Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரன் Review: அதகளமும் அக்கறையும் நிறைந்த களத்தில் நிகழ்த்தப்பட்டதா பாய்ச்சல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1050295.jpg  
 

எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு சமரசத்துடன் வாழும் ஒருவனின் வாழ்க்கையை எங்கிருந்தோ கேட்கும் ‘அசரீரீ ஒலி’ மாற்றியமைத்து மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வைத்தால் அதுவே ‘மாவீரன்’ ஒன்லைன்.

கார்ட்டூனிஸ்ட்டான சத்யா (சிவகார்த்திகேயன்) தனது அம்மா, தங்கையுடன் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். திடீரென ஒருநாள் அரசு சார்பில் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி அறிவிப்பு வருகிறது. மேலும், அம்மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி, அடுக்குமாடி குடியிருப்புக்கு இடமாற்றம் செய்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று மோசமான நிலையில் இருப்பதை எதிர்த்து முறையிடும் தன் தாயிடம் ‘அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கோம்மா’ என சமரசம் செய்கிறார் பயந்த சுபாவம் கொண்ட சத்யா.

இதன் நீட்சியாக தனது குடும்பத்துக்கு மற்றொரு பாதிப்பு நேரும்போதும் கூட, அதையும் தட்டிகேட்க முடியாமல் தன்னையே நொந்துகொள்ளும் அவர் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது நேரும் விபத்தில் அவர் வரைந்த கார்டூன் கதாபாத்திரத்தின் குரல் ஒன்று அசரீரீயாய் ஒலிக்கிறது. அந்தக் குரல் கோழையான சத்யாவை எப்படி ‘மாவீரன்’ஆக மாற்றுகிறது என்பதே படத்தின் திரைக்கதை.

பெருநகர விரிவாக்கம், வளர்ச்சி என்ற பெயரில் குடிசைப் பகுதி மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தி அவர்களுக்கு அந்நியமான புறநகர் பகுதிகளுக்கு தூக்கி அடிக்கும் அரசின் அவலப்போக்கை கருவாக எடுத்து அதனை சுவாரஸ்யமாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின். ‘மண்டேலா’ படத்தைப்போல இப்படத்திலும் அவரின் சமூகப் பொறுப்பு கவனிக்க வைக்கிறது. தான் எடுத்துக்கொண்ட கருவை ஃபேன்டஸி ஆக்‌ஷன் டிராமாவாக மாற்ற எழுதியிருக்கும் முற்பகுதி திரைக்கதை ரசிக்க வைக்கிறது.

அதற்கு மிக முக்கியமான காரணம் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கான படிப்படியான உருமாற்றமும் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரும். கூடவே யோகிபாபுவின் டைமிங் காமெடிங்கள் நிறைய இடங்களில் கைகொடுப்பது பலம். வடமாநில தொழிலாளர்களால் தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக யோகிபாபு கதாபாத்திரம் மூலம் காட்சிப்படுத்தியிருப்பது இன்னும் கூர்மையாக அணுகப்பட வேண்டிய அரசியல். தவிர, அமைச்சரான மிஷ்கினை சாமானியனான சிவகார்த்திகேயன் தனது அப்பாவித்தனங்களுடன் எதிர்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

அதுவரை பயந்த சுபாவம் கொண்ட நாயகன் கதாபாத்திரத்தை மாவீரனாக மாற்றி மக்களுக்கான பிரச்சினைகளுக்கு துணை நிற்க வைக்கும் இரண்டாம் பாதியின் திரைக்கதையில் ஏகப்பட்ட சமரசம் செய்திருக்கிறார் இயக்குநர். தேவையற்ற சண்டைக்காட்சிகளால் நாயகனுக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் வில்லன் கதாபாத்திரத்தை பலவீனப்படுத்துகிறது. குறிப்பாக ‘மீட்பர்’, ‘தியாகி’ என்ற அடைப்புக்களுக்குள் நாயகனை அடைத்து புனிதப்படுத்த வைக்கப்பட்டுள்ள ‘க்ளிஷே’ க்ளைமாக்ஸ் பார்த்து புளித்தவை. அதைப் பின்தொடர்ந்து வரும் சில காட்சிகள் தேவையற்றவையாகவே கருதலாம்.

விளிம்பு நிலை மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்ததற்கு சிவகார்த்திகேயனை பாராட்டலாம். தனது வழக்கமான காதல், ரொமான்ஸ், இளைஞர்களை கவரும் ஜாலியான ‘டான்’ கதாபாத்திரங்களிலிருந்து விலகி கன்டென்டை நோக்கி நகரும் அவரின் முதிர்ச்சி கவனிக்க வைக்கிறது. அப்பாவியான பயந்த சுபாவமுள்ள இளைஞனாக அவரது நடிப்பு ஈர்க்கிறது. அதிதி சங்கரை இரண்டாம் பாதிக்கு மேல் எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை. முதல் பாதியில் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.

அடித்தட்டு மக்களில் ஒருவராக யதார்த்த நடிப்பில் கவனம் பெறுகிறார் சரிதா. அரசியல்வாதியாக பொருந்திப் போகும் மிஸ்கின் கோவப்பட்டும் கத்தும் இடங்களில் ‘சவரக்கத்தி’ பட கதாபாத்திரத்தை பிரதிபலிக்காமலில்லை. அசால்ட்டாக டைமிங்கில் ஸ்கோர் செய்யும் யோகிபாபுவை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதேசமயம் சுனில் கதாபாத்திரம் வீண்டிக்கப்பட்டுள்ளது. தங்கையாக மோனிஷா நடிப்பில் குறைவைக்கவில்லை.

பிற்பகுதியில் வரும் லைட்டிங் செட் அப், சிவாவுக்கும் மிஸ்கினுக்குமான லோ ஆங்கிள் ஷாட், அடுக்குமாடி குடியிருப்பை காட்சிப்படுத்தியிருந்த விதம் என விது அய்யனாவின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது. பரத் ஷங்கரின் இசையில் ‘சீன் ஆ..சீன் ஆ..’, ‘வண்ணார பேட்டையில’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை சண்டைக்காட்சிகளில் தனித்து தெரிகிறது. அருண் வெஞ்சாரமூடு மற்றும் குமார் கங்கப்பனின் உழைப்பு திரையில் பிரதிபலிக்கிறது.

மொத்தத்தில் அழுத்தமான கதையை வித்தியாசமான திரைக்கதையுடன் அணுக முயற்சித்த ‘மாவீரன்’ சில சமரசங்களுக்குள் சிக்கிக்கொண்டதால், படத்தின் முற்பகுதி போல பிற்பகுதியில் போதிய பாய்ச்சலை நிகழ்த்தவில்லை.மாவீரன் Review: அதகளமும் அக்கறையும் நிறைந்த களத்தில் நிகழ்த்தப்பட்டதா பாய்ச்சல்? | Maaveeran Movie Review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம்: மாவீரன்!

JegadeeshJul 14, 2023 15:49PM
ஷேர் செய்ய : 
WhatsApp-Image-2023-07-14-at-15.47.58.jp

சிவகார்த்திகேயன் படங்கள் என்றால் காமெடி, சென்டிமெண்ட், ரொமான்ஸ் உடன் உறுத்தாத அளவுக்கு ஆக்‌ஷனும் இருக்கும் என்பதே இதுவரை மக்கள் மத்தியில் இருந்துவரும் எதிர்பார்ப்பு. ஒவ்வொரு படத்திலும் அதற்கான எல்லைகளை அதிகப்படுத்தியவர், ‘பிரின்ஸ்’ படத்தில் அத்தனையையும் தவிடுபொடி ஆக்கியிருந்தார்.

தற்போது அவர் நடிப்பில், ‘மண்டேலா’ தந்த மடோன் அஸ்வின் உழைப்பில் ‘மாவீரன்’ வெளியாகியிருக்கிறது. ‘இதுவொரு பேண்டஸி கலந்த ஆக்‌ஷன் படம்’ என்பதனை ட்ரெய்லர் பார்த்தவுடன் உணர்ந்துகொள்ள முடிந்தது.

சரி, படம் எப்படியிருக்கிறது?

’மாவீரன்’ ஆன கதை!

சென்னையின் நதிக்கரையோரம் வசித்துவரும் மக்களில் ஒருவர் சத்யா (சிவகார்த்திகேயன்). அம்மா, தங்கையோடு (சரிதா, மோனிஷா) வாழ்ந்துவரும் இவர், எதற்கெடுத்தாலும் பயப்படும் இயல்பு கொண்டவர். மக்களுக்காகப் போராடி உயிர்நீத்த தனது தந்தையைப் போல் இருக்கக் கூடாது என்று எண்ணுபவர்.

அமைச்சர் ஜெயக்கொடி ஆட்களால், சத்யா வசித்துவரும் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒரு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக்கு மாற்றப்படுகின்றனர். அந்த புதிய கட்டடம் கொஞ்சம் கூட தரமாக இல்லை. அதனைக் கண்டு சத்யாவின் தாய் கொதிப்படைய, அவரோ ‘அட்ஜஸ்ட் செய்துகொண்டு வசிக்கலாம்’ என்கிறார்.

சத்யா ஒரு அற்புதமான ஓவியர். அவர் வரையும் சித்திரக்கதை ஒரு தினசரியில் வேறொருவர் பெயரில் வெளியாகி வருகிறது. அதே போன்றதொரு வேலையை, அந்த நபர் தனக்கும் வாங்கிக் கொடுப்பார் என்று நம்புகிறார். ஒருநாள், தற்செயலாகப் பேருந்தில் சந்திக்கும் ஒரு பெண் (அதிதி ஷங்கர்) மூலமாக அந்த திருப்பம் நிகழ்கிறது. அந்த தினசரியில் வேலை செய்து வருகிறார் அந்தப் பெண்.

Image

மாவீரன் என்ற பாத்திரத்தின் சாகசங்களாக வெளியாகும் அப்படக்கதையைப் புதிய பாதைக்குத் திருப்புகிறார் சத்யா. தான் குடியிருந்து வரும் ‘மக்கள் மாளிகை’ அரசுக் குடியிருப்பில் உள்ள பிரச்சனைகளை கற்பனை நாயகனான மாவீரன் தட்டிக் கேட்பது போலக் கதையை நகர்த்துகிறார். நிஜ வாழ்வில் தட்டிக் கேட்காமல் இருந்துவிட்டு, அதனையே கதையாக எழுதுவதைச் சத்யாவின் தாய், தங்கை மட்டுமல்லாமல் அவரை வேலையில் சேர்த்துவிட்ட தோழியும் கூட விமர்சிக்கிறார்.

ஒருநாள் தன் தங்கையிடம் அத்துமீற முயன்றவர்களைத் தட்டிக் கேட்கச் செல்கிறார் சத்யா. பயம் அவரைப் பின்வாங்கச் செய்கிறது. வீடு திரும்பும் அவர், தாயே தன்னை அவமானப்படுத்தும்விதமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு மனமுடைகிறார். தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார். அப்போது, அவரது தலையில் பலமாக அடிபடுகிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்படும் சத்யா, மருத்துவர்களின் கணிப்பையும் மீறி உயிர் பிழைக்கிறார். ஆனால், அவரது காதில் ஏதோ ஒரு குரல் ஆணையிடுவது போல ஒலிப்பதைச் சரி செய்ய முடியவில்லை. அது சத்யாவை ‘மாவீரன்’ ஆக உருவகப்படுத்துகிறது. அந்தக் குரல் சொல்லும் விஷயங்களைப் புறந்தள்ளினாலும் கூட, ஏதாவதொரு வம்பு நேர்ந்துவிடுகிறது.

அது மனநலப் பிரச்சனையோ, மாயாஜாலமோ இல்லை என்பதை உணர்வதற்குள், அமைச்சர் ஜெயக்கொடிக்கும் (மிஷ்கின்) சத்யாவுக்கும் இடையே நேரடியாகப் பிரச்சனை முளைக்கிறது. அது ஊடகங்கள் வழியாக மக்களுக்கும் தெரிய வருகிறது. ஆத்திரமடையும் அமைச்சர் தரப்பினர் சத்யாவைக் கொல்லச் செல்கின்றனர். ஆனால், சத்யாவின் காதில் ஒலிக்கும் குரலோ ‘அவர்களைத் திருப்பி அடி’ என்று சொல்கிறது.

என்ன செய்தார் சத்யா? அதன்பிறகு ஜெயக்கொடிக்கும் அவருக்குமான பிரச்சனை தீர்ந்ததா என்பதே மீதிக்கதை.

தொடரும் நகைச்சுவை!

’டாக்டர்’ போலவே, சிவகார்த்திகேயன் நடிப்பில் மிக வித்தியாசமானதொரு படம் ‘மாவீரன்’. காமெடி, ரொமான்ஸ், சென்டிமெண்ட் போன்றவற்றில் மக்களை எளிதாக வசீகரப்படுத்தும் அவருக்கு, திரையில் பெண்டு நிமிர்த்தும் ‘ஆக்‌ஷன்’ காட்சிகளில் நடிக்க ஒரு வலுவான நாயக பாத்திரம் தேவைப்படுகிறது. அதற்கேற்றதாக இக்கதை அமைந்துள்ளது. அதேநேரத்தில், தான் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ வேண்டுமென்று அவர் விரும்புவதை திரைக்கதையின் பின்பாதியில் இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

ஒரு நடுத்தரக் குடும்பத்து அழகியாக அதிதி ஷங்கரை நோக்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதில், அவர் சீரியசாக பேசும் வசனங்கள் ‘ட்ரோல்’ செய்யப்படாத வகையில் கவனமாகப் படத்தொகுப்பு கையாளப்பட்டுள்ளது.

திரையில் மிஷ்கின், சுனில் இருவருக்குமே சரிசமமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வழக்கமான பாத்திரம் என்றாலும், வில்லத்தனத்தையும் நகைச்சுவையையும் ஒருசேர வெளிப்படுத்தி அசரடிக்கிறார் மிஷ்கின். அவருக்கு நேரெதிராக, அடக்கமாகப் பேசி நம் மனம் கவர்கிறார் தெலுங்கு நடிகர் சுனில்.

ஜூலி கணபதியில் நம்மை மிரட்டிய சரிதா, நீண்ட நாட்களுக்குப் பிறகு நாயகனின் தாயாகத் தோன்றி நம்மை வசீகரிக்கிறார். போலவே சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்த மோனிஷா, ஆட்டோ ஓட்டுநராக வரும் திலீபன், முதலமைச்சராக வரும் பாலாஜி சக்திவேல், என்ஜினியராக வரும் மதன் தட்சணாமூர்த்தி உட்படப் பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கட்டட வேலை செய்பவராக நடித்த யோகிபாபு, சிவகார்த்திகேயனோடு சேரும் காட்சிகளில் எல்லாம் நகைச்சுவை தெறிக்கிறது. ஆங்காங்கே தொடரும் அவரது ஒன்லைனர்கள் நம்மைத் தொடர்ந்து சிரித்த முகமாக இருக்க வைக்கிறது.

Image

‘வீரமே ஜெயம்’ என்ற வார்த்தைகளுடன் தொடங்கும் விஜய் சேதுபதியின் குரலுக்கும் திரைக்கதையில் முக்கியப் பங்குண்டு.

பரத் சங்கரின் இசையில் பாடல்கள் பெரிதாக வசீகரிக்கவில்லை. ஆனால், அதனை ஈடுகட்டும்வகையில் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். கடல் பகுதியில் நடைபெறுவதாக அமைந்த சண்டைக்காட்சிக்கு அவர் தந்திருக்கும் இசை, நிச்சயம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ஸ்’ ஆக இருக்கும்.

யானிக் பென் மற்றும் மகேஷ் மேத்யூவின் வடிவமைப்பில் அமைந்த சண்டைக்காட்சிகளில் அடியாட்கள் பந்து போல துள்ளி விழாதது ஆறுதலளிக்கும் அம்சம்.

யதார்த்தமாக நாம் கண்ணால் பார்ப்பது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துவதோடு, திரையில் பேண்டஸியின் பங்கும் மிகச்சரியாக வெளிப்பட வேண்டும். விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு மிகப்பெரிய சவாலை மிகச்சாதாரணமாகக் கையாண்டுள்ளது.

பிலோமின் ராஜ் படத்தொகுப்பு சீராகக் கதை நகர்வதை உறுதிப்படுத்துகிறது. அதேநேரத்தில், இடைவேளைக்குப் பிறகு கொஞ்சமாக டல்லடிப்பதைச் சரி செய்திருக்கலாம்.

குமார் கங்கப்பன், அருண் வெஞ்சாரமூடுவின் கலை வடிவமைப்பு, கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்ற மனநிலையை உருவாக்க முயன்றுள்ளது. காஸ்ட்யூம் டிசைனர் தினேஷுக்கும் அதில் கணிசமான பங்குண்டு. அதேநேரத்தில், ‘தளபதி’ ரஜினியை ரெஃபரன்ஸ் ஆகச் சமூக வலைதளங்களில் விவாதித்தவர்களை இப்படம் ஏமாற்றியிருக்கிறது.

குடும்பமாகப் பார்க்கலாமா?

இரு வேறு சாதியினரிடையே ஒரு சலூன் கடைக்காரர் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்பதை ‘மண்டேலா’வில் நகைச்சுவை தொனியில் சொல்லியிருந்தார் இயக்குனர் மடோன் அஸ்வின். ‘மாவீரன்’ படத்தில் ஒரு கோழை வீரன் ஆவதாகக் கதை வடித்திருக்கிறார். அதற்கேற்றவாறு குடிசைப்பகுதிகளில் இருந்து வேறு பகுதிக்கு துரத்தப்படும் மக்கள், அந்தக் குடியிருப்புகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அதற்குக் காரணமான முறைகேடுகள் என்று கதையின் ஒருபக்கத்தை நகர்த்தி, இன்னொறு புறம் நாயகன் ஆக்‌ஷன் ஹீரோ ஆவதை சுவாரஸ்யம் குன்றாமல் கூறியிருக்கிறார்.

Image

கொஞ்சம் பிசகினாலும், ‘என்னப்பா லூஸா’ என்று கத்திவிடும் அபாயம் கொண்ட கதையை லாவகமாகக் கையாண்டிருக்கிறார். அதுவே, இப்படத்தைக் குடும்பம் குடும்பமாக மக்கள் ரசிப்பார்கள் என்பதைச் சொல்லிவிடுகிறது. திரையிலும் ரத்தம் குறைவாகவே தென்படுவது குழந்தைகளுடன் படம் பார்ப்பவர்களுக்கு நெருடலைத் தராது.

அமைச்சர் வெர்சஸ் சாதாரண குடிமகன் என்ற கோணத்தைத் தாண்டி, இந்தக் கதையில் காவல் துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத் தரப்பையோ, கட்சி அரசியலையோ, நடுத்தர வர்க்கத்தினரின் பார்வைகளையோ இயக்குனர் காட்ட விரும்பவில்லை. என்னதான் நகைச்சுவை இடம்பெற்றாலும், பின்பாதியில் திரைக்கதையின் வேகம் குறைவது தியேட்டரில் சலசலப்பை உண்டுபண்ணுகிறது.

திரைக்கதையில் எந்த இடத்திலும் சத்யா எனும் பாத்திரத்தை ’மாஸ் ஹீரோ’வாக காட்டிவிடக் கூடாது என்பதில் கவனத்தையும் அக்கறையையும் கொட்டியிருக்கிறது இயக்குனர் குழு. அந்த மெனக்கெடலை சிவகார்த்திகேயன் புரிந்து செயல்பட்டிருப்பதுதான், திரைக்கதை ட்ரீட்மெண்டுக்கு நியாயம் சேர்த்திருக்கிறது. வெல்டன் ‘மாவீரன்’ டீம்!

உதய் பாடகலிங்கம்
 

https://minnambalam.com/cinema/maaveeran-review-minnambalam/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.