Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு: அமெரிக்காவுக்கு போக்கு காட்டி இந்தியா நடத்திய 2வது அணு சோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அணு சோதனை
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரெஹான் ஃபசல்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 12 மே 2023

மே 11, 1998இல், ஐந்து அணுகுண்டு சோதனைகள் இந்தியாவை அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தன்னிறைவு அடையும் அணுசக்தி திறன் கொண்ட நாடுகளின் குழுவில் இணைய வைத்தது.

மே 11 மற்றும் 13, 1998க்கு இடையில், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான அரசாங்கம், முந்தைய ஆட்சிகளில் கட்டியெழுப்பப்பட்டு வந்த பல தசாப்த திட்டத்துக்கு உருவம் கொடுக்க முனைந்தது.

ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியான இந்திய ராணுவத்தின் போக்ரான் ஏவுகணை பரிசோதனை தளத்தில் ஐந்து அணுகுண்டு சோதனைகளை இந்தியா நடத்தியது. ஆனால், அந்த சாதனையை இந்தியா எட்டும் முன்பு பல சவால்களை எதிர்கொண்டது. அதை இந்த கட்டுரையில் திரும்பிப் பார்க்கலாம்.

இந்தியாவில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த சில நாட்களில் நரசிம்மராவ் புதிய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியை சந்தித்து, "சாதனங்கள் தயாராக உள்ளன. நீங்கள் தொடரலாம்," என்றார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் வாஜ்பாய், டாக்டர் அப்துல் கலாம் மற்றும் டாக்டர் சிதம்பரத்தை அழைத்து அணு சோதனைக்கு தயாராகுமாறு அறிவுறுத்தினார்.

அப்போதைய குடியரசுத்த்யலைவர் கே.ஆர்.நாராயணன் ஏப்ரல் 26 முதல் மே 10 வரை தென் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவிருந்தார். அந்த பயணத்தை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

டாக்டர் சிதம்பரத்தின் மகளுக்கு ஏப்ரல் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தில் சிதம்பரம் இல்லாமல் இருந்தால் ஏதோ பெரிய காரியம் நடக்கப்போகிறது என்பதை உணர்த்தியிருக்கும் என்பதால் அந்தத் திருமணமும் சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

1998 மே 11ஆம் தேதி புத்த பூர்ணிமா நாளில் அணு சோதனையை நடத்தலாம் என்று டாக்டர் கலாம் யோனை கூறினார்.

விஞ்ஞானிகளுக்கு ராணுவ சீருடை

அணுகுண்டு சோதனை

பட மூலாதாரம்,ஹார்ப்பர் காலின்ஸ்

 
படக்குறிப்பு,

டாகடர் சிதம்பரம் மற்றும் APJ அப்துல் கலாம்

1998 ஏப்ரல் 20 ஆம் தேதி பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) உயர் பதவியில் உள்ள விஞ்ஞானிகளிடம் அணுசோதனை நடத்துவதற்கான இந்தியாவின் முடிவு குறித்து தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறு, சிறு குழுக்களாக போக்ரானை நோக்கி செல்லத்தொடங்கினர்.

அடுத்த 20 நாட்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்வதாகவோ அல்லது டெல்லி செல்வதாகவோ அவர்கள் தங்கள் மனைவிகளிடம் கூறினர்.

பணியை ரகசியமாக வைத்திருக்க, ஒவ்வொரு விஞ்ஞானியும் வெவ்வேறு பெயரில் பயணம் செய்து, நேரடியாக போக்ரானுக்குச் செல்லாமல், நிறைய சுற்றி வளைந்து அங்கு சென்றடைந்தார்கள்.

BARC மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) குழுவில் மொத்தம் 100 விஞ்ஞானிகள் இருந்தனர். அவர்கள் போக்ரானை அடைந்தவுடன் அவர்கள் அனைவருக்கும் அணிந்து கொள்ள ராணுவ சீருடைகள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரும் மரத்தடுப்புகள் கொண்ட உயரம் குறைவான அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். அந்த அறைகளில் ஒரு கட்டில் போடுவதற்கு மட்டுமே இடம் இருந்தது.

கஞ்சி போட்ட விறைப்பான ஆடைகளை அணிவது பழக்கமில்லாததால் ராணுவ சீருடை அணிந்து கொள்ள விஞ்ஞானிகள் சிரமப்பட்டனர்.

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,ஹார்ப்பர் மற்றும் காலின்ஸ்

 
படக்குறிப்பு,

ராணுவ சீருடையில் விஞ்ஞானிகள்

டென்னிஸ் பந்துகள் போல

அணுகுண்டுகளின் குறியீட்டுப் பெயர் 'கேண்டீன் ஸ்டோர்ஸ்'.

சோதனை வெடிப்புக்கான 'கிரீன் சிக்னல்' கிடைத்த பிறகு, மும்பையின் நிலத்தடி பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுகளை போக்ரானுக்கு எப்படி கொண்டு செல்வது என்பதுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது.

80களில் கட்டப்பட்ட இந்த பெட்டகங்கள் ஒவ்வொரு ஆண்டும் விஸ்வகர்மா பூஜை நாளில் மட்டுமே திறக்கப்படும்.

அன்றைய தினம் விஞ்ஞானிகளும், தொழிலாளர்களும் பூஜை செய்து பெட்டகத்தின் கதவுகளில் விபூதி பூசுவார்கள். சில சமயங்களில் பிரதமர் BARC க்கு வரும்போது, அவருக்கு அந்த பெட்டகங்கள் காட்டப்பட்டன.

ஒருமுறை அந்த பெட்டகம் ராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜிக்கும் காட்டப்பட்டது. ஆறு புளூட்டோனியம் குண்டுகள் பந்து வடிவத்தில் செய்யப்பட்டன. இவை டென்னிஸ் பந்தைக் காட்டிலும் சற்று பெரியது.

இந்த பந்துகளின் எடை மூன்று முதல் எட்டு கிலோ வரை இருந்தது. இவை அனைத்தும் கருப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த பெட்டிகளின் தோற்றம் ஆப்பிள் பெட்டிகளைப் போலவே இருந்தது.

ஆனால் போக்ரானுக்கு கொண்டு செல்லும்போது வெடிபொருட்கள் சேதமடையாத வகையில் அவை பேக்கிங் செய்யப்பட்டன.

BARC விஞ்ஞானிகளின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் இந்த குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அங்கிருந்து அகற்றுவதுதான்.

தெற்கில் உள்ள மற்றொரு அணுமின் நிலையத்திற்கு சில சிறப்பு உபகரணங்களை கொண்டு செல்ல உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இரவு நேரத்தில் சிறப்பு கேட் வழியாக சரக்கு வாகனங்கள் வரும் என்று அவர்களிடம் கூறப்பட்டது.

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,HAR

நான்கு டிரக்குகள் மூலம் பந்துகள் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

மும்பையில் நள்ளிரவுக்குப் பிறகும் அதிக நடவடிக்கைகள் இருப்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சந்தேகத்திற்கு இடமளிக்காமல் இருக்கவும் அதிகாலை 2 முதல் 4 மணிக்குள் இந்த லாரிகள் அங்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

மூத்த பத்திரிக்கையாளர் ராஜ் செங்கப்பா தனது 'வெப்பன்ஸ் ஆஃப் பீஸ் தி சிக்ரெட், ஸ்டோரி ஆஃப் இந்தியாஸ் க்வெஸ்ட் டு பி எ ந்யூக்ளியர் பவர்’ என்ற புத்தகத்தில், "மே 1 அதிகாலையில் நான்கு லாரிகள் சத்தமில்லாமல் BARC ஆலையை அடைந்தன. ஒவ்வொரு ட்ரக்கிலும் தலா ஐந்து ஆயுதம் ஏந்திய வீரர்கள் இருந்தனர்,” என்று எழுதுகிறார்.

மேலும், "டிரக்குகளின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடக்க முடியாதபடி கவசத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்தன. இரண்டு கருப்புப் பெட்டிகளும் உடனடியாக ஒரு டிரக்கில் மற்ற உபகரணங்களுடன் ஏற்றப்பட்டன.

டிஆர்டிஓ குழுவின் மூத்த உறுப்பினரான உமங் கபூரின் வாயிலிருந்து, ’வரலாறு இப்போது நகர்கிறது’ என்ற வார்த்தைகள் உதிர்ந்தன," என எழுதுகிறார். இந்த நான்கு லாரிகளும் அங்கிருந்து 30 நிமிட தூரத்தில் உள்ள மும்பை விமான நிலையத்தை நோக்கி அதிவேகமாக சென்றன.

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,ஹார்ப்பர் காலின்ஸ்

விமான நிலையத்தில் தேவையான எல்லா அனுமதிகளும், ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தன. ட்ரக்குகள் நேராக விமான ஓடுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன, அங்கு AN 32 ரக போக்குவரத்து விமானம் அவர்களுக்காக காத்திருந்தது.

விமானத்திற்குள் நான்கு பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இது ராணுவத்தின் வழக்கமான போக்குவரத்து என்ற தோற்றம் வெளியுலகுக்கு அளிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் வைக்கப்பட்டிரும் சாதனம் மூலம் சில நிமிடங்களில் மும்பை நகரம் முழுவதையும் அழித்து விட முடியும் என்று யாருக்கும் தெரியாது.

மும்பை விமான நிலையத்தில் இருந்து AN32 விமானம் அதிகாலையில் புறப்பட்டது. இரண்டு மணி நேரம் கழித்து அது ஜெய்சல்மேர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கே அவர்களுக்காக மற்றொரு சரக்கு வாகன அணி காத்திருந்தது.

ஒவ்வொரு டிரக்கிலும் ஆயுதங்களுடன் வீரர்கள் அமர்ந்திருந்தனர். லாரிகளில் இருந்து இறங்கியபோது அவர்கள் தங்கள் ஆயுதங்களை துண்டுகளால் மறைத்துக்கொண்டனர். ஜெய்சல்மேர் விமான நிலையத்தில் இருந்து போக்ரானுக்கு லாரிகள் புறப்பட்ட போது அதிகாலையாக வேளை ஆக இருந்தது.

"போக்ரானில், இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்த லாரிகள் நேரடியாக 'ப்ரேயர் ஹால்’ சென்றன. அங்கு இந்த குண்டுகள் அசெம்பிள் செய்யப்பட்டன.

புளூட்டோனியம் பந்துகள் அங்கு சென்றடைந்தபோது, இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் ராஜகோபால சிதம்பரம் நிம்மதி பெருமூச்சு விட்டார்,” என்று ராஜ் செங்கப்பா எழுதுகிறார்.

1971 உடன் ஒப்பிடும்போது இந்த முறை எவ்வளவு வித்தியாசமாக இருந்தது என்பதை அவர் நினைவுகூர்ந்தார். அப்போது அணுசக்தி சாதனத்தை ராஜகோபால சிதம்பரமே போக்ரானுக்கு கொண்டு வர வேண்டியிருந்தது.

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ராஜகோபால சிதம்பரம், அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர்

தேள், புல்டோசர் மற்றும் புல்லி சிஸ்டம்

BARC இயக்குனர் அனில் ககோட்கரின் தந்தை சோதனைக்கு சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவரது இறுதிச் சடங்குகளுக்காக அனில் ககோட்கர் போக்ரானிலிருந்து செல்ல வேண்டியிருந்தது, ஆனால் ககோட்கர் இரண்டு நாட்களுக்குள் போக்ரானுக்குத் திரும்பினார்.

'கும்பகர்ணன் ஷாப்ட்டை' குண்டுவெடிப்பிற்காக தயார் செய்துகொண்டிருந்த நாளில் ஒரு சிப்பாயின் கையில் தேள் கொட்டியது. ஆனால் அவர் சத்தம் போடாமல், மருத்துவ உதவியை நாடாமல் தனது வேலையை தொடர்ந்தார். அவரது கையில் வீக்கம் அதிகரித்ததும் அருகில் இருந்தவர்கள் அதை கவனித்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.

'தாஜ்மஹால்' ஷாஃப்டில் மணல் அள்ளிக் கொண்டிருந்த புல்டோசர், எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய கல்லில் மோதியது. அது அதிவேகமாக ஷாஃப்டின் வாய்பகுதியில் பட்டது. அது ஷாஃப்டிற்குள் விழுந்திருந்தால், அங்கு பொருத்தப்பட்டிருந்த கம்பிகள் சேதமடைந்திருப்பது உறுதி.

அந்த உருளும் பெரிய கல்லை 150 மீட்டர் ஆழமான ஷாஃப்டிற்குள் செல்ல விடாமல் தடுக்க ஒரு ராணுவ வீரர் டைவ் செய்தார். தங்கள் உயிரை பணயம் வைத்து மேலும் நான்கு ஜவான்கள் அந்தக் கல்லை நிறுத்துவதில் தங்கள் முழு பலத்தையும் செலுத்தினர்.

சோதனைக்கு சில நாட்களுக்கு முன், 'புல்லி சிஸ்டம்' மூலம் ஷாஃப்டை இறக்கியபோது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவர்கள் ஷாஃப்டிற்குள் சிக்கிக் கொண்டனர். மின்சாரம் வர பல மணி நேரங்கள் ஆனது. அவர்கள் தங்களுக்குள் நகைச்சுவை துணுக்குகளை சொல்லிக் கொண்டு நேரத்தை கடத்தினார்கள்.

அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டால் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. மின்சாரம் இருந்தாலும் ஃப்ளக்சுவேஷன் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக உபகரணங்கள் எரிந்துபோகும் அபாயம் தொடர்ந்து இருந்தது.

இறுதியாக, 'ஃபார்ம் ஹவுஸ்' என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஜெனரேட்டரை பணி நடக்கும் இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

பலத்த காற்று, இடி, மின்னல் அச்சுறுத்தல்

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,ஹார்ப்பர் காலின்ஸ்

 
படக்குறிப்பு,

அணு சோதனைக்காக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை.

போக்ரானின் வானிலையும் விஞ்ஞானிகளுக்கு பிரச்சனைகளை உருவாக்கியது. ஒரு நாள் இரவு மின்னலுடன் பயங்கர காற்று வீசியது. அணுசக்தி சாதனத்தை அசெம்பிள் செய்து கொண்டிருந்த 'பிரேயர் ஹாலில்' இருந்து எல்லா விஞ்ஞானிகளும் அப்போதுதான் திரும்பியிருந்தனர்.

ப்ரேயர் ஹாலை மின்னல் தாக்கினால், அது சாதனங்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், அவை முன்கூட்டியே வெடிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என்று விஞ்ஞானி எஸ்.கே.சிக்கா மற்றும் அவரது குழுவினர் கவலை தெரிவித்தனர். ஒரு நாள் இரவு ஒன்றுமே புலப்படாத அளவுக்கு பலத்த புயல் வீசியது.

தற்செயலாக தீ விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க பிரேயர் ஹாலில் ஏர் கண்டிஷனிங் அனுமதிக்கப்படவில்லை, விஞ்ஞானிகள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டியிருந்தது. விஞ்ஞானிகள் எப்போதும் வியர்வையில் நனைந்திருக்கும் அளவுக்கு வெப்பம் இருந்தது.

உதவி ஊழியர்கள் வேண்டுமென்றே குறைவான என்ணிக்கையில்

வைக்கப்பட்டிருந்தனர். எனவே சிக்கா போன்ற மூத்த விஞ்ஞானிகள் கூட

சிலநேரங்களில் திருகுகளை இறுக்குவார்கள், கம்பிகளை சரிசெய்வார்கள்.

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,DAE

 
படக்குறிப்பு,

சதீந்தர் குமார் சிக்கா

ககோட்கர் அடையாளம் காணப்பட்டார்

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருந்த போது, ஒரு தனியார் நிறுவனம் எண்ணெய் கண்டுபிடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தது விஞ்ஞானிகளுக்கு தெரியவந்தது. அனில் ககோட்கர் அங்கு சென்று எந்த தொழில்நுட்பம் மூலம் அவர்கள் தோண்டுகிறார்கள் என்று பார்க்க முடிவு செய்தார்.

"நாங்கள் அனைவரும் ராணுவ சீருடையில் அங்கு சென்றோம். அங்கு பணிபுரிந்த ஒருவர் எனது குழு உறுப்பினர் விலாஸ் குல்கர்னியை ஓரமாக அழைத்துச்சென்று என்னைக் காட்டி, 'இது ககோட்கர் ஐயா தானே’என்று கேட்டார். குல்கர்னி அவரிடம் 'நான் ககோட்கர் இல்லை' என்று விளக்க முயன்றார், ஆனால் அந்த நபர் தான் டோம்பிவிலியில் வசிப்பவர் என்றும் ககோட்கரை பலமுறை பார்த்திருக்கிறேன் என்றும் கூறிக்கொண்டே இருந்தார். அங்கிருந்து வெளியேறுவது நல்லது என்று நாங்கள் நினைத்தோம்,” என்று ககோட்கர் தனது சுயசரிதையான 'பயர் அண்ட் ஃப்யூரி' என்ற நூலில் எழுதியுள்ளார்.

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,RUPA

மறுபுறம் டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் திடீரென நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை தனது இல்லத்திற்கு அழைத்தார்.

"வாஜ்பாய் என்னை அவரது அலுவலகத்தில் சந்திக்கவில்லை. நான் அவரது படுக்கையறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அவர் என்னிடம் மிக முக்கியமான மற்றும் ரகசியமான ஒன்றைச் சொல்லப் போகிறார் என்று எனக்குத் தோன்றியது.

நான் உட்கார்ந்தவுடன் அவர் இந்தியாவின் அணு சோதனைக்கான ஏற்பாடுகள் பற்றி என்னிடம் சொன்னார். 'இதற்காக இந்தியாவுக்கு எதிராக உலக வல்லரசுகள் சில பொருளாதார தடைகளை விதிக்கலாம், எனவே ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், அதனால்தான் உங்களை முன்கூட்டியே எச்சரிக்க நினைத்தேன், அப்படி நடந்தால், இதற்கு முன்கூட்டியே தயாராகுங்கள்’ என்று கூறினார்,” என்று யஷ்வந்த் சின்ஹா தனது சுயசரிதையான "ரிலென்ட்லெஸ்" என்ற நூலில் எழுதுகிறார்.

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,ப்ளூம்ஸ்பரி இந்தியா

அமெரிக்க செயற்கைக்கோள்களின் பார்வையில் படாமல்

போக்ரானில் உள்ள விஞ்ஞானிகள் குழு இரவில் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்ததால், மேலே வானத்தில் செல்லும் செயற்கைக்கோள்களால் அவர்களை பார்க்க முடியாது. அந்த நாட்களின் நட்சத்திரங்கள் நிறைந்த இரவுகள் அவர்களின் நினைவுகளின் ஒரு அங்கமாகிவிட்டன.

“ஒரு இரவில் விஞ்ஞானி கௌசிக் ஒரு செயற்கைக்கோளைப் பார்த்தார். மூன்று மணி நேரத்திற்குள் அவர், நான்கு செயற்கைக்கோள்கள் கடந்து செல்வதை கவனித்தார்.

’நாம் ஏதோ செய்கிறோம் என்று அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். இல்லையென்றால் ஒரே இரவில் இவ்வளவு செயற்கைக்கோள்கள் நம்மை ஏன் கடந்து செல்லவேண்டும்?” என்று டாக்டர் ஷர்மாவிடம் கேட்டார். ’நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்மால் எந்த ரிஸ்கையும் எடுக்கமுடியாது’ என்று ஷர்மா தெரிவித்தார்,” என்று ராஜ் செங்கப்பா எழுதுதியுள்ளார்.

1995 ஆம் ஆண்டில், நரசிம்ம ராவ் அணுசோதனை நடத்த முடிவு செய்தபோது, புதிதாகப் போடப்பட்டிருந்த கம்பிகள் மூலம் இந்தியாவின் நோக்கங்களை அமெரிக்க செயற்கைக்கோள்கள் அறிந்து கொண்டன.

அந்த நேரத்தில் ஷாஃப்டை மூடுவதற்கு அதிக அளவு மணல் பயன்படுத்துவதை அமெரிக்க செயற்கைக்கோள்கள் கவனித்தன. அங்கு ஏராளமான வாகனங்களின் நடமாட்டம் அமெரிக்காவை விழிப்படைச் செய்தது.

1998 ஆம் ஆண்டில் கூட சிஐஏ நான்கு செயற்கைக்கோள்களை போக்ரான் வான் பரப்பில் அமெரிக்கா நிலைநிறுத்தியது.

ஆனால் சோதனைக்கு சற்று முன்பு ஒரு செயற்கைக்கோள் மட்டுமே போக்ரானை கண்காணித்துக் கொண்டிருந்தது. அதுவும் காலை 8 மணி முதல் 11 மணிக்குள்ளாக அந்தப் பகுதியை கடந்து சென்றது.

சோதனைக்கு முந்தைய இரவு செயற்கைக்கோள் படங்களை மதிப்பாய்வு செய்ய ஒரு அமெரிக்க ஆய்வாளர் மட்டுமே பணியில் இருந்தார். போக்ரானில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அடுத்த நாள் தனது அதிகாரிகளுக்குக் காட்ட அவர் தேர்வு செய்திருந்தார். ஆனால் அந்தப்புகைப்படங்களை அதிகாரிகள் பார்க்கும் நேரத்திற்குள்ளாக காலம் கடந்துவிட்டது.

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,ஹார்ப்பர் காலின்ஸ்

மாலை 3.45 மணிக்கு நிகழ்ந்த வெடிப்புகள்

சோதனை நாளான மே 11 அன்று பிரதமர் இல்லத்தில் பிரஜேஷ் மிஷ்ராவை அழைத்த ஏபிஜே அப்துல் கலாம், காற்றின் வேகம் குறைந்து வருவதாகவும், அடுத்த ஒரு மணி நேரத்தில் சோதனையை நடத்தலாம் என்றும் கூறினார். கட்டுப்பாட்டு அறையில் பிளாஸ்டிக் ஸ்டூல்களில் அமர்ந்திருந்த போக்ரான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய விஞ்ஞானிகள், வானிலை அறிக்கைக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரஜேஷ் மிஷ்ரா மிகவும் பதற்றமாக காணப்பட்டார். வாஜ்பாயின் செயலாளர் சக்தி சின்ஹா சில முக்கிய கோப்புகளை வாஜ்பாயிடம் எடுத்துச்சென்று கொண்டிருந்தார். சக்தி சின்ஹாவின் பிறந்தநாளும் அன்றுதான். ஆனால் அவர் வேண்டுமென்றே தனக்கு வாழ்த்து தெரிவிப்பவர்களின் மொபைல் அழைப்புகளை எடுக்கவில்லை. இன்னொரு பக்கம் போக்ரானில் எல்லாம் சரியாக இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை வந்தது. சரியாக 3.45 மணிக்கு மானிட்டரில் சிவப்பு விளக்கு வந்து ஒரு வினாடிக்குள் மூன்று மானிட்டர்களிலும் கண்களைப் பறிக்கும் வெளிச்சம் தெரிந்தது.

வெடிப்புகள் நிகழ்ந்ததும் ஷாஃப்டிற்குள் இருந்த கேமராக்கள் அழிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் திடீரென படங்கள் உறைந்தன. பூமியின் உள்ளே வெப்பநிலை மில்லியன் டிகிரி சென்டிகிரேடை எட்டியது. "தாஜ்மஹால்" ஷாஃப்டில் ஏற்பட்ட வெடிப்பால் ஹாக்கி மைதானத்திற்கு சமமாக காற்றில் மணல் உயர்ந்தது. அப்போது ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த டிஆர்டிஓவின் கர்னல் உமங் கபூரும் காற்றில் தூசி வெள்ளம் பெருக்கெடுத்து பரவுவதை பார்த்தார்.

அணுகுண்டு சோதனை

பட மூலாதாரம்,ஹார்ப்பர் காலின்ஸ்

பாரத் மாதா கி ஜெய் கோஷங்கள்

கீழே இருந்த விஞ்ஞானிகள் தங்கள் காலடியில் பூமி பலமாக நடுங்குவதை உணர்ந்தனர். அங்கும் நாடுமுழுவதும், டஜன் கணக்கான நில அதிர்வு வரைபடங்களின் ஊசிகள் கடுமையாக ஆடின.

மணல் சுவர் உயர்ந்து கீழேவிழும் மறக்க முடியாத காட்சியை தங்கள் கண்களால் பார்க்க விஞ்ஞானிகள் தங்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியே ஓடினார்கள்.

இந்த காட்சியை பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள், மணல் மேலே எழும்பியவுடன் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கம் எழுப்பினர். அங்கிருந்த விஞ்ஞானி கே.சந்தானம் பிபிசியிடம், “இந்தக் காட்சியை பார்த்த எனக்கு மயிர்கூச்சலெடுத்தது” என்றார்.

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,ஹார்ப்பர் காலின்ஸ்

சிதம்பரம் கலாமுடன் கைகுலுக்கி, “24 ஆண்டுகளுக்குப் பிறகும் இதை மீண்டும் செய்யமுடியும் என்று நான் உங்களிடம் சொன்னேன்.” என்றார்.

"உலகின் அணுசக்தி வல்லரசுகளின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். நூறு கோடி மக்கள் வாழும் நமது நாட்டிடம் என்ன செய்யவேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது நாம் முடிவு செய்வோம்." என்றார் கலாம்.

மறுபுறம் பிரதமர் இல்லத்தில் தொலைபேசியின் அருகில் அமர்ந்திருந்த பிரஜேஷ் மிஸ்ரா, முதல் ரிங்கில் போனை எடுத்தார். ரிசீவரில் கலாமின் நடுங்கும் குரல் கேட்டது, "சர், வி ஹேவ் டன் இட்," என்றார் கலாம்.

'கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்' என்று மிஷ்ரா போனில் கத்தினார்.

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா

"இந்த தருணத்தை விவரிப்பது கடினம், ஆனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் உணர்ந்தோம்," என்று பின்னர் வாஜ்பாய் கூறினார்.

பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாயின் செயலரான சக்தி சின்ஹா, தனது ‘வாஜ்பாய்: தி இயர்ஸ் தட் சேஞ்ட் இண்டியா’ என்ற புத்தகத்தில், “வாஜ்பாய் அமைச்சரவையின் நான்கு அமைச்சர்களான எல்.கே. அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், யஷ்வந்த் சின்ஹா மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் பிரதமர் இல்லத்தில், சாப்பாட்டு மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். சோபாவில் அமர்ந்திருந்த பிரதமர் வாஜ்பாய் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். யாரும் யாரிடமும் எதுவும் பேசவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

"அங்கு இருந்தவர்களின் முகங்களில் மகிழ்ச்சியை தெளிவாகப் படிக்க முடிந்தது. ஆனால் யாரும் குதிக்கவில்லை, யாரும் யாரையும் கட்டிப்பிடிக்கவில்லை, யாரையும் முதுகில் தட்டவில்லை. ஆனால் அந்த அறையில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் இருந்தது. நீண்ட நேரத்துக்குப் பிறகு வாஜ்பாய் முகத்தில் புன்னகை மலர்ந்தது. பதற்றம் நீங்கி அவரும் உரக்கச் சிரித்தார்," என்று சின்ஹா எழுதுகிறார்,

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,பெங்குயின்

 
படக்குறிப்பு,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்

இரண்டு நாட்களுக்குப் பிறகு மேலும் இரண்டு சோதனைகள்

அதன் பிறகு வாஜ்பாய் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார், அங்கு எல்லா முக்கிய ஊடகங்களின் செய்தியாளர்களும் புல்வெளியில் இருந்தனர். வாஜ்பாய் மேடையை அடைவதற்கு சில வினாடிகளுக்கு முன் பிரமோத் மகஜன் மேடையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை வைத்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் வழங்கப்பட வேண்டிய அறிக்கையை ஜஸ்வந்த் சிங் ஏற்கனவே தயார் செய்திருந்தார். அந்த அறிக்கையில் வாஜ்பாய் கடைசி நேரத்தில் திருத்தம் செய்தார்.

அணுகுண்டு வெடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அணு சோதனையை அறிவித்த அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி

வாஜ்பாய்

அறிக்கையின் முதல் வாக்கியம், 'நான் ஒரு சுருக்கமான அறிவிப்பை வெளியிடுகிறேன்,' என்பதுதான். ஆனால் வாஜ்பாய் தனது பேனாவால் சுருக்கம் என்ற வார்த்தையை அடித்துவிட்டு, 'இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இந்தியா மூன்று நிலத்தடி அணு ஆயுத சோதனைகளை நடத்தியது.

இந்த வெற்றிகரமான சோதனைகளை நடத்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நான் வாழ்த்துகிறேன்,' என்று அறிவித்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு போக்ரான் நிலம் மீண்டும் குலுங்கியது. இந்தியா மேலும் இரண்டு அணு சோதனைகளை நடத்தியது. ஒரு நாள் கழித்து வாஜ்பாய் “இப்போது இந்தியா ஒரு அணு ஆயுத நாடு,” என்று அறிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/ckvkzwyeendo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.