Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள் வீச்சு வீரர் பவானி தேவி: அவமானத்தில் தொடங்கிய விளையாட்டில் வரலாறு படைத்த தமிழ் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வாள் ஏந்தி வரலாறு படைத்த தமிழக வீராங்கனை: ஒலிம்பிக்கில் பவானி தேவிக்கு பதக்கம் நிச்சயம் - தாய் நம்பிக்கை

பட மூலாதாரம்,C A BHAVANI DEVI/TWITTER

படக்குறிப்பு,

“வெற்றி பெறும்வரை முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும்.” - இது தான் தனது தாரக மந்திரம் என்கிறார் பவானி தேவி.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

“வெற்றி பெறும்வரை முயற்சி செய்ய வேண்டும். முயன்றால் நிச்சயம் இலக்கை அடைய முடியும்”

தான் சோர்வடையும் போதெல்லாம் இந்த சொற்களை உச்சரித்து உற்சாகமடைவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஓர் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

வாள்வீச்சு விளையாட்டில் இந்தியாவின் பெயரை, பெருமையை உலகமெங்கும் பறைசாற்றியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சதலவடா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி. அவர் தற்போது சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

கடந்த ஜூன் மாதம், சீனாவில் உள்ள வூக்ஸி நகரில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று பவானி தேவி புதிய சாதனை படைத்துள்ளார்.

 

இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வாள்வீச்சு விளையாட்டில் பதக்கம் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பவானி தேவி பெற்றார். அதுமட்டுமல்லாமல் வாள்வீச்சு விளையாட்டில் ஆசிய அளவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் பவானி தேவி பெற்றார்.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டும் பவானி தேவி தன்னுடைய முத்திரையைப் பதிக்கவில்லை, இதற்கு முன் ஏராளமான சர்வதேச போட்டிகளில் பவானி தேவி தனது திறமையை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 

பவானி தேவியின் தாயை பாராட்டிய பிரதமர் மோதி

பவானி தேவி

பட மூலாதாரம்,C A BHAVANI DEVI

படக்குறிப்பு,

தனது வெற்றியின் பின்னணியில் தாய் ரமணி இருப்பதாக பவானி தேவி கூறுகிறார்.

பவானி தேவி சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் ஜொலிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அவரது தாய் ரமணி. பவானி தேவி ஒவ்வொரு தடையை எதிர்கொண்டபோதும் அவருடன் இருந்து, தேவையான நம்பிக்கையளித்து, ஊக்கமளித்து, அவரை இந்த உயரத்துக்கு உயர்த்தியது அவரின் தாய் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்தியாவில் வாள்வீச்சு விளையாட்டு என்றாலே அது பவானி தேவி என்று சொல்லும் அளவுக்கு அவரது சாதனை பட்டியல்களும், பதக்கங்களின் எண்ணிக்கையும் நீள்கின்றன.

பவானி தேவி தடைகளைக் கடப்பதற்கு சிரமப்பட்ட போதெல்லாம் அவருடைய தாய் ரமணி தேவி தன்னுடைய நகைகள், சொத்துகளை விற்று, வங்கியில் கடன் பெற்று, தனிநபர்களிடம் கடன் பெற்று அவரைப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து, ஊக்கமளித்துள்ளார்.

தனது தாயின் முயற்சி குறித்து பிரதமர் மோதி பாராட்டியது பற்றி பவானி தேவி பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஒருமுறை மன் கி பாத் நிகழ்ச்சியில் என்னைப் பற்றி பிரதமர் மோடி பாராட்டியதும், என் தாய் குறித்து தெரிவித்ததும் எனக்கு மகிழ்சியாக இருந்தது.

அனைவருக்கும் நான் சாதிப்பதும், பதக்கம் வாங்குவதும் மட்டும்தான் தெரியும். ஆனால், என் சாதனைக்குப் பின்னால் என் தாயின் உழைப்பு இருப்பது தெரியவில்லை. அதை பிரதமர் மோதி புரிந்து கொண்டு பேசியது எனக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது,” எனத் தெரிவித்தார்.

 
வாள் ஏந்தி வரலாறு படைத்த தமிழக வீராங்கனை: ஒலிம்பிக்கில் பவானி தேவிக்கு பதக்கம் நிச்சயம் - தாய் நம்பிக்கை

பட மூலாதாரம்,C A BHAVANI DEVI/TWITTER

படக்குறிப்பு,

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தாமாகவே முன்வந்து பவானி தேவியின் பயிற்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்ததாக தாய் ரமணி தெரிவித்தார்.

சில நேரங்களில் நல்ல மனம் கொண்டவர்களும் தேடி வந்து பவானி தேவிக்கு உதவியுள்ளனர். அதில் முக்கியமானவர் திரைப்பட இயக்குநர் சசிகுமார். தாமாகவே முன்வந்து பவானி தேவியின் பயிற்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார் என்று ரமணி தெரிவித்தார்.

இது தவிர, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பவானி தேவிக்கு அளித்த ஊக்கம், ஊக்கத்தொகை, பரிசுத்தொகை, வெளிநாடுகளில் பயிற்சி எடுக்கச் செய்த சிறப்பு ஏற்பாடு போன்றவை பவானி தேவி சர்வதேச அளவில் திறமையாகச் செயல்பட உதவியது.

பவானி தேவியை எலைட் வீரர்கள் பட்டியலில் வைத்து இன்று வரை தமிழக அரசு அவருக்குத் தேவையான பயிற்சிகளையும், பயிற்சிக்கான செலவுகளையும் அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது என்று பவானி தேவியின் தாய் ரமணி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பதக்க வேட்டை எங்கே தொடங்கியது?

இந்தியாவில் நடந்த வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் 9 முறை பவானி தேவி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த காமென்வெல்த் போட்டியில்தான் பவானி தேவி முதல்முறையாக வெண்கலம் வென்று சர்வதேச அளவில் பதக்க வேட்டையைத் தொடங்கினார்.

அதன்பின் 2010ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த ஆசிய வாள்வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பவானி தேவி, 2012ஆம் ஆண்டு ஜெர்ஸியில் நடந்த காமென்வெல்த் போட்டியிலும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

 
பவானி தேவி

பட மூலாதாரம்,C A BHAVANI DEVI

படக்குறிப்பு,

விளையாட்டில் பவானி தேவியை முன்னுக்குக் கொண்டு வர எத்தனையோ சிரமங்களை எதிர்கொண்டதாக அவரது தாய் ரமணி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2015இல் மங்கோலியாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலத்தையும் வென்று பவானி தேவி அசத்தியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என தீவிரமான வேட்கையுடன் இருந்த பவானி தேவிக்கு 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வாய்ப்பு கைநழுவிப் போனது. ஆனால், 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் பவானி தேவி இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதன்மூலம் வாள்வீச்சு விளையாட்டில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பவானி தேவி பெற்றார். அது மட்டுமல்லாமல் 2019ஆம் ஆண்டு, பெல்ஜியத்தில் நடந்த டூர்னோ சாட்டிலைட் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கேன்பெராவில் 2018ஆம் ஆண்டு நடந்த காமென்வெல்த் போட்டியில் சேப்ரே பிரிவில் பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் பெருமையையும் பெற்றார். 2022ஆம் ஆண்டு லண்டனில் நடந்த காமென்வெல்த் போட்டியிலும் பவானி தேவி தங்கம் வென்றார்.

 

அவமானத்துடன் தொடங்கிய சர்வதேச அறிமுகம்

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

பட மூலாதாரம்,C A BHAVANI DEVI/TWITTER

படக்குறிப்பு,

பவானி தேவி தேசிய அளவில் வாள்வீச்சில் பல சாதனைகளை செய்திருந்தாலும், சர்வதேச அறிமுகத்தை அவமானத்துடனே தொடங்கினார்.

பவானி தேவி தனது வாள்வீச்சு விளையாட்டில் பெரும் தோல்வி மற்றும் வெளியேற்றத்துக்குப் பிறகுதான் இத்தகைய உயரத்தை அடைய முடிந்தது.

தேசிய அளவில் வாள்வீச்சில் பல சாதனைகளை பவானி தேவி செய்திருந்தாலும், சர்வதேச அறிமுகத்தை அவமானத்துடனே தொடங்கினார்.

துருக்கியில் நடந்த போட்டித்தொடரில் 3 நிமிடங்கள் தாமதமாக பவானி தேவி வந்ததால், அவருக்கு ‘பிளாக் கார்டு’ வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். வாள்வீச்சுப் போட்டியில் ஒரு வீராங்கனைக்கு தரப்படும் அதிகபட்ச தண்டனை இதுதான்.

அந்த தண்டனையையும் பவானி தேவி ஏற்றுக்கொண்டு மனம் தளராமல் முன்னேறினார். அடுத்தடுத்த போட்டித் தொடர்களில் பங்கேற்று பவானி தேவி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார்.

பவானி தேவியை செதுக்கிய கேரள மாநிலம்

பவானி தேவி உயர்நிலைப் படிப்பை முடித்து, தலச்சேரியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்ந்து தனது வாள்வீச்சு திறமையை மெருகேற்றினார். இந்தியாவிலேயே வாள்வீச்சுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கும் சில இடங்களில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலச்சேரி பயிற்சி மையமும் ஒன்று.

 
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

பட மூலாதாரம்,C A BHAVANI DEVI/TWITTER

படக்குறிப்பு,

பவானி தேவியின் முழுப்பெயர் சதலவடா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி.

இதில் சேர்ந்து பவானி தேவி பயிற்சி எடுத்த பின்புதான் அவரின் திறமை மெருலேறியது. கேரள மாநிலத்துக்காக பல்வேறு போட்டிகளிலும் பவானி தேவி பங்கேற்றுள்ளார்.

பவானி தேவியின் முழுப்பெயர் சதலவடா ஆனந்த சுந்தரராமன் பவானி தேவி. அவரின் பெயரில் சதலவடா என்று இருப்பதால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று பல ஊடகங்களும் கூறி வந்தன. ஆனால், உண்மையில் பவானி தேவியின் பூர்வீகம் தமிழ்நாடுதான். அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்.

இந்தத் தகவலை பவானி தேவியின் தாயார் ரமணி பிபிசியிடம் பேசியபோது தெரிவித்தார். அவர் கூறுகையில், “பவானி தேவியின் பெயரில் சதலவடா என்ற பெயர் இருப்பதால், அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்று சில செய்திகள் வருகின்றன. ஆனால், அதில் உண்மையில்லை. எங்கள் பூர்வீகம் தமிழ்நாடுதான்.

தமிழ் மண்னைச் சேர்ந்தவர்கள் நாங்கள். பவானி தேவியின் தந்தை பிறந்த இடம்தான் ஆந்திரா. ஆனால், என்னுடைய பூர்வீகம் சென்னை வண்ணாரப்பேட்டை. பவானி தேவி பிறந்தது அவரின் சகோதர சகோதரிகள் அனைவரும் தமிழ்நாட்டில்தான் பிறந்தனர். பவானி தேவி ஒரு வாள் ஏந்திய தமிழ்ப்பெண் என்பதில் பெருமை கொள்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

பவானி தேவி சாதாரண நடுத்தரக் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொண்டே வளர்ந்தவர் என்று விவரிக்கிறார் அவரது தாய் ரமணி. இருந்தும் அவர் 11 வயதில் இருந்தே வாள்வீச்சு பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.

 
பவானி தேவி

பட மூலாதாரம்,C A BHAVANI DEVI

படக்குறிப்பு,

பவானி தேவி சாதனை படைக்க தமிழ்நாடு அரசு எப்போதும் உதவி வருகிறது என்கிறார் அவரது தாய் ரமணி.

"வாள்வீச்சு விளையாட்டு எங்களைப் போன்ற சாதரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு சற்று உயர்வானது. அந்த விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் விலை உயர்ந்தவை. இதனால், தொடக்கத்தில் பவானி தேவி மூங்கிலில் கத்தி போன்று செய்து அதில் சண்டையிட்டு வாள்வீச்சுப் பயிற்சி எடுத்தார்."

பவானி தேவியின் வாள் வீச்சு ஆர்வம் குறித்து அவரது தாய் தமிழ்நாடு விளையாட்டு மைய அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகு அவருக்கு முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போதிருந்து பவானி தேவியை அவரது தாய்தான் பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சிபெற ஏற்பாடு செய்து அவரைப் பல போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளார்.

"பவானி தேவி பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் செல்ல எங்களுக்கு போதுமான நிதியுதவி இல்லை. என்னிடம் இருந்த நகை, பணம் அனைத்தையும் செலவிட்டு பவானி தேவி பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உதவினேன். வங்கியில் கடன் வாங்கியும், தனிநபர்களிடம் கடன் வாங்கியும்கூட செலவிட்டேன்," என்கிறார் ரமணி.

பவானி தேவி வாங்கிய பதக்கங்களின் பட்டியலை அவரது தாய் அதிமுக எம்.பி. வெங்கடேஷ் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். பவானி தேவியின் திறமையை கேள்விப்பட்ட ஜெயலலிதா அடுத்த நாளே அவருக்குத் தேவையான நிதியுதவியை வழங்கி, அமெரிக்காவில் பயிற்சி பெற உதவி செய்தாதாகத் தெரிவித்தார்.

 

பவானி தேவியின் தளராத தன்னம்பிக்கை

தமிழ்நாடு வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பவானி தேவியின் வளர்ச்சி, மன உறுதி குறித்து அவரின் தாய் ரமணி பிபிசியிடம் கூறுகையில், “அவரைப் பயிற்சிக்காக பல நாடுகளுக்கும், அனுப்பி வைத்தேன். சில நேரங்களில் என்னிடம் பணம் இருக்காது. பலரிடம் கேட்டும் பண உதவி கிடைக்காது. அந்த நேரத்தில் நான் மனம் வெறுத்து, வாள்வீச்சு பயிற்சி போதும், இத்துடன் நிறுத்திவிடு என்றெல்லாம் விரக்தியில் அவரிடம் தெரிவித்திருக்கிறேன்.

ஆனால், ஒருமுறைகூட பவானி தேவி மனம் தளரவில்லை. விரக்தி அடைந்ததும் இல்லை. எப்போதுமே, மன உறுதியுடன், தன்னால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடனே இருந்தார். அதுதான் அவரை இந்த அளவு உயரத்துக்கு அழைத்து வந்துள்ளது,” எனத் தெரிவித்தார்.

தன்னை மனரீதியாக தயார் செய்ததது குறித்து பவானி தேவி பிபிசியிடம் கூறுகையில், “வாள்வீச்சு என்பது மனரீதியான விளையாட்டு. அதிலும் ஒலிம்பிக் போன்ற சர்வதேச அளவிலான விளையாட்டுக்கு வரும் வீரர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் முழுத் தகுதியுடன் இருப்பார்கள்.

போட்டியில் பங்கேற்கும் வீரருக்கு மன வலிமை அதிகரிக்க அவர் சார்ந்திருக்கும் சூழல், குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வேறு எந்த கவனச் சிதறலும் இருக்கக்கூடாது,” எனத் தெரிவித்தார்

பவானி தேவிக்கு கிடைத்து வரும் ஆதரவு, பெண் என்பதால் வரும் விமர்சனங்கள் குறித்து அவரின் தாய் ரமணி கூறுகையில், எந்த விதமான எதர்மறை விமர்சனங்களுக்கும் இடம் கொடுக்காமல், மிகுந்த கவனத்துடனும், ஒழுக்கத்துடனும் தொடர்ந்து செயல்படுவதே பவானி தேவியின் பலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

 

ஒலிம்பிக்கில் பதக்கம் நிச்சயம்

தமிழ்நாடு வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

பட மூலாதாரம்,C A BHAVANI DEVI/TWITTER

படக்குறிப்பு,

"டோக்கியோ ஒலிம்பிக்கில் நாங்கள் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் பயிற்சியில் ஈடுபடவில்லை. பதக்கம் வெல்ல வேண்டும் என்று தீர்மானமாக இருந்தோம்."

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றது குறித்து பவானி தேவி பிபிசியிடம் கூறுகையில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் நாங்கள் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் பயிற்சியில் ஈடுபடவில்லை.

பதக்கம் வெல்ல வேண்டும் என்று தீர்மானமாக இருந்தோம். அதற்கேற்றாற் போல கடுமையான பயிற்சியில் ஈடுபட்டோம். நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.

முதல் போட்டியில் நான் வென்றபோதிலும் 2வது ஆட்டத்தின் முதல் பாதியில் சில தவறுகளைச் செய்திருந்தேன். அதை 2வது பாதியில்தான் உணர்ந்தேன். ஆனால், அதைச் சரிசெய்ய முடியவில்லை.

அந்தத் தோல்வி எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இருப்பினும், அதன்பிறகு எனக்கு கிடைத்த உற்சாகமான வார்த்தைகள், பாராட்டுகள் என்னை இன்னும் சிறப்பாகச் செயல்பட ஊக்கமூட்டின,” என்றார்.

 
தமிழ்நாடு வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

பட மூலாதாரம்,C A BHAVANI DEVI/TWITTER

படக்குறிப்பு,

சீனாவில் தற்போது நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பவானி தேவி பங்கேற்க உள்ளார்.

பவானி தேவி முதல்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற தருணம் குறித்து ரமணி கூறுகையில், “பவானி தேவி 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தபோது அவர் பயிற்சி பெற 3 மாத அவகாசம் மட்டுமே இருந்தது. இருப்பினும், அவரால் எந்த அளவு சிறப்பாகச் செயல்பட முடியுமோ அந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டார்.

கடந்த 2 ஆண்டுகளாக பவானி தேவி கடுமையாகப் பயிற்சி எடுத்து வருவதால், அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் அவர் பதக்கம் வெல்வார் என்று உறுதியாக நம்புகிறேன்," என்றார்.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், உலக சாம்பியன் ஜப்பான் வீராங்கனை மிசாகியை வென்று அரையிறுதிக்கு பவானி முன்னேறினார் என்றும், இதுவரை அவர் மிசாகியை வென்றதே இல்லை என்ற நிலையில், முதல்முறையாக வென்றதே அவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையை அளித்திருப்பதாகவும் அவரது தாய் ரமணி கூறினார்.

"அடுத்ததாக சீனாவில் தற்போது நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பவானி தேவி பங்கேற்க உள்ளார். வரும் 26, 27ஆம் தேதிகளில் பவானி தேவி விளையாட உள்ளார். இந்தப் போட்டித் தொடரிலும் பவானி தேவிக்கு பதக்கம் கிடைக்கு என்று நிச்சயமாக நம்புகிறேன்."

https://www.bbc.com/tamil/articles/cw0ky1l2928o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.