Jump to content

ஈழத்துக் கீழைக்கரை | தொடர் ஆய்வுக்கட்டுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

ஈழத்துக் கீழைக்கரை – ஓர் வரைவிலக்கணம்

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

 

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர்.

ஒரு வரலாறு என்பது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதை சென்ற தொடரில் பார்த்த நாம், அதன் வழியே கீழைக்கரை வரலாற்றை எழுதத் தொடங்குவோம் என்று கூறியவாறு, போன இதழில் விடைபெற்றிருந்தோம். ஆனால் வரலாறுக்குள் நுழைவதற்கு முன்னர், நம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட “கீழைக்கரை” என்ற சொல்லை மிகச்சரியாக வரையறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தத் தொடரில் கீழைக்கரையை வரலாற்றுப் பார்வையில் ஆராயப்போகும் நாம், அப்போது தான் ஆய்வுப்பரப்புக்குள் திருத்தமாக நின்றபடி நம் கருத்துக்களை முன்வைக்க இயலும்.

East Coast General Definition EP (1)

 

கீழை என்றால் கிழக்குத்திசை. சாதாரணமாக உங்களிடம் கேட்டால் கூட, ஈழத்துக் கீழைக்கரை என்பது கிழக்கிலங்கையைக் குறிக்கிறது என்றே சொல்வீர்கள். அப்படிப் பார்த்தால், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களும் இணைந்த  “கிழக்கு மாகாணம்” எனும் இலங்கையின் நிர்வாகப்பிரிவு தான் கீழைக்கரை (உரு 2.1). ஆனால் கீழைக்கரை என்ற வரையறையை உருவாக்குவது வெறும் புவியியல் அல்லது நிர்வாகப் பகுப்பு மட்டும் தானா?

இல்லை. குறித்த நிலப்பகுதியில் வாழும் இனக்குழுக்களின் வழக்காறுகள், அம்மண்ணின் உயிர்ப்பல்வகைமை, அவை இரண்டும் சேர்ந்து உருவாக்கும் அப்பகுதியின் பண்பாடு, அத்தனையும் இணைந்து தான் ஒரு விசேடமான ஆள்புலத்தைத் தீர்மானிக்கின்றன. இப்படிப் பார்க்கும் போது, கிழக்கிலங்கை தொடர்பாக  ஆய்வுலகில் இரண்டு வரையறைகள்  இருக்கின்றன. இந்த இரு வரையறைகளும் கிழக்கு மாகாணத்தை முற்றாக உள்ளடக்குகின்றனவா, அல்லது அவை ஒன்றோடொன்று இடைவெட்டி, அல்லது மேற்பொருந்தி, வேறேதும் நிலப்பரப்பைக் காட்டுகின்றனவா என்று நாம் பார்க்கவேண்டும். அந்த இரு வரையறைகளும் கிழக்கு மாகாணத்தைக் காட்டவில்லை என்றால், அவற்றை சற்று செம்மைப்படுத்தி மூன்றாவது திருத்தமான வரையறையொன்றை நாம் நமக்காக உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

சுவையான செய்தி என்னவென்றால், மேற்படி ஆய்வுலக வரையறைகளில், முதலாவது வரையறையை முன்வைத்தது உள்ளூர் ஆய்வாளர் தரப்பு. இரண்டாவதை முன்வைத்தது மேலைத்தேய ஆய்வாளர் தரப்பு.  உள்ளூர் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட முதலாவது வரையறையானது, கிழக்கு மாகாணத்தின் முதன்மை நகரங்களில் ஒன்றான மட்டக்களப்பை மையமாகக் கொண்டு, ஒரு பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட நிலப்பரப்பை இனங்காண்கிறது. இந்த இனங்காணல் சரி என மெய்ப்பிப்பதற்கு, அந்த நிலப்பரப்பு முழுவதும் பரவலாக வழக்கில் இருக்கும் மூன்று சான்றுகள் கிடைக்கின்றன.

  1. மட்டக்களப்புப் பேச்சுத்தமிழ் வட்டார வழக்கு (ஒண்ணா, மறுகா, கிறுகி முதலிய சொற்கள்),
  2. நாட்டார் வழிபாடுகள் (கண்ணகி வழிபாடு, குளிர்த்திச்சடங்கு, அம்மாளுக்குச் செய்தல், குமார தெய்வ வழிபாடு, வில்லைகட்டிச் சடங்கு முதலியன),
  3. நாட்டார் கலையாடல்கள் (கொம்புமுறி, போர்த்தேங்காய், கவிகள், வசந்தனாடல், மழைப்பாடல் முதலியன) ஆகிய மூன்றும் அவை (கந்தையா 1964: 1-22).

இந்த வரையறையின் படி பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட நிலப்பரப்பானது, 1961 வரை வடக்கே வெருகலாற்றிலிருந்து தெற்கே குமுக்கனாறு வரை விளங்கிய பழைய மட்டக்களப்பு மாவட்டம் ஆகும். அது இன்றைய அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்தது.  காலனித்துவ காலம் வரை மட்டக்களப்பின் தலைநகராக விளங்கிய சம்மாந்துறை, அதன் ஆட்சியாளரின் பிரதான வழிபாட்டு தெய்வமாக இருந்த சித்திரவேலாயுதசுவாமி (முருகன்) கோவில் கொண்ட தலமான திருக்கோவில், மட்டக்களப்பின் முதன்மையான ஆளுமையாக முன்வைக்கப்படும் விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவு என்பன இன்றைய அம்பாறை மாவட்டத்திலேயே அடங்குகின்றன (உரு 2.2).

Batticaloa Based Definition of Unique Cultural

இந்தத் தனித்துவமான நிலப்பரப்பைக் குறிக்க,  “மட்டக்களப்புத் தமிழகம்” (கந்தையா, 1964), “மட்டக்களப்புத் தேசம்” (கந்தையா 1983:15-28; கோபால் 2011, 2016), “மட்டக்களப்பு மாநிலம்” (கணபதிப்பிள்ளை 1980:26; செல்வராசகோபால் & கனகசபாபதி 2005), “மட்டக்களப்புப் பிரதேசம்” (மௌனகுரு 1998:73-125) முதலிய இன்னோரன்ன சொல்லாடல்கள் தமிழ்ப் புலமைத்தளத்தில் புழங்கி வந்திருக்கின்றன. இதே பொருள்கோடலில் அரசியல் ஆவணங்களிலும் பொது ஊடகங்களிலும் “மட்டு. அம்பாறை” என்ற சொற்சுருக்கம் பயன்படலாயிற்று. ஆக, இந்த மட்டக்களப்பு மைய வரையறையின் படி, கீழைக்கரை என்பது, முழுக் கிழக்கு மாகாணத்தையும் குறிக்காது, இன்றைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை மாத்திரம் குறிக்கும்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் கிழக்கு மாகாணத்தில் விரிவான சமூகவியல் மானுடவியல் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படலாயின. இந்த ஆய்வுகளை மேற்கொண்ட ஐரோப்பிய ஆய்வாளர்களின் ஆய்வுகளின் வழியே உருவான இரண்டாவது வரையறை தான் “இலங்கையின் கிழக்குக்கரை”  (ஈ`ச்|ட் கோ`ச்|ட் ஒஃப் |ச்ரீ லங்கா) (East Coast of Sri Lanka).  இந்தக் கலைச்சொல்லை முன்வைத்தவர்களில் இருவர் முக்கியமானவர்கள். |டெனி`ச் |பி. மெ_க்|கில்வ்றே (Dennis B. McGilvray, 1982, 2008) மற்றும்  மார்க் பி. வி|டேகர் (Mark P. Whitaker, 1999).

நாம், முன்பே பார்த்தது போல, காலனிய காலத்திலிருந்தே “இலங்கையின் கிழக்குக்கரை” கிழக்கு மாகாணத்தை சாதாரணமாகக் குறிப்பிடப் பயன்பட்டு வந்த சொல் தான். ஆனால் அதை சமூகவியல் ரீதியில் வரையறுக்கப்பட்ட கலைச்சொல்லாக முன்வைக்கவேண்டிய தேவை ஐரோப்பிய அறிஞர்களுக்கு ஏற்பட்டிருந்தது. கிழக்கு மாகாணத்துக்குள்ளே மட்டக்களப்பு மைய பண்பாட்டு அடையாளமொன்றை உள்ளூர்த் தமிழ் அறிஞர்கள் ஏற்கனவே முன்வைப்பதை மேலைத்தேய அறிஞர்கள் அறிந்திருந்தனரெனினும், தமிழ் அறிஞர்கள் ஊன்றிக் கவனிக்கத் தவறிய, அல்லது மேலோட்டமாக மட்டும் தொட்டுச் சென்ற முக்கியமான இரு பண்பாட்டு அம்சங்களை “இலங்கையின் கிழக்குக் கரை”யில் அவர்கள் அடையாளம் கண்டார்கள்.  

முதலாவது, பொதுத் தமிழ்ப் பண்பாட்டுக்கோளத்துக்குப் புறநடையாக பிராமணரோ வேளாளரோ அல்லாத சமூகங்கள் (அதாவது, முக்குவர், சீர்பாதர், திமிலர் சமூகங்கள்) இங்கு சாதிய அதிகார அடுக்கில் மேலே நீடித்து வந்திருக்கின்றன. இரண்டாவது, இங்கு பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர் மற்றும் சோனகர் (1) ஆகிய இரு இனக்குழுமங்களிடம் மட்டும் இன்று அவதானிக்க முடிகின்ற தாய்வழிக் குல அடையாளங்களான “குடிகள்” .(Whitaker 1999:14-17; McGilvray 2008:40-44; Gaasbeek 2010:87). குடிகள் என்பவை, குலங்களின் அல்லது சாதிகளின் உட்பிரிவுகள். இவற்றையே தமிழகத்தில் “கோத்திரங்கள்” என்று அழைக்கிறார்கள். ஆனால் “கிழக்குக்கரை”யின் தனித்துவம், கேரளத்து மருமக்கட்தாயம் போல, இவை தாய்வழியில் தான் கடத்தப்படும் என்பது. சைவக் கோவில்களின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாயுள்ள வண்ணக்கர், கணக்குப்பிள்ளை போன்ற பதவிகளும், பள்ளிவாசல்களின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாயுள்ள மரைக்காயர் பதவிகளும் குடிமுறைமையை அடிப்படையாக வைத்தே இன்றும் தெரிவு செய்யப்படுகின்றன.

இந்த இரு சமூகவியல் கூறுகளைக் கடைப்பிடிக்கும் தமிழ் மற்றும் சோனக இனக்குழுக்கள் வதிகின்ற  புவியியல் பிராந்தியத்தையே மெ_க்|கில்வ்றே “இலங்கையின் கிழக்குக்கரை” என்று குறிப்பாக வரையறுக்கின்றார் (McGilvray 2008:44). அந்தக் கிழக்குக்கரை வடக்கே மூதூர் கொட்டியாற்றுக்குடாவிலிருந்து தெற்கே பொத்துவில் அறுகங்குடா வரை எல்லைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தக் குடிமரபைக் கடைப்பிடிக்காத சிங்களவர்களையும், கிறிஸ்தவர்ளையும் தவிர்க்கவேண்டி நேர்ந்ததால்(2),  நீளவாக்கில் கிழக்குக்கரை 150 கிமீ இற்கும் மேலாக நீண்டிருந்தாலும், அகலவாக்கில் அதிகபட்சம் 40 கிமீ உம் (மட்டுநகர் – ஈரலைக்குளம்), குறைந்தபட்சம் 8 கிமீ உம் (இலங்கைத்துறை முகத்துவாரம் – சேறுநுவரை) மாத்திரமே சுருங்கியுள்ள  ஒரு மிக ஒடுங்கிய நிலப்பட்டி(3)  தான் (உரு. 2.3.). 

East Coast Based

கரையோரமாக 150 கிமீ தாண்டி மதம், இனம், மொழி என்பவற்றில் பண்பாட்டு ஒற்றுமையைக் காண்பிக்கக்கூடிய ஒரு சமூகக்கொத்தணி, அகலப்பரப்பில் 5 தொடக்கம் 40 கிமீ நகர்ந்ததும் மதம், இனம், மொழி என்பவற்றில் முற்றிலும் மாறுபட்ட, சிங்கள பௌத்த சமூகமாக மாறிவிடுகின்றது. ஐரோப்பிய சமூகவியல் அறிஞர்கள் முன்வைத்த “கிழக்குக்கரை” வரையறையானது, இவ்வாறு உள்ளூர் அறிஞர்களின் “மட்டக்களப்பு மைய” வரையறையின் அடுத்தகட்ட முன்னகர்வாக அமைந்து விடுகின்றது.

இந்த இரு வரையறைகளும் தமக்கேயுரிய நிறை குறைகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக மட்டக்களப்பு மைய உள்ளூர்த் தரப்பின் வரையறையிலுள்ள பிரதானமான நிறை என்பது, அவ்வரையறை வரலாற்றுணர்வு, நாட்டாரியல், புவியியல், அரசியல், மொழியியல், பண்பாட்டியல்  உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கோட்பாடுகளைப் பிரயோகித்து கட்டமைக்கப்பட்டுள்ளமையாகும்.  எனவே தான், ஐரோப்பிய நவீன ஆய்வுக்கருவிகளையும் எடுகோள்களையும் பயன்படுத்தாமலேயே அந்நிலத்தில் நீடித்த பண்பாட்டு ஒருமைப்பாட்டை அவ்வரையறையின் முன்மொழிவாளர்களால் மிக எளிதாக அடையாளம் காண இயன்றிருக்கிறது.

இந்த வரையறையிலுள்ள முதன்மையான குறை, அது இன்றைக்கு ஒரு தேய்வழக்காகிவிட்டது என்பதே. ஏனெனில் இன்று மட்டக்களப்பு என்ற சொல் பிரதானமாக இரண்டு அர்த்தங்களிலேயே பொருள் கொள்ளப்படுகிறது. முதலாவது, காலனித்துவ காலத்தில் கிழக்கிலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றாக வளர்ச்சி கண்ட மட்டுநகர் அமைந்திருக்கும் புளியந்தீவு. இரண்டாவது புளியந்தீவைத் தலைநகராகக் கொண்டு வடக்கே வெருகலாற்றிலிருந்து தெற்கே பெரியகல்லாறு வரை நிர்வாக ரீதியில் மட்டக்களப்பு மாவட்டமாக வரையறை செய்யப்படும் நிலப்பரப்பு.

இதைத் தவிர இன்று மட்டக்களப்பு எனும் சொல், வேறு சுகாதார, கல்வி, நீதி, நிர்வாக, தேர்தல் நிலப்பிரிவுகளைக் குறிப்பிடுவதற்காக பலவாறு பொருள் சிதைந்து அர்த்தம் சுருங்கி விட்டது. எனவே புதிதாகத் தோன்றிவிட்ட அம்பாரை மாவட்டம், திருக்கோணமலை மாவட்டத்தின் தென் அந்தம் என்பன அடங்கிவிடும் இந்த வரையறைக்கு மட்டக்களப்பையும் தாண்டி, வேறொரு சொல்லை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனலாம். 

இதேபோல், ஐரோப்பிய அறிஞர்களின் கிழக்குக்கரை என்ற வரையறையின் முக்கியமான நிறை, அது சமூகவியலின் படி பரிபூரணமான வரையறையாக இருப்பதாகும். திருக்கோணமலை மாவட்டத்தின் கொட்டியாறுப் பற்று தவிர்ந்த ஏனைய பகுதிகளையும், அம்பாரை மாவட்டத்தில் சிங்களவர் வசிக்கும் ஏனைய பிரதேசங்களையும் இந்த வரையறை நாசுக்காகத் தவிர்த்துவிடுகின்றது. ஏனெனில், தங்கள் “கிழக்குக்கரை”யில் மேலைத்தேய அறிஞர்கள் கண்டுகொண்ட தனித்துவமான இரு பண்பாட்டுக்கூறுகளை திருக்கோணமலையின் கொட்டியாற்றுப்பற்று தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தெளிவாக அவதானிக்கமுடியவில்லை. அதேபோல், தமிழரிடமும் சோனகரிடமும் மாத்திரம் அவர்கள் அவதானிக்க முடிந்த குடிமரபு “கிழக்குக் கரை”யைச் சூழ்ந்து வசித்த சிங்களவரிடம் நிலவவில்லை.

ஆனால், ஐரோப்பியரின் கிழக்குக்கரை வரையறையிலுள்ள குறை, அது முழுக்க முழுக்க நடைமுறை சமூகவியல் பார்வையை மட்டுமே முன்வைக்கிறது என்பது தான். அவ்வரையறை இறந்த காலத்தைக் கருத்திலெடுக்காமல் முற்றுமுழுதாக சமகாலத் தன்மையோடே இருக்கிறது.

பழைய குடியிருப்புகளாக இருந்து இன்று கைவிடப்பட்டு காடான பகுதிகள் பற்றியோ, காடாக இருந்து இன்று புதிய குடியிருப்புகளாகிவிட்ட நிலங்களைப் பற்றியோ “கிழக்குக்கரை” வரையறை அக்கறைப்படவில்லை. தமிழரையும் சோனகரையும் மாத்திரம் முன்னிறுத்தும் இவ்வரையறை கிழக்குக்கரையின் முக்கியமான இனக்குழுக்களில் ஒருவராகத் திகழ்ந்து, இன்று மறைந்துவிட்ட அல்லது அருகிப்போய் விட்ட “கரையோர வேடர்கள்” அல்லது “தமிழ் வேடர்கள்” பற்றியும் மௌனம் சாதிக்கிறது. “கிழக்குக்கரை”யில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பண்பாட்டுப் பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் கிறித்தவர்களிடம் குடிமரபு இல்லாததால், அவர்களை “நீங்கள் இந்தப் பண்பாட்டு அலகின் அங்கமல்ல” என்று நிராகரிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் அறுகங்குடாவுக்குத் தெற்கே உள்ள பாணகைப்பற்றின் (இன்றைய பெயர் பாணமை, பாணமைப்பற்று) சிங்களவர்களைத் தவிர்ப்பதன் மூலம், அவர்களுக்கும் கிழக்குக்கரைத் தமிழருக்குமுள்ள கொண்டும் கொடுத்துமான உறவை முற்றாக மறுதலித்து விடுகிறது. 

“கிழக்குக்கரை” என்ற வரையறையிலிருந்து சமூகவியல் ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்ட பாணகைப்பற்று அல்லது அம்பாரை மாவட்டத்தின் தென் அந்தம், மேலைத்தேய ஆய்வாளர்கள் தயங்குமளவுக்கு அப்படி ஒன்றும் மூடிய பண்பாட்டு அலகாக நீடிக்கவில்லை. பாணகையின் பத்தினி வழிபாடு, சிங்களப் பொதுப் பத்தினி வழிபாட்டை விட, கீழைக்கரையின் தமிழ்க் கண்ணகை வழிபாட்டுடனேயே நெருக்கமாக இருப்பது ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது (Obeyesekere 1987:591). கண்டி அரசு காலத்தில் அடிக்கடி கண்டிக்கு எதிராக கிளர்ச்சி செய்த பாணகைப்பற்றுச் சிங்களவர், அடைக்கலம் தேடி மட்டக்களப்பில் தஞ்சம் புகுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்றுக் குறிப்புகளிலும் தெரிகிறது.

பாணகைப் பகுதியில் இன்று முக்கியமான வழிபாட்டுத் தலமாக வளர்ச்சி கண்டிருக்கும் உகந்தமலை முருகன் கோவில், குமுக்கனாற்றின் கரையில் இன்று கைவிடப்பட்டுள்ள பூமுனைக் கிராமம், என்பன அப்பிராந்தியத்துக்கும் கீழைக்கரைக்குமான உறவை இன்றும் நியாயப்படுத்தப் போதுமானவை. இனமுரண்பாட்டுக் காலத்துக்கு முன்னர், ஏன், சில ஆண்டுகளுக்கு முன்வரை கூட, பாணகைச் சிங்களவருடன் கீழைக்கரைத் தமிழர் திருமண உறவை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள்.(4)

ஆக, ஆய்வுலகிலுள்ள இரு வரையறைகளுமே இன்றைய “கிழக்கு மாகாணம்” எனும் நிர்வாகப்பிரிவை முற்றுமுழுதாக அடக்கவில்லை என்பது நமக்குத் தெரியவருகிறது. ஆனால், அதிலுள்ள பண்பாட்டுத் தனித்துவமான நிலப்பரப்பை முழுமையாக இனங்காண முடியாமல், அவ்விரு வரையறுகளுமே சற்று தடுமாறுகின்றன என்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. எனவே,  நாம் இந்த இரு வரையறைகளிலுமுள்ள குறைகளை பூரணப்படுத்தி மீள் வரைவிலக்கணப்படுத்தித் தான் புதிய “கீழைக்கரை”யை அடையாளம் காணமுடியும்.

Kandiah Batticaloa உரு 2.4 “ஈழத்துக் கீழைக்கரை” வரையறையை நெருங்கிவரும் வீ.சி. கந்தையாவின் மட்டக்களப்புத் தமிழகம் வரைபடம்.

அதன்படி, “கொட்டியாற்றுக்குடாவுக்கும் குமுக்கனாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில், பிரதானமாக தமிழ் பேசும் சமூகங்களாலானதும்,  தாய்வழிக் குடிமரபைப் பின்பற்றும் சைவ மற்றும் இ`ச்லாமிய பண்பாட்டு நுண்பிராந்தியங்களால் ஆனதும், கிறித்தவர்களதும் வேடர்களதும் பண்பாட்டுப் பங்களிப்பால் செழுமையூட்டப்பட்டதும்,   அவ்வப்போதான சிங்களவர்களது ஊடாட்டத்தைக் கொண்டதுமான ஊர்களின் கொத்தணிகள் அடங்கும் நிலப்பரப்பு  “ஈழத்துக் கீழைக்கரை” ஆகும்.”

உண்மையில், மேற்படி மட்டக்களப்பு மைய மற்றும் கிழக்குக்கரை சார்ந்த இரு வரையறைகளையும் முன்வைத்த அறிஞர்களில் பலர், தங்கள் வரைவிலக்கணத்தின் போதாமையை உணர்ந்து கொண்டு, ஓரிரு இடங்களில் நம் புதிய வரையறையை நெருங்கித் தான் வந்திருக்கிறார்கள்.

உதாரணமாக, பண்டிதர் வீ.சீ.கந்தையா (1964:ii-iii), தன் “மட்டக்களப்புத் தமிழகம்” வரைபடத்தில் கொட்டியாற்றுக்குடா முதல் குமுக்கனாறு வரையான நிலப்பரப்பையே நிழற்றிக் காட்டியுள்ளார் (உரு 2.4). மெ_க்|கில்வ்றேயும் கா`ச்|பீக்கும் தங்கள் கிழக்குக்கரையை  “மூதூர் முதல் பாணகை வரை” என்று எல்லை வகுத்திருக்கிறார்கள் (Gaasbeek 2010:87). வெல்லவூர்க் கோபால் (2016:15) ஒருபடி மேலே சென்று, தான் வரையறுக்கும் மட்டக்களப்புத் தேசமானது, வடக்கே திருக்கோணேச்சரம் முதல் தெற்கே கதிர்காமம் வரையான பகுதி என்று வரைவிலக்கணப்படுத்த முயல்கிறார். உள்ளூர் அறிஞர்களைப் பொறுத்தவரை, சில இடங்களில் இனம் சார்ந்த பக்கச்சார்பு தென்படினும் மரபான பார்வைக்கு வெளியே சென்றும் பண்பாட்டு ஒருமைப்பாட்டை அடையாளப்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் நாம் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

அடிக்குறிப்புகள்

(1). அரச ஆவணங்களில் இலங்கைச்சோனகர் (ச்ரீ லங்கன் மூர்ஸ், Sri Lankan Moors) என்று குறிப்பிடப்படும் தேசிய இனத்தவர்கள், தமது மத அடையாளத்தை முன்னிலைப்படுத்த்தி இ`ச்லாமியர் என்று தம்மை அடையாளப்படுத்துவதையே இன்று அதிகம் விரும்புகின்றனர். இன்று அவர்களிடையே அருகிவருகின்ற பாரம்பரிய நடைமுறைகள் – வழக்காறுகள் அன்றாடத்தில் இ`ச்லாமிய சமய வரையறைக்கும் வெளியே செல்வதால், “இலங்கைச் சோனகர்” என்ற உத்தியோகபூர்வ இன அடையாளத்தையே இத்தொடர் முழுவதும் இக்கட்டுரையாசிரியன் பயன்படுத்த விரும்புகிறான்.

(2). எவ்வாறாயினும் இந்த மேலைத்தேய அறிஞர்களே பல இடங்களில் சுட்டிக்காட்டி இருப்பது போல, சீர்திருத்த இச்லாமியக் கருத்துக்களின் பரவலாக்கம் காரணமாக கீழைக்கரையின் சோனகர்களும், ஐரோப்பிய மையச் சிந்தனை கொண்ட நவீன உலகமயமாக்கல் கொள்கைகளால் கவரப்பட்டுள்ள கீழைக்கரையின் தமிழர்களும் கூட  இந்தப் பண்பாட்டுப்புலத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கின்றனர் என்பதே இக்கட்டுரையாளனின் இன்றைய அவதானிப்பு.

(3). மெ_க்|கில்வ்றே தன் நூலில் இன்றுள்ள தமிழ் – சோனகக் கிராமங்களை கருத்தில் கொண்டு மிகமிக ஒடுங்கிய நிலப்பரப்பையே கிழக்குக்கரை என்று காண்பிக்கிறார் (2008:27). இங்கு இணைக்கப்பட்டுள்ள உரு 2.3ஆனது,  அவ்வரைபடத்தை சற்று இற்றைப்படுத்தி (update) வரையப்பட்ட  உரு ஆகும்.

(4). அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள, இக்கட்டுரையாளனின் பிறந்தகமான தம்பிலுவில், பாணகை ஊடாக, கீழைக்கரை தொடர்பான சமூகவியல் ஆய்வுகளுக்கான கதவைத் திறந்துவிட்ட கிராமமாகும்.  பாணகைக் கிராமத்தை ஆராயவந்த நூர் யால்மன் எனும் துருக்கிய சமூகவியலாளர், அவ்வூரில் மணமுடித்திருந்த தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவர் மூலம் கேட்டறிந்து கீழைக்கரைத் தமிழரின் சமூகவியல் பற்றி சில குறிப்புகளை எழுதியிருந்தார் (Yalman 1967:310-328).  கிழக்கிலங்கை ஆய்வுலகில் முக்கியமான பதிவுகளைச் செய்த லெஸ்டர் ஹெய்ட், டெனிஸ் மெக்கில்வ்றே ஆகிய இரு ஆய்வாளர்களும் தம்பிலுவில் கிராமம் பற்றிய நூர் யால்மனின் குறிப்பின் மூலமே கீழைக்கரைச் சமூகம் பற்றிய ஆய்வுப்பாதையில் காலடி எடுத்து வைத்தார்கள். ஒரே குடும்பத்திலேயே தமிழரும் சிங்களவரும் காணப்படுவதால், “ஐம்பதுக்கு ஐம்பது” என்று சக கீழைக்கரைத் தமிழரால் நகையாடப்படும் பாணகை கிராமத்தவர்கள் நெடுநாளாகவே அம்பாரை மாவட்டத் தமிழ்க் கிராமங்களுடன் மணவுறவு வைத்திருந்தார்கள். 2000களின் ஆரம்பத்திலும் கூட,  தன் கிராமத்தைச் சேர்ந்த பலர் பாணகைப்பற்றைச் சேர்ந்த பாணகை, இலகுகலை (பழைய பெயர்: இலட்சக்கல்) கிராமங்களுக்கு மணமுடித்துச் சென்றதை கட்டுரையாளன் இவ்விடத்தில் நினைவுகூர விரும்புகிறான்.  

உசாத்துணைகள்

  1. கணபதிப்பிள்ளை, கே. (1980). மட்டக்களப்பு மாநிலத்தின் பழைய புவியியல் வரலாறும், இடப்பெயர்களும். மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் (பதிப்பாசிரியர்: வீ.சீ.கந்தையா). மட்டக்களப்பு: இந்து வாலிபர் முன்னணி.
  2. கந்தையா, வீ.சீ. (1964). மட்டக்களப்புத் தமிழகம். குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்: ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம்.
  3. ____________. (1983). மட்டக்களப்புச் சைவக் கோவில்கள், மட்டக்களப்பு : கூடல்.
  4. கோபால், வெ. (2011). மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம், மட்டக்களப்பு: மனுவேதா.
  5. ____________. (2016). மட்டக்களப்புத் தேசம்: வரலாறும் வழக்காறும். கொழும்பு: சேமமடு பதிப்பகம்.
  6. செல்வராசகோபால், க.தா., கனகசபாபதி, எ`ச்.பி. (2005) மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள், சென்னை: மித்ர பதிப்பகம்.
  7. மௌனகுரு. சி. (1998). மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள். மட்டக்களப்பு: விபுலம்.
  8. Gaasbeek, T. (2010). Bridging Troubled Waters? : Everyday Inter-ethnic Interaction in a content of Violent Conflict in Kottiyarpattu, Trincomalee, Sri Lanka (Doctoral Thesis, Wageningen University & Research, Netherlands). Retrieved from https://www.researchgate.net
  9. Hiatt, L.R. (1973). “The Pattini Cult of Ceylon : a Tamil Perspective”. Social Compass. 20 (2): 231–249.
  10. McGilvray, D.B. (Ed.) (1982). “Caste Ideology and Caste Interaction”, Vol. 9, Cambridge Papers in Social Anthropology, Vol. 9, Cambridge (England): Cambridge University Press.
  11. _________________(2008). Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka, Durham NC (USA): Duke University Press.
  12. Obeyesekere, G. (1987). The Cult of the Goddess Pattini. Delhi: Motilal Banarsidass.
  13. Whitaker, M.P. (1999). Amiable Incoherence :  Manipulating Histories and Modernities in a Batticaloa Tamil Hindu Temple, Amsterdam (Netherlands): VU University Press.
  14. Yalman, N. (1967). Under the Bo Tree: Studies in Caste, Kinship and Marriage in the Interior of Ceylon. Berkeley CA (USA): University of California Press.

 

தொடரும்.

 

https://ezhunaonline.com/ஈழத்துக்-கீழைக்கரை-ஒரு

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் I

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

 

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர்.

கடந்த தொடரில், கீழைக்கரை என்ற நமது ஆய்வுப்பரப்பை சமூக, பொருளாதார, வரலாற்றுக் காரணிகளின் அடிப்படையில் வரையறுத்துக்கொண்டோம். இந்துமாக்கடலின் ஓரமாக, மூதூர் கொட்டியாற்றுக்குடாவில் தொடங்கி சுமார் 250 கி.மீ கிழக்கே நகரும் கீழைக்கரை, கூமுனையில் குமுக்கனாற்றில் முடிவடைகின்றது. அதன் வடக்கில் இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையும், தெற்கே குமுக்கனாறும் எல்லைகளாக நீடிக்கின்றன. மொனராகல் மாவட்டத்தின் `சியம்|பலாண்டுவைக்கு அருகே சிங்களத்தில் |கோவிந்தஃகெல (Gōvinda hela) என்றும் ஆங்கிலத்தில் வெ`ச்|ட்மினி`ச்|டர் அ|பே (Westminister Abbey) என்றும் அழைக்கப்படும் கழிகாமமலை[1] கீழைக்கரைக்கு குறிப்பான தென்மேற்குப் புற எல்லையாக சொல்லப்படுவதுண்டு.  ஐரோப்பியக் குறிப்புகளில் விந்தனை மலைத்தொடர்களும் விந்தனைப் பெருங்காடும்[2] கிழக்கிலங்கையின் மேற்கு எல்லையாகச் சொல்லப்படுகின்றது. இவற்றைத் தவிர, கிழக்கு மாகாணத்துக்கும் ஊவா மாகாணத்துக்கும் எல்லையாக மேற்கே இன்று பாய்ந்துகொண்டிருப்பது மாதுரு ஓயா எனும் நட்டூர் ஆறு. 

கீழைக்கரையில் அடங்கும் நிர்வாகப் பிரிவுகளின் எல்லைகளும் முக்கியமான இடங்களும்

எனவே, இன்றைய நிர்வாகப் பிரிவுகளின் படி, திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர், சேறுவில், வெருகல் பிரதேசங்களும், அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தகண்டி, தவிர்ந்த ஏனைய நிர்வாகப் பிரதேசங்களும் முழு மட்டக்களப்பு மாவட்டமும் கீழைக்கரையில் அடங்கும் (உரு 01). இந்த எல்லைகளின் அடிப்படையில், சுமார் 9000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட கீழைக்கரையானது, முழு இலங்கையின் பரப்பில் சுமார் 15%ஐ அடக்குகிறது. தமிழர், சோனகர், சிங்களவர் ஆகிய மூவினத்தார் இங்கு பரந்து வாழ்ந்துவருகின்றனர்.

கீழைக்கரையை, ஆய்வியல் நோக்கில் சமூக பண்பாட்டு அரசியல் காரணங்களைச் சுட்டிக்காட்டி இவ்வாறு வரையறுத்துக்கொள்ளும் போதும், கீழைக்கரைக்கு இயற்கையாகவே தனித்துவமான புவியியல் தரைத்தோற்ற அமைப்பு அமைந்திருக்கிறது என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். அந்த அமைப்பே இங்கு குடியேறிய பல்வேறு பண்பாடுகளையும் பல்வேறு மொழிகளையும் மதங்களையும் கொண்ட மக்களை ஒன்றுதிரட்டி, ஒற்றைப்பண்பாடாக மாற்றி இருக்கிறது.

இந்த புவியியல் சிறப்பம்சங்களில் இரண்டு மிகவும் முனைப்பானவை.  முதலாவது, மூதூரிலிருந்து பொத்துவிலூடாக கூமுனை வரை கணிசமான எண்ணிக்கையில் களப்புகளைக்  கொண்ட அதன் சமதரை அமைப்பு. இந்தச் சமதரை நிலத்தில் மிகச்சில இடங்களிலேயே மலைக்குன்றுகள் அமைந்திருக்கின்றன. இரண்டாவது சிறப்பு, இந்நிலப்பரப்பு முழுவதும் கடலுக்கு சமாந்தரமாக நிலத்தில் நீளவாக்கில் அமைந்துள்ள நீர்நிலைகள். இவை கடற்கரையிலிருந்து சுமார் 15 கிமீ நீளத்துக்குள்,  தொடர்ச்சியான, அல்லது சதுப்பு நிலங்களால் துண்டிக்கப்படுகின்ற, களப்புகளாக அல்லது நீர்ப்பரப்புகளாகக் காணப்படுகின்றன (Ranawella 2011:22-23). இந்த நீர்ப்பரப்புகளுக்கு ஊவா அல்லது விந்தனை மலைத்தொடர்களில் ஊற்றெடுக்கும் சிற்றாறுகள் மூலம் தொடர்ச்சியான நன்னீர் வரத்து கிடைக்கிறது.

கீழைக்கரையெங்கணும் தொன்மையான குளங்களும் கால்வாய்களும் பெருமளவில் காணப்படுகின்றன. எனவே வாழ்தகைமைக்கான குறைந்தபட்சத் தேவைகளை நிறைவேற்றியபடி, இங்கு ஒரு காலத்தில் அடர்ந்து செறிந்து வாழ்ந்த பெரும் குடித்தொகை ஒன்று காணப்பட்டிருக்க வேண்டும் (Brohier 1935:41). அது உண்மை என்பது போல், சிற்றாறுகளின் கரைகள், களப்புகளின் அயற்பகுதிகள் அவற்றினருகே அங்குமிங்கும் துண்டிக்கப்பட்டுள்ள மலைக்குன்றுச் சாரல்களிலேயே கீழைக்கரையின் தொல்நாகரிகம் உருவாகி வளர்ந்த பழங்குடியிருப்புகளை இன்று கண்டறியமுடிகின்றது.

சிற்றாறு, சதுப்புநிலங்களக் கொண்ட இந்த நீர்ப்பரப்புகளின் வலையானது, இந்நிலத்தின் போக்குவரத்திலும் பாதுகாப்பிலும் வியாபார அரசியல் பண்பாட்டு வளர்ச்சியிலும் இன்றியமையாத இடத்தை வகித்திருக்கின்றது. ஒல்லாந்தர் காலத்திலும் இந்த நீர்த்தொடர்பு வலை அறுபடாது நீடித்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

ஒரு டச்சுக் குறிப்பின் படி, அக்கரைப்பற்றுக்குத் தெற்கே ஒருவர் மரங்களையும் ஏனைய வணிகப்பொருட்களையும் ஒரு வள்ளத்தில் ஏற்றி (பெரிய களப்பு) ஆற்றில் நுழையும் போது, அவரால் (மாங்கேணிக் களப்பு) கொக்குவில் பளை வரை அவற்றை சுலபமாக எடுத்துச் செல்ல முடியும் (Ferguson 1998:173). அங்கிருந்து (பனிச்சங்கேணிக் களப்பு) சதுப்பு நிலங்களூடே படகை விடுத்தால், மகாவலி கங்கையின் கிளையாறான வெருகல் கங்கையை அடையலாம். அங்கிருந்து வடக்கே திருக்கோணமலைத் துறைமுகம் ஊடாக தமிழகத்துக்கோ, திரும்பி மகாவலி கங்கை வழியே நுழைந்து இலங்கை உள்நாட்டுக்குள்ளோ செல்வது மிக எளிமையான ஒரு வணிகப்பாதை.

இங்கு சொல்லப்படும் பெரிய களப்பின் தென் அந்தம் திருக்கோவில் மற்றும் வெருகல் கங்கைக்கு இடையிலான இன்றைய தரைவழி இடைத்தூரம் 150 கிமீ ஆகும். இந்த நீளத்தில் வணிகத்துக்கும் போக்குவரத்துக்கும் உதவிய ஒரு துண்டிக்கப்படாத நீர்ப்பாதை இருந்தது என்பது மிக முக்கியமான வரலாற்றுக் குறிப்புத் தான். கீழைக்கரையின் வரலாற்றைக் கட்டமைத்ததே இந்தப்பாதை தான் என்றால் அது மிகையாகாது. அம்பாறைப் பகுதியின் பழைய பெயராகச் சொல்லப்படும் “திகாமடுல்ல” அல்லது தீர்க்கவாபிமண்டலம் (பாலிமொழி: நீளமான வாவி மண்டலம்) என்ற பெயருக்கும், இந்த நீண்ட நீர்வழிப் பாதைக்கும் தொடர்பிருக்கிறதா என்பதை மேலும் ஆராயவேண்டும். இந்த நீர்வழிப்பாதையே தீர்க்கவாபி மண்டலத்தின் பெயருக்கான உண்மைக் காரணம் எனில், நாம் ஆராயும் “கீழைக்கரை” வெறுமனே பிற்கால வரையறை அல்ல; அது மிகத் தொன்மையான புவியியல் காரணத்தால் இயல்பாகவே உருவாகிவந்த ஒரு வரலாற்றுக்கால வரையறை தான் என்பது உறுதியாகின்றது.

எனவே கிழக்குக்கரையின் வரலாற்றுக்குள் நுழைய முன்னர், இந்தத் தனித்துவமான தரைத்தோற்றத்தை சற்று விரிவாகக் கற்கவேண்டிய தேவை இருக்கிறது. அதிலும் குறிப்பாக, சமதரை அமைப்பையும் நீர்ப்பின்னலையும் பார்த்தால் போதுமானது.

 

கீழைக்கரையின் சமதரை:

மில்லியன் கணக்கான வருடங்களாக புவியின் மேற்பரப்பு மீது படிந்த வண்டல் பாறைகளின் அடுக்குகளைத் தோண்டி ஆராய்வதன் மூலமும், ஒவ்வொரு பாறை அடுக்குகளின் மாதிரிகளை எடுத்து அவற்றிலுள்ள தாவர – விலங்குகளின் உயிர்ச்சுவடுகளை ஆராய்வதன் மூலமும், குறித்த தரை அடுக்குகளின் வயதைக் கணக்கிட முடியும்.  இந்த நிலவியல் கணக்கிடலின் படி, இலங்கையின் தரையானது,  இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ப்ரீகாம்|ப்ரியன் (Precambrian) காலத்தில்  அதாவது இற்றைக்கு 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருச்சிதைவடைந்து உண்டான பாறைப்படிவுகளாலானது இலங்கைத்தீவின் 90% பரப்பு. மீதி 10% மயோசீன் காலத்து (25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) உருவான சுண்ணப்படிவுகளால் ஆனதாகும் (Subrayamaniyam & Kuyanesathasan 2020:07). இந்த வரையறைகளின் படி, இலங்கைத்தீவின் நிலவியலானது  ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது (Cooray 1994; Chandrajith 2020:23-34). (உரு 02)

இலங்கையின் நிலவியல் பிரிவினை

1. தீவின் வட அந்தத்திலுள்ள சுண்ணப்பாறைகளைக் கொண்ட மயோசீன் நாற்புடைப் படிவுகள் (ம்யோ`சீன் க்வார்|ட்னரி `செடிமென்|ட்`ச்  Miocene Quaternary Sediments).

2. தீவின் வடகிழக்கிலிருந்து தென்மேற்கு வரை குறுக்காக நீண்டுள்ள பெலி|டிக் நை`ச் (pelitic gneiss), மெ|டாக்வார்ட்`சை|ட் (metaquartzite), மார்|பில் (marble), சார்னோகி|டிக் நை`ச் (charnockitic gneiss) முதலிய பாறைகளாலான உயர்நிலச் சிக்கல் (ஃகைலாண்ட் கொம்|ப்லக்`ச் – Highland Complex)

3. உயர்நிலச் சிக்கலின் கிழக்கும் தெற்கும் காணப்படும் மி|க்ம|டை|ட்`ச் (migmatites), |க்ரனை|டிக் நை`ச் (granitic gneiss), |க்ரனை|டொய்ட்`ச் (granitoids) பாறைகளாலான  வி`சயன் சிக்கல் (வி`சயன் கொம்|ப்லக்`ச் –  Vijayan Complex).

4. உயர்நிலச்சிக்கலின் வடக்கும் மேற்கும் காணப்படும் மி|க்ம|டை|ட்`ச் (migmatites), |க்ரனை|டிக் நை`ச் (granitic gneiss), |க்ரனை|டொய்ட்`ச் (granitoids) பாறைகளாலான வன்னிச் சிக்கல் (Wanni Complex)

5. |பயோ|டை|ட் நை`ச் (biotite gneiss), ஃகோர்ன்|ப்லெண்ட் |பயோ|டை|ட் நை`ச் (hornblende-biotite gneiss) ஆகிய பாறைகளின் நீட்சிகளைக் கொண்ட பள்ளத்தாக்குகளாலான கடுகண்ணாவைச் சிக்கல்.

இவற்றில் கீழைக்கரையானது பெருமளவு வி`சயன் சிக்கலில் அடங்குகின்றது. சாதாரண மொழியில் கருங்கல் என்று அறியப்படும் மி|க்ம|டை|ட்`ச் (migmatites), |க்ரனை|டிக் நை`ச் (granitic gneiss), |க்ரனை|டொய்ட்`ச் (granitoids) முதலிய பாறைகளாலானது கீழைக்கரையின் தரை. சில இடங்களில் சிலிக்கேற்றுப் (Silicate – `சிலிகே|ட்) படிவும், தம்பிலுவில், பாணமை முதலிய இடங்களில் இல்மனைற்றுப் (Ilmenite – இல்மெனை|ட்) படிவும் கிடைக்கின்றது (கணபதிப்பிள்ளை 1980:33).

மிக்ம|டை|ட் (Migmatite), கருங்கல் (|க்ரனைட் – granite) படிவுகளால் ஆன கீழைக்கரை, கடல்மட்டத்திலிருந்து 10 மீற்றரைத் தாண்டாத உயரம் கொண்ட சமதரை ஆகும். இதில் ஆங்காங்கே நை`ச் (gneiss) வகைப் பாறைகளாலான சிறுசிறு குன்றுகள் காணப்படுவதுண்டு. இவற்றில் வெருகல் கல்லடி – ஈச்சிலம்பற்றுக் குன்றுகள், வாகரை கதிரவெளி – மதுரங்கேணிக் குன்றுகள், கிரான் பேரில்லாவெளிக் குன்றுத்தொடர்,  அக்கரைப்பற்று பொத்தானை – மொட்டையாகல் குன்றுகள், திருக்கோவில் சங்கமன்கண்டிக் குன்றுகள், கோமாரிக்குன்றுகள், பாணகை உகந்தைமலைக் குன்றுகள், என்பன குறிப்பிடத்தக்கவை.

ஊவாப்பீடபூமி நோக்கி அல்லது உயர்நிலச் சிக்கல் நோக்கி நகர நகர, இக்கற்பாறைகளின் உயரங்கள் அதிகரிக்கின்றன. எவ்வாறெனினும்  கீழைக்கரையானது இலங்கையின் அதிகிழக்கே உள்ள மிகவுயர்ந்த மலைகளான

658 மீ உயரமான நடுக்குடும்பி மலை[3] (சிங்களம்:  வாலிம்|பே ஃகெல [Wālimbehela], ஆங்கிலம்: ஃப்ரையர்`ச் ஃகூட் – Frair’s Hood) மற்றும் 558 மீ உயரமான கழிகாம மலை என்பவற்றுடன் வரம்பிடப்படுவதால், அந்நிலம் பெருமளவு சமதரையானது என்ற கருத்து உறுதிப்படுத்தப்படுகிறது.

 

கீழைக்கரையின் நீர்நிலைகள்:

கீழைக்கரையின் சமதரையில் பெருமளவு நீர்நிலைகள் காணப்படுகின்றன என்பதையும் அவை அமைத்த நீர்வலைப்பின்னல்கள் கடலுக்குச் சமாந்தரமாக நிலப்பகுதியில் நீண்டு செல்வதையும் முன்பும் குறிப்பிட்டிருந்தோம். இந்தத் தனித்துவமான நிலவியல் தோற்றப்பாட்டிற்கு என்ன காரணமாக இருக்கும்?

நிலவியலாளர்களின் கருத்துப்படி, இரண்டு புவியியல் சம்பவங்கள் இதற்குக் காரணமாகின்றன. இற்றைக்கு 11,700 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கும் ஃகோலோசீன் காலத்தில் ஏற்பட்ட சடுதியான கடல்மட்ட உயர்வும் இற்றைக்கு முன் 22 – 24ஆம் ஆயிரமாண்டுகளில் ஏற்பட்ட “நாற்புடைக்குப் பிந்திய காலக் கடற்கோள்” (Late Quartenary Marine Transgression) நிகழ்வும் அவை (Katupotha & Fujiwara 1888:189, Weerakody 1992:02)

இற்றைக்கு 17,000 ஆண்டுகளுக்கு முன்னர், “ஃகோலோசீன்” (Holocene) என்று வரையறுக்கப்படும் புவிச்சரிதவியல் காலத்தின் ஆரம்பத்தில், உலகெங்கும் பனியுகம் முடிந்து சற்று வரண்ட காலநிலை நிலவியது. இக்காலத்தில் தற்போது உள்ளதிலும் பார்க்க, 10 முதல் 20 மீ கடல் மட்டம் தாழ்வாகக் காணப்பட்டது (Katupotha 1995).

களப்புகளின் புவிசரிதவியல் தோற்றம்

ஃகோலோசீன் காலத்தின் நடுப்பகுதியில், அதாவது இற்றைக்கு முன் சுமார் 6000 ஆண்டுகளில் கடல் மட்டம் சடுதியாக  உயர்ந்து, இன்றுள்ளதிலும் 2.5 மீ உயரமாகக் காணப்பட்டது. இதன்போது அப்போதிருந்த கரையோர வடிநிலப் பள்ளத்தாக்குகள் நீரில் மூழ்கின. சூழலும் வெப்பநிலையும் சாதகமாக இருந்தமையால், அவற்றில் பவளப்பாறைகள், முருகைக்கற்கள் பெருக்கமடையத்தொடங்கின. ஆனால், அடுத்த ஈராயிரம் ஆண்டுகளில் கடல் மட்டம் குறையத்தொடங்கியது. தாழ்வடிநிலங்களில் பெருகியிருந்த முருகைக்கற்பாறைத்தொடர்களும் சிப்பி சங்கு முதலிய ஓட்டு உயிரினங்களும்  உள்நாட்டு நன்னீர் ஆறுகளால் அடித்து வரப்பட்ட வண்டல் மண்ணில் புதைந்து  தேங்கத்தொடங்கின. கடற்காற்று, அலைத்தொழிற்பாட்டால் அவற்றின் மீது முருகைக்கல் படிவுகளும், மணலும் படிய அம்மேடு உயர்ந்து புதிய கரையை உருவாக்கலாயிற்று (உரு. 03). எனவே நீரில் மூழ்கியிருந்த பழைய வடிநிலங்கள் புதிய கரையால் கடலிலிருந்து துண்டிக்கப்பட்டு களப்புகள் உருவாகலாயின (silva et al, 2013:12-15; Ranasinghe et al, 2013:33-35).

உள்நாட்டு நன்னீர் சிற்றாறுகள் இக்களப்புகளில் தொடர்ச்சியாகக் கலந்ததால் அவற்றின் நீரின் உவர்த்தன்மை மாறுபடலாயிற்று. அத்துடன் உள்நாட்டு ஆறுகள் கொண்டுவந்து சேர்த்த வண்டல்மண் படிந்து இந்தக் களப்புகளின் ஆழம் குறைந்தது. தொடர்ச்சியான வண்டல்மண் படிவால், பல களப்புகள் சதுப்புநிலமாக மாற்றமடைந்து பின்னாளில் சேற்றுநிலமாக மாறியதுடன், இன்றுள்ள களப்புகளும் தொடர்ச்சியான சிற்றாற்றுப் படிவுகளால் அகலம் குறைந்து வருகின்றன. களப்புகள் சதுப்பாகி சேறுமண்டிய பின்னர், அவை விவசாயத்துக்குப் பொருத்தமான வயல்நிலங்களாக மாற்றமடைந்தன. இன்றுள்ள களப்புகளின் இடையேயுள்ள பல வயல் நிலங்கள், பழைய களப்புகள் அல்லது கடல்நீரேரிகள் என்பதை செய்மதி வரைபடங்களிலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது.

இனி, இந்தக் கீழைக்கரையின் நீர்வலைப்பின்னல்களை இரண்டு பிரிவாகப் பார்க்கலாம். முதலாவது களப்புகள். இரண்டாவது அக்களப்புகளில் கலக்கும், அல்லது கடலில் நேரடியாகக் கலக்கும் சிற்றாறுகள்.

 

களப்புகள்:

களப்புகள் (அல்லது காயல், ஆங்கிலம்: Lagoon – ல|கூன்) ஒடுங்கிய நிலப்பரப்பால் கடல் அல்லது பெரிய நீர்நிலையொன்றிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப்படுத்தப்பட்ட ஆழங்குறைந்த நீர்நிலைகள் ஆகும். இவற்றுக்குள் பெரும்பாலும் ஆறுகளோ ஓடைகளோ திறப்பதில்லை (Silva et al 2013; Probert 2017:277-312). ஆனால் கீழைக்கரையில் காணப்படுபவை வெறும் களப்புகள் அல்ல; அவை  நன்னீர் ஆறுகளின்  தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட கடலோடு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் திறக்கும் உவர்த்தன்மையான நீர்நிலைகள். களப்புகளின் வரைவிலக்கணத்திலிருந்து மாறுபட்ட இவற்றை  ஆங்கிலத்தில் “Estuary – எ`ச்|டுவரி” என்று அழைப்பர். மட்டக்களப்புத் தமிழில் இவை “கரைச்சை” என்று அழைக்கப்படுகின்றன. கிழக்கிலங்கையிலுள்ள களப்புகள் யாவும், உண்மையில் கரைச்சைகளே. ல|கூன், எ`ச்|டுவரி என்ற சொற்கள் ஆங்கில அறிவியல் கட்டுரைகளிலும் ஒத்தகருத்துச் சொற்களாகப் பயன்படுவதால், சிலர் இரண்டும் இணைந்த Estuarine Lagoon – எ`ச்|டுவரைன் ல|கூன் எனும் பதத்தைப் பயன்படுத்துவது வழக்கம். இதைத் தமிழில் ‘கரைச்சைக் களப்பு’ என்று கூறலாம்.

கீழைக்கரையின் கரைச்சைக் களப்புகளில் ஊவா மலைத்தொடரில் ஊற்றெடுக்கும் ஏராளமான ஆறுகள் திறந்துகொள்கின்றன. இக்கரைச்சைகள் கடலுடன் மிகச்சிறிய மணல் திட்டுக்கள் மூலமே பிரிக்கப்பட்டுள்ளதால், வெள்ளப்பெருக்குக் காலத்தில், இயற்கையாக அல்லது செயற்கையாக இந்தத் திட்டுக்கள் திறக்கப்படுவதன் மூலம் கடலில் மேலதிக நீர் வடிகின்றது. கோடை காலத்தில் இவை மீண்டும் கடற்காற்று – கடலலை இயக்கத்தால் மூடிக்கொள்கின்ற போது, களப்பு நீர் உவர்த்தன்மை அடைகின்றது. இவற்றின் உவர்த்தன்மை கோடை காலம் உச்சமடைந்து களப்புகளின் நீர் வற்றும் வைகாசி, ஆணி மாதங்களில் அதிகரிக்கின்றது. ஏனைய காலங்களில் இக்களப்பு நீர், குடிநீராகவும் சில இடங்களில் விவசாயப் பாய்ச்சல் நீராகவும் கூட பயன்பட்டுள்ளது. சில இடங்களில் கரைச்சைகளை கீழைக்கரை மக்கள் “ஆறு” என்று அழைப்பதற்கு, இவற்றின் நன்னீர்த் தன்மையே காரணமாகும்.

இவ்வாறு ஓராண்டு காலத்துக்குள் கரைச்சையின் நீர் உவர்த்தன்மை மாறுபடுவதால்,  உவர்நீர் சகிப்புமையுடைய நன்னீர் தாவர மற்றும் விலங்கினங்களே  இக்களப்பு ஈரநிலங்களில் காணப்படுகின்றன.  கண்டல் தாவரங்களையும் நீர்வாழ் விலங்கினங்கள் செறிவான சதுப்புநிலங்களும் இக்களப்புகளை அண்டிக் காணப்படுகின்றன.

வெருகலிலுள்ள உல்லைக்களிக் களப்பு, வாகரையிலுள்ள பனிச்சங்கேணி உப்பாற்றுக் களப்பு, பாசிக்குடாவில் திறக்கும் வாழைச்சேனைக் களப்பு, புது முகத்துவாரம், கல்லாறு ஆகிய இடங்களில் கடற்கழிமுகங்களைக் கொண்ட மட்டக்களப்பு வாவி என்பன கீழைக்கரையின் வடபுறக் கரச்சைகளாகும். இவை நிலவியலில் “வடகிழக்குக் களப்பு வலயமாகக்” கருதப்படுகிறது. அக்கரைப்பற்றுப் பெரிய களப்பிலிருந்து, குமுக்கனாற்றின் அருகே உள்ள கிரிக்குளக் களப்பு வரையான பதினான்கு களப்புகளும் கீழைக்கரையின் தென்புறத்தில் அமைந்துள்ள கரைச்சைகள். இவை கிழக்கு வலயக் களப்புகள்.

கிழக்கு வலயக் களப்புகளில் தெற்கு நோக்கிச் செல்லச் செல்ல அங்குள்ள களப்புகளின் பரப்பளவுகள் குறைகின்றன. அவை இலங்கைத்தீவின் முப்பரிமாண அமைப்பில் பிறைவடிவக் கரையில் அமைந்திருப்பதால்,  கடலலை, கடற்காற்று என்பவற்றின் நேரடியான பாதிப்பின்றிக் காணப்படுகின்றன. ஏனைய களப்புகளில் கடற்காற்றின் மற்றும் பருவப்பெயர்ச்சிக் காற்றின் நேரடித் தாக்கத்தால் அவற்றின் பரப்பளவுகள் அதிகரித்துக் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. (Silva et al 2013:21).

(தொடரும்)

அடிக்குறிப்புகள்

[1] இன்று சிதைந்து வாசிக்கமுடியாதுள்ள திருக்கோவில் கல்வெட்டில் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்குரிய நிலத்தின் மேற்கு எல்லையாக கழிகாமமலை என்ற சொல் காணப்படுவதாக வாய்மொழி மூலம் சொல்லப்பட்டு வருகிறது. நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டின் படி, மட்டக்களப்பின் மேற்குப்புற நாடுகாட்டுப்பகுதியின் தென் எல்லை கழிகாமமலை. பார்க்க. பத்மநாதன் 1976:90, கணபதிப்பிள்ளை, 1981:39-40

[2] விந்தனை என்பது இன்றைய மகியங்கனை. அங்கிருந்து கிழக்குக் கரையோரம் வரை பெருங்காடும் அங்கு வேடர்களும் வசித்து வந்தார்கள். விந்தனைக் காட்டின் கிழக்குப்புறம்  வேடர்களும் அங்கு பின்னாளில் குடியேறிய தமிழரும் சிங்களவரும்  வாழ்ந்த குடியிருப்புகள் “விந்தனைப்பற்று” என்ற பெயரில் மட்டக்களப்பின் ஒரு நிர்வாக அலகாக நீடித்து வந்தன. அது கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் விந்தனைப்பற்று கிழக்கு, விந்தனைப்பற்று மேற்கு என்று இரு நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டது. 1961ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டத்தின் தோற்றத்துடன், அவை முறையே மகா ஓயா, பதியத்தலாவை என்ற பெயர் மாற்றங்களைச் சந்தித்தன.

[3] கிழக்கிலங்கையில் மூன்று குடும்பிமலைகள் உள்ளன. மட்டக்களப்பு  கிரான் பேரில்லாவெளியில் சிங்களத்தில் தொப்பிகல என்றும் ஆங்கிலத்தில் Baron’s Cap என்றும் அழைக்கப்படும் குடும்பிமலை ஒன்று. அம்பாரை உகந்தமலைக்கு அருகே தமிழில் குடும்பிமலை என்றும் சிங்களத்தில் குடும்பிகல என்றும் அழைக்கப்படும் மலை இன்னொன்று. மூன்றாவது குடும்பிமலை என்று தமிழிலும் ஆங்கிலத்தில் Friar’s Hood என்றும் சிங்களத்தில் வாலிம்பஃகெல என்றும் அழைக்கப்படும் இம்மலை. பெயர்க்குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக இவை தமிழில் முறையே வட குடும்பிமலை, தென்குடும்பிமலை, நடுக்குடும்பி மலை என்ற பெயரில் இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றன.

உசாத்துணைகள்:
  • கணபதிப்பிள்ளை, கே. (1980). மட்டக்களப்பு மாநிலத்தின் பழைய புவியியல் வரலாறும் இடப்பெயர்களும். மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் நூலில், நடராசா, எஃப்.எக்`ச்.`சி (பதிப்பு). மட்டக்களப்பு : இந்து வாலிபர் முன்னணி.
  • கணபதிப்பிள்ளை, சி. (1981). பூர்வீக சப்த ஸ்தலங்கள், அட்டப்பள்ளம்: நூலாசிரியர்.
  • பத்மநாதன், சி. (1976). நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு. மட்டக்களப்பு மகாநாடு நினைவு மலர், மட்டக்களப்பு: அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற மட்டக்களப்பு மகாநாட்டு அமைப்புக்குழு. பப. 82-90.
  • Brohier, R.L. (1935). Ancient Irrigation Works in Ceylon, Part III, Colombo: Ceylon Government Press.
  • Chandrajith, R. (2020). Geology and Geomorphology. in Ranjith .B.M (Ed.). The Soils of Sri Lanka. (World Soils Book Series).  Switzerland: Springer Cham.
  • Cooray, P.G. (1994). The Precambrian of Sri Lanka: A Historical View.  Precambrian Research, 66(1-4), pp. 3-18.
  • Department of Meteorology, (2022). Climate of Sri Lanka, Retrieved from: http://www.meteo.gov.lk/index.php?option=com_content&view=article&id=94&Itemid=310&lang=en&lang=en
  • Ferguson, D. (1998). The Earliest Dutch Visits to Ceylon. New Delhi _ Madras: Asian Educational Services.
  • Katupotha, J.; Fujiwara, K. (1988). Holocene Sea-Level Change On The Southwest And South Coasts Of Sri Lanka. Palaeogeography, Palaeoclimate, Palaeoecology Journal v 68(2-4), pp. 189-203.
  • Katupotha, J. (1995). Evolution and the geological significance of Holocene emerged shell beds on the southern coastal zone of Sri Lanka. Journal of Coastal Research, 11 (4), pp. 1042-1061.
  • Probert, P.K. (2017). Marine Conservation. Cambridge (UK): Cambridge University Press.
  • Ranasinghe, P.N., Ortiz, J.D., Moore, A.L., McAdoo, B., Wells, N., Siriwardana, C.H.E.R., Wijesundara, D.T.D.S. (2013). Mid–Late Holocene coastal environmental changes in southeastern Sri Lanka: New evidence for sea level variations in southern Bay of Bengal. Quaternary International, 298, pp. 20–36.
  • Ranawella, S. (2011). History of the Kingdom of Rohana (From the Earliest Times to 1500 AC). Colombo: Ministry of Higher Education & Department of Archeology.
  • Silva, E. I. L., Katupotha, J., Amarasinghe, O., Manthrithilake, H., Ariyaratna, R. 2013. Lagoons of Sri Lanka: from the origins to the present. Colombo: International Water Management Institute.
  • Subrayamaniyam, H.P., Kuyanesathasan, K. (2020). Geology Of Sri Lanka: Mineral Resources And Soils. Repository BNTU. 551:6-11. Retrieved From: https://rep.bntu.by/bitstream/handle/data/75669/6-11.pdf?sequence=1Weerakkody, U. 1988. Mid-Holocene sea level changes in Sri Lanka. Journal of Natural Science Council, Sri Lanka 16(1):23-37.  

 

https://ezhunaonline.com/keekhagarai-and-its-geology

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் II

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

 

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர்.

கீழைக்கரையில் 21 கரச்சைக் களப்புகள் காணப்படுகின்றன (உரு. 01 & 02). உள்நாட்டு ஆறுகள் பெருகிப் பாய்வதால், இவற்றின் பெரும்பாலான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வண்டல் மண் படிந்து விட்டது. ஒப்பீட்டளவில் பெரிய கரைச்சைகளான மட்டக்களப்பு வாவி, பெரியகளப்பு, வாழைச்சேனைக் களப்பு என்பன இவ்வண்டல் மண் படிவால் இன்று பெருமளவு அகலம் குறைந்திருக்கின்றன. இலங்கைத்தீவின் கரையோரம், மட்டக்களப்பு வாவிக்குத் தெற்கே பிறைத்துண்ட வடிவில் அமைந்திருப்பதால், களப்புகளின் அளவை அதிகரிக்கும் கடுங்காற்று, பருவப்பெயர்ச்சிக் காற்றுகள் என்பன அங்கு அவ்வளவாகச் செல்வாக்குச் செலுத்தவில்லை (உரு.02). அதனால் அங்கு களப்புகளின் பரப்பு தெற்கே செல்லச் செல்ல சிறுத்துச் செல்கிறது (Silva et al 2013:21).

கீழைக்கரையின் வடகிழக்கு வலயக் களப்புகள்
ழைக்கரையின் கிழக்கு வலயக் களப்புகள்

கடலுக்குச் சமாந்தரமாக முழுநீளத்துக்கும் களப்புகளின் தொடர் சங்கிலி காணப்படுவதால், கீழைக்கரை அந்தக்களப்புகளின் இருபுறமும் கிழக்கிலும் மேற்கிலும் இரு தனித்தனி நிலப்பரப்புகளாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இக்களப்புகள் உள்ளூரில் ஆறுகள் என்றே அறியப்படுகின்றன. எனவே கடலுக்கும் ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலம் “எழுவான்கரை” (சூரியன் எழுகின்ற கரை – கிழக்குக்கரை) என்றும் ஆற்றுக்கு அப்பாலுள்ள மற்றைய நிலம், “படுவான்கரை” (சூரியன் மறைகின்ற / படுகின்ற கரை – மேற்குக்கரை) என்றும் அழைக்கப்படுகின்றன. எழுவான்கரை ஊர்களும் படுவான்கரை ஊர்களும் தொன்றுதொட்டே ஒன்றோடொன்று கொண்டும் கொடுத்தும் வந்திருக்கின்றன.

படகு, ஓடம், தோணி முதலியன மூலமான நீர்வழிப் போக்குவரத்தே இவ்வூர்களை இணைக்கும் பிரதான போக்குவரத்து மார்க்கமாக இருந்து வந்தது. தரைவழிப்பாதை பிரதான போக்குவரத்து மார்க்கமாக மாறியுள்ள சமகாலத்தில் இந்நீர்வழிப்பாதைகள் மறக்கடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் எச்சங்களை இன்றும் நீடிக்கும் குறுமண்வெளி – மண்டூர், குருக்கள்மடம் – அம்பிளாந்துறை, இலங்கைத்துறை – இலங்கைத்துறை முகத்துவாரம் முதலிய படகுப்பாதை போக்குவரத்துகளில் காணலாம். இந்நீர்வழிப் பாதைகளில், கரைச்சைகளுக்குச் சமனாக, அல்லது கரைச்சைகளை விட ஒருபடி மேலாக முக்கியத்துவம் பெற்று விளங்கியவை, கீழைக்கரையின் ஆறுகள்.

கீழைக்கரையின் ஆறுகள்


கீழைக்கரையில் மொத்தம் இருபத்தேழு ஆறுகள் பாய்கின்றன (Arumugam,1969). ஆறுகள் என்று கூறினாலும் இவை அகலத்தில் மிகக்குறைந்த சிற்றோடைகளே. செய்மதிப்படங்களை ஆராயும் போது, பட்டிப்பளை ஆறு, கூமுனையாறு, மாதுரு ஆறு முதலான ஓரிரு ஆறுகள் மட்டும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பேராறுகளாக ஓடியிருந்திருக்கின்றன என்பதை ஊகிக்கமுடிகின்றது.

கீழைக்கரையின் ஆறுகளில் பெரும்பாலானவை கடலில் நேரடியாகச் சென்றடையாமல், கடலோரமாக அமைந்துள்ள கரைச்சைகளில் கலக்கின்றன. மகாவலி கங்கை, கல்லாறு, கூமுனையாறு ஆகிய மூன்று மட்டுமே கரைச்சையூடாக அன்றி, கடலில் நேரடியாகக் கலக்கின்றன. அவற்றிலும், கூமுனையாறு மட்டுமே தூய கடற்கழிமுகத்தைக் கொண்ட ஆறாக இருக்கின்றது[1]. கீழைக்கரையின் வரலாற்றுத் தேவைப்பாட்டிற்காக, இங்குள்ள ஆறுகளில் முக்கியமான 11 ஆறுகளை மாத்திரம் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1.மகாவலி கங்கை


இலங்கையின் மிக நீளமான ஆறு, மகாவலி கங்கை (335 கி.மீ நீளம்). சிவனொளிபாத மலையிலேயே மகாவலி கங்கையும் இலங்கையின் ஏனைய பேராறுகளான களனி கங்கை, கல் கங்கை, வளவை கங்கை ஆகிய மூன்றும் உற்பத்தியாவதாக, ஈழத்துத் தமிழ் – சிங்கள மரபுரைகள் கூறுகின்ற போதும், அங்கிருந்து சுமார் 30 கி.மீ. தள்ளி, மலைநாட்டின் ஃகட்டன் (Hatton) நகருக்கருகே ஃகோட்டன் (Horton) சமவெளி ஆற்றுப்பள்ளத்தாக்கிலேயே மகாவலி கங்கை ஊற்றெடுக்கின்றது[2].  (Ratnasiri, 2010:09)

மகாவலி கங்கை, கண்டியூடாகப் பாய்ந்து மகியங்கனை (பழைய பெயர்: விந்தனை), மன்னன்பிட்டி (பழைய பெயர்: தம்பன்கடவை[3]), என்பவற்றினூடாகச் சென்று, குரங்குமுனை என்ற இடத்தில் வெருகல் கங்கையாகப் பிரிந்து வெருகலில் கடலில் கலக்கின்றது. அதன் பிரதான கிளை, குருக்கள் கங்கை என்ற பெயரில் வடக்கே சென்று கொட்டியாற்றுக் குடாவில் கடலில் கலக்கின்றது.

மகாவலி கங்கையின் ஆழம், அது கடலில் கலக்கும் திருக்கோணமலையிலிருந்து விந்தனைக்கு (இன்றைய மகியங்கனை) தெற்கே பங்காரகம்மான வரை 130 மைல்கள் (209 கி. மீ) தூரம் படகுப்போக்குவரத்துக்கு உகந்ததாக இருந்ததால், பிரித்தானியர் காலத்தில், வணிகப்படகுகளின் போக்குவரத்துக்காக மகாவலி கங்கையைப் பயன்படுத்துவது பற்றி ஆராயப்பட்டிருந்தது. (Capper 1849:135, Tennent 1860:424-425) உண்மையில் இது காலனித்துவ ஆட்சியாளர்களின் காலத்துக்கு முன்பு உள்ளூர் அரசர்களால் வணிகத்துக்கும் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட்ட நீர்வழி மார்க்கமாகும். இடைக்கால இலங்கைத் தலைநகரான பொலனறுவையை அண்டி ஓடும் அம்பன் கங்கை, மகாவலி கங்கையின் துணையாறு தான். பொலனறுவையை திருக்கோணமலைத் துறைமுகத்துடன் இணைத்து அதன் வணிகத்தை வளர்த்தெடுத்ததில் மகாவலி வழி நீர்ப்பாதைக்கு தவிர்க்கவியலாத வகிபாகம் இருந்திருக்கிறது.

எனவே இலங்கையின் பிரதான வர்த்தக – போக்குவரத்துப் பாதையாக விளங்கிய மகாவலிகங்கையின் இரு கிளையாறுகளான குருக்கள் கங்கை,  வெருகல் கங்கை என்பவற்றுக்கிடைப்பட்ட பகுதியில் இலங்கையின் பண்பாடும் நாகரிகமும் செழித்து வளர்ந்திருக்கின்றன. மகாவலியால் செழுமையூட்டப்பட்ட இந்நிலம் சிங்கள வரலாற்றிலக்கியங்களில் “கொத்தசார” என்று அழைக்கப்பட்டதுடன்,  சோழராட்சிக் காலத்தில் தஞ்சைப்பெருங்கோவிலுக்கு காணிக்கைப் பொருட்களை ஏற்றுமதி செய்யுமளவுக்கு வளம் நிறைந்ததாக விளங்கியது (Fernando ,1978:85-86). இங்கு சேருவில், ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை, கல்லடி, நீலாப்பளை, மத்தளமலை, திருமங்கலாய், கங்குவேலி உள்ளிட்ட இடங்களில் பல தொல்லியல் மையங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.


2. நட்டூர் ஆறு:

நட்டூர் ஆறின் சிங்களப்பெயர் மாதுரு ஓயா. இது 1541 சதுர கி. மீ. நீர்ப்பிடிப்புப் பகுதி கொண்ட பெரிய ஆறு. ஊவா மலைத்தொடரில் ஊறி அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் மேற்கு எல்லையாக சுமார் 80 கி. மீ. தூரம் பாய்ந்து, பொலனறுவை வெலிக்கந்தைக்கருகே கிழக்கே திரும்பி, ஓட்டமாவடியில் வாழைச்சேனைக் களப்புடன் கலக்கின்றது. மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் அருகே பழங்காலத்தில் உயர் தொழிநுட்பத்துடனான நீர்ப்பாசனக் கட்டமைப்பு நீடித்திருந்தமைக்குச் சான்றுகள் பெறப்பட்டுள்ளன. கந்தேகம, கோராவெளி உள்ளிட்ட பல தொல்லியல் இடங்கள் நட்டூர் ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ளன.


3. முந்தனை ஆறு:

மகாவலி கங்கை, நட்டூர் ஆறு, முந்தனை ஆறு, மகிழவட்டவான் ஆறு என்பவற்றின் படுகையின் பருமட்டான வரைபடம்

இங்கினியாகல் மலைத்தொடரில் உருவாகும் இறம்புக்கன் ஆறும், அதன் மேற்கே தோன்றும் மகா ஓயா ஆறும், மகா ஓயா நகருக்கருகே இணைந்து முந்தனை ஆற்றை உருவாக்குகின்றன. முந்தனை ஆற்றுக்கு இன்னும் இரு துணையாறுகள் உள்ளன (உரு.03).  மகா ஓயாவுக்கும் மேற்கே ஊறிப்பாயும் கல்லோடை ஆறு, தெம்பிட்டிக்கு அருகே முந்தனை ஆற்றுடன் கலக்கிறது. ஒமுனை மலையடிவாரத்தில் தோன்றும் இலாவணை ஆறு, மயில் தங்கிய மலைக்கருகே முந்தனையாற்றுடன் இணைகின்றது, மொத்தம் 1280 சதுர கி.மீ. நீர்ப்படுகை கொண்ட முந்தனையாறு சித்தாண்டிக்கு மேற்கே வாழைச்சேனைக் களப்பில் கலக்கின்றது. அதன் ஒரு கிளை கரடியனாறாகப் பிரிந்து மட்டக்களப்பு வாவியில் கலக்கின்றது. உறுகாமக்குளத்துக்கு நீர்பாய்ச்சுவது முந்தனை ஆறு தான்.

முந்தனை ஆற்றின் படுகையும் பல ஆதிக்குடியிருப்புகளைக் கொண்டதாகும். குசலான்மலை, கரடியனாறு, வேலோடுமலை, கித்துள் உட்பட பல தொல்லியல் இடங்கள் முந்தனையாற்றோரமாக அமைந்துள்ளன.

4. மகிழவெட்டுவான் ஆறு:


இங்கினியாகல் மலைத்தொடரில் இறம்புக்கனை ஆற்றுக்கு சமாந்தரமாக ஊற்றெடுத்து 346 சதுர கி.மீ. நீர்ப்படுகைப் பரப்பில் பாய்ந்து, மட்டக்களப்பு மகிழவட்டவான் அருகே மட்டக்களப்பு வாவியில் கலக்கிறது . இவ்வாறு மகிழவட்டவான் ஆற்றின் குறுக்கே அணைகட்டி 1902 – 1919 க்கு இடைப்பட்ட காலத்தே அமைக்கப்பட்ட குளமே உன்னிச்சைக்குளமாகும்.  மகிழவட்டவான் அருகே கரைவெட்டி, உன்னிச்சை, புல்லுமலைப் பகுதிகளில் பழங்குடியிருப்புகள் அமைந்திருந்தன.



5. நவகிரியாறும் மூங்கிலாறும்:

நவகிரியாறு, மூங்கிலாறு, கல்லாறு என்பவற்றின் படுகைகளும்,


ஊவா மலைத்தொடரின் கிழக்கே வாலிம்ப மலையருகே களுகல் ஓயா (கருங்கல்லாறு) என்ற பெயரில் ஊற்றெடுக்கிறது நவகிரியாறு. இவ்வாற்றுடன்  கல்லோயா இடதுகரைக் கால்வாய் இணையுமிடத்தில், 1950-1954 க்கு இடையே நவகிரி நீர்த்தேக்கம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நவகிரி நீர்த்தேக்கத்தின் அருகே தான் வரலாற்றுப்புகழ் பெற்ற இராசக்கல் மலை அமைந்துள்ளது.  நவகிரியாற்றின் ஒரு கிளை கிழக்கே சென்று மூங்கிலாற்றுடன் கலக்க, மறுகிளை பல சிற்றோடைகளாகப் பிரிந்து வெல்லாவெளியில் நாதனையாறாக மட்டக்களப்பு வாவியுடன் கலக்கின்றது.

நவகிரியாற்றின் படுகையில் உஃகணையிலுள்ள இராசக்கல் மலை மற்றும் வெல்லாவெளிப் பிரதேச தொல்லியல் மையங்கள் உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள் காணப்படுவதால், இவ்வாற்றின் கரையிலும் பெருமளவு ஆதிகாலக் குடியிருப்புகள் தோன்றி வளர்ச்சி கண்டுள்ளன என்பதை அறியக்கூடியதாகவுள்ளது.

நவகிரி ஆறு ஒரு துணையாறாகத் திறக்கின்ற மூங்கிலாறு,  சிங்களத்தில் ஆந்தலோயா என்று அழைக்கப்படுவதுடன், 522 சதுர கி. மீ. நீர்ப்பிடிப்புப் பகுதி கொண்டது. இங்கினியாகல் மலைத்தொடரில் ஊற்றெடுக்கும் நாமல் ஓயாவும்[4] வேறு துணையாறுகளும் உஃகணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்தலோயாக் குளத்தில் தடுக்கப்பட்டு கிழக்கே ஆந்தலோயாவாக நகர்கின்றன.  மேலும் பல சிற்றோடைகளும் நவகிரியாறும் கலக்க, இறுதியில் மண்டூருக்கு வடக்கே மட்டக்களப்பு வாவியில் திறக்கிறது மூங்கிலாறு.


6. பட்டிப்பளை ஆறு (கல்லோயா /  கல்லாறு)


பட்டிப்பளை ஆறு 108 கி. மீ. நீளமான இலங்கையின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. இன்று கல்லோயா என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. தமிழில் கல்லாறு எனலாம்[5]. ஊவா மலைத்தொடரில் மடுல்சீமை மலைச் சரிவுகளில் பாயும் ஓடைகள் இணைந்து ஊற்றெடுக்கும் கல்லாற்றுக்கு “இ|ப்|பான் ஓயா”, தி|ம்பிரி ஓயா ஆகிய  இரண்டு முக்கியமான துணை ஆறுகள் உள்ளன.

துணையாறுகளிலிருந்து நீரைப் பெற்றுப் பாய்ந்து வரும் கல்லாறு இலங்கையின் மிகப்பெரிய செயற்கை நீர்த்தேக்கங்களில் ஒன்றான இங்கினியாகல் நீர்த்தேக்கம் அல்லது சேனாநாயக்க சமுத்திரத்தை உண்டாக்கியபடி கிழக்கே நகர்ந்து மலுக்கம்பிட்டிக்கு அருகே நான்கு கிளைகளாகப் பிரிகின்றது (உரு.04). ஒரு கிளை நேரே களியோடை ஆறு என்ற பெயரில் பாய்ந்து ஒலுவில்லில் கடலில் கலக்க, இன்னொரு  கிளை செங்கற்படை ஆறு என்ற பெயரில் சற்று வடகிழக்காகப் பாய்ந்து, நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் கடலில் கலக்கிறது. மூன்றாவது கிளைநதி, பைந்தாறு என்ற பெயரில் சம்மாந்துறைக்கு அருகாகப் பாய்ந்து மட்டக்களப்பு வாவியிலும், காரைதீவுக் கரைச்சையிலும் இருகிளைகளாகப் பிரிந்து மறைகின்றது. பைந்தாற்றின் இவ்விரு கிளைகளுக்கும் இடைப்பட்ட தீவே காரைதீவு.

நான்காவது கிளை மலுக்கம்பிட்டியிலிருந்து சற்று கிழக்கே தீகவாவிக்கு அருகே இன்று பெருமளவு தூர்ந்துபோய் சிறு வாய்க்கால்களாகச் செல்கின்றது. அது, பாலமுனை – முள்ளிக்குளமூடாக ஓடி இரண்டாகப் பிரிகிறது. அதன் ஒருகிளை வன்னிபத்து ஆறு என்ற பெயரில் மீனோடைக்கட்டுக்கு வடக்காகச் சென்று அட்டாளைச்சேனை கோணாவத்தைக் கரைச்சையில் கலக்கின்றது. மறுகிளை அட்டாளைச்சேனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் மேற்காகச் சென்று தில்லையாறு என்ற பெயரில், பெரிய களப்போடு கலக்கின்றது. அக்கரைப்பற்றின் பழைய பெயர் கருங்கொடித்தீவு. அட்டாளைச்சேனையின் பழைய பெயர் முல்லைத்தீவு. இவை தீவுகளாக அறியப்பட்டதன் காரணம், இவ்விரு தீவுகளையும் சூழ வடக்கே வன்னிபத்தாறும், கிழக்கே கடலும், மேற்கே தில்லையாறும் தெற்கே பெரியகளப்பும் என்றவாறு அவை முற்றாக நீரால் சூழப்பட்டிருந்தது தான்.

கல்லாற்றின் இந்த நான்கு கிளையாறுகளின் கழிமுகங்களிலும் மலைநாட்டின் பெருமளவு வண்டல்மண் அள்ளப்பட்டு வந்திருப்பது தெரியவருகிறது. மட்டக்களப்பு வாவியின் தென்பகுதி வண்டல் படிந்து தூர்ந்து போனமைக்கு, காரைதீவில் கலந்த பைந்தாறும் ஒரு காரணமாக இருக்கவேண்டும். அதே வண்டல் மண் படிவாலேயே அக்கரைப்பற்று நகரின் மேற்கே தில்லையாறு வண்டல் படிந்து வயல்நிலங்களாக மாறியிருக்கிறது.

கல்லாற்றை மறித்து, இங்கினியாகல் மலைத்தொடர்களிடையே அமைந்த குறுகிய கணவாயை இணைத்து 1949 – 1951ஆம் ஆண்டுகளுக்கிடையே அமைக்கப்பட்ட சேனாநாயக்க சமுத்திரம் எனும் நீர்த்தேக்கம் கல்லாற்றின் நீர்வரத்தைப் பெருமளவு குறைத்துவிட்டது. இன்று இங்கினியாகல் நீர்த்தேக்கத்துக்குக் கிழக்கே சிற்றோடைகளாகவே பட்டிப்பளையாறு நகர்கின்றது. அந்த ஆறு தன் கிளைகளில் பெருமளவு நீரை நிரப்பிய ஒருகாலத்தில் தில்லையாறு, பைந்தாறு வழியே ஒரு தொடர்ச்சியான நீர்வலை நிலவியதால், பெரியகளப்பின் தெற்கு முனையிலிருந்து மட்டக்களப்பு வாவியின் வடக்கு முனை வரை நீர்வழிப்போக்குவரத்தை தடையின்றிச் செய்ய முடிந்திருக்கிறது. (நாம் போன வாரத் தொடரில் பார்த்த ஒல்லாந்தர் காலக் குறிப்பை (Ferguson 1998:173)  இந்தப் பின்னணியில் தான் புரிந்துகொள்ள முடியும்.)

கீழைக்கரையின் நீர்ப்பாசன மற்றும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கு இங்கினியாகல் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டபோது, அதிலிருந்து இரண்டு கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இதில் நீர்த்தேக்கத்தின் தெற்காகச் சென்று அம்பாறை இறக்காமக் குளத்தில் முடியும்  “வலதுகரைக் கால்வாய்” 32 கி. மீ. நீளமானது. வடக்காக  மட்டக்களப்பு நவகிரி நீர்த்தேக்கம் வரை செல்லும் “இடதுகரைக் கால்வாய்”, 52 கி.மீ. நீளமானது (Arumugam 1969).

கீழைக்கரையின் நடுநிலத்துக்கு பெருமளவு நீரை வழங்கும் கல்லாற்றைச் சூழ பெரும் எண்ணிக்கையிலான தொல்லியல் மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தீகவாபி விகாரமும் தீர்க்கவாபி மண்டலம் எனும் நிர்வாகப் பிரிவும் பழைமைவாய்ந்த இறக்காமம் கிராமமும் இவ்வாற்றை அண்டித்தான் உருவாகி நீடித்துள்ளன. கல்லாற்றின் படுகைக்கு அருகேயுள்ள மல்வத்தை, முள்ளிக்குளம் மலை, இறக்காமம், கொன்றைவட்டவான் குளம், அம்பாரக்குளம்,   என்பவற்றின் அருகே பிராமிக்கல்வெட்டுகளும் ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட தொல்பொருட்களும் இடிபாடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழைக்கரையின் நாகரிகம் பிறந்த மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று, கல்லாறாகும்.


7. அம்பலத்தாறு:

அம்பலத்தாறு, ஊரக்கையாறு, நாவலாறு, வில்லாறு, கூமுனையாறு என்பவற்றின் படுகைகள்


சிங்களப்பெயர் அம்பலம் ஓயா. நீத்தையாறு என்றும் அழைக்கப்படும். உகணையில் ஊற்றெடுக்கும் எக்கல் ஆறும், அம்பலம் ஓயாவும் இணைந்து 1961இல் அமைக்கப்பட்ட அம்பலம் ஓயா நீர்த்தேக்கத்தை நிரப்புகின்றன. அங்கிருந்து கிழக்கே பாயும் அம்பலத்தாறு, அக்கரைப்பற்று பனங்காட்டுக்கு தெற்கே பட்டிமேட்டில் பெரியகளப்போடு கலக்கின்றது. அம்பலத்தாற்றின் நீர்ப்படுகைப் பரப்பு 115 சதுர கி. மீ. இதன் கரையோரமாக பொத்தானை மலை, அலிக்கம்பை முதலான தொல்லியல் இடங்கள் அமைந்துள்ளன.


8. ஊரக்கை ஆறு:


தாலிபோட்டாறு என்றும் அழைக்கப்படும். சிங்களத்தில் பன்னல் ஓயா என்று பெயர். இதன் நீர்ப்படுகை 184 சதுர கி.மீ. மொனராகல் மலைக்குன்றுகளிடையே ஊற்றெடுக்கும் பன்னலோயா உகணையில் பன்னல்கம நீர்த்தேக்கத்தை உண்டாக்குகிறது. அங்கிருந்து உருவாகும் ஊரக்கை ஆற்றின் நீர்வரத்து சாகாமக் குளத்துக்குப் பாய்ந்து, பின்னர், சாகாமம் ஊரக்கைவெளிக்கருகே பெரிய களப்பில் கலக்கின்றது. ஊரக்கையாற்றின் படுகையில் மொட்டையாகல் மலை, சாகாமம், ஊரக்கவெளி  உள்ளிட்ட பல தொல்லியல் மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.



9. நாவலாறு:

நாவலாற்றின் சிங்களப்பெயர் ஃகெட ஓயா. இதன் பழைய பெயர் சடாவை ஆறு என்பது இடச்சு வரைபடங்களிலிருந்து தெரிகின்றது. 611 சதுர கி. மீ. பரப்பளவுள்ள நீர்ப்படுகை கொண்ட நாவலாறு, மொனராகல் மலைக்குன்றுகளிடையே ஊறி கிழக்கே பாய்ந்து பொத்துவில்லுக்கும் பாணகைக்கும் இடையே இரட்டல் என்ற இடத்தில் இரட்டல் குளத்துக்கு நீரை வழங்கியபடி இரு கிளைகளாகப் பிரிந்து பாணகை சாத்திரிவெளியிலும், அறுகங்குடா பசறிச்சேனையிலும் கடலில் கலக்கிறது. நாவலாற்றை அண்டி இலகுகலை, மங்கல மகா விகாரம், நீலகிரி புத்த விகாரம், சாத்திரிவெளி, இரட்டல் உள்ளிட்ட பல தொல்லியல் மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



10. வில்லாறு:

வில்லாறு (சிங்களம்: வில ஒய), மொனராகலுக்கு அருகில் அத்திமலைக் குளத்தில் ஊற்றெடுத்துப் பாய்ந்து பாணகை வாவி என்றழைக்கப்படும் பாணகைக் குளத்துக்கு நீரை வழங்கி கிழக்கே சென்று, பாணகைக் களப்பு மூலம் கடலில் கலக்கும் ஆறு. சுமார் 30 கி.மீ. நீளங்கொண்ட இச்சிற்றாற்றின் கரையிலேயே பிராமிக்கல்வெட்டில் ‘பணவ’ என்றழைக்கப்படும் பாணகை ஊரும், தென்குடும்பிமலை, குணுகொலைக் களப்பு உள்ளிட்ட தொல்லியல் மையங்களும் காணப்படுகின்றன.



11. கூமுனையாறு:


கூமுனையாறு கீழைக்கரையின் தென்னெல்லையாகப் பாயும் சுமார் 116 கி.மீ. நீளமுள்ள ஆறாகும். ஊவா மலைத்தொடரில் மடுல்சீமை அருகே ஊற்றெடுக்கும் கூமுனையாறு, கிராவையாறு, சுளுந்தையாறு (ஃகுலாந்த ஒய) ஆகிய கிளைநதிகளிடமிருந்து நீரைப்பெற்று ஓடி,  கூமுனையில் அல்லது பூமுனையில் கடலில் கலக்கிறது. இதன் சிங்களப்பெயர், கும்புக்கன் ஓயா. கும்புக் என்றால் சிங்களத்தில மருதமரம். இதன் கழிமுகத்துக்கு அருகே பூமுனை அல்லது கூமுனை எனும் கிராமம் அமைந்திருந்ததால், தமிழில் இது கூமுனையாறு என்று அழைக்கப்பட்டது.

கீழைக்கரையைப் பொறுத்தவரை, வேறெந்த இடத்தையும் விட அதிகளவு எண்ணிக்கையிலான தொல்லியல் மையங்கள் கூமுனையாற்றின் படுகையை அண்டியே கண்டறியப்பட்டுள்ளன. கூமுனையிலிருந்து உகந்தமலை வரை இந்தத் தொல்லியல் மையங்கள் பரந்து விளங்குகின்றன. போவத்தகல், கொத்ததாமுகல், பம்பரக`ச்தலாவை ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

ஆக, கீழைக்கரையின் வரலாற்றைக் கட்டியமைத்ததில், அதன் புவிச்சரிதவியலும், குறிப்பாக கரைச்சை –  ஆறுகள் நிறைந்த அதன் தரைத்தோற்ற அமைப்பும் முக்கியமான வகிபாகத்தை அமைத்தது என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். இந்த நீர்நிலைகளை அண்டித்தான் பல தொல்குடியிருப்புகள் அமைந்திருக்கின்றன, வணிக – போக்குவரத்து பாதைகள் நீடித்திருக்கின்றன என்பதை ஓரளவு அனுமானிக்கக்கூடியதாக இருக்கும். தரைத்தோற்ற அமைப்புக்கு மேலதிகமாக இந்நிலத்தின் வரலாற்றைக் கட்டியமைத்த இன்னொரு காரணி, காலநிலை.

கீழைக்கரை டிசம்பர் முதல் பெப்ரவரி வரையான வடகீழ் பருவப்பெயர்ச்சி

கீழைக்கரையின் நடுப்பகுதி (ஏறாவூர் முதல் திருக்கோவில் வரை), டிசம்பர் மாதம் முதல் பெப்ரவரி வரையான காலத்தில் வடகீழ் பருவக்காற்று மூலம் அதிகூடிய மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. இக்காலத்தில் பெறப்படும் மழைவீழ்ச்சியானது, 500 தொடக்கம் 1000 மி.மீ. ஆகும் (உரு.06). ஒக்டோபர் முதல் நவம்பர் வரையான இரண்டாம் பருவப்பெயர்ச்சி இடைக்காலத்தில் மட்டுநகருக்கு வடக்கேயுள்ள அரைப்பகுதி 500 தொடக்கம் 750 மி.மீ. மழைவீழ்ச்சியையும் தெற்கு அரைப்பகுதி 300 தொடக்கம் 500 மி.மீ. வரையான மழைவீழ்ச்சியையும் பெறுகின்றது. எனவே ஒக்டோபர் முதல் பெப்ரவரி (தமிழ் ஐப்பசி முதல் மாசி) வரையான ஐந்து மாத காலம், கீழைக்கரையில் மிதமான காலநிலை நிலவுகிறது (Department of Meteorology, 2022).

ஏனைய காலங்களில் வெப்பமான காலநிலையே நிலவும் போதும், இங்கு ஏராளமான எண்ணிக்கையிலுள்ள நீர்நிலைகள், குளங்கள், சிற்றாறுகள் குடிநீருக்கும் விவசாய நீர்ப்பாசனத்துக்கும் வேண்டிய நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானவையாக இருக்கின்றன. இப்பகுதியின் வெப்பநிலை வீச்சு 24 – 37 பாகை செல்சியசுக்குள்ளேயே காணப்படுவதும், இந்த மிதமான சுவாத்திய நிலைக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல வாழிடங்களை இங்கு கண்டுகொண்டு மனிதகுலம் பெருகத் தொடங்கியமைக்கு பிரதான காரணங்களாக அமைந்தவை இந்தச் சூழற் காரணிகளே என்றால் அது மிகையாகாது.

தொடரும்.

அடிக்குறிப்புகள்

[1] மகாவலி கங்கையின் கிளையாறான வெருகலாறு வெருகல் முகத்துவாரத்தில் கடலில் கலக்கும் போதும், அதன் கிளையாறான சுங்கான் குழி ஆறு, உல்லைக்களிக் களப்பிலே கலக்கின்றது.  கல்லாற்றின் கிளையாறுகளான பைந்தாறும் தில்லையாறும் முறையே மட்டக்களப்பு வாவியிலும் பெரியகளப்பிலும் இணைகின்றன. எனவே கீழைக்கரையில் ஒற்றை ஆறாக ஓடும் கூமுனையாறு மட்டுமே கடலில் நேரடியாகக் கலக்கும் ஒரே ஆறாகும்.

[2]  13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய நம்பி திருவிளையாடல் புராணத்தில் இந்நான்கு ஆறுகளும் முறையே மாவலி, கல்லணை, கம்பளை, வலவை என்று அழைக்கப்படுவதுடன், அவை   ஈழத்திலே சமனொளிபாத அடிவாரத்தில் தோன்றுவதாக பாடப்பட்டுள்ளது. “கருதிடின் வலவை மாவலிகங்கை கம்பளை கல்லணை என்னும் தரு சமனொளி சூழ் நதிகள் நான்கு இடமாம்” – நம்பி திருவிளையாடல் 25:12. (சாமிநாதையர் 1906:௬௨) சிங்கள மரபுரைகளிலும் சிங்கள சிறார் பாடல்களிலும் கூட  இது மீளமீளச் சொல்லப்பட்டுள்ளது (Plea to conserve Adam’s Peak, 2018). எனவே இம்மரபுரையின் உண்மைத்தன்மையை ஆராயவேண்டும். ஒருவேளை, காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சிவனொளிபாத மலையில் ஊற்றெடுத்த ஓடைகளைத் தடுத்து மவுசாக்கலை நீர்த்தேக்கம், காசல்ரீ நீர்த்தேக்கம் என்பன அமைக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து துவங்கிய ஒரு துணையாற்றின்  நீர்வரத்து மகாவலிகங்கையைச் சென்றடையவில்லையா என்பது தெரியவில்லை. இன்று மவுசாக்கலை, காசல்ரீ என்பவற்றின் நீர்ப்பாய்ச்சல் முழுமையாகக் களனி கங்கைக்கே பாய்கிறது.  

[3] இன்று மன்னன்பிட்டி என்றழைக்கப்படும் தம்பன்கடவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமம். தம்பன்கடவை என்ற இவ்வூர்ப்பெயர் காலனித்துவ காலத்தில் இவ்வூரைச் சூழ்ந்து விளங்கிய நிர்வாக மாவட்டத்தின் பெயராகவும் விளங்கிற்று. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அம்மாவட்டம் பொலனறுவை என்று பெயர் மாற்றப்பட்டபோதும், இன்றும் அங்குள்ள பிரதேச செயலகப் பிரிவு, தமன்கடுவை என்றே அழைக்கப்படுகிறது.

[4] நாமலோயாவை மறித்து 1960-1961 க்கும் இடையே நாமலோயாக் குளம் கட்டப்பட்டுள்ளது. இக்குளத்திலிருந்து வடியும் நீரே ஆந்தலோயாக் குளத்தைச் சென்று சேர்கிறது.
[5] ஒருகாலத்தில் மட்டக்களப்பு வாவியின் தென்னந்தம் கல்லோயாவின் கழிமுகமாக  இருந்தது என்பதையும், மட்டக்களப்பு வாவி கடலில்  கலக்கும் இடத்தில் பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு ஆகிய பெயர்களில் முகத்துவாரங்கள் இருப்பதையும் இங்கு ஒப்பிடலாம்.

உசாத்துணைகள்

  • சாமிநாதையர்., உ.வே.சா (பதிப்பு.). (1906). திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம். சென்னை: பதிப்பாளர்.
  • Arumugam., S. (1969). Water Resources of Ceylon: Its Utilisation and Development. Colombo: Water Resources Board.
  • Capper., J. (1845). A Descriptive Catalogue of Woods of Ceylon. JCBRAS Vol. II. pp. 136-158.
  • Department of Meteorology, (2022). Climate of Sri Lanka, Retrieved from: http://www.meteo.gov.lk/index.php?option=com_content&view=article&id=94&Itemid=310&lang=en&lang=en
  • Fernando., P.E.E. (1978). Allai Copper- Plate Charter of King Nissankamalla. The Sri Lanka Journal of the Humanities, IV, 1 & 2. pp.73-91.
  • Ferguson, D. (1998). The Earliest Dutch Visits to Ceylon. New Delhi _ Madras: Asian Educational Services.
  • Plea to conserve Adam’s Peak, (2018.12.13). Daily News. Retrieved From: https://www.dailynews.lk/2018/12/13/tc/171141/plea-conserve-adam%E2%80%99s-peak
  • Ratnasiri., J. (2010.03.31).  Origi of Kelani, Mahawei, Walawe and Kalu Ganga. The Island. p.09.
  • Silva, E. I. L., Katupotha, J., Amarasinghe, O., Manthrithilake, H., Ariyaratna, R. 2013. Lagoons of Sri Lanka: from the origins to the present. Colombo: International Water Management Institute.
  • Tennent, J.E. (1860). Ceylon: An Account of the Island, Vol I, London: Longman.

 

https://ezhunaonline.com/keekhagarai-geology-ii

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகள் : கல்வெட்டுக்களும் பொறிப்புகளும்

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

 

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர்.

 

கீழைக்கரை தொடர்பான வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு மூன்று வகையான ஆதாரங்களை நாம் பயன்படுத்தலாம். முதலாவது பொறிப்புச் சான்றுகள், இரண்டாவது எழுத்துச் சான்றுகள், மூன்றாவது வாய்மொழி மற்றும் தொன்ம மரபுரைகள்.

பொறிப்புச் சான்றுகள் (Epigraphic evidences) என்பதன் மூலம் நாம் கருதுவது, கல்லிலும் செப்பு, பொன், ஐம்பொன் முதலிய உலோகங்களிலும் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, சாசனச் சான்றாதாரங்களை எழுத்துச் சான்றுகளில் பாலி இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், வடமொழி இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்தமிழ் இலக்கியங்கள், ஐரோப்பியர் கால இலக்கியங்கள், சமகால ஆய்வுநூல்கள் என்பன அடங்கும். வாய்மொழி மரபுரைகளில் நாட்டார் பாடல்களாகவும் தொன்மக்கதைளாகவும் ஏட்டுச்சுவடிகளாகவும் கிடைக்கின்ற உள்ளூர் மரபுரைகளைச் சொல்லலாம். வாய்மொழி மற்றும் தொன்ம மரபுரைகளில் சில கடந்தகாலத்தில் நூலுருப்பெற்றும் உள்ளன.

பொறிப்புச் சான்றுகள் (Epigraphic Sources):

அண்ணளவாக பொ. மு 4ஆம் 3ஆம் நூற்றாண்டிலிருந்து கீழைக்கரையெங்கணும் தொடர்ச்சியாக கல்வெட்டுக்களும் உலோக மட்பாண்டப் பொறிப்புகளும் பரவலாகக் கிடைத்துவருகின்றன. இலங்கையில் ஈழப்பாகதம்[1], சிங்களம், தமிழ், சங்கதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பொறிப்புச் சான்றுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் ஈழப்பாகதம்[1], சிங்களம், தமிழ், சங்கதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பொறிப்புச் சான்றுகள் கிடைத்துள்ளன.  பொறிப்புச் சான்றுகளில் கல்வெட்டுக்களும் உலோக – மட்பாண்டச் சாசனங்களும் அடங்கும்.

கல்வெட்டுக்களில் குகைக் கல்வெட்டுக்கள், பாறைக் கல்வெட்டுக்கள், பலகைக் கல்வெட்டுக்கள், தூண் கல்வெட்டுக்கள் என்று பலவிதமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. நமக்குக் கிடைக்கும் பொறிப்புச் சான்றுகளில் ஆதியானவை குகைக்கல்வெட்டுக்கள்  . மக்கள் குடியிருப்புகளுக்கு வெளியே துறவிகளுக்கு, குறிப்பாக புத்தநெறித் துறவிகளுக்கு குகைகள் இல்லறத்தாரால் கொடையளிக்கப்பட்டபோது இவை பொறிக்கப்பட்டன. பெரும்பாலும் குகைகளின் வாசலில் மலையின் மேல்விளிம்பில் மழைநீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்படும் தவாளிப்புகளின் அருகே குகைக் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். குகையை வசிப்பிடத்துக்குத் தகுந்ததாக மாற்றி அதைத் தானம் கொடுத்தவர், தானத்தைப் பெற்றவர், தானம் வழங்கப்பட்டதன் நோக்கம் என்பன அடங்கிய மிகச்சிறிய கல்வெட்டுக்களாக குகைக்கல்வெட்டுக்கள் இருக்கும்.

பாறைக் கல்வெட்டுக்கள், குன்றுகள் மீதும் பாறைகளின் மேற்பரப்பிலும் பொறிக்கப்பட்டவை. பாறைக் கல்வெட்டுக்கள் அமைந்துள்ள மலைகளில் செங்கற் கட்டடங்களின் சிதைவுகள் பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளமையால், புத்த துறவிகள் குகைகளிலிருந்து சற்று வசதியான செங்கல் அல்லது கல்லாலான உறைவிடங்களுக்கு நகர்ந்த காலகட்டத்தில் இவை பொறிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்தக் கட்டடச் சிதைவுகள் சமய அல்லது பொதுத்தேவைக் கட்டடங்களாகவும் அமைந்திருக்க இயலும்.  இன்னும் சில பாறைக்கல்வெட்டுக்களில் அப்பகுதியை ஆண்ட சிற்றரசர்கள் அல்லது நிலக்கிழார்களைப் பற்றிய தகவல்களும் காணப்படுகின்றன.

தூண் கல்வெட்டுக்களும் பலகைக் கல்வெட்டுக்களும் இலங்கைத்தீவின் நாகரிகம் உன்னத நிலையடைந்த காலத்தில் பொறிக்கப்பட்டவையாகும். வளர்ச்சியடைந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மலைப்பாறைகளை தூண் வடிவில் அல்லது பலகை வடிவில் உடைத்துப் பெயர்த்து, அவற்றின் மீது உளி மூலம் செதுக்கி தூண் கல்வெட்டுக்களும் பலகைக் கல்வெட்டுக்களும் உருவாக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை குகை – பாறைக் கல்வெட்டுக்களைப் போலவே சமயக் கொடைகளைக் குறிப்பிடுவன தான்.

அரசாணைகளையும் கொடைகளையும் உறுதிப்படுத்துவதற்காக செப்பு, தங்கம் ஆகிய உலோகங்களைப் பயன்படுத்தி, செப்பேடுகளும் பொற்றகடுகளும் உருவாக்கப்பட்டதுடன், ஐம்பொன் முதலிய உலோகங்களால் இறையுருவங்கள், வழிபாட்டுப் பொருட்கள், நாணயங்கள் செய்யப்படும் போதும், அவற்றில் அரசாட்சியையோ அல்லது  கொடையாளியையோ  குறிப்பிட பொறிப்புகள் உருவாக்கப்பட்டன. மிகப்பழங்காலத்தில் மட்பாண்டங்களில் கூட பொறிப்புகள் இடம்பெற்றிருந்தன என்பதற்கு இன்று கிடைக்கும் உடைந்த பானைக் கல் ஓடுகளைச் சான்றாகச் சொல்லலாம்.

ஈழத்துக் கீழைக்கரையில் 175இற்குக் குறையாத பிராமிக்கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன[2]. இன்னும் வாசிக்கப்படாத ஏராளமான கல்வெட்டுக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் பிராமி எழுத்துருவில் ஈழத்துப் பாகத மொழியில் எழுதப்பட்டவை.  ஆனால் கீழைக்கரையில் மாத்திரமன்றி, முழு இலங்கைத் தொல்லியலிலும் கடந்த 15 ஆண்டுகளில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டு வரும்  தமிழி அல்லது தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள்.

தமிழி என்பதும் தமிழ்ப்பிராமி என்பதும் தமிழை எழுத ஆரம்பகாலத்தில் பயன்பட்ட ஒருவகைப் பிராமி எழுத்துமுறை. இலங்கையில் பிராமியின் எழுத்துரு ஈழத்துப் பாகதம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் எழுதப் பயன்பட்டுள்ளது. ஆனால் தமிழை எழுதும் போது, பிராமிக்கு தமிழ்ப்பிராமி அல்லது தமிழி என்று பெயர்.  ஏனென்றால், வடநாட்டு மொழிகளை எழுதப் பயன்படுத்திய பிராமிக்கும், தமிழை எழுதிய தமிழ்ப்பிராமிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன .

பிராமிக்கும் தமிழிக்கும் இடையிலான மேலோட்டமான ஒப்பீடு

அவற்றில் முக்கியமாக இரண்டைச் சொல்லலாம். முதலாவது, எழுத்து வேறுபாடு. பாகத மொழியிலுள்ள வர்க்க ஒலிப்புகளுக்கான எழுத்துக்கள் தமிழில் இல்லை. (உதாரணம், க என்பதற்கு நான்கு வர்க்க எழுத்து ஒலிப்புகள். க = ka ; ~க = kha ; |க = ga ; ||க = gha) இதனால், பிராமிக் கல்வெட்டில் பெருமளவில் இடம்பெறும் அவ்வெழுத்துக்கள் தமிழிக் கல்வெட்டில் இடம்பெறாது. அதே போல் ள, ழ (𑀵), ற (𑀶), ன (𑀷) ஆகிய நான்கு தமிழ் எழுத்துக்களுக்கான ஒலிப்புகள் பாகத மொழியில் இல்லை என்பதால், பிராமிக் கல்வெட்டில் இவ்வெழுத்துக்கள் இடம்பெறுவதில்லை. ஆக, பிராமிக்கல்வெட்டொன்றில் தமிழுக்குச் சிறப்பான இந்நான்கு எழுத்துக்கள் பயன்பட்டிருந்தால், அது தமிழி தான் என்று இலகுவாக இனங்காணமுடியும். தாய்லாந்திலும் எகிப்திலும் கண்டறியப்பட்ட பிராமி எழுத்து வாசகமொன்றை தமிழி என்று இனங்காண முடிவது, அதிலிருந்த ‘ற’ எழுத்து மூலம் தான் (Mahadevan 2010).

இரண்டாவது வேறுபாடு, தமிழியிலுள்ள சில எழுத்து வரிவடிவங்கள், பிராமியில் மாறுபடுகின்றன. உதாரணத்துக்கு “ஈ, ம” முதலிய எழுத்துக்களைச் சொல்லலாம். இன்றுள்ள ‘ஈ’, தமிழியில் “ 𑀈 ” என்றும் பிராமியில் “ : : “ என்றும் எழுதப்படும்.  அதேபோல் “ம” என்ற எழுத்து பிராமியில் “𑀫” என்று எழுதப்படும் போது, தமிழியில் U வடிவில் எழுதப்படுகிறது (உரு.01). “ர” எழுத்திலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. கல்வெட்டுப் பொறிப்பியலில் தேர்ந்த அறிஞர்கள், தமிழிக்கும் பிராமிக்கும் பொதுவான எழுத்துக்களில் இன்னும் பல நுண்ணிய வேறுபாடுகளை அடையாளப்படுத்துவார்கள்.

இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளைப் பொறுத்தவரை, தமிழியின் செல்வாக்கைக் காட்டும் முக்கியமான சான்றுகள் சில கிடைக்கின்றன. உதாரணமாக வழக்கமான பிராமியில் உள்ள ‘ம’விற்கு மேலதிகமாக, தமிழி ‘ம’ எழுத்து இலங்கைப்பிராமியில் ஏராளமாகப் பயன்பட்டுள்ளமை, மருமகன், மருமகள், பெருமகன் அல்லது பருமகன், பருமகள் ஆகிய தமிழ்ச்சொற்கள் ஈழப்பாகத மொழியில் எழுதப்பட்டுள்ளமை என்பவற்றைச் சொல்லலாம் (புஷ்பரட்ணம் 2003:115-20).

ஆனால் 2010இல் முழுக்கத் தமிழியில் எழுதப்பட்டிருந்த – தமிழ் மொழியில் வாசிக்க முடிந்த மட்டக்களப்பு வெல்லாவெளி சமணக் கல்வெட்டின் கண்டுபிடிப்பு இலங்கைத் தமிழ்த் தொல்லியலில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது (பத்மநாதன் 2013:27-48).  அக்கல்வெட்டில் துவங்கி, நேரடியாகவே தமிழி எழுத்தில் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் பேராசிரியர் சி.பத்மநாதனாலும் அவரது மாணவர்கள் பலராலும் தொடர்ச்சியாகக் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன[3]. இவற்றில் கணிசமானவை நாகர் தொடர்பானவை என்பதுடன், நாகரின் சமயம், அவர்களது பண்பாடு, வாழ்வியல் பற்றிய பல புதிய தகவல்களும் இக்கல்வெட்டுக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான நான்கு விடயங்களை வருமாறு வரிசைப்படுத்தலாம்.

முதலாவது, கீழைக்கரையில் ‘நாகர்’ பற்றிய கல்வெட்டுக்களும் ‘பத’ என்ற பெயரிலமைந்த குழுவினருடைய[4] கல்வெட்டுக்களும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. நாகர் ‘வேள், ர|ச, அய’ உள்ளிட்ட பல பதவிகளையும் “பருமக, கமிக” முதலிய பட்டங்களையும் சூடியிருந்தார்கள்.   ஆனால், இத்தகைய பட்டங்களெதுவும் ‘பத’ என்ற பெயர்களோடு காணப்படாமையால் பத என்போர் நாகரைவிடப் பிற்பட்ட ஒரு தனி இனக்குழுவாக இருக்கவேண்டும் என்று இனங்காண்பார் சி.பத்மநாதன். பத (பத்தர் அல்லது பட்டர்?) இனக்குழுவை இயக்கருடன் அல்லது குறுணிக்கற்கால [5] மாந்தருடன் அடையாளப்படுத்திக்கொள்ளமுடியும். நாகர்கள் பெருங்கற்காலப் பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய ஆதி இரும்புக்கால (Early iron Age) இனக்குழுவினர். பதர் அல்லது இயக்கர்கள் இவர்களுக்கு சிலகாலம் முன்பிருந்தே இலங்கையில் வாழ்ந்து வந்த குறுணிக்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இனக்குழுவினர். ஆக, இலங்கையில் வி`சயன் வருகைக்கு முன்னர் நாகரும் இயக்கரும் இருந்தனர் என்ற பாலி இலக்கிய வாசகத்தை விரிவாக விளங்கிக்கொள்வதற்கான சான்றுகள் இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் துலங்கிவருகின்றன. (பத்மநாதன் 2016:443-481).

இரண்டாவது, நாகர்கள் நாகபாம்பு வழிபாட்டினராக இருந்ததுடன் “மணிநாகன்” என்ற பெயரில் ஐந்து தலை நாகத்தை அல்லது நாகதேவனை வழிபட்டனர். சிவலிங்க வழிபாடும்  அவர்களிடம் காணப்பட்டிருந்தது. சிவநெறி, புத்தநெறி, சமணம் ஆகிய சமயங்கள் இலங்கைக்கு அறிமுகமான போது, அவர்கள்  அச்சமய நெறிகளையும் ஆர்வத்தோடு கடைப்பிடித்தனர். பூர்விக நாக வழிபாடு, சிவநெறி, புத்தநெறி, சமணம் ஆகிய நான்கு சமயங்களும் நாகரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. திருக்கோணமலையின் கரைசை முதலிய இடங்களில்  “மணிநாகன்” என்ற பெயர் பொறித்த சிவலிங்கமும் நந்தியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. “மணிநாகன்” என்ற பெயர் பொறித்த புத்தர் பாதம் சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. நாகதேவதை வழிபடப்பட்ட மட்டக்களப்பு வெல்லாவெளி மலைக்குன்றொன்றில் சமண தீர்த்தங்கரர்களின் படிமங்களும் சமணப் பெண் துறவியரின் தங்குமிடங்களும் அமைந்திருந்தன. இவை தவிர “மணிநாகன்” பொறிக்கப்பட்ட ஏராளமான நாகசிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை புதிய சமயங்களின் அறிமுகத்தின் போது, அவற்றை தங்கள் பண்பாட்டுக்குள் நாகர் உள்ளீர்க்க முயன்றதாக வாசிக்க முடிகின்றது. (பத்மநாதன் 2016:481-505).

மூன்றாவது விடயம், தங்கள் சமயச்சின்னங்களில் தமிழில் “மணிநாகன்” என்று எழுதியுள்ளதாலும், அதே தமிழியில் மூன்று தலைமுறை நாக அரசர்களின் பெயரை ஆங்காங்கே எழுதுவித்திருப்பதாலும், நாகர்கள் தமிழ் பேசிய இனக்குழுவினர். இந்தக் கண்டுபிடிப்பு சமகால அரசியல் பண்பாட்டு வரலாற்றில் கவனமாக ஆராயப்படவேண்டிய ஒன்று.

நாகர்கள், புத்த சமயத்தின் போதனை மொழியான பாலியை அல்லது பாகதத்தையும் கற்றுத்தேர்ந்தனர். அம்மொழி இலங்கையின் தனித்துவமான புவியியல் அமைப்பால் வடநாட்டுப் பாகதத்திலிருந்து வேறுபட்டு ஈழப்பாகதமாக அல்லது எலு மொழியாகப் பரிணமித்தது. இந்த ஈழப்பாகதமே 8ஆம் நூற்றாண்டளவில் இன்றைய சிங்கள மொழியாக வளர்ச்சி காணத்தொடங்கியதுடன் 13ஆம் நூற்றாண்டில் தனக்கென முதல் இலக்கண நூலையும் பெற்றுக்கொண்டது (Coperahewa 2022:9-11).

நாகரின் 15 வேள்புலங்கள்

பௌத்தம், சைவம் ஆகிய இரு சமயங்களைச் சார்ந்திருந்தபோதும் நாகரில் ஒரு சாரார் தமிழராகவே நீடித்தனர் என்பது தமிழிக் கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது.  நாம் முன்பு கண்ட, இயக்கர் அல்லது ‘பத’ மக்களும் இச்சமயங்களைச் சார்ந்திருக்கவேண்டும். நாளடைவில் இந்த இயக்கர் அல்லது ‘பத’ மக்கள் அல்லது குறுணிக்கற்கால மாந்தர் நாகருடனும் ஏனைய இனக்குழுக்களுடனும் கலந்து, தாம் பேசிய ‘முண்டா’ குடும்பத்தைச் சேர்ந்த’  மொழியுடன் முற்றாக மறைந்து போயிருக்கிறார்கள் (தில்லை நடேசன் 2015:20). அவர்களின் மிச்சசொச்சப் பரம்பரையினர், ஈழப்பாகதத்தின் திரிபான வேட்டுவ மொழியுடன், வேடர்களாக எஞ்சினர்.

நான்காவது, நாகரிகமுற்றிருந்த நாகர்கள் கீழைக்கரையில் பல வேளிர் சிற்றரசுகளின் தோற்றத்துக்கு வித்திட்டனர். அவர்களது கல்வெட்டுக்களும் தொல்லியல் சான்றுகளும் கிடைக்கும் இடங்களை வைத்து பத்மநாதன் நாகர்களின் சிற்றரசுகள் நிலவிய கீழைக்கரையின் 15 நாகர் ‘வேள்புலங்களை’ அடையாளப்படுத்துகிறார் (உரு. 02). அவை: வாகரை, கிரான், வந்தாறுமூலை, கல்லடிச்சேனை, குசலான்மலை, பாலாமடு, இலாவணை வேரம், வடகுடும்பிமலை, நெடியமடு, தாந்தாமலை, வெல்லாவெளி, நாவற்குடா, களுவாஞ்சிக்குடி,  காரைதீவு, சங்கமன்கண்டி என்பனவாகும் (பத்மநாதன் 2016:462).  இந்த நாகர்கள், தொடர்ச்சியாக இந்தியப்பெருநிலத்திலிருந்து புலம்பெயர்ந்த வெவ்வேறு இன மக்களுடன் ஊடாடியதன் ஒட்டுமொத்த விளைவே இன்றைய முழு இலங்கைப் பண்பாடு.

பொமு 2ஆம் நூற்றாண்டின் பத்து  உடன்பிறந்த அரசர்களின் பிராமிக் கல்வெட்டுக்கள் கிடைத்த அமைவிடங்கள்

பொ. மு 2 முதல் பொ. பி 4ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் நாகர்களின் தமிழிக் கல்வெட்டுக்கள் புதிய கண்டுபிடிப்புகளாதலால் இவை தொடர்பான மேலதிக விவாதங்கள் மேற்கொள்ளப்படும் போதே இன்னும் விரிவான – திருத்தமான தகவல்களை நம்மால் பெற்றுக்கொள்ளமுடியும். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். ஏறாவூர்ப்பற்றிலுள்ள குசலானமலை, கல்லூடுபொத்தானை, விந்தனைப்பற்றின் கெனன்னகல (ஃகெனன்னே|கல, henannēgala), அக்கரைப்பற்று மொட்டையாகல் மலை,  பாணமைப்பற்றின் போவத்தகல (|போவத்தே|கல, bōvattēgala) ஆகிய இடங்களில் கிடைக்கின்ற பிராமிக் கல்வெட்டுக்கள் மூலம் கீழைக்கரையை ஆண்ட ‘பத்து உடன்பிறந்தார்’ (|த`ச |பதிகன, dasa batikana) என்ற அரசகுலம் ஒன்றின் குறிப்பு கிடைக்கிறது (உரு.03). வியாளைப் பெருங்காட்டுக்குள் அமைந்துள்ள கொத்ததாமூகலயிலும் (கொ|ட்|ட|த_மூஃகல, koṭṭadæmūhela) இவர்களது கல்வெட்டு கிடைத்துள்ளது (Ranawella 2018:11).

லலாட தாதுவம்சம் எனும் பாலி இலக்கியத்தில் ‘கதிர்காமத்து பத்து சகோதர மன்னர்கள்’ என்று கூறப்பட்டவர்கள் இவர்களே. இவர்களில் பெரும்பாலானோரை துட்டகாமணியின் பாட்டன் கோதாபயன் கொன்றொழித்தான் என்கிறது தாதுவம்சம் (Vijitha Kumara, 2016:37). இந்தப் பதின்மரில் கடைக்குட்டியான கனிட்ட உபராசன் நாகன் (கனய உபர||ச ந|க, kanaya Uparajha Naga) என்பவனின் கல்வெட்டுக்கள் குசலான்மலையிலும் மொட்டையாகல் மலையிலும் கிடைத்துள்ளன (Paranavitana 1970:30-31,37). குசலானமலையில் நாகர்களின் தமிழிக் கல்வெட்டுக்களும் அண்மையில் அவதானிக்கப்பட்டிருப்பதால் பத்து சகோதரர்கள் பற்றிய பாலி நூல்களின் தரவுகளையும், நாக வேள்புலங்கள் பற்றிய சி.பத்மநாதனின் கண்டடைவுகளையும் ஒப்பிட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அடுத்ததாக, பொறிப்புச் சான்றுகள் மூலம் கிடைக்கும் மிக முதன்மையான நன்மை, மகாவம்சம் முதலிய பாலி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை கல்வெட்டுக்கள் மூலம் உறுதிப்படுத்திகொள்ள முடிகின்றது என்பதே. மகாவம்சம் சொல்லும் தீகவாபிமண்டலம் உண்மையான ஆட்சிப்பிரிவு தான் என்பதையும் அதன் இருப்பிடத்தையும் உறுதிசெய்ய உதவியது, அட்டாளைச்சேனைக்கு அருகே கிடைத்த குடுவில் பிராமிக் கல்வெட்டு ஆகும் (Paranavitana 1970:37 – Inscription No. 487). அதில் தீகவாபியில் வசிக்கும் வணிகர்கள் பற்றிய வரியொன்று இடம்பெற்றிருக்கிறது. (|தி|கவாபி[பொ]ரண வணி||ஜன, digavāpi poraṇa vaṇijhana). இலாஞ்சதீசன் (பொ. மு 119 – 109),  வலகம்பாகு (பொ. மு 103 – 89) முதலிய மன்னர்களின் பெயர் பொறித்த பிராமிக் கல்வெட்டுக்கள்  இராசக்கல் (உரு.04) முதலிய இடங்களில் பெறப்பட்டுள்ளன.

ஆனால்,  முன்பு அறியப்படாத புதிய மன்னர்கள் பலர் பற்றிய தகவல்களும் இப்பிராமிக் கல்வெட்டுக்களில் கிடைத்துள்ளன. உதாரணமாக, சாம்பன் (ச|ப Saba, சங்கதம்: சாம்|ப Samba) என்ற மன்னனைப் பற்றிய குறிப்பு அம்பாறை முவாங்கல்லிலும் வசப மகாராசன் (வஃகக மஃகர|ச Vahaka Maharaja, சங்கதம்: வ்ரு_^ச|ப மஃகாரா|சா, Vrshabha Mahārajā) என்ற மன்னனைப் பற்றிய குறிப்பு இலகுகலைக்கு அருகிலும் கிடைத்திருக்கின்றன.  இவர்களைப் பற்றிய விபரங்களெதுவும் மகாவம்சத்திலோ வேறு பாலி இலக்கியங்களிலோ கூறப்படவில்லை (Ranawella 2018:11-15).

பொதுக் காலத்தை அண்மித்து கீழைக்கரையானது, “உரோகண” ஆட்சிப்பிரிவின் கீழ் அமைந்திருந்தது. உரோகண அரசு தொடர்பாக பாலி  – சிங்கள இலக்கியங்கள் கூறுகின்ற பல தகவல்களை உறுதிப்படுத்தும் கல்வெட்டுக்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன. தாதாசிவன் எனும் ஆதிபாதன், முதலாம் உதய மன்னன் (797 – 801) அனுராதபுரத்தை ஆண்டபோது உரோகணத்தை ஆண்டான் என்கிறது மகாவம்சம் (49:10). வேகம்பற்று உகணைக்கருகே இராசக்கல் மலையில் தாதாசிவனின் எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று பெறப்பட்டுள்ளது (Ranawella 2016:80). சம்மாந்துறைக்குத் தெற்கே மல்வத்தை –  வளத்தாப்பிட்டிக்கு இடையே கிடைத்த இன்னொரு கல்வெட்டு, அனுராதபுரத்தை ஆண்ட நான்காம் உதய மன்னன் காலத்தில் (946 – 954) பொறிக்கப்பட்டது.

கீழைக்கரை பற்றிய முக்கியமான கல்வெட்டுக்கள் கிடைத்த இடங்கள்

இலங்கை மற்றும் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களிலிருந்தும் பல சுவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. சான்றாக, இலங்கையைக் கைப்பற்றிய சோழரின் ஆதிக்கம் திருக்கோவில் சாகாமம் வரை நீண்டிருந்ததை மகாவம்சம் கூறுகிறது. அதன்படி, சோழரை இலங்கையிலிருந்து அகற்றிய முதலாம் வி`சய|பாகு மன்னனின் படைகள், சாகாமத்திலும் அதற்கருகே அங்குமிங்கும் இருந்த சோழர் காவலரண்களை அழித்தொழித்தன (மகாவம்சம் 58:41-47). வெருகல் கங்கைக்குத் தெற்கே சோழர் காலக் கல்வெட்டெதுவும் கிட்டாத நிலையில், அண்மையில் மட்டக்களப்பு இடச்சுக்கோட்டையில் கிடைத்த சிதைந்த சோழர் காலத்துக் கல்வெட்டொன்று, மட்டக்களப்புப் பகுதி சோழராட்சியின் கீழ் இருந்தது என்ற மகாவம்சத் தகவலை உறுதிப்படுத்த உதவுகின்றது (பத்மநாதன் 2013:413-416).

மாமன்னன் இரா|சரா|சசோழன்  (947-1014) காலத்தில் ஈழ மண்டலத்தின் மாப்பிசும்பு கொட்டியாரப் பகுதியிலிருந்த ஊர்களிலிருந்து நெல்லும் இலுப்பைப் பாலும் தஞ்சை இராசராசேச்சரத்துக்கு ஏற்றுமதியானதை இராசராச சோழனின் தஞ்சைப் பெருங்கோவில் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது (Krishna Sastri 1913:426-28). கல்வெட்டு சிதைந்துள்ளதால், அதிலுள்ள ஏனைய ஈழத்து ஊர்களின் பெயரை அறியமுடியவில்லை. ஆனால் அந்த மாப்பிசும்பு கொட்டியாரம் முன்பு அல்லை என்று அறியப்பட்ட இன்றைய சேறுவில் ஊரைக் குறிக்கும்[6] என்பதைச் சொல்கிறது நிசங்கமல்ல மன்னனின் (1187-1196) அல்லைச் சிங்களச் செப்பேடு (Fernando 1978:89-90).  அதே தஞ்சைப் பெருங்கோவில் கல்வெட்டில் கூறப்படும் கணக்கன் கொட்டியாரம், சோழராட்சிக்கு முன், சிங்கள மன்னர் ஆட்சிக்காலத்தில் “கிணிகம் கொத்தசாரம்” (கிணி|கம் கொ|ட`சற, kiṇigam koṭasara) என்று அழைக்கப்பட்டதையும், அந்த நிருவாகப் பிரிவு, இன்று மறைந்துவிட்ட பழந்தமிழ் ஊரான திருமங்கலாய்க்கு மேற்கே மகாவலி கங்கைக் கரையோரமாக அமைந்திருந்ததையும், நான்காம் தப்புல மன்னனால் பொபி 929இல் பொறிக்கப்பட்ட அல்லைத் தூண் கல்வெட்டு குறிப்பிடுகின்றது (Ranawella 2004:25-29).

கடலாதெனிய பாறைக் கல்வெட்டுகள்

15ஆம் நூற்றாண்டு வரை, கீழைக்கரையின் உள்ளும் வெளியும் பொறிக்கப்பட்டுள்ள பல்வேறு தமிழ் – சிங்களக் கல்வெட்டுக்களும் கூட, இப்பிராந்தியத்தின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு உதவுகின்றன. கண்டி அரசின் முதல் மன்னன் சேனாசம்மத விக்கிரமபாகுவால் (1469 – 1511) கண்டி கடலாதெனிய விகாரையில் 1477ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ள சிங்களப்பாறைக் கல்வெட்டு (உரு.05) அவற்றில் முதன்மையானது. “மட்டக்களப்பு” என்ற பெயரை முதன்முதலில் குறிப்பிடும் வரலாற்று ஆவணம் இது தான்[7] (Codrington 1994:13-15).  இதே விகாரையில் பொறிக்கப்பட்டுள்ள கம்பளை அரசன் நான்காம் புவனேகபாகுவின் (1344 – 1354) கல்வெட்டில் “கேசவ வண்ணக்கன்” என்றோர் அரச பிரதானியின் பெயர் இடம்பெறுகிறது (Paranavitana 1994:101-108). வண்ணக்கர் என்பது கீழைக்கரையின் கோவில்களில் இன்றும் முக்கிய இடம் வகிக்கும் நிர்வாகியின் பதவிப்பெயராக விளங்குகின்றது. வண்ணக்கன் என்ற பதவிப்பெயர் இடம்பெற்றுள்ள மிகப்பழைய கல்வெட்டு ஆதாரங்களில் ஒன்று, கடலாதெனிய விகாரைக் கல்வெட்டு ஆகும்[8]. இவ்வாறே பொலனறுவை, அனுராதபுரம், திருக்கோணமலை உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் கணிசமான கல்வெட்டுக்கள் கீழைக்கரை பற்றிய பல்வேறு தரவுகளைத் தம்வசம் வைத்திருக்கின்றன.

எவ்வாறெனினும், பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கீழைக்கரையில் தமிழ்க்கல்வெட்டுக்கள் மாத்திரமே கிடைப்பதுடன், கிடைக்கும் கல்வெட்டுக்களின் எண்ணிக்கையும் சடுதியாகக் குறைந்துவிடுகிறது. அவற்றில் 1519ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டு திருக்கோவில், தம்பிலுவில் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள கோட்டை மன்னன் ஆறாம் வி`சய|பாகுவின் (1509 – 1621) இரு கல்வெட்டுக்கள், ஐரோப்பியர் வருகையையும், அவற்றின் பின்னணியில் கீழைக்கரையில் ஏற்பட்ட கோட்டை அரசின் செல்வாக்கையும் கற்பதற்கு முதன்மையான ஆதாரங்களாகி விடுன்றன (Nevill 1885:04, இந்திரபாலா 1968:40-43, பத்மநாதன் 2013:429-446).

அதே போல், இன்று இருப்பிடம் தெரியாது மறைந்து விட்ட வீரமுனைச் செப்பேடுகளும், சம்மாந்துறைச் செப்பேடுகளும், கீழைக்கரையிலிருந்த மட்டக்களப்புத் தேசத்தோடு கண்டி அரசர்கள் கொண்டிருந்த உறவுக்குச் சான்றுகளாகும். இவற்றில் வீரமுனைச் செப்பேடு புவனசிங்க சுவாமி எனும் கண்டி அரசன் காலத்தில் வீரமுனைக்கு சிந்தாத்திரைப் பிள்ளையாரைக் கொண்டுவந்த பன்னிரண்டு மதுரைச் செட்டிமார்கள், ஒரு அரசகுமாரத்தியை அழைத்து வந்து மன்னனுக்குக் கொடுத்து, மல்வத்தை ஊரின் அருகே சில வயல் நிலங்களைப் பெற்றுக்கொண்டதைச் சொல்கிறது. நீதிமன்ற வழக்கொன்றில் ஆதாரமாக வழங்கப்பட்ட இச்செப்பேட்டின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானமை பற்றி பதிவுசெய்யும் கா.இந்திரபாலா இதை மெய்யான செப்பேடு என்று ஏற்றுக்கொள்ள, சி.பத்மநாதன் இதைப் போலி என்று மறுக்கிறார். போலி என்று நிரூபிக்க சி.பத்மநாதன் முன்வைக்கும் வாதங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவாகவே உள்ளன (இந்திரபாலா 1968:43-46; பத்மநாதன் 2013:457-470).

சம்மாந்துறைச் செப்பேடு, பொபி 1693ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இராசிங்க மகாராசாவால் இராமநாத பிராமணர் என்பவருக்கு சம்பாந்துறைக்கடுத்த பண்டித்தீவு வெளிப்பத்து கோணவட்டவான் வெளி, கோட்டான்பத்து என்பன கொடுக்கப்பட்டதைச் சொல்கிறது (இந்திரபாலா 1968:47-50; பத்மநாதன் 2013:470-78). இராசிங்க மகாராசாவை கண்டி மன்னன் இரண்டாம் இராசசிங்கனாக (1637 – 1687) அடையாளம் காண்கின்றனர் வரலாற்றறிஞர்கள். அவன் மறைந்தபின்னர் கண்டி அரசின் கீழிருந்த மட்டுக்களப்பு வன்னிபங்களால் இச்செப்பேடு எழுதி வழங்கப்பட்டிருக்கவேண்டுமென அனுமானிப்பார் சி.பத்மநாதன்.

இப்படி, பொறிப்புச் சான்றுகளைப் பலவிதமாகப் பயன்படுத்தி நாம் கீழைக்கரையின் வரலாற்றைக் கட்டியெழுப்ப முடியும். கூடவே இந்தக் கல்வெட்டாதாரங்கள் கண்டறியப்பட்ட இடங்களிலுள்ள இடிபாடுகள், கட்டடச் சிதைவுகள், கைவினைப்பொருட்கள், நாணயங்கள், சிலைகள் முதலியவற்றிலிருந்தும் பல்வேறு வரலாற்றுச் செய்திகளை நம்மால் ஊகித்துக்கொள்ளமுடிகின்றது.

தொடரும்.

அடிகுறிப்பு

[1] பாகதம் (பிராகிருதம் – ப்ராக்ரு_த, prākṛta ) என்பது, இந்தியத் துணைக்கண்டமெங்கும்  பேச்சுவழக்கில் புழங்கிய பாகதம், மாகதி, சௌரசேனி, பாலி முதலான இந்தோ-ஆரிய மொழிகளைக் குறிக்கும் பொதுப்பதமாகும். பொதுவாகப் பாகதத்தை சங்கதத்தின் (சமற்கிருதம் – `சம்`ச்க்ரு_தம், saṃskṛtam) பேச்சுவழக்குகளாகச் சொல்வது வழக்கமெனினும் பாகத மொழிகள் சங்கதத்தை விடப் பழைமையானவை என்பதே பொருத்தமானது. பாகத மொழிகளில் ஒன்றான ஈழப்பாகதம், பாலிக்கு மிக நெருக்கமானது என்பதுடன், இலங்கைப் புலமையாளர்கள் மத்தியில் எலு என்றும், சிங்களப்பாகதம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. ஈழப்பாகதம் பொபி 7 – 8ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இன்றைய சிங்களமாக மாறத் துவங்கிற்று. (Ranesinghe 1900:1-10, Rajan 2008:51-52).  

உதா: தர்மம். சங்கதம்: ||தர்ம – Dharma ; பாலி: ||தம்ம – Dhamma ;  எலு: ||தஃகம – Dahama ;  சிங்களம்: ||தஃகம், Daham.

[2] பரணவிதானவால் மட்டு – அம்பாறை மாவட்டங்களில் 166 பிராமிக் கல்வெட்டுக்கள் வாசித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. திருக்கோணமலையின் கொட்டியாரப்பற்றில் அவரால் 09 பிராமிக் கல்வெட்டுக்கள் வாசிக்கப்பட்டுள்ளன. (No.s 382-387, 1171-1173). இவற்றில் பெரும்பாலான கல்வெட்டுக்கள் தற்போது மீள்வாசிப்பைக் கோருவதையும், அதே இடங்களிலுள்ள சில தமிழிக் கல்வெட்டுக்கள் பரணவிதானவால் வாசிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளமையும் இலங்கை ஆய்வுலகில் சர்ச்சைக்குரிய விடயங்களாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. (Seneviratne, 1989:111-119 ; புஷ்பரட்ணம், 2003:112-150 ; பத்மநாதன், 2013:1-48)

[3] நாகர்களின் தமிழிக் கல்வெட்டுக்கள் பற்றிய இந்தப் புதிய கண்டுபிடிப்புகளை வைத்து சி.பத்மநாதனால் எழுதப்பட்ட நூல் (2016) இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றெனினும், தமிழ் வாசகர்களாலேயே கூட அத்தனை கொண்டாடப்படவில்லை. அதில் கூறப்பட்ட விடயங்கள் மிகப்புதுமையாக இருப்பதாலும், விளக்கப்படங்கள் தெளிவின்றி ‘மிகைபடக் கூறலோ’ என்று ஐயுறும் வண்ணம் அமைந்திருப்பதாலும் இது நேர்ந்திருக்கக்கூடும். ஆனால் அந்நூல் இலங்கை  வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்ற ஒன்று; அதில் வருகின்ற புத்தம்புதுக் கருத்துக்கள் மீள்பார்வைகள் – விமர்சனங்கள் வழியே செம்மையூட்டப்படவேண்டுமேயன்றி முற்றாகத் தவிர்க்கப்படலாகாது. கடந்த பத்தாண்டுகளில் இலங்கைத் தொல்லியலில் நிகழ்ந்த புதிய பாய்ச்சலைத் திறம்பட ஆவணப்படுத்தியுள்ள இந்நூலை தமிழ் வாசகர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

[4] ‘பத’ (|பத, Bata) என்ற ஈழப்பாகதச் சொல்லை கல்வெட்டு அறிஞர்கள் ஆரம்பத்தில் “பரதர்” (||பரத, Bharatha) என்று வாசித்தார்கள். ஆனால் பரத என்ற சொல்லை பெரும்பாலான இடங்களில் அப்படியே பிராமிக்கல்வெட்டில் அக்கால  மக்கள் குறிப்பிடும் போது, வேறு இடங்களில் பத என்று உருத்திரித்துக் குறிப்பிடவேண்டிய தேவை ஏன் எழுந்தது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. எனவே ‘பத’ என்பது வேறொரு தனித்த இனக்குழு ஆகவேண்டும் என்று முடிவுகாண்கிறார் பத்மநாதன் (2013:19-20). பத என்ற ஈழப்பாகதச் சொல்லை சங்கதத்திலோ பாலியிலோ பட்டன் (||ப|ட்|டர், Bhatta) என்று அல்லது பக்தன் (||பக்|த, Bhakta) என்று எழுத முடியும் (Paranavitana 1970:116). பக்தன் தமிழில் பத்தன் என்று ஆகும்.  இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் போன தலைமுறை வரை வழக்கில் இருந்த “பத்தன்” என்ற ஆட்பெயராக அச்சொல்லை வாசிக்க இயல்வது ஒரு ஆர்வமூட்டக்கூடிய ஊகமாகும்.  

[5]  உலகவரலாற்றில் குறுணிக்கற்காலம் (Mesolithic period), பெருங்கற்காலம் (Megalithic period) என்பவை  மனித நாகரிக வளர்ச்சியில் கல்லாயுதங்கள், கற்கருவிகளின் அளவுகளில் மாற்றம் நிகழ்ந்த இரு வேறு காலகட்டங்களைக் குறிக்கும். குறுணிக்கற்கால மாந்தர்  குறுகிய கல்லாயுதங்களையும் கற்கருவிகளையும் பயன்படுத்தியவர்கள். நாடோடிகளாகவும் வேடுவர் – சேகரிப்போராகவும் இருந்தவர்கள். இவர்கள் இலங்கையில் வாழ்ந்த சான்றுகள் இற்றைக்கு முன் 38,000 முதல் கிடைக்கின்றன (Perera 2014:29).  ஆனால் பெருங்கற்கால மனிதர் பொமு 800ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு அறிமுகமானார்கள். இவர்கள் ஒப்பீட்டளவில் குறுணிக்கற்கால மாந்தரை விட நாகரிகமானவர்கள்.  பெருங்கற்களைப் பயன்படுத்தி ஈமக்கல்லறைகளை அமைக்கும் வழக்கம் கொண்டிருந்தார்கள். ஊர்களின் தோற்றம், மட்பாண்டம் முதலிய கைத்தொழில்கள், இரும்பின் பாவனை, வேளாண்செய்கை, என்பன பெருங்கற்கால மாந்தரின் சிறப்பியல்புகள். பண்பாட்டாலும் மொழியாலும் வேறுபட்டிருந்த குறுணிக்கற்கால மாந்தருக்கும் பெருங்கற்கால மாந்தருக்கும் இடையே இனக்கலப்பு ஏற்பட்டு குறுணிக்கற்கால மாந்தர் அவரிலும் மேம்பட்ட பெருங்கற்கால மாந்தருடன் கலந்து மறைந்தார்கள் என்பது மானுடவியல் கோட்பாடு (பத்மநாதன் 2013:25-29).

[6] சேறுவில் அல்லைக் கிராமத்தின் உள்ளூர்க் குடிமகனொருவர் 1963இல் பழைய கட்டட இடிபாடொன்றுக்கு அருகே மண்ணை அகழ்ந்தபோது பெறப்பட்ட அல்லைச் செப்பேடு, நீலாப்பளை விகாரத்து தேரர் மூலம் தனக்குக் கிடைத்ததாகச் சொல்கிறார் ஆய்வாளர் பெர்னாண்டோ (Fernando 1978:73). அச்செப்பேட்டில் “தும்பாறை” என்றோர் இடம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்பெயரிலமைந்த குளமொன்று இன்றும் சேறுவில் பகுதியில் அமைந்திருக்கிறது.

[7] இக்கல்வெட்டு, கண்டிப்பிராந்தியங்களும் மட்டக்களப்பு, திருக்கோணமலை, மாதோட்டம் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதியும் புதிதாக உருவான கண்டி அரசின் உடனடி ஆளுகைக்கீழ் வந்ததைச் சொல்வதாகலாம். எவ்வாறெனினும் அடுத்த இருநூறாண்டுகளுக்கு வடக்கே யாழ்ப்பாண அரசும், கிழக்கே வன்னிப அரசுகளும் பலம் பெற்றுத் திகழ்ந்தன என்பது வேறு வரலாற்று ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது. குறிப்பாக இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட நாற்பதாண்டுகளில் மட்டக்களப்பின் தென்பகுதி கோட்டை அரசின் ஆளுகையின் கீழ் இருந்ததைச் சொல்கின்றன தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் கல்வெட்டுக்கள் (பார்க்க: மேலது).

[8] கண்டி அரசின் காலத்தில் அரச கருவூலத்தை மேற்பார்வை செய்யும் “வண்ணக்கு நிலமை” என்றோர் பதவி அரண்மனையில் காணப்பட்டிருக்கிறது. நாணயங்களின் தரத்தைச் சோதிக்கும் “வண்ணக்கர்கள்” பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களும் சொல்கின்றன. வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்,  விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் முதலிய பெயர்களில் சங்ககாலப் புலவர் வாழ்ந்துள்ளனர். தமிழகத்தின் ஈரோடு அறச்சலூரிலுள்ள பொ.பி 2ஆம் நூற்றாண்டு இசைக்கல்வெட்டில் மணியவண்ணக்கன் என்றொருவர் குறிப்பிடப்படுகிறார்.  இந்தப் பின்னணியிலேயே கீழைக்கரைக் கோவில்களின் கருவூலச் செல்வங்களைப் பாதுகாத்து மேற்பார்வை செய்யும் வண்ணக்கர்கள் வழக்கில் வந்திருக்கவேண்டும்.

உசாத்துணை

  1. இந்திரபாலா, கா. (1968). “ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள்”, சிந்தனை, மலர் 2, இதழ் 1-2, பப.35-50.
  2. தில்லைநடேசன், ச. (2015). பண்டைய இலங்கையின் இனக்குழுக்களிலிருந்து இனங்களின் உருவாக்கம். ஆக்காட்டி, இதழ் 09, பப.16-23.
  3. பத்மநாதன், சி. (2013). இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் – II. கொழும்பு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  4. __________________. (2016). இலங்கைத் தமிழர் வரலாறு: கிழக்கிலங்கையில் நாகரும் தமிழரும் (கிமு 250 – கிபி 300). கொழும்பு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  5. புஷ்பரட்ணம், ப. (2003). தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு. யாழ்ப்பாணம்: பவானி பதிப்பகம்.
  6. Codrington, H.W. (1994). The Gadaladeniya Inscription of Senasammata Vikramabahu. in Codrington, H.W., & Paranavitane, S. (eds.) Epigraphia Zeylanica, Volume 4, pp. 8-15.
  7. Coperahewa, S. (2022). The lexicography of Sinhala. International Handbook of Modern Lexis and Lexicography, Springer.
  8. Fernando, P.E.E. (1978). Allai Copper Plate Charter of King Nissankamalla, The Sri Lanka Journal of the Humanities,  Vol. IV(1,2), pp.73-91.
  9. Mahadevan, I. (2010.06.24). An epigraphic perspective on the antiquity of Tamil. The Hindu. Retrieved from https://www.thehindu.com.
  10. Nevill, Hugh. (1885 September – October). The Taprobanian, Bombay:London Education Society’s Press.
  11. Paranavitana, S. (1970). Inscriptions of Ceylon: Volume I, Ceylon: Department of Archaeology.
  12. _________________. (1994). Gadaladeniya Rock Inscription of Dharmmakirtti Sthavira. in Codrington, H.W., & Paranavitane, S. (eds.) Epigraphia Zeylanica, Volume 4, pp. 90-110
  13. Perera, H.N. (2014). Prehistoric Sri Lanka. Journal of the Royal Asiatic Society of Sri Lanka, Vol. 59, No. 2, pp. 23-41.
  14. Rajan, K. (2008). Situating the Beginning of Early Historic Times in Tamil Nadu: Some Issues and Reflections, Social Scientist, Vol. 36, (1/2), pp. 40 -78.
  15. Ranawella, G.S. (2004). Inscriptions of Ceylon, Vol V, pt II, Sri Lanka: Department of Archaeology.
  16. __________________. (2018). History of the Kingdom of Rohana: From the Earliest Times to 1500 AC. Colombo: Ministry of Higher Education and Department of Archaeology.
  17. Ransinghe, W.P. (1900). The Sinhalese Language: Its Origin and Sructure, Colombo: Author.
  18. Krishna Sastri, H. (1913) Inscription No. 92. On the South Wall Third Tier. South Indian Inscriptions, Vol. II:(04), p. 424 – 428.
  19. Seneviratne, S. (1989). Pre-state chieftains and servants of the state: a case study of Parumaka. Sri Lanka Journal of Humanities, XV, pp. 99-131.
  20. Vijitha Kumara, S. (2016). A Critical Edition of the Nalāṭa Dhātuvaṃsa: Chapter III. WWJMRD 2016; 2(2), pp.32-43.

 

https://ezhunaonline.com/historical-evidence-of-keekhakarai

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : பாளி சிங்கள இலக்கியங்கள்

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

 

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர்.

கீழைக்கரை தொடர்பான எழுத்துச் சான்றுகளில் பௌத்த பாளி (பாலி – pāli) இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள், பிறநாட்டவரின் பயணக்குறிப்புகள், காலனித்துவ காலக் குறிப்புகள் என்பன அடங்கும்.

பாளிமொழி  இலக்கியங்கள்

மகாவம்சம் (2)

புத்த சமயத்தின் பரவலோடு, பாளி மொழியில் பல இலக்கிய முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் “வம்சக்கதை” என்ற வகையறாவைச் சேர்ந்த நூல்கள் முக்கியமானவை ஆகும். குறிப்பிட்ட புத்த சமயப் பேசுபொருளொன்றை அல்லது பலவற்றை எடுத்துக்கொண்டு இந்த நூல்கள், அரசியல் வரலாற்றுக் காலகட்டமொன்றை விவரிக்கின்றன. இவற்றில் மிகப்பழையது தீபவம்சமாகும். இதை அடுத்து எழுந்த மகாவம்சம், அதன் தொடர்ச்சியான சூளவம்சத்துடன் இணைத்து இலங்கையின் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக முன்வைக்கப்படுகின்றது. இவற்றைத் தவிர, தாதுவம்சம் (dhātuvamsa – ||தாதுவம்`ச), தூபவம்சம் (thūpavamsa ~தூபவம்`ச), மகாபோதிவம்சம் (mahābōdhivamsa மஃகா|போ||திவம்`ச), லலாடதாதுவம்சம் (lalātadhātuvamsa –  லலா|ட||தாதுவம்`ச), அத்தவனகல்லவிகாரவம்சம் (hattavanagallavihāravamsa – ஃகத்தவன|கல்லவிஃகாரவம்`ச)[1] முதலிய பல  வம்ச நூல்கள் பாளி மொழியில் எழுந்துள்ளன.

இந்த வம்ச நூல்களில், மகாவம்சம் (5ஆம் நூற்றாண்டு – தற்போதுவரை), லலாடதாதுவம்சம் (10ஆம் நூற்றாண்டு), முதலிய வம்ச நூல்கள் நமது ஆய்வுக்குப் பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன. மகாவம்சதீகை அல்லது வம்சத்தப்பகாசினி என்று அழைக்கப்படும் மகாவம்சத்தின் உரைநூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பழைய மகாவம்சமானது, மகாவம்சம் – சூளவம்சம் என்று இருபெரும் பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தின் உண்மையான பெயர் தான் மகாவம்சம். பின்னாளில் முழு நூலும் அதே பெயரைப் பெற்றுக் கொண்டது. 37 அத்தியாயங்களைக் கொண்ட மகாவம்சத்தின் முதல் பாகம், ஐந்தாம் நூற்றாண்டில் மகாநாம தேரரால் எழுதப்பட்டது. இதில் இன்றைய இறக்காமம் பகுதியில் அமைந்திருந்த உரோகண நாட்டின் தீர்க்கமண்டலமும் அதை ஆண்ட துட்டகாமணி மன்னனின் சகோதரன் சத்தாதீசன் பற்றிய கதைகளும் முக்கியமானவை. மகாசேன மன்னன் சிவாலயங்களை அழித்த இடங்களாகச் சொல்லப்படும் கோகர்ணமும் ஏராவுலுமண்டலமும் இன்றைய திருக்கோணேச்சரமும் ஏறாவூராகவும் கருதப்படுகின்றன.

அட்டவணை

சூளவம்சம் (தமிழ்: சிறிய வம்சவரலாறு) என்று பொதுவில் அறியப்படும் மகாவம்சத்தின் இரண்டாம் பாகமானது, சிறிமேகவண்ண மன்னனிலிருந்து கீர்த்திசிறீ ராசசிங்க மன்னன் வரையான அரசர்களைப் பாடுகின்றது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டது இந்நூல். மகாவம்சத்தை யேர்மன் (Germen) மொழிக்கு மொழியாக்கம் செய்த வில்லியம் கைகர், சூளவம்சத்தில் மொழிநடையை வைத்து மூன்று தனித்தனிப் பாகங்களை இனங்கண்டிருக்கிறார் (அட்டவணை 1). அதிலும்  முதற்பாகமானது இருவேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பது ஊகிக்கப்பட்டுள்ளது. புத்த தந்ததாதுவின் வருகை முதல் சோழர் வருகை வரை ஒருவரும், அதன் பின்னர் முதலாம் பராக்கிரமபாகு வரை இன்னொருவரும் இந்த சூளவம்சத்தின் முதற்பாகத்தை எழுதியிருக்கவேண்டும். பொதுவாக தர்மகீர்த்தி தேரரை இந்த இருவரில் ஒருவராகக் கருதுவதுண்டு.

மகாவம்சம்

சூளவம்சத்தின் முதற்பாகமானது, இலங்கைத்தீவின் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு பகுதிகளில் பரந்திருந்த உரோகண நாட்டின் எழுச்சியைப் பாடும் பகுதி என்ற வகையில் முக்கியத்துவமடைகின்றது. இலங்கையின் சிங்கள வரலாற்றின் நிகரற்ற வீரர்களாக இன்று சித்திரிக்கப்படும் முதலாம் வி|சயபாகு, மற்றும் முதலாம் பராக்கிரமபாகு ஆகியோர் இந்தப்பிராந்தியத்திலேயே உதிக்கிறார்கள். அந்த இருவரும் கீழைக்கரையில் இருந்த பல குடியிருப்புக்களில் எதிர்ப்புகளையும் கிளர்ச்சிகளையும் சந்தித்ததையும் இப்பாகம் பதிவுசெய்கிறது.  இந்தக் கிளர்ச்சிகளின் மையங்களாக இருந்த இடங்களில் கீழைக்கரையின் ஏறாவூர் (ஏறாகுலு) அக்கரைப்பற்றுத் தெற்கிலுள்ள சாகாமம், சம்மாந்துறைப்பற்றின் மல்வத்தை, தீகவாபி என்பன முக்கியமானவை ஆகும் (மவ. 74:89-98).

கீழைக்கரையின் வட அந்தமான கொட்டியாரப்பற்று பகுதியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கயபாகு மன்னன் கந்தளாயில் இறக்கும்போது, அவன் உடல் பராக்கிரமபாகுவுக்கு எதிரான, அவன் அமைச்சர்களால் கொட்டியாரத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. (மவ. 72:06)  பராக்கிரமபாகு உரோகணத்துக் கிளர்ச்சிகளை அடக்க கீழைக்கரைக்கும் அதன் தெற்கேயும் படையனுப்பிய வேளையில் அதே கொட்டியாரத்தில் இருந்த சிங்கள வீரர்களும் கேரள வீரர்களும் வேளைக்காரப்படையினருடன் இணைந்து, இராச நாட்டுப் பகுதியைக் கைப்பற்ற முயன்றிருக்கிறார்கள் (மகாவம்சம் 74:44-45).

முதலாம் வி|சயபாகுவிற்கும் முதலாம் பராக்கிரமபாகுவுக்குமிடையே இலங்கை அரசியல் சூழலில் கீழைக்கரை பெற்றுக்கொண்ட முக்கியத்துவத்தையும் இப்பகுதியில் விரிவாகக் கற்கமுடிகின்றது. அனுராதபுரமும் பொலனறுவையும் அமைந்திருந்த இராசநாட்டை விட, தெற்கே இருந்த உரோகண நாடு பலம்பெற்று எழுந்த காலப்பகுதியாக இக்காலத்தை அறிந்துகொள்ளமுடிகின்றது. பொலனறுவை மணிமுடி யாருக்கு உரியது என்பதில் கலிங்க குலத்துக்கு எதிராகப் போட்டியிட்ட பாண்டிய ஆரிய வம்சம், உரோகணத்தைத் தலைமையிடமாகக் கொண்டே போராடிக்கொண்டிருந்தது என்ற வரலாற்றுச் செய்தியோடு இணைத்தே இந்த மகாவம்சப் பகுதியை வாசிக்கவேண்டும். முதலாம் பராக்கிரமபாகுவுக்கு எவ்விதத்திலும் சளைத்தவனாயிராத முதலாம் கயபாகு (Gajabāhu – |க|ச|பாஃகு) மன்னன் பற்றிய குறிப்புகளும் இப்பகுதியில் தான் இடம்பெறுகின்றன. ஆனால், இப்பகுதியை எழுதிய ஆசிரியரின் பக்கச்சார்பால், பராக்கிரமபாகு அதீதமாகப் புகழப்பட, கயபாகு ஓரளவு குறைத்தே மதிப்பிடப்படுகிறான். நடுநிலையான பார்வையுடன் இப்பகுதியை ஆராயும்போது கயபாகு, அவனுக்கு முந்திய விக்கிரமபாகு உள்ளிட்ட பல மன்னர்களின் வீரதீரம் பராக்கிரமபாகுவுக்குச் சமனானது என்றே கொள்ளமுடிகின்றது.

சூளவம்சத்தின் இரண்டாம் பாகம்,  80 – 90ஆம் அத்தியாயத்தையும்,  12ஆம் நூற். முதல் 14ஆம் நூற். வரையான காலப்பகுதியையும் அடக்குகின்றது. இதை எழுதியோர் யாரென்று தெரியவில்லை. 12ஆம் நூற்றாண்டில் முதலாம் பராக்கிரமபாகுவிற்குப் பின் இலங்கையின் அரசியல் நிலைப்பாட்டைச் சொல்லும் இப்பாகம், தம்பதெனி அரசை ஆண்ட நான்காம் பராக்கிரமபாகு காலம் (1302 – 1326) வரை விவரிக்கின்றது.  இந்த நான்காம் பராக்கிரமபாகு காலத்தில் தான் (1310), இன்று கிடைக்கும் இலங்கையின் மிகப்பழைய இலக்கியமான சரசோதிமாலை எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாவம்சம்-1

சூளவம்சத்தின் இரண்டாம் பாகத்தில் கலிங்க மாகன் காலத்தில் கோவிந்தசிலை மலையில் அரசுபுரிந்த சிங்கள மன்னன் பற்றிய தகவல் முக்கியமானது. இன்று கோவிந்தகெல என்று அழைக்கப்படும் கோவிந்தசிலை  கழிகாமமலை என்ற பெயரில் மட்டக்களப்பின் மேற்கெல்லையாகக் கருதப்பட்டது. மேலும் இந்தோனேசியாவிலிருந்து படையெடுத்து வந்த சாவகன் சந்திரபானுவின் படைகள், கீழைக்கரைக்குத் தெற்கே தான் தரையிறங்கின என்ற தகவலும், உரோகணத்தை வன்னிய அரசர்கள் ஆண்டமை உள்ளிட்ட பல தகவல்களும் இந்த இரண்டாம் பாகத்தில் கிடைக்கின்றன.

சூளவம்சத்தின் மூன்றாம் பாகம், 91 – 101 ஆம் அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. இந்தப் பாகம், 1815 இல் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றுவதுடன் நிறைவடைகின்றது.  எழுதியோர்  திப்பட்டுவாவி சுமங்கல தேரரும் கிக்கடுவை சிறீ சுமங்கல தேரரும்.  இப்பாகம் எழுதப்படும்போது, உரோகணம் ஒரு தனித்த அரசியல் பிரிவாக விளங்கவில்லை என்பதால் உரோகணம் பற்றியோ கீழைக்கரை பற்றியோ மிகக்குறைவான தகவல்களே கிடைக்கின்றன.

இவ்வாறு பழைய மகாவம்சமும் சூளவம்சமும் ஒட்டுமொத்தமாக மகாவம்சத்தின் முதல் இரு தொகுதிகளாகக் கருதப்பட, 1815 இலிருந்து 2010 வரையான காலப்பகுதியில் புதிய மகாவம்சப் பாகங்கள் எழுதப்பட்டு, இதுவரை ஆறு தொகுதிகளாக 130 அத்தியாயங்களுடன் வெளிவந்துள்ளன (சரவணன், 2021). இலங்கை அரசின் அனுசரணையில் தற்போதும் மகாவம்சம் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது (Cultural Department, 2022). இன்றும் எழுதப்படுகின்ற உலகின் பழைமையான நீளமான தொடர் வரலாற்று இலக்கியம் என்ற பெருமையையும் மகாவம்சம் பெறுகின்றது.

மகாவம்ச உரைநூலான வம்சத்தப்பகாசினி, 10 அல்லது 11ஆம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படுகின்றது (Jegannathan, n.d) மகாவம்சத்தில் குறிப்பிடப்படாத விரிவான வேறு தகவல்கள் இந்நூலில் காணப்படுகின்றன. உதாரணமாக வலகம்பாகு மன்னன் காலத்தில் அவனுக்கு எதிராக, உரோகணப்பகுதியை திய்யன் என்ற பிராமணன் ஆண்ட விபரம் இந்நூலில் கூறப்படுகின்றது. விந்தையாக, மட்டக்களப்புக் குலப்பாடலொன்றில் “வலகம்பாகு மன்னன் திறைகேட்க அதை நாங்கள் கொடாது தவிர்த்தோம்” என்ற குறிப்பு வருகின்றது[2] (கமலநாதன் & கமலநாதன், 2005:69)..

மகாவம்சத்தை அடுத்து கீழைக்கரை பற்றிய வரலாற்றுத்தகவல்களைத் தரும் இரண்டாவது முக்கியமான வம்சநூல், லலாடதாதுவம்சமாகும் (அல்லது நளாட தாதுவம்சம்). தாதுவம்சம் என்று அறியப்படும் சிங்கள நூலும் இதுவும் வேறுவேறு. லலாடதாதுவம்சம் பத்தாம் அல்லது பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது (Vijithakumara, 2016:33). அதன்படி, புத்தரின் நுதல் என்பானது, உரோகணத்தின் மகாகமத்தை வந்தடைந்தமை, காகவண்ணதீசனின் தந்தை கோதாபயனால் கதிர்காமத்து பத்து உடன்பிறந்த அரசர்கள் கொன்றழிக்கப்பட்டமை, காகவண்ணதீசன் வரையான அரசர்களால் அமைக்கப்பட்ட விகாரங்கள், சேருவில என்ற இடத்தில் காகவண்ணதீசன் அமைத்த மங்கலமகாசேத்தியம் உள்ளிட்ட தகவல்கள் கீழைக்கரை தொடர்பான வரலாற்றைக் கட்டமைப்பதில் மிக முக்கியமானவை ஆகும்.

சிங்களமொழி  இலக்கியங்கள்

கீழைக்கரை பற்றிய சான்றுகளை வரிசைப்படுத்துவதில், பூ|சாவலிய, ரா|சாவலிய, நிகாய சங்கிரகய முதலியன சிங்களத்தில் எழுந்த வரலாற்று இலக்கியங்களில் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் பூ|சாவலிய  மயூரபாத பிரிவேனாவைச் சேர்ந்த புத்தபுத்திரர் என்பவரால் மூன்றாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் (1287 – 1293) எழுந்ததாகும். நிகாய சங்கிரகம் (சாசனாவதாரம் என்ற பெயரும் இதற்குண்டு) தேவரக்கித |சயபாகு என்பவரால் நான்காம் புவனேகபாகு மன்னன் (1341 – 1351) காலத்தில் எழுந்த நூல் (Davids, 1875:168 – 171). பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படும் ரா|சாவலிய  சிங்களத்தில் பெருமளவு பூரணமான வரலாற்றுத்தகவல்களை நிரல்படுத்திக் கூறும் நூல். இது, வி|சயன் வருகையிலிருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் வரையான அரசர்களின் காலத்தைப் பாடுகின்றது. இந்நூலிலும் கீழைக்கரை பற்றிய பல வரலாற்றுத்தகவல்கள் கிடைக்கின்றன. உதாரணமாக கண்டி மன்னன் இரண்டாம் ரா|சசிங்கன் பாணமைப் பகுதியை ஆண்டான் என்ற குறிப்பு இந்நூலில் வருகிறது (Gunasekara, 2000:90).   இவை அனைத்திலும் மகாவம்சத்தில் குறிப்பிடப்படாத பலவகையான சரித்திரச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.

கடையம்பொத் என்று அழைக்கப்படும் பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிந்திய சிங்கள நூல்களும் முக்கியமானவை. கடையம்பொத் என்பது “எல்லைகளைக் குறிப்பிடும் நூல்” எனப் பொருள்படும். மாத்தளை கடையம், திரிசிங்கள கடையம், சிறீலங்காதுவீபய கடையம் என பல கடையம்பொத்தகங்கள் உள்ளன.  இவை பழைய இலங்கையின் இராசநாடு, உரோகணநாடு, மாயநாடு ஆகிய மூன்று “திரிசிங்கள” நாடுகளிலும் அமைந்திருந்த ஆட்சி நிருவாகப் பிரிவுகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. கீழைக்கரை அடங்கியிருந்த உரோகண நாட்டிலிருந்த ஆட்சிநிர்வாகப் பிரிவுகளாக மடகலப்புவ, மல்வத்துமண்டலம், தீகவாபிமண்டலம், பலுகம் தானவ, ஏராவுலுமண்டலம் முதலியவற்றைக் குறிப்பிடுகின்றன (Abeyawardana, 1999:100-102). இவற்றை இன்றைய சம்மாந்துறை, மல்வத்தை, இறக்காமம், பழுகாமம், ஏறாவூர் ஆகிய ஊர்களை அண்டியிருந்த ஆட்சிநிர்வாக பிரிவுகளாக இனங்காணலாம்.

தொடரும்.

அடிகுறிப்புகள்

[1] பாளியில் எழுந்த அத்தவனகல்லவிகாரவம்சம் சிங்களத்திலும் கிடைக்கிறது. அத்தனகலு வம்ச என்றழைக்கப்படும் அந்நூல், பொதுவாக 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கணிக்கப்படுகிறது.

[2] “….திறைபெறு வாலகம்பாகொருவன் தண்டு தளத்தொடு சென்றனர் கண்டு மனைக்கதிபர் விண்டு திறை பணம் என்றுமில்லாமலே வேண்டினதால் அகம் மகிழ் குகனே.” – முக்குகர் மரபு,  படையாட்சிகுடி சொல்வது.

உசாத்துணைகள்

  1. கமலநாதன், சா.இ. கமலநாதன், கமலா. (2005). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், கொழும்பு – சென்னை:குமரன் புத்தக இல்லம்.
  2. சரவணன்,என். (2018). “மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது”. நமது மலையகம். https://www.namathumalayagam.com
  3. Abeyawardana, H.A.P. Boundary Divisions of Mediaeval Sri Lanka. Polgasovita: Academy of Sri lankan Culture.
  4. Davids, T.W.R. (1875). Art.  VIII. — Three  Inscriptions of  Parakrama Baku the  Great from  Pulastipura,  Ceylon  (date circa  1180  a.d.). Journal of the Royal Asiatic Society of Great Britain & Ireland, Vol. 07.
  5. Gunasekara, B. (Ed.). (1900). Rajavaliya. Ceylon: George J.A.Skeen, Government Printers.
  6. Jegannathan, P. (n.d). History, Historiography and the “Sinhala-Buddhists”: A reply to Nirmal Ranjith Dewasiri. Retrieved from: http://ices.lk
  7. Vijitha Kumara, S. (2016). A Critical Edition of the Nalāṭa Dhātuvaṃsa: Chapter III. WWJMRD 2016; 2(2), pp.32-43.

 

https://ezhunaonline.com/written-evidence-for-keekhakarai-pali-sinhala-literature

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.