Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளைக் கொன்ற காதலனை 26 ஆண்டுகள் தேடி கண்டுபிடித்த தந்தை. என்ன செய்தார் தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகளின் கொலைகாரனைத் தேடிய தந்தை

பட மூலாதாரம்,PERSONAL FILE

 
படக்குறிப்பு,

18 வயதான நான்சி மெஸ்ட்ரேவை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டார்

11 ஜூன் 2023

1994ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நான்சி மெஸ்ட்ரேவின் கொலையாளி யார்?

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு கொலம்பியயா நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் கொன்றதற்காக, ஜேமி சாத் என்பவரை கொலம்பியாவுக்கு நாடு கடத்துவதற்கு பிரேசில் நாட்டு உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஒப்புதல் அளித்தது.

பிரேசிலில் குற்றம் நடக்காததால், குற்றவாளி ஒருவரை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என்ற 2020 தீர்ப்பை திருத்தி உச்ச நீதிமன்றம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அப்போது, ஒரு "கொலையை ஒருபோதும் மன்னிக்க முடியாது" என்று நீதித்துறை நடுவர் ஒருவர் கூறினார்.

ஜேமி சாட் அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்ட பிறகு கொலம்பியாவுக்கு நாடு கடத்தப்படுவார். ஜனவரி 1994 இல் செய்யப்பட்ட குற்றத்திற்காக அவர் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பார்.

 

நான்சியின் 80 வயதான தந்தை மார்ட்டின் மெஸ்ட்ரே தனிப்பட்ட முறையில் விசாரணை செய்து பெலோ ஹொரிசோண்டேவில் இருந்த சாத் என்பவர் தான் கொலையாளி எனக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் அவரை நிறுத்தினார்.

இந்தத் தீர்ப்பு மார்ட்டினுக்கு நிம்மதியை அளித்தது.

கொலம்பிய செய்தித்தாள் எல் 'ஹெரால்டோ'விடம் பர்ரன்குவிலாவில் உள்ள தனது வீட்டில் இருந்து பேசிய மார்ட்டின், "ஒரு தந்தையாக இருப்பதில் இப்போது தான் எனக்கு நிம்மதி கிடைத்துள்ளது. எனது மகளை மானபங்கம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

 

தீவிர புலன் விசாரணை

ஜேமி சாத்துக்கு நீதிமன்றம் 1996 இல் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால் நான்சியின் கொலைக்குப் பிறகு கொலையாளி சாத் பிரேசிலுக்குத் தப்பி ஓடியதால் அவரைக் கைது செய்யமுடியவில்லை. இதற்கிடையே, மார்ட்டின் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஜேமி சாத்தை தேடுவதிலேயே செலவிட்டார்.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக தேடிய பிறகு, பிரேசிலின் போலோ ஹொரிசோண்டே நகரில் ஜேமி கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து 2020 இல் இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கொலையாளி, ஜேமி ஹென்றிக் தாஸ் சான்டாஸ் அப்தாலா என தனது பெயரை மாற்றிக் கொண்டு வழக்கமான மற்றும் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்ததோடு, பிரேசிலில் ஒரு பெண்ணை மணந்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகவும் மாறியுள்ளார்.

ஜேமியை மீண்டும் நாடு கடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த பிரேசில் உச்ச நீதிமன்றம், அதற்கு ஏற்ற சட்டப் பிரிவுகள் காலாவதியாகி விட்டதாக அறிவித்தது

கொலைக் குற்றம் பற்றிய விவாதங்கள்

மகளின் கொலைகாரனைத் தேடிய தந்தை

பட மூலாதாரம்,PERSONAL FILE

 
படக்குறிப்பு,

நான்சியின் கொலையாளி பிரேசிலில் மூன்று தசாப்தங்களாக தலைமறைவாக இருந்துள்ளார்

மார்ட்டினின் இளைய மகள் நான்சி, கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று பல்கலைக்கழகத்தில் படித்து தூதரக அதிகாரியாக விரும்பினார்.

ஆனால், மார்ட்டின் நான்சியிடம், "நான் உன்னை எங்கும் செல்ல விடமாட்டேன். நீ எங்கள் அருகிலேயே இருக்க வேண்டும்," என தனது பாசத்தை வெளிப்படுத்தினாலும், உண்மையில், அவர் தனது மகளின் லட்சியத்தை மதித்து, அவருடைய கனவை நனவாக்க எதையும் செய்யத் தயாராகவே இருந்தார்.

மே 2022 இல் பிபிசி செய்திகள், பிரேசிலிடம் பேசிய மார்ட்டின், “நான்சி மிகவும் மகிழ்ச்சியான பெண். மிகப்பெரிய படிப்பாளி. அவர் எப்போதும் படித்துக் கொண்டிருந்தார். அவர் சர்வதேச சட்டம் மற்றும் இராஜதந்திரம் படிக்க விரும்பினார்," என்றார்.

 

ஜனவரி 1, 1994 அன்று நள்ளிரவில், 18 வயதான நான்சி அவரது பெற்றோர் மற்றும் சகோதரருடன் வீட்டில் புத்தாண்டைக் கொண்டாடினார்.

அந்த நேரத்தில், நான்சியின் காதலன் ஜேமி சாத் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் புத்தாண்டைக் கொண்டாட நான்சி விரும்பினார். இதன் காரணமாக அவரது தந்தை நள்ளிரவுக்குப் பிறகு அவர்களை வெளியே அனுப்பினார்.

அப்போது மார்ட்டின் தனது மகளிடம் “அதிகாலை மூன்று மணிக்கு முன் வீட்டுக்கு வந்துவிடு,” என்று கூறி அனுப்பினார். மேலும் தனது மகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு ஜேமியிடம் அறிவுறுத்தினார்.

பிபிசியிடம் பேசிய மார்ட்டின், "அன்று காலை ஆறு மணிக்கு எழுந்தபோது ஏதோ தவறு இருந்ததாக உணர்ந்தேன்" என்றார். நான்சி அதுவரை வீட்டிற்கு வராத காரணத்தால், வீட்டில் அவரைத் தேடத் தொடங்கினர். நான்சி அவரது அறையில் இல்லை.

ஆரம்பத்தில் அப்பகுதியில் உள்ள தெருக்களில் தேடிய பிறகு, நான்சியும் ஜேமியும் ஒரு இரவு விடுதியில் இருந்ததாக நினைத்து அவர்கள் அங்கேயும் சென்று தேடினர். ஆனால் அங்கும் இருவரும் கிடைக்கவில்லை. இதனால் மார்ட்டின் மற்றும் குடும்பத்தினருடைய பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. தங்கள் மகள் காயமின்றி வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.

இறுதியாக மார்ட்டின் ஜேமியின் பெற்றோரின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார்.

ஜேமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ஜேமியின் வீட்டிற்கு அவர் சென்றபோது, அவரது தாய் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

"அது இருட்டாக இருந்தது. நான் என் மகளின் இரத்தத்தை மிதித்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. கொலையாளியின் தாய் குற்றம் நடந்த இடத்தை சுத்தம் செய்கிறார்," என்று மார்ட்டின் கூறினார்.

"உங்கள் மகள் விபத்துக்குள்ளாகி கரீபியன் கிளினிக்கில் இருக்கிறாள்" என்று ஜேமியின் தாய் கூறினார்.

மார்ட்டின் அந்த மருத்துவமனைக்கு விரைந்தபோது ஜேமியின் தந்தை அங்கே இருந்தார். “உங்கள் மகள் தற்கொலைக்கு முயன்று ஆபரேஷன் தியேட்டரில் இருக்கிறாள். அவசர சிகிச்சைப் பிரிவில், மருத்துவர்கள் நான்சிக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்," என்றார்.

கொலையாளி தப்பி ஓடிவிட்டார்

மகளின் கொலைகாரனைத் தேடிய தந்தை

பட மூலாதாரம்,PERSONAL FILE

 
படக்குறிப்பு,

நான்சியின் அப்பா, அம்மா, தம்பி மற்றும் நான்சி

ஜேமி, அவரது தந்தை மற்றும் அவர்களது வீட்டில் வசிக்கும் ஒரு பெண் ஆகியோர் நான்சியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நான்சியை ஒரு போர்வையில் போர்த்தி பிக்கப் டிரக்கில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

"உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் மெதுவாக புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்," என்ற மார்ட்டின், தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் ஜேமி ஒரு லாரியின் பின்புறத்தில் தூக்கி எறிந்துள்ளார் என்றார். "கடவுளே, அவர் என் மகளுக்கு என்ன செய்தார்!"

அதன் பிறகு மருத்துவமனையில் எட்டு நாட்கள் எட்டு ஆண்டுகளாகக் கழிந்தன. ஆனால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நான்சிக்கு சுயநினைவு திரும்பவே இல்லை.

"நான்சி நீண்ட காலம் வாழ மாட்டார் என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறினார்கள்," துயரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட மார்ட்டின் கூறினார்.

"நானும் நான்சியின் அம்மாவும் எங்கள் மகனும் மருத்துவமனை அறையில் கூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தோம். நான்சிக்கு சிறுவயதில் பிடித்த பாடல்களையும் நாங்கள் பாடினோம்."

திடீரென்று நான்சியின் இதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்டது.

நான்சியின் பெற்றோர் மருத்துவமனையில் மிகுந்த துயரத்தில் தவித்தனர். அப்போது, அவர்களிடம் ஜனவரி 1 ஆம் தேதி நான்சிக்கு என்ன நடந்தது என்று போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால் அந்த விசாரணை தொடங்குவதற்குள் ஜேமி சாத் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

மார்ட்டின் 2022 இல் பிபிசி நியூஸ் பிரேசிலிடம், "கொலை நடந்த நாளில் தப்பியோடிய ஜேமி, மீண்டும் இந்த நாட்டில் காணப்படவில்லை," என்று கூறினார். நான்சி தற்கொலை செய்து கொண்டார் என்பதை போலீசார் மறுத்தனர். அவரது காலின் வலது பக்கம் துப்பாக்கியால் சுடப்பட்டதால் அவர் இறந்தார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

கொலம்பிய அதிகாரிகளின் கூற்றுப்படி, நான்சியின் இடது கையில் துப்பாக்கி வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் காணப்பட்டன. ஆனால் அது நான்சி தன்னைக் காத்துக்கொள்ள முயற்சித்ததற்கான அறிகுறியாகும்.

காவல்துறையின் கூற்றுப்படி, நான்சி வலது கை பழக்கம் உள்ளவர். அதனால் அவரே தன்னைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சிக்க வாய்ப்பில்லை என போலீசார் கருதினர்.

போலீசாரின் விசாரணை முடிவில் நான்சி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. நான்சி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சித்ததற்கு இது போன்ற சான்றுகள் ஆதாரமாக இருந்தன.

1996 இல், நான்சி இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொலம்பிய நீதிமன்றம் ஜேமி சாத்துக்கு கொலை மற்றும் பாலியல் வல்லுறவுக்காக 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

கொலம்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, நான்சியை கற்பழித்து, சுட்டுக் கொன்ற பிறகு ஜேமிக்கு மிகுந்த பயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது தந்தையின் உதவியை நாடியுள்ளார். அதன்பின்னர், அவரது உதவியுடன், குற்றுயிராகக் கிடந்த நான்சியை ஒரு போர்வையில் போர்த்தி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

ஜேமியின் தந்தை மருத்துவமனையில் இருந்த போது, ஜேமி தலைமறைவானார்.

அந்த தருணத்திலிருந்து, ஜேமியைக் கண்டுபிடிப்பதே மார்ட்டினின் வாழ்க்கையின் ஒரே லட்சியமாக மாறிப் போனது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தேடல் முடிவுக்கு வந்தது. "இது ஒரு எளிமையான வேலை அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எது எப்படி என்றாலும், என் மகளின் கொலையாளியைக் கண்டுபிடிப்பேன் என்று நான் உறுதியாக நம்பினேன்," என்று மார்ட்டின் கூறினார்.

விசாரணையில் நடந்தது என்ன?

மகளின் கொலைகாரனைத் தேடிய தந்தை

பட மூலாதாரம்,PERSONAL FILE

 
படக்குறிப்பு,

ஜேமி சாட் பிரேசிலுக்குத் தப்பிச் சென்ற பிறகு, பொய்யான அடையாளத்துடன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்துள்ளார்

ஜேமி குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிறகு, மார்ட்டின் கொலம்பிய அதிகாரிகள் மற்றும் இன்டர்போலுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு தான் பெற்ற தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

நான்சியின் மரணம் மார்ட்டின் குடும்பத்தின் தலைவிதியை தலைகீழாகத் திருப்பிப் போட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் மார்ட்டினும் அவரது மனைவியும் பிரிந்தனர். அவருடைய ஒரே மகனும் அமெரிக்கா சென்றுவிட்டார்.

இருப்பினும், கட்டிடக் கலைஞரும் பேராசிரியருமான மார்ட்டின் நான்சியின் கொலையாளியைக் கண்டுபிடிப்பதில் தனது நேரத்தையும் சக்தியையும் செலுத்தினர். அவர் உளவுத்துறையைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டார். மேலும், கடற்படையில் பணியாற்றிய அனுபவத்தையும் வைத்து தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி போலீசாருக்கு உதவியாகச் செயல்பட்டுள்ளார்.

பிபிசி செய்திகள், பிரேசிலிடம் பேசிய மார்ட்டின், "நான் கற்பனையாக நான்கு பெயர்களை உருவாக்கி, ஜேமியின் உறவினர்களின் நம்பிக்கையைப் பெறவும், என்னை அவரிடம் அழைத்துச் செல்லக்கூடிய தகவல்களைப் பெறவும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ளத் தொடங்கினேன்," என்றார்.

மார்ட்டின் தான் கண்டறிந்த அனைத்து தகவல்களையும் கொலம்பிய போலீஸ் மற்றும் இன்டர்போலுக்கு தெரிவித்தார். 26 ஆண்டு கால தேடுதலின் போது அவரது வழக்கு பல்வேறு அதிகாரிகளின் கைகளுக்குச் சென்றுள்ளது.

"விசாரணைக்கு பொறுப்பான நபர் மாறும்போதெல்லாம், எல்லாவற்றையும் பற்றி அவருக்குத் தெரிவிக்க அனைத்து ஆவணங்களுடன் நான் அவரைச் சந்திப்பேன்," என்று மார்ட்டின் கூறினார்.

தவறான சுயவிவரத்தைப் பயன்படுத்தி ஜேமியின் உறவினர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு, ஜேமி சாத் கொலம்பியாவின் சான்டா மார்ட்டாவில் இருக்க வாய்ப்பில்லை என்றும், பிரேசில் நாட்டின் பெலோ ஹொரிசோண்டே (ரியோ டி ஜெனிரோவிலிருந்து 440 கிலோமீட்டர் வடக்கே) நகரில் தான் இருக்க வேண்டும் என்றும் மார்ட்டின் முடிவு செய்தார்.

இந்தத் தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பிரேசில் காவல்துறையும் இன்டர்போலும், ஜேமி சாத் போன்ற சுயவிவரங்களைக் கொண்ட ஒருவரைக் கண்டுபிடித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி சிறையில் அடைக்கப்பட்டார்?

மகளின் கொலைகாரனைத் தேடிய தந்தை

பட மூலாதாரம்,PERSONAL FILE

விசாரணை அதிகாரிகள் சந்தேக நபரை பின்தொடர்ந்து அவர் சென்ற காபி கடைக்கு சென்று சந்தேக நபர் காபி குடித்த கோப்பையை கைப்பற்றினர். நான்சியின் கொலையில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட நபரின் கைரேகைகள் பொருந்துமா என்பதைச் சரிபார்க்க அந்த கோப்பையை போலீசார் எடுத்துக்கொண்டனர். பின்னர் சோதனையில், இரண்டு கைரேகைகளும் ஒரே மாதிரியாக இருந்தன.

பிரேசில் போலீஸார் பின்னர் அந்த சந்தேக நபரைக் கைது செய்து, தவறான அடையாளத்தின் அடிப்படையில் பிரேசிலில் தங்கிய குற்றத்திற்காக அவரை விசாரிக்கத் தொடங்கினர். இந்த விசாரணையில், அவர் தான் கொலையாளி என்றும் தெரியவந்தது. இதையடுத்து கொலம்பிய அரசாங்கம் அவரைச் சிறையில் அடைக்க வசதியாக, அந்த நபரை திரும்ப ஒப்படைக்கக் கோரி ஒரு கோரிக்கையை பிரேசில் அரசிடம் சமர்பித்தது.

அந்த நாட்களை நினைவுகூர்ந்த மார்ட்டின், “ஜேமி கைது செய்யப்பட்டதைத் தெரிவிக்க இன்டர்போல் இயக்குனர் என்னை அழைத்தபோது நான் முழங்காலில் விழுந்து கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன். என் ஆண்டவரே! ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு நீதி கிடைத்துள்ளது."

"அமெரிக்காவில் உள்ள என் மகனையும் ஸ்பெயினில் உள்ள அவனது தாயையும் அழைத்தேன், நாங்கள் அனைவரும் ஒன்றாக அழத் தொடங்கினோம்."

சில மாதங்களுக்குள் ஜேமி கொலம்பிய சிறையில் தண்டனை அனுபவிப்பார் என்று மார்ட்டின் நம்பினார். அவரை நாடு கடத்துவது பிரேசிலின் உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படவிருந்தது. அனைத்தும் மார்ட்டின் எதிர்பார்த்தது போலவே நடந்தது என்றாலும், அவருக்கு சிறிய சந்தேகமும் இருந்தது.

நீதிமன்ற விசாரணைக்கு வந்த வழக்கு

மகளின் கொலைகாரனைத் தேடிய தந்தை

பட மூலாதாரம்,PERSONAL FILE

 
படக்குறிப்பு,

நான்சி

செப்டம்பர் 28, 2020 அன்று, மார்ட்டினுக்கு வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. பிரேசில் நாட்டு சட்டங்களின் படி, குற்றவியல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நபர் 20 ஆண்டுகளுக்குள் வெளிநாட்டுக்கு நாடு கடத்தப்பட்டிருக்கவேண்டும் என்றும் தற்போது 26 ஆண்டுகள் ஆகி விட்டதால் அவரை நாடு கடத்த சட்டப்படி வாய்ப்பில்லை என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இருப்பினும், உச்ச நீதிமன்றம் அமர்வில் இருந்த அனைத்து நீதிபதிகளும் ஒருமனதாக இந்த முடிவை எடுக்கவில்லை. சட்டத்தின் மீதான நீதிபதிகளின் பார்வையில் வேறுபாடுகள் இருந்தன.

பிரேசிலிய சட்டத்தின்படி, பிரேசிலில் குற்றம் நடந்தால் நாடு கடத்தப்பட முடியாது, ஆனால் அதே நபர் ஏற்கெனவே மற்றொரு குற்றம் செய்திருந்தால் அந்த விதி பொருந்தாது என்றும் சட்டம் கூறுகிறது.

ஜேமி தனது முதல் தவறிலிருந்து தப்பும் நோக்குடன் தவறான அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை தயாரித்திருக்கிறார்.

ஜேமியின் வழக்கறிஞர் ஃபெர்ணாண்டோ கோமெஸ் டீ ஒலிவீரா கடந்த ஆண்டு பிபிசி பிரேசிலிடம் பேசியபோது, "உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்தபோதும், பிரேசில் அரசு எனது கட்சிக்காரரை பகிரங்கமாக குற்றஞ்சாட்டவில்லை," என்று கூறினார்.

நான்சியைக் கொன்ற போதிலும், ஜேமி சாத் எந்த தண்டனையையும் எதிர்கொள்ளாமல் பிரேசிலில் இருக்க முடிந்தது.

குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர கடைசி முயற்சி

மகளின் கொலைகாரனைத் தேடிய தந்தை

பட மூலாதாரம்,PERSONAL FILE

 
படக்குறிப்பு,

நான்சி

இறுதியில் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவின் படி, ஜேமி சாத் நாடு கடத்தப்படும் வாய்ப்பு இல்லை என்றே முடிவானது. அதை எதிர்த்து கொலம்பிய அரசும் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால் மார்ட்டின் மெஸ்ட்ரே தனது நம்பிக்கையை இழக்கவில்லை. மார்ட்டின் தனது கடைசி புகலிடமாகக் கருதி ஒரு சர்வதேச சட்ட அமைப்பின் உதவியை நாடினார்.

அந்த அமைப்பின் உதவியுடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மார்ட்டின் மனு தாக்கல் செய்தார். பிரேசிலின் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரிஸ் கடந்த மார்ச் மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக் கோரிக்கை மனு அளிக்க நான்சியின் தந்தைக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தார். அதனடிப்படையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் இறுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி பிரேசில் உச்ச நீதிமன்றம், ஜேமி சாத்தை நாடு கடத்த ஒப்புதல் அளித்தது. மார்ட்டின் மெஸ்ட்ரே தனது மகள் கொலை வழக்கில் இறுதியாக நீதி கிடைத்தது என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டதுடன் அப்போது தான் அவருக்கு நிம்மதி கிடைத்ததாக உணர்ந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cq5g7q44djzo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.