Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணிப்பாளரின் பதவி விலகலும் பௌத்த மயமாக்கல் வியூகங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பணிப்பாளரின் பதவி விலகலும் பௌத்த மயமாக்கல் வியூகங்களும்

-புவிசார் அரசியல் – பொருளாதாரப் போட்டிச் சூழல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், ஒருமித்த குரலில் செயற்படும் அளவுக்கு அரசியல் – பொருளாதாரப் பொறிமுறைகள் வகுக்கப்படவில்லை. தமிழர் பிரதேசங்களில் 1950 களில் கல் ஓயா திட்டத்திலிருந்து 1970 களில் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி திட்டம் வரையிலான நீர்ப்பாசனத் திட்டங்களுடன் ஆரம்பித்த சிங்களக் குடியேற்றம், தற்போது தொல்பொருள் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில், பௌத்த மயமாக்கலுக்கான வேறுபட்ட பாதையை நுட்பமாகக் கையாள ஆரம்பித்திருக்கிறது-

-அ.நிக்ஸன்-

2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கைத்தீவு ஒற்றையாட்சி அரசு என்பதை மேலும் உறுதிப்படுத்தும் சிங்களத் தலைவர்களின் அரசியல் வேலைத் திட்டங்கள் தற்போது, கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால்  முழுமையடைந்து வருகின்றன.

அமெரிக்க, இந்திய மற்றும் சீன அரசுகள் தமக்கிடையே ஏட்டிக்குப்போட்டியான காரியங்களில் ஈடுபட்டாலும் இலங்கை ஒற்றையாட்சி என்பதை ஏற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சென்ற ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போதும் பகிரங்கமாகப் பெருமையோடு கூறியிருந்தார்.

2021 இல் கண்டியில் ஞானசார தேரர், இலங்கை பௌத்த சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்தபோது, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மாத்திரமே அதனைக் கண்டித்திருந்தார்.

ஆனால் தற்போதைய  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட எந்த ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஞானசார தேரரின் அந்தக் கருத்தை அப்போது கண்டிக்கத் துணியவில்லை.

இந்த நிலையில் இலங்கைத் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மானதுங்கவுடன் முல்லைத்தீவு தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ரணில் தர்க்கப்பட்டார் என்றும், அதனால் பணிப்பாளர் தனது பதவியில் இருந்து விலகினார் எனவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகழாரம் சூட்டுவதுதான் வேடிக்கை.

மகிந்த ராஜபக்ச வடக்குக் கிழக்குத் தயாகப் பகுதிகளுக்குச் செல்லும்போதெல்லாம் இலங்கைத்தீவில் உள்ள எந்த ஒரு மாகாணமும் மாவட்டமும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடாது என்று மார் தட்டியிருக்கிறார்.

அவ்வாறு கூறிய மகிந்தவின் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் நூற்று இருபத்து எட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் ரணில் அரசாங்கத்தை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பதவி விலகியதும் கண்டி மகாநாயக்கத் தேர்களைச் சந்தித்த பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், ரணிலுக்குப் பௌத்த சமயத் தொல்பொருள் பற்றிப் பேச அருகதையில்லை என்று கூறியதுடன், வடக்குக் கிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் சின்னங்களைத் தமிழ்ப் பயங்கரவாதிகளிடம் அடகுவைக்கப் போகிறார் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் 1950 களில் கல் ஓயா திட்டத்திலிருந்து 1970 களில் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி திட்டம் வரையிலான நீர்ப்பாசனத் திட்டங்களுடன் ஆரம்பித்த சிங்களக் குடியேற்றம், தற்போது தொல்பொருள் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில், பௌத்த மயமாக்கலுக்கான வேறுபட்ட பாதையை மிக நுட்பமாகக் கையாள ஆரம்பித்திருக்கிறது.

ஏறத்தாள பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய அரசு ஆரம்பித்த யூதக் குடியேற்றங்களுக்கு ஒப்பானதாகச் சிங்களக் குடியேற்றங்கள் அரங்கேறுகின்றன.

spacer.png

அதுவும் 2009 மே மாதத்தின் பின்னரான குறிப்பாக நல்லாட்சி எனக் கூறப்பட்ட மைத்திரி – ரணில் அரசாங்கம் 2015 இல் இருந்து சிங்களக் குடியேற்றங்கள் உள்ளிட்ட பௌத்த மயமாக்கலை தொல்பொருள் திணைக்களம், காணி அபிவிருத்தி அதிகார சபை, மற்றும் வன வளத் திணைக்களம் ஆகியவற்றின் மூலம் சட்ட ரீதியானதாக மாற்றியிருந்தது.

2015 இல் ரணில் பிரதமராக இருந்தபோது அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் பௌத்த தொல்லியல் ஆராட்சியாளர்களுக்கு வடக்குக் கிழக்கு பௌத்த அகழ்வாராட்சிகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டிருந்தன.. சிங்கள நாளிதழ்கள் இந்தச் செய்திக்கு அன்று முக்கியத்தும் கொடுத்திருந்தன.

இந்த நிலையில் கடந்த வாரம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பில் பங்குபற்றிய தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளருடன் ரணில் முரண்பட்டார் என்ற செய்தியும் அந்தச் செய்திக்குரிய மிகைப்படுத்தலும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கம் கொண்டவை என்பது பட்டவர்த்தனமாகிறது.

விவிலிய மற்றும் யூதத் தொன்மங்களின் அடிப்படையிலான தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின் மூலம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மற்றும் சுதந்திரமான அரபு பாலஸ்தீனம் சியோனிச ஆக்கிரமிப்பால் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டதாகப் பேராசிரியர் அமீர் அலி சென்ற வெள்ளிக்கிழமை கொழும்புரெலிகிராப் (colombotelegraph) ஆங்கில செய்தித் தளத்தில் எழுதிய கட்டுரையில் விபரிக்கிறார்.

தமிழர் பிரதேச பௌத்த ஆக்கிரமிப்புக்குரிய வழிமுறைகள் பற்றிக் கொழும்பில் உள்ள இஸ்ரேல் தூதரகம் இலங்கைக்கு வகுப்பெடுத்து வருகிறதா எனவும் அந்தக் கட்டுரையில் பேராசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலஸ்தீனிய நிலங்கள் சியோனிச இஸ்ரேலால் தொடர்ந்து விழுங்கப்பட்டு வருகின்றன, அதுவும் ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில் அமெரிக்கா போன்ற எந்த ஒரு மேற்கு நாடுகளோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ இஸ்ரேல் அரசிடம் எத்தகைய கண்டனங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

இதேபோன்ற ஒரு சூழல்தான் வடக்குக் கிழக்கிலும் சிங்கள பௌத்த மயமாக்கலை அமெரிக்க – இந்திய அரசுகள் கண்டிக்காமல் இலங்கை கேட்கின்ற அனைத்துப் பொருளாதார உதவிகளையும் செய்கின்றன.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறும் ஒற்றை வார்த்தையில் மாத்திரம் அழுத்தம் கொடுத்து விட்டு, நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.

தமிழ் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல், மேலதிக இராணுவ முகாம்கள் ஆகியவற்றுக்கான செலவுகள் எங்கிருந்து எந்த அடிப்படையில் பெறப்படுகின்ற என்ற கேள்விகள் எதனையும் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்தாக இல்லை.

இந்த நிதியுதவிகள் இலங்கை தனித்த ”ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பையும் உறுதிப்படுத்துகிறது. இதை மையமாக் கொண்டே சரத்வீரகேசர, விதுர விக்கிரமநாயக்க போன்றோர் இலங்கை பௌத்த நாடு என்று துணிவுடன் சித்தரிக்கின்றனர்.

இந்தியாகூட இலங்கையிடம் எதுவுமே கேட்காது என்ற தொனியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயரட்ன கொழும்பின் புநகர் பகுதியான பியகம் பிரதேசததில் சென்ற வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் எதிர்வரும் ஜூலை 20 – 30 ஆம் திகதிகளுக்கிடையில் ரணில் இந்தியா செல்வார் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ரணில் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரபூர்வப் பயணம் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்தியத் தேசிய பாதுகாப்புச் செயலாளர்  ஆகியோரையும் மற்றும் இந்திய முதலீட்டாளர்களையும் ரணில் சந்திக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

அதேநேரம் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள இயற்கைத் துறைமுகங்கள் மற்றும் அபிவிருத்திக்கும் தமது புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கிலும் பயன்படுத்தவுள்ள புதிய திட்டங்கள் பற்றியும் இந்திய மத்திய அரசு இலங்கையிடம் இருந்து வாக்குறுதிபெற்றிருக்கிறது. இப் பின்னணியிலேயே ரணில் புதுடில்லிக்குச் செல்கிறாரென கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா இந்தியாவைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள எடுத்துள்ள அத்தனை முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், பாகிஸ்தானுடன் தனது உறவைப் பலப்படுத்தி வரும் அமெரிக்கா, இலங்கை விவகாரத்தில் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குரிய நிரந்த அரசியல் தீர்வு பற்றிய விடயத்தில் இந்தியாவைக் கடந்து வரக்கூடிய வாய்ப்புகள் இல்லை. இது குறித்து இப் பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவுக்கு இலங்கையில் கூடுதல் முக்கியத்தும் கொடுக்கப்பட்டு வரும் திட்டங்களை, இந்தியாவைப் பயன்படுத்திச் சிங்களத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு உண்டு.

ஆனால் சர்வதேச போர்க் குற்ற விசாரணை அல்லது இன அழிப்பு விசாரணை அவசியம் என்ற தமிழ்தரப்பின் கோரிக்கைகளை அமெரிக்கா பரிசீலிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமல் இல்லை.

spacer.png

இருந்தாலும் அதற்குரிய ஏற்பாடுகள், உரிய ஆதாரங்களோடு தமிழ்த்தேசியக் கட்சிகள் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் குறிப்பிட்ட சில தமிழ்த்தேசியக் கட்சிகள் இலங்கை அரசாங்கத்துடனும் இந்திய மத்திய அரசுடனும் சேர்ந்து பயணிக்க அல்லது இந்தியா சொல்வதைக் கேட்கும் நிலையில்தான் இயங்குகின்றன.

இந்த நிலையில் புவிசார் அரசியல் – பொருளாதாரப் போட்டிச் சூழல் ஈழத்தமிழர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கினாலும், ஒருமித்த குரலில் முன்கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு அரசியல் – பொருளாதாரப் பொறிமுறைகள் வகுக்கப்படவில்லை.

ஆங்காங்கே சிறு குறிப்புகள் அல்லது ஆவணங்கள் இருந்தாலும் அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருமித்த குரலில் அதனை ஏற்கும் மனப் பக்குவத்துடன் இருப்பதாகவும் கூற முடியாது.

தமிழ்த்தரப்பின் இப் பலவீனங்களை அறிந்துகொண்ட நிலையில்தான் இந்தியா, ரணிலுடன் குறிப்பாகச் சிங்கள அரசியல் தலைவர்களுடன் முரண்பாடுகளிலும் உடன்படக்கூடிய புவிசார் அரசியல் பொருளாதார நலன்களில் கவனம் செலுத்துகிறது. இதற்கும் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.

ரசிய – உக்ரெயன் போர்ச் சூழலில், அமெரிக்கா போன்ற வல்லரசுகள் தெரிந்தும் தெரியாத நிலையில் இருக்கும் சூழலில், பாலஸ்தீன நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகின்றது.

 ஆனாலும் சர்வதேசத்தை நோக்கிய தமது அரசியல் விடுதலைக்குரிய வழிவரைபடத்துடன் நிதானமாகவும் ஒருமித்த குரலோடும் பாலஸ்தீன கமாஸ் இயக்கம் செயற்படுகின்றது.

இதனால் விரும்பியோ விரும்பாமலே காலம் தாழ்த்தியேனும் பாலஸ்தீனயர்களின் கோரிக்கை சர்வதேச அரங்கில் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் விஞ்சிக் காணப்படுகின்றன.

இவ்வாறான சூழல் அல்லது பின்னணி ஒன்றை தமிழ்த்தரப்பினர் எந்த வகையில் உருவாக்கவுள்ளனர்? அதனைக் கையாளக்கூடிய தகுதி யாரிடம் உண்டு? சிங்கள அரசியல் தலைவர்கள் போன்று சர்வதேச அரசியல் விவகாரங்களை குறிப்பாக இந்திய அரசியல் நகர்வுகளை அவதானித்துச் செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கட்சி எது?

தமிழ்த்தேசியக் கொள்கை மக்களிடம் இறுக்கமான நிலையில் உள்ளது. ஆகவே பாலஸ்தீனம் போன்று மக்களிடம் இருந்து வழி முறைகளையும் செயற்பாட்டுத் திட்டங்களையும் பெற முடியும். அதற்குரிய விழிப்புணர்களையும் வழங்க முடியும்.

ஆனால் தேர்தல் அரசியல் முறைமைக்குள் சிக்குண்டதால், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் தமது கட்சி ஆசனங்களை அதிகரிப்பதிலும் வாக்குகளைப் பெறும் நோக்கில வியூகங்கள் வகுப்பதிலுமே காலம் செல்கிறது.

கட்சி வளர்ச்சிக்குத் தேவையான வியூகங்களுக்குள் மக்களைக் கவரும் நோக்கில், இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு எதிரான பரபரப்புப் போராட்டங்களுக்குரிய அரசியல் வேலைத் திட்டங்களையே வடக்குக் கிழக்கில் காண முடிகிறது.

நிவாரணம் வழங்கும் அரசியலுக்கும் குறைவில்லை. இதற்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் விதிவிலக்கல்ல.

 

http://www.samakalam.com/பணிப்பாளரின்-பதவி-விலகலு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.