Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஒன்பது தசாப்தகால வரலாற்றைக் கொண்ட சமஷ்டி முறை குறித்த கருத்தாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒன்பது தசாப்தகால வரலாற்றைக் கொண்ட சமஷ்டி முறை குறித்த கருத்தாடல்

on January 4, 2023

04_sri_lanka_r-scaled.jpg?resize=1200%2C

Photo, CHANNEL4

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிமுறைகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூட்டிய நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் தமிழ்க்கட்சிகள் பிரதானமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை மூன்று கட்டங்களில் அணுகுவதற்கு யோசனைகளை முன்வைத்தது.

முதலாவது, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனவர்கள் விவகாரம், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரசினால் கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்களை விடுவித்தல், தொல்பொருளியல் திணைக்களம், வனங்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் போன்றவற்றின் உத்தரவின் பேரில் நிலங்களை சுவீகரிப்பதை நிறுத்துதல்.

இரண்டாவது, அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடாத்துதல்.

மூன்றாவது, அரசியலமைப்பு சீர்திருத்தத்துடன் சம்பந்தப்பட்டது. புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி கட்டமைப்பின் கீழ் அதிகாரத்தை பரவலாக்குதல்.

இவற்றில் இறுதி அணுகுமுறையான சமஷ்டி கட்டமைப்பு மூலமான தீர்வு குறித்து கொழும்பு சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் குறிப்பாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் அவதானிகள் கடுமையான எதிர் விமர்சனங்களை முன்வைத்துவருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அவர்களில் பலரும் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கும் தமிழ் தேசியவாதிகளின் நிலைப்பாடுகளுக்கு சார்பாக குடிப்பரம்பலோ, புவியியலோ அல்லது பொருளாதாரமோ இல்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.

ஆனால், அபூர்வமாக ஒரு சிலர் சமஷ்டி கட்டமைப்புக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா கடந்தவாரம் ‘பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும்; ஜனாதிபதி எதிர்நோக்கும் இரு பிரதான சவால்கள்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் சமஷ்டி குறித்து குறிப்பிட்ட ஒரு விடயம் கவனத்தைத் தூண்டுவதாக இருந்தது.

“சிங்கள கிராமத்தைப் பற்றி தரமான நாவல் ஒன்றை எழுதிய பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரியான லெனார்ட் வூல்வ் இலங்கை கிழக்கின் சுவிற்சர்லாந்தாக வரமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார். 1938 காலனித்துவ அரசாங்கத்துக்கு அனுப்பிய மகஜர் ஒன்றில் அவர் இலங்கைக்கு சமஷ்டி முறை உகந்தது என்ற தனது சிபாரிசை நியாயப்படுத்துவதற்கு அன்றைய இலங்கையில் வாழ்ந்த சகல சமூகங்களினதும் சனத்தொகை விபரங்களை சுவிற்சர்லாந்தின் ஒவ்வொரு கன்ரோனின் அளவுடனும் ஒப்பிட்டு விளக்கமளித்தார். உள்ளூர் மட்டத்தில் மாற்றத்தின் முகவர்களாக மக்கள் மாறுவதே அதிகாரம் பரவலாக்கப்பட்ட ஒரு முறைமையில் அல்லது சமஷ்டி கட்டமைப்பின் சாராம்சமாகும் ” என்று ஜெகான் பெரேரா அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பின்புலத்தில் இலங்கையில் சமஷ்டி பற்றிய வாதப்பிரதிவாதங்களின் வரலாற்றை சுருக்கமாக ஆராய்வது இன்றைய இளஞ்சந்ததி அரசியல் மாணவர்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

சமஷ்டி என்பதை தீண்டத்தகாத ஒரு சொல்லாக தென்னிலங்கை அரசியல் சமுதாயம் நோக்குகின்ற போதிலும், சமஷ்டி முறை யோசனை சுமார் ஒன்பது தசாப்தங்களாக நாட்டின் அரசியல் கருத்தாடல்களில் பேசுபொருளாக இருந்துவருகிறது என்ற வரலாற்று உண்மையை நிராகரிக்க முடியாது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) தமிழரசு கட்சியை (சமஷ்டி கட்சி) தொடங்கிய பின்னர் மாத்திரமே சமஷ்டி யோசனை அரசியல் ரீதியில்  சர்ச்சைக்குரியதாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் மாறியது.

தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி தீர்வுக்காக குரல்கொடுப்பதற்கு வெகு முன்னதாகவே 1920களின் நடுப்பகுதியில் இளம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சமஷ்டி முறையை ஆதரித்து குரல் கொடுத்தார். அது மாத்திரமல்ல 1920களின் பிற்பகுதியில் டொனமூர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்த கண்டி சிங்கள பிரதானிகள் இலங்கையில் சமஷ்டி முறையை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்தனர். இதை அரசியல் அறிஞர்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

ஒரு மாகாணமாக வடக்கு – கிழக்கு உட்பட  மூன்று மாகாணங்களைக் கொண்ட சமஷ்டி இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்று கண்டி பிரதானிகள் கோரிக்கை விடுத்தனர் என்பதை இன்றைய சந்ததி நம்பமறுக்கும்.

அம்பாந்தோட்டையில் பல வருடங்களாக உதவி அரசாங்க அதிபராக பதவிவகித்த பிரபலமான பிரிட்டிஷ் சிவில்சேவை அதிகாரி லெனார்ட் வூல்வ் 1930களிலேயே சுவிஸ் பாணியிலான சமஷ்டி முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று யோசனை முன்வைத்தார். சமஷ்டி பற்றிய அரசியல் கருத்தாடல்களில் இந்த உண்மைகள் இப்போது பெரும்பாலும்  நினைவுபடுத்தப்படுவதில்லை.

அரசாங்க அதிபராக பணியாற்றியவர் என்ற வகையில் வூல்வினால் தெற்கின் சிங்கள கிராமங்களின் வாழ்வியலை நன்கு விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அந்த அவதானிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பிரபலமான ‘காட்டுக்குள் ஒரு கிராமம்’ (A Village in the Jungle ) என்ற நாவலை எழுதினார்.

இங்கிலாந்து திரும்பிய பிறகு வூல்வ் தொழிற்கட்சியின் செயற்பாடுகளில் தீவிர பங்கேற்றதுடன் அதன் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராகவும் விளங்கினார். முதலாவது உலகப்போருக்கு  பின்னர் உடனடியாக இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்று சிபாரிசு செய்தவர்களில் அவரும் ஒருவர் என்று கூறப்பட்டது.

1938 காலனித்துவ அரசாங்கத்துக்கு வூல்வ் அனுப்பிவைத்த மகஜரில் இலங்கைக்கு சுவிஸ் பாணி சமஷ்டி முறையை சிபாரிசு செய்தார். அத்தகைய தீர்வொன்றை எதிர்க்கக்கூடியவர்கள் சமஷ்டி முறையைக் கொண்டிருக்கக்கூடிய அளவுக்கு இலங்கை பெரிய நாடு இல்லை என்ற வாதத்தை முன்வைப்பார்கள் என்பதை முன்னுணர்ந்து கொண்ட அவர் தனது சிபாரிசை நியாயப்படுத்துவதற்கு அன்றைய இலங்கையின் சகல சமூகங்களினதும் சனத்தொகை விபரங்களுடன்  சுவிற்சர்லாந்தின் ஒவ்வொரு கன்ரோனின் பரப்பளவையும் சனத்தொகையையும் ஒப்பிட்டு தெளிவான விளக்கத்தை அளித்தார்.

அந்த விளக்கத்தை தரும் அவரின் மகஜரின் முக்கிய பந்திகள் வருமாறு;

“சுதேச தமிழ் சிறுபான்மையினங்கள் (Indigenous Tamil Minorities) இலங்கைத் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் குவிந்து வாழ்கிறார்கள். கரையோர சிங்களவர்களை (Low country Sinhalese) விடவும் பல வழிகளில் மிகவும் வேறுபட்டவர்களான கண்டிய சிங்களவர்கள் (Kandyan Sinhalese) தீவின் மத்திய பகுதியில் ஒரு தனி வகையாக திரளாக வாழ்கிறார்கள்.

“சுவிஸ் பாணியில் குறைந்தது நான்கு கன்ரோன்களை உருவாக்கமுடியும் – கரையோர சிங்கள மாகாணம் (Low country Sinhalese province), கண்டிய சிங்கள மாகாணம், தமிழ் வடக்கு மாகாணம் மற்றும் தமிழ் கிழக்கு மாகாணம்; தேயிலை பெருந்தோட்டங்களில் பெரும்பான்மையானவர்களாக விளங்கும் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கி ஐந்தாவது கன்ரோன் ஒன்றையும் கூட உருவாக்கமுடியும்.

“அத்தகைய முறைமையொன்றை கொண்டிருக்கக்கூடிய அளவுக்கு இலங்கையும் அதன் உப பிரிவுகளும் பெரியவையல்ல என்ற ஆட்சேபம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இலங்கை சுவிற்சர்லாந்தை விடவும் பரப்பளவில் (10,000 சதுர மைல்கள்) பெரியது. இலங்கையின் சனத்தொகை சுமார் 53 இலட்சம். சுவிற்சர்லாந்தின் சனத்தொகை 40 இலட்சம். இலங்கையில் சுவிஸ் சமஷ்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டால் 2 இலட்சத்துக்கும் கூடுதலான  சனத்தொகையுடன் சிறிய கன்ரோனாக கிழக்கு மாகாணமே இருக்கும். சுவிற்சர்லாந்தின் சிறிய கன்ரோனின் சனத்தொகை சுமார் 14 ஆயிரம்; பெரிய கன்ரோனின் சனத்தொகை சுமார் 7 இலட்சம்.

“இலங்கையை ஒத்த சூழ்நிலைகளில் – அதாவது ஒன்றில் இருந்து மற்றது இனத்தால், மொழியால், மதத்தால் வேறுபட்டதும் மிகவும் வேறுபட்ட அளவுகளில் வாழ்கின்றதுமான சமூகங்கள் ஒற்றையான ஜனநாயக அரசொன்றில் சகவாழ்வு – சுவிஸ் சமஷ்டி கன்ரோன் முறை பிரத்தியேகமான வெற்றியை கண்டிருக்கிறது.

“இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடக்கூடியதாக அங்கு 27 இலட்சத்து 50 ஆயிரம் சனத்தொகையுடன் ஜேர்மன் மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள். தமிழர்களுடன் ஒப்பிடக்கூடியதாக 8 இலட்சத்து 24 ஆயிரம் சனத்தொகையுடன் பிரெஞ்சு மொழிபேசும் மக்களும்  சோனகர்களுடன் ஒப்பிடக்கூடியதாக 2 இலட்சத்து 84 ஆயிரம் சனத்தொகையுடன் இத்தாலி மொழிபேசும் மக்களும்  இருக்கிறார்கள். ஜனநாயக கன்ரோனும் சமஷ்டி முறையும் சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான நலன்களை பேணிப்பாதுகாக்கின்றன.”

லெனார்ட் வூல்வுக்கு சிங்கள மக்கள் மீது அனுதாபம் இருக்கவில்லை என்று அறிவுபூர்வமாக சிந்திக்கும் எவரும் குற்றஞ்சாட்டமாட்டார்கள். அதனால் சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான உரிமைகள் பற்றிய அவரின் கருத்துக்களை எந்த வகையிலும் தமிழர் ஆதரவு சாய்வைக்கொண்டவை என்று கூறமுடியாது. அவை பல வருடங்கள் இலங்கையில் வாழ்ந்து சேவை செய்து அதன் மக்களை நெருக்கமாக அறிந்துகொண்ட ஒரு முற்போக்கான ஆங்கிலேய காலனித்துவ நிருவாகியின் கருத்துக்களாகும்.

நாம் அறிந்தவரையில் தேயிலை பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாக அவர்களுக்கென்று தனியான கன்ரோனை சிபாரிசு செய்த ஒரே நபர்  லெனார்ட் வூல்வ்தான்.

கரையோர சிங்களவர்களுக்கும் கண்டிய சிங்களவர்களுக்கும் தனித்தனியான கன்ரோன்களை அவர் சிபாரிசு செய்தது இன்றைய சூழ்நிலைகளில் பொருத்தமில்லாததாக இருக்கலாம். ஆனால், சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்புகள் என்று வரும்போது வூல்வ் நிச்சயமாக  எதிர்காலத்தை மனதிற்கொண்டு சிந்தித்தார் என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

‘காட்டுக்குள் ஒரு கிராமம்’ என்ற நாவலை எழுதிய அந்த ஆங்கிலேயர் எப்போதோ இறந்துபோய்விட்டார். ஆனால், இனப்பிளவின் இரு மருங்கிலும் உள்ள எமது அரசியல் வர்க்கத்திடம் தொலைநோக்கு இல்லாத காரணத்தால் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றுக்கான எந்தவொரு தெளிவான அறிகுறியுமின்றி நாம் இன்னும் அரசியல் வனாந்தரத்தில் நிற்கிறோம்.

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

 

https://maatram.org/?p=10566

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.