Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு பட்ஜெட் 2023: "குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்.15 முதல் தொடங்கும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2023: "குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்.15 முதல் தொடங்கும்"

தமிழ்நாடு பட்ஜெட்

பட மூலாதாரம்,TNDIPRNEWS

20 மார்ச் 2023, 05:00 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதால் இந்த பட்ஜெட் வெகுவாக கவனம் பெற்றது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்கும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

அவையில் நிதியமைச்சர் பேசத் தொடங்கியதும், எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து, அதிமுகவினர் பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

 

பட்ஜெட் அறிவிப்பில் உள்ள முக்கிய அம்சங்கள்

பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி மூலம் பெண்கள் மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருவதாக நிதி அமைச்சர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் புதிய கட்டடங்கள் கட்டவும் ரூ.7,000 கோடி செலவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ரூ.2,000 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் நிதியாண்டில் புதிய வகுப்பறை, கழிப்பறை என ரூ.1,500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

2025ஆம் ஆண்டுக்குள் 1 முதல் 3ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண் கணித அறிவு பெறுவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம், வரும் நிதியாண்டில் 110 கோடி செலவில் 4ஆம் மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தவும் பராமரிக்கவும் கோரிக்கைகள் வந்தன. எனவே ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், வனத்துறை, பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது, ரூ.500 கோடி செலவில் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும்.

மதுரையில் 2 லட்சம் சதுர அடியில், பிரமாண்டமாக அமைக்கப்பட்டுவரும் நூலகத்தில் முதற்கட்டமாக கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், மருத்துவம் எனப் பல்வேறு தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் 3,50,000 நூல்கள் இடம்பெறும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

தென் தமிழகத்தின் அறிவாலயாகத் திகழவுள்ள இந்த நூலகம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற பெயருடன் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.

குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் 7,500 ரூபாயும் முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்

கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500இல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் தொழில் முன்னேற்றத்திற்கு கடன் உதவி வழங்கப்படும் என்று தெரிவித்த நிதியமைச்சர், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்திற்காக 39 ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோபி வட்டாரத்தில் பெரியார் பெயரில் காட்டுயிர் சரணாலயம் அமைக்கப்படும்

தமிழ்நாடு பட்ஜெட் 2023

பட மூலாதாரம்,TNDIPR

இலங்கைத் தமிழர் நலன்

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

"இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரையிலும் அவர்களுக்குப் பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் மறுவாழ்வு முகாம்களில் 7, 469 புதிய வீடுகள் கட்டப்படும் என இந்த அரசு அறிவித்திருந்தது.

இதன் முதற்கட்டமாக, 3,510 வீடுகளுக்கான பணிகள் 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 3,959 வீடுகளைக் கட்டுவதற்கு வரும் நிதியாண்டில் 223 கோடி ரூபாயை அரசு வழங்கும்."

தமிழ் வளர்ச்சி, பண்பாடு

தாய் தமிழைக் காக்க, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப் போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும்.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தையும் முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக ஐந்து கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம், தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்குப் புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு 'தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும். தமிழ் மொழியில் பெருமளவில் மென்பொருட்கள் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்.

நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும் இந்தப் பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும், மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், "உலகாண்ட சோழர்களின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்கள், நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் ‘மாபெரும் சோழர் அருங்காட்சியகம்’ அமைக்கப்படும்," என்று அறிவித்தார் நிதியமைச்சர்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023

பட மூலாதாரம்,TNDIPR

மேம்பாலம், மெட்ரோ

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழிச் சாலை மேம்பாலம் கட்டப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைக்கு மேல் கட்டப்படும் இந்த மேம்பாலம் சாதனையாக அமையும் என்றும் இந்த மேம்பாலம் மூலம் சாலைப் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

சென்னை - பூந்தமல்லி மெட்ரோ வழித்தடம் டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று அறிவித்தவர், "மதுரையில் ரூ.8,500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

கோவையில் அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் சாலை வரை மெட்ரோ ரயில் வழித்தடம் செயல்படுத்தப்படும்," என்றும் தனது உரையில் குறிப்பிடார்.

பெண்கள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30,000 கோடி கடன் வழங்க இந்த வருடம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் தொழில் முனைவோர் புதிய தொழில்களைத் தொடங்க உதவும் வகையில் இயக்கம் ஒன்று அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023

பட மூலாதாரம்,TNDIPR

விலங்குகள் நலன்

விலங்குகளின் நலனைப் பேணிக் காக்க தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிதியமைச்சர், பெருகிவரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் உள்ளாட்சிகளின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகை

தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 வழங்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டபோது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பலத்த கரவொலி எழுப்பினர்.

இந்தத் திட்டத்திற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடலரிப்பைத் தடுத்து, கடலோரப் பன்மயத்தை அதிகரித்து, கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, மாசுபாட்டைக் குறைக்க "தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்" ரூ.2000 கோடி செலவில் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

கோவை மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சி மேற்கொள்ள அனைத்து மக்கள் பங்களிப்புடன் எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்னும் தலைப்பில் ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023

பட மூலாதாரம்,TNDIPR

சென்னை வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு

சென்னை தீவுத்தடலை மேம்படுத்த ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பளவில் இயற்கை தரம் வாய்ந்த நகர பொது சதுக்கம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் அமைக்கப்படும்.

சென்னை வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சித் திட்டம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ஒரு லட்சம் பேருக்குக் கூடுதலாக வழங்கப்படும். இதனால், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை 35.8 லட்சமாக உயரும்.

அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் குடும்ப நலன் கருதி சிறப்பு நிதியாக கூடுதலாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலம் வாங்குவோரின் சுமையைக் குறைக்க பதிவு கட்டணம் நான்கு சதவீதத்திலிருந்து இரண்டு சதவீதமாகக் குறைக்கப்படும்.

2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் 12 மணி வரை தாக்கல் செய்தார். அதில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு இன்றைய பட்ஜெட் முடிவடைவதாகவும் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் பட்ஜெட் தொடர் தொடங்கும் எனவும் அறிவித்தார்.

"வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம்"

பட்ஜெட் உரையின்போது "கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக செலவுள்ள பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும்போதிலும், முன்னெப்போதும் இல்லாத அளவில் பல கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, நாங்கள் பதவியேறும்போது சுமார் 62,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்குக் குறைத்துள்ளோம்," என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

"வரிகளை உயர்த்தியதுதான் மக்களுக்கு இவர்கள் அளித்த பரிசு"

பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து உள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வில் என்றும் இல்லாத அளவிற்கு 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

இதையெல்லாம் கண்டித்தும், பொய் வழக்குகள் போடுவதை கண்டித்தும், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய அமல் படுத்தவில்லை என்பதைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம்," என்று தெரிவித்தார்.

மேலும், "மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்தபோதும் அனைத்து வரிகளையும் உயர்த்தியதுதான் மக்களுக்கு இவர்கள் அளித்த பரிசு," எனக் கூறினார்.

அதோடு, "அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகள் என அறிவித்துள்ளனர். எந்த அடிப்படையில் அதற்கான தகுதியைத் தேர்வு செய்கிறார்கள்?" என்றும் கேள்வியெழுப்பினார்.

https://www.bbc.com/tamil/articles/cn053n35xw5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ்நாடு அரசு கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை' - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி

தமிழ்நாடு பட்ஜெட், ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

பட மூலாதாரம்,ASKANANDSRINIVASAN

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை, மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையைக் குறைத்திருப்பது, மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்திருப்பது ஆகியவை தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மிகக் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்கிறார் காங்கிரசைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன். இந்த நிதிநிலை அறிக்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அவரின் பேட்டியிலிருந்து...

  • கேள்வி: தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கை குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில்: முதலில் மத்திய அரசின் வருவாய்க்கும் மாநில அரசின் வருவாய்க்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு தனது வருவாயை எப்படி வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ள முடியும். எந்த வரியை வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ள முடியும்.

ஆனால், மாநில அரசிடம் இதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. மாநில அரசின் முக்கிய வரி வருவாயே, விற்பனை வரிதான். ஆனால், ஜிஎஸ்டி வந்த பிறகு, எல்லோரும் சேர்ந்துதான் அதனை உயர்த்துவதைப் பற்றி முடிவெடுக்க முடியும். ஆனால், ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு கட்சியின் ஆதிக்கத்தால் அதில் பன்முகத் தன்மை கிடையாது.

தமிழ்நாடு அரசின் வரி வருவாயைப் பொறுத்தவரை, விற்பனை வரி, எரிபொருள் வரி, கலால் வரி, பத்திரப் பதிவு, வாகனப் பதிவு வரி ஆகியவற்றில் இருந்துதான் வருவாய் வருகிறது. இதில் விற்பனை வரி வருவாய்தான் முக்கியமானது என்பதால், மாநில நிதியமைச்சரைப் பொறுத்தவரை, எவ்வளவு நிதி கிடைக்கும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அவருக்கு கூடுதல் நிதி வேண்டுமானால், புதிய வரிகளை விதிக்கும் வாய்ப்புக் குறைவு. அரசு என்பதில் வரி விதிக்கும் அதிகாரம்தான் முக்கியமானது. அது இங்கே முடக்கப்பட்டிருக்கிறது.

 

தற்போது மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாசித்த நிதி நிலை அறிக்கைக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த நிதி நிலை அறிக்கைக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. நிர்மலா சீதாராமன் எந்த எண்களையும் குறிப்பிடவில்லை. எதைக் கேட்டாலும் பின்னிணைப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.

ஆனால், மாநில நிதி நிலை அறிக்கையில் 20 கோடி ரூபாய் வரையுள்ள எல்லா செலவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் வெளிப்படையாக இருக்கிறார். நிர்மலா சீதாராமன் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதைப் போல பேசினார். இவர் ஒரு நிதியமைச்சரைப் போல பேசினார்.

இந்த நிதி நிலை அறிக்கையில் முக்கியமான விஷயம், காலை சிற்றுண்டித் திட்டத்தை 6,000 பள்ளிகளில் இருந்து முப்பதாயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் பள்ளிக்கு வருவது இதனால் அதிகரிக்கும். சத்துக்குறைபாடும் இதனால் நீங்கும்.

அடுத்ததாக புதுமைப் பெண் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிப்பதால், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கல்லூரி செல்லும் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அளித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால், ஒரு குடும்பத்தையே படிக்க வைக்கிறீர்கள், ஒரு தலைமுறையையே படிக்க வைக்கிறீர்கள் என அர்த்தம். இந்தத் திட்டத்தில் பயன்பெறும் பெரும்பாலான பெண்கள் முதல் தலைமுறை மாணவிகள்.

அதேபோல, வீட்டிற்கு வந்து சிகிச்சை அளிக்கும் திட்டத்தின் வரம்பு விரிவாக்கப்பட்டுள்ளது. அதுவும் மிக முக்கியமான திட்டம். காரணம், இது நோய்கள் வரும் முன்பே காக்கும் திட்டம். இந்தியாவில் எங்குமே இதுபோல வீட்டிலும் பணியிடத்திலும் உடல்நலத்தைப் பரிசோதிக்கும் திட்டம் அமலில் கிடையாது. ஸ்காண்டிநேவிய நாடுகளில் மட்டும் உள்ள திட்டம் இது. இதன் மூலம், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், சிறுநீரக நோய் ஆகியவற்றை முன்பே கண்டுபிடித்துவிடலாம். விரைவாக சிகிச்சை அளிக்கலாம்.

மேலும், தமிழ்நாடு மின் வாரியத்தின் இழப்பு குறைக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே எந்த அளவுக்கு மானியம் அளிக்கப்படுகிறது என்பதை சொல்லியிருக்கிறார்.

வருவாய் பற்றாக்குறை எடப்பாடி கே. பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் சுமார் 60,000 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. அதனை முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் குறைத்திருக்கிறார். மேலும் குறைப்பார் என எதிர்பார்க்கிறேன். வருவாய் பற்றாக்குறை மூன்றரை சதவீதத்தில் இருந்து மூன்று சதவீதமாக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாகச் சொல்லிவிட்டு அதைக் கொடுக்கவில்லை என்று கூறிவந்தார்கள். தற்போது அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கு 7,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு என அறிவித்துள்ளனர். இந்த உதவி யாருக்கு தேவையோ, அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும்.

தமிழ்நாட்டில்தான் பொது விநியோகத் திட்டத்தில் அதிக அளவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரசை விமர்சிப்பவர்கள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் ஐந்து கிலோதான் வழங்குகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, மாதாமாதம் எரிவாயுவின் விலை உயரும் நிலையில், மாதம் ஒரு சிலிண்டரை அரசு இலவசமாக வழங்குவதாகவே நினைக்கிறேன். அவர்கள் மீது இருக்கும் சுமை குறையும்.

தமிழ்நாடு பட்ஜெட், ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • கேள்வி: இந்த ஆயிரம் ரூபாய் திட்டத்தைப் பொறுத்தவரை, தகுதியானவர்களுக்கு என அறிவிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. முன்பு, இது போன்ற சமூக நலத் திட்டங்கள் எல்லோருக்குமானவையாக அறிவிக்கப்பட்டன.

பதில்: முன்பு விருப்பப்படி வரி விதிக்கும் அதிகாரம் இருந்தது. இப்போது அப்படி வரி விதிக்கும் அதிகாரம் கிடையாது. அந்த உரிமையை விட்டுதர முடியாது என ஜெயலலிதா சொன்னார். ஆனால், இவர்கள் அரசைக் காப்பாற்றுவதற்காக கையெழுத்திட்டார்கள். அப்படி உரிமையை விட்டுத்தந்தவர்கள் கேள்வி கேட்க முடியாது. ஒரு மாநில அரசின் முக்கிய வருவாய், விற்பனை வரிதான். அதனை ஏற்ற முடியாத நிலையில் வைத்துவிட்டு, கேள்வி கேட்கக்கூடாது. யாருக்குத் தேவையோ அவர்களுக்கு மட்டுமே அளிப்பதில் தவறில்லை.

  • கேள்வி: GST இல்லாமல் மத்திய அரசிடமிருந்து பெரும் நிதியின் அளவு 2014 உடன் ஒப்பிட்டால், தற்போது மாநில உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் அளவுக்குக் குறைந்திருப்பதாகவும் அதன் மதிப்பு இந்த ஆண்டு 24,000 கோடி அளவுக்கு இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு இது 28 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்குமென்றும் சொல்லியிருக்கிறார். இது எப்படி நடக்கிறது?

பதில்: மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்களுக்கு வழங்கும் தொகையைக் குறைத்துக்கொண்டே வருகிறது. அதனால்தான் இது நடக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் இருந்து அதிக வரி கட்டப்படுகிறது. ஆனால், திரும்பி வருவது இங்குதான் குறைவு.

இதுபோக வடமாநிலத்தவருக்கு வேலை கொடுப்பதும் தென் மாநிலங்களாகத்தான் இருக்கின்றன. வடமாநிலத்தவர் இங்கு வரலாம். பணியாற்றலாம். இந்தியா ஒரே நாடு. ஆனால், வட மாநிலங்கள் முன்னேறவில்லை என பணத்தை இங்கே இருந்து எடுத்து அங்கே கொடுக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாகக் கொடுத்தும் முன்னேறவில்லையென்றால் என்ன செய்வது?

இந்தப் பணத்தை தென் மாநிலங்களுக்குக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக செய்யலாமே? அவர்களால் வேலை வாய்ப்பு அளிக்க முடியவில்லை, ஒழுங்காக ஆட்சி நடத்த முடியவில்லை. அப்படியிருக்கும்போது தென் மாநிலங்களின் பணத்தை தென் மாநிலங்களுக்கே அளித்தால், வட மாநிலத்தவருக்கு இன்னும் சிறப்பான வசதிகளைச் செய்யலாமே.

பல வட மாநிலத்தவர் இங்கேயே குடியிருக்க ஆரம்பித்துவிட்டார்கள். வரவேற்கலாம். ஆனால், பணத்தை மட்டும் ஏன் தொடர்ந்து அங்கே செலுத்தவேண்டும்?

  • கேள்வி: வருவாய் பற்றாக்குறையை சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்குக் குறைத்திருப்பதாக நிதியமைச்சர் சொல்கிறார். இது எந்த அளவுக்கு முக்கியமானதாக இருக்கும்?

பதில்: மிக முக்கியம். இல்லாவிட்டால் சிக்கலாகிவிடும். அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வட்டி ஆகியவைதான் அரசின் செலவுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில் பற்றாக்குறையைக் குறைத்தாக வேண்டும். இல்லாவிட்டால், கூடுதல் கடன் வாங்கி, அதற்கான எதிர்காலத் தலைமுறை வட்டியைக் கட்ட வேண்டியிருக்கும்.

தமிழ்நாடு பட்ஜெட், ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

பட மூலாதாரம்,TNDIPR

  • கேள்வி: தரவுகளின் அடிப்படையில் திட்டமிட்ட நோக்கங்களுக்கும் தகுதியான பயனாளிகளுக்கும் மட்டுமே பணத்தைச் செலவிடவேண்டும் என இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எல்லோருக்குமான சமூக நலத் திட்டங்கள் போன்ற வழக்கமான பாதையிலிருந்து மாறுவதாகத் தெரியவில்லையா?

பதில்: அப்படி விலகுவது சரிதான். கடந்த பத்தாண்டுகளில் எந்த முக்கியமான திட்டமும் மத்திய அரசால் தமிழகத்திற்கு தரப்படவில்லை. ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளாகும்? இன்னும் கட்டவில்லை. சென்னை மிகவும் வளர்ந்துவிட்டது. ஏன் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் போக்குவரத்து இல்லை? அதைச் செய்து தரலாமே?

அந்த நிலையில், மாநில அரசு என்ன செய்ய முடியும்? திட்டமிட்டுத்தான் செலவழிக்க முடியும்.

  • கேள்வி: மாநில அரசு இந்த ஆண்டும் பெரிய தொகையைக் கடன் வாங்குகிறது. அது சரியா?

பதில்: வேறு வழியே கிடையாது. அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. கடன் தொகையைப் பொறுத்தவரை, அந்தக் கடன் தொகை மொத்த உற்பத்தியில் எத்தனை சதவீதம் எனப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேல் கடன் இருக்கக்கூடாது. வருவாயை மீறி கடன் வாங்கினால்தான் சிக்கல். இப்போது தமிழ்நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்குள்தான் கடன் இருக்கிறது.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைப் பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். ஆனால், தமிழ்நாட்டில் முதல்முறையாக மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போல மிகத் திறமையான, அந்தத் துறை பற்றிய அறிவுடைய ஒருவர் நிதியமைச்சராகியுள்ளார். அதனால்தான் அவர் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் திட்டம் எனப் பேசுகிறார்.

நிர்மலா சீதாராமன் பேச்சையும் இவரது பேச்சையும் இவரது பேச்சையும் ஒப்பிட்டுப்பாருங்கள். அதில் என்ன புள்ளிவிவரம், தகவல்கள் இருந்தன, இதில் என்ன இருக்கிறது என்பதைப் பாருங்கள் வித்தியாசம் தெரியும்.

மத்திய அரசு ரத்தத்தை உறிகிறது. இந்த பட்ஜெட்டில் அதுபோல ஒரு அம்சமும் கிடையாது.

https://www.bbc.com/tamil/articles/cy6579pe425o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள் - விரிவான தகவல்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவை வேளாண் பட்ஜெட்
 
படக்குறிப்பு,

தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆற்.கே. பன்னீர்செல்வம்.

21 மார்ச் 2023, 09:07 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தென்னை வளர்ச்சியை மேம்படுத்த திட்டம், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் திட்டம், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில், அந்த அறிக்கையை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். பச்சைத் துண்டு அணிந்தபடி வந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பத்து மணியளவில் வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

முக்கிய அம்சங்கள்

தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பு 93 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்து 63 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.

2021-22ஆம் ஆண்டில் 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 11 லட்சத்து 73 டன் அதிகம். டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு உற்பத்தியாகும். வரும் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக புதிதாக ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

சிற்றூர்களில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும் மற்ற பணிகளையும் மேற்கொள்ள, 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்காக, 2504 ஊராட்சிகளுக்கு ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக் குட்டைகள் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும்.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்

ஏற்கனவே 20 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு சிறுதானிய மண்டலங்கள் இருந்த நிலையில், தற்போது நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்த மாவட்டங்களும் இந்த மண்டலங்களில் சேர்த்துக்கொள்ளப்படும். நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பொது விநியோக அட்டைகளுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தானிய திருவிழாக்களும் நடத்தப்படும். இந்த இயக்கத்திற்கு 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்

விவசாயிகளின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவும் வருவாயை அதிகரிக்கவும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அதில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு அமைக்கப்படும்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 ஏக்கர் பரப்பளவில் அந்த ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கு 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பாரம்பரிய நெல் விதைகளை விதை வங்கியில் பராமரித்துவரும் 10 விவசாயிகளுக்கு தலா மூன்று லட்சம் வீதம் 30 லட்ச ரூபாய் வழங்கப்படும்.

குறுவைப் பருவத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய ஊக்குவிக்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகளை வாங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 60,000 வேளாண் கருவிகள் இதன் மூலம் வழங்கப்படும்.

அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க சமீபத்தில் கொள்கை வெளியிடப்பட்டது. விவசாயிகள் அங்ககச் சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க 10 ஆயிரம் ஹெக்டேருக்கு சான்றிதழைப் பெற மானிய உதவி அளிக்கப்படும். இதற்காக இந்த ஆண்டில் 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க ஐந்தாண்டுகளுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிற அங்கக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் குடியரசு தினத்தன்று ஐந்து லட்ச ரூபாய் பணப்பரிசுடன் விருது வழங்கப்படும்.

ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியும், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் என 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தி பம்ப் செட்கள் வாங்க இந்த மானியம் பயன்படும்.

தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகளின் அடிப்படைத் தகவல்களான ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைச் சேமித்துவைக்க GRAINS (Grower Online Registration of Agriculture Inputs System) என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும் உற்பத்தியையும் அதிகரிக்க பயறு பெருக்குத் திட்டம் 30 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய துவரை மண்டலத்தில் துவரை சாகுபடிக்கு 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

எண்ணெய் வித்துக்கான சிறப்புத் திட்டம்:

சூரியகாந்திப் பயிரின் உற்பத்தித் திறனை உயர்த்தவும் நிலக்கடலை, எள், சோயா, மொச்சை போன்ற பயிர்களை பரவலாக்கம் செய்யவும் 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தென்னை உற்பத்தியில் தேசிய அளவில் முதலிடம் பெற, மறுநடவு - புத்தாக்கத் திட்டம் 20 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். குட்டை - நெட்டை வீரிய ஒட்டுரக தென்னைக்கு விவசாயிகளிடம் வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டில் 10,000 குட்டை - நெட்டை ஒட்டுரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்த மாநில அரசின் மானியமாக இந்த ஆண்டு 2,337 கோடி ரூபாய் செலுத்தப்படும்.

கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்யப்படும் கரும்பு சாகுபடி பரப்பு 2022-23 காலகட்டத்தில் 55,000 ஹெக்டேர் அதிகரித்துள்ளது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாய விலையான 2,821 ரூபாயுடன் 195 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கென 253 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

மல்லிகை பூ மதுரையில் மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் மல்லிகைப் பூக்கள் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இத்திட்டம் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

பலா மரங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஐந்து ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு, 2,500 ஹெக்டர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும். இத்திட்டம், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில் இவ்வியக்கத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 ஹெக்டர் பரப்பில் மிளகாய் பயிரிடப்படுகிறது. இப்பரப்பை 40,000 ஹெக்டேராக உயர்த்தி, உற்பத்தியினை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். மிளகாயின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க ஏதுவான கட்டமைப்பை உருவாக்க ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வரும் ஆண்டு 1,000 ஹெக்டேர் பரப்பில் முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படுவதோடு, பதப்படுத்துதலுக்கும் மதிப்புக்கூட்டுதலுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். முருங்கையில் ஏற்றுமதி வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் இதற்கென 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தக்காளி, வெங்காயம் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தைப்பு இயந்திரங்கள், சேமிப்புக் கட்டமைப்புகள், அறுவடை இயந்திரங்கள், வெங்காயத்தாள் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகிய உதவிகள் வழங்க 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும். தக்காளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல், தடுக்கு அமைத்தல், அதிக மகசூல் தரும் இரகங்களைப் பயிரிடுதல், மூடாக்கு இடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். 19 கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

வரும் ஆண்டில், பத்து இலட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச் செடிகள் அடங்கிய தொகுப்பு 15 கோடி ரூபாய் நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும்.

150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

வரும் ஆண்டில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், கரும்பு சாகுபடிக்கு ஏற்ற இயந்திரங்கள், கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஆகியவற்றுக்காக மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதோடு பயனாளிகள் தேர்வும் கணினிமயமாக்கப்படும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 27 சேமிப்புக் கிடங்குகளில் 34,000 மெட்ரிக் டன் கொள்ளளவு ஏற்படும் வகையில், வரும் ஆண்டில் 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்படும்.

வரும் ஆண்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் வளாகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தை மெருகேற்றவும், மேம்படுத்தவும், மேலும் கட்டமைப்புகளை உருவாக்கவும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

2022-23 ஆம் ஆண்டில் இது வரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12,648 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும்.

வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe) உருவாக்கப்படும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

2023-24 ஆம் ஆண்டில் வேளாண்மை, அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தி, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு, உணவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் 38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து ஆறு ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய வேளாண் நிதி நிலை அறிக்கையில் இலக்கியத்திலிருந்து பல்வேறு மேற்கோள்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ் இலக்கிய மேற்கோள்கள் உட்பட கலீல் ஜிப்ரான், சேக்ஸ்பியர் உள்ளிட்ட சர்வதேச கவிஞர்களிடமிருந்தும் மேற்கோள்காட்டிப் பேசினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

https://www.bbc.com/tamil/articles/cye4d4jwgn1o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.