Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"கூட்டுக்குடும்பம்"
 
 
நான் யாழ், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் இருக்கும் மதகுவில் குந்தி இருக்கிறேன். எனக்கு என் அம்மா மேல் சரியான கோபம் கோபமாக இருக்கிறது. 
 
எமது அம்மா மிகவும் நல்லவர் ஆனால் கொஞ்சம் பிடிவாதமும் உண்டு. அவருக்கு எல்லோரும் ஒன்றாய் பக்கத்தில் இருக்க வேண்டும். ஒரு கூட்டுக் குடும்பம் போல் வாழவேண்டும். அதற்கு தானே தலைவி போல இருக்கவேண்டும். தான் தெரிவு செய்பவரையே திருமணம் செய்ய வேண்டும். இப்படி சில சில கொள்கைகள் உண்டு. எனது மூன்றாவது அண்ணா, மற்றும் மூன்றாவது அக்காவின் திருமணத்தின் பின், நானும் தம்பியும் தப்பி இருந்தோம். நான் அப்பொழுது பல்கலைக்கழகத்தால் வெளிக்கிட்டு கொழும்பு கடற்தொழில் பயிற்சி நிலையத்தில், எந்திரவியல் விரிவுரையாளராக பொறுப்பேற்றிருந்தேன். தம்பி, உயர் வகுப்பு சித்தி அடைந்தாலும், தரப்படுத்தல் என்ற அரசின் கொள்கையால், பல்கலைக்கழகம் நுழையும் சந்தர்ப்பம் இழந்து, ஆனால் பனை அபிவிருத்தி சபையில், யாழிலேயே அவரும் உத்தியோகம் பார்க்கத் தொடங்கி விட்டார். இந்த நிலையில் தான், அவரும் , தன் பழைய பாடசாலை நண்பியை காதலிக்க தொடங்கினார். 
 
என்றாலும் 'உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியுமா?' என்ற பழமொழி போல, அது அம்மா காதிலும் விழுந்தது. அம்மாவுக்கு ஒரே கோபம். அவளை கைவிடவேண்டும் அல்லது நீ இனி எங்களுடன் இருக்கக் கூடாது என்று, இதுவரை நாம் ஒற்றுமையாக இருந்த கூட்டுக்குடும்பத்திற்கு ஒரு சவாலை ஏற்படுத்தினார். இரு மனம் இணைவது தானே காதல், அதுவே உண்மையான மணமும் ஆகும். அந்த இரு மனமும் காதல் மூலமோ அல்லது பெற்றோரின் நிச்சயம் மூலமோ இணையலாம். ஆனால் அம்மாவுக்கு தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான். மற்றவர்களின் ஆலோசனையை எளிதில் ஏற்கமாட்டார். ஆகவே தம்பி தன்பாட்டில் தன் திருமணத்தை தீர்மானித்துவிட்டார். எனக்கும் கொழும்புக்கு அறிவித்தார். 
 
நானும், விடுதலை பெற்று யாழ் வந்து, முதலில் அம்மாவை சமாதானப் படுத்தப் பார்த்தேன். அப்பா பிரச்சனை இல்லை. ஆனால் எல்லோரும் அம்மாவை மீறிப்போகப் கொஞ்சம் தயக்கம் காட்டினர். எல்லோரும் ஒரே அணியில் அம்மாவின் பின் இருந்து விட்டார்கள். அம்மா தான் எம் கூட்டுக் குடும்பத்தின்  தலைவி. நான் எப்பவுமே கொஞ்சம் மாறு பட்டவன். எனவே, என்ன நடந்தாலும் நான் போவது என்று முடிவு செய்துவிட்டேன்.
 
அது தான் இப்ப எம் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையாரை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு பிள்ளையார் மேல் சரியான கோபம். 
 
கிருஸ்துக்குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான், குப்தா காலத்தில்,பிள்ளையார்.ஓர் அளவு அடையாளம் காணக்கூடிய அளவிற்கு வளர தொடங்கினார். பல்லவ மன்னரின் படைத் தளபதியான பரஞ்சோதி [இவரே பிற்காலத்தில்  சிறுத்தொண்டராவார்], கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் , வாதாபியில் போரில் வெற்றிப் பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை  [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகப் படுத்தப்பட்டார் என்று ஒரு வரலாறு கூறுகிறது. எனவே அவர் கூட்டுக் குடும்பமாக தன்னோடு சேர்க்கப் பட்ட சிவன் பார்வதியுடன் ஒட்டி இருந்து விட்டார். ஏன் கல்யாணம் கூட செய்யவில்லை. அத்தனை கூட்டு பெற்றோருடன்?
 
ஒரு முறை,  பார்வதியும் பரமேஸ்வரனும் ஒரு மாம்பழம் பெறுகிறார்கள்.  ஆனால் எல்லோரும் பகிர்ந்து சாப்பிடாமல், கூட்டுகுடும்பத்தின் தலைவன், சிவபெருமான் ஒரு பந்தயம் வைக்கிறார். தம்பி, முருகன் உடனே மயில்மேல் ஏறி, பத்தியத்தின் படி, அதை நம்பி, உலகம் சுற்றப் புறப்பட்டு விடுகிறான். ஆனால், கூட்டுக் குடும்பத்தில் உலகம் எல்லாம் தலைவன் தலைவியே என்பதால், பிள்ளையார் சாவதானமாக அன்னையையும் அத்தனையையும் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றுகிறார். உலகம் தோன்றி நின்று ஒடுங்குவது உங்களிடம்தானே, ஆதலால் உங்களைச் சுற்றிவிட்டால் உலகத்தையே சுற்றி விட்டதாகாதோ? என்று மாங்கனியையும் பெற்றுக் கொள்கிறார். பாவம் தம்பி வெறுங்கையுடன் தந்தை தாயாரிடம் கோபித்துக் கொண்டு கோவாணாண்டியாகவே புறப்பட்டு விடுகிறான். இந்தக் கதைதான் தம்பியின் கதையும். அவர் தன்னோடு வாழப்போகும் பெண்ணை, தன்னை விரும்பும் பெண்ணை, தன் உண்மையான வருங்கால  உலகத்தை நாடிப் போயுள்ளார், கூட்டுக்குடும்பம் என்ற உடைகளை கழட்டி எறிந்துவிட்டு, தன் மானம் [சுயமரியாதை] என்ற  கோவணத்துடன்!
 
தம்பி தன் திருமணத்தை நல்லூர் கந்தசாமி கோயிலின் தேரடி வீதியில் உள்ள, அத்தியடி பிள்ளையார் கோவிலின் அன்றைய குருக்கள் குடும்பம் நடத்திய மனோன்மணி அம்மாள் ஆலயத்தில் நடத்தினார். எங்கள் குடும்ப சார்பில் நான் மட்டுமே போனேன். அது ஒரு துர்பாக்கியமே!. என்றாலும் எம் அம்மாவின் கோபம் தம்பியின் முதல் பிள்ளையுடனும் , என் திருமண நிச்சயதார்த்தமுடனும் ஒரு முடிவுக்கு மகிழ்வாக வந்தது. தம்பியும் அதன் பின் அம்மாவுடனேயே கூட்டுக்குடும்பமாக வாழ்த்தொடங்கினார்.    
 
“யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?” என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்;"
 
“தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். “சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புலவர் பிசிராந்தையர் கூறியது போல அப்பா 94 வயது மட்டும், அம்மா 92 வயது மட்டும் வாழ்ந்தனர். ஆனால் நான் இப்பவே அதை தொலைத்து, எம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஆளுக்கொரு நாடாக தனித் தனி குடும்பமாக சிதறி விட்டோம். தனிமையில் புலம்பும் புலவராக எதோ கிறுக்கிக் கொண்டு காலம் போகிறது என்பதே உண்மை! 
 
ஆமாம், இன்றைய பொருளாதார நெருக்கடியில் கணவனும் மனைவியும் வேலைக்கு போவதாலும், பேரப்பிள்ளைகள் பாடசாலை போவதாலும் மற்றும் இந்த பல்மொழி பேசும் நகரத்தில், நண்பர்களும் உறவினர்களும் அங்கொன்று இங்கொன்றாக இருப்பதால் அதிகமாக தனிமை தானாக வந்துவிடுகிறது. அதிலும் நான் அண்மையில் ஓய்வு பெற்ற கைம்மாண் [கைம்மை+ஆண் / தபுதாரன் / Widower] ஆகும். கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை அதற்குச் சற்றும் குறைந்ததல்ல முதுமையில் தனிமை! 
 
"பாளையாம் தன்மை செத்தும்
 பாலனாம் தன்மை செத்தும்
 காளையாம் தன்மை செத்தும்
 காமுறும் இளமை செத்தும்
 மீளும் இவ் வியல்பும் இன்னே
 மேல்வரும் மூப்பும் ஆகி
 நாளுநாள் சாகின் றோமால்
 நமக்குநாம் அழாதது என்னோ?"
 
ஆனால், இப்பதான் எனக்கு, இந்த தனிமையில்,  நான் முன்பு சிறுவயதில் வாழ்ந்த கூட்டுக்குடும்ப வாழ்வு ஞாபகத்துக்கு வருகிறது. நான் கூட திருமணத்தின் பின் நகர வாழ்வுக்கு போய்விட்டேன். அப்ப தனிக்குடும்ப வாழ்வு பெரிதாக பிரச்சனை ஒன்றும் தரவில்லை, இருவரும் வேலை, பிள்ளைகளுடன் மற்ற நேரம், நேரம் போவதே தெரியாத காலம் அது. இன்று நிலைமை மாறியதே, தனிமையில் பல நேரம் கழிப்பதே, அந்த பழைய நினைவுக்கு என்னை திருப்புகிறது.
 
குறிப்பாக நான் யாழ் மத்திய கல்லூரியில் படிக்கும் காலம் எனக்கு நன்றாக இப்ப தெரிகிறது.  அப்ப நாம் யாழ் புகையிரத நிலையத்திற்குப் பின்புறமாக உடனடியாக உள்ள அத்தியடியில் வாழ்ந்தோம். எம்மை சுற்றி பல உறவினர்களின் வீடுகள். என்னுடன் சேர்ந்து நாம் எட்டு பிள்ளைகள். நான் ஏழாவது. நான் பாலர் பாடசாலையில் படிக்கும் பொழுதே பெரியக்கா திருமணம் செய்து தொடக்கத்தில் கொழும்பு சென்றாலும் பின் அவர்கள் குடும்பம் யாழில் வேலை காரணமாக சில ஆண்டுகள் கூட்டுக்குடும்பமாக  எல்லோரும் ஒன்றாகத் இருந்தோம். சின்னக்கவும் அப்படியே, கொஞ்ச காலம் கொழும்பு, பின் பக்கத்திலேயே வீடுகட்டி வாழ்ந்தார். இப்படி தனிமை என்றால் என்னவென்று தெரியாத, அலுப்பே தட்டாத வாழ்வு அது!  
 
"தேன் கூடுகள் சுவை குன்றா      
பரம்பரை பெயர் உறவு குன்றா
இரத்த பந்தங்கள் அன்பு குன்றா
அருகில் இருந்தால் சொர்க்கம் குன்றா!"
 
"சங்கடம் என்றால் கை கொடுக்கும் 
துன்பம் என்றால் தோள் கொடுக்கும்    
மகிழ்வு என்றால் ஒன்றாய் கலகலக்கும் 
அன்பு சங்கிலி பிணைத்த குடும்பம்!"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available.No photo description available.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.