Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தத்தை முன்னெடுத்து ஆட்சியை தக்கவைக்க நினைப்பது இமாலயத்தவறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தை முன்னெடுத்து ஆட்சியை தக்கவைக்க நினைப்பது இமாலயத்தவறு

[14 - August - 2007]

* அரசியல் தீர்வை முன்னெடுப்பதே அரசுக்குரிய ஆரோக்கியமான தெரிவு

வ. திருநாவுக்கரசு

"அதிகாரத்திலுள்ளவர்கள் தமது கொள்கைகளை யாரும் விமர்சிப்பது ஆபத்தானது என நினைப்பதுடன், தமது கொள்கைகள் தேசப்பற்று நிறைந்தவை. எனவே, அவற்றை யாரும் விமர்சனம் செய்வதென்பது தமது அதிகாரத்திற்கு உலை வைக்கும் யுக்தி என முடிவுகட்டி விடுகின்றனர்" ஹென்றி ஸ்ரீல் கொம்மாஜர்.

உலக மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை, ஏனைய 3 ஆவது உலக நாடுகள் போலவே, அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூடுதலாக தங்கியிருக்கும் நிலையில், சுதந்திரம் மற்றும் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகளுக்கு இடமளிக்க முடியாது என அலட்டித் திரிவது பேரினவாத வாய்ச்சவடாலே ஒழிய வேறொன்றல்ல. இச்சந்தர்ப்பத்தில் கொழும்பு பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சிறி ஹெற்றிகே அண்மையில் வெளியிட்ட கட்டுரையொன்றில் என்ன கூறியிருக்கிறார் என்பதை சற்று பார்ப்போம்.

"யுத்த செயற்பாடுகள் தொடர்பாக சில அரசியல் குழுக்கள் மகிழ்ச்சியடைந்திருப்பது ஒருபுறமிருக்க, பாதுகாப்பின்மை, பரவலான வன்செயல்கள், தொழிலின்மை மற்றும் ஏறிய வண்ணமுள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக சாதாரண மக்கள் சொல்லொணா இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர்." எதிர்காலம் மிகமிக இருள் மயமாகியுள்ளதால் இயலுமானோர் விரைவில் நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டுமென்ற எண்ணமும் நிலவுகிறது.

இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்பதால் வேறு நாடுகள் எமது நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாதென சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எமது நாடு எவ்வளவு சுதந்திரம் மற்றும் இறைமை கொண்டிருக்கிறது என்பதை ஆராய்வோமாயின், நாடு இன்று என்றுமில்லாதளவு வெளிநாடுகளில் தங்கியிருக்கிறது என்பது நன்கு புலனாகும். இலங்கைக்கு தேவையான அந்நிய செலாவணியை வெளிநாடுகளில் தொழில் புரியும் 10 இலட்சத்திற்கும் அதிகமான எமது தொழிலாளர்களே பெற்றுத் தருகின்றனர். கடந்த 30 வருடங்களாக நாம் வெளிநாடுகளிலிருந்து பெருந்தொகையான பணத்தினை கடனாகப் பெற்றுள்ளோம். சீனி, பால்வகைகள், கோதுமை மா போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை இறக்குமதி செய்கிறோம். எரிபொருள் அடங்கலாக அனைத்து போக்குவரத்து சாதனங்களையும் இறக்குமதி செய்கிறோம். இவ்வாறான இறக்குமதிகளை நிறுத்திவிட்டால் நாடு ஸ்தம்பித்தே விடும்".

இதுதான் பேராசிரியர் ஹெற்றிகே கூறியவற்றின் சாராம்சமாகும்.

எனவே, ஆளும் வர்க்கத்தினர் நாட்டின் இறைமை பற்றி வாய்கிழிய கத்துவதை விடுத்து அதனை எவ்வாறு பறிபோகவிடாமல் பாதுகாக்க வேண்டுமென்று சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்து நாட்டைக் கட்டியெழுப்ப உறுதிபூண்டு அழிவு யுத்தத்தை நிறுத்தி ஆக்கபூர்வமான அரசியல் தீர்வை நோக்கி நகர வேண்டும். யுத்தம் தொடருமானால் விரைவில் நாடு முற்றுமுழுதான வங்குறோத்து நிலையை அடையும் அபாயம் உண்டு.

"கிழக்கின் உதயம்"

கிழக்கு முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கே பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும். மாகாண சபை அடங்கலான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றெல்லாம் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. அபிவிருத்திப் பணிக்கு ரூ. 6.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலட்சக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் ஏதிலிகளாக ஏங்கிப் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சம்பூர், மூதூர் பிரதேசங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து ஒதுக்கப்பட்டு திக்கற்று நிற்கின்றனர்.

அண்மையில் கொழும்பிலிருந்து கிழக்கிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஊடகவியலாளர் குழுவினர் அங்கே, மக்கள் எதிர்கொள்ளும் தாங்கொணா துன்ப துயரங்கள், அவலங்கள் மற்றும் ஏக்கங்கள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகளின் சாராம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

(1) "ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரங்கள் தொலைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் முன்னெடுக்க உத்தேசிக்கும் பெரிய அபிவிருத்தி திட்டம் ஒரு கனவு மட்டுமே. அடுத்த நேர உணவு எப்போது எங்கிருந்து வரப்போகிறது என்பது தெரியவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் ஏறத்தாழ பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொழும்பில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தியதற்கு என்ன யோக்கியதை உண்டு என மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். தேர்தல்கள் பற்றி அவர்களிடம் பேசவே தேவையில்லை".

(2) "மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் படும் அவலங்கள் சொல்லும் தரமன்று. கிளிவெட்டி என்னும் இடத்தில் புல்பூண்டையோ, மரஞ்செடி கொடிகளையோ காண முடியவில்லை. ஏறத்தாழ 2000 மக்கள் வெயிலில் வெந்து கொண்டிருக்கின்றனர். மகிந்த ராஜபக்ஷ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த அவலத்தினைக் கண்ணுற்றால் அவர்களுக்கு கண்ணீர் வந்துவிடும். இவர்களெல்லாம் உயர் பாதுகாப்பு வலயமாகப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தல் என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட மக்களே இவ்வாறு அந்தரிக்க விடப்பட்டுள்ளனர்".

(3) "இங்குள்ள தாய்மார்கள் மற்றும் சிறார்களின் ஆழப்பதிந்திருக்கும் சோகங்கள் நீங்குமா எனும் ஏக்கங்களை அவர்களின் கண்கள் கூறுகின்றன. இத்தகைய காட்சிகளை நான் எதிர்பார்க்கவில்லை என்றே கூற வேண்டும். தமக்கு இப்போது தேவைப்படுவது நிம்மதியே ஒழிய அபிவிருத்தி அல்ல. துணைப்படைகள் உலாவிக் கொண்டிருக்கையில் தமக்கு நிம்மதி கிடையாது. அழுக்கு நிறைந்த கூடாரத்தில் அண்மையில் பிரசவித்த குழந்தையை ஒரு பெண் சோகமே உருவெடுத்தாற்போல் அணைத்துக் கொண்டிருக்கும் காட்சி உள்ளத்தினை உருக்குவதாயுள்ளது.... கிழக்கை எரித்து நாசமாக்கிவிட்டு வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்துவதால் அரசியல் இலாபம் காணலாம். ஆனால், கிழக்கில் அப்பாவி பொதுமக்களுக்கு வாழ்க்கை நரகம் தான். மீன் பிடிப்பதற்கும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள். பிள்ளைகளுக்கு உணவில்லையென மீனவர்கள் அல்லலுறுகின்றனர்".

(4) "சுற்றி முட்கம்பிகள் போட்டு அப்பாவி மக்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். சிறார்கள் வெளியில் ஓடியாட முடியாத நிலை. ஒருபுறம் கண்ணிவெடிகள் பற்றிய அச்சம், மறுபுறம் துணைப்படையில் பலவந்தமாக சேர்த்துவிடுவார்கள் எனும் ஏக்கம். கொடிய யுத்த அரசியல் காரணமாக சிறைவாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான இம் மக்களுக்கு விடுதலை என்பது மிக நீண்ட பயணம் தான். தமக்கு ஏன் இந்த நிலை, யார் இந்த இழிநிலைக்கு பொறுப்பு என்பதை எண்ணிப்பார்க்கவே முடியாத அவலமே இவர்களை ஆட்கொண்டு நிற்கிறது.

மறுபுறத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான முனைப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிகழ்ச்சித் திட்டத்துடன் சில அரசியல் அமைப்புகள் மற்றும் பௌத்த பிக்குகள் தற்போது சில முஸ்லிம் கிராமங்களில் சிங்கள குடும்பங்களை குடியமர்த்துவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.

"டெயிலி மிரர்", "சண்டே லீடர்" மற்றும் "மோணிங் லீடர்" `திவயின' போன்றவற்றைச் சேர்ந்த, ஊடகவியலாளர்களே மேற்படி விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

மேலும், எதிர்கால சிங்கள குடியேற்றங்களுக்கு அடிகோலும் வகையில், இரவோடிரவாக விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. போர்த்துக்கேய, டச் மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையைப் பிடித்த ஆண்டு தமது மதங்களைப் பரப்பியதோடு வளங்களை சூறையாடியது போல சிங்கள பேரினவாதம் இன்று சிங்கள ஏகாதிபத்தியம் போன்று வேடங்கொண்டு அதிரடி வேகத்தில் தமிழ்/முஸ்லிம் நில அபகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

சேர். ஜோன் ஹோல்ம்ஸ் விஜயம்

ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் சென்ற வாரம் இலங்கை வந்திருந்தபோது, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கும் சென்றிருந்தார். குறிப்பாக, அவரின் யாழ். விஜயத்தின் போது, பொது மக்கள் ஸ்தாபனங்களுக்கு கதவடைப்பும் வாய்ப்பூட்டும் போடப்பட்டிருந்தமை பகிரங்க இரகசியம். இவ்வாறாக அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புக் கூறும் கடப்பாடும் அப்பட்டமாக புறந்தள்ளப்பட்டது. மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையமொன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டும் எனும் கோரிக்கையும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விஜயத்தின் போது ஹோல்ம்ஸின் நகர்வுகளே கட்டுப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தனக்குப் பாதகமான விடயங்களை மூடிமறைக்கவே இலங்கை அரசு முயல்கிறது என்பதை யாரும் புரிந்துகொள்வது கடினமல்ல. உண்மைகள் கசப்பாயிருந்தாலும் அவற்றை ஆட்சியாளர் ஒப்புக்கொண்டு பிராயத்சித்தமோ பரிகாரமோ செய்ய முற்படுவார்களாயின் அது தான் அவர்கட்கு சர்வதேச மட்டங்களிலும் பெரிதும் மதிப்பளிக்குமென்பதால் தன் மீது கறைபடிந்து விடுமென்று அரசாங்கம் அஞ்ச வேண்டியதில்லை".

மனிதாபிமானப் பணியாளரைப் பொறுத்தவரை, உலகில் மிகப் பயங்கரமான இடங்களில் இலங்கையும் ஒன்று என ஹோல்ம்ஸ் ராய்ட்டர்ஸிடம் தனியாக கூறிவிட்டது இலங்கை அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்திவிட்டதென காரணம் கற்பித்தே அவர் மீது அரசதரப்பில் பிரதமர் இரத்ணசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், அதன்பின்பு விக்கிரமநாயக்க ஹொரணையில் ஆற்றிய உரையொன்றில் ஹோல்ம்ஸை மிகத் தரக்குறைவாகத் திட்டித் தீர்த்தார். உண்மையில் அவ்வாறான செயல்கள் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் மக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடியவை எனலாம். ஹோல்ம்ஸ் ராய்ட்டர்ஸிடம் கூறிய செய்தியை மூடிவைத்திருக்குமாறு சொல்லவில்லையே! ஏன் இந்த பித்தலாட்டம்?

வாழ்க்கைச் செலவு

வாழ்க்கைச் செலவு உயர்ந்து செல்கிறதென்றாலும் மக்கள் அதோடு வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர அண்மையில் தெரிவித்தது வாசகர்கட்கு ஞாபகமிருக்கும்.

இது தொடர்பாக பிரபல அரசியல், பொருளியல் ஆய்வாளர் தினேஷ் வீரக்கொடி என்பவர் கூறியுள்ள கருத்துகளைப் பார்ப்போம். "ஜயசுந்தர தனது வழமையான திமிர்க் குணத்தில் இலங்கையர்களாகிய நாம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்து வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். உலகில் எரிபொருள் விலை உயர்வே அதற்கு காரணம் என்கிறார். இந்த ஜயசுந்தர அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டவராகையால் எரிபொருள் விலை உயர்வுகள் பிரச்சினையே ஒழிய அரசாங்கம் சிறப்பாகச் செயற்படுகிறதென பூசி மெழுகுகிறார்.

சாதாரண உழைப்பாளிகளால் உயர்ந்த வண்ணமுள்ள வாழ்க்கைச் செலவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வருவதை ஜயசுந்தர எப்படித் தான் உணரப்போகிறார்? வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்குரிய திராணி அவருக்கு இருந்தால் ஜயசுந்தர அதனை வெளிப்படுத்த வேண்டிய காலம் நிச்சயமாக வந்துவிட்டது. நாட்டுப் பற்று போதையில் இருப்பவர்கள் கூட ஒரு எல்லைக்கப்பால் கஷ்டங்களை அனுபவிக்க விரும்பமாட்டார்கள்.

எனவே, அரசாங்கத்தின் அவலட் சண ஆட்சி நிலை காரணமாக கிழக்கின் வெற்றிக் களிப்பினால் வாழ்க்கைச் செலவு சுமையை புறந்தள்ளி விடமுடியாது" என்கிறார் வீரக்கொடி.தொடர்ந்து யுத்தம் நடத்தி ஆட்சியைத் தக்க வைக்கலாமென்று எண்ணுவது இமாலயத்தவறு. யுத்தத்தை உடனடியாக நிறுத்தி அரசியல் தீர்வை நோக்கி நகர்வதைத் தவிர வேறு தெரிவு அரசாங்கத்திற்கு இருக்க முடியாது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வேறு வழி எதுவுமே கிடையாது.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.