Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹுமாயுன் வரலாறு: பழைய கோட்டை படிக்கட்டுகளில் கால் தவறி இறந்த மன்னனின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹுமாயுன் வரலாறு: பழைய கோட்டை படிக்கட்டுகளில் கால் தவறி இறந்த மன்னனின் கதை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரெஹான் ஃபசல்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஹுமாயூன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹுமாயூன் பற்றிய ஒரு கதை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. அவரது தந்தை பாபர் படுக்கையை மூன்று முறை சுற்றி வந்து, 'அல்லாஹ், உயிருக்கு ஈடாக உயிரைக் கொடுக்க முடியுமானால், என் மகன் ஹுமாயூனின் உயிருக்கு ஈடாக பாபரான நான் என் உயிரைக் கொடுப்பேன்' என்று கூறி பிரார்த்தனை செய்தார்.

”அந்த நாளில் இருந்து பாபரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. ஹுமாயூன் குணமடைய ஆரம்பித்தார். பாபர் படுக்கையில் விழுந்தார். அவர் பிழைக்க மாட்டார் என்று தோன்றியபோது, ஹுமாயூன் அங்கு அழைக்கப்பட்டார்.

ஹுமாயூன் தனது தந்தை இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஆக்ராவை அடைந்தார். பாபர் தனது தளபதிகள் அனைவரையும் கூட்டி, ஹுமாயூன் எனது வாரிசாக இருப்பார். நீங்கள் என்னை எப்படி கவனித்துக் கொண்டீர்களோ அதே போல அவரையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். தனது குடிமக்களையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது ஹுமாயூனுக்கு அவரது போதனையாக இருந்தது,” என்று ஹுமாயூனின் சகோதரி குல்பதன், ஹுமாயூனின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார்.

 

 
இப்ராகிம் லோதிக்கு எதிரான போரில் பாபர் பங்கேற்றார்

பட மூலாதாரம்,ATLANTIC

 
படக்குறிப்பு,

இப்ராகிம் லோதிக்கு எதிரான போரில் பாபர் பங்கேற்றார்

ஹுமாயூன் 1508 மார்ச் 6 ஆம் தேதி காபூலில் பிறந்தார். அவர் இந்தியாவின் சிம்மாசனத்தில் அமர்ந்தபோது, அவருக்கு 27 வயதுதான். அந்த இளம் வயதில் அவரிடம் இருந்த அனைத்து நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் கடைசி வரை அவருடன் இருந்தன. அதன் காரணமாக அவர் சில நேரங்களில் வெற்றியையும் சில நேரங்களில் கடுமையான ஏமாற்றத்தையும் சந்தித்தார்.

ஹுமாயூனுக்கு 12 வயது மட்டுமே ஆகியிருந்தபோது பாபர் அவரை பதக்‌ஷானின் ஆளுநராக்கினார். 17 வயதில் ஹுமாயூன் இந்தியாவை கைப்பற்றும் போரில் தனது தந்தையுடன் தோளோடு தோள் சேர்ந்து போரிட்டார்.

'ஹிஸ்ஸார் ஃபிரூஸாவின் ஆளுநரின் தலைமையில் இப்ராகிம் லோதியின் முக்கியப்படையை எதிர்கொள்ள நான் ஹுமாயூனை அனுப்பினேன். லோதியின் படைவீரர்களை அவர் தோற்கடித்தபோது, நான் ஹிஸார் ஃபிரூஸாவை ஹுமாயூனுக்கு பரிசாகக் கொடுத்தேன்.

பானிபட் வெற்றிக்குப் பிறகு ஆக்ராவை கைப்பற்ற அனுப்பினேன். அங்கு குவாலியர் அரசரின் குடும்பத்தினர் அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தனர், அதன் விலையில் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இரண்டரை நாட்களுக்கு உணவளிக்க முடியும்.

நான் ஆக்ராவை அடைந்ததும், என் மகன் அந்த வைரத்தை எனக்கு சமர்ப்பித்தான்.ஆனால் நான் அந்த வைரத்தை அவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டேன்,” என்று பாபர் தனது சுயசரிதையான 'பாபர்நாமா'வில் எழுதியுள்ளார்.

 

ஹுமாயூன்

பட மூலாதாரம்,APPEARANCE

பேரரசை வலுவாக்கும் மனவுறுதி

பாபரின் மரணத்தின் போது முகலாய அரசு மிகவும் பாதுகாப்பற்றதாக உணர்ந்தது. இதன் காரணமாக அவர் இறந்தபோது அந்த செய்தி மூன்று நாட்கள் வெளி உலகத்திடமிருந்து மறைக்கப்பட்டது. 1530 ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஹுமாயூன் இந்தியாவின் சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

”குதிரை சவாரி மற்றும் வில்வித்தையில் ஹுமாயூன் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் விருப்பம் அவரிடம் குறைவாக இருந்தது. தலைமை பண்பும் அவரிடம் மிகுதியாக இல்லை. மேலும் பல நேரங்களில் அவர் நம்பிய அவரது அரசு ஊழியர்கள் அவருக்கு மிகவும் தேவைப்படும்நேரத்தில் அவரை விட்டு விலகினர். ஆனால் தடைகள் வரும்போது தைரியத்தை இழக்காத குணமும் ஹுமாயூனிடம் இருந்தது. அதன் காரணமாக அவர் இழந்த சிம்மாசனத்தை மீண்டும் பெறுவதில் வெற்றி பெற்றார்,”என்று எஸ்.எம். பர்க்கே தனது 'அக்பர் தி கிரேட்டஸ்ட் முகல்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பேரரசராக ஹுமாயூன் தனது முதல் போரில் 1531 இல் ஜோன்பூருக்கு அருகில் மஹ்மூத் லோதியை தோற்கடித்தார். 1534 இல், ஷேர்ஷாவின் வளர்ந்து வரும் சக்தியை நசுக்க அவர் கிழக்கு நோக்கி செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவர் அங்கு சென்றடைவதற்கு முன், பகதூர் ஷாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அவர் திரும்ப வேண்டியிருந்தது. இதன் விளைவாக ஷேர்ஷாவின் வலிமை முன்பை விட அதிகரித்தது. 1534-35 இல் ஹுமாயூன் மால்வா மற்றும் குஜராத்தை வென்றார்.

ஹுமாயூன்

பட மூலாதாரம்,ATLANTIC

சௌசா போரில் ஹுமாயூனின் தோல்வி

1537 மார்ச் மாதம் ஷேர்ஷாவை வெல்வதற்காக ஹுமாயூன் மீண்டும் கிழக்கு நோக்கிச்சென்றார். வங்காளத்தின் தலைநகரான கெளரையும் கைப்பற்றினார். அந்த காலகட்டத்தின் பிரபல வரலாற்றாசிரியரான ஜோஹர் அஃப்தாப்சி, 'தஸ்கிராத்-உல்-வகியத்' என்ற தனது புத்தகத்தில், ”கௌரை கைப்பற்றிய பிறகு ஹுமாயூன் அந்தப்புரத்தில் அதிக நேரம் செலவிட்டார். நீண்ட காலம் அங்கிருந்து வெளியே வரவில்லை. அதற்குள் ஷேர்ஷா பனாரஸ் மற்றும் ஜோன்பூரைக் கைப்பற்றி, ஹுமாயூன் தலைநகருக்குத் திரும்புவதற்கு தடைகளை ஏற்படுத்தினார்,”என்று குறிப்பிட்டுள்ளார்.

” 1539 ஜூன் 7 ஆம் தேதி சௌசாவில் நடந்த போரில் ஹுமாயூன் தோற்கடிக்கப்பட்டார். இந்த சண்டையில் ஹுமாயூன் தானே முன்னின்று போரிட்டார். மேலும் ஒரு அம்பு அவரது கையை துளைத்தது. அவர் தனது வீரர்களை முன்னோக்கிச் செல்லுமாறு கட்டளையிட்டபோது, எந்த வீரரும் அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை. ஹுமாயூன் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓட வேண்டியிருந்தது.

கங்கையைக் கடக்கும்போது, ஆற்றின் வலுவான நீரோட்டத்தில் அவரது குதிரை அடித்துச் செல்லப்பட்டது. தண்ணீரை சுமந்து சென்றுகொண்டிருந்த ஒருவர் தனது கையைக்கொடுத்து ஹுமாயூனை நீரில் மூழ்காமல் காப்பாற்றினார். பின்னர் ஹுமாயூன் அவரை தனது சிம்மாசனத்தில் அரை நாள் உட்கார வைத்து தனது நன்றிக்கடனை செலுத்தினார்.

 

ஹுமாயூனை தோற்கடித்த ஷேர்ஷா சூரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹுமாயூனை தோற்கடித்த ஷேர்ஷா சூரி

கன்னோஜிலும் தோல்வியை சந்தித்தார்

அடுத்த ஆண்டு ஹுமாயூன் தான் சந்தித்த தோல்விகளுக்காக பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடங்கினார். ஆனால் அவரது தோழர்கள் பலர் அவரைக் கைவிட்டனர். 1540 மே 17 ஆம் தேதி கன்னோஜில் ஷேர்ஷா சூரியால் அவர் மீண்டும் தோற்கடிக்கப்பட்டார். அந்த நேரத்தில் ஹுமாயூனின் படைகள் ஷேர்ஷாவின் படைகளை விட மிக அதிகமாக இருந்தன.

”ஆப்கானிய வீரர்கள் ஹுமாயூனின் கண்களுக்கு முன்பாகவே ஆயுதங்களை களவாடினர். அப்போது ஹுமாயூன் ஒரு காலத்தில் தனது தந்தையுடன் இருந்த யானையை பார்த்தார். அவர் அந்த யானையின் மீது அமர்ந்தார். ஆனால் யானை பாகன் தன்னை எதிரிகளின் முகாமை நோக்கி அழைத்துச் செல்வதை உணர்ந்தார்.

வாளால் யானை பாகனின் தலையை வெட்டுமாறு அம்பாரியில் ஒளிந்துகொண்டிருந்த ஒரு திருநங்கை கூறினார். ஆனால் ஹூமாயூனுக்கு யானை சவாரி செய்யத் தெரியாது. யானை பாகன் இல்லாமல் அவரால் முன்னேற முடியாது. ஆனால் தனக்கு யானை சவாரி செய்ய ஓரளவு தெரியும் என்றும், அவரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் அந்த திருநங்கை அவரிடம் கூறினார். ஹுமாயூன் தனது வாளால் அந்த யானை பாகனின் தலையை வெட்டினார்,” என்று ஜோஹர் அஃப்தாப்சி எழுதுகிறார்.

அபுல் ஃபசல் இந்த சம்பவத்தை அக்பர்நாமாவில் விவரித்துள்ளார். ஆனால் அவர் திருநங்கை பற்றி குறிப்பிடவில்லை. ஹைதர் மிர்ஸா தோக்லட் தனது 'தாரிக்-இ-ரஷிபதி' என்ற புத்தகத்தில், ”அன்று 17,000 வீரர்கள் ஹுமாயூனுடன் சண்டையிட்டனர். ஆனால் அவர் அங்கிருந்து ஓடியபோது அவர் மட்டும் தனியாக இருந்தார். தலையில் தொப்பியோ, காலில் காலணியோ இல்லை. காலணிகளுடன் கூடவே அவரது தன்னம்பிக்கையும் தொலைந்து போனது,” என்று எழுதியுள்ளார்.

 

ஹூமாயூன்

பட மூலாதாரம்,JUGGERNAUT

சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு

ஹுமாயூன் கன்னோஜிலிருந்து ஆக்ராவிற்கு, கடன் வாங்கிய குதிரையில் பயணம் செய்தார். ஆனால் அவர் தோல்வி அடைந்த செய்தி அவருக்கு முன்னரே வந்துவிட்டது. ”ஆக்ராவிற்கு பாதி வழியில் பான்காவ் அருகே சுமார் 3,000 கிராமவாசிகள் ஹுமாயூனை தடுத்து நிறுத்தினர். தோற்கடிக்கப்பட்ட படைகளிடம் கொள்ளையடிப்பதில் அந்த கிராமவாசிகளுக்கு நிபுணத்துவம் இருந்தது. இந்த கிராம மக்களை சமாளிக்க ஹுமாயூன் தனது சகோதரர்களான ஹிந்தால் மற்றும் அஸ்கரி ஆகியோரிடம் உதவி கோரினார். ஆனால் அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். எப்படியோ அந்த கிராம மக்களை சமாளித்த ஹுமாயூன் ஆக்ராவை அடைந்தார்,” என்று ஜோஹர் எழுதுகிறார்.

ஆனால் அவரது தந்தை இறந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1540 ஜூலையில் ஹுமாயூன் ஆக்ராவையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

ஹூமாயூன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹுமாயூன் ஆக்ராவிலிருந்து ஓடத் தொடங்கியபோது ஷேர்ஷா தனது ராஜபுத்திர போர்வீரர் பஹதத் கெளரை ஒரு பெரிய படையுடன் அவருக்குப்பின்னால் அனுப்பினார்.

”ஹுமாயூனுடன் சண்டையிடுவதற்கு பதிலாக அவரை பின்தொடருமாறு கெளர் அறிவுறுத்தப்பட்டார். ஹுமாயூனை பின்தொடர்வதன் நோக்கம் அவரைப் பிடிப்பது அல்ல, அவரை இந்தியாவை விட்டு விரட்டுவது. ஹிந்தால் மற்றும் அஸ்கரி இருவரும் ஷேர்ஷாவிற்கு எதிரான முதல் போரில் ஹுமாயூனுடன் இருந்தனர். ஆனால் அவரைவிட்டுவிட்டு ஆக்ரா திரும்ப ஹிந்தால் முடிவு செய்தார்.

ஹுமாயூன் இல்லாத நிலையில் அவர் அங்கு ஆட்சியை கைப்பற்றினார். அவருடைய பெயரில் குத்பா வாசிக்கப்பட்டது. ஷேர்ஷாவை எதிர்த்துப் போராட ஒற்றுமையுடன் இணையுமாறு ஹூமாயூன் தனது சகோதரர்களிடம் கூறினார். ஆனால் அவரது சகோதரர் கம்ரான் அதை ஏற்கவில்லை. அவர் தனது வீரர்களுடன் லாகூர் புறப்பட்டார்,” என்று அப்பாஸ் சர்வானி எழுதியுள்ளார்.

”ஹுமாயூன் லாகூரிலிருந்து ஷேர்ஷாவுக்கு ஒரு செய்தி அனுப்பினார். நான் உங்களுக்காக முழு இந்தியாவையும் விட்டுவிட்டேன். குறைந்த பட்சம் என்னை லாகூரில் தங்க விடுங்கள் என்று அதில் அவர் தெரிவித்தார். நான் உங்களுக்காக காபூலை விட்டு வந்துள்ளேன். நீங்கள் ஏன் அங்கு செல்லக்கூடாது என்று ஷேர்ஷா பதில் அளித்தார். ஹுமாயூன் அடுத்த 15 ஆண்டுகளை டெல்லியின் சிம்மாசனத்தில் இருந்து தூரத்தில், இரான், சிந்து மற்றும் ஆப்கானிஸ்தானில் கழித்தார்,”என்று குல்பதன் பேகம் எழுதியுள்ளார்.

ஹுமாயூனின் கல்லறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹுமாயூனின் கல்லறை

இந்தியா மீது தாக்குதல்

ஷேர்ஷா 1545 மே மாதம் ஒரு வெடிப்பில் காலமானார். 1553 இல் அவரது மகன் இறந்த பிறகு, பேரரசு சிதறத் தொடங்கியது. 1554-ல் சலீம் ஷா சூரி இறந்துவிட்டதாகவும், அவரது மகன் மாமாவால் கொல்லப்பட்டதாகவும் காபூலில் செய்திகள் வரத் தொடங்கின. அப்போது ஹுமாயூன் இந்தியாவைத் தாக்கி, இழந்த தனது சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

நவம்பர் நடுப்பகுதியில் ஹுமாயூன் காபூலில் இருந்து இந்தியாவிற்கு அணிவகுத்துச் சென்றபோது அவரிடம் 3,000 வீரர்கள் இருந்தனர். இந்தியாவின் மீதான படையெடுப்பின்போது 1554 டிசம்பரில் ஹுமாயூன் சிந்து நதியைக் கடந்த போது, சூரி வம்சத்திற்கு மூன்று உரிமைகோரல்கள் இருந்தன. அவர்களில் மிகவும் முக்கியமானவர் சிக்கந்தர் ஷா ஆவார். டெல்லி முதல் பஞ்சாபில் ரோஹ்தாஸ் வரை அவரது கட்டுப்பாடு இருந்தது. இந்த போரில் பங்கேற்பதற்காக ஹுமாயூன் காந்தஹாரிலிருந்து பைராம் கானை அழைத்திருந்தார். அவருடன் ஹூமாயூனின் 12 வயது மகன் அக்பரும் இருந்தார்.

1555 பிப்ரவரி 24 ஆம் தேதி ஹுமாயூன் லாகூரில் நுழைந்தபோது, அவர் எந்த எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. சர்ஹிந்தில் நடந்த போரில் அக்பர் ஒரு பிரிவை வழிநடத்தினார். சிக்கந்தர் போர்க்களத்தை விட்டு ஓடி பஞ்சாப் காடுகளில் ஒளிந்து கொண்டார். ஹுமாயூனின் படை 1555 ஜூலை 23 அன்று டெல்லிக்குள் நுழைந்தது. ஆனால் அதிர்ஷ்டம் அவருக்கு நீண்ட நாட்கள் கைகொடுக்கவில்லை.

 

ஹுமாயூனின் மகன் அக்பர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹுமாயூனின் மகன் அக்பர்

படிக்கட்டுகளில் கால் தவறியது

1556 ஜனவரி 24 அன்று ரோஸ் வாட்டரை வரவழைத்த ஹுமாயூன் கடைசி டோஸ் ஓபியத்தை எடுத்துக் கொண்டார். மதியம் ஹஜ் யாத்திரை சென்று திரும்பிய சிலரை சந்தித்தார். மொட்டை மாடியில் இருந்த செங்கற்களால் ஆன தனது நூலகத்தில் அவர்களை சந்திக்க அழைத்தார். பக்கத்து மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடியிருந்த மக்கள் பேரரசரை பார்ப்பதற்காகவும் அவர் மொட்டை மாடிக்குச்சென்றார். சந்திப்புக்குப் பிறகு ஹுமாயூன் தனது கணிதவியலாளரை வரவழைத்து, அந்த நாளில் சுக்கிர கிரகம் வானத்தில் தெரியுமா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் சிலருக்கு பதவி உயர்வு உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று அவர் கருதினார்.

”அன்று மிகவும் குளிராக இருந்தது மற்றும் பலத்த காற்று வீசியது. ஹுமாயூன் படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தார். அவர் இரண்டாவது படியை அடைந்தபோது, அல்லாஹ் ஹூ அக்பர் என்று மசூதியிலிருந்து அஸான் ஒலி கேட்டது. ஹுமாயூன் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அஸானின் சத்தம் காதில் கேட்டவுடன், குனிந்து சாஷ்டாங்கமாக அமர முயன்றார். அப்போது அவரது கால் அவரது உடையில் சிக்கிக்கொண்து. சக்கரவர்த்தி படிக்கட்டுகளில் உருண்டு விழ ஆரம்பித்தார். அவருடன் ஓடிய உதவியாளர்கள் அவரை பிடிக்க முயன்றனர், ஆனால் முடியவில்லை. அவர்கள் அனைவரும் கீழே ஓடிச்சென்றபோது, ஹுமாயூன் தரையில் சரிந்திருந்தார். தலையில் ஆழமான காயம் ஏற்பட்டு வலது காதில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது,”என்று குல்பதன் பேகம் ஹுமாயூனின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார்.

ஹுமாயூன் மீண்டும் கண்களைத் திறக்கவில்லை. விழுந்த மூன்று நாட்களுக்குப் பிறகு சுல்தான் காலமானார்.

ஹுமாயூன்

பட மூலாதாரம்,ATLANTIC

ஹுமாயூன் புத்தகங்களை விரும்பினார்

ஹுமாயூனின் தலைமைப்பண்பு எப்போதும் கேள்விக்குறியாகவே இருந்தது., ஆனால் அவரிடம் வேறு நல்ல குணங்கள் இருந்தன. படித்தவர்கள் மற்றும் கவிஞர்களின் அருகாமையை அவர் விரும்பினார். தனது பேரசை விரிவுபடுத்த தெற்கு நோக்கி அவர் சென்றபோது பல அரிய நூல்களை அவர் எடுத்துச் சென்றார்.

”கிப்சக் அருகே தோல்வியின் போது இழந்த சில புத்தகங்களை உஷ்தர் கிராமத்தில் வெற்றி பெற்ற பிறகு கண்டபோது ஹுமாயூன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அவர் இரானில் தங்கியிருந்த காலத்தில் அவரது அணியில் எப்போதும் ஒரு நூலகர் இருந்தார். எங்கெல்லாம் அரசு கூட்டம் நடக்குமோ அங்கெல்லாம் நூலகர் இருப்பது அவசியமாக இருந்தது,” என்று அபுல் ஃபசல் எழுதுகிறார்.

ஹுமாயூன் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிறத்திற்கு ஏற்ப ஆடைகளை அணிந்து வந்தார்.

”நடக்கத் தொடங்கும்போது ஹுமாயூன் தனது வலதுகாலை முதலில் எடுத்து வைப்பார். ஒருவர் இடது காலை முன்வைத்து தனது அறைக்குள் நுழைந்தால், வெளியே சென்று வலதுகாலை முன்வைத்து மீண்டும் உள்ளே வரச் சொல்வார்,” 'என்று அல் பதோனி தனது 'முந்த்கபுத் தவாரிக்' என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இயற்கையிலும் கலையிலும் ஹுமாயூனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஒருமுறை சிந்துவில் ஒரு அழகான பறவை அவரது கூடாரத்திற்குள் நுழைந்தபோது, கூடாரத்தின் கதவை மூடிவிட்டு, அந்தப் பறவையின் படத்தை வரைய ஒரு ஓவியரை அவர் அழைத்தார். ஓவியம் தயாரான பிறகு அந்தப்பறவையை விடுவிக்கும்படி கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cw0x0vp0kk7o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.