Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பின் பின்னரே தேர்தல் -பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளன ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியலமைப்பின் பின்னரே தேர்தல் -பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளன ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கூறுகிறார்

 

வரலாற்றில் முதன்முறையாக,அநேகமான மக்களின் பார்வையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (.யூ.எஸ்.எவ் ) வித்தியாசமான தன்மையில் தோன்றுகிறது. இதன் பின்னணியில் உள்ள பிரதான காரணம், “அரகலய “[போராட்டம்] வெற்றிபெற ஐ.யூ.எஸ்.எவ் வழங்கிய பங்களிப்பு ஆகும்.

இலங்கையர்கள், இனம், மதம் அல்லது சமூக வர்க்கம் எதுவாக இருந்தாலும், ராஜபக்ச ஆட்சியால் மோசமடைந்த மிக கடினமான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஒன்றுபட்டு கூட்டாக எதிர்ப்பு தெரிவித்தனர். உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இல்லாத பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்காக வீதிகளில் இறங்கினர்.

ஆங்காங்கே சிதறி காணப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் ஏப்ரல் 9 இல் ஜனாதிபதி செயலகத்தைச் சூழவுள்ள காலி முகத்திடல் பகுதியில் ஒன்றிணைந்து, இலங்கையின் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு இயக்கமாக பரிணமித்தது.இப்போது அரகலய மக்களின் போராட்டம் என்று அழைக்கப்படுகிறது.ஏற்கனவே 100 நாட்களுக்கும் மேலாக நீடித்த அரகலயவின் அழுத்தத்திலிருந்து தப்பி ஓடிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஜூலை 14 அன்று தனது பதவி விலகலை அறிவித்தார்.

மூன்று மாதங்களுக்கும் மேலாக, .யு.எஸ்.எவ் அரகலயவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.இந்தப் பின்னணியில், எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில்,போராட்டங்களின் எதிர்கால செல்திசை குறித்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளன ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே.டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கலந்துரையாடியுள்ளார்

இதேவேளை, .யு.எஸ்.எவ் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட ஆறு செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை பிறப்பித்திருந்தது .

பேட்டி வருமாறு ;

கேள்வி ; உங்கள் அமைப்பின் பிரதான இலக்குகள் என்ன?

பதில்: 1978 இல் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டபோது, மூன்று முக்கிய நிறுவன ரீதியான இலக்குகள் இருந்தன.அவை எங்களுக்காக மாறவில்லை.நிபந்தனையின்றி இந்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக நிற்பது முதலாவதாகும்.இரண்டாவது இலவசக் கல்விக்கான உரிமைக்காகப் போராடுவதாகும்.மூன்றாவது கல்வி விவகாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர் நலன்களில் தலையிடுவதாகும்.பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனம் இந்த அபிலாஷைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.எனவே ஐ.யு.எஸ்.எவ் என்பது இந்த நாட்டின் பிரஜைகளின் கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதில் தலையிடும் ஒரு அமைப்பாகும்.அத்துடன் இந்த நாட்டின் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது.

கேள்வி :உங்கள் நடவடிக்கைகளை ஏனைய தேசிய பிரச்சினைகளில் தலையிடாமல்  பல்கலைக்கழக பிரச்சினைகளுக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். உங்கள் கருத்து என்ன?

பதில்:இலவசக் கல்வி என்றால் இந்தக் கல்வியை நாம் இலவசமாகப் பெறுகிறோம். எங்களுக்கு இலவச சீருடைகள், இலவச புத்தகங்கள் மற்றும் மஹாபொல புலமைப்பரிசில் கூட கிடைக்கும்.இருப்பினும், இலவசக் கல்வி தொடர்வதற்கும் விரிவடைவதற்கும் அனைத்து பொது மக்களும் பெரிதும் பங்களிப்பு செலுத்துகிறார்கள். அவர்கள் வரி செலுத்துகிறார்கள்.இந்த நாட்டில் மீனவர்கள் ஆழ்கடலில் உயிரைப் பணயம் வைத்து வரி செலுத்துகிறார்கள்,தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வரி செலுத்துகிறார்கள்,விவசாயிகள் தினமும் உழைத்து வரி செலுத்துகிறார்கள்.எனவே, அரிதாகவே வரி செலுத்தும் மக்கள் உட்பட, அத்தகைய சமூகத்தின் பிரச்சினைகளை புறக்கணிப்பதற்கான வழி இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்.எனவே, இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளில் நாம் தலையிட வேண்டுமென நம்புகின்றோம்.

கேள்வி:உங்களின் செயற்பாடுகள் உண்மையில் பல்கலைக்கழக கல்விக்கு இடையூறாக இருப்பதாகவும், மாணவர்களை உங்கள் போராட்டங்களில் சேருமாறு கட்டாயப்படுத்துவதாகவும் சிலர் கூறுகின்றனர்.உங்கள் கருத்து என்ன?

பதில்:இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து, ஏராளமான போர்களில் வெற்றி பெற்று உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.1981 கல்விக்கான ஒதுக்கீட்டைக் குறைப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் தவலபத்திரிகாவா மேற்கொள்ளப்பட்டது.பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் தலைமையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கை பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டது.அரசாங்கம் அந்தப் போராட்டத்தை இராணுவத்தைக் கொண்டு அடக்க முயன்றது.ஆனால் இலங்கை மாணவர் இயக்கத்தின் துணிச்சலும் பலமும் அதை தோற்கடித்ததுடன், “தவலபத்திரிகாவை” ரத்து செய்ய அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது.

பின்னர் 1980 இல் வட கொழும்பு மருத்துவக் கல்லூரி என்ற தனியார் பல்கலைக்கழகம், எமது போராட்டங்களின் விளைவாக தற்போது தேசியமயமாக்கப்பட்டு களனிப் பல்கலைக்கழகத்துடன் ராகம மருத்துவ பீடமாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும்,.யு.எஸ்.எவ்.வின் தலையீட்டினால் மட்டுமே மோசடியான சைட்டம் ஒழிக்கப்பட்டது. இந்த நாட்டில் இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கும் உத்தரவாதம் அளிப்பதற்குமான இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் ஐ.யு.எஸ்.எவ்.உறுதியாக ஈடுபட்டது. எவ்வாறாயினும், மாணவர்கள் யாரும் இந்த போராட்டங்களுக்கு கட்டாயப்படுத்தப்படவில்லை. இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் தமது கடமைகளை உணர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் தாமாக முன்வந்து இந்தப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

மறுபுறம், இந்த சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, நாம் ஒவ்வொருவரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்பது உண்மைதான்.சில சமயங்களில், அவர்கள் போராட்டங்களில் பங்கேற்கும்போது இரண்டு அல்லது மூன்று மணிநேர விரிவுரைகள் தவறவிடப்படும்.ஆனால் அது அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் நடக்கும்.மாணவர்கள் எவரும் போராட்டங்களில் கட்டாயப்படுத்தி பங்கேற்க மாட்டார்கள் என்று உறுதியளிக்கிறேன்.

கேள்வி:நீங்கள் இன்னும் தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்க்கிறீர்களா?

பதில்;வெளிப்படையாக,.யு.எஸ்.எவ் ஆக நாங்கள் அணுகக்கூடிய கல்வியை மட்டுமே நம்புகிறோம்.மேலும் ஒரு அமைப்பாக நாங்கள் அதன் சார்பாக இரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தியுள்ளோம்.எந்தச் சூழ்நிலையிலும் இலவசக் கல்வி என்ற சுலோகத்துடனேயே நாங்கள் நிற்கிறோம்.உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் வித்தியாசம் இருக்க முடியாது.பாலின சமத்துவத்தையும் நாங்கள் நம்புகிறோம்.இவற்றின் அடிப்படையில் இலவசக் கல்விக்காகப் போராடுகிறோம்.

கேள்வி:பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் வாய்ப்புகளை வழங்குவதாகவும் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதாகவும் நீங்கள் நினைக்கவில்லையா ?

பதில்:அந்நியச் செலாவணியைப் பற்றிப் பேசுவோம், நாம் இந்து சமுத்திரத்தின் முத்து. கடல் நம்மை சூழ்ந்துள்ளது.ஆனால் அத்தியாவசிய மீன்களில் தொடங்கி, ஏனைய யாவும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.அதற்காக எவ்வளவு இலங்கைப் பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது ? இலங்கைக்கு பல அத்தியாவசிய பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. அரசாங்கம் கல்வியிலிருந்து கிடைக்கு  அந்நிய செலாவணியை மட்டுமே விரும்புகிறது. இது நீண்டகாலமாக இருந்துவரும் நன்கு அறியப்பட்ட வாதமாகும். இது அவர்களின் இயலாமையை மறைக்க அரசாங்கம் முன்வைக்கின்றவாதமாகும்.எனவே, கல்வியை விற்பது அந்நிய செலாவணிக்கு தீர்வாகாது.அது எமது கல்வி முறைமையின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்.

கேள்வி:எப்படியிருந்தாலும், இப்போது நீங்கள் அரகலயவின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள்.அதன் மூலம் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்?

பதில்:அரகலய என்பது மக்களுக்கு ஒரு முக்கியமான போராட்டமாக இருக்கும். பாடசாலை மாணவர்கள்,விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் தொடர் போராட்டம் நடந்தது.அதுமட்டுமல்லாமல், தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் எழுந்தன.இதனால், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு சமூகத்தின் அனைத்துத் துறையினரும் கோரிக்கை விடுத்தனர்.எனவே, இந்தப் போராட்டத்திற்குள், .யு.எஸ்.எவ் என்ற வகையில், நாங்கள் எங்களின் அதிகபட்ச ஆற்றலுடன் தலையிட்டோம்.மேலும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எங்கள் தரப்பிலிருந்து எடுக்கப்பட்டன.இந்த நாட்டு மக்களுடன் நாங்கள் ஒரே அணியில் நின்றோம்.

போராடி வெற்றி பெற்று மீண்டும் வெற்றிபெற முடியும் என்பதை இந்நாட்டு மக்களை நம்ப வைக்க தேவையான தலையீட்டை நாங்கள் செய்தோம்.துரதிர்ஷ்டவசமாக, கடந்த சில மாதங்களாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கைவிடுவது அல்லது விரக்தியால் அவர்களைக் கொலை செய்வது மற்றும் மக்கள் பல நாட்கள் இடைவிடாமல் வரிசையில் நிற்பதைக் கண்டோம்.ஒரு சமூகம் என்ற ரீதியிலும் இலங்கையர்கள் என்ற ரீதியிலும் மக்கள் விரும்புவது இதுவல்ல என்பதை நாம் அறிவோம்.அனைவருக்கும் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை அனுபவிக்கும் சமூகம் எமக்குத் தேவை.அந்த எதிர்காலத்தை உணர்வதற்கு நாங்கள் பங்குதாரர்களாக பணியாற்றி வருகிறோம்.இந்த போராட்டத்தில் நாங்கள் ஒரு அங்கமாக இருக்கிறோம்.எப்போதும் தலையிட்டு போராட்டத்திற்கு எங்கள் பலத்தை கொடுப்போம்.

கேள்வி:உங்கள் கருத்துப்படி, தற்போதைய நெருக்கடிக்கான தீர்வுகள் என்ன?

பதில்:இந்த நெருக்கடி மிகவும் தீவிரமானது மற்றும் தீர்க்கமானது.எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். மக்களின் கருத்துக்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்பதற்கு இது ஒரு சான்று.மக்களின் கருத்து பாராளுமன்றத்தில் இல்லை.இரண்டு வருடங்களுக்கு முன்னர் 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியை இந்நாட்டு மக்கள் வெளியேற்றினர்.ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாணத்தின் மூலம் மக்களின் அபிப்பிராயம் மதிப்பற்ற குப்பையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. மொட்டு எம்.பி.க்கள் தமது ஊழல் நிறைந்த மற்றும் மோசடியான வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கு எடுத்த எளிதான குறுக்குவழி இதுவாகும்.

எரிபொருள், எரிவாயு மற்றும் பால் மா வரிசைகளை விக்கிரமசிங்கவால் அகற்ற முடியுமா?இல்லையென்பது தெளிவானது.ரணில் விக்கிரமசிங்க பிரதமரான பின்னரும், இந்த நெருக்கடியின் கடுமையை மீண்டும் வலியுறுத்தினார். மக்கள் எவ்வாறு தங்கள் வயிற்றை இறுக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் மிகவும் கடினமாகிவிடும் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்பதுபற்றியும் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு ஒரே தீர்வு இடைக்கால அரசுதான்.பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இடைவெளி உள்ளது.அதை களைய, மக்கள் மன்றம் அமைக்கப்பட வேண்டும்.இடைக்காலக் கட்டமைப்பிற்குள் மத்திய ஆட்சி முறைமையில் மக்களை இணைக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்.மக்கள் பேரவையை நிறுவுவதற்குள் ஒரு மக்கள் மன்றம் நிறுவப்பட வேண்டும்.அந்தக் கட்டமைப்பிற்குள், அரசு மற்றும் மக்கள் மன்றத்தின் ஒத்துழைப்புடன், தீர்வுகள் காணப்பட வேண்டும்.

மேலும், அரசியலமைப்பு அவசரமாக மறுசீரமைக்கப்பட்டு புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.மேலும், சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் சட்ட முறைமையின் கட்டமைப்பிற்குள் மீட்கப்பட வேண்டும்.

கேள்வி:இது ஒரு பொருளாதார நெருக்கடி என்று சிலர் கூறுகிறார்கள்.மற்றவர்கள் இது அரசியல் என்று கூறுகிறார்களே?

பதில்:இது தெளிவாக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் கலவையாகும்.இது வெளிப்படையாக பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல, அரசியல் நெருக்கடியும் மட்டுமல்ல.மாறாக பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி.எனவே இதற்கான பதில் அரசியல்.முதலில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையின் கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் அவர் தனது ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும்.2020 தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நாட்டு மக்கள் ஆணை வழங்கவில்லை.கோத்தாபய ராஜபக்சவை தோற்கடித்த மக்களின் குரலாக, ரணில் விக்கிரமசிங்கவின் கதியும் அவ்வாறே இருக்கும் என ஐ.எஸ்.யு.எவ் உறுதியாக நம்புகிறது.அதன்பிறகு, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் இடைக்கால அரசை அமைக்க வேண்டும். இந்த நாட்டின் “போராட்டக்காரர்களும்” சமூக ஆர்வலர்களும் தலையிட்டு ஆட்சி முறைமையில் செல்வாக்கு செலுத்தக்கூடிய சூழலை இடைக்கால அரசாங்கம் உருவாக்க வேண்டும்.அந்தச் சூழலுக்குள், விரைவான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யப்படலாம்.அதன் பின்னர் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னரே தேர்தலுக்கு செல்ல வேண்டும்.எவரை நியமித்தாலும் மேற்கூறியதைச் செய்யாமல் இதைச் செய்ய முடியாது.

கேள்வி:நீங்கள் எதனை முன்மொழிகிறீர்கள்? ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்ற தேர்தலா?

பதில்:நாங்கள் தேர்தலுக்குச் செல்வதாக இருந்தால், புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்று நம்புகிறோம்.இந்த முறைமையை மாற்றி தேர்தலுக்கு செல்ல வேண்டும்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்.இந்த முற்போக்கான மாற்றங்களுடன் தேர்தலை நடத்தாவிட்டால் மக்கள் தங்கள் போராட்டங்களில் திருப்திகரமான மற்றும் போதுமான வெற்றியை பெற மாட்டார்கள்.என்று நாங்கள் நினைக்கிறோம்.அதே குண்டர் கும்பல் அதிகாரத்தை கையகப்படுத்தும்.நிச்சயமாக, மக்களின் விருப்பத்தை ஆராய ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.ஆனால் அதற்கு தேவையான அடித்தளத்தை உருவாக்கிய பின்னரே நடத்தப்படவேண்டும் .

கேள்வி:அரசாங்கம் சில காலமாக பல்கலைக்கழகங்களை மூடி வைத்துள்ளது.இந்த நடவடிக்கைக்கு பின்னால் வேறொரு நிகழ்ச்சி நிரலை நீங்கள் காண்கிறீர்களா?

பதில்:நிச்சயமாக,இதற்குப் பின்னால் ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. தொற்றுநோய்களின் போது கூட, கல்விப் பணிகளைத் தொடர சரியான திட்டம் இல்லாமல் அரசாங்கம் பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடியது. அனைத்து முறைமைகளும் சீராக இயங்கினாலும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைத் திறக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் எதிர்ப்பை அரசாங்கம் அறிந்திருக்கிறது.அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நசுக்கப்பட்டு மிதிக்கப்பட வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.இதனால், கல்வி நிறுவனங்கள் தன்னிச்சையாக மூடப்படுகின்றன.

கேள்வி:அரகலயவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்றும் வரை அது தொடருமா?

பதில்;ரணில் விக்கிரமசிங்க, வெளிப்படையாக மக்கள் ஆதரவு இல்லாதவர், அதிர்ஷ்டத்தால் பாராளுமன்றத்திற்கு வந்தார்.அவர் இப்போது ராஜபக்ச ஆட்சிக் குழுவைப் பாதுகாக்க தலையிடுகிறார்.அவர் தனது இடத்தைப் பாதுகாக்க போதுமான வாக்குகளை கூட பெற முடியாததால் அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவை விரட்டுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.மேலும், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பாக நாம் எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கிறோம்.ஆறு தடவைகள் நாட்டின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னோக்கி கொண்டு செல்ல முடியவில்லை என்பதை இந்த நாட்டு மக்களுக்கு நாம் அழுத்திக் கூறுகிறோம்.மேலும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது அதிகாரத்தில் இருந்ததும் மத்திய வங்கியில் மிகப் பெரிய கொள்ளை நடந்த போது, பிரதமராக இருந்ததும் ரணில் விக்கிரமசிங்கவேயாகும். ரணில் ஒரு மந்திரவாதியல்ல முன்னோக்கிச் செல்ல வழியில்லாத மனிதன் மட்டுமே என்பதை சமூகம் புரிந்துகொள்ளும் வரை, கிராமம் கிராமமாக இந்தச் செய்தியை எடுத்துச் செல்கிறோம்.முடியும் என்று நம்புகிறோம்.அதற்கான போராட்டங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள், மாநாடுகளை நடத்துவோம்.

கேள்வி:ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் என நீங்கள் நினைக்கும் அடுத்த ஆள் யார்? அனுரகுமார திசநாயக்காவா ?

பதில் ;எங்களிடம்,எக்ஸ்,வை மற்றும் சற் ஆகியவை வேட்பாளர்களாக இருப்பதாகக் கூறினால் வை ஐ விட எக்ஸ் சிறந்தது அல்லது வை ஐ விட சற் சிறந்தது என்று நாங்கள் கூறவில்லை.எங்களுக்கு பெயர் வேண்டாம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். எங்களுக்கு ஒரு முறைமை வேண்டும். அந்த முறைமையின் கீழ் யார் தெரிவு செய்யப்பட்டாலும் இந்த நாட்டின் சமூகம் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒரு முறைமையில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.நாங்கள் தனிநபர்களை நம்புவதில்லை.

கேள்வி:.யு.எஸ்.எவ் வானது முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் கைக்கூலி என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளனவா?இதற்குப் பின்னால் ஏதாவது உண்மை இருக்கிறதா?

பதில்:அந்தக் குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன்.மாறுபட்ட அரசியல் கருத்துக்களைக் கொண்ட எவரும் ஐ.யு.எஸ்.எவ் இன் பகுதியாக இருக்கலாம்.ஐ யு .எஸ் எவ் இன் நடவடிக்கைகள் அல்லது கோஷங்கள் கலந்துரையாடல்களுக்குப் பிறகு அதன் உறுப்பினர்களால் ஏகமனதாக முடிவு செய்யப்படுகின்றன.எனவே இதில் எந்த அரசியல் கட்சி தலையீடும் இல்லை.நாட்டு மக்கள் மற்றும் மாணவர்களின் கோஷங்கள் மட்டுமே எங்கள் அமைப்பில் உள்ளன.

கேள்வி:பல வருடங்களாக பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பரீட்சைகளில் தோல்வியடைவதன் மூலம் மக்களின் வரிப்பணத்தை நீங்கள் வீணடிப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவே?

பதில்:நான் உயர்தரப் பரீட்சை கலைப் பிரிவில் இருந்து பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றேன்.நான் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் தொல்லியல் சிறப்புப் பட்டப்படிப்பைப் கற்றேன்.ஒரு மனிதன் இறந்து விழுந்தால்,அவன் மரணம் அநியாயம் என்று சொல்வதற்கு பட்டம் தேவையில்லை.வெளிப்படையாக, இதற்கு எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை.அதற்கு தேவை மனிதாபிமானம் மட்டுமே தேவை.நாட்டு மக்களின் பிரச்சனைகள் பற்றி பேச வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.அவர்கள் பட்டம் பெற்றவரா இல்லையா, வெள்ளையா, கறுப்பா, குட்டையா என்பது முக்கியமில்லை.இந்த கேள்விகளை எல்லாம் எங்களை அவமதிக்கவே அரசு பிரசாரம் செய்கிறது.அரசிடம் கேட்கிறோம், அரசில் எத்தனை பேர் பட்டம் பெற்றுள்ளனர்?

அரசாங்கத்தில் எத்தனை பேர் சாதாரண தர பரீட்சை எழுதினார்கள்?ராஜபக்ச பிள்ளைகள் சட்டவிரோதமான முறையில் பட்டங்களை எவ்வாறு பெற்றனர் என்பதைக் கண்டுபிடிப்பதில் யாராவது இவ்வளவு ஆர்வம் காட்டினார்களா?எனவே நாட்டு மக்களுக்காக நிற்பதற்கு மனிதாபிமானம் மட்டுமே தேவை.

கேள்வி:ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை 22 ஆம் திகதி நடந்ததைப் போன்று அரகலயவை அடக்குவதற்கு கடுமையான நடவடிக்கையை நாடினால் என்ன செய்வது?

பதில்:தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலான வகையில் போராட்டங்கள் வெடித்தபோது அரசாங்கங்கள் எப்போதும் அடக்குமுறையையே நாடின.சில சமயங்களில் நீதிமன்ற உத்தரவுகள் பயன்படுத்தப்பட்டு, சமீபத்திய சம்பவத்தைப் போலவே, போராட்டக்காரர்கள் முப்படையினரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர்.ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தால் அவரது அழைப்புக்கு நாங்கள் பதிலளிப்போம்.அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்தபோது,தடைகளை உருவாக்கி, பொதுமக்களின் கருத்தைப் புறக்கணித்து, மக்கள் அவற்றை உடைத்துச் சென்று கையகப்படுத்தினர்.அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்குப் பதிலளிப்பதற்காக பிரதமர் அலுவலகத்தையும் ஜனாதிபதி செயலகத்தையும் மக்கள் கையகப்படுத்தினர். எனவே, காலி முகத்திடலை துடைத்தெறிய தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க முடியும் என ரணில் விக்கிரமசிங்க நினைத்தால், நாங்கள் அவரை எதிர்கொள்ளத் தயார்.

ரணில் விக்கிரமசிங்க, ஒரு ஜனநாயகத் தலைவனாகக் காட்சியளிக்கும் வேளையில், இரத்த வெறி விளையாட்டை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள மக்களை மட்டுமே துடைத்தெறிய முடியும்; அவர் மக்களின் அழுகையை துடைக்க முடியாது.சட்டவிரோதமான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வதை ஐ.யு.எஸ்.எவ் எதிர்பார்த்துள்ளது.

https://thinakkural.lk/article/196884

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.