Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சுதந்திர தினம்: பணக்காரர்கள் பெருகும் நாட்டில், ஏழைகள் துயரப்படுவதன் 'ரகசியம்' என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சுதந்திர தினம்: பணக்காரர்கள் பெருகும் நாட்டில், ஏழைகள் துயரப்படுவதன் 'ரகசியம்' என்ன?

  • ஜி எஸ் ராம்மோகன்
  • ஆசிரியர், பிபிசி தெலுங்கு
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இந்தியா ஏழைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால பயணத்தைப் பற்றிய பெரும்பாலான பகுப்பாய்வுகள், கடந்த 30 ஆண்டுகளைச் சுற்றியே உள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியா எப்படி அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றமடைந்துள்ளது என்பதை அவை வலியுறுத்துகின்றன.

லேண்ட்லைன் இணைப்புக்காக ஒருவர் தனது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரிடம் எப்படி நடையாக நடக்கவேண்டும், எரிவாயு இணைப்பைப் பெற ஒருவர் எப்படி பல மாதங்கள் காத்திருக்க வேண்டும், தங்கள் சொந்தபந்தம் மற்றும் அன்புக்குரியவர்களிடம் பேசுவதற்காக பொது தொலைபேசி பூத்துகளுக்கு வெளியில் எப்படி மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி பலர் தங்கள் எழுத்துகளில் நினைவுபடுத்துகிறார்கள்.

1990கள் மற்றும் அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இவை பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் முந்தைய தலைமுறைகள் நிதர்சனமாகக் கண்ட உண்மைகள் இவை.

ஸ்கூட்டர் வாங்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலையிலிருந்து இன்று இருக்கும் நிலைக்கு நாம் எப்படி மாறியிருக்கிறோம் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியும் உண்மைகள். தொழில்நுட்ப நுகர்வு, விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துதல், உரிமம் வழங்கும் செயல்முறையில் சீர்திருத்தங்கள் ஆகியவை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தன. சேவைத் துறையிலும் அன்றாடப் பணிகளிலும் தனிமனித விருப்பு வெறுப்பு, பெருமளவு முடிவுக்கு வந்தது. இது நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் எளிதாக்கியது.

 

90களில் பொருளாதார சீர்திருத்தங்கள் முழு வீச்சில் தொடங்கப்பட்டன. அதன் பிறகு பல மாற்றங்கள் மிகவும் தெளிவாகத் தெரியத் தொடங்கின.

சீர்திருத்தங்களால் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்கள்

  • தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிப்பு
  • விநியோகச் சங்கிலிகளில் மேம்பாடு
  • லைசென்ஸ் நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம்
 

பொருளாதார சமத்துவமின்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருப்பினும், சேவைத் துறையில் மிகவும் வெளிப்படையாகக் காணப்படும் இந்த மாற்றங்களைத் தவிர வேறு சில அடிப்படைப் பிரச்னைகள் விவாதிக்கப்பட வேண்டியவை. முதலில் இரண்டு முக்கிய விஷயங்களைப் பார்ப்போம். வறுமை குறைந்துள்ளதையும், சமத்துவமின்மை அதிகரித்து வருவதையும் நாம் அலசுவோம்.

75 ஆண்டுகளில் ஏற்பட்ட இரண்டு முக்கிய மாற்றங்கள், வறுமையில் சரிவு மற்றும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு.

வறுமை குறைந்திருக்கிறதா?

1994 மற்றும் 2011ஆம் ஆண்டுக்கு இடையே இந்தியாவால் வறுமையை மிக வேகமாகக் குறைக்க முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் சதவீதம் 45%இல் இருந்து 21.9% ஆகக் குறைக்கப்பட்டது. எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், 13 கோடி பேர் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர். 2011க்குப் பிந்தைய காலத்திற்கான தரவு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

 

1px transparent line

 

1px transparent line

கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, ஆனால் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, 2019ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமையின் சதவீதம் 10.2% ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஊரக இந்தியா இதில் சிறந்து விளங்கியது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகான புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

வறுமையில் வாடும் மக்களின் சதவீதத்தை ஒற்றை இலக்கமாகக் குறைக்க 75 ஆண்டுகள் ஆனது என்பதையும் 30 ஆண்டுக்கால பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அதில் முக்கியப் பங்காற்றியுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர், அதாவது சுமார் 45% 30 ஆண்டுகளுக்கு முன்பு வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்தனர். இன்று அந்த எண்ணிக்கை 10% ஆக உள்ளது. இது ஓர் அற்புதமான மாற்றம்.

இந்த 30 ஆண்டுகளில் கரீபி ஹட்டாவ் (வறுமையை ஒழிப்போம்) என்ற முழக்கத்தைச் செயல்படுத்துவதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு

அதேநேரம், சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட இந்த 30 ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. கோடீஸ்வரர்களின் சொத்து விண்ணைத் தொட்டுள்ளது. தேசிய சொத்து மதிப்பில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் பங்கு குறைந்து வருகிறது. உலகின் பெரிய செல்வந்தர்களின் பட்டியலான ஃபோர்ப்ஸ் பட்டியலில் 90களில் இந்தியாவிலிருந்து யாரும் இல்லை. 2000ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒன்பதாக இருந்தது. 2017இல் இது 119 ஆக இருந்தது. 2022 இல் இந்த எண்ணிக்கை 166 ஆக உள்ளது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக மகாகோடீஸ்வரர்கள் (பில்லியனர்கள்) உள்ளனர். 2017ஆம் ஆண்டின் ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, தேசிய செல்வத்தில் 77%, முதல் 10 சதவீதத்தினரிடையே குவிந்துள்ளது. முதல் 1% பேர் தேசிய செல்வத்தில் 58 சதவீதத்தை வைத்துள்ளனர்.

 

இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை

வருமானத்தைப் பார்த்தால், 1990இல் தேசிய வருமானத்தில் 34.4 சதவீதத்தை முதல் 10% பேர் பெற்றனர். கீழ்மட்டத்தில் உள்ள 50% பேர் 20.3% வருமானத்தைப் பெற்றனர். 2018க்குள் இது முதல் 10% பேருக்கு 57.1% ஆகவும், கீழ்மட்டத்தில் உள்ள 50% பேருக்கு 13.1% ஆகவும் குறைந்தது.

அதன்பிறகு, கோவிட் நெருக்கடி காலங்களில் கூட, உயர்மட்டத்தினர் தங்கள் வருமானத்தை அதிவேகமாக அதிகரிக்க முடிந்தது என்று ஆக்ஸ்பாம் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

20 மாதங்களில் 23 லட்சம் கோடி

  • 2017 ஆம் ஆண்டில், முதல் 10% பேர், தேசிய செல்வத்தில் 77 சதவீதத்தை வைத்திருந்தனர். முதல் 1% பேரிடம் தேசிய செல்வத்தின் 58% இருந்தது.
  • 2021இல் முதல் 100 பில்லியனர்களின் சொத்து மதிப்பு 57.3 லட்சம் கோடி ரூபாய்.
  • கோவிட் தொற்றுநோய் காலகட்டத்தில் (2020 மார்ச் முதல் 2021 நவம்பர் வரை) இந்தியாவில் கோடீஸ்வரர்களின் சொத்து 23.14 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

(ஆதாரம்: ஆக்ஸ்பாம்)

இந்தியாவின் வெற்றி/வளர்ச்சிக் கதையைப் பார்க்கும்போது வறுமை குறைப்பு மற்றும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு ஆகிய இரண்டு மாறுபட்ட உண்மைகள் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன.

ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு

அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

அமைப்பு சார்ந்த துறையிலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊதிய இடைவெளி அதிகரித்துள்ளது

  • போதிய ஊதியம் இல்லாமை
  • ஊதிய இடைவெளி
  • பணி நிலைமைகள்
  • உள்ளடக்காத வளர்ச்சி

மேற்கூறிய எல்லா பிரச்னைகளும் இந்தியாவிற்குப் பெரும் சவால்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தனது அறிக்கை ஒன்றில் கூறுகிறது. ILO உடன், அசீம் பிரேம்ஜி அறக்கட்டளையும் தங்கள் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் இந்தப் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

சில நிறுவனங்களில் சிஇஓக்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையில், மாதம் 15000 ரூபாய் என்ற குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களும் உள்ளனர். சில தனியார் நிறுவனங்களில் ஊதிய இடைவெளி 1000%க்கும் அதிகமாக உள்ளது.

பெரிய நாடுகளை நாம் கருத்தில் கொண்டால், ஊதிய இடைவெளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது சமத்துவமின்மையின் வளர்ச்சியை மேலும் தூண்டுகிறது.

முதலாளித்துவம் அதிகரிக்கும்போது சிறப்புத் திறன் ஆழமடைவதை வரலாறு காட்டுகிறது. தொழில்நுட்பத்தின் நுகர்வு மற்றும் திறமையானவர்களுக்கும் திறமையற்றவர்களுக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரிக்கிறது. திறமையான ஊழியர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் பணம் ஊதிய இடைவெளியை அதிகரிக்கிறது. மேற்கூறிய காரணிகளை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டாலும், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஊதிய இடைவெளி அசாதாரணமான அளவில் அதிகமாக உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோல, செல்வப்பகிர்மானத்தின்(wealth distribution) அளவுகோலாகக் கருதப்படும் Gini Co-efficient ஐ எடுத்துக் கொண்டால், 2011ல் 35.7 ஆக இருந்தது. 2018இல், இது 47.9 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரிய சந்தைகளில் தீவிர சமத்துவமின்மைக்கு வரும்போது, முழு உலகின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

 

வருமான ஏற்றத்தாழ்வு

உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தின்படி (WID), பின்வரும் வரைபடம் 1995 முதல் 2021 வரை பொருளாதாரரீதியாக மேல்மட்டத்திலுள்ள 1% மற்றும் கீழ்மட்டத்திலுள்ள 50% மக்களுக்கு இடையே அதிகரித்து வரும் செல்வ இடைவெளியைக் காட்டுகிறது. சிவப்புக் கோடு மேல் 1% மற்றும் நீலக் கோடு கீழ் 50% ஐக் குறிக்கிறது.

 

பொருளாதார சமத்துவமின்மை

கடந்த 20 ஆண்டுகளில், மேல் 1% மற்றும் கீழ் 50% இடையே அதிகரித்து வரும் வருமான சமத்துவமின்மையை மேலே உள்ள வரைபடம் காட்டுகிறது. 1922 முதல் 2021 வரையிலான கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் வருமான சமத்துவமின்மையைப் பின்வரும் வரைபடம் சித்தரிக்கிறது. சிவப்புக் கோடு மேல் 1% மற்றும் நீலக் கோடு கீழே 50% ஐக் குறிக்கிறது.

 

வருமான ஏற்றத்தாழ்வு

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிகெட்டி, இந்தியாவில் வளர்ந்து வரும் சமத்துவமின்மை குறித்து ஆழமாக விவாதித்தார். உயர்மட்ட 10% மக்களின் வருமானத்தை ஒருவர் கருத்தில் கொள்ளும்போது, 2015இல் ரஷ்யா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவில் ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது. இந்தியாவில் செல்வ செறிவு அதிகமாக இருப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

 

உலகளவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு

வறுமையைப் போலவே சமத்துவமின்மையும் ஒரு சமூகக் கேடு.

இந்தியாவில் செல்வத்துடன் கூடவே ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்துள்ளன என்றும் அவற்றுக்கிடையே பிரிக்க முடியாத உறவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் உள்ள பல ஆய்வாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப புள்ளிவிவரங்களைத் தேர்ந்தெடுத்து, தங்கள் பார்வையை முன்னிலைப்படுத்தி, மற்ற சிக்கல்களைத் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள். மேலும் சிலர் சாமர்த்தியமாக, அந்தப் பிரச்னைகள் வெளியே தெரியவராமல் பார்த்துக் கொள்கின்றனர்.

அரசு விவாதித்து வருகிறது... ஆனால், இன்னும்...

நான்காவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் இருந்து 2020-21 பொருளாதார ஆய்வு வரை, ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதைப் பற்றி சாத்தியமான ஒவ்வொரு சூழ்நிலையிலும் இந்திய அரசு விவாதித்து வருகிறது.

  • ''தனி நபர்களுக்கு நன்மை செய்வது வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் அல்ல. வளர்ச்சிப் பயணம் சமத்துவத்தை நோக்கி இருக்க வேண்டும்''. 1969-74ல் நான்காவது ஐந்தாண்டு திட்டம் இவ்வாறு அறிவித்தது.
  • 2021-22 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை, "வறுமையே புரட்சி மற்றும் குற்றங்களின் பெற்றோர்" என்ற அரிஸ்டாட்டிலின் வரியுடன் தொடங்குகிறது. இந்த அறிக்கை ஏற்றத்தாழ்வு குறித்துப் பணியாற்றி வரும் உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநரான தாமஸ் பிகெட்டியின் பணியை விரிவாக விவாதித்தது.
  • இருப்பினும், அதிகரிக்கும் செல்வத்துடன் வறுமை குறைவதால், இந்தக் கட்டத்தில் செல்வத்தை அதிகரிப்பது சமத்துவமின்மையை விட முக்கியமானது என்ற வரிகளுடன் அறிக்கை முடிந்தது. இது இந்திய அரசு செல்லும் திசையைக் காட்டுகிறது.

தற்போது போதுமான செல்வம் இல்லாததால், அதை மறுபகிர்வு செய்வது என்பது வறுமையை மறுபகிர்வு செய்வதையே குறிக்கும், எனவே, செல்வத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல் ஐந்தாண்டுத் திட்டம் கூறியது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் டாப்-10 பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவின் பணக்காரர்கள் இடம்பெற்றுள்ள இந்த சூழலிலும் இந்திய அரசு இன்னும் அதே கொள்கையை பின்பற்றுகிறது.

1936-ம் ஆண்டு மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா முன்மொழிந்த தொழில் கொள்கை முதல் 2020-21 பொருளாதார ஆய்வறிக்கை வரையிலான இந்தியாவின் தொழில்துறை பயணத்தைப் பார்த்தால், இவை அனைத்தும் செல்வச் செறிவுக்கு மட்டுமே வழிவகுத்தது.

 

1px transparent line

 

1px transparent line

தீவிர வறுமையைக் குறைப்பது, கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதைத் தூண்டுவது, அவர்களை தொழில்துறை பொருட்களின் நுகர்வோராக மாற்றுவது ஆகியன பயணத்தின் மறுபக்கமாக இருந்தது.

90கள் வரை எல்லாமே அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், போட்டி இல்லாததால், கடந்த காலத்தில் இந்தியா பாதிக்கப்பட்டது என்று பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிக்கும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். சோஷியலிச மாதிரியால் இந்தியா ஒரு விளிம்பு சக்தியாகவே இருந்தது என்றும் அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

முக்கியமாக நேரு மற்றும் இந்திரா காந்தியின் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியைத் தடுத்ததாகவும் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் காரணமாக இந்தியா அந்தத் தளைகளிலிருந்து வெளியே வர முடிந்தது என்றும் இன்று நாம் காணும் செல்வம் அவர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்டதுதான் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் சீர்திருத்தங்களைத் தூண்டிய இன்ஜின்கள் என்பது உண்மைதான். இருப்பினும் நாம் அதைக் கடந்து சென்று இதைப் பார்க்க வேண்டும். சீர்திருத்தங்களைத் தொடங்க அவர்களைத் தூண்டிய ஒரு வரலாற்று பரிணாமம் இருந்தது.

அந்தக் காலத்து தொழிலதிபர்கள்தான் போட்டி வேண்டாம் என்று சொன்னார்கள்

இந்தியாவின் தொழிலதிபர்கள் தான் முதலில் போட்டியை எதிர்த்தார்கள் மற்றும் உள்நாட்டு தொழில்களைப் பாதுகாக்க அரசை வலியுறுத்தினார்கள். அரசின் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு தொழில்களிடமிருந்து போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தொழில்துறையினர் ஆரம்ப கட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

அது நேருவின் சுயகற்பனை அல்ல. நாம் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தபோது, ஜே.ஆர்.டி.டாடாவின் தலைமையில் 9 பேர் கொண்ட தொழிலதிபர்கள் குழு 1944-45ல் பம்பாய் திட்டத்தை வகுத்தது. அந்த நேரத்தில் தொழிலதிபர்களின் சிந்தனை எப்படியிருந்தது என்பதை இந்தத் திட்டம் சொல்கிறது.

 

இந்திய ரூபாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

வளங்கள், நுகர்வோர் பொருட்கள், தொலைபேசி, ஸ்கூட்டர்கள் அல்லது எதுவாக இருந்தாலும், எல்லாமே ஏதோ ஒருவரின் ஏகபோகமாக இருந்தது

போட்டித்தன்மை: வெளிநாட்டுப் போட்டியைத் தாங்கும் திறன் இந்தியாவுக்கு இல்லை என்றும், கட்டுப்பாடுகளும் முறைப்படுத்தல்களும் இருக்க வேண்டும் என்றும் அப்போது தொழில்துறையினர் வலியுறுத்தினர்.

அரசு முதலீடுகள்: வெளிநாட்டு முதலீடுகளை எதிர்த்ததோடு கூடவே உள்நாட்டுத் தொழில் வளர்ச்சிக்காக அரசு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று பாம்பே குழுமம் கூறியது.

இருப்பினும் உரிமம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான கொள்கைகள் ஏகபோகத்தை விளைவித்தன. ஏகபோக விசாரணைக் குழுவே அதைப்பற்றி குறிப்பிட்டது. ஏகபோகத்தின் காரணமாக திறன் விரிவாக்கம் இல்லை மற்றும் நுகர்வோர் பொருட்களுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. வளங்கள், நுகர்வோர் பொருட்கள், தொலைபேசி, ஸ்கூட்டர்கள் அல்லது எதுவாக இருந்தாலும், எல்லாமே ஏதோ ஒருவரின் ஏகபோகமாக இருந்தது.

முதலாளித்துவத்தை உருவாக்கிய அரசு

முதலாளித்துவத்தை அரசுப் பணம் மூலம் ஊக்குவிப்பது சுதந்திர இந்தியாவின் வரலாறு முழுவதும் இருந்து வருகிறது. 1955-56ல் நாடாளுமன்றத்தில் நேரு ஆற்றிய உரை இந்தத் தொழில் கொள்கையைச் சுற்றியே இருந்தது.

  • ரஷ்யா மற்றும் சீனாவைப் போலவே, இங்கும், எஃகு உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டது.
  • நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் அரசு மற்றும் தனியார் துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், இதில் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.
  • மூலதன விரிவாக்கத்திற்கு அரசு மிகவும் முக்கியமானது என்பதும் அரசுதான் முதலீட்டாளராக இருந்தது என்றும் முதலாளித்துவத்தை உருவாக்கியது என்றும் ஆரம்பத்திலேயே உணரப்பட்டது.
  • 'பெரிய தொழிற்சாலைகளை நிறுவும் செலவை தனியார் துறையால் தாங்க முடியாவிட்டால், அரசே பொறுப்பேற்கும்' என்று இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கூறப்பட்டது.
  • முதல் ஐந்தாண்டுத் திட்டம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில்துறை அந்த இடத்தைப் பிடித்தது.
  • முதல் ஐந்தாண்டுத் திட்டம், உணவு தானியங்களை இறக்குமதி செய்வதன் அவசியத்தை முறியடித்து, உபரி நிலைக்கு வளர்ச்சியடைவதே இலக்கு என்று அறிவித்தது. இத்தகைய உபரி, புதிய மூலதனத்தையும் முதலாளித்துவத்தையும் உருவாக்குகிறது என்று உலகளாவிய செயல்முறைகள் கூறுகின்றன. இந்தியாவிலும் இதுவே நடந்தது.
 

1px transparent line

 

1px transparent line

சமூக மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள்

1980களில் உணவு தானிய பற்றாக்குறையை இந்தியா முறியடித்தது. இன்று உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நிலையில் நாடு உள்ளது. இந்த மாற்றத்தில் பசுமைப் புரட்சி முக்கியப் பங்கு வகித்தது. அதன் மூலம், விவசாயத்தில் ஈடுபடும் சாதியினரிடையே ஒரு புதிய முதலாளித்துவ வர்க்கம் உருவானது. தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த கம்மாக்களும் ரெட்டிகளும் அத்தகைய ஓர் உதாரணம். ஹரியானா மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த ஜாட்கள் மற்றும் சீக்கியர்கள் (சீக்கியர்களிடையே கூட ஜாட்கள் அதிகமாக உள்ளனர்) வணிகர்களாக ஆனார்கள். எனவே, இந்த வளர்ச்சி சில சாதிகளுக்கு அதிக செல்வத்தை மறுபகிர்வு செய்தது. சமூக சமத்துவமின்மை இங்கே உள்ளது.

நகரத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாதிரியின் காரணமாக, பிகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தொழில்மயமாக்கலில் பின்தங்கியுள்ளன. அதே நேரத்தில், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் முன்னேறிச் சென்றுள்ளன.

சுதந்திரத்தின் போது பிகாரும் மேற்கு வங்கமும் பம்பாய்க்கு சமமாக தொழில்துறையில் விளங்கின. ஆனால், இன்று அவை பின்தங்கியுள்ளன. இது பொருளாதார மற்றும் சமூகத் துறைகளிலும் காணக்கூடிய மாற்றம்.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா போன்ற ஒரு பெருநகரம் இருந்தாலும், நிலச் சீர்திருத்தங்களைக் கடுமையாக அமல்படுத்தியது மற்றும் விவசாய உபரிகளை தனியார் மூலதனமாகக் குவிக்காதது போன்றவை தொழில்துறையில் பின்தங்கிய அதன் தற்போதைய நிலைக்குக் காரணம் என்று ஒரு வாதம் உள்ளது. அதே நேரத்தில், இடதுசாரி ஆட்சியின் போது வேலை கலாசாரம் பாதிக்கப்பட்டது என்ற வாதமும் உள்ளது. மறுபுறம், மேற்கு வங்கம் போன்ற ஓரிடத்தில், நல்ல பணி நிலைமைகள் மற்றும் சிறந்த ஊதியம் போன்ற உரிமைகள் பற்றிய உணர்வு மக்களிடையே ஊடுருவி இருப்பதால், முதலாளிகள் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வாதிடுபவர்களும் உள்ளனர். மேற்கு வங்கம் இன்று பலரின் ஆய்வுப் பொருளாக உள்ளது.

பற்றாக்குறையில் இருந்து உபரி

1960களில், நாடு உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்தது. அமெரிக்காவிலிருந்து உணவுதானிய இறக்குமதியைச் சார்ந்திருந்தது. உபரியான உணவு தானியங்களை என்ன செய்வது என்று தெரியாத நிலை இன்று உள்ளது. பசுமைப் புரட்சியும் அதற்குப் பிறகான செயல்முறைகளும் இதற்குக் காரணம்.

  • மூலதனம் விவசாய உபரியில் இருந்து வெளிவருகிறது என்பதை அறிந்திருந்தும், தேவையான சாதகமான சூழலை வழங்குவதற்கு ஆரம்பக் கட்டத்தில் அரசு தவறிவிட்டது.
  • விவசாயத்தில் பின்தங்கிய சாகுபடி முறைகள் காரணமாக அதிக மகசூல் இல்லாதது பெரிய தடையாக மாறியது.
  • இன்று பயிரிடப்படும் நிலம் குறைந்தாலும் விளைச்சல் அதிகரித்து வருகிறது. இதுவொரு முக்கியமான மாற்றம்.
  • பசுமைப் புரட்சி, லால் பகதூர் சாஸ்திரியால் தொடங்கப்பட்டு, இந்திரா காந்தியால் தொடரப்பட்டது. அதன் உத்வேகத்தால் ஏற்பட்ட விவசாயத் தொழில்நுட்ப மாற்றங்கள் இன்று நாம் கண்டுவரும் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.
  • அதே நேரத்தில், தொலைநோக்குப் பார்வை கொண்ட நேருவால் தொடங்கப்பட்ட அணைகள் கட்டுமானம் கை கொடுத்தன.
  • பொருளாதார அமைப்பு முறை, நிதிப் பற்றாக்குறையிலிருந்து உபரியாக மாற்றப்பட்டது.

குறிப்பாக பசுமைப் புரட்சியால் பயனடைந்த பகுதிகள் மற்றும் சாதிகள் மத்தியில் புதிய முதலாளிகள் களத்தில் நுழைந்தனர்.

ஆந்திராவில் மருந்துத் துறை, சினிமா, ஊடகம் எனப் பெரும்பாலான துறைகள் பசுமைப் புரட்சியால் பயனடைந்த பகுதிகளிலிருந்து வந்த மக்களுக்குச் சொந்தமானது என்பது தற்செயல் நிகழ்வல்ல.

இது ஆந்திராவில் மட்டுமல்லாமல் ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு அல்லது கங்கை சமவெளிகள் என்று எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. பசுமைப் புரட்சியால் பயனடைந்த எல்லா இடங்களிலும் இந்த நிகழ்வைக் காண முடிகிறது.

தொழில்துறை மூலதனம் மற்றும் தொழிலதிபர்கள் விவசாய உபரியிலிருந்து வெளிப்படுவது ஓர் உலகளாவிய நிகழ்வு. ஆயினும் மூலதனத்தின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தக்கூடிய விவசாய உபரி வளர்ச்சிக்காக இந்தியா நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதேநேரத்தில் வங்கிகளின் அதிகரித்த ஊடுருவல், வைப்புத்தொகை வடிவில் ஏராளமான பணத்தைக் கொண்டுவந்தது. மேலும் வரிகள் மூலமான வருவாயும் தொழிலதிபர்களுக்கு அரசு தாராளமாகக் கடன்களை வழங்க உதவியது. இந்தச் செயல்பாட்டின்போது பெரும் கடன்களைப் பெற்று, அவற்றைத் திருப்பிச் செலுத்தாத பழக்கம் தொடங்கியது.

 

பசுமை புரட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பசுமைப் புரட்சியால் பயனடைந்த பகுதிகள் மற்றும் சாதிகள் மத்தியில் புதிய முதலாளிகள் களத்தில் நுழைந்தனர்

சீனாவுடன் ஒப்பிடும் போது 12 ஆண்டுகள் தாமதம்

சீனாவில் சீர்திருத்தங்கள் 1978இல் தொடங்கப்பட்டாலும், இந்தியாவில் அதுபற்றிய சிந்தனையே அந்த நேரத்தில் தான் தொடங்கியது. இந்திரா காந்தி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது இதற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இருப்பினும், அவரது திடீர் மரணத்த்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி அதை முன்னெடுத்துச் செல்ல முயன்றார். ஆனால், அந்த தசாப்தத்தில் அரசியல் குழப்பம் காரணமாக அவருடைய முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஒருவகையில், இந்தியாவில் சீர்திருத்தங்கள் 12 ஆண்டுகள் தாமதமாயின என்று சொல்லலாம்.

1991இல் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட நெருக்கடியின் போது தங்கத்தை அடமானம் வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது சீர்திருத்தங்களைத் தவிர்க்க முடியாததாக மாற்றியது. இதையடுத்து, பி.வி. நரசிம்மராவ் சர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சீர்திருத்தங்களைத் தொடங்கினார். திறமையான பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் தலைமையில் அவை வேகமாகச் செயல்படுத்தப்பட்டன.

தொழில்மயமாக்கலின் மூன்று கட்டங்கள்

பி.வி. நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங்கின் பங்களிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் அதேநேரம் இந்தச் சீர்திருத்தங்களுக்குப் பின்னால் ஒரு வரலாற்று செயல்முறை இருந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

  • தொடக்கத்தில் தொழில் துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது
  • அடுத்த கட்டத்தில் இது அரசு-தனியார் கூட்டாளித்துவமாக மாறியது
  • கடைசி கட்டத்தில் அதாவது, தற்போதைய கட்டத்தில், தனியார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது

இந்திய தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பயணத்தில் இந்த மூன்று கட்டங்களையும் தெளிவாகக் காணலாம். இந்த மூன்று கட்டங்களும் காலவரிசைப்படி நடந்தன என்பதும் தனியார் முதலாளிகளை உருவாக்கிய பிறகு அரசு பல துறைகளில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்தது என்பதும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

ஒட்டுமொத்தமாக, சீர்திருத்தங்கள் கொண்டு வந்த முன்னேற்றத்தையும் இந்த முன்னேற்றம் உருவாக்கிய செல்வத்தையும் அங்கீகரிக்கும் அதே வேளையில், வறுமையைக் குறைத்ததற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். அதே சமயம், சமத்துவமின்மை மிக அதிகளவில், அபாயகரமான வேகத்தில் உயர்ந்து வருகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது. 'வறுமையே புரட்சிக்கும் குற்றங்களுக்கும் பெற்றோர்' என்று அரசு அறிக்கையே சுட்டிக்காட்டியுள்ளது. எனவே ஏற்றத்தாழ்வுகளின் எழுச்சியைத் தடுக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். https://www.bbc.com/tamil/india-62524776

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.