Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதகுல வரலாறு: 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மர்மக் கோபுரங்களும், புதிரான கோயில் கட்டுமானங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதகுல வரலாறு: 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மர்மக் கோபுரங்களும், புதிரான கோயில் கட்டுமானங்களும்

  • கிகி ஸ்ட்ரெய்ட்பெர்கர்
  • .
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இத்தாலி - மர்மமான கோபுரங்கள்

பட மூலாதாரம்,SUE WILLOUGHBY/ALAMY

ஒரு காலத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வெண்கலக் காலத்தைச் சேர்ந்த வானளாவிய கட்டிடங்கள் இந்த இத்தாலிய தீவில் இருந்தன. தற்போது, அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் சர்டினிய நுராஜிக் நாகரிகத்தினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன.

பெரிய கற்குவியலைத் தவிர வேறு எதையும் எதிர்பாராமல், நெடுஞ்சாலையைக் கடந்து கார் நிறுத்தும் இடத்திற்கு நான் சென்றேன். அங்கு கல்லறை வடிவில் நுராகே லோசா எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய ஒரு சிக்கலான கட்டிடம் தரையில் இருந்து எழுந்திருந்தது.

அந்தப் பச்சை நிலப்பரப்பு சிறு வெள்ளை மலர்களால் நிரம்பியிருந்தது. அங்கு சில கழுதைகள் சுற்றிக்கொண்டு இருந்தன. தொலைவில் இருந்து பார்க்கையில், அது மேற்பகுதி இடிந்து விழுந்த பெரிய மணல் கோட்டை போல தெரிந்தது. ஆனால் அதை நோக்கி நடந்தபோது, எனக்கு முன்னால் இருக்கும் நினைவுச் சின்னத்தின் பிரமாண்ட அளவை உணர ஆரம்பித்தேன்.

நுராகி என்பது இத்தாலிய தீவான சர்டினியா பகுதியில் அமைந்துள்ள பெரிய அளவிலான கூம்பு வடிவ கல் கோபுரங்களாகும். கி.மு 1600 மற்றும் கி.மு.1200க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட இந்த மர்மமான வெண்கலக் கால கோபுரங்கள், பல டன் எடை மற்றும் மேலோட்டமாக வேலை செய்யப்பட்ட கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக கவனமாக அடுக்கி கட்டப்பட்டுள்ளன.

 

மத்தியதரைக் கடலின் இரண்டாவது பெரிய தீவான சர்டினியாவில் 7,000க்கும் மேற்பட்ட நுராகிகள் இன்று காணப்படுகின்றன. சர்டினியாவின் தெற்கு காம்பிடானோ சமவெளியின் தட்டையான படுகையிலிருந்து கரடுமுரடான மலைகள் மற்றும் வடக்கு கல்லுரா பகுதியின் கிரானைட் பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்குகள் வரை, இந்தப் பெரிய நினைவுச்சின்னங்கள் பண்டைய வர்த்தக வழிகள் மற்றும் புனிதத் தளங்களில் அரணாக நிற்கின்றன. இத்தகைய தேன்கூடு வடிவ கட்டிடங்கள் உலகில் வேறு எங்கும் காணப்படாததால் அவை சர்டினியாவை அடையாளப்படுத்துகின்றன.

 

இத்தாலியில் உள்ள தீவில் தேன்கூடு வடிவில் மர்மமான கோபுரங்கள்

பட மூலாதாரம்,GABRIELE MALTINTI/ALAMY

எனினும், நுராஜிக் நாகரிகத்தின் வெண்கல கால சர்டினியர்கள் இந்தக் கம்பீரமான கோபுரங்களை எப்படி அல்லது ஏன் கட்டினார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதன் பயன்பாடு குறித்த ஆய்வுகள், அவை கோட்டை மற்றும் குடியிருப்பு முதல் உணவுக் கடைகள், வழிபாட்டுத் தலங்கள் அல்லது வானியல் ஆய்வுக்கூடம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன. பல நூற்றாண்டுகளாக நுராஜிக் நாகரிகத்தின் மையமாக கோபுரங்கள் இருந்ததால், பல நோக்கங்களுக்காக அவர்கள் இதைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளன.

1953ஆம் ஆண்டில், சர்டினியாவின் மிகவும் பிரபலமான தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜியோவானி லில்லி, இத்தாலியின் ஓர் இதழில், "எகிப்திற்கு பிரமிடுகள் போல, ரோமிற்கு கொலோசியம் போல சர்டினியாவிற்கு நுராகி என்று குறிப்பிட்டார்.

தீவின் மிக விரிவான நுராஜிக் குடியேற்றம் தொடர்பான அகழ்வாராய்ச்சிக்காக லில்லியு மிகவும் அறியப்பட்டவர். யுனஸ்கோ அடையாளம் பெற்ற சு நுராக்சி, சுற்றுப்புற தேன்கூடு அமைப்பால் சூழப்பட்ட ஒரு வலுவான மத்திய நுராக்சியைக் கொண்டுள்ளது. நுராக்சியைத் தவிர, நுராகே அர்ருபியு மற்றும் லோசா ஆகியவை சர்டினியாவின் மிக முக்கியமான இரண்டு நுராகிகள். இவை மூன்று சிறிய கோபுரங்களால் சூழப்பட்டு, திரைச் சுவரால் மூடப்பட்டிருக்கும். இன்று, இந்த அமைப்பு 13 மீ உயரத்தில் உள்ளது. ஆனால் முந்தைய காலங்களில் இந்த வளாகம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு இருந்திருக்கும் என்று வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஒரு குறுகிய இடைவெளி வழியாக லோசாவிற்குள் நுழைந்தபோது, பல்வேறு திசைகளில் செல்லும் பெரிய, வட்டமான பாறைகளால் வடிவமைக்கப்பட்ட இருண்ட பாதைகளைக் கண்டேன். என் தலைக்கு மேலே பைன் மரம் போல கூம்பு வடிவில் 3,300 ஆண்டுகள் பழமையான மேற்கூரை இருந்தது. ஆச்சரியம் அளிக்கும் வகையில், உட்புறச் சுவர்களில் மறைந்திருந்த ஒரு சுழல் படிக்கட்டு கட்டிடத்தின் மேற்கூரை வரை சென்றது. சில இடங்களில் பாறை தேய்ந்து போயிருந்தாலும், படிக்கட்டுகள் இன்னும் சரியாக செயல்படுவதால், எனக்கு முன்னால் அந்தப் படிகளை மிதித்த அனைவரையும் நினைத்துக்கொண்டு பல முறை மேலும் கீழும் நடந்தேன்.

 

இத்தாலியில் உள்ள தீவில் தேன்கூடு வடிவில் மர்மமான கோபுரங்கள்

பட மூலாதாரம்,ROBERT AND MONIKA/GETTY IMAGES

நுராஜிக் மக்கள் சாத்தியமான அச்சுறுத்தல்களைக் காண்பதற்கும், காடுகள் நிறைந்த நிலப்பரப்பைப் பார்ப்பதற்கான வாய்ப்பையும் மேற்பகுதி வழங்குகிறது. தொலைதூரத்தில் உள்ள மற்ற நுராகிகளையும் அவர்கள் பார்த்திருப்பார்கள். "இந்தக் கட்டமைப்புகள் அதிகாரம் மற்றும் செல்வத்தின் சின்னங்கள் மட்டுமல்ல, தீவு முழுமைக்கும் உள்ள தொடர்புச் சங்கிலி" என்கிறார் நுராகே லோசா தளத்தை நிர்வகித்துவரும் பாலியூர் அமைப்பைச் சேர்ந்த மானுவேலா லகோனி.

2002ஆம் ஆண்டு முதல், இந்தத் தளத்தை நிர்வகிக்கும் பணிகளில் லகோனி ஈடுபட்டுவருகிறார். இந்தத் தளம் மற்றும் அதனுள் இருக்கும் ரகசியங்கள் அவரை தற்போதும் கவர்ந்திழுக்கின்றன. "நான் இங்கு பணிபுரிவது குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன் இந்த நினைவுச்சின்னம் நுராஜிக் மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. இது இன்னும் எங்கள் தீவுக்கு முக்கியமானது. இது எங்களுடைய கலாசாரம், எங்களுடைய பாரம்பரியம்" என்று லகோனி கூறுகிறார் எகிப்திய பேரரசு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், சர்டினியாவில் இருந்த இந்தத் திறமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் யார்?

மனித நாகரிகத்தின் மிகவும் அடையாளம் காணக்கூடிய பொறியியல் சாதனைக்காக நுராஜிக் மக்கள் பெரிதும் அறியப்பட்டனர். தங்களைப் பற்றிய எந்த எழுத்துப்பூர்வ குறிப்புகளையும் அவர்கள் விட்டுச் செல்லாததால், அவர்களின் வாழ்க்கை முறை பற்றி நாம் அறிந்திருப்பது முழுமையடையாத புதிராக உள்ளது. அவர்களின் நினைவுச் சின்னங்கள், அவர்களது வீடுகளில் காணப்பட்ட கருவிகள் மற்றும் பாத்திரங்கள், அவர்களின் சிறிய மற்றும் சிக்கலான வெண்கல சிற்பங்கள் மூலமே அவர்களைப் பற்றி ஓரளவு அறிய முடிகிறது. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் நுராஜிக் தொடர்பான சில குறிப்புகள் இருந்தாலும், சர்டினியாவின் தலைநகர் காக்லியாரியில் உள்ள தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் அவர்கள் குறித்து விரிவாக அறியலாம்.

 

இத்தாலியில் உள்ள தீவில் தேன்கூடு வடிவில் மர்மமான கோபுரங்கள்

பட மூலாதாரம்,KIKI STREITBERGER

அங்கு, நீண்ட அங்கியை அணிந்திருந்த ஒரு பழங்கால சர்டினியன் தலைவரை நீங்கள் நேருக்கு நேர் சந்திக்கலாம் அவருடைய மார்பில் ஒரு சடங்கு குத்துவாள் கட்டப்பட்டுள்ளது. உயரமான மற்றும் அகலமான விளிம்புகள் கொண்ட தொப்பிகளுடன் நேராக ஆடை அணிந்த பெண் உருவங்கள் பாதிரியாராக இருந்ததாகக் கருதப்படுகிறது.

மற்றவர்கள் வீரர்கள் மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்பவர்களாக தெரிகிறார்கள். பல சிலைகள் உணவுப் பரிசுகளைக் கையில் கொண்டுள்ளன. ஒருவர் தோளில் ஒரு சிறிய ஆடு தொங்கிக்கொண்டு உள்ளது. இவை அனைத்தும் நுராஜிக் சமூகத்தின் அனைத்துவிதமான அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக காக்லியாரி தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நிக்கோலா பின்னா கூறுகிறார்.

 

"நுராஜிக் நாகரிகம் ராணுவ நாகரிகம். இங்கு பல்வேறு குழுவினர் ஒருவருக்கொருவர் எதிராக சண்டை செய்திருக்கலாம்," என்கிறார் பின்னா.

பட மூலாதாரம்,MASSIMO PIACENTINO/ALAMY

 

படக்குறிப்பு,

"நுராஜிக் நாகரிகம் ராணுவ நாகரிகம். இங்கு பல்வேறு குழுவினர் ஒருவருக்கொருவர் எதிராக சண்டை செய்திருக்கலாம்," என்கிறார் பின்னா.

பெரும்பாலான வெண்கல சிற்பங்கள் போர் வீரர்களைக் குறிக்கும் வகையில் இருப்பதால் நுராஜிக் மக்கள் ராணுவப் பிரிவுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட போர்த்திறம் மிகுந்த வீரர்களாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வாள், தடிகளை ஏந்தியுள்ள வீரர்கள் மற்றும் வில் வித்தையாளர்கள் கொம்புகள் கொண்ட தலைக்கவசத்தையும் உயர் உலோக கழுத்துப் பட்டைகளையும் அணிந்துள்ளனர். பலர் கைகளில் வட்டவடிவிலான தடுப்புக் கவசங்கள் உள்ளன. சிலரிடம் எதிரிகளைப் பயமுறுத்துவதற்கான முகக்கவசம் மற்றும் முழுமையான பாதுகாப்பு கவசங்கள் உள்ளன.

"நுராஜிக் நாகரிகம் ராணுவ நாகரிகம். இங்கு பல்வேறு குழுவினர் ஒருவருக்கொருவர் எதிராக சண்டை செய்திருக்கலாம்" என்கிறார் பின்னா.

இந்த வெண்கல சிற்பங்கள் நுராகி, கல்லறைகள், கோவில்கள் என சர்டினியா முழுமைக்கும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், நுராஜிக் மக்களால் தீவு முழுமைக்கும் கட்டப்பட்டுள்ள 70க்கும் மேற்பட்ட புனிதக் கிணறுகளுக்கு அருகில் இவை அதிகமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை கடவுளுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்று மூத்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

லில்லியு தனது பல வெளியீடுகளில் குறிப்பிட்டுள்ளபடி, நுராஜிக் மக்களின் இறைவழிபாடு நீரை வணங்கும் மரபுடன் தொடர்புடையதாக உள்ளது.

தீவின் மத்திய மேற்குப் பகுதியான பாலிலாட்டினோ கிராமத்தில் அமைந்துள்ள சாண்டா கிறிஸ்டினா சிறந்த பாதுகாக்கப்பட்ட கிணறாகும். "இந்தக் கிணற்றின் அளவும் அது உருவாக்கப்பட்ட விதத்தில் உள்ள முழுமையும் இதன் மிக முக்கியமான பண்புகள்" என்கிறார் கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் தளத்தின் பராமரிப்பில் ஈடுபட்டு வரும் சாண்ட்ரா பாஸ்சியு.

 

இத்தாலியில் உள்ள தீவில் தேன்கூடு வடிவில் மர்மமான கோபுரங்கள்

பட மூலாதாரம்,ANDREA RAFFIN/ALAMY

ஆலிவ் மரங்களால் சூழப்பட்ட சற்று மேடான பகுதியில், பாறைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த முக்கோண படிக்கட்டுகள் நேற்று உருவாக்கப்பட்டவை போல இருந்தன. அவை பூமிக்கடியில் இருந்த புனிதக் கிணற்றுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. இந்தக் கிணறுகள் சூரியன் பூமத்திய ரேகையை கடக்கும் நேரத்தோடு பொருந்திப் போகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் என இரண்டு முறை இந்த நிகழ்வு நடக்கும் நிலையில், அந்த நேரத்தில் அடியில் உள்ள நீரை சூரியன் ஒளிரச் செய்கிறது.

புனித கிணற்றுடன் சூரியன் சரியாக இணைந்திருக்கும் போது, மிகவும் வலுவான ஆற்றல், நேர்மறை எண்ணங்கள் உருவாவதாக பாஸ்சியு கூறுகிறார். இதைவிட மேலாக, ஒவ்வொரு பதினெட்டரை ஆண்டுகளுக்கும் ஒருமுறை சந்திரன் வானத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும்போது, அதன் ஒளி கிணற்றின் மேலுள்ள குவிமாடத்தின் மையத்தில் அமைந்திருக்கும் சிறிய துளை வழியாக கீழே உள்ள நீரில் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வு அடுத்தமுறை 2024ஆம் ஆண்டு ஜூனில் நடைபெறும்.

சமீபத்திய ஆண்டுகளில் தொல்லியல் ஆராய்ச்சிகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த நாகரிகம் குறித்து கூடுதல் விவரங்கள் தெரியவருகின்றன. இந்தாண்டின் தொடக்கத்தில் இத்தாலியின் முன்னணி செய்தி முகமையான அன்சா, இரண்டு மணற்கல் சிலைகள் சர்டினியாவின் மிகவும் பிரபலமான இடுகாட்டுத்தளமான மான்டே பிரமாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது.

மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தச் சிலைகள் 2 முதல் 2.5 மீட்டர் உயரம் கொண்டுள்ளன. வில்வீரர்கள், போர்வீரர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களைக் கொண்ட மகத்தான ராணுவத்தின் இந்த இரு புதிய உறுப்பினர்கள் நுராஜிக் இடுகாட்டினை காத்ததாகக் கருதப்படுகிறது. இவற்றின் தோற்றம் மற்றும் இவை உருவாக்கப்பட்டதன் காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. ஆனால், 1974ஆம் ஆண்டு இரு விவசாயிகள் இந்த இடுகாட்டினை எதிர்பாராதவிதமாக கண்டுபிடித்தது முதல் இவர்கள் சர்டினியாவின் நுராஜிக் வரலாற்றின் கடந்தகால முகங்களாக மாறினர்.

 

இத்தாலியில் உள்ள தீவில் தேன்கூடு வடிவில் மர்மமான கோபுரங்கள்-

பட மூலாதாரம்,KIKI STREITBERGER

இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகளை உற்சாகமடைய வைத்துள்ளது. இது சர்டினியாவின் பண்டைய தோற்றம் குறித்து மேலும் அறிவதற்கான தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளுக்கு கூடுதல் நிதி கிடைக்கச் செய்யும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

சர்டினியர்களைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கான நுராகிகளும், அவர்களின் நாகரிகம் குறித்த பிற தடயங்களும் கடந்த காலத்தை நினைவூட்டுவது மட்டுமல்ல. அவை பல வழிகளில் சர்டினியன் ஆன்மாவின் உடல் வெளிப்பாடு.

"நான் இத்தாலியர் அல்ல, நான் சர்டினியர்" என்கிறார் லகோனி. சர்டினியா இத்தாலி அல்ல என்ற உணர்வை அந்தத் தீவில் பலர் வெளிப்படுத்தினர். நுராஜிக் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடைய மரபுகள் திருவிழாக் கொண்டாட்டங்களில் அணியும் கொம்பு முகமூடிகளிலும், வெண்கல நுராஜிக் சிற்பத்தின் கைகளில் காணப்படும் மூன்று புல்லாங்குழலின் ஒலியிலும் இன்றும் வாழ்கின்றன.

சூரியன் உச்சத்தில் இருந்தபோது, நுராகே லோசாவில் இருந்து கிளம்பி புல்வெளி தரை மீது நடக்க ஆரம்பித்தபோது என் காலுக்கு அடியில் தன்னை அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்க ஒரு முழு கிராமம் காத்திருப்பதை உணர முடிந்தது.

https://www.bbc.com/tamil/global-63347122

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.