Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்விட்டரை மோதி அரசு மிரட்டியதா? டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜேக் டார்சி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு தவறானது

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ட்விட்டர் நிறுவனர் ஜேக் டார்சி

13 ஜூன் 2023, 08:03 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ட்விட்டர் நிறுவனரும், அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டார்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ட்விட்டரை மூடுமாறு பிரதமர் மோதி தலைமையிலான இந்திய அரசு தன்னை மிரட்டியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அரசை எதிர்த்து விமர்சிக்கும் பல இந்திய ஊடகவியலாளர்களின் கணக்குகளை மூடுமாறு இந்திய அரசு தன்னை கேட்டுக்கொண்டதாக ஜேக் டார்சி அந்த பேட்டியில் கூறினார்.

சமூக வலைதளமான யூடியூபில் செயல்படும் பிரேக்கிங் பாயின்ட் என்ற தனியார் சேனலிடம் திங்கள் கிழமையன்று பேசிய போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜேக் டார்சியிடம் 'சக்தி வாய்ந்த மக்கள் அவருக்கு அளித்த நிர்பந்தங்கள்' குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்வியில் இந்தியாவின் பெயர் கூட இடம்பெறவில்லை.

ஆனால் இந்த கேள்விக்குப் பதில் அளித்த ஜேக் டார்சி, விவசாய இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, ட்விட்டரை முடக்க உத்தரவிடப் போவதாக இந்திய அரசு மிரட்டியது என்றார்.

 

ஜேக் டார்சியிடம், "உலகம் முழுவதிலுமிருந்து சக்தி வாய்ந்த பலர் உங்களிடம் பல்வேறு வகையான நிர்பந்தங்களை முன்வைக்கிறார்கள். தார்மீகக் கொள்கைகளுடன் செயல்படும் நீங்கள் இது போன்ற நிர்பந்தங்கள் இருக்கக்கூடாது என எப்படி எதிர்பார்க்க முடியும்?" என பிரேக்கிங் பாய்ன்ட் கேள்வி எழுப்பியது.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், “உதாரணமாக, மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அது போன்ற ஒரு அனுபவம் எனக்குக் கிடைத்தது. விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ட்விட்டரில் அது குறித்து ஏராளமானோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். அதில் சில ஊடகவியலாளர்கள் அரசை எதிர்த்து விமர்சித்தனர்.

இது போன்ற நிலையில், இந்தியாவில் ட்விட்டரை முடக்குவோம் என்று அரசு மிரட்டியது. எங்களுடைய ட்விட்டருக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. ஆனால், அரசின் நிர்பந்தத்தை ஏற்காத போது, எங்கள் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படும் என்றும், அரசு சொல்வதை ஏற்காவிட்டால் எங்கள் அலுவலகத்தை மூடிவிடப் போவதாகவும் மிரட்டல் வந்தது. உலகில் பெரிய மக்களாட்சித் தத்துவத்தைக் கொண்ட நாடான இந்தியாவில் தான் இது நடக்கிறது,” என்றார்.

 

ஜாக் டார்சிக்கு இந்திய அரசு பதில்

ஜேக் டார்சியின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு முற்றிலும் நிராகரித்துள்ளது. இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிலில், இது ட்விட்டர் வரலாற்றில் அந்நிறுவனம் செய்த தவறுகளை அழிக்கும் முயற்சி என்று கூறியுள்ளார்.

மேலும், ஜேக் டார்சியின் தலைமையின் கீழ், ட்விட்டர் மற்றும் அவரது குழுவினர் தொடர்ந்து இந்திய சட்டங்களை மீறுவதாக அவர் கூறினார். 2020 மற்றும் 2022 ம் ஆண்டுகளுக்கு இடையில், இந்திய சட்டங்களை ட்விட்டர் முறையாக பின்பற்றவில்லை என்பதுதான் உண்மை என்றும், கடைசியில் ஜூன் 2022 க்குப் பின்னர் தான் இந்திய சட்டங்களை சரியாக ட்விட்டர் பின்பற்றத் தொடங்கியது என்றும அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் ஒருநாளும் முடக்கப்படவில்லை என்றும், ட்விட்டரில் பணியாற்றும் யாரும் எப்போதும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் சட்டங்கள் தமக்குப் பொருந்தாது என்ற வகையிலேயே ட்விட்டர் செயல்பட்டது. இந்தியா ஒரு இறையாண்மையுள்ள தேசம், இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் இந்தியச் சட்டங்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் உரிமை அரசுக்கு உண்டு."

விவசாயிகள் போராட்டம் நடத்திய காலத்தைக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “ஜனவரி 2021 ஆர்ப்பாட்டங்களின் போது, பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் பரவின. போராட்டக்களத்தின் ஏதோ ஒரு இடத்தில் படுகொலை நடந்ததாகவும் பொய்யான தகவல்கள் ட்விட்டரில் பகிரப்பட்டன. இதுபோன்ற போலிச் செய்திகள், நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதால், அத்தகைய தகவல்களை ட்விட்டரில் இருந்து நீக்குவது இந்திய அரசின் தேவையும் ஆகும்.

ட்விட்டர் பாரபட்சமாகச் செயல்பட்டதாக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றச்சாட்டுக்களை எழுப்பிய போது, அமெரிக்காவில் நடந்த சில சம்பவங்களையும் மேற்கோள் காட்டினார்.

"ஜேக் டார்சியின் காலத்தில், ட்விட்டரின் பாரபட்சமான பதிவுகளை அகற்றுவதில் இந்தியாவில் பல்வேறு இடையூறுகளை அந்நிறுவனம் ஏற்படுத்தியது. ஆனால் அமெரிக்காவில் இதேபோன்று தவறான தகவல்கள் பரப்பப்பட்ட போது, ட்விட்டர் நிறுவனமே அவற்றை அகற்றியது."

இந்தியாவில் செயல்படும் ட்விட்டர் அலுவலகத்தில் யாரும் சோதனை நடத்தவில்லை என்றும், யாரையும் சிறைக்கு அனுப்பவில்லை என்றும் மத்திய அமைச்சர் கூறினார். "இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு ட்விட்டர் செயல்படுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்."

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

எலான் மஸ்க் பற்றி ஜேக் டார்சி என்ன சொன்னார்?

இந்த பேட்டியில், ட்விட்டரின் தற்போதைய உரிமையாளரான எலோன் மஸ்க் குறித்தும் ஜேக் டார்சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த டார்சி, எலோன் மஸ்க்கின் பல செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் அவரது கவனக்குறைவையே வெளிக்காட்டியுள்ளன என்றார்.

ட்விட்டரின் நிர்வாகக் குழுவில் சேருமாறு மஸ்க்கை பலமுறை வலியுறுத்தியதாகவும், ஆனால் அவர் கடந்த ஆண்டு தான் இக்குழுவில் இணைந்ததாகவும் தெரிவித்த டார்சி, அதன் பின் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க அவர் முடிவெடுத்தார் என்றும் கூறினார்.

எலான் மஸ்க் பற்றி மேலும் பேசிய டார்சி, “எலான் எங்களது முதல் பயனராக இருந்தார். நம்பர் ஒன் வாடிக்கையாளராகவும் இருந்தார். எங்கள் தளத்தை ஆழமாக புரிந்து கொண்ட அவர், ஒரு தொழில்நுட்பவியலாளர் என்பது மட்டுமல்லாமல் தொழில்நுட்பத்தை உருவாக்குபவராகவும் இருக்கிறார்," என்றார்.

ட்விட்டரை வாங்க முன்மொழிந்த எலான் மஸ்க் பின்னர் பின்வாங்கியதால் அவர் மீது ட்விட்டர் வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ட்விட்டரை அவர் வாங்கினார்.

ட்விட்டர் பதிவுகளை அகற்றக் கோருவதில் முதலிடத்தில் இருக்கும் நாடுகள்

ஜேக் டார்சி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு தவறானது

பட மூலாதாரம்,SOUMYABRATA ROY/NURPHOTO VIA GETTY IMAGE

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ட்விட்டரின் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, ட்விட்டரில் இருந்து பதிவுகளை அகற்றக் கோருவதில் இந்தியா உலகிலேயே முன்னணியில் உள்ளது.

அண்மையில் ட்விட்டர் வெளியிட்ட அறிக்கையின்படி, 2022ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 30 ஜூன் வரை உலகம் முழுவதும் ட்விட்டர் பதிவுகளை அகற்றக் கோரி 53,000 கோரிக்கைகளை உலக நாடுகள் அளித்தன.

பல்வேறு சட்டவிதிகளை மீறியதாக 6,586,109 பதிவுகளை அகற்றுமாறு உலக நாடுகள் கோரின. அதில் 50,96,272 கணக்குகள் மீது ட்விட்டர் நடவடிக்கை எடுத்தது, அதே நேரத்தில் ட்விட்டர் விதிகளை மீறியதால் 1,618,855 கணக்குகள் இடைநீக்கம் செய்யப்பட்டன. 85 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அரசுகளிடமிருந்து பயனர்கள் குறித்த தகவல்களை அளிக்குமாறு 16,000 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை ட்விட்டர் பெற்றுள்ளது.

ட்விட்டரின் கூற்றுப்படி, இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த கோரிக்கைகளை அதிக எண்ணிக்கையில் முன்வைக்கின்றன.

சமூக ஊடகங்களில் கேள்வி

ஜேக் டார்சியின் இந்த பேட்டிக்குப் பின்னர், பிற சமூக ஊடகங்களிலும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன.

ஜேக் டார்சியின் இந்த பேட்டியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி, விவசாயிகள் போராட்டத்தின் போது ட்விட்டர் நிறுவனத்துக்கு மோதி அரசு பல்வேறு அழுத்தங்களை அளித்தது என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் ராணா அய்யூப், ஜேக் டார்சியின் குற்றச்சாட்டுகள் ஆபத்தை வெளிக்காட்டுபவையாக இருக்கின்றன என்று விமர்சித்துள்ளார்.

அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஜேக் டார்சியின் பேட்டியை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டு, "விவசாயிகள் இயக்கத்தையும், அரசையும் விமர்சிப்பவர்களின் பதிவுகளை அகற்றுமாறு இந்திய அரசு ட்விட்டரை வலியுறுத்தியிருக்கிறது," என்று எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கவுரவ் பந்தி தனது ட்விட்டர் பதிவில், “மோடியும், அமித் ஷாவும் கருத்துச் சுதந்திரத்தைக் கண்டு எவ்வளவு அஞ்சுகின்றனர் என்பதற்கு இது மற்றொரு தெளிவான ஆதாரம்,” என்று கூறியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டமும், சமூக ஊடகமான ட்விட்டரும்

பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அரசின் விவசாயிகள் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் விவசாயிகள் நீண்ட போராட்டத்தை நடத்தினர், இறுதியில் அரசு அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போராட்டத்தின் போது, டெல்லியை வெளி மாநிலங்களுடன் இணைக்கும் எல்லையில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், விவசாயிகள் இந்த சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கினர், 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், டெல்லி நகரின் எல்லைகளில் அவர்கள் முகாம்களை அமைத்தனர்.

2021 ம் ஆண்டு பிப்வரி மாதத்தில், இந்திய அரசின் கோரிக்கையின் பேரில், விவசாயிகள் இயக்கம் தொடர்பான பல முக்கியமான கணக்குகளை ட்விட்டர் தடை செய்தது.

அப்போது இந்தக் கணக்குகள் மீதான தடை குறித்து விளக்கமளித்த ட்விட்டர், “சட்டப் பொறுப்புகள் காரணமாக, இந்தியாவில் உங்கள் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்திருந்தது.

விவசாயிகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு உட்பட பல செல்வாக்கு மிக்க நபர்களின் கணக்குகளும் இதில் அடங்கும்.

இந்திய அரசு vs ட்விட்டர்

ஜேக் டார்சி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு தவறானது
 
படக்குறிப்பு,

விவசாயிகள் போராட்டத்தின் போது இந்திய அரசுக்கும், ட்விட்டருக்கும் இடையில் மோதல் உருவானது

விவசாயிகள் போராட்டத்தின் போது இப்படி பல கணக்குகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டதில் இந்திய அரசுக்கும், ட்விட்டருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தியாவில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக அப்போது பதவி வகித்த ரவிசங்கர் பிரசாத், ட்விட்டர் பாரபட்சத்துடன் செயல்படுவதாக 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றம் சாட்டியிருந்தார்.

ராஜ்யசபாவில் பேசிய ரவிசங்கர் பிரசாத், " அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது ட்விட்டர் செயல்பட்ட விதத்துக்கும், செங்கோட்டை வன்முறைச் சம்பவங்களின் போதும் ட்விட்டர் இருவேறு விதமாகச் செயல்பட்டது ஆச்சரியமளிக்கும் விதத்தில் இருக்கிறது," என்று கூறியிருந்தார்.

2021ம் ஆண்டு ஜுன் மாதத்தில், ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கும் இரண்டு மணிநேரம் முடக்கிவைக்கப்பட்டது. இதை கடுமையாக விமர்சித்த பிரசாத், "ட்விட்டரின் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகள் குறித்து நான் வெளியிட்ட பதிவுகள், குறிப்பாக தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற எனது பேட்டிகளில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களைப் பதிவிட்டது, அவற்றின் வலுவான தாக்கம் ட்விட்டர் நிறுவனத்தைப் புண்படுத்தியதாகத் தெரிகிறது," என்றார்.

"ட்விட்டர் ஏன் இந்திய அரசின் வழிகாட்டுதல்களை ஏற்க மறுக்கிறது என்பது இப்போது தெளிவாகிறது. ஏனெனில், அவற்றை ட்விட்டர் ஏற்றுக்கொண்டால், ஒரு நபரின் கணக்கை அந்நிறுவனமே தன்னிச்சையாக அல்லது ஒருதலைப்பட்சமாக முடக்கமுடியாது. இதுவே ட்விட்டரின் அச்சமாக இருக்கிறது," என்றார் அவர்.

மேலும், “ட்விட்டரின் நடவடிக்கைகள், அந்நிறுவனம் கருத்து சுதந்திரத்துக்கு முன்னோடியாக இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆனால் ட்விட்டர் நிர்வாகிகள் அவர்களுடைய கொள்கைகளைச் செயல்படுத்துவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்காவிட்டால், அவர்கள் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து உங்கள் கணக்கை முடக்கிவிடும் அச்சுறுத்தல் இருக்கிறது," என்றார்.

குடியரசு தினத்தன்று, டெல்லியின் எல்லையில் போராட்டம் நடத்திய விவசாய அமைப்பினர் 'டிராக்டர் அணிவகுப்புக்கு' ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, தலைநகரின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. ஆனால் செங்கோட்டையில் நடந்த வன்முறைதான் அதிக அளவில் விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு சுமார் 1100 கணக்குகளை முடக்குமாறு ட்விட்டருக்கு அரசு அறிவுறுத்தியது.

இந்தக் கணக்குகளில் பெரும்பாலான கணக்குகள் காலிஸ்தான் ஆதரவாளர்கள், பல மாதங்களாக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை தூண்டுபவர்கள் அல்லது ஜனவரி 26 அன்று நடந்த வன்முறைகள் பற்றிய தவறான செய்திகள் மற்றும் தகவல்களைப் பரப்பும் சிலருக்கு சொந்தமானவை என்று அரசு கூறியது.

அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, ட்விட்டர் சில கணக்குகளை முடக்கியது. ஆனால் பின்னர் இந்த கணக்குகளில் பெரும்பாலானவை தொடர்ந்து இயங்க அனுமதித்தது.

ஊடகவியலாளர்கள், சமூக சேவகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கணக்குகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ட்விட்டர் ஒரு பதிவை ஒன்றை வெளியிட்டது.

அப்போது, "நாங்கள் கருத்து சுதந்திரத்திற்காக தொடர்ந்து வாதிடுவோம். மேலும் இந்திய சட்டத்தின்படி எங்கள் நடவடிக்கைகள் இருக்கும் வழி ஒன்றின் படி செயல்படவே நாங்கள் விரும்புகிறோம்," என்று ட்விட்டர் தெரிவித்திருந்தது.

ட்விட்டர் அலுவலகத்துக்கு விசாரணைக்குச் சென்ற டெல்லி போலீசார்

ஜேக் டார்சி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு தவறானது

பட மூலாதாரம்,GETTY IMAGES

"போலி டூல்கிட்" விவகாரத்தில், அது தொடர்பான வழக்கு விசாரணைக்காக டெல்லி போலீஸ் குழு ஒன்று, 2021ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி மாலை ட்விட்டர் இந்தியாவின் குருகிராம் அலுவலகத்துக்குச் சென்றது.

அதே நாளில் பிற்பகலில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இந்த விவகாரத்தில் ட்விட்டர் இந்தியாவுக்கு ஒரு நோட்டீஸை அனுப்பியிருந்தது.

டூல்கிட் தொடர்பான வழக்கு, பா.ஜ.,வின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவின் குற்றச்சாட்டு தொடர்பானது. இந்த போலி டூல்கிட்டைப் பயன்படுத்தி, பா.ஜ., மற்றும் நாட்டின் நற்பெயருக்கு, காங்கிரஸ் கட்சி களங்கம் ஏற்படுத்தியதாக, சம்பித் பத்ரா குற்றம் சாட்டியிருந்தார்.

மே 18 அன்று, பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா மற்றும் பாஜக பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆகியோர் தலா நான்கு பக்கங்கள் கொண்ட இரண்டு ஆவணங்களின் ஸ்கிரீன் ஷாட்களை ட்விட்டரில் வெளியிட்டிருந்தனர். இந்த ஆவணங்களில் ஒன்று கொரோனா தொற்று தொடர்பாகவும் மற்றொன்று சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடர்பானதாகவும் இருந்தது.

இந்த ட்விட்டர் பதிவுகளில், கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவ பிரதமர் மோதிதான் காரணமாக இருந்தார் என்ற செய்தியைப் பரப்ப காங்கிரஸ் கட்சி உருவாக்கிய டூல்கிட் இது என கூறப்பட்டிருந்தது. மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சித்ததாகவும் அப்போது கூறப்பட்டது.

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தின் போது, போராட்டத்துக்கு ஆதரவளித்தவர்கள் இந்த டூல்கிட்டைப் பயன்படுத்தியதாகவும், அதன் உதவியுடன் ட்விட்டர் மூலம் தவறான தகவல்களைப் பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கடைசியில் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த போது, அவரது ட்விட்டர் பதிவுகளும் காங்கிரஸ் கட்சி தயாரித்த டூல்கிட்டின் ஒரு பகுதியே என விமர்சிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c80944370j6o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.