Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவெறிக் கூச்சலும் மன்னிப்புக் கோரலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறிக் கூச்சலும் மன்னிப்புக் கோரலும்

இனவெறிக் கூச்சலும் மன்னிப்புக் கோரலும்

— வீரகத்தி தனபாலசிங்கம் —

     மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் ஒரு மதகுருவிடம் இருக்கவேண்டிய பண்புகளுடன் பொதுவெளியில் நடந்துகொள்வதில்லை என்பதை ஏற்கெனவே நடந்தேறிய  ஒன்று இரண்டு அல்ல பல்வேறு சம்பவங்கள் மூலமாக நாமெல்லோரும் அறிவோம். 

   ‘ வணக்கத்துக்குரியவராக’ இருக்கவேண்டிய தேரர் பெருமளவுக்கு ‘சர்ச்சைக்குரியவராகவே ‘ பொதுவில் அறியப்பட்டிருக்கிறார். அவரது அட்டகாசங்களும் ஆவேசப்பேச்சுக்களும் மகாசங்கத்துக்கே பெரும் அவமானம் என்பது குறித்து  பௌத்த உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்கள்  கூட கவலைப்படடதாகத் தெரியவில்லை. அவர்கள் அழைத்து அறிவுறுத்தியிருந்தால் அவர் தொடர்ந்தும்  பண்பில்லாத முறையில் நடந்துகொள்வதை தவிர்த்திருக்கவும் கூடும். அல்லது அத்தகைய ஒரு’அட்டகாசமான ‘  தேரர் இன உறவுகளைப் பொறுத்தவரை உணர்ச்சிபூர்வமான ஒரு பிரதேசத்தில் இருக்கவேண்டியது அவசியம்  என்று அவர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை.

   சில தினங்களுக்கு முன்னர் சுமணரத்ன தேரர் மட்டக்களப்பில் நடுவீதியில் பொலிசாரும் பார்த்துக் கொண்டிருக்க தென்னிலங்கையில் வாழும் தமிழர்களை துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்வேன் என்று ஆவேசத்தின் உச்சியில் கூச்சலிட்டதை நாமெல்லோரும் காணொளியில் பார்க்கக்கூடியதாக இருந்தது. 

   அந்தக் ‘கொலைப்பேச்சு’ அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சித்த பிரச்சினை எதுவாக இருந்தாலும், அவரின் அணுகுமுறையில் இனவெறியைத் தவிர வேறு எந்த தர்க்கநியாயமும் இருந்திருக்கும் என்று நம்புவதற்கு இடந் தரவில்லை.

  இனங்களுக்கு இடையில் வன்முறையைத் தூண்டிவிடக்கூடிய பேச்சுக்களை விடவும் பாரதூரமான வெறுப்புப்பேச்சு இருக்கமுடியாது. ஆனால், அவர் அதனை நீண்டகாலமாக சர்வ சாதாரணமாகச்  செய்துகொண்டு வந்திருக்கிறார். அதனால் எந்தப் பிரச்சினையையும் அவர் எதிர்நோக்கவில்லை. இந்த தடவையும் அவ்வாறே அவருக்கு  எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.  

  அவரைப் போன்று வேறு மதங்களைச் சேர்ந்த ஒரு குருவானவர் செய்திருந்தால் பொலிசார் எந்த விதமாக நடந்திருப்பார்கள் என்பதை சொல்லித்தான் எவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்றில்லை.

  சுமணரத்ன தேரரின் பேச்சு குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததைக்  கண்டித்து தமிழ் அரசியல் தலைவர்கள் குரலெழுப்பிய போதிலும், அரசாங்கத் தரப்பில் அதற்கு பதில் கூறப்படவேயில்லை. அது மாத்திரமல்ல, தேரரின் அட்டகாசம் குறித்து சிங்கள அரசியல்வாதி எவரும் ஆட்சேபம் தெரிவித்ததாக செய்தி வந்ததாக இல்லை.

  ஆனால், திடீரென்று சுமணரத்ன தேரர் தனது அந்த ‘கொலைப் பேச்சுக்காக’ தமிழர்களிடம்  மன்னிப்புக் கேட்டு உரையாற்றும்  காணொளியொன்று  வெளியிட்டப்பட்டது . அவரது ஆவேசப்பேச்சு சட்ட நடவடிக்கை எடுக்காமல் சாதாரணமாக அலட்சியம் செய்துவிடக்கூடியது அல்ல என்று அவருக்கு அரசாங்கத் தரப்பில் இருந்தோ அல்லது மகாசங்கத்திடமிருந்தோ கூறப்பட்டிருக்கக்கூடும். அத்தகைய ஒரு பின்னணியில் தான் அவரது  மன்னிப்புக் கோரல்  வந்திருக்கிறது என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

  தமிழ் மக்கள் எளிதில்  மறந்துவிடவோ மன்னித்துவிடவோ கூடியது அல்ல  சுமணரத்ன தேரரின் பேச்சு. அவ்வாறானால் எவரும் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் வன்முறையை தூண்டிவிடக்கூடிய ஆவேசப்பேச்சுக்களை நிகழ்த்திவிட்டு மறுநாள் ஒரு காணொளியில் அல்லது ஊடக அறிக்கையில் மன்னிப்புக் கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிப் போய்விடும் என்றாகிறது. இது மிகவும் தவறான ஒரு உதாரணமாக வந்துவிடும்.

  கிழக்கில் உருவான சர்ச்சைக்காக தென்னிலங்கையில் வாழும் தமிழர்களை எல்லாம் துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்யப்போவதாக அவர்  விடுத்த அச்சுறுத்தல் நாடுபூராவும் இனங்களுக்கு இடையில் பதற்றநிலையை தோற்றுவிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருந்தது. அது குறித்து கண்டனம் செய்த தமிழ் அரசியல் தலைவர்கள் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றச்செயல் என்று சுட்டிக்காட்டினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொலிஸ்மா அதிபருக்கு அது குறித்து கடிதமும் எழுதியிருந்தார்.

  குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ( International Covenant on Civil and Political Rights — ICCPR ) என்பது 1966 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட  ஒரு சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கையாகும். அதை இலங்கை 1980 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது. ஆனால் அது  தொடர்பிலான சட்டம் 27 ஆண்டுகள் கழித்து  2007 ஆம் ஆண்டில்தான்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

  குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் என்று அழைக்கப்படும் இந்த  சட்டம் பாரபட்சத்தை, பகைமையை அல்லது வன்முறையை தூண்டிவிடும் வகையில் அமையக்கூடியதாக போர் அல்லது தேசிய,இன,மத வெறுப்புணர்வை பிரசாரப்படுத்துவதை குற்றச்செயலாகக் கருதுகிறது. அத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ் சாட்டப்படக்கூடிய  எவரையும் மேல்நீதிமன்றத்தைத் தவிர அதற்கு கீழ் நிலையில்  உள்ள எந்த நீதிமன்றமும் பிணையில் விடுவிக்க  முடியாது.

   ஆனால், அந்த சட்டம் வியாக்கியானப்படுத்தப்படுகின்ற அல்லது பிரயோகிக்கப்படுகின்ற விதம் அரசாங்கங்கள் எதிர்க்கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்குவதற்கும் சிறுபான்மை இனத்தவர்களை கொடுமைப்படுத்துவதற்கும் தவறாக பயன்படுத்தப்படுகிறதே தவிர உண்மையில் அதன் மூலமாக தண்டிக்கப்படக்கூடிய குற்றச்செயல்களைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பெரும்பாலும்  பயன்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களினால்  முன்வைக்கப்படுகிறது.

   இனக்கலவரம் மூளும் என்று  எச்சரிக்கை செய்வதை விடவும் நாட்டு மக்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக இன்னொரு பிரிவினரை தூண்டிவிடும் மோசமான செயல் வேறு என்னதான் இருக்கப்போகிறது?

  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கு தனக்கு இருக்கும் விருப்பத்தை இவ்வருட முற்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டபோது அவ்வாறு செய்யமுயன்றால் இலங்கை இதுகாலவரையில் கண்டிராத படுமோசமான இனக்கலவரம் வெடிக்கும் என்று முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்சவும் சரத் வீரசேகரவும்  பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி கூறினார்கள். அவர்களுக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேண்டுமானால் அவ்வாறு இனக்கலவர எச்சரிக்கையை அவர்கள் மீண்டும் வெளியிடுவதற்கும் கூட  தயங்கப்போவதில்லை என்கிற அளவுக்கே நாட்டில் இன உறவுகள் தொடர்பிலான நிலைவரம் இருக்கிறது.

   இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் குரோதத்தை தூண்டிவிடக்கூடியவை என்று கருதப்படும்  செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அண்மைக்காலத்தில் அரசாங்கம் எடுத்த சில சட்ட நடவடிக்கைகளை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

  முதலாவதாக, தலதாமாளிகையை இழிவுபடுத்தும் வகையில் யூரியூப் மூலமான தனது கிரமமான நிகழ்ச்சிகளில்  கருத்துக்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சேபால் அமசிங்க கடந்த வருடம் டிசம்பரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்திய தனது செயலுக்காக அமரசிங்க மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்புக் கேட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.

  இரண்டாவதாக, கிறிஸ்தவ மதப்போதகரான ஜெரோம் பெர்னாண்டோ  கடந்த மேமாதம் பௌத்த மதத்தை மாத்திரமல்ல, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களையும் இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிட்டு பிரசங்கம் செய்த காணொளி சமூக ஊடஙங்களில் பரவியதையடுத்து பெரும் சர்ச்சை மூண்டது. ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டபோதிலும் தனக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாகவே பெர்னாண்டோ நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.  இன்றுவரை அவர் திரும்பிவரவில்லை.

  மூன்றாவதாக, கடந்த ஏப்ரல் முதலாம் திகதி  கொழும்பின் பிரபலமான பெண்கள் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற ‘ஏப்ரல் முட்டாள்தினச் சவால் ‘ என்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை மேடைப் பேச்சாளரான நடாஷா எதிரிசூரிய என்ற இளம் பெண் கலைஞர் புத்தபெருமானின் குழந்தைப் பராயத்தைக் கிண்டல்செய்யும் தொனியில் கருத்துக்களை தெரிவித்த காணொளிப் பதிவும் சமூக ஊடகங்களில் வெளியானது.

  அதை தொடர்ந்து மூண்ட சர்ச்சைக்கு மத்தியில் நடாஷா வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தபோது விமானநிலையத்தில் கைதுசெய்யப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சில வாரங்கள் கழித்து அவரும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

  நான்காவதாக, சமூக ஊடகங்களில் பிரபல்யமானவர் என்றும்  தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திக் கருத்துக்களை வெளியிடுபவர் என்றும் அறியப்பட்ட ராஜாங்கன சித்தார்த்த தேரர் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் அமைதியின்மையை தூண்டிவிடக்கூடிய முறையிலும் குறிப்பிட்ட சிலரை அச்சுறுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதாக அவருக்கு எதிராக வேறு ஒரு பிக்கு செய்த முறைப்பாட்டையடுத்து இவ்வருட நடுப்பகுதியில்  கைதாகி பல வாரகால விளக்கமறியலுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.

   இந்த சம்பவங்களின்போது வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராக தென்னிலங்கையில் பரவலாக குரல்கள் கிளம்பின. ஆனால்,  தமிழர்களை துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்வேன் என்ற மட்டக்களப்பு விகாராதிபதியின் இனவெறிக்கூச்சலை கண்டிப்பதில் தென்னிலங்கையில் அக்கறை காட்டப்படவே இல்லை. பொதுவில் பௌத்த மதத்தையும் சிங்கள மக்களையும் புண்படுத்துபவையாக கருதப்படும் செயற்பாடுகளுக்கு காண்பிக்கப்படுகின்ற ஆக்ரோஷமான  எதிர்வினையை மற்றைய சமூகங்கள் மற்றும் மதங்களை புண்டுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் காணமுடிவதில்லை.

  குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தை அரசாங்கம் பாரபட்சமான முறையில் — குறிப்பிட்ட சிலரை தெரிவுசெய்து பிரயோகிக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. சர்வதேச மன்னிப்புச்சபை இது விடயத்தில் அரசாங்கத்தை வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியிருந்தது.

  அதேவேளை, சுமணரத்ன தேரரின் விவகாரத்தில் இலங்கையில் காலங்காலமாக அரசியல் அனுசரணையுடன் ஊக்கப்படுத்தப்பட்டு வந்திருக்கும் ஆரோக்கியமற்ற ஒரு கலாசாரத்தைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.

  சிங்கள அரசியல் சமுதாயம் அதன் தவறான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் நியாயப்படுத்துவதற்கு மகாசங்கத்தை தாராளமாகப்  பயன்படுத்தி வந்திருப்பதால்  தங்களால் அரசாங்கத்தை தட்டிக்கேட்க முடியுமே தவிர தங்களுடன் அவ்வாறு அரசாங்கம்  நடந்துகொள்ளப்போவதில்லை  என்ற உறுதியான நம்பிக்கையை பௌத்த பிக்குமார் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

  நாட்டின் அரசியலமைப்பு பௌத்த மதத்துக்கு வழங்கியிருக்கும் அதிமுதன்மை அந்தஸ்தை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி பெரும்பாலான பிக்குமார் சட்டத்தின் ஆட்சிக்கே சவால் விடுக்கும் வகையில் நடந்துகொள்கிறார்கள்.  சுமணரத்ன தேரர் இந்த வகையான பிக்குமாரில் ஒருவரே. 

  அரசியல்வாதிகள் கையில் எடுக்கவேண்டிய பிரச்சினைகளை பிக்குமார் கையாளுவதற்கு தூண்டிவிடும் அல்லது அனுமதிக்கும்  அரசியல் கலாசாரம் இலங்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இனப்பிரச்சினைக்கு இன்று வரையில் அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றை காணமுடியாமல் இருப்பதற்கான பிரதான முட்டுக்கட்டைகளில் ஒன்று மகாசங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாடாகும்.

 அரசாங்கம் முன்னெடுக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சி மகாசங்கத்தை பிரதான நேச அணியாகப் பயன்படுத்துவது இலங்கையில் ஒரு பாரம்பரியமாகவே இருந்துவருகிறது. 

  சிறுபான்மை இனத்தவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான முன்னரங்கப் படையாக மகாசங்கம் விளங்குகிறது.

 இலங்கையின் சுயாதிபத்தியம் அல்லது இறைமை அல்லது ஆட்புல ஒருமைப்பாடு என்பதை அரசுக் கட்டமைப்பு மீதான சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்பதை தவிர வேறு எதுவுமாக பெரும்பாலான  பிக்குமார் விளங்கிக்கொண்டிருப்பார்கள் என்று நம்புவதற்கில்லை.

   இன உறவுகளைப் பொறுத்தவரை, சிங்களவர்கள் மத்தியில் நிலவும் சிந்தனைக் குழப்பம், செயல் குழப்பம் ஆகியவற்றுக்கு  சிங்கள பௌத்த சிந்தனையில் ஒழுக்க நியாயப்பாரம்பரியம் ஒன்று இல்லாதமை ஒரு முக்கிய காரணமாகும் என்று முற்போக்கு சிந்தனையுடைய வரலாற்றாசிரியர்கள் கூறியிரு்கிறார்கள்.

  இலங்கையின் மாபெரும் வரலாற்றுப் பதிவேடான மகாவம்சம் ஒரு பௌத்த மதகுருவினால் எழுதப்பட்டதேயாகும். சிங்கள பௌத்தர்களின் இனரீதியான சிந்தனைக்கு மகாவம்சம் பெரிதும் பொறுப்பு என்று வேறு எவரும் அல்ல மதிப்புக்குரிய சிங்கள கல்விமான் கலாநிதி ஈ.டபிள்யூ. அதிகாரம் எழுதியது பதிவில் இருக்கிறது. மகாவம்சத்தின் பிரதிகளை என்ன செய்யவேண்டும் என்று அவர் கூறியது அதன் கூருணர்வுத் தன்மை கருதி இங்கு தவிர்க்கப்படுகிறது.

  இலங்கை அரசியலில் பௌத்த மதகுருமாரின் பாத்திரம் பெரும்பாலும் எதிர்மறையானதாகவும் பிற்போக்கானதாகவும் இருந்தது.அவர்கள் ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகித்த காலமும் இடைக்கிடை இருந்தது. சில குறிப்பிட்ட புறநடைகள் இருந்தபோதிலும் பிக்குமார் பெரும்பாலும்  கல்வியறிவற்றவர்களாகவும் அறியாமையுடையவர்களாகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. 

  இனக்கலவரங்களின்போது பிக்குமார் தங்களது காவியுடையை உயர்த்திப் பிடித்தவண்ணம் வெறிபிடித்த மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கிச்செல்வதை நாம் அனுபவ வாயிலாகக் கண்டிருக்கிறோம். அத்துடன் இலங்கையில் பெரும்பாலும்  பிக்குமார் புத்தபிரான் போதித்தவாறு உலோகாயதப் பொருட்கள் மீது பற்று இல்லாத வாழ்க்கையை வாழவில்லை.

  இலங்கையில் மகாசங்கம் பெரும்பாலும் எதிர்மறையான பாத்திரத்தையே வகித்திருக்கிறது. சிங்கள மக்கள் மகாசங்கத்தின் செல்வாக்கில் இருந்து விடுபடாத பட்சத்தில் இலங்கையின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும். அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர்காலமே இல்லை.

 ( வீரகேசரி வாரவெளியீடு)

 

https://arangamnews.com/?p=10112

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.