Jump to content

மண் சுமந்த மேனியர் ஈழத்தின் பொக்கிஷம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

//இவை போன்ற பட்டறைகள் குறைந்து வருவதும் எங்களது இளைய சமூகம் தவறான வழிகளில் போவதற்கு காரணமோ என நினைப்பதனால் இதனை இங்கே பதிந்து கொள்கிறேன்//..

IMG-5280.jpg

1985 தை மாதத்தின் 5 முதல் வாரம் யாழ் பல்கலைக் கழக கன்டீனில் ஒரு மாலை நேரம், மூவர் ஒரு மேசையை சுற்றி அமர்ந்திருக்கின்றனர்.அப்போது நிகழ்ந்து கொண்டிருந்த போராட்ட சூழலை காட்டும் திரைப்படம் எடுக்க வேண்டு மென்ற ஆர்வம் அவர்களில் ஒருவருக்கு இருந்தது.

இன்னொருவர் நாடகம் போடலாம் என்று சொல்கிறார், மூன்றாமவர் ஏன் இரண்டையும் செய்யலாமே என்கிறார். இந்த எண்ணங்களின் வெளிப்பாடுகளே பின்னர் கலாசார நாளாக முகிழ்ந்து கைலாசபதி அரங்கில் 1985 மார்ச் மாத இறுதியில் நிகழ்த்தப்பட்டது வரலாறு.

மேற்சொன்ன மூவரில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிய பரதன் 'பாவெல்' என்ற
மாக்ஸிம் கோர்க்கியின் 'தாய்' நாவலைத் தழுவி குறும்படம் தயாரிக்க முனைகிறார். நாடகம் போடலாமென்ற முன்னெடுப்பில் இறங்கிய சிதம்பரநாதனும், அ. ரவியும். 'மண் சுமந்த மேனியர்' உருவாக்கத்திற்காக குழந்தை சண்முகலிங்கம் மாஸ்டரை அணுகினர். இவர்களுடன் பின்னர் இணைந்து கொண்ட கவிஞர் சேரன் தனது உணர்வெழுச்சிக் கவிதைகளால் 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்ற ஒரு கவிதா நிகழ்வை தயாரிக்கிறார். இதில் குறிப்பாக 'மண்;சுமந்த மேனியர்' என்ற படைப்பு மூன்று பேராளுமைகளின் சங்கமம் என்பேன். குழந்தை சண்முகலிங்கம் என்னும் தேர்ந்த நாடக
M_04.jpgஆசிரியர், சிதம்பரநாதன் என்னும் கற்பனை வளம் கொண்ட நெறியாளர், கண்ணன் என்னும் சாதனங்கள் பல புரிந்த இசைக்கலைஞர், இவர்கள் மூவரும் தமக்கு கிடைத்த எல்லா வளங்களையும் ஒன்று திரட்டி எமக்கு கொடுத்தது தான் 'மண் சுமந்த மேனியர்' என்ற மேடைக் காவியம்.

குழந்தை மாஸ்டர் (திரு சண்முகலிங்கம்) 'மண்; சுமந்த மேனியர்' நாடகப் பிரதியை ஒரு மணி 30 நிமிடங்களுக்கு அளிக்கை பண்ண எழுதியது ஒரே மூச்சிலோ அன்றி ஒரே இரவிலோ அல்ல: திருநெல்வேலி ஆடியபாதம் வீதியிலுள்ள அவரது செம்மண் தரை வீட்டில் செழித்த வாழையும், தென்னைகளும் நிழல் பரப்பும் முற்றத்தை பார்த்தபடியிருக்கும் முன் திண்ணை மாலை நேரங்களில் நாடகக்காரர்களால் உயிர்ப்படையும். இது 1985 இன் தொடக்கம். அப்போது அவர் கல்வியங்காடு செங்குந்தாவில் அதிபராயிருந்தார். நாடக அரங்க கல்லூரியினரென்றும் கலாசாரக் குழுவின ரென்றும் தவறாது வார நாட்களில் அங்கு பல சந்திப்புக்கள் நடக்கும். அங்கு தான் நடிகர்களான பிரான்சிஸ் ஜெனம், எண்டரி அரசு சுந்தரலிங்கம், உருத்திரேஸ் வரன் மற்றும் மௌனகுரு சிதம்பர நாதன் போன்ற நெறியாளர்களும் வருவர். அவ்வப்போது சென்று அவர்கள் உரையாடுவதை நாங்கள் ஆவென்று கேட்டுக் கொண்டிருப்போம்.

M_05.jpgசிதம்பரநாதனும் ரவியும் 'மண்சுமந்த மேனியர்' கதைக்கான களத்தையும் கதவையும் பற்றிய ஒரு உரு வரைவொன்றை உருவாக்கப் பலமுறை குழந்தை மாஸ்டருடனான சந்திப்புகளை மாலை நேர பொழுதுகளில் மாஸ்டர் வீட்டுத் திண்ணையில் நிகழ்த்தியிருந்தார்கள். பாத்திரங்களையும் காட்சிகளையும்  தெரிவதும், செதுக்குவதும் மாலையில் நிகழ, இரவிரவாக வாய் பிரதி எழுதுவது மாஸ்டருக்கான வேலை இரவில் எழுதப்பட்ட பகுதி அடுத்த நாள் மாலையில் விவாதிக்கப் பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டு மேலும் செம்மைப்படுத்தப்பட்டது.
எண்பத்தைந்தின் ஆரம்பத்தில் யாழ் நகரில் ராணுவம் பெரும்பாலும் முகாம்களிலேயே முடங்கியிருந்தது. இயக்கங்களின் இயங்குநிலை உச்சக்கட்டத்திலிருந்த இக்காலகட்டத்தில் யாழ் பல்கலைக் கழகம் பல்வேறு இயக்கங்களினதும் சந்திப்பு மையமாயிருந்தது. அப்போது கலாசார நாள் அமைப்புக் குழுவில் சர்வேந்திரா, சிவரஞ்சித், மோகன் ஆகியோரும் இணைகின்றனர். எல்லா இயக்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 'மண்சுமந்த மேனியர்' நடிகர்களைத் தேர்தெடுக்கும் போது மிகுந்த  கவனம் செலுத்தப்பட்டது. இயக்கங்களுக்கிடையே ஒரு சிறந்த  முன்னணி அமைய வேண்டுமென்ற ஒரு அரசியல் ஆர்வம் மேலோங்கத் தொடங்குகின்றது.

இதை 'மண்சுமந்த மேனியர்' மூலம் நிகழ்த்திக்காட்ட கலாசார நாள் அமைப்புக் குழு விரும்பியது. இதில் நடிப்பதற் கென்று பல அமைப்புகளையும் சேர்ந்த சில மாணவ மாணவிகள் வந்தனர். அப்படி இணைந்து நடிக்க முடிந்த நாடகம் அதுதான் முதலும் கடைசியமாக இருந்திருக்குமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகின்றது.

நாடக பயிற்சி 1985 பெப்ரவரி மாத தொடக்கத்தில் பல்கலைக்கழக மாணவர் பொது அறையில் ஆரம்பமானது. பரி. யோவான் கல்லுரியில் இரசாயனவியல் ஆசிரியர் என்பதைத் தவிர சிதம்பரநாதனை எனக்கு அதற்கு முன்னர் அறிமுகமில்லை . அவர் சேரன், சிவரஞ்சித் உட்பட மூவரும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், சேரன் அப்போது 'சற்றடே ரிவியூ' ஆங்கிலப் பதிரிகையின் துணை
ஆசிரியராயிருந்தார். சிவரஞ்சித் பல்கலைக்கழக மறு மலர்ச்சி கழகத்தின் வெளியீடுகள் அச்சிடுவதிலும் ஈடுபட்டிருந்தார். மற்றைய நடிகர்கள் நாங்கள் அனைவருமே பெரும்பாலும் இறுதியாண்டில் இருந்தோம்.

நாடகத்தின் ஆரம்பப் பயிற்சிகளில் உடற்பயிற்சிகளும், குரல் பயிற்சிகளுமே தரப்பட்டன. பாரம்பரிய நாடகங்களில் நடித்தவர்களுக்கு இது ஆச்சரியமாகவிருந்தது, பத்துப் பயிற்சிகளுக்கு மேல் போய்விட்டோம். ஆனால், இன்னமும் நாடகப் பிரதியைப் பார்க்கவில்லை. பயிற்சிகளின் போது
கவிதை வரிகள், உரையாடல் சிலவற்றை வௌ;வேறு உணர்ச்சி மனநிலையிலும், வௌ;வேறு வயதுப் பாத்திரங்களாயும் மாறி அந்தந்தக் குரல்களில் பேசியும், நடித்தும் காட்டுவோம். மாணவர் பொது அறையில் நாங்கள் உரத்துக் கத்தி, பேசி நடிக்கையில் போட்ட சத்தத்தை கேட்டு வெளியில் நின்ற சிலர் இது ஏதோ பைத்தியக்கூட்டம் என்றென்னிக் கொண்டனர். நடிக்க வந்த வேறு சிலரும் இதில் நம்பிக்கையிழந்து போய்விட்டனர். ஆனால் இதன்போதுதான் நாடகத்தில் யாருக்கு எந்தப் பாத்திரம் பொருத்தம் என்பதை சிதம்பரநாதன் தீர்மானித்துக்கொண்டார்.

பல நாட்களாக ஆராய்ந்து  விவாதித்து, தெளிந்து கண்ட அந்த மேடைச் சித்திரத்தை குழந்தை மாஸ்டர் தனக்கே உரித்தான அங்கதக்சுவை, சிலேடைகள் பல கலந்த உரையாடல்கள், திருவாசகம் முதற்கொண்டு பலஸ்தீனக் கவிதைகள், சேரன் கவிதைகள், நாட்டார் பாடல்கள் அனைத்தும் கலந்து உருவாக்கினார். கோடிட்ட தாளில் அவர் அதை தனது கைப்பட எழுதிக்கொடுத்திருந்தார்.

M_01.jpgமண்சுமந்த மேனியரின் பாத்திரங்கள் ஏறக்குறைய எல்லாமே செம்மன் புழுதி தேய்த்தவைதான். அது கூலி விவசாயிகளின் பாடுகளை சொல்லிய கதை நாடகத்தில் நாங்கள் அணிந்திருந்த வேட்டிகளையெல்லாம் செம்மண்ணில் பிரட்டி எடுத்து அம்மண்ணின் நிறம் படிய வைத்தோம். பெண்கள் எவரும் புதுச் சேலைகளும் நகைகளும் அணிந்து நடிக்க முடியாதிருந்தது.
எல்லா நடிகர்களுக்கும் கூலி விவசாயிகளின் களம் தெரிந்திருக்கவில்லை. இதனால், அந்தப் பாத்திரங்களை அவர்களின் களங்களிலேயே போய் அவதானிப்பது முக்கியம் என்று சிதம்பரநாதன் கருதினார். தூரத்தில் நின்று அவர்கள் அறியாவண்ணம் அவர்கள் பேசும் முறையை, அசைவுகள், நடக்கும் விதம், முகபாவனைகள் என்று அவதானிப்பதற்கென்றே அந்தக் களங்களுக்குச் சென்றோம்.  

பேராசிரியர் சண்முகதாஸ் நாட்டார் பாடல்களை ஒலிப்பதிவு செய்து கசட்டில் அனுப்பியிருந்தார். ஆனால் அதை இசைவாணர் கண்ணன் வடித்தெடுத்ததோ அம்மண்ணுக்கே உரித்தான தனித்துவ உயிர்த் துடிப்பான இசையில்;.
நாடகப் பயிற்சிகள் ஆரம்பித்து சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன. இசைவாணர் கண்ணன் ஆர்மோனியத்துடன் வந்து பாடல்களை பாடிக்காட்டி நுண் கலைத்துறை மாணவிகளுக்குப் பயிற்சி கொடுக்க, அவர்களுடன் திருமலை சந்திரனும் இணைந்து பாடல்களை இசைத்தனர். 'மண்சுமந்த மேனியர்' (நாடகம்), 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' (கவிதா நிகழ்வு) - இரண்டிலுமே வந்த பாடல்கள் பெரும் வரவேற்பைப்பெற்றன.
தாஸீசியஸ், மௌனகுரு. நா. சுந்தரலிங்கம், குழந்தை மாஸ்டர், பாலேந்திரா என்ற நாடக நெறியாளர்களுடன் பல மேடைப்படைப்புகளில் கூடவே இசையமைப்பாளராயிருந்த அனுபவமிக்க கண்ணன், நாடகத்தின் உணர்வைப் பிரதிபலிக்கும் - மக்களின் மன ஓட்டங்களுடன் இசைந்து செல்லும் - ஒரு இசையையே தந்தார். அது மக்களைத் தொட்டது. கிருபாவின் தபேலாவும், மிருதங்கமும், சந்தானகிருஷ்ணனின் வயலினும் கண்ணனின் ஆர்மோனியமும், கீ போட்டும், அவ்வப்போது எக்கோடி யன் இசையும் சேர்த்து தனது பின்னணி இசையில் கலந்து கண்ணன் அளித்து விட்ட பல பாடல்களில் -

'பூமியை நம்பி புத்திரரைத் தேடி வந்தோம்
பூமி பலியெடுக்க புத்திரர் பரதேசம்' -   என்ற நாட்டார் பாடலும்

'கோயில் என்ற கோயில் எல்லாம் கும்பிட்ட நாங்கள்' - என்ற நாட்டார் பாடலும் உச்சத்தை தொட்டன.
சேரனின் கவிதா நிகழ்வு ஆக்கத்தில் - 'பனி இரவின் தனி வழியில் பாதையிலேயாரது?' - 'அதிகாலையில் யாழ்நகர் மீது பனி படிகின்றது' 'மேகம் இருண்டு விரிந்த இரவிலே போகவிடு என்று சொன்னான்' என்ற பாடல்களும் மனதை விட்டகலாத ராகங்களிலமைந்தவை.
மண் சுமந்தமேனியரின் பல்வேறு காட்சிக்களங்கள் ஒரே மேடையில் காட்டப்பட்ட விதம் நெறியாளர் சிதம்பரநாதனின் திறமைக்கு சவாலாக அமைந்தது.
முன் மேடையில் பாரதக் கதையைக் கூத்தாக உரைஞர் நடிக்க ஏனைய நடிகர்
கூத்துப் பார்க்கும் ஒரு வெளியாகவும், பல்வேறு குடிசை வீடுகள் கொண்ட ஒரு ஊர்மனையாகவும், நடிகர் நடந்து செல்லும் ஒரு தெருவாகவும், சந்நதி கோயில் பிரகாரமாகவும் பல்வேறு தோட்ட வேலைகள் நடைபெறும் வயல் வெளியாகவும் ஒரே மேடையே காட்சிக்குக் காட்சி மாறுகிறது.
எந்த தடங்கலுமின்றி இந்த காட்சி மாற்றங்களுக்கு உரிய பொருட்களை மேடையில் வைப்பதும் எடுப்பதும் நடிகர்களாலேயே திரை திறந்த நிலையிலேயே செய்யப்பட்டது. இதில் இரண்டு முக்கிய விடயங்கள்
என்னவென்றால், நாடகத்தில் எவருமே ஒலிபெருக்கி இல்லாமல் உரத்துப் பேசி நடிக்க வேண்டியிருந்ததும். மற்றும் நாடகம் பகலிலே மட்டுமே அரங்கேறியதால் மின் ஒளியினை பாவிக்கும் வசதியின்றியே நாடகம் நடத்தப்பட்டதுமாகும்.
24 நடிகர்கள் கொண்ட இந்த நாடகத்தில் அனைவருமே நாடகம் முடியும் வரையும் மேடையிலேயே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து நடிக்க வேண்டியிருந்தது. முன் மேடை மற்றும் நடு மேடையில் மட்டுமன்றி பின் மேடையிலும் பாத்திரங்கள் நடித்துக்கொண்டிப்பர். அவர்களுக்கு இருப்பதற்கு உயரமான ஒரு திண்ணையொன்று மரத்தினால் செய்யப்பட்டதனால் அவர்கள் மறைக்கப்படாதிருந்தனர்.

முன் மேடையில் நடிப்பவர்கள் நிலத்திலிருந்தே நடித்ததும் இதற்கு துணை புரிந்தது.
காட்சி மாற்றத்தின் போது திண்ணையை அகற்றி மேடையை தெருவாக்குவதும், பிறகு கோயிலைக் காட்ட சிற்ப வேலை கொண்ட மரத்தூண்களை நிறுத்தி வைப்பதும் விரைவாகவும், ஒழுங்காகவும் பார்வையாளரின் கவனம் சிதையாமல் செய்யப்பட்டன.
வயற்காட்சியில் பொருட்கள் எதுவுமின்றி வெறும் மேடையே காட்டப்பட்டாலும் 24 நடிகரும் வௌ;வேறு வயல் வேலைகளை செய்தும், உரையாடலின் மூலமும் யதார்த்தமான களத்தை வெளிக் கொணர்ந்தனர்.Skrmbillede_624.png

உரைஞரான நான் வயல் கிணற்றில் துலாவும், கயிறும், வாளியுமின்றி, ஏன் கிணறுமின்றி தண்ணீர் இறைத்தேன்.
மேடைப் பொருட்களைக் கலைத்துவமான முறையில் செய்தவர் ராதா என்னும் நடிகர், உதாரணத்துக்கு அந்தக் கோயில் தூண்களை முப்பரிமாணத்தில் அமைத்து, எடுத்துச் செல்ல இலகுவாக அவற்றை கழற்றிப் பலகைகளாக்கவும் நுட்பமாகவும், எளிமையாகவும் வடிவமைத்திருந்தார்.
கலாசார நாள் என்னும் ஒருநாள் நிகழ்வுக்காகவே 'மண்சுமந்த மேனியர்' நாடகம் தயாரிக்கப்பட்டதெனினும் முதல் நாள் கிடைத்த வரவேற்பினால் மக்களின் கோரிக்கைக்கிணங்க மேலும் இரண்டு நாட்கள் நீடித்து, யாழ் பல்கலைக் கழக கைலாசபதி அரங்கில் தொடர்ந்து 3 நாட்களாக மேடையேற்றம் செய்ய வேண்டியேற்பட்டது.

இதன்பின்னர், இந்த நாடகம் குடா நாடு எங்கும் கொண்டு செல்லப்பட்டு 60 மேடையேற்றம் கண்டது. அப்போது பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவராயிருந்த அருள்ராஜா இந்த ஏற்பாடுகளை திறம்பட ஒருங்கிணைத்தார். இவர் கவிதா நிகழ்விலும் பங்கேற்றவர். இக்காலத்தில்தான், பல்கலைக்கழக கலாசாரக் குழுவொன்றை அமைக்க வேண்டுமென்ற எண்ணத்தை செயலாக்க கலாசார நாள் அமைப்புக் குழுவினர் முயன்றனர். இந்தக்குழு எல்லா இயக்கங்களின் ஆதரவுடனும் தொடர்ந்தியங்க வேண்டுமென்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அது சாத்தியமற்றுப் போனதை அடுத்த வருடம் (1986) கசப்பாக உணர்த்தியது.

'மண் சுமந்த மேனியர்' காலத்தின் இந்த நினைவுகளை பொக்கிஷமாக பொத்திப் பொத்தி வைத்திருந்த அவர்களுடன் நாமும் இணைந்து பகிர்ந்து கொண்டவை தான் இந்தப் பதிவு.

 இது ஒரு மீள்பதிவு
Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 2
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.