Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கபில்தேவ் 175: இந்தியா உலகக் கோப்பையை வெல்ல தூண்டுதலாக இருந்த வரலாற்று இன்னிங்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கபில் தேவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கடந்த 1983இல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரெஹான் ஃபசல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1983இல் இங்கிலாந்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில், அப்போது வலிமையான அணியாகத் திகழ்ந்த மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி.

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த சாதனை எப்படி சாத்தியமானது? இதற்கு தூண்டுதலாக அமைந்த போட்டி எது?

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மறக்க முடியாத அந்தப் போட்டியின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான அனுபவங்களைத் தனது சுயசரிதையான ‘Straight from the Heart’ இல் சுவைப்பட விவரித்துள்ளார் கபில் தேவ்.

கடந்த 1983இல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது.

அந்தப் போட்டிக்கு முன்பு வரை உலகக் கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் அணியை வேறு எந்த அணியும் வீழ்த்தியது கிடையாது.

அப்படியொரு பெருமையுடன் வலம் வந்துகொண்டிருந்த அணியை தனது முதல் போட்டியில் இந்தியா வெற்றி கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை எடுத்தது. 263 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆனால், அதன் பிறகு ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. ஆனால், இந்திய அணி அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா உள்ளிட்ட இரு அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

அதனால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா என்று லட்சோப லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்திருந்த போதுதான், தனது ஐந்தாவது போட்டியில் ஜிம்பாப்வேவை சந்தித்தது இந்தியா.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக, கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கென்ட்டில் உள்ள டன்பிரிட்ஜ் வேல்ஸை அடைந்தது.

அப்போது இரண்டு தொடர் தோல்விகளின் காரணமாக இந்திய அணியின் ரன்-ரேட் குறைந்திருந்தது. இதுகுறித்து அணி வீரர்களிடம் கவலை தெரிவித்த கேப்டன் கபில்தேவ், எதிர்வரும் போட்டிகளில் ரன் ரேட்டை அதிகரிக்கும் விதத்தில் அபாரமான வெற்றியை ஈட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.

“அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி எங்களுக்கு (இந்தியா) இணையாகவே புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், அந்த அணியின் ரன்ரேட் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது. எனவே ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்,” என்று தமது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் கபில்தேவ்.

ஆடுகளமும் அதற்கு சாதகமாக இருந்ததால், திட்டமிட்டபடியே முதலில் பேட்டிங் செய்தோம். ஆனால், ஜிம்பாப்வே அணியினர் ஆக்ரோஷமாக பந்து வீசியதால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

 

17 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிய இந்தியா

கபில் தேவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டிரெஸ்ஸிங் அறையில் இருந்த பிற வீரர்கள் களமிறங்குவதற்கு சீக்கிரமாகத் தயாராகும்படி கபிலை கேட்டு கொண்டிருந்தனர்.

இந்திய அணிக்கு ஆட்டத்தின் ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் சுனில் கவாஸ்கர் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அந்தத் தொடரில் நன்கு விளையாடி வந்த மொஹிந்தர் அமர்நாத் அணியை காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் அந்த எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் அமர்நாத். அவரை அடுத்து ஸ்ரீகாந்தும் வந்த வேகத்தில் அவுட்டாக, இந்திய அணி 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

அப்போது சந்தீப் பாட்டீல் களமிறங்கியபோது மைதானத்தில் அமைதி நிலவியது. ஆனால் பாட்டீலும் சில பந்துகளையே எதிர்கொண்ட நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதையடுத்து யஷ்பால் சர்மா களமிறங்கினார். அப்போது ஆடுகளத்துக்கு வந்த, அணியின் 12வது வீரராக இருந்த சுனில் வாட்சன், ‘கேப்டன் கபில்தேவ் இன்னும் குளியல் அறையில்தான் இருக்கிறார் என்று எங்களிடம் கூறி சென்றார்’ என்று தனது சுயசரிதையான ‘Sandy Storm’ இல் குறிப்பிட்டுள்ளார் சந்தீப் சர்மா.

ஆனால், “யஷ்பால் சர்மா களமிறங்கிய சில நிமிடங்களிலேயே நான் எதிரணி வீரரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தேன். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட்கள் இழப்புக்கு 17 ஆக மட்டுமே இருந்தது.

இதனால், டிரெஸ்ஸிங் அறையில் இருந்த பிற வீரர்கள் களமிறங்குவதற்கு சீக்கிரமாகத் தயாராகும்படி கபிலை கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு கபிலை நேருக்கு நேரமாகப் பார்க்க அப்போது தைரியம் வரவில்லை. உடல் நடுங்கியது.

கவாஸ்கர், அமர்நாத், ஸ்ரீகாந்த், யஷ்பால் சர்மா என அனைத்து வீரர்களின் முகமும் வாடியிருந்தது. அவர்கள் யாருக்கும் போட்டியைப் பார்க்கும் தைரியம் இல்லை,” என்று சுயசரிதையில் எழுதியுள்ளார் சந்தீப் பாட்டீல்.

 

முதல் 50 ரன்களுக்கு பவுண்டரி இல்லை

கபில் தேவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கபில்தேவுடன் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஜர் பின்னியும் கவனமாக ஆடியதால், இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 60 ரன்களை சேர்த்தது.

ஐந்து விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் என்ற நெருக்கடியான நிலையில் கபில் தேவ் களமிறங்கினார்.

அப்போது, “மதன் லாலின் மனைவி அனுவும், எனது மனைவி ரோமியும் ஆட்டத்தைக் காணும் ஆவலில் ஸ்டேடியத்துக்கு வந்திருந்தனர்.

அவர்களிடம், ‘நீங்கள் இப்போது இங்கு ஏன் வந்தீர்கள்? பேசாமல் ஹோட்டலுக்கே திரும்பிப் போய்விடுங்கள்’ என்று மதன் லால் கூறிக் கொண்டிருந்தார்.

அதற்கு அவர்கள், ‘ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டனர். அதற்கு, ‘யஷ்பால் சர்மா அவுட் ஆனதையடுத்து இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது’ என்று லால் பதிலளித்துக் கொண்டிருந்தார்,” என்று சுயசரிதையில் கபில்தேவ் கூறியுள்ளார்.

அடுத்து என்ன நடக்குமோ என்ற ஒருவித பதற்றத்துடன் ரசிகர்கள் ஆட்டத்தைப் பார்த்து கொண்டிருக்க, வழக்கமான தனது அதிரடி ஆட்டத்துக்கு மாறாக, நிதானமாக, எச்சரிக்கையுடன் ஆடத் தொடங்கினார் கபில்.

அந்த நெருக்கடியான சூழலில், அணியின் ஸ்கோர் 180 ரன்களையாவது எட்ட வேண்டும் என்ற முடிவுடன் ஆடிக் கொண்டிருந்தார் இந்திய அணியின் கேப்டன். அவர் அடித்த முதல் 50 ரன்களில் ஒரு பவுண்டரிகூட இல்லை என்பதே அவரின் நிதானமான ஆட்டத்துக்கு சான்று.

கபில்தேவுடன் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோஜர் பின்னியும் கவனமாக ஆடியதால், இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 60 ரன்களை சேர்த்தது.

ஆனால், அணியின் ஸ்கோர் 77 ஆக உயர்ந்தபோது, பின்னி எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரவி சாஸ்திரி, ஒரேயொரு ரன் எடுத்து வந்த வேகத்தில் பெவிலியர் திரும்பினார்.

இதையடுத்து வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை ஆடத் தொடங்கினார் கபில்தேவ்.

“குறிப்பிட்ட அந்த ஓவர் முடியும் வரை ஆட்டமிழக்கக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்போது, ‘ஒரு முனையில் நான் ஆட்டமிழக்காமல் தடுப்பாட்டம் ஆடுகிறேன். மறுமுனையில் நீங்கள் ரன்கள் வரும்படி ஆடுங்கள்’ என்று மதன் லால் என்னிடம் கூறினார். 35 ஓவர்கள் முடிவில் உணவு இடைவேளை வந்தது.

அப்போது நான் 50 ரன்கள் எடுத்திருந்தேன். இந்திய அணியின் ஸ்கோர் 7 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்களாக இருந்தது” என்று முக்கியமான அந்தத் தருணத்தை ‘Straight from the Heart’ இல் நினைவுகூர்கிறார் கபில்தேவ்.

ஆனால் அப்போதும் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், மொஹிந்தர், யஷ்பால் சர்மா, சந்தீப் பாட்டீல் ஆகியோர் போட்டியைப் பார்க்காமல் டிரஸ்ஸிங் ரூமில் அமைதியாகவே அமர்ந்திருந்தனர்.

“நாங்கள் அப்போது உலகத்தின் பார்வையில் படாமல் இருக்கவே விரும்பினோம். மேலே சென்று அமர்ந்து போட்டியைப் பார்க்கும் தைரியம் எங்களுக்கு வரவில்லை. ஆனால், உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கிய சுமார் 20 நிமிடங்களுக்குப் பின் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியிலும் ரசிகர்களின் கரவொலி கேட்டுக் கொண்டே இருந்தது. பவுண்டரியா, சிக்ஸரா அல்லது விக்கெட் விழுந்ததால் ரசிகர்கள் உற்சாகம் பொங்கக் கத்தினார்களா என்று எங்களுக்குத் தெரியவில்லை. இறுதியாக ஆட்டத்தைக் காண்பதற்காக ஸ்ரீகாந்த் வெளியே சென்றார்.

அவரைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக போட்டியை பார்க்கச் சென்றோம். அப்போது எங்கள் கண்முன்னே கேப்டன் கபில்தேவ் ஆடுகளத்தில் அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார்,” என்று தனது சுயசரிதையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் சந்தீப் பாட்டீல்.

 

இடத்தைவிட்டு நகராத கவாஸ்கர்

கவாஸ்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பெவிலியனில் நின்றபடி, கபில்தேவின் ஆட்டத்தைக் கைதட்டி உற்சாகப்படுத்தி கொண்டிருந்தார் கவாஸ்கர்.

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கௌரவமான ஸ்கோரை எட்டுவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார் கபில்தேவ். அவருக்குப் பக்கபலமாக ரோஜர் பின்னி, மதன் லால் மற்றும் சையது கிர்மானி விளையாடினர்.

பெவிலியனில் நின்றபடி, கபில்தேவின் ஆட்டத்தைக் கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் கவாஸ்கர்.

அப்போது அவரிடம், ‘கபில்தேவ் போல நீங்கள் நீண்ட நேரம் களத்தில் இருப்பீர்களா?' என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு, ‘ஆமாம். நான் அவ்வாறு விளையாடுவேன். ஆனால் ஆட்டத்தில் எனது நிலையை மாற்றி ஆடினால், கபில் போன்றவர்களுக்கு சிக்கல்’ என்று வேடிக்கையாக பதில் அளித்தார் கவாஸ்கர்.

கபில்தேவ் ஆடுவதற்கு முன்புவரை சோகத்துடன் அமர்ந்திருந்த யஷ்பால் சர்மா, அப்போது கால்களை மடக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார்.

அதைக் கண்ட சகவீரர் ஒருவர், அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “ஆமாம். இந்தியாவின் இன்னிங்ஸ் முடியும்வரை நான் இப்படித்தான் அமர்ந்திருப்பேன்,” என்று சர்மா கிண்டலாக பதிலளித்தார்.

அப்போது கவாஸ்கர், இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளராக இருந்த டிரைவர் பாப்பை சுட்டிக்காட்டி, “அவர் நாற்காலியில் ஒற்றைக் காலில் நிற்பதைப் பாருங்கள்” என்று கேலி செய்தார்.

“கபில் ஆடுகளத்தில் இருக்கும் வரை அவர் அந்த இடத்தைவிட்டு நகரமாட்டார்,” என்று கவாஸ்கர் கிண்டல் செய்ததையும் கபில்தேவ் நினைவுகூர்ந்துள்ளார்.

 

உணவு சாப்பிடாத கபில்தேவ்

கபில் தேவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

உணவு இடைவேளைக்குப் பிறகு, இந்திய அணியின் ஸ்கோர் 140 ரன்களை எட்டியபோது மதன் லால் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதையடுத்து கிர்மானி கபிலுடன் ஜோடி சேர்ந்தார்.

அன்று மதிய உணவுக்குப் பிறகு, கபில் டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்தபோது ஒரு இந்திய அணி வீரர்கூட அங்கு இல்லை.

“எனது நாற்காலிக்கு அருகில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. ஒரு ஆட்டமிழக்காத பேட்ஸ்மேன் மதிய உணவிற்கு வந்தபோது அணியில் உள்ள ரிசர்வ் வீரர் அங்கு உணவை தட்டில் வைக்க வேண்டியிருந்தது. உணவை எடுக்க, நான் சாப்பாட்டு அறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அணி வீரர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை?” தனது சுயசரிதையில் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

“நான் அவர்கள் மீது கோபமாக இருப்பேன் என்று அஞ்சி அணி வீரர்கள் அவ்வாறு செய்ததாக பின்னர் எனக்குத் தெரிந்தது. இதையறிந்து நான் சத்தமாகச் சிரித்தேன். அன்றைய தினம் மதிய உ ணவு அருந்தாமல், இரண்டு கிளாஸ் ஆரஞ்ச் பழச்சாற்றை மட்டும் பருகிவிட்டு மீண்டும் களத்துக்குச் சென்றேன்,” என்று அன்றைய தினத்தின் கசப்பான அனுபவத்தையும் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் கபில்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, இந்திய அணியின் ஸ்கோர் 140 ரன்களை எட்டியபோது மதன் லால் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதையடுத்து கிர்மானி கபிலுடன் ஜோடி சேர்ந்தார்.

அப்போது கபில் அவரிடம் கூறியதை இவ்வாறு நினைவுகூர்ந்துள்ளார் கிர்மானி.

“கிர்பாய் நாம் இருவரும் 60 ஓவர்கள் வரை விளையாட வேண்டும்,” என்று கபில் என்னிடம் கூறினார்.

அதற்கு,”கேப்டன் அவர்களே.. கவலைப்பட வேண்டாம். நாம் இருவரும் 60 ஓவர்கள் வரை ஆடுவோம். அதற்கு நான் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறேன். நீங்கள் பந்தை அடித்து விளாசுங்கள். உங்களைவிட சிறந்த அதிரடி ஆட்டக்காரர் அணியில் இல்லை,” என்று கபிலுக்கு தைரியம் கொடுத்தேன்.

“எங்களின் விருப்பப்படியே நாங்கள் 60 ஓவர்கள் வரை விளையாடி முடிந்து, ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பினோம்,” என்று கபிலுடன் களத்தில் நின்ற அந்த முக்கியமான தருணத்தை நினைவுகூர்ந்துள்ளார் கிர்மானி.

 

ஆட்டத்தின் முடிவில் அதிரடி காட்டிய கபில் - கிர்மானி ஜோடி

கபில் தேவ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தனது பந்தை சிக்ஸர் அடித்ததால் ஆத்திரமடைந்த குர்ரான் களத்தில் தவறாக நடந்துகொள்ள முயன்றார்.

ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் கபில்தேவ் ஆக்ரோஷமாக ஆடி ரன்களை குவித்தார்.

கபில் - கிர்மானி ஜோடி கடைசி 7 ஓவர்களில் மட்டும் 100 ரன்களை குவித்தது.

ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் கெவின் குர்ரான் வீசிய பந்தை, கபில் சிக்ஸருக்கு விரட்டியதில், அது மைதானத்தைக் கடந்து வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களின் மீது விழுந்தது.

தனது பந்தை சிக்ஸர் அடித்ததால் ஆத்திரமடைந்த குர்ரான் களத்தில் தவறாக நடந்துகொள்ள முயன்றார்.

“அவரது நடவடிக்கை என்னை மேலும் கோபப்படுத்தியது. தைரியம் இருந்தால் பவுன்சர் பந்துகளை வீசும்படி அவரைத் தூண்டினேன். அவர் வீசிய பவுன்சர் பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பிவிட்டு, குர்ரானை நோக்கி எனது பேட்டை காட்டினேன். அடுத்த 18 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசியதுடன், 49வது ஓவரில் சதத்தை பூர்த்தி செய்தேன்,” என்று சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் கபில்.

சுனில் கவாஸ்கர் தனது ‘Idols’ புத்தகத்தில், “மதன் லாலும், கிர்மானியும் தனக்கு நன்றாக ஆதரவளிப்பதாகக் கருதிய கபில், எதிர்முனையில் அதிரடியாக ஆடினார். கபில் 160 ரன்களை எட்டியபோது எங்களின் இதயம் வேகமாகத் துடித்தது.

கிளென் டர்னரில் 171 ரன்கள் உலக சாதனை என்பது எங்களுக்குத் தெரியும். ஒருவேளை கபிலுக்கு இது தெரியாமல் இருக்கலாம்,” என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “அதனால் கபில் அதிரடியான ஷாட்களை ஆடிக் கொண்டிருந்தபோது அவுட்டாகி, அதன் காரணமாக அந்த சாதனையைச் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நாங்கள் அஞ்சினோம்.

ஆனால், ஆட்டத்தின் நடுவராக இருந்த பாரி மேயர், “நீங்கள் உலக சாதனை புரிவதற்காகத்தான் ரசிகர்கள் கூட்டம் கைத்தட்டுகிறது” என்று கபிலிடம் கூறினார்.

உடனே சுதாரித்துக் கொண்ட கபில், மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்து, க்ளென் டர்னரின் முந்தைய சாதனையை முறியடித்தார். அப்போது சர்வதேச கிரிக்கெட்டில் கபிலுக்கு ஐந்து ஆண்டுகள் மட்டுமே அனுபவம் இருந்தது,” என்று தனது ‘Idols’ நூலில் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆட்டத்தின் முடிவு என்ன?

கபில் தேவ்

பட மூலாதாரம்,BCCI

 
படக்குறிப்பு,

இறுதியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது கபிலுக்கு வழங்கப்பட்டது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 17 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த இந்தியா, கபில் தேவின் பொறுப்பான மற்றும் அதிரடி ஆட்டத்தால் 60 ஓவர்கள் முடிவில் 266 ரன்களை எடுத்தது. இதில் கபில்தேவ் மட்டும் 175 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ஆனால், ஜிம்பாப்வே அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 44 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை மட்டும் எடுத்திருந்தது.

ஆனால் அப்போது கெவின் குர்ரான் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார். 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 56வது ஓவரில் அவர் ஆட்டமிழக்க, இந்தியாவின் வெற்றி உறுதியானது.

இறுதியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது கபிலுக்கு வழங்கப்பட்டது. ஜிம்பாப்வே உடனான த்ரில் வெற்றியுடன் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கும் இந்தியா முன்னேறியது.

“இந்த ஆட்டம் உலக கிரிக்கெட் அரங்கில் கபில்தேவுக்கு சிறப்பான அடையாளத்தை ஏற்படுத்தியது. அத்துடன் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த வெற்றி உலகக்கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற தூண்டுதலை இந்திய அணிக்கு அளித்தது,” என்று ‘Stargazing’ எனும் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் ரவி சாஸ்திரி.

https://www.bbc.com/tamil/articles/c72nylngx2yo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.