Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழ் புத்தாண்டு" / பகுதி: 01
 
 
"தமிழ் புத்தான்டு, சிக்கலாகி போனது
ஜனவரியா? ஏப்ரலா? ஒரே முழக்கம்
என்னைக் குழப்பி, தடுமாற்றிப் போனது
வாழ்த்துச் சொல்ல, தடுத்துப் போனது!"
 
"பட்டிமன்றம், விவாதம், பல கேள்விகள்
தையா? சித்திரையா? ஒரே அலசல்
சித்திரை ஒரு மத விழா?, தையோ
ஒருங் கிணைக்கும் தமிழர் விழா!"
 
"கொஞ்சம் மறந்து, இன்று கொண்டாடுவோம்,
பழையன கழியட்டும், புதியன மலரட்டும்
இனிப்புடன் காக்கை கரைதலும் கேட்கட்டும்
வசந்தம் வீசட்டும், புத்தாண்டு வாழ்த்துக்கள்!"
 
 
தமிழ் புத்தாண்டு ஜனவரி [தை] 14 /15 /16 அல்லது ஏப்ரல் [சித்திரை] 14 /15 /16 என்பதில் ஒரு கருத்து மாறுபாடு காணப்படுகிறது. பல ஆண்டுகளாக நாம் தமிழ் மாதம் சித்திரை முதலாம் திகதி புத்தாண்டை கொண்டாடுவது ஒரு பாரம்பரியமாக இருந்துள்ளது. என்றாலும் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம்?. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள்.
 
இந்தியாவில் / அதன் பின் தென்னாட்டில், ஆரியர்களின் ஊடுருவலால், தமிழரின் சைவ மதம் இந்து மதத்திற்குள் உள்வாங்கப் பட்டதால், இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலை நிறுத்தப் பட்டது எனலாம். அதனால் தான் இன்னும் ஆண்டின் பெயர்கள் வட மொழி பெயர்களாகக் காணப் படுகின்றன. 60 ஆண்டுகள் எப்படி உருவாகின என்பதற்கு ஒரு அழகான புனைகதை முன்வைக்கப் படுகிறது. இதன் விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். சென்னையில் வாழ்ந்த ஆ.சிங்காரவேலு முதலியார் (1855-1931) அபிதான சிந்தாமணி எனும் இலக்கிய கதைக்களஞ்சிய நூலை 1910-ல் வெளியிட்டார். அவரது மகன் 1934-ல் இரண்டாம் பதிப்பு வெளியிட்டபோது இந்தக் கதை அங்கு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
 
எனினும், இந்த ஆரியக் கதையை தவிர்த்து, இந்த 60 ஆண்டுகள் நாட்காட்டி [காலண்டர்] முறையை ஆய்வு செய்யும் பொழுது, இது காலத்தைப் பற்றிய மனித அறிவின் பரிணாம வளர்ச்சிப் பாதையில் ஒரு கட்டமே என நாம் கருதலாம். இன்றைய இராக் [Iraq] எனப்படுகிற நாட்டின் தென் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் [திராவிடர்களின்] மூதாதையர் என கருதப்படும் சுமேரிய மக்களும் 60 வருடங்கள் கொண்ட ஒரு முறையை பயன்படுத்தி யுள்ளனர். அதே போல, இன்றைய மத்திய அமெரிக்காவை சேர்ந்த மெக்சிகோ, கவுதமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில், கி.மு., 2500 முதல் கி.பி., 950 வரை வாழ்ந்த, மாயன் நாகரிக மக்களும் 60 ஆண்டுகள் சுழற்சி முறையைப் பயன்படுத்தி யுள்ளனர் எனவும் தகவல்கள் உள்ளன. அது மட்டும் அல்ல, இந்த மாயன்களால், 'குக்கிள்கான்'[குகுல்கன் அல்லது குவெட்சால்கோட்டில் / Kukulcan or Quetzalcoatl / Maya snake deity, பாம்புக் கடவுள், the Mayan’s supreme god] என்னும் அவர்களுடைய கடவுளுக்காகக் சிசேன் இட்ஷா பிரமிட் [சிசென் இட்ஸா / Chichen Itza pyramid] கட்டப்பட்டது.
 
உண்மையில் இந்தக் குக்கிள்கான் / குகுல்கன் ஒரு கடவுள் அல்ல, அவர் கிழக்குப் பக்கத்தில் இருந்து கப்பல் மூலம் மாயன்களிடம் வந்து சேர்ந்த ஒருவர் என்று கருதப்படுகிறது. இந்தக் குக்கிள்கான் / குகுல்கன் தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். வெளிரிய மங்கலான தோற்றமும் தாடியும் கொண்ட இந்த குகுல்கன் அல்லது குவெட்சால்கோட்டில் அல்லது எவராயினும், இவர் ஒருவர் அல்ல, அதிகமாக பல நபர்களை கொண்ட ஒரே இனத்தை சேர்ந்த ஒரு கூட்டம் என கருதப் படுகிறது. பண்டைய மாயன் மக்களின் சிலம் பலம் (Chilam Balam / அவர்கள் மொழியில் சிறுத்தையை "பலம்" என்றும், சிலம் என்பதை பூசாரி என்றும் சொல்வார்கள்.) என அழைக்கப் படும் மத புத்தகம், மெக்ஸிகோ நாட்டின் உள்ள யுகடான் [Yucatan] பகுதியினை வாழிடமாக கொண்ட முதல் மக்கள், நாக மக்களென்றும் [நாகர் / People of the serpent] அவர்கள் கிழக்கில் இருந்து படகில் அங்கு தமது தலைவர் இட்ஸாமானவுடன் [Itzamana] வந்தவர்கள் என்கிறது. அப்படிக் கிழக்கில் இருந்து வந்தார் என்றால், எங்கிருந்து வந்திருப்பார் என்று பார்த்தால், அந்த கால பகுதியில், இரண்டே இரண்டு விடைகள் தான் உண்டு. ஒன்று அவர் சுமேரியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது தமிழர்களின் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்பவையே அவை ஆகும். என்றாலும் பத்து வருடம் அங்கு தங்கி இருந்து ஆட்சி செய்த பின், அவர்கள் வந்த வாறே, அவர்கள் சூரியன் உதிக்கும் திசை நோக்கி மறந்து போனார்கள் என்கிறது.
 
சீனாவிலும் இந்த 60 வருட சுழற்சி முறை இன்னமும் புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. எது எப்படி ஆயினும், 1921 ஆண்டிலும் அதன் பின்பும் தமிழ் அறிஞர்களால் தை பொங்கலே தமிழர் புத்தாண்டு என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள் பலர் 1921 இல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒருங்கே கூடி ..... . தமிழ் ஆண்டு பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்! மறை மலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. க, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பலர் ஒன்று கூடி இந்த ஆய்வு நடைப் பெற்றது.! ஆனால், அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? என்பது இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை! இறுதி அறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அதில் சொல்லியிருப்பது :
 
 
* இப்போது சொல்லப்படும் பிரபவ - விபவ என்னும் அறுபதாண்டுகள், தமிழ் அல்ல!
 
* திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! - அதையே தமிழ் ஆண்டு என இனிக் கொள்ள வேண்டும்!
 
* திருவள்ளுவர் காலம் கி.மு. 31= எனவே ஆங்கில ஆண்டுடன் 31- ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு!
 
எனினும் திருவள்ளுவர் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்ததற்கு வாய்ப்பில்லை என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற நூலில் செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் கூறுகிறார். திருக் குறளின் மொழி, முந்தைய நூல்களின் மேற்கோள் காட்டல், வட மொழிச் சொற்களின் பயன்பாடு, சமண மதத்தின் தாக்கம் ஆகியவைகளை வைத்துப் பார்க்கையில் திருக்குறள் சங்கக்காலத்திற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயம் நாம் உணரலாம். ஆகவே சரியாக திருக்குறளின் காலத்தைக் கணிப்பது மிகக் கடினமானதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் இன்னும் இருக்கிறது?
 
மீண்டும் சில ஆண்டுகள் கழித்து, திருச்சி அகிலத் தமிழர் மாநாடு என்ற பெயரில் பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் ஒரு மாநாடு நடை பெற்றது. இதில் கா.சுப்ரமணியனார், மதுரைத் தமிழவேள், பி.டி. இராசன், தெ.பா. மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப.சாமி, திரு வி.க. மறைமலை அடிகள, தந்தை ஈ.வெ.ரா.பெரியார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
மேலும் ஏப்ரல் 14 ஐ, பொதுவாக இந்து புத்தாண்டு [Hindu New year] என்றே கூறுகிறார்கள். இலங்கை நாட்காட்டியில் இந்து, சிங்கள புது வருடம் என குறிக்கப்பட்டு இருப்பதையும் கவனிக்க. அது மட்டும் அல்ல, இது, இந்து , புத்த புது வருடம் என குறிக்கப்படவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இது ஏன் என்றால் வேறு நாடுகளில் உள்ள மற்ற பவுத்தர்கள் தங்களுக்கு என வேறு புது வருட திகதிகள் வைத்திருப்பதால் ஆகும்.
 
இந்துக்களால் நம்பப்படும் புராணத்தை இனி இங்கு சற்று விரிவாக ஞாபகப்படுத்துவது நல்லது என நம்புகிறேன். ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை நோக்கி, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "என்னுடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால் , நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து வாழ விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம். பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் வாழ்ந்து, அறுபது மகன்களைப் பெற்றார். பிராமண, ஆரிய சமூகம் எவ்வளவு தூரம் ஆணை மையமாக கொண்ட , தந்தை வழிச் சமூகம் என்பதை இது தெட்டத் தெளிவாக காட்டுகிறது. இந்த அறுபது பிள்ளைகளிலும் ஒரு மகள் - பெண்-கூட கிடையாது?.
 
தொண்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளன ….. இவற்றுக்கு நிகரான தந்தை தெய்வங்கள் இருந்ததில்லை … .. உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வமான கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள். சிலப்பதிகார காலம் வரை இவள் தான் பிரதான கடவுளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போன தெல்லாம் காலப் போக்கில் ஏற்பட்ட பரிணாமம்.
 
இந்த நாரதர் பெற்ற அறுபது மகன்களும், 'பிரபவ' [Prabhava] தொடங்கி 'அட்சய' [Akshaya] வரை பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது. இந்த கதை உண்மையோ பொய்யோ என்பதை விட , இப்படியான அருவருக்க தக்க வரலாற்றின் அடிப்படையில் புத்தாண்டை நிர்ணயிப்பது, அறிவியல், பொது விவேகம் இவைகளுக்கு ஏற்புடையவை அல்ல. அது மட்டும் அல்ல இந்த 60 பெயர்களும் தமிழ் பெயர் அல்ல. அப்படியாயின் இது எவ்வாறு தமிழ் புது வருடமாக இருக்கக்கூடும் ?
 
"இப்போது வழங்கும் "பிரபவ' தொடங்கி "அட்சய' ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் வட இந்தியா மன்னன் சாலி வாகனன் என்பவனால் [கி.பி 78 இல்] ஏற்பட்டவை என்பது இன்னும் ஒரு கருத்து. இந்த 60 ஆண்டுகளும் சுற்று ஆண்டுகள். தொடர் ஆண்டுகள் அல்ல. அதாவது 61 ஆவது ஆண்டில் மீண்டும் 1 ஆவது ஆண்டு வந்துவிடும். எனவே எத்தனை யாவது ஆண்டு என்று கணக்கிட முடியாது. உதாரணமாக அட்சய ஆண்டில் பிறந்தவர் இவர் என்று கூறினால், அது எந்த அட்சய ஆண்டு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அட்சய ஆண்டு வந்து விடுகிற தல்லவா? எனவே அவரது வயதைக் கணக்கிட முடியாது. இதனால் சரித்திர முக்கிய நிகழ்வுகளை சரியாக பதிய இயலாமல் போகிறது.
 
மேலும் ஆலயத்தில் இன்னும் புரோகிதர்கள் புரியாத மந்திரங்களை தமிழ் பக்தர்களுக்கு ஓதுவது போல, இந்த பெயர்களும் பிரபவ, விபவ, சுக்ல, பிரமோ தூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசு வாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய .... என போகிறது? அது மட்டும் அல்ல, இந்த ஆண்டுகளின் பெயர்களும் பெருமை படக் கூடியதாகவும் இல்லை.
 
உதாரணமாக, மூன்றாவது ஆண்டின் பெயரான "சுக்கில" ஆண் விந்தைக் குறிக்கிறது, இருபத்து மூன்றாவது ஆண்டான "விரோதி", எதிரி என்பதாகும், முப்பத்து மூன்றாவது ஆண்டின் பெயர் "விகாரி". அழகற்றவன் என்பதாகும், முப்பத் தெட்டாவது ஆண்டு "குரோதி", பழிவாங்குபவன் என்பதாகும், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான "துன்மதி" கெட்டபுத்தி என்பதாகும். உதாரணமாக, ஆண்டுகள் என்பது வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை மேலும் குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.
 
இனி பிந்திய சங்க காலத்தில் தொடங்கிய தமிழ் மாதம் தை ஒன்றின் கொண்டாட்டம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
 
சங்க இலக்கிய படைப்பான பரிபாடலின் படி, திருவாதிரை நோன்பு (விரதம்) கொண்டாட்டத்துடன் இந்த நாள் தொடர்புபடுகிறது. மார்கழி மாதம் முழுவதும் கடவுளை வழி பட்டு, நோன்பு விரதம் இருந்த கன்னிப் பெண்கள், இறுதி நாளான தை ஒன்றில், தை நீராடளுடன் முடிக்கிறார்கள்.
 
கலித்தொகை பாடலின் படி, மார்கழி மாதம் முழுவதும் நோன்பிருப்பது தங்களால் விரும்பத்தக்க சிறந்த தலைவனைப் பெற்று, அவருடன் தங்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்ற ஒரு நம்பிக்கையே என்கிறது. அத்துடன் சூரியனை ஒரு தெய்வமாகவும் இது சொல்லுகிறது.
 
ராஜராஜ சோழன் காலத்தில் தான் பொங்கல் பண்டிகை "புதியீடு" என்ற பெயரில் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். இதை 'புதியீடு விழா' என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
 
மார்கழி மாத நோன்பு விரதமும் தை முதல் நீராடலும் இன்றும் கொண்டாடப் படுகிறது. இந்த உலகியல் சார்ந்த சடங்குமுறையே, 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளையும், மாணிக்கவாசகரையும் திருப்பாவை - திருவெம்பாவை பாட தூண்டியது. சங்க காலத்தில் தைந்நீராடலாக இருந்தது. ஆண்டாள் காலத்தில் மார்கழி நீராடலாக மாறியது. திருவெம்பாவை - திருப்பாவை தமிழ் நாட்டில் தோன்றிய காலத்தில் இந்த நோன்பு மார்கழித் திங்களிலேயே நடைபெற்றது.
 
திருப்பாவையில்,
 
''மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் ''
 
பாவை நோன்பை கடைப்பிடிப்பதற்காக அதிகாலையில் துயில் கலைந்து எழுந்த ஆண்டாள், தனது தோழியரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு நீராடச் செல்வதற்க்காக, அவர்களைப் பார்த்து,
 
"அழகிய ஆபரணங்களை அணிந்த கன்னிப் பெண்களே! வளமும் சிறப்பும் மிக்க ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமியரே! மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், முழு நிலவு வீசும் பௌர்ணமி நன்னாளில், பாவை நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்பு கின்றவர்கள், என்னுடன் வாருங்கள், நாம் ஒன்றாக போகலாம் என்கிறாள்.
 
திருவெம்பாவையில்,
 
'' போற்றியாம் மார்கழி நீர்
ஆடேலோர் எம்பாவாய் ''
 
இறைவன் திருவடிகளே எம்மை ஆட்கொள்ளும் பொன்னடிகள். அதைப் போற்றி மார்கழி நீர் ஆடுவாய் என மாணிக்கவாசக சுவாமிகள் அறை கூவல் விடுகிறார்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 02 தொடரும்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"தமிழ் புத்தாண்டு" / பகுதி: 02
 
 
இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையான தமிழ் நூல், தொல்காப்பியம் ஆகும். இது கி.மு 300க்கும் முன்னால் எழுதப் பட்டிருக்கலாம் என கூறப் படுகிறது. அதில் திணைகளைப் பற்றி கூறப் பட்டுள்ளது. திணை என்பது ஒழுக்கம், வாழ்க்கை நெறி என்பதைக் குறிக்கும். ஒழுகுதல் என்பது நன்னெறிகளோடு வாழ்தல் - living in conformity with the laws and normal behaviour - ஆகும். இந்த திணைகள் - முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் - நிலத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடு எனினும், இது பொதுவாக மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.
 
அடுத்து ஒவ்வொரு திணைக்கும் உரிய பொழுதுகள் கூறப்படுகின்றன. பொழுது என்பது காலக் கணக்கு. இன்று ஓர் ஆண்டை நான்கு பருவங்களாகப் பகுக்கின்றனர். அவை, கோடை, இலையுதிர், குளிர், வசந்தம் - Summer, Autumn, Winter, Spring - என்ற நான்கு பருவங்கள் ஆகும். எனவே, ஒவ்வொரு பருவத்துக்கும் மூன்று மாத காலம் உண்டு. நம் முன்னோர்களும் ஓர் ஆண்டைக் கார்காலம், கூதிர்காலம், பனிக்காலம், வேனில்காலம் எனப் பகுத்தனர். ஆனால், தமிழகப் பகுதியில் கார்காலம் எனப்படும் மழைக்காலமும், கூதிர்காலம் எனப்படும் குளிர்காலமும் வெகுசில மாதங்களே நீடிக்க, பனிக்காலமும், வேனில் காலமும் நீண்ட காலம் தொடர்வதைக் கண்ட அவர்கள், பனிக் காலத்தை முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என இரண்டாகவும், வேனில்காலத்தை, இளவேனில் காலம், முதுவேனில் காலம் என இரண்டாகவும் பிரித்தனர். இந்த, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு காலங்களையும் பெரும் பொழுது எனக் கூறினர். இவை ஆறும், ஆவணி தொடங்கி, ஒவ்வொன்றும் முறையே இரண்டு மாதங்கள் கொண்டவை ஆகும். இனி தொல்காப்பியர் தொகுத்த திணை, பெரும் பொழுதை [காலத்தை] பார்ப்போம்.
 
"மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
காரும் மாலையும் முல்லை.
குறிஞ்சி,கூதிர் யாமம் என்மனார் புலவர்."
 
ஆக, கார் காலம் தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்! [இங்கு, என்மனார் புலவர் என மொழிப என ஆசிரியர் கூறியிருப்பதால், இந்தக் காலப் பகுப்பு தொல்காப்பிய விதி அல்ல - தமிழர் மரபு என்பது புரியும்.அதாவது,
 
* முதல் திணை = முல்லை!
* முதற் காலம் = மழைக் காலம்!
 
எனினும் உறுதியாக, இது தான் புத்தாண்டுத் தொடக்கம் என நேரடியாக இங்கு கூறவில்லை? இது திணை வரிசை மட்டுமே! ஆனால் இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாக, தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் என்கிறார். சிம்ம ஓரைக்கு உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆவணி, புரட்டாசி பொதுவாக கார்காலம் என்பர். ஆகவே, நச்சினார்க்கினியரின் உரையின் படி, கார்காலம் அல்லது சிங்க ஓரை (ஆவணி) முதல் மாதம் என்றும், திங்களுக்கு உரிய கடக ஓரை (ஆடி) இறுதி என்று நாம் வெளிப்படையாக கருதலாம்? இங்கு தையும் இல்லை சித்திரையும் இல்லை என்பதை கவனிக்க.
 
அதே போல, சோழப் பேரரசு காலத்தில், கி.பி 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளில், உருவாக்கப் பட்ட, நிகண்டுகளிலும் [thesauruses], சூடாமணி நிகண்டு, திவாகர நிகண்டு போன்றவற்றில் ஆவணியே முதல் தமிழ் மாதமாக கூறுகிறது. உதாரணமாக, 'காரே , கூதிர், முன்பணி, பின்பணி, சீர் இளவேனில், முதுவேனில் என்றாங்கு இருமூன்று வகைய பருவம் அவைதாம் ஆவணி முதலா இரண் டிரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே.' என்று திவாகர நிகண்டு பாடுகிறது. இப்பாடல் கார் முதலிய ஆறு பருவங்களையும் முதலில் குறிப்பிட்டு, பிறகு இப்பருவங்கட்கு உரியனவாக ஆவணி முதலாக இரண்டிரண்டு திங்கள்களாக எண்ணிச் சேர்த்துக் கொள்க என்று கூறுகிறது.
 
திருஞானசம்மந்தரும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் இறந்த ஒரு பெண்ணை உயிர்பிக்க, தேவாரம் பாடும் பொழுது, முதல் பாட்டில், "ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.", நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் [ஆவணி / பூரட்டாதியில் நிகழ்வது] அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ? என்று தொடங்கி, "ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்" [ஐப்பசி ஓணம்], "தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்." [கார்த்திகை விளக்கீடு], என பாடி, ..........., இறுதியாக "பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்." [பெருஞ்சாந்தி / நீர்முழுக்கு] என்று முடிக்கிறார். இங்கும் ஆவணியில் இருந்து ஒரு ஆண்டில் நடக்கும் திருவிழாக்களை வரிசைப் படி குறிப் பிடுகிறார். குறைந்தது 2300 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியத்திலும் இதையே நாம் கண்டோம். எனவே, இங்கே கார்ப்பருவமாகிய ஆவணியை முதலில் தொடங்கிக் கூறியிருப்பதில் ஏதோ பொருள் இருக்கிறது என நாம் ஊகிக்கலாம்? பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே", முதன்மையாக / மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?
 
மேலும் எட்டுத் தொகை / பத்துப் பாட்டு போன்ற பல பாடல்களில் தை திங்களும் தை நீராடலும் கூறப் பட்டு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் தை தான் வருடத்தின் [ஆண்டின்] தொடக்கம் என நேரடியாக எங்கும் கூறவில்லை? எனினும் தமிழ் மரபில் & சங்க இலக்கியங்களில் ..... மிகச் சிறப்பாக / மிக அதிகமாகப் பேசப்படும் /போற்றப்படும் மாதமாக = தை! அல்லது "தைஇத் திங்கள்" இருக்கிறது.
 
“வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தைஊண் இருக்கையின்.........” ,
 
பனி பெய்து நனைந்த முதுகுடன் நோன்பு நோற்கும் பெண்கள் தைமாத விரத உணவை உண்ண இருந்தது போல் தோன்றியது என்கிறது நற்றிணை :22
 
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்பெருந்தோள் குறுமகள்“ ,
 
தைமாதத்தின்கட் குளிர்ந்த பொய்கையைப் போல என்கிறது நற்றிணை :80
 
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்“ ,
 
தை மாதத்திற் குளிர்ந்தனவாகிய, குளிர்ச்சியையுடைய சுனையிலுள்ள தெளிந்த நீரைத் தந்தாலும் என்கிறது குறுந்தொகை :196
 
“தைஇத் திங்கள் தண்கயம் போல்கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்“,
 
தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண! ...... கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது ..... பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்! என்கிறது புறநானுறு :70
 
“நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்தைஇத் திங்கள் தண்கயம் போல“,
 
உன் மனைவி உன்மேல் சொல்லில் அடங்காத கோபத்திலிருக்கிறாள். ஏனென்றால், தைமாத நோன்பிருக்கும் மணம் பொருந்திய மலர்களையும் கூந்தலையும் கொண்ட மகளீர் பலரும் ஒரே குளத்தி்ல் தோய்ந்து நீராடுவார்கள் அல்லவா? அப்படி உன்னுடைய மார்பு, பலபெண்கள் தோய்ந்து, துய்க்கும் கயமாக (குளமாக) இருக்கிறது என்பது உன் மனைவிக்குத் தெரிந்திருக்கிறது அல்லவா! என்கிறது ஐங்குறுநூறு :84
 
"வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையில் நீராடி தவம் தலைப் படுவையோ?”,
 
நீ தைத் திங்களில் நீராடிய தவத்தின் பயனைப் பெறுவாயோ ? என்று கேட்கிறது கலித்தொகை :59:12-13
 
"பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ?,
 
விளையாட்டுத்தனமான நோன்பாகிய சடங்குகள் நீ கடை பிடித்ததாலும், பிறர் மனையின்கண்ணே நீ பாடியதாலும் பெற்ற பலன் உனக்கு பயன் தருவதொன்றோ? என்று கேட் கிறது கலித்தொகை : 59:16-17
 
‘தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி’,
 
தவம் செய்பவர் போலக் காணப்பட்டதாலும், தாய்மார் அருகில் நின்றதாலும், வையையில் நிகழ்ந்த மகளிர் ஆட்டம் தைந்நீராடல் போல் காணப்பட்டது என்கிறது பரிபாடல் :11;91-92.
 
அதே சங்கத் தமிழ் மரபில், பின்னால் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்! தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாதம்!
நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையில்
 
"திண் நிலை மருப்பின் 'ஆடு தலை' ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து," [160 /161]
 
என்ற இரு வரிகளை காண்கிறோம். இது, திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசியை முதலாகக் கொண்டு, விண்ணில் ஊர்ந்து திரிதலைச் செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு என்று பொருள் படும். [தலை = முதல்! (தலையாய = முதன்மையான)]. சூரியன் மேஷத்தில் புகுவது, சித்திரை மாதம் ஆகும். இங்கு, நக்கீரர் மேஷம் [ஆடு / Aries ] தான் முதல் என்று கூறுகிறார் .அதாவது ராசி மண்டலத்துக்கு முதல்! "வீங்கு செலல் மண்டிலத்து" என்கிறார். ஆனால் எங்கும் ஆண்டுக்கு முதல் என்று கூறவில்லை ? மேலும் மேஷம் புகுவதே, "ஆண்டின் தொடக்கம் " என்பதற்கு என்ன ஆதாரம்?
 
சிலப்பதிகாரம், இந்திர விழா வைப் பற்றி கூறும் பொழுது,
 
"நடுக்கு இன்றி நிலைஇய நாள் அங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,
‘வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க’ என,
 
சொல்கிறது. இது சித்திரை திங்களில், அதாவது இளவேனில் காலத்தில் [வசந்த காலத்தில்] நடந்தது என்கிறது. அவ்வளவுதான். அது காமவேள் விழா / காதல் விழா (Valentines Day) என்று தான் சொல்கிறது . ஆனால் அதைப் "புத்தாண்டு" அல்லது வருடத்தின் தொடக்கம் என்று சொல்லவில்லை?
மேலும், அறுபது வருட சுற்றுகளின் பெயர்கள் சோழர் கல்வெட்டில் இருந்தாலும் ..... அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே ஆகும் ?
எனவே, தமிழ்ப் புத்தாண்டு நாள் பண்டை இலக்கியங்களில் கிடையாது! அவை பிற் கால சேர்க்கையே. அதனால் தான் அவை பழைய தமிழ் இலக்கியங்களில் கூறப்படவில்லை போலும்.
 
எப்படி ஆயினும், பல வருடங்களாக வரலாற்று ரீதியாக தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் மற்றும் பிற இடங்களிலும் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டு வாசலில் கோலம் போட்டு விருந்து படைத்து இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
சூரியன் மேட வீட்டிற்கு [மேஷ ராசிக்கு / இளவேனில் கால தொடக்கத்தை] போவதை, இந்து மாதத்திற்குள் உள்வாங்கப்பட்ட தமிழர்கள் தமது புதுவருட ஆரம்பமாக கருதுகிறார்கள். இது தமிழ் மாதம் சித்திரை தொடக்கத்தில் நிகழ்கிறது.
 
சாத்தனார் என்பவர் ஆக்கிய, கூத்துக் கலை பற்றிய இலக்கண நூலான, முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டை சேர்ந்த, கூத்த நூல், ஒவ் ஒரு மாதத்துடனும் தொடர்புடைய மேகங்களை விபரிக்கும் பொழுது, ஒரு வருடத்தில் உள்ள மாதங்களை, வரிசை முறை படி சித்திரை திங்கள் தொடக்கி பங்குனி திங்கள் முடியும் வரை கூறுகிறார். அவ்வளவு தான். எந்த இடத்திலும் இது ஆண்டின் தொடக்கம் என கூறவில்லை?
 
கை விஷேடத்துடன், இலங்கை தமிழர்கள் தமது பாரம்பரிய புது வருடத்தை, சித்திரை ஒன்றில் கொண்டாடுகிறார்கள். "எவர் கையால் முதற் பணம் கிடைக்கிறதோ, அவரது கைவளம் பணக்காரனாக்கும்" என்ற நம்பிக்கையிலேயே கை வளம் (கை விஷேடம்) நடைமுறை புத்தாண்டு காலத்தில் பின்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வு ஏர் அல்லது கலப்பை (Plough) மூலம் நிலத்தைக் முதலாவதாக கிளறிப் புது பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக மற்றும் நிகழ்வாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட புண்ணிய காலத்தில் சகலரும் "மருத்து நீர்" தேய்த்து குளித்து புது வருடத்தை ஆரம்பிப் பார்கள். போர்த் தேங்காய் உடைத்தலும் மாட்டு வண்டி பந்தயமும் கொண்ட்டத்தை மெருகேற்றும். அது மட்டும் அல்ல குடும்ப வருகைகளும் நடை பெரும். என்றாலும் பழைய தமிழ் இலக்கியத்திலோ சரித்திரத்திலோ, சித்திரை மாதத்தில் தான் புது வருடம் பிறக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
 
பொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. சித்திரை உண்மையிலேயே வருடப் பிறப்பாக இருந்தால், ஏன் "சித்திரை பிறந்தால் வழி பிறக்கும்" என வழக்கில் இல்லாமல் இருக்கிறது? இது ஜோசிக்க வேண்டிய ஒன்று?
 
பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப் படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும், ஆடி முதல் மார்கழி வரை தென்செலவு மாகும். அந்த வகையில், கதிரவன் வட செலவைத் [பயணம்] தையில் தான் தொடங்குகிறது. மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள். அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது. எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஆடியில் இருக்க வேண்டும், அல்லது தையில் புத்தாண்டு வர வேண்டும் அல்லவா? எப்படி ஆயினும், இன்று நாம் புது வருடத்தை கொண்டாடுவோம் . உங்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
முடிவுற்றது
  • நியானி changed the title to "தமிழ் புத்தாண்டு"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.