின் விசாரணையை ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் இப்போதும் எதிர்கொண்டுள்ளனர். அவர்களிடம் அமலாக்கத்துறை இன்னும் அதன் விசாரணையை முடிக்கவில்லை. தற்போதைய அரசியல் சூழலில் இது அந்த இரு தலைவர்களின் அரசியல் வாழ்க்கைக்கும் சற்று பின்னடைவாகவே கருதப்படுகிறது.

இந்திய அரசியலில் சோனியா காந்தி குடும்பம் இப்படி ஒரு விசாரணை வளையத்தில் சிக்கும் என ஐந்து வருடங்களுக்கு முன்பு யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்," என்கிறார் பிரதீப் சிங்.

 

ஸ்மிருதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 வருட சண்டை

ஆனால், சோனியா குடும்பத்துக்கும் ஸ்மிருதி இரானிக்கும் இடையிலான இந்த அரசியல் சண்டை இப்போது நடக்கவில்லை. அது 2014ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. அப்போது சோனியாவின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் ஸ்மிருதி இரானி. இந்த தாக்குதல்கள், அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக ஸ்மிருதி தேர்தல் களம் கண்ட போது மேலும் தீவிரமாக இருந்தது.

2014ஆம் ஆண்டு தேர்தலில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார். ஆனால், 2019இல் அவர் ராகுலை தேர்தலில் வீழ்த்தினார்.

இதனால், ராகுல் காந்திக்கும் ஸ்மிருதிக்கும் இடையே நடக்கும் மோதல், எப்போதும் பரஸ்பர அரசியலாகவே கருதப்படுகிறது. ஆனால், ஸ்மிருதி இரானி இதற்கு முன்பு சோனியா காந்தியை நேரடியாக ஆக்ரோஷமான முறையில் பேசியதில்லை என்பது உண்மைதான்.

சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, இது காங்கிரஸுக்கு எதிராக பாஜக வகுத்த பல உத்திகளின் ஒரு பகுதியாகக் கூட இருக்கலாம்.

மக்களவைக்குள் ஸ்மிருதியின் கருத்துக்குப் பிறகு பாஜகவின் மற்றொரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி என பலரும் மக்களவைக்குள் சோனியா காந்தியை சூழ்ந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இத்தனைக்கும் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் முதல் முறையாக ராகுலை வெற்றி கண்ட பிறகு அவருக்கும் சோனியாவுக்கும் இடையே நடந்த உரையாடல் மூத்த பத்திரிகையாளர் ஆனந்த் விஜய் எழுதிய 'அமேதி சங்க்ராம்' என்ற புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்திற்காக ஸ்மிருதி இரானியிடம் கருத்துக்களைப் பெற்றிருந்தார் அவர்.

அதில் "நான் அமைச்சராகப் பதவியேற்றபோது, சோனியா காந்தி என்னிடம் வந்து, நீங்கள் பதவிப் பிரமாணம் செய்யும்போது, நான்தான் அதிகமாக கைதட்டினேன்" என்று ஸ்மிருதி கூறியிருக்கிறார்.

ராகுல் காந்தி குறித்து ஸ்மிருதி கூறுகையில், நாடாளுமன்றத்தில் நேரடியாக சந்திக்க வாய்ப்பு வந்தபோதும் இருவரும் பேசிக் கொண்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி பற்றி ஸ்மிருதி இரானி பேசும்போது, "ஒருமுறை விமானத்தில் நானும் பிரியங்கா காந்தியும் ஒன்றாக பயணம் செய்தோம். அப்போது பிரியங்கா காந்தியிடம் சென்று நானே என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இந்த தொடர்புகளை எல்லாம் இப்போது மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் நினைத்துப்பார்த்து ஒப்பிடுகிறார்.

"இப்போது நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது, சமீபத்திய ஆண்டுகளில், அனைத்து அரசியல் கட்சிகளிலும் அரசியல் ஒழுக்கம் என்பது கணிசமாக குறைந்துள்ளது," என்கிறார் அவர்.

இந்த நிலையில், சர்ச்சைக்கு காரணமான ஆதிர் ரஞ்சன செளத்ரி, தமது மன்னிப்பு கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு அனுப்பியிருக்கிறார். அதில் தவறுதலாக உங்களுடைய பதவியைப் பற்றி குறிப்பிடும்போது வாய் தவறி வேறு வார்த்தையை உச்சரித்து விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இதை ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-62352130

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.