Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செமிகண்டக்டர் சிப் உற்பத்தியில் சீனாவுக்கு சவால் விட இந்தியா எடுத்துள்ள புதிய முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
செமி கண்டக்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜுபைர் அஹ்மத்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜெர்மன் பொருளாதார நிபுணர் இ.எஃப். ஷூமேக்கர் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக சிறியவற்றை உருவாக்குவதை வலியுறுத்தினார், அதை அவர் தனது 'சிறியது அழகானது' புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறியது அழகானது என்ற சொற்றொடர் செமி கண்டக்டர் சிப்பை பொருத்தவரை முற்றிலும் உண்மை. ஐபிஎம் போன்ற ஒன்றிரண்டு தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மனித முடியைவிடப் பல மடங்கு மெல்லிய நானோ சிப்பை உருவாக்கியுள்ளனர்.

தினசரி பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்கள், இயந்திரங்களில் மைக்ரோசிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. கணினி முதல் ஸ்மார்ட்போன் வரை, விமானங்கள் முதல் ட்ரோன்கள் வரை, மருத்துவ உபகரணங்களில் இருந்து செயற்கை நுண்ணறிவு(AI) உபகரணங்கள் வரை இதில் அடங்கும்.

சராசரியாக, ஒரு காரில் 1500 சிப்கள் உள்ளன. நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் குறைந்தது ஒரு டஜன் சிப்களால் இயக்கப்படுகிறது. வல்லுநர்கள் சிப்களின் பயனை எண்ணெயுடன் ஒப்பிடுகின்றனர். எண்ணெய் உற்பத்தியில் ஒரு சில நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதைப் போலவே, செமி கண்டக்டர் துறையிலும் ஒரு சில நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

 
செமி கண்டக்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிக்கலானது, செலவு மிகுந்தது என்பதால் ஒரு காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியாக மட்டுமே சிப் தயாரிப்பு மட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போது அது சில பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான போட்டியாக மாறியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர் எல்லா வகையிலும் உலகில் ஆதிக்கம் செலுத்துவார் என்று நம்பப்படுகிறது.

சிப் தயாரிப்பு போட்டியில் எந்தெந்த நாடுகள் முன்னணியில் உள்ளன?

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசியல் மற்றும் வர்த்தகப் போரைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது இந்த இரண்டு மாபெரும் பொருளாதாரங்களும் சிப் துறையில் முன்னிலை பெறப் போட்டியிடுகின்றன.

தற்போதைய சூழலில் சீனா அமெரிக்காவைவிட ஓரளவிற்குப் பின்தங்கி உள்ளது. ஆனால் அதன் முன்னெடுப்புகள் அமெரிக்காவைவிட மிக வேகமாக உள்ளது.

சீனா ஒவ்வோர் ஆண்டும் சிப்கள் வாங்குவதற்கான செலவை அதிகரித்து வருவதாக எழுத்தாளர் கிறிஸ் மில்லர் தனது 'சிப் வார்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், எண்ணெய் இறக்குமதிக்கு செலவிடும் பணத்தைவிட செமிகண்டக்டர் சிப்களை இறக்குமதி செய்வதில் அதிக பணத்தை சீனா செலவிடுகிறது.

ஆகஸ்ட் பிற்பகுதியில், சீன ஸ்மார்ட்போன் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவே(Huawei) தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் Mate-60 Proஐ அறிமுகப்படுத்தியபோது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசாங்கம் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது.

இதற்குக் காரணம், இந்த போனை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படும் 7 நானோமீட்டர் அளவுள்ள சிப்பை சீனா எப்படித் தயாரித்தது என்று அமெரிக்க நிர்வாகம் ஆச்சரியப்பட்டது.

 
செமி கண்டக்டர்

பட மூலாதாரம்,DAN HUTCHISON

படக்குறிப்பு,

டான் ஹட்சிசன், நிபுணர்

ஏழு நானோ மீட்டர் சிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையால் சீனாவில் அதன் உற்பத்தி சாத்தியமற்றது என்று அமெரிக்கா நினைத்தது. ஆனால் சீனாவால் வெற்றிகரமாக இந்த உபகரணங்களை ஏற்பாடு செய்து சிக்கலான 7 நானோ மீட்டர் சிப்பை உருவாக்க முடிந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டில், தேசப் பாதுகாப்பை மேற்கோள் காட்டி அமெரிக்காவில் இருந்து ஹூவாவேக்கு அனுப்பப்படும் உயர்தர சிப் தயாரிக்கும் கருவிகளின் விற்பனையை அமெரிக்க அரசாங்கம் நிறுத்தியது. ஆனால் இது சீனாவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த விவகாரம் அமெரிக்க நிர்வாகத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், உலகின் முன்னணி சுயாதீன செமி கண்டக்டர் நிபுணர்களில் ஒருவரான கனடாவை சேர்ந்த டான் ஹட்சிசன் ஆச்சரியப்படவில்லை.

அவர் பிபிசியிடம் பேசும்போது, “இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. TSMC (தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம்) மற்றும் இன்டெல் பயன்படுத்திய அதே தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை ஹுவாவே பயன்படுத்தியுள்ளது. ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, அவர்களிடம் கருவி உபகரணங்கள் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும்,” என்றார்.

 
செமி கண்டக்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜக தலைமையகத்தில் மைக்ரோன் தொழில்நுட்பத்தின் திட்டம் பற்றிய தகவல்களை அஸ்வனி வைஷ்ணவ் கூறினார்.

சிப் பந்தயத்தில் இணைந்த இந்தியா

இந்தியாவும் முழு தயாரிப்புடன் சிப் தயாரிக்கும் பந்தயத்தில் குதித்துள்ளது. நாட்டில் செமி கண்டக்டர் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு லட்சிய பணியைத் தொடங்கியுள்ளது.

இதற்கான முதல் நடவடிக்கை கடந்த மாதம் எடுக்கப்பட்டது. குஜராத்தின் சனந்தில் அமெரிக்க நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜி, அதிநவீன செமிகண்டக்டர் பொருத்துதல்(assembly), தொகுத்தல் (packaging) மற்றும் சோதனை(testing) ஆலைக்கான அடிக்கல்லை நாட்டியது.

இந்தத் தொழிற்சாலை 3.75 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படுகிறது. இதில் மைக்ரான் $825 மில்லியன் முதலீடு செய்கிறது, இந்திய அரசு, குஜராத் அரசு ஆகியவை மீதமுள்ள முதலீட்டைச் செய்கின்றன. இதன் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் டாடா புராஜெக்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செமி கண்டக்டர் மைக்ரோசிப் துறையில் பிரதமர் நரேந்திர மோதி தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “இந்தியாவை செமிகண்டக்டர்களின் பெரிய மையமாக மாற்றுவேன் என்று மோதி உங்கள் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக" பேசினார்.

 
செமி கண்டக்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா முன் ஏராளமான சவால்கள் உள்ளன

செமிகண்டக்டர் சூழல் அமைப்பில் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை மற்றும் தொகுத்தல் ஆகியவை அடங்கும்.

இது தவிர, சிப்களை தயாரிப்பதற்கு நவீன கருவிகள், கனிமங்கள் மற்றும் வாயுக்கள் தேவைப்படுகின்றன.

சிப் வடிவமைப்பில் இந்தியாவுக்கு அனுபவம் உள்ளது, பெங்களூரில் அதிகமாக செய்யப்படுகிறது. ஆனால் நாட்டில் உற்பத்தி, தொகுத்தல், உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் இல்லை.

இந்தியா முன் உள்ள சவால்கள் என்ன?

  • அதிக முதலீடு
  • பெரிய உலகளாவிய நிறுவனங்களை ஈர்ப்பது
  • ரசாயனங்கள், வாயுக்கள் மற்றும் தாதுக்கள் இல்லாதது
  • வல்லுநர்களை இந்தியா அழைத்து வர வேண்டும்
  • நீண்ட காலத்திற்கு துரிதமாக வேலை செய்ய வேண்டியிருக்கும்

ஐஐடி ரோபரின்(IIT Ropar) இயக்குநர் பேராசிரியர் ராஜீவ் அஹுஜா, 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன் பல விஷயங்கள் தேவை என்று கூறுகிறார். இது மற்ற தொழில்துறையைப் போன்றது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

“இதற்கு நிறைய பணி, உயர்தர உபகரணங்கள் மற்றும் பொருட்கள் தேவைப்படுகின்றன. மேலும் இந்தப் பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும்,” என்றார்.

இந்தியா தற்போது செமி-கண்டக்டர் சிப்களை தயாரிக்கும் பந்தயத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பந்தயத்தின் இறுதிக் கோட்டை அடைய தைவான் மற்றும் தென் கொரியாவுக்கு பல ஆண்டுகள் ஆனது. இந்தத் துறையில் உலக அளவில் இந்தியா முன்னேற 10 முதல் 20 ஆண்டுகள் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனேடிய நிறுவனமான டெக் இன்சைட்ஸின்(TechInsights) டான் ஹட்சிசன் இந்தத் துறையில் மிகவும் பிரபலமான நிபுணர்களில் ஒருவர். இந்தியா தனது இலக்கை அடைய பொறுமையாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“எதார்த்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினால் 10 முதல் 20 ஆண்டுகள் ஆகும். ஓடுவதற்கு முன் நடக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். மைக்ரான் திட்டம் வெற்றியடைவதை உறுதி செய்வது முக்கியம்,” என்கிறார் அவர்.

 
செமி கண்டக்டர்

பட மூலாதாரம்,TWITTER/IITRPR

படக்குறிப்பு,

பேராசிரியர் ராஜீவ் அஹுஜா, இயக்குநர், ஐஐடி ரோபர்

செமி கண்டக்டர் சிப் உற்பத்திக்கு என்ன தேவை?

செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் 150க்கும் மேற்பட்ட ரசாயனங்கள், 30க்கும் மேற்பட்ட வாயுக்கள் மற்றும் தாதுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இவை அனைத்தும் ஒரு சில நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. இதில் தன்னிறைவு பெறுவதுதான் இந்தியாவுக்கு சவாலாக உள்ளது.

சிப் தொழில்துறைக்கு உதவும் தொழில்களை உருவாக்குவதும் இந்தியாவுக்கு சவாலாக இருப்பதாக சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சார்ஹர் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த டேவிட் சென் பிபிசியிடம் பேசும்போது, “செமிகண்டக்டர் தொழிலுக்கு பக்கபலமாக சீனா மிகவும் வலுவான துணைத் தொழிலைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இல்லாத சில மூலப்பொருட்களும் கனிமங்களும் சீனாவில் உள்ளன,” என்று கூறினார்.

மேலும், “இந்தத் தொழிலில் சீனா பல பில்லியன் டாலர்களை செலவழிக்கிறது. இந்தியாவின் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு மின்சாரம்கூட இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியைப் படித்தேன்.

இந்திய அரசு தனது அனைத்து வளங்களையும் செமிகண்டக்டர் துறையில் செலவழித்தால், அதன் இலக்கை அடைய முடியும். ஆனால் இந்திய அரசு தனது அனைத்து மூலதனத்தையும் ஒரே தொழிலில் முதலீடு செய்யும் என்று நான் நினைக்கவில்லை,” என்றும் அவர் கூறுகிறார்.

 

இந்தியாவின் கடந்தகால தோல்விகள்

செமி கண்டக்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் ஒரே சிப் உற்பத்தி நிறுவனமான 'செமிகண்டக்டர் லேபரேட்டரி' (SCL)-இல் 1984இல் உற்பத்தி தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (TSMC) நிறுவப்பட்டது.

இன்று தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் உலகின் நம்பர் ஒன் லாஜிக் சிப் தயாரிப்பாளராக உள்ளது. அதன் ஆண்டு வருமானம் $70 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் எஸ்.சி.எல்லின் விற்று முதல் $5 மில்லியன் மட்டுமே.

செமிகண்டக்டர் லேபரேட்டரி 100 நானோமீட்டர்களைவிட பெரிய சிப்களை உற்பத்தி செய்கிறது. அவை மிகவும் பழமையானவை. மேலும், அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைக்கு நவீனமயமாக்கல் தேவையாக உள்ளது. இஸ்ரோவின் விண்வெளிப் பயணங்களில் சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் சிப் உற்பத்தி

இந்தியாவால் ஒரு முன்னணி சிப் தயாரிப்பாளராக இருந்திருக்க முடியும். ஆனால் 1989இல் நடந்த ஒரு பெரிய சம்பவம் நாட்டை செமிகண்டக்டர் விவகாரத்தில் மிகவும் பின்னுக்குத் தள்ளியது. 1989ஆம் ஆண்டு மொஹாலியில் உள்ள எஸ்.சி.எல் தொழிற்சாலை மர்மமான முறையில் தீயில் எரிந்து சேதமானது. இது விபத்தா அல்லது சதியா என்பது யாருக்கும் தெரியாது.

பின்னர் தொழிற்சாலை மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் சிப் பந்தயத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியது.

டான் ஹட்சிசன் 1970களில் இருந்து இந்திய சிப் தொழில்துறையைக் கண்காணித்து வருகிறார்.

“இந்தியா இந்தத் துறைக்காகப் பாடுபடுவதை எனது வாழ்க்கை முழுவதும் பார்த்திருக்கிறேன். அது தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது. இப்போது இந்தியா வெற்றி பெறுவது முக்கியம். இந்தத் தொழிலை உருவாக்குவதற்கு முக்கிய நிலையான மின் கட்டம், சீரான நீர் இருப்பு போன்ற சில அடிப்படை விஷயங்களில் பிரச்னைகள் உள்ளன,” என்று அவர் கூறுகிறார்.

 
செமி கண்டக்டர்

பட மூலாதாரம்,DAVID CHEN

படக்குறிப்பு,

டேவிட் சென்

இந்த சவால்களை இந்தியா எப்படி எதிர்கொள்ளும்?

சிப் துறையில் தைவான் வெற்றிப் பெற்றதற்கான பெருமை அமெரிக்காவில் செமிகண்டக்டர்களை தயாரிப்பதில் அனுபவம் பெற்ற மற்றும் உயர் பதவிகளில் இருந்த தைவானிய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது.

அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் செமிகண்டக்டர் தொழிலில் சிறப்பாகப் பணியாற்றும் பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் இந்தியர்களுக்குப் பஞ்சமில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இந்தியா அவர்களை மீண்டும் தன்னை நோக்கி ஈர்க்க முடிந்தால், அது தொழில்துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று ஹட்சிசன் கூறுகிறார்.

பெய்ஜிங்கில் உள்ள சார்ஹர் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த டேவிட் சென் கூறுகையில், “உற்பத்தியைப் பற்றி இந்தியா அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் இந்தியாவில் வடிவமைப்பு திறமை உடைய மிகவும் மேம்பட்ட பொறியாளர்கள் உள்ளனர்.

நீங்கள் அமெரிக்காவை பார்த்தால், நிறைய சி.இ.ஓ.க்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்களாக உள்ளனர். எனவே அவர்கள் வடிவமைப்பில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இது இந்தியாவுக்கு ஒரு பெரிய நன்மை. இந்தியா அதன் காய்களைச் சரியாக நகர்த்தினால், இந்தத் துறையில் முன்னணியில் இருக்க முடியும். ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க முடியும்,” என்கிறார்.

ஐஐடி ரோபரின் இயக்குநர் பேராசிரியர் ராஜீவ் அஹுஜா, இந்திய ஐஐடிகள் செமிகண்டக்டர் தொழிலுக்கு உதவும் படிப்புகளைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறார்.

செமி கண்டக்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“நாங்கள் ஐஐடியில் பி.டெக் படிப்புகளைத் தொடங்கினோம். பொறியியல் இயற்பியல் என்றால் என்ன? அது செமிகண்டக்டர் இயற்பியல்தான், எனவே செமி கண்டக்டர் குறித்த வளர்ச்சி ஏற்கெனவே நடந்து வருகிறது. இந்தியாவில் மனிதவளத்தில் பற்றாக்குறை இல்லை, திறமையான மனிதவளத்தில்தான் பற்றாக்குறை உள்ளது. பயிற்சி மற்றும் பொருத்தமான படிப்புகள் மூலம் இதைச் சமாளிக்க முடியும்,” என்கிறார் ராஜீவ் அஹுஜா.

புதிய திட்டங்களைத் தொடங்க பல பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் முடிவில் இந்தியா உள்ளது. இந்தத் திட்டங்களில் பிரதமர் மோதி தனிப்பட்ட முறையில் முனைப்புடன் உள்ளார்.

இந்தியா முன்னணி நாடாக மாற வேண்டுமென்றால், செமி கண்டக்டர் துறையில் முன்னணி வகிக்க வேண்டும் என்ற உண்மையை அவர் உணர்ந்துள்ளார். குஜராத்தில் மைக்ரோன் பேக்கேஜிங் தொழிற்சாலையை அமைப்பது சரியான பாதையில் பயணிப்பதற்கான ஒரு அடி என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

“இதுவொரு சிறந்த ஆரம்பம். தென் கொரியா, தைவான் மற்றும் சீனா அனைத்தும் பேக்கேஜிங் அலகுகளுடன்தான் தொடங்கியது,” என்று டான் ஹட்சிசன் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c3gxxp7591do

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.