Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவல் அறிமுகம்: அந்தரம் - தொ.பத்திநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்தரம்

sudumanalJune 28, 2015

 

நாவல் அறிமுகம்

pathi-nathan-antharam-novel.jpg?w=768

இந் நூலின் ஆசிரியர் தொ.பத்திநாதன் 1990 இல் போர்க் கெடுபிடி காரணமாக தனது பதினாறு வயதில் படிப்பையும் விட்டு தமிழகத்துக்கு அகதியாக போய்ச் சேர்ந்தார். மண்டபம் அகதி முகாமில் தொடங்கி பின் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி முகாமில் அகதி வாழ்க்கையை தொடர்ந்தார். 29 ஆண்டுகளின் பின் இலங்கையில் தனது பிறந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார். அந்த கதைசொல்லலோடு தொடங்கிய அந்தரம் பின் அகதிகள் முகாமினுள் புகுந்துகொள்கிறது. அந்தரம் நாவல் அவரது நான்காவது நூல்.

“தேவடியா பயலுக… அகதி நாய்ங்க. அவன் அக்கா தங்கச்சியை போய் ஏறவேண்டியதுதானே. அதான் சிங்களவன் இவன்கள சுட்டு கொல்லுறான். இந்த அகதி நாயளுக்கு நாம பாவம் என்று அடைக்கலம் கொடுத்தா அவனுங்க திண்டுட்டு திண்டுட்டு நம்ம சேலைக்குள்ளை வந்து ஏறுறாய்ங்க. சும்மா விடக்கூடாது இவங்கள. சிலோன்கார நாய்ங்க எவனையும் தமிழ்நாட்டுக்கை விடக்கூடாது. அவிங்க நம்ம சோத்தை திண்டுட்டு நம்மகிட்டயே சோலி பாத்துப்பிடுவாய்ங்க. நம்ம நிம்மதிய கெடுத்துபபிடுவாய்ங்க… நாய்ங்க!”
மண்டபம் முகாமில் அகதிக் கூட்டம் பல நாட்களாக பதிவுக்காக பல்வேறு முகாம்களிலிருந்து வந்து காத்திருக்கிறார்கள். அவர்களைக் கடந்து செல்லும் ஊர்ப் பெண் ஒருவர் இவ்வாறு திட்டிக் கடந்து செல்கிறார்.

இதெல்லாம் கேட்டுப் பழகிய வார்த்தைகளாக அவர்களுக்குப் போயிருந்தது. அவர்கள்தான் தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த ஈழ அகதிகள். போர் துப்பிவிட்ட தமது உயிரை கையிலேந்தி கடல் தாண்டிய தம்மை இந்திய மண் அனுமதித்தது அவர்களுக்குக் கிடைத்த பெரும் நிம்மதியாக இருந்தது.

ஆனால் வாழ்க்கை இந்த நன்றி நவிலல்களாலும் மிகை தன்னுணர்ச்சிகளாலும் பொருள் கொண்டு காலத்தோடு மாற்றமின்றி நகர்வதல்ல. அது தொப்பூழ்க் கொடி உறவென்றும் தாய்த் தமிழகம் என்றும் பேசும் மிகையுணர்ச்சியின் அரசியலுக்கு அடிமைப்பட்டு ‘உப்புப் போட்ட’ நன்றியின் காலடியில் சுருண்டு படுக்காது. வாழ்வு ஓடும் நீரோடை போன்றது. அசையாது கிடக்கும் பாறையல்ல. அது அவர்களது வாழ்நிலையை எவ்வாறு மாற்றியமைத்து, எந்த சூழலினுள் வாழ விடப்பட்டார்கள் என்ற இயங்கியலில்தான் நகரத் தொடங்கும். அது குடும்பத்துள்ளும்தான் காலவெளியோடு தனிமனித பாத்திரங்களை படிப்படியாக வடிவமைக்கும். அவ்வாறே தமிழகத்தின் ஈழத் தமிழகதிகள் ஒரு புறமும் மேற்கத்தைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் இன்னொரு புறமுமாக வாழ்வு வடிவமைக்கப்பட்டு நகர்கிறது.

தமிழகத்துக்கு புலம்பெயர்ந்தவர்களின் வர்க்கப் பின்னணி நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டாக அல்லது உழைக்கும் வர்க்கமாக இருக்க மேற்குலகுக்கு புலம்பெயர்ந்தவர்கள் நடுத்தர அல்லது மேலடுக்கு வர்க்கத்தினராக இருந்தனர். அவர்களது வாழ்நிலை மேற்குலகின் புறச்சூழலாலும் ஜனநாயகக் கட்டமைப்பு முறையினாலும் வடிவமைக்கப்படுகிறது. அது வர்க்க அடுக்கின் முழுமையை நோக்கியதாக அல்லது மேல்தட்டு நோக்கியதாக இருந்தது. ஆனால் தமிழக அகதிகள் எதிர்த்திசையில் தமது வர்க்க நிலையில் கீழ்நோக்கி வீழ்த்தப்பட்டார்கள். அதாவது எல்லோருமே விளிம்புநிலை மனிதர்களாக ஆக்கப்பட்டார்கள். இந்தியாவில் அதற்கான புறச்சூழலும் ஜனநாயகக் கட்டமைப்பும் அவர்களுக்கு அந்தளவிலேயே இடம் கொடுத்தது. மேற்குலகில் அகதிகள் குறிப்பிட்ட காலத்தின்பின் அந்தந்த நாட்டின் பிரஜைகளாகினார்கள். இந்தியாயில் ஈழ அகதிகள் மூன்று சந்ததி கடந்தும் நாடற்றவர்களாக அகதிகளாகவே விடப்பட்டார்கள். தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த அகதிகள் நூற்றுக்கு மேற்பட்ட முகாம்களில் வசிக்கிறார்கள். இதில் அரைவாசிப் பேருக்கு மேல் மலையகத் தமிழர்கள். 

“சிறுவர்களாக வந்தவர்கள் பெரியவர்களாகிவிட்டார்கள். வாலிப வயதில் வந்தவர்கள் இன்று வயதானவர்களாகிவிட்டார்கள். வயதாகி வந்தவர்கள் இறந்துபோனார்கள்” என்கிறார் இந்த நாவலின் கதைசொல்லி. ஒரு அகதியாக பதிவு செய்யப்படுவதற்கே பல ஆண்டுகள்கூட காத்திருக்க வேண்டியிருக்கிறது என்கிறார் அவர்.

இந்த உதிரிச் சமூகமயமாக்கத்தின் தங்குநிலை வாழ்வியலும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையும், கண்காணிப்புக்குள் வைக்கப்பட்ட நிலையும், அவர்கள்மேல் கட்டமைக்கப்பட்ட கருத்தியலும் சேர்ந்து அது தனக்குள் உருத்திரண்டு தனக்கான உலகமொன்றை உருவாக்கிவிடுகிறது. இந்த சமூகமானது தனது இருப்பை காத்துக்கொள்ளப் போராடும் தனிமனிதர்களின் உதிரி மனப்பாங்கோடு இயங்குவது தவிர்க்க முடியாது. இந்த சமூக மனிதர்கள் சதா தனது இருத்தல் பற்றியே கவலைப்படுவதால் அதனடிப்படையில் செயல்படுவதால் சகமனிதரை மோப்பம் பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள் என்பார் மல்கம் எக்ஸ். அதிகாரிகளை வால்பிடித்து தம்மை ஒரு போலி அதிகாரத்துள் படம்காட்டி செயல்படுபவர்கள் இந்த முகாம்களில் தோன்றிபடி இருக்கிறார்கள். ஈழ அகதிச் சமூகத்துள் வன்முறை, போதைப் பொருள் என்ற குற்றங்கள் ஒருபுறம் இருக்க, ஒட்டுமொத்தமாக மிகப் பெரும் பண்பாட்டு வீழ்ச்சி அல்லது பிறழ்வையும், வாழ்வுக்கான போராட்டத்தையும்அது சந்திக்கிறது. இதுதான் பத்திநாதனின் கதைக் களம்.

இதற்குள் வாழும் மனிதர்களை சந்தியில் வைத்தும், கடைத் தெருவில் வைத்தும், லயன் போன்ற அவர்களது வீட்டுக்குள் வைத்தும், பாழடைந்த கட்டடத்துள் வைத்தும், சிறுகுடிசைக் கோவில்களில் வைத்தும் மட்டுமல்ல குற்றவாளிகளை கையாள்வது மாதிரியான அரச வன்முறை இயந்திரங்களின் (பொலிஸ், கியூ பிராஞ்) வாசலில் வைத்தும் எமக்கு அறிமுகமாக்குகிறது அந்தரம் நாவல். மாணவர் மன்றம் கூடுவதாக இருந்தாலும் கியூ பிராஞ்ச் இடம் அனுமதி வேண்டும்.

அகதிகள் எல்லாம் தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள், சமூகவிரோதிகள், இந்தியாவின் பொது அமைதியை இறையாண்மையை கெடுக்க வந்தவர்கள், ஆயுதம் கடத்துபவர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், பாலியல் தொழில் செய்பவர்கள் என பத்திரிகைகள் எழுதின என்கிறார் நாவலாசிரியர். இதேபோன்ற கருத்தியல் மேற்குலக அகதிகள் மீது நிறவெறி அடிப்படையிலும் ஐரோப்பிய மையவாத அடிப்படையிலும் காலனிய மனோபாவத்தின் அடிப்படையிலும் பொதுமனநிலையில் நிலவுகிறது.

சீட்டுப் பிடிப்பவர்கள், கடன் கொடுப்பவர்கள், கடனுக்கு சாமான்கள் கொடுக்கும் சிறுகடைக்காரர்கள், கூலித் தொழில் என முகாம் தனது பொருளாதார உலகத்தை தனக்குள் சிருஸ்டிக்கிறது. வெளிவேலைகளுக்குப் போகாமல் அவர்களால் உதவித் தொகையை வைத்து வாழ்வை ஓட்ட முடியாது. பெரும்பாலும் குறைந்த கூலிக்கு வீடுகளுக்கு வெள்ளைப்பூச்சு அடிக்கும் தொழிலுக்கு போகிறவர்களாக இருக்கிறார்கள். எல்லா அலைச்சல்களையும் மனவுளைச்சல்களையும் குறுகிப்போன முகாம் உலகுள் வாழ்ந்து தள்ளுகிறார்கள். முகாம்களுக்கு இடையில் கல்யாண உறவு ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. அவர்களது இணைவுக்கான தடைகள், குடும்ப உறவுகள், வீட்டு வன்முறைகள், பாலியல் தேவை நடவடிக்கைகள், காதல், கட்டுக்கதைகள் என எல்லாத் தளங்களிலும் இந் நாவல் பேசிச் செல்கிறது.

1990 இல் பத்து மின்கம்பம், பத்து வீதிவிளக்கு என இருந்த இருண்ட முகாம் கண்டத்தின் ஒளியெல்லைகள் இப்போ விரிவடைந்திருப்பதை சொல்கிறார் ஆசிரியர். மின்சார ஒளி மட்டுமல்ல வெளியில் சென்று பாடசாலைகளில் படிப்பது பட்டப்படிப்புக்கு முன்னேறுவது என அடுத்தடுத்த சந்ததிகள் விரிவாக்கமும் அடைகின்றன. அவர்களை இந்தியக் குடிமக்களாக ஏற்க மறுக்கும் இந்திய சனநாயக் கட்டமைப்பால் அவர்களது வேலைவாய்ப்புகளின் சாத்தியம் அத் துறைகளில் கேள்வியோடு நிற்கிறது.

இந்த முகாம்களில் பிறந்தவர்கள் அல்லது சிறு வயதில் கூட்டிவரப்பட்டவர்கள் இலங்கை போவதற்கு தயாராக இல்லை. மேற்குலகிலும் இதேதான் நிலைமை. தமிழகச் சமூகத்தோடு கலத்தல் என்பதில் ஈழ முகாம் அகதிகளுக்கு மொழி, மதம், பண்பாடு, இரசனை, நுகர்வு மனப்பான்மை, காலநிலை எல்லாமே ஒத்திசைவாக இருக்கிறது. அதாவது வேர்கொள்ளுதல் என்பது ஈழ அகதிகளுக்கு எதிர்காலத்தில் தமிழகத்தில் சாத்தியப்படும். அதற்கு முதல் நிபந்தனையாக அவர்கள் இந்தியக் குடிமக்கள் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும். அதுவரை அவர்கள் நாடற்றவர்கள் என்பதுபோல் தொங்குநிலையில் இருக்க வேண்டியிருக்கிறது.

17 வருடங்களுக்குப் பின் இலங்கையில் தான் பிறந்த ஊருக்கு வரதன் என்பவர் தனது மனைவியோடும் இரு பிள்ளைகளோடும் திரும்புகிறார். இலங்கை விமான நிலையத்தில் இறங்குகிறார் வரதன். எல்லா பயணிகளும் வெளியே பொய்க்கொண்டிருக்க, வரதன் குடும்பம் மட்டும் மறித்துவைக்கப் படுகிறார்கள்.

“ஏப்பா நாம நிக்கணும்?” என குழந்தை கேட்கிறது.
“நாம அகதிகள். அதாலைதான்” என்கிறார் வரதன்.
“அகதின்னா என்னப்பா?”
“நாமதான் அகதி”
“நாம ஏப்பா அகதி?”
“சத்தம்போடாம வா. ஆமிக்காரன் பிடிக்கப் போறான்.”
இந்த வரிகளுக்கிடையில் தோய்ந்தெழும்புகிறது வாழ்வின் கனதி.

ஒரு சிறு வேலைக்கும் எண்ணற்ற அலைச்சலை சட்டத்தின் பெயராலும், அதிகாரத் திமிரிலும், பொறுப்பின்மையாலும், வீம்பாலும் இடத்துக்கு இடம் ஓடவிட்டு அலைக்கழித்து துயரப்படுத்துகிற அதிகாரிகள் தரும் முகாம் வாழ்வின் அயர்ச்சியை நாவலில் பல இடங்களில் காண முடிகிறது.

ஈழத்தில் தாம் சுதந்திரமாக செய்த சுயதொழிலிலோ அல்லது உத்தியோகங்களிலோ பாடசாலைகளிலோ இந்த கதையின் மாந்தர்களை கொண்டு போய் நிறுத்திப் பார்க்கும்போது, ஒரே மனிதர்கள் எவ்வாறு இருவேறு உலகத்துள் சுழற்றிவிடப்பட்டார்கள் எனவும் அவர்களது சமூக விழுமியம், பண்பாடு, சொல்லாடல்கள், கனவு எல்லாமும் எப்படி சுழன்றிருக்கிறது எனவும் நினைக்கும்போது உணர்வு அதிரவே செய்கிறது. ஈழ மக்களுக்காக கண்ணீர் வடிக்கும் தமிழக தமிழின உணர்வாளர்களுக்கும் இந்த அகதிகள் அவர்களது சிரத்தையில் எத்துப்படவேயில்லை. அரசியலும் அடையாளங்களும் முக்கியம் அவர்களுக்கு. விடுதலைப் போராட்டத்தில் நாம் நிகழ்த்திய முட்டாள்தனங்களில் ராஜீவ்காந்தியின் படுகொலையும் ஒன்று. அது விடுதலைப் போராட்டத்தின் போக்கில் மட்டுமல்ல, இந்த ஈழ அகதிகள் மீதும் மோசமாக தாக்கம் செலுத்தியது. அது மேலதிக கெடுபிடிகளையும், கோபத்தையும், அவமானங்களையும் முகாம்கள் மீது கவிழ்த்துவிட்டிருந்தது. ஒரு ‘அகதி’யாகவும், போராடப் புறப்பட்ட ‘பெடியள்’ ஆகவும் இருந்து அந்தரம் நாவலை வாசிக்கிறபோது ஏதோவொன்று மனதை அழுத்துகிறது.

பத்திநாதனின் எழுத்துக்கள் முகாம் வாழ்வை எல்லா கோணங்களிலும் வெளிப்படுத்துகிறது. புலம்பெயர் எழுத்துக்கள் மேற்குலகத்தின் தமிழ் அகதிகளை குவிமையமாக்கிற போக்கு தொடர்ந்துவருகிறது. புகலிட இலக்கியத்தின் (exile literature/ literature in exile) தோற்றத்துக்கு அரசியல் பாத்திரம் இருந்தது என்பது முக்கியமானது. அது அதிகாரங்களுக்கு எதிரான குரலாகவும் எழுத்துச் செயற்பாடாகவும் இருந்தது. புலம்பெயர் இலக்கியத்தின் (Diaspora literature) ஒரு கூறுதான் புகலிட இலக்கியம் என்பதை புரிந்துகொண்டால் ஈழ முகாம் அகதிகளது இலக்கியம் புலம்பெயர் இலக்கியத்தின் இன்னொரு கூறு என்பதை புரிய தடையேதுமிருக்காது. அதை அவர்கள் ‘அகதி இலக்கியம்’ என அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். பத்திநாதனின் இந்த நாவல் புலம்பெயர் இலக்கியத்தின் இன்னொரு வழித்தடத்தில் நம்மை அழைத்துச் செல்கிறது. 

அவருக்கு புனைவுகள் தேவைப்படவில்லை. சொற்கள் அந்த மாந்தர்களின் மொழியில் முந்தியடித்துக்கொண்டு வந்து அணிவகுத்திருக்கின்றன. இலாவகமாக கையாண்டு எழுதிச் செல்கிறார் பத்திநாதன். நேரடி வாழ்வனுபவம் அலையடித்துக்கொண்டு சேர்த்த கதை இது. இன்னும் ஆயிரம் உட்கதைகளின் அலைகள் பத்திநாதனின் பேனா முனையைத் தொடக்கூடியது என்பதை நாவலின் கனதி சொல்லிவைத்திருக்கிறது.

 

https://sudumanal.com/2023/03/16/அந்தரம்/#more-5477

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.