Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாஜக, பாமக, போலீஸ்: நான் ஏன் அப்படிப் பேசினேன்? திமுக அரசு எப்படி செயல்படுகிறது? திருமாவளவன் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக, பாமக, போலீஸ்: நான் ஏன் அப்படிப் பேசினேன்? திமுக அரசு எப்படி செயல்படுகிறது? திருமாவளவன் பேட்டி

திருமாவளவன்

பட மூலாதாரம்,FACEBOOK/THOL.THIRUMAVALAVAN

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரு வாரங்கள் முன்பு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஒரு நிகழ்வில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக, பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் தாங்கள் இருக்கப்போவதில்லை என்று புதிய அழுத்தத்தோடு பேசினார், மேலும் தமிழ்நாட்டில் போலீஸ் முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்திப் பேசினார்.

இந்த உரை பல ஊகங்களுக்கும், அரசியல் விவாதங்களுக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், அந்தப் பேச்சில் வெளிப்பட்ட விஷயங்கள் குறித்தும், அதற்குப் பின்னால் உள்ள அரசியல் யோசனைகள் என்ன என்பது பற்றியும், திமுக அரசு செயல்படும் விதம் குறித்த தன்னுடைய கலவையான பார்வையையும் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார் தொல் திருமாவளவன்.

கேள்வி: பாஜக, பாமக இருக்கும் அணியில் இருக்கமாட்டோம் என்பது நீங்கள் எப்போதும் கூறும் நிலைப்பாடுதான். ஆனால், இந்தக் கூட்டத்தில் அதை புதிய அழுத்தத்தோடு கூறவேண்டிய தேவை ஏன் வந்தது? உங்கள் கூட்டணிக்குள் பாமக வருவதாக உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா?

பதில்: தேர்தலுக்கு தேர்தல் ஊசலாட்டமாக இருப்போம், எங்கே வாய்ப்பு கிடைக்குமோ அங்கே போய் சேர்ந்துவிடுவோம் என சில நேரங்களில் விமர்சனம் வைக்கிறார்கள். ஆனால், எங்கள் ஒட்டுமொத்த தேர்தல் அரசியல் பயணத்திலும் ஒரே ஒரு முறை ஜெயலலிதாவுடன் இருந்தோம், உள்ளாட்சித் தேர்தல் நடந்து 6 மாதத்தில் வெளியே வந்துவிட்டோம், நீண்ட காலம் நாங்கள் இணைந்து பயணிப்பது திமுகவுடன்தான். அதிமுகவுடன் போவதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்தும் நாங்கள் அடுத்தடுத்த நிலைகளில் அங்கே போகவில்லை.

 

பாஜகவுடன் எப்போதும் கூட்டு சேர்வதில்லை என்று ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளோம். 2001ல் பாஜக திமுக கூட்டணியில் இருந்தபோது விடுதலைச் சிறுத்தைகள் அந்தக் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறோம் என்று கருணாநிதி வெளிப்படையாக அழைப்பு போல கூறியிருந்தார். அதைச் சொல்லி “அழைக்கிறார்களே, நீங்கள் திமுக கூட்டணிக்குப் போவீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்கு,

“அங்கே பாஜக இருப்பதால் நாங்கள் போகமாட்டோம்” என்று கூறினேன். இதைச்சொல்லி மீண்டும் கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அவர் பாஜகவுடனா கூட்டணி வைக்கப்போகிறார். எங்களுடன்தானே கூட்டணி வைக்கப்போகிறார். எங்களோடு பாஜகவும் ஒரு கட்சியாக உள்ளது. எனவே, எங்களோடு கொள்கை சார்ந்த புரிதல் உள்ள காரணத்தால் விடுதலைச் சிறுத்தைகள் எங்கள் கூட்டணியில் சேர வேண்டும் என்று கலைஞர் அழைப்பு விடுத்தார்.

அதன் பிறகு எங்கள் கட்சியில் பேசி, பல கட்சிகளுடன் ஒரு கட்சியாகதானே பாஜக இருக்கப்போகிறது. நாம் கருணாநிதியுடன்தானே கூட்டணி வைக்கப்போகிறோம் என்று பேசி கூட்டணி சேர்ந்தோம். அப்போது நாங்கள் இருந்த திமுக கூட்டணியில் பாஜக இருந்தது என்பதைத் தவிர, எந்தக் காலத்திலும் நாங்கள் பாஜக உள்ள அணியுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளவில்லை.

இது தொடக்கத்தில் இருந்து நாங்கள் எடுத்துள்ள முடிவு.

இடையில் பாமக-வுடன் எங்களுக்கு கடுமையான முரண்பாடுகள் இருந்தன. எங்களை எதிர்த்து அவர்கள் விமர்சனம் செய்தார்கள். பிறகு ராமதாஸே விரும்பி எங்களோடு தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து வேலை செய்தார். நாம் இருவரும் ஒரே அணியில் இருப்போம் என்று அவரே என்னிடம் பேசி சமாதானம் செய்து 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் விசிக, பாமக இணைந்து இருந்தோம். அதில் பெரிய தோல்வியை சந்திக்கவேண்டியிருந்தது. பிறகு 2G சம்பந்தமாக பெரிய கொந்தளிப்பு இருந்த நேரம். அதில் திமுகவே அடிவாங்கியது.

விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார். திமுக மூன்றாம் இடத்துக்குப் போய்விட்டது. பாமக 31 இடங்களில் நின்றதில் 3 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 28 இடங்களில் தோற்றது. நாங்கள் போட்டியிட்ட 8-9 இடங்களிலும் தோற்றுவிட்டோம்.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்காக தருமபுரியில் பெரிய சமூகப் பதற்றத்தை உருவாக்கினார். திவ்யா-இளவரசன் பிரச்சனையில் பெரிய வன்முறை நடந்தது. பிறகு பாமக எங்களுக்கு எதிராக அனைத்து சமுதாயப் பேரியக்கம் என்று போட்டு எல்லா தலித் அல்லாதோரையும் ஒருங்கிணைத்தார்கள். எல்லா மாவட்டத்துக்கும் பயணம் செய்து, எனக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கம் செய்தார்.

நாடக காதல் நடக்குது. அதுக்கு திருமாவளவன்தான் காரணம். அவரை ஏன் நீங்கள் உயிரோடு விட்டு வைத்திருக்கிறீர்கள். ஆண்ட பரம்பரை என்கிறீர்கள். மீசையை முறுக்குகிறீர்கள்... என்றெல்லாம் பல இடங்களுக்கு போய் தூண்டிப் பேசினார். அதன் பிறகு, இனி பாமக-வுடன் எந்தக் கூட்டணியும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஒரு முடிவெடுத்தோம். அவர்கள் பாஜகவை சோஷியல் எஞ்சினியரிங் என்ற பெயரில் அப்படியே பின் தொடர்கிறார்கள்.

அங்கே அவர்கள் லவ் ஜிகாத் என்கிறார்கள். இங்கே இவர்கள் நாடக காதல் என்கிறார்கள். அவர்கள் முஸ்லிம், கிறிஸ்துவ வெறுப்பை உயர்த்திப் பிடிக்கிறார்கள். இவர்கள் தலித் எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்கிறார்கள். அவர்கள் சாதாரண மக்களின் மத உணர்வை அரசியல் ஆதாயமாக அறுவடை செய்கிறார்கள். இவர்கள் சாதாரண மக்களின் சாதி உணர்வை அரசியல் ஆதாயமாக அறுவடை செய்கிறார்கள். பாஜகவின் மாதிரியாகத்தான் தமிழ்நாட்டில் இது இருக்கிறது. எனவே சாதியவாத மதவாத சக்திகளோடு இனி எந்தக் காலத்திலும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று 2014க்குப் பிறகு எல்லா காலகட்டத்திலும் சொல்லியிருக்கிறேன்.

பாஜக-வுக்கு எதிராக எங்களுக்கு கடும் முரண்பாடு வந்தது. எங்களை தனி நபர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், பாமக அவர்களோடு உறவாகத்தான் இருக்கிறார்கள். கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிகாரபூர்வமாக அவர்கள் அறிவிக்கவில்லை என்றாலும், ஈரோடு தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை என்று ஒரு முடிவெடுத்தார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை தேர்தல் நெருங்கும்போது எந்தக் கூட்டணியிலும் அடையாளப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். இரண்டு தரப்பிலும் பேரம் பேசும் ஆற்றலை உயர்த்துவதற்காக அப்படி செய்வார்கள். அதனால், திமுகவை அவர்கள் சந்தித்தார்கள் என்பதில் எங்களுக்கு எந்த பீதியும் இல்லை. திமுக-வுடன் உறவாடுவதைப் போல காட்டினால், அதிமுக பயப்படும், அழைத்துப் பேசுவார்கள், இரண்டு தரப்பிலும் பேசும் நிலையை வைத்துக்கொண்டால் எங்கே பேரம் படிகிறதோ அங்கே இருக்கலாம் என்பது அவர்களது உத்தி. அதனால், அது எங்களுக்குப் பிரச்சனை இல்லை.

ஆனாலும், பாமக – பாஜக இருக்கும் இடத்தில் இருக்கமாட்டாம் என்று மீண்டும் மீண்டும் கூறி உறுதிப்படுத்தவேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. எப்படி இருந்தாலும், அவர்கள் இப்போதும் அதிமுக, பாஜக பக்கம்தான் போவார்கள், எனவே அதிமுக பக்கம் போவதற்கு எங்களுக்கு வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தவே சொல்கிறேன்.

ஸ்டாலின்

பட மூலாதாரம்,FACEBOOK/MK STALIN

பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வாழ்த்து ட்வீட் போட்டு, பாஜக பக்கம் போயிடாதீங்கனு ஒரு ஆலோசனை கொடுத்தேன். பாஜகவை தூக்கி சுமந்தால், நீங்களும் அழிந்து, தமிழ்நாடும் அழியும், எல்லாமே பாழ்பட்டுவிடும் என்று சஜஷன் தருவது போல அதில் சொல்லியிருந்தேன். அப்போது, இங்கே பாமக வருவது போல இருக்கிறது. இவர் அதிமுக பக்கம் போவதற்கு துண்டு போடுகிறார் என்று அவரவர் யூகங்களை பதிவு செய்தார்கள். அந்த யூகங்களுக்கு விடை சொல்லும் வகையில்தான் அந்தக் கருத்தை நான் தெரிவித்தேன். திமுகவுடன் முரண்பட்டுக்கொண்டு பாமக இருந்தாலும் பரவாயில்லை என்று அதிமுக பக்கம் போகமாட்டேன் என்பதை கூறுவதற்காகத்தான் அப்படி சொன்னேன்.

திமுகவுடன் எங்களுக்கு உள்ள முரண்பாடு என்பது, அரசாங்கத்தில், ஆட்சியில் உள்ளவர்கள் எங்களோடு நல்ல நட்பாக இருந்தாலும்கூட, முதல்வர் எங்களோடு நல்ல உறவில் இருந்தாலும்கூட, பிரச்சனை என்று வரும்போது, சட்டம் ஒழுங்கு என்று வரும்போது போலீஸ் எப்போதும் தலித் எதிர்ப்பு நிலைதான் எடுக்கிறது. வேங்கை வயல் பிரச்சனையானாலும் சரி, வேறு எந்தப் பிரச்சனையானும் சரி நாங்கள் அதிகாரிகளை, போலீசை எதிர்த்து போராட்டம் செய்யும் இக்கட்டுக்கு ஆளாகிறோம். இப்படி போராடும்போது நாங்கள் மக்கள் பிரச்சனைக்கு போராடுகிறோம் என்று புரிந்துகொள்ளாமல், எதோ திமுகவுக்கு ஒரு சிக்னல், அதிமுகவுக்கு ஒரு சிக்னல் தருகிறோம் என்று புரிந்துகொள்கிறார்கள். பாமக-வை இங்கே வரவிடாமல் தடுப்பதற்காக சொல்கிறோம் என்று அர்த்தம் கற்பிக்கிறார்கள்.

அதை நான் மறுக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதனால், பாஜக, பாமக இருக்கும் இடத்தில் ஒருக்காலும் இருக்கமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம். அதிகாரவர்க்கத்தோடு எங்களுக்கு இருக்கும் முரண்பாட்டையும் சுட்டிக்காட்டுகிறோம். ஆனாலும், திமுக தலைமையில் அகில இந்திய அளவில் ஒரு கூட்டணியை வலிமைப்படுத்தவேண்டும், முதல்வர் என்ற முறையில் அரவிந்த் கேஜ்ரிவாலையோ, நிதீஷ்குமரையோ, சந்திரசேகர ராவையோ சந்தித்து மு.க.ஸ்டாலின் இந்தக் கூட்டணியை கன்சாலிடேட் செய்யவேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறோம்.

இதில் நான் தெளிவாக இருக்கிறேன். திமுக கூட்டணியில்தான் இருப்பேன், திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக எதிர்ப்பு சக்திகள் இணைந்த கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியை செய்யவேண்டும். அந்த ஒருங்கிணைக்கும் பணியை எங்களால் செய்ய முடியாது. ஒரு முதல்வர் என்ற முறையில் ஸ்டாலினால் செய்ய முடியும். அதற்கு நாங்கள் துணையாக இருப்போம் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன்.

ராமதாஸ்

பட மூலாதாரம்,FACEBOOK/DR. S. RAMADOSS

போலீஸ் குறித்து...

கேள்வி: போலீஸ், அதிகாரிகள் தொடர்பாக நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்றீர்களா? அங்கே எதிர்வினை எப்படி இருக்கிறது?

பதில்: “அதிகாரிகள் எப்போதுமே 100 சதவீதம் ஆளும் கட்சியோடு பொருந்திப்போகமாட்டார்கள். ஒரு கட்சி ஆட்சி முடிந்து மறுகட்சி ஆட்சி வரும்போது, திமுக அதிகாரிகள், அதிமுக அதிகாரிகள் என்று பெயர் பெற்றுவிடுகிற அதிகாரிகள் ஆட்சி மாறும்போது முழுமையாக புதிய ஆட்சிக்கு இணங்கி வேலை செய்யமாட்டார்கள்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் அவர்களது உள்நோக்கம் அவர்கள் செயல்பாட்டில் பிரதிபலிக்கும். அகில இந்தியா முழுவதிலுமே அதிகாரிகள் வர்க்கம், போலீஸ் ஆகியவை பலவீனமாக இருப்பவர்களுக்கு எதிராகவே இருக்கிறது. சாதி, அரசியல் ரீதியாக பலமாக இருப்பவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். அரிதாக, சில தனிப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உண்மையாக இருப்பார்கள். தலித், மைனாரிட்டி பலவீனமாக இருப்பதால் பொதுவாக அவர்களுக்கு எதிராக இருப்பார்கள். தலித்துகள் பாதிக்கப்பட்டாலும் இரண்டு தரப்பின் மீதும் வழக்குப் போடுகிறார்கள்.

இப்படி செய்யுங்கள் என்று எந்த முதல்வராக இருந்தாலும் உத்தரவு போட வாய்ப்பில்லை. முதல்வர் சாதி எதிர்ப்பாளராக இருந்தாலும்கூட அதிகாரிகள் அப்படி இருப்பதில்லை. போலீஸ் அதிகாரிகள் அவரவர் நிலையில் தலித் எதிர்ப்பு மனநிலையில் செயல்படுவது இந்தியா முழுவதும் நடக்கிறது. இதில் ஆளும்கட்சி தலையிட்டு தடுத்தால் ஒழிய போலீஸ் எப்போதுமே இப்படித்தான் நடந்துகொள்ளும். 30-32 ஆண்டு கள அனுபவத்தில் இதை சொல்கிறேன். அரசு அமைப்புக்கு எதிரான உளவியல் என்று இதைப் புரிந்துகொள்ளவேண்டியதில்லை.

எடப்பாடி

பட மூலாதாரம்,FACEBOOK/AIADMK'S IT WING

சாத்தப்பாடி சம்பவம்

இப்போதுகூட கடலூர் மாவட்டத்தில் சாத்தப்பாடி என்ற இடத்தில், மாசிமக விழாவை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த தலித்துகளை, பாட்டுப்போட்டுக்கொண்டு போனார்கள் என்று அடித்து காயப்படுத்தினார்கள் சாதி வெறியர்கள். அவர்கள் ஆம்புலன்ஸ் பிடித்து மருத்துவமனை போகும் வழியில் மீண்டும் ஆம்புலன்சை நிறுத்தி உள்ளே இருந்தவர்களை இழுத்துப் போட்டு அடித்து 7-8 பேர் மண்டையை உடைத்திருக்கிறார்கள்.

இறந்துவிட்டார் என்று ஒருவரை தூக்கிவந்து மருத்துவமனை வாசலில் போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில் போலீஸ் இரண்டு தரப்பிலும் கேஸ் போடுகிறார்கள். சாதிவெறியர்கள் தரப்பில் ஒருவருக்கு காயமாம், அதற்காக எஸ்.சி. தரப்பில் 8 பேர் மீது ஐபிசி பிரிவு 307ன் கீழ் வழக்குப் போட்டிருக்கிறார்கள். அவர்கள் அடித்ததில் எஸ்.சி. தரப்பில் 7-8 பேருக்கு காயம். 30-40 பேர் குழுவாக சேர்ந்து அடித்தார்கள். ஆனால், அவர்கள் கைது செய்தது 6 பேரை.

அவர்கள் மீது 307 பிரிவு போடவில்லை. இன்றுகூட முதல்வரிடம் இது குறித்து புகார் செய்தேன். இப்படி எல்லாம் செய்யும்படி முதல்வரோ அமைச்சரோ அழைத்து சொல்வதில்லை. நாம் எப்போதாவது அழுத்தம் கொடுத்தால் தலித்துகளுக்கு எதிராக செயல்படவேண்டாம் என்று சொல்வார்கள். பொதுவாக தலித்துகளுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ செயல்படுங்கள் என்று அவர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் அதிகாரிகள் தலித்துகள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் மீது வழக்குப் போடுகிறார்கள்.

அப்படி இருக்கும்போது அதிகாரிகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம். ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் பிரித்துப் பார்க்கிறோம். இதில் மொத்தமாகவே ஆட்சியாளர்களைப் பொறுப்பாக்க முடியாது.

மோதி

பட மூலாதாரம்,FACEBOOK/BHARATIYA JANATA PARTY (BJP)

திமுக அரசின் செயல்பாடு எப்படி?

கேள்வி: திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

பதில்: “அவர் 70-80 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக சொல்கிறார். வாக்குறுதிகள் அரசியல் ரீதியாக, தேர்தல் சார்ந்ததாக இருக்கும். ஆனால், நடைமுறை சாத்தியமாக இருக்கக்கூடிய விஷயங்கள், குறிப்பாக ஆன்லைன் ரம்மி தடை செய்வோம் என்ற வாக்குறுதி, நீட் தேர்வை ஒழிப்போம் என்ற வாக்குறுதி, இதற்காக நிறைவேற்றி அனுப்பும் சட்டத்தை, தீர்மானத்தை கிடப்பில் போடுகிறார்கள். இதே போல புரோட்டாக்காலில், சிஸ்டத்தில் போய் மாட்டிக்கொள்கிற வாக்குறுதிகள் உண்டு.

அரசாங்கம் நினைத்தால் நிச்சயம் நிறைவேற்றிவிடலாம் என்று கூறும் சில விஷயங்கள், எடுத்துக்காட்டாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என்று கூறிய வாக்குறுதியை நிதி நெருக்கடியை காரணமாக வைத்து நிறைவேற்ற முடியவில்லை என்கிறார்கள். உண்மையில் நிதி நெருக்கடிதான் காரணமா இல்லையா என்பதை நம்மால் சொல்ல முடியாது.

பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்று போராடுகிறவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு தந்துள்ளது. அவர்களது போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம். இந்த இடத்தில் நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்கவில்லை. இங்கே போராடக்கூடிய மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். என்.எல்.சி.யில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்துவிடுவோம் என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், அதில் தேக்கம் இருக்கிறது. இங்கேயும் போராடும் மக்களுக்கு ஆதரவாகத்தான் நிற்கிறோம். இன்றுகூட முதல்வரிடம் இது பற்றி பேசினோம். இது போன்ற நிறைவேற்றாத கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றுக்கு நிதிச் சிக்கலைதான் காரணமாக சொல்கிறார்கள்.

நிதியமைச்சர் பலவற்றுக்கு பிரேக் போட்டு வைக்கிறார். வேலைவாய்ப்பு கோரிக்கைகளில் செவிலியர்கள் கோரிக்கை இப்போதுதான் நிறைவேற்றப்பட்டு ஆங்காங்கே நியமனங்கள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இப்போதுதான் அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். இரண்டாண்டுகள்தானே ஆகின்றன. இவற்றை நிறைவேற்றவேண்டும் என்பதில் நம் முதல்வருக்கு உண்மையான முனைப்பு இருக்கிறது.

அமைப்பு சார்ந்த சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவற்றை உடனே செய்துவிடுகிறார்கள். நிதிச் சிக்கல், அதிகாரிகளின் அணுகுமுறை ஆகியவற்றால் தடைபட்டுள்ள கோரிக்கைகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி: நூறாண்டுகளுக்கு முன்பே இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு தரப்பு மக்களுக்கும் வாய்ப்புகளை அளித்தது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் தன்மையை மாற்ற முயன்ற மாநிலம் தமிழ்நாடு. இன்னும் இங்கே போலீஸ், அதிகாரிகள் மத்தியில் தலித் எதிர்ப்பு மனநிலை இருக்கிறது எனில், அதை மாற்ற சமூக ரீதியாக தலையிட வேறு ஏதேனும் யோசனை உண்டா.

பதில்: சாதி சார்ந்த சமூக மனநிலை மாற்றுவதற்கு கடினமான ஒன்று. அது இந்தியா முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் பல முற்போக்கு அரசியலை, சமூக நீதி அரசியலைப் பேசினாலும் சாதியக் கொடுமைகள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கு அரசாங்கம் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. ஆனால், அவர்கள் தலித் அதிகாரம் பெறுவதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/cz90dmep7ljo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.