Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோழர்கள் ஆட்சியில் மழை, வெள்ளம்: பேரிடர்களைத் தவிர்க்க உதவிய நுட்பமான நீர் மேலாண்மை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சோழ மன்னர்கள்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன்.க
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஒவ்வோர் ஆண்டும் பருவ மழை பெய்வது வழக்கம். அந்த மழை நமக்கு ஒரு வரலாற்றுப் படிப்பினையைத் தொடர்ந்து கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.

ஓரிரு நாட்களில் பெய்த அதிகனமழை சென்னையைப் புரட்டிப்போட்டு விட்டது. இயற்கை நமக்கு வகுத்துக் கொடுத்த முறைகளை நாம் சரியாகப் பின்பற்றாததுதான் இது போன்ற பேரிடர்களுக்கு காரணம் என்கின்றனர் இயற்கையியலாளர்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. அவற்றுள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 124 ஏரிகளும், 34 கோவில் குளங்களும் உள்ளன. இதில் ஏரிகளின் மொத்த கொள்ளளவு சென்னை மாநகர பரப்பளவில் 5.5 சதவீதமே ஆகும்.

பழங்காலத்தில் சோழ அரசர்கள் நீர் மேலாண்மையை வெகு லாகவமாக கையாண்டு தண்ணீரைப் பாதுகாத்து விவசாயத்திற்கு, குடிநீருக்கு என திட்டமிட்டுப் பயன்படுத்தி வந்தார்கள். இருப்பினும், சில நேரங்களில் ஏற்படும் புயல் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுமானங்களையும் நீர் வழித் தடங்களையும் வைத்திருந்தார்கள்.

தற்போது சென்னையில் பெய்த புயல், மழை, வெள்ளம் போன்ற தாக்குதல்கள் பழங்காலத்தில் ஏற்பட்டபோது என்ன செய்தார்கள், எப்படி அவர்கள் மக்களை பாதுகாத்தார்கள் என்பது குறித்து இதில் விரிவாக பார்ப்போம்.

கல்வெட்டு ஆய்வாளரும், வரலாற்று எழுத்தாளருமான குடவாயில் பாலசுப்பிரமணியன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "முன்னோர்கள் குறிப்பாக சோழர்கள் நீர் மேலாண்மையில் நிபுணர்களாகவே விளங்கினார்கள் என்ற போதிலும் புயல், மழை காலத்தில் சில நேரங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையும் கல்வெட்டுகளாக பதிவு செய்து வைத்தார்கள்," என்று கூறினார்.

 

825 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பெருமழை

சோழ மன்னர்கள்

மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12ஆம் ஆட்சி ஆண்டில் அதாவது 825 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை மண்டலத்தில் மிக கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக அன்றே காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள சோமங்கலம் ஊரில் இருந்த பெரிய ஏரியின் கரையில் ஏழு இடங்கள் உடைந்து வெள்ளம் பெருகி ஊர் சீர்குலைந்தது என்று குறிப்பிடுகிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

அவர் கூறியதன்படி, அந்த உடைப்புகளை திருச்சுரக் கண்ணப்பன் திருவேகம்படையார் கம்பமுடையான் காமன் கண்ட வானவன் என்பவன் அடைத்து ஏரிக்கரையைப் பலப்படுத்தினான். தொடர்ந்து அடுத்த ஆண்டும் பெருமழை வெள்ளத்தால் அதே ஏரி நிரம்பி உடைந்தது, மீண்டும் திருவேக கம்பமுடையான் அவற்றை அடைத்து சீர் செய்தான்.

மேற்கொண்டு விளக்கியவர், "அதற்கு அடுத்த ஆண்டு முதல் அது பலப்பட்டு நின்றது. அது தொடர்ந்து நடைபெற வேண்டும் எனக் கருதி அவன் சோமங்கலத்து ஊர் சபையோரிடம் 40 பொற்காசுகளை ஏரி பராமரிப்பிற்காக நிரந்தர வைப்புத் தொகையாக அளித்தான்.

அதைப் பெற்ற சபையோர் அந்த வைப்புத் தொகையை வட்டிக்கு ஈடாக 12 பிடி என்ற பரப்பளவுடைய குழிக்கோலால் 40 குழி நிலத்தை ஆண்டுதோறும் தோண்டி ஏரிக்கரையைப் பலப்படுத்த ஒப்புக்கொண்டனர். இதுபோல் இன்னும் பல கல்வெட்டுகள் உள்ளன.

அதுபோன்று பெருமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏரி உடைந்து ஊர் நிலங்கள் அனைத்தும் பாழ்பட்ட பின்பு பெரும் பஞ்சம் ஏற்பட்ட போதும், தாம் வைத்திருந்த நகைகளையும் சொத்துகள் முழுவதையும் சீரமைப்புப் பணிகளுக்காகக் கொடுத்து நீர்நிலைகளையும் ஊரையும் மங்கையர்கரசியார் என்ற பெண்மணியும் அவரது சகோதரர் நாற்பத்தெண்ணாயிரம்பிள்ளை என்பாரும் காத்தனர," என்று குறிப்பிட்டார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

அவர்கள் அளித்த கொடைகள் பற்றிய செய்திகளை திருவண்ணாமலை கோவிலில் உள்ள மூன்று சோழர் கால கல்வெட்டு சாசனங்கள் எடுத்துக் கூறுவதாகவும் அவர் கூறினார்.

 

வெள்ளத்தைத் தடுக்க நாணல்

குடவயல் பாலசுப்பிரமணியன்

அதேபோல், விஜய நகர மன்னர்கள் காலத்தில் திருச்சி திருவரங்கம் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் அழிவைத் தடுப்பதற்காக ஒளக்கு நாராயண திருவேங்கடய்யங்கார் என்பவர் திருவரங்கத்தின் மேற்கு கரைக்கு எந்திர ஸ்தாபனம் செய்தும் அய்யனார் உருவச்சிலை அமைத்தும் காவிரி ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தின் வேகத்தைக் குறைக்க வடகரையில் நாணலை நட்டதாகவும் விஜயநகர மன்னர் சதாசிவராயரின் திருவரங்க கோவில் கல்வெட்டு தெரிவிக்கின்றது.

தஞ்சை பெரிய கோவிலின் மிகச் சிறந்த வடிகால் அமைப்பு

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமான அற்புதங்களில் ஒன்று அதன் வடிகால் கட்டமைப்பு. எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அந்தக் கோவிலில் நீர் தேங்குவதைப் பார்க்க முடியாது என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

அதுகுறித்து விவரித்தவர், "கோவிலின் உள்ளே இருக்கும் வடிகால்கள் கோவிலில் உள்ள நீரை வெளிப் பிரகாரம் வழியாக அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாம் அதை நேரில் காண முடியும். அதேபோல் சோழர்கள் காலத்தில் சாலைகள் நடுவே மேடாகவே வடிவமைக்கப்பட்டன. இதனால் மழை பொழியும்போது சாலை பயணமும் தடைப்படவில்லை.

நீர்நிலைகளை நோக்கிய மழை நீரின் பயணமும் தடைப்படவில்லை. சோழர்கள் தங்கள் உட்கட்டமைப்புகளை வடிவமைக்கும்போது நீர் மேலாண்மையை மனதில் கொண்டே திட்டமிட்டுச் செயல்பட்டனர்.

ராஜராஜசோழன் காலத்தில்தான் நீர்நிலைகளை உருவாக்கி பாதுகாக்கவும், நீரை சமமாகப் பங்கிடவும் ஆயக்கட்டு என்ற கிராம சபை அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழக வரலாற்றில் மிகப் பிரமாண்டமான ஏரிகள் வெட்டப்பட்ட காலம் என்று சோழர்கள், அதிலும் குறிப்பாக ராஜராஜன் காலத்தைக் கூற முடியும். தொழில்நுட்பத்தின் முன்னோடி இராஜராஜ சோழன்," என்று அவர் கூறினார்.

 
தஞ்சை பெரிய கோவிலின் மிகச்சிறந்த வடிகால் அமைப்பு

சோழர்களின் நீர் மேலாண்மை குறித்து விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் பிபிசி தமிழிடம் பேசினார்.

அப்போது அவர், "ஒரு நாட்டின் வளமையும், வலிமையும் நீர் ஆதாரங்களைப் பொறுத்தே அமைகிறது. சங்க காலம் தொட்டே நீர்நிலைகள் பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன. பல்லவர்கள் மற்றும் பாண்டியர்கள் ஏரி, குளம், கிணறு ஆகிய நீர் ஆதாரங்களை உருவாக்கி பாதுகாத்ததை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன," என்று தெரிவித்தார்.

"பல்லவர் காலத்தில் மகேந்திர தடாகம், சித்திரமேக தடாகம், பரமேஸ்வர தடாகம், வைரமேக தடாகம் போன்ற பல ஏரிகள் உருவாக்கப்பட்டன. பாண்டியர்களின் காலத்தில் புள்ளனேரி, எருக்கங்குடி ஏரி, திருநாராயண ஏரி, மாலங்குடி பெருங்குளம், மாறனூர் பெருங்குளம் போன்ற ஏரிகள் மற்றும் குளங்கள் ஏற்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சோழர்கள் காலத்தில் பல ஏரிகள், குளங்கள், கிணறுகள் வெட்டப்பட்டதோடு பழைய நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டதை கல்வெட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. வீரநாராயண பேரேரி (வீராணம்), கண்டராதித்த பேரரி, செம்பியன் மாதேவி பேரேரி, போன்ற பல நீர் நிலைகளை உருவாக்கினர்."

மேலும், அவற்றைத் தொடர்ந்து தூர்வாரி முறையாகப் பராமரித்து நீரை சேமித்து அதைப் பாசனத்திற்கும் பயன்படுத்தினார்கள். மேலும் நீர்நிலைகள் பராமரிப்பிற்கு என்று குழுக்கள் அமைக்கப்பட்டதையும் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிவதாகவும் பேராசிரியர் ரமேஷ் கூறுகிறார்.

 

முட்காடுகளை அழித்து ஏரி

தஞ்சை பெரிய கோவிலின் மிகச்சிறந்த வடிகால் அமைப்பு

"கி.பி. 871இல் விஜயாலய சோழன் ஆட்சிக் காலத்தில் ஜம்பை அருகே உள்ள பள்ளிச்சந்தல் என்னும் ஊரில் வானர்குல சிற்றரசர் சக்கன் வைரி மலையன் என்பவர் தனது பெயரில் சமண பள்ளிக்குரிய பள்ளி நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக ஒரு ஏரியை அமைத்தார்."

அதைப் பராமரிப்பதற்காக முட்காடுகளை அழித்து நிலத்தைத் திருத்தி ஏரிப்பட்டியாக வழங்கியதை கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இதன் மூலம் ஏரி பராமரிப்பிற்காக தனியாக நிலம் வழங்கி அதை ஏரிப்பட்டியாக அளித்ததையும் ஜம்பை கல்வெட்டு தெளிவாக உணர்த்துவதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ்.

ஜம்பை கோவிலின் அர்த்த மண்டபத்தின் தெற்கு சுவர் பகுதியில் உள்ள மற்றொரு கல்வெட்டு ராஜராஜனின் 24ஆம் ஆண்டு கல்வெட்டு எனக் குறிப்பிடுகிறார் அவர்.

அதில் "சிற்றரசன் இராச ராச வான கோவரையன், அரையர் காளாதித்த பேரேரி என்ற ஏரி ஒன்றை வெட்டி வைத்ததைக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் நெற்குன்றமாகிய வைரமேக சதுர்வேதி மங்களத்து சபையோர் குளம் வெட்டுவதற்கான நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கு சமமான வேறு நிலம் கொடுத்த ஒப்பந்தத்தையும்" கூறுகின்றது.

 

ஓடத்தைப் பயன்படுத்தி தூர் வாரிய நிகழ்வு

முட்காடுகளை அழித்து ஏரி

இவை மட்டுமின்றி, திருச்சி மாவட்டம் நங்கவரம் கல்வெட்டு குளம் தூர்வரப்பட்டதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலைத் தெரிவிக்கின்றது. குளத்தில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து ஆழப்படுத்துவதற்காக பணியாட்களும், ஓடங்களும் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகிறதாகத் தெரிவ்கத்தார் பேராசிரியர் ரமேஷ்.

"அதாவது 6 பேர் ஓடத்தை இயக்கி கூடையைக் கொண்டு 140 கூடை எண்ணிக்கையில் குளத்தில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து வந்து குளத்தின் உச்சிக் கரையில் கொட்டுவதற்கு 6 பேருக்கு ஓராண்டுக்கு 320 களம் நெல்லும், சோறு மற்றும் ஆடையும் அளிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது.

இதற்கான ஓடத்தை செய்வதற்கு தச்சன், கொல்லன் ஆகிய இருவருக்கும் இரு களம் நெல்லும், மரம் கொடுக்கும் வலையருக்கு இரு களம் நெல்லும், குளத்தைக் கண்காணிக்கும் கண்காணி இருவருக்கு 45 களம் நெல்லும் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது."

இந்த ஏற்பாட்டை அந்த ஊர் சபையோரே பயிர் செய்து தரவேண்டும் என்றும் இதைச் செய்யத் தவறினால் சபையோர் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று அவர்களே உறுதிமொழி அளித்ததை கல்வெட்டு தெரிவிப்பதாகவும் விளக்கினார் அவர்.

"இதேபோன்று காப்பலூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு முதலாம் பராந்தக சோழன் காலத்தில் ஓடம் தரப்பட்டதை கல்வெட்டு கூறுகின்றது. இதன்மூலம் சோழர் காலத்தில் ஓடங்களை பயன்படுத்தி தூர்வாரியதை அறிய முடியும்," என்கிறார் ரமேஷ்.

 

ஏரி மதகு பாதுகாப்பு

புயலை எப்படி மன்னர்கள் எதிர்கொண்டார்கள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூர் பெருமாள் கோவிலில் உள்ள உத்தம சோழனின் கல்வெட்டு இந்த ஊர் ஏரியின் மதகை பராமரிப்பதற்காக வோசாலிப்பாடி புடைப்பாக்கத்தைச் சேர்ந்த சாத்தன் மல்லடிகள் என்பவரிடம் ஏரி பாய்ச்சல் நிலத்தில் விளைந்த நெல்லை ஒவ்வொரு போகத்திற்கும் ஒரு தூணி அளவு கொடுக்க வேண்டும் என்றும் மேலும் நிலத்தை விற்று இந்த ஊர் சபையினர் கொடுத்ததையும் ஒரு தெரிவிப்பதாக விவரித்தார் பேராசிரியர் ரமேஷ்.

"ராஜராஜ சோழன் காலத்தில் நீர்ப்பாசனத்திற்காகத் தோண்டப்பட்ட குளங்களை ஆண்டுதோறும் பராமரிப்பதற்காக நிலங்களை வழங்கி அதிலிருந்து விளையும் நெல் வருவாயைக் கொண்டு பராமரித்தனர். இவ்வாறு அளிக்கப்பட்ட நிலம் ஏரிப்பட்டி, குளப்பட்டி என்றும் அழைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் திருவிளாங்குடி கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு குடிகாடு குளம் என்னும் ஏரி உடைந்து முள்காடு மண்டி கிடந்ததையும் அந்தக் காடுகளை அழித்து குளத்தை ஆழப்படுத்தி கரையைக் கட்ட வேண்டும் என்றும் ஊர் சபை சோழ அதிகாரியான உத்தம சோழ நல் உடையானிடம் விண்ணப்பித்து இந்த ஊர் ஏரியில் கூடி முடிவெடுத்து ஏரியிலிருந்து முட்காடுகளை அழித்து தூர்வாரி கரைகட்டி அதைப் பராமரிக்க நிலதானம் வழங்கியதையும் தெரிவிக்கின்றது."

 

ஏரி தூர்வார வயது வரம்பு... கட்டுப்பாடு...

புயலை எப்படி மன்னர்கள் எதிர்கொண்டார்கள்

முதலாம் ராஜேந்திர சோழனின் பாகூர் கல்வெட்டு கடம்பனேரியை தூர்வாருவதை விரிவாக தெரிவிப்பதாக பேராசிரியர் ரமேஷ் குறிப்பிட்டார்.

"அழகிய சோழன் என்னும் மண்டபத்தில் நீலன் வெண்காடன் என்ற அதிகாரி உடனிருக்க மக்கள் பெருமளவில் கூடி ஏரி வரி மற்றும் தூர்வாருதல் பற்றி முடிவு செய்ததைக் குறிப்பிடுகின்றது. இந்த ஊர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து இந்த ஊரில் பயிர் செய்வோரும் ஏரி வரியைச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஏரியைத் தூர்வார வேண்டும் என்றும் அதன் அளவைத் துல்லியமாக அளவிட்டு உள்ளது.

நான்கு சான் அளவுள்ள அளவுகோலால் இரண்டு கோலுக்கு இருகோல் அகலமும் ஒரு கோல் ஆழமும் கொண்ட ஒரு குழி தோண்ட வேண்டும் என்றும் குழி தோண்டுபவர்களுடைய வயது வரம்பு 10 வயதிற்கு மேல் 80 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

தோண்டாத நபர்களிடமிருந்து ஏரி வாரிய நிர்வாகிகள் தண்டப்பணம் வசூலிக்க வேண்டும் எனவும் அவ்வாறு வசூலிக்காத ஏரி வாரிய நிர்வாகிகளிடம் இருந்து ஆணையை மீறியவர்கள் என்று கல்வெட்டு துல்லியமாகத் தெரிவிக்கின்றது எனவும் ரமேஷ் தெரிவித்தார்.

"நீர் நிலைகளின் கரைகளில் மரம் வளர்த்து கரையை மண் சரிவு ஏற்படாமல் பாதுகாத்து வந்துள்ளனர். கரைகளில் உள்ள மரங்களை வெட்டுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் கீரனூரில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு நீர்நிலைகளையும் அவற்றின் கரைகளில் உள்ள மரங்களையும் அழிக்க மாட்டோம் என்று உறுதிமொழி கூறியதைக் கூறுகின்றது.

அதாவது தங்களுக்குள் எவ்வித பகையோ மோதலோ வந்தாலும் ஊரில் உள்ள ஏரி, வயலில் உள்ள கிணறுகள் குளக்கரையில் உள்ள மரங்கள் இவற்றை அழிக்கவோ வெட்டவோ கூடாது என்றும் அதையும் மீறி அழிப்பவர்கள் நிலத்தை தண்டமாகச் செலுத்த வேண்டும் எனவும் கல்வெட்டு தெரிவிக்கின்றது.

இதுபோல் சோழர்கள் காலத்தில் நீர் நிலைகளை ஏற்படுத்தி மழை நீரை சேகரித்தும் பாதுகாத்தும் பராமரித்தும் பயிர்த் தொழிலுக்கு மட்டுமல்லாது குடிநீருக்காகவும் பயன்படுத்தி உள்ளார்கள். மேலும் வெள்ளப் பெருக்கெடுக்கும் காலத்தில் நீர் வழித் தடத்தைச் செப்பனிட்டு வந்ததால் பெருமளவு வெள்ள பாதிப்பின்றி அவர்களால் மக்களைப் பாதுகாக்க முடிந்தது," என்று கூறி முடித்தார் ரமேஷ்.

புயலை எப்படி மன்னர்கள் எதிர்கொண்டார்கள்

மழை, புயல், வெள்ளம் என இயற்கை சீற்றங்கள் பழங்காலத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் அதுகுறித்த கல்வெட்டுகள் தென்னிந்தியா முழுவதும் காணப்படுவதாகவும் கூறுகிறார் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளரும் அம்மாவட்டத்தின் வட்டாட்சியருமான பாலசுப்பிரமணியன்.

"மூன்றாம் ராஜராஜனின் திருமழப்பாடி கல்வெட்டில் வேளாண் என்பவன் திருமழப்பாடி கிராமத்தை கொள்ளிட ஆற்றின் வெள்ளத்தால் சேதம் உண்டாகாமல் தடுப்பதற்காக அதன் தென்பகுதியில் கரையமைத்து ஊரைக் காப்பாற்றியதைத் தெரிவிக்கிறது.

விக்ரம சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் வெள்ளம் ஏற்பட்டு ஊர் அழிந்ததை வட ஆற்காடு மாவட்டம் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோவில் கல்வெட்டு மூலம் அறியலாம்.

காடவராயர்கள், கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி, புதுச்சேரி திருபுவனை ஏரி, ஒழுகரை ஏரி, திருக்கோவிலூர் அருகே கொளத்தூர் ஏரி எனப் பல இடங்களிலும் ஏரிகள் வெட்டி அதைப் பாதுகாத்து வந்ததை கோப்பெருஞ்சிங்கன் கால கல்வெட்டு மூலம் அறிய முடியும்.

கோப்பெருஞ்சிங்கனின் எட்டாம் ஆட்சியாண்டு காலத்தில் திரிபுவனமாதேவி ஏரியில் பெருவெள்ளம் ஏற்பட்டு மதகு உடைந்து அழிவு ஏற்பட்டதையும் அதை சீர்செய்து கரையை நன்றாகக் கட்டியதையும் கல்வெட்டு செய்தி உணர்த்துகின்றது," என்று விளக்கினார் அவர்.

 

பிட்டுக்கு மண் சுமந்த கதை...

புயலை எப்படி மன்னர்கள் எதிர்கொண்டார்கள்

மேலும், "முதல் பராந்தகன் காலத்தில் திருப்பாற்கடலில் பெரு மழையால் ஏற்பட்ட ஏரி உடைப்பை அடைப்பதற்காக 30 களஞ்சி பொன் ஏரி வாரிய பெருமக்களிடம் கொடுக்கப்பட்ட செய்தி கல்வெட்டு மூலம் அறியலாம்.

ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்கள், கரைகள், பெரும் புயல் மழை வெள்ளத்தால் உடையும்போது அவை உடனடியாகச் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. அதற்கு பெருமளவிலான மனித உழைப்பு அந்தக் காலத்தில் தேவைப்பட்டது.

அப்போது ஒவ்வொரு குடும்பமும் அல்லது ஒவ்வொரு நில உடமையாளரும் தாங்களே இலவச கட்டாய சேவையாக வேலையாட்களை அத்தகைய பணிகளுக்கு அனுப்புவது மரபு. இப்படி நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியின் அடிப்படைதான் திருவிளையாடல் புராணத்தில் குறிக்கப்படும் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியாகும்," என்று விவரிக்கிறார் பாலசுப்பிரமணியன்.

அதுமட்டுமின்றி, "ராஜராஜனின் 20ஆம் ஆட்சியாண்டு காலத்தில் திருவண்ணாமலை உடையார் கோவில் பகுதியில் பல இடங்களில் ஆறு, ஏரிக் கரைகள் உடைந்து கிடந்ததை கல்வெட்டு செய்தி தெளிவாக உணர்த்துகின்றது.

சந்திரமௌலி ஆற்றில் வந்த பெரும் வெள்ளத்தால் ஊருக்கு சேதம் ஏற்படாமல் இருப்பதற்காக திருமறை காடுடையான் என்பவன் ஆற்றின் போக்கையே மாற்றியுள்ளான். இது தொடர்பான கல்வெட்டு திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ளது.

மேலும், அக்காலத்தில் ஏரி, ஆறு என நீராதாரங்கள் குறித்த தெளிவும் புரிதலும் அரசர் முதல் மக்கள் வரை அனைவரிடத்திலும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதனால்தான் அதற்கு வாரியம் அமைத்து பாதுகாத்துப் பயன்படுத்தி வந்தனர், என்கிறார் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியன்.

https://www.bbc.com/tamil/articles/c8v8z353m4qo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.