Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சச்சின், சனத், லாரா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் பங்கேற்கும் வீதி பாதுகாப்பு உலகத் தொடர் நாளை ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின், சனத், லாரா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் பங்கேற்கும் வீதி பாதுகாப்பு உலகத் தொடர் நாளை ஆரம்பம்  

By VISHNU

09 SEP, 2022 | 12:51 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

வீதி பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டள்ள வீதி பாதுகாப்பு உலகத் தொடர் (Road Safety World Series) 10 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Capture.JPG

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பி.சி.சி.ஐ) அனுமதியுடன் கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள இப்போட்டித் தொடரானது, முதல் அத்தியாயத்தை போலவே இம்முறையும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியாக நடத்தப்படவுள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா,  மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றின் லெஜெண்ட்ஸ் அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. 

சச்சின் டெண்டுல்கர், சனத் ஜயசூரிய, பிரையன் லாரா, சமிந்த வாஸ்,  ஜொண்டி ரோட்ஸ், லான்ஸ் க்ளூஸ்னர், பிரெட் லீ , கிரேய்க் மெக் மிலன், இயன் பெல், அப்துர் ரசாக் ஆகிய கிரிக்கெட் நாயகர்களாக திகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டித் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கான மவுசு இன்னமும் குறையவில்லை.

இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணிகளும் ஏனைய ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதிக்கொள்ளும். புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் இரண்டு அணிகளும்  ஒக்டோபர் முதலாம் திகதியன்று இடம்பெறும் இறுதிப் போட்டியில் விளையாடும். 

இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில்  இந்திய மற்றும் தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. திலகரட்ண டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜெண்ட்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஜொண்டி ரோட்ஸ் தலைமையிலான தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணியை சந்திக்கவுள்ளது. இப்போட்டி நாளை (11) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. https://www.virakesari.lk/article/135359

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனத்தின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து லெஜெண்ட்ஸை வீழ்த்தியது இலங்கை லெஜெண்ட்ஸ் 

By VISHNU

14 SEP, 2022 | 11:31 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

 

சனத் ஜயசூரியவின் அபார பந்துவீச்சு திறன் காரணமாக இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணியுடனான 5 ஆவது லீக்  போட்டியில் 7 விக்கெட்டுக்களால் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி இலகுவான வெற்றியை ஈட்டியது.

download.jpg

வீதி பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருபதுக்கு 20 கிரிக்கெட் வடிவிலான வீதி பாதுகாப்பு உலகத் தொடர் (Road Safety World Series) இரண்டாவது தடவையாகவும் இந்தியாவில் நடத்தப்பட்டடு வருகிறது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா,  மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றின் லெஜெண்ட்ஸ் அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. 

FB_IMG_1615268767751.jpg

இத்‍தொடரின் 5 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணிகள் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மோதிக்கொண்டன.  

இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான கான்பூரில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து அணி இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு காரணமாக 19 ஓவர்கள் நி‍றைவில் 78 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.  

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து சார்பாக அணித் தலைவர் இயன் பெல் 15 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் சிறந்த ஆற்ற‍லை வெளிப்படுத்திய சனத் ஜயசூரிய 4 ஓவர்கள் வீசியதுடன், 2 ஓட்டமற்ற ஓவர்கள், 3 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். இவரைத் தவிர நுவன் குலசேகர, சத்துரங்க டி சில்வா இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்று மெதுவாக துடுப்பெடுத்தாடி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களை ‍பெற்று 7 விக்கெட்டுக்ளால் வெற்றியீட்டினர். துடுப்பாட்டத்தில் தரங்க (23), டில்ஷான் முனவீர (24),  திலகரட்ண டில்ஷான் (15) ஓரளவு ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். சனத் ஜயசூரியவின் துடுப்பெடுத்தாட வராததனால், அவரின் துடுப்பாட்டத்தை ரசிக்க வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே  மிஞ்சியது. எனினும், அவர் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு போட்டியின் ஆட்ட நாயகனாக  தெரிவு செய்யப்பட்டமை  அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

முன்னதாக  அவுஸ்திரேலியாவுடன் விளையாடிய முதல் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன், தற்போது  4 புள்ளிகளை பெற்றுள்ள இலங்கை லெஜெண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.   இலங்கை  லெஜெண்ட்ஸ் தனது மூன்றாவது ‍ போட்டியில் எதிர்வரும் 17 ஆம் திகதியன்று தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணியை சந்திக்கவுள்ளது. https://www.virakesari.lk/article/135616

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீதி பாதுகாப்பு உலகத் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது மேற்கிந்தியத் தீவுகளா ? இலங்கையா ?

By VISHNU

30 SEP, 2022 | 01:46 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

 2 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  வீதி பாதுகாப்பு உலகத் தொடரின்  (Road Safety World Series T20) இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் திலகரட்ண டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜெண்ட்ஸ் அணி மற்றும் பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் லெஜெண்ட்ஸ் அணிகள் இன்றைய தினம் (30) மோதவுள்ளன.

WhatsApp-Image-2022-09-25-at-11.40.47-1.

 இந்தியாவின் ராய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது  இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

பொது மக்கள் மத்தியில் வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வரும்  வீதி பாதுகாப்பு உலகத் தொடரில்  (Road Safety World Series T20) நடப்புச் சம்பியனான இந்தியா,  உப சம்பியனான இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகியவற்றின் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட  லெ‍ஜெண்ட்ஸ் அணிகள் இருபதுக்கு 20 போட்டி வகையில் நடத்தப்பட்டு வரும் வீதி பாதுகாப்பு உலகத் தொடரில் பங்கேற்றன. 

Sl1.jpg

ஓய்வு பெற்ற கிரிக்கெட்  வீரர்களாக இருந்தாலும்,  கிரிக்கெட் என்பது அவர்களுக்கு இரத்தத்தில் ஊறிப்போன ஓர் விடயம் என்பதை அவர்கள் இன்றும் வெளிப்படுத்தும் திறமைகளிலிருந்து அறிய முடிகின்றது.  துடுப்பாட்ட ஜாம்பவான்களான 53  வயதான சனத் ஜயசூரியவின் 'அப்பர் கட் ஷொட்' , 49 வயதான சச்சின் டெண்டுல்கரின 'ஸ்ட்ரேட் டிரைவ்  ஷொட்' , 53  வயதான பிரையன் லாராவின்  'லேட் கட்' , வொட்சனின் அதிரடி துடுப்பாட்டம் ஆகியவற்றை  பார்க்க கிடைப்பது  கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரமாகும். 

அதேபோன்று சமிந்த வாஸ்,  பிரெட் லீ  , நுவன் குலசேகர, அஜன்த மெண்டிஸ், கைல் மில்ஸ் ஆகியோரின்  பந்துவீச்சு,  ஜொண்டி ரோட்ஸ், டில்ஷான் , மொஹமட் கைப் போன்றோரின் களத்தடுப்பு ஆகியவற்றை காணக்கிடைப்பதும் அலாதியானதாகும். அவர்கள் விளையாடும் போட்டிகளைக் காண கணிசமான அளவு ரசிகர்கள் நிரம்பி இருப்பது இன்றும்கூட  அவர்களுக்கு உள்ள வரவேற்பை எடுத்துக்காட்டுகிறது.

இந்நிலையில்,  இந்திய லெஜெண்ட்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய லெஜெண்ட்ஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது அரை  இறுதிப் போட்டியானது, முன்னதாக நேற்‍று முன்தினம் நடத்தி முடிக்க  திட்டமிடப்பட்டிருந்த போதிலும்,  மழை காரணமாக போட்டியின் முதல் இன்னிங்ஸின்போது தடைபட்டது. பின்னர் இப்போட்டி நேற்றைய தினம்  விட்ட இடத்திலிருந்து  (136/5 (17 X ஓவர்கள்) தொடரப்பட்டது.  இதனால் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில்,  இந்திய அணியை எதிர்த்தாடிய ஷேன் வொட்சன் தலைமையிலான அவுஸ்திரேலிய லெஜெண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் பென் டன்க் 46 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக்கொடுத்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில்  175 ஓட்டங்களை  பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்‍னேறியது. ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களை குவித்த நமன் ஓஜா ஆட்டநாயகனாக தெரிவானார்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள்  லெஜெண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது  அரை இறுதிப் போட்டியில் வெற்றியீட்டும் அணி இந்திய அணியுடன் நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

https://www.virakesari.lk/article/136722

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா ? பதிலடி கொடுத்து முடிசூடுமா இலங்கை ? 

By DIGITAL DESK 5

01 OCT, 2022 | 12:20 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

 

 

2 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  வீதி பாதுகாப்பு உலகத் தொடரின்  (Road Safety World Series T20) இறுதிப் போட்டியில்  சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் அணியை திலகரட்ண டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜெண்ட்ஸ் அணி இன்றைய தினம் எதிர்த்தாடவுள்ளன.

ராய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

நேற்றைய தினம் இரவு இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் லெஜெண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டு இறுதிப் போடிக்கு முன்னேறியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் இஷான் ஜயரட்ண 19 பந்துகளில் 31 ஓட்டங்களையும், சனத் ஜயசூரிய 19 பந்துகளில் 26 ஓட்டங்களையும் ஜீவன் மெண்டிஸ் 15 பந்துகளில் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில்  கிரிஷ்மர் சென்டோக்கி, தேவேந்திர பிஷூ இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் லெஜெண்ட்ஸ் அணி 20 ஓவர்களில்  7 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. 

துடுப்பாட்டத்தில் 3 ஆம் இலக்க வீரராக களமிறங்கி இலங்கை பந்துவீச்சாளர்களை அச்சுறுத்திய டி நரசிங் டியொநரைன் 63 ஓட்டங்களை விளாசினார்.

இவர் 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடித்தார். இவரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி வாய்ப்பு கையை விட்டுப்போனது. அணித்தலைவர் லார 11 பந்துகளில் 17 ஓட்டங்களையும், டுவைன் ஸ்மித் 23 ஓட்டங்களையும், ஜெரோம் டெய்லர் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நுவன் குலசேகர 2 விக்கெட்டுக்களையும், துடுப்பாட்டத்தில் கைக்கொடுத்த சனத் ஜயசூரிய பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுக்களை சாய்த்து அசத்தினார்.  போட்டியின் ஆட்ட நாயகனாக நுவன் குலசேகர தெரிவானார்.

பொது மக்கள் மத்தியில் வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வரும்  வீதி பாதுகாப்பு உலகத் தொடரில்  (Road Safety World Series T20) நடப்புச் சம்பியனான இந்தியா,  உப சம்பியனான இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகியவற்றின் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட  8 லெ‍ஜெண்ட்ஸ் அணிகள் பங்கேற்றன.

இப்போட்டித் தொடரின் சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்றைய தினம் நடத்துவதற்கு உள்ள நிலையில்,  இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணிக்கு 45 மணித்தியால கால இடைவெளி காணப்பட்டுள்ள போதிலும், இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக்கு  20 மணித்தியாலங்களை விடவும் குறைவான நேர காலமே உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

முதலாவது அரை இறுதிப்  போட்டி மழை காரணமாக குறித்த தினத்தில் (28) நடத்தி முடிக்காததன் காரணத்தால், மறுநாளில் (29) தொடரப்பட்டது.

அன்றைய தினம்  இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்கும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தாலும், அது இறுதித்தருவாயில் அப்போட்டி மறுநாளுக்கு  (30) மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மற்றும் இந்திய ஆகிய இரண்டு அணிகளுமே இதுவரை ஒரு போட்டியில்கூட தோல்வியடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும்.  

எது எவ்வாயினும்,  வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் முதல் அத்தியாயத்திலும், இந்திய மற்றும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிகளே இறுதிப் போட்டியில் விளையாடிருந்தன. அப்போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு சம்பியன் பட்டத்தை  தக்க வைக்கும்  வேட்கையில் இந்திய லெஜெண்ட்ஸ் அணி இன்றைய தினம் களமிறங்க காத்துள்ளது. 

மறுமுனையில், கடந்த முறை அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து சம்பியன் பட்டத்தை முடிசூடிக்கொள்ளும் முயற்சியில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியை காணக்கூடியதாக இருப்பதில் எதுவித ஐயமும் இல்லை.

https://www.virakesari.lk/article/136778

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய லெஜெண்ட்ஸ் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது ; டில்ஷான் மீண்டும் தொடர் நாயகன்

By VISHNU

02 OCT, 2022 | 10:47 AM
image

(என்.வீ.ஏ.)

 

இந்தியாவில் நடைபெற்ற ரோட் சேவ்டி உலகத் தொடர் இரண்டாவது அத்தியாயத்திலும் இந்திய லெஜெண்ட்ஸ் அணி சம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது.

இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக்கு எதிராக  ராய்பூர் விளையாட்டரங்கில்   சனிக்கிழமை (01) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 33 ஓட்டங்களால் வெற்றிபெற்று இந்திய லெஜெண்ட்ஸ் 2 ஆவது தொடர்ச்சியான தடவையாக சம்பியனானது.

அதேவேளை, முதலாவது அத்தியாயத்தில் போன்றே இந்த அத்தியாயத்திலும் தொடர்நாயகன் விருதை  இலங்கை லெஜெண்ட்ஸ் அணித் தலைவர் திலக்கரட்ன டில்ஷான்    தனதாக்கிக்கொண்டார்.

நாமன் ஓஜா அபாரமாக துடுப்பெடுத்தாடி அதிரடியாக பெற்ற சதம், வினய் குமார் மற்றும் அபிமன்யு மிதுன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்திய லெஜெண்ட்ஸ் சம்பியனாவதற்கு பெரிதும் உதவின.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்திய லெஜெண்ட்ஸ், நாமன் ஓஜாவின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்டெக்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது.

அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கர் (0), சுரேஷ் ரெய்னா (4) ஆகிய இருவரும் ஆடுகளம் நுழைந்த வேகத்தோடு ஆட்டமிழந்தனர்.

எனினும் நாமன் ஓஜாவும் வினய் குமாரும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 90 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய லெஜெண்ட்ஸ் அணிக்கு உற்சாகம் ஊட்டினர். வினய் குமார் 21 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து யுவ்ராஜ் சிங்குடன் 4ஆவது விக்கெட்டில் மேலும் 45 ஓட்டங்களை  வினய் குமார்  பகிர்ந்தார்.

யுவ்ராஜ் சிங் 19 ஓட்டங்களைப் பெற்றார். இர்பான் பத்தான் 11 ஓட்டங்களுடனும் அவரது சகோதரர் யூசுப் பத்தான் ஓட்டம் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.

நாமன் ஓஜா 71 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 108 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இலங்கை லெஜெண்ட்ஸ் பந்துவீச்சில் நுவன் குலசேகர 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இசுறு உதான 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜெண்ட்ஸ் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

கடந்த வருடத்தில் போன்றே இந்த வருடமும் லீக் சுற்றிலும் அரை இறுதிப் போட்டியிலும் திறமையாக விளையாடிய இலங்கை லெஜென்ட்ஸ் இறுதிப் போட்டியில் பிரகாசிக்கத் தவறியது.

டில்ஷான் முனவீர (8), சனத் ஜயசூரிய (5), திலக்கரட்ன டில்ஷான் (11), உப்புல் தரங்க (10), அசேல குணரட்ன (19), ஜீவன் மெண்டிஸ் (20) ஆகியயோர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழக்க, இலங்கை லெஜெண்ட்ஸ் 13ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான நிலையில் இருந்தது.

ஆனால், இஷான் ஜயரட்ன, மஹேல உடவத்த ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். எனினும் அவர்கள் இருவரும் 18ஆவது ஓவரில் மிதுனின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க இலங்கை லெஜெண்ட்ஸின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.

இஷான் ஜயரட்ன 22 பந்துகளை எதிர்கொண்டு தலா 4 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களையும் மஹேல உடவத்த 19 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சில் வினய் குமார் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அபிமன்யு மிதுன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ரோட் சேவ்டி கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 192 ஓட்டங்களைப் பெற்றதுடன் 5 விக்கெட்களைக் கைப்பற்றி, 5 பிடிகளையும் எடுத்த திலக்கரட்ன டில்ஷான் தொடர்நாயகனாகத் தெரிவானார்.

ஆட்டநாயகன் விருது நாமன் ஓஜாவுக்கு வழங்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/136820

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.