Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"உலகின் முதலாவது பதியப்பட்ட நீதிமன்ற பதிவு"
 
 
 
பண்டைய மெசொப்பொத்தேமியா சட்டவியல் பற்றி நாம் அறிவதற்கு அங்கு கண்டு எடுக்கப்பட்ட நீதிமன்ற பதிவுகள் எமக்கு துணை புரிகிறது. அங்கு, சில வழக்குகள் கெட்ட பெயரை பெற்று, அதனால் பிரசித்தம் அடைந்து இருப்பதும் வேறு சில பதிவுகள் ஒரே மாதிரியான வழக்குகளின் வெவ்வேறு பிரதிகள் போலவும் தோன்றுகின்றன. அவை எழுத்தாளர்களின் அல்லது வழக்கு பதிவு செய்வோர்கள் பயிற்சி [copying exercises for scribal trainees] போல் தெரிகிறது. ஆகவே அங்கு ஒரே மாதிரியான பல பிரதிகள் இருக்கக் கூடும் என நாம் கருதலாம். சுமேரியாவில் கண்டு எடுக்கப்பட்ட மிகவும் பிரசித்தமான வழக்கு கி மு 1900 ஆண்டு அளவில் நடை பெற்ற ஒரு கொலை வழக்கு ஆகும்.
 
இங்கு மூன்று பேர் கூட்டாக, நாலாவது ஆளை கொல்ல சதி செய்தார்கள் என பதியப்பட்டு உள்ளது. இங்கு கொலை செய்ய கருதியவரின் மனைவி இந்த சதியை முன்பே அறிந்து இருந்தாள். ஆனால் எதோ ஒரு காரணத்தால் அதை - அந்த தனது கணவரின் கொலையை - நிறுத்த முயலவில்லை. கொலை நடந்த பின் கொலையாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுடன் சதி முடியும் மட்டும் அதன் பின்பும் மௌனமாக இருந்த கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் கைது செய்யப்பட்டார். அங்கு எழுதப்பட்ட நகல் கீழ் கண்டவாறு போகிறது.
 
'நன்னா -சிக்' , மற்றும் முடி திருத்தும் தொழிலாளியான 'கு -என்லில்ல', பழத்தோட்ட காவலரான 'என்லில்-எண்ணம்' ஆகிய மூவரும் [Nanna-sig, Ku-Enlilla the barber, and Enlil-ennam the orchard-keeper,] சேர்ந்து, 'லு -ஈனன்ன' என்ற மத குருவை [Lu-Inanna the priest] கொலை செய்து உள்ளார்கள். அந்த கொலையை நிறை வேற்றிய பின் அவர்கள் அதை மத குருவின் மனைவி, 'நின்-டட' [wife Nin-dada] விற்கு கூறினார்கள். எனினும் 'நின்-டட' மௌனம் கடைப்பிடித்தார். அவர் எவருக்கும் ஒன்றும் சொல்ல வில்லை. இந்த வழக்கு இசின் [Isin / an ancient city-state of lower Mesopotamia about 20 miles south of Nippur] நகரத்திற்கு, அதன் தலைவருக்கு ஆலோசனைக்கு அனுப்பப் படைத்து. அதை, அவர்கள் மன்னன் 'ஊர் -நினுர்டா'விற்கு [king.Ur-Ninurta] அறிவித்தார்கள். அவர் நிப்பூர் [Nippur] அவைக்கு முன் அந்த வழக்கை முன் வைத்தார்.
 
'ஊர் -குலா', மற்றும் பறவை பிடிப்பாளரான 'டுடு', உயர்குடிப் பிறந்தவரான 'அலி-எல்லடி', இவர்களுடன் 'புஜு' , 'எழுதி', 'சேஷ்கல்லா' என்ற குயவன், பழத்தோட்ட காவலரான 'லுகல்-காம்',  'லுகல்-அஜிதா', 'ஷார -ஹாரின்' மகன் 'சேஷ்கல்லா' [Ur-gula, Dudu the bird-catcher, Ali-ellati the noble, Puzu, Eluti, Sheshkalla the potter, Lugal-kam the orchard-keeper, Lugal-azida, and Sheshkalla the son of Shara-har] ஆகியோர் எழுந்து நின்று தமது வாதத்தை முன் மொழிந்தார்கள்.
 
"குற்றவாளிகளாக கூட்டில் நிற்கும் இவர்கள் எல்லோரும், ஒரு சக மனிதனை கொன்றதால், அவர்களை உயருடன் வாழ விடக்கூடாது. இந்த நால்வரும் 'லு -ஈனன்ன' மத குருவாக பயன்படுத்திய அவரின் சடங்கு நாற்காலிக்கு முன் கொலை செய்யப்பட வேண்டும்" என்றார்கள். அதன் பின் போர் வீரன் 'ஷுகலிலும்', பழத் தோட்ட காவலரான 'ஊபர் -ஸுன்' [Shuqalilum the soldier and Ubar-Suen the orchard-keeper] ஆகிய இருவரும் எழுந்து நின்று 'நின் -டட' உண்மையில் தனது கணவனை நேரடியாக கொலை செய்யவில்லை. எனவே அவளுக்கு ஏன் மரண தண்டனை கொடுக்க வேண்டும்?" என கேட்டார்கள்.
 
அந்த நேரத்தில் அங்கு இருந்த மூத்தோர்கள் எழுந்து அவைக்கு உரையாற்றினார்கள்."ஒரு மனைவி தனது கணவனின் உயிருக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றால், அவள் கட்டாயம் வேறு ஒரு ஆணுடன் ஒன்றாக படுத்திருக்க வேண்டும். அந்த ஆணுடன் சோரம் போய் இருக்க வேண்டும். அந்த வேறு ஆண், அவள் தன்னை எந்த சந்தர்பத்திலும் காட்டி கொடுக்க மாட்டாள் என்ற துணிவில் தான் இந்த கொலையை செய்திருக்கலாம். அப்படி இல்லா விடடாள், எதற்க்காக அவள் மௌனம் சாதிக்க வேண்டும்? ஆகவே மற்றவர்களை விட இவளே உண்மையில் தனது கணவனின் சாவிற்கு காரணம் ஆவாள். எனவே இவளே கூடுதலான குற்றம் புரிந்தவள் ஆகும்" என்றார்கள்.
 
இறுதியில் இந்த நிப்பூர் அவை தீர்ப்பு வழங்கியது. 'நன்னா -சிக்' , முடி திருத்தும் தொழிலாளியான 'கு -என்லில்ல', பழத்தோட்ட காவலரான 'என்லில்-எண்ணம்', மற்றும் மத குருவின் மனைவி, 'நின்-டட' ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை வழங்க்கப்பட்டது.
 
என்றாலும் அந்த கொலை வழக்கு பதிவில் 'நின்-டட' வின் கண்கள் கலங்கியது பற்றியோ அல்லது முடி திருத்தும் தொழிலாளியான 'கு -என்லில்ல' உட்பட குற்றம் சுமத்தப் பட்டவர்களின் முகத்தில் தோன்றியிருக்க கூடிய வருத்தமான அறிகுறிகள் பற்றியோ பதியப்படவில்லை. முடி திருத்தும் தொழிலாளியான 'கு -என்லில்லே' தான், அதிகமாக, சந்தேகத்திற்கு இடமின்றி தனது கொடிய சவரக்கத்தி பிரயோகித்து மத குருவின் உயிரை 4000 ஆண்டுகளுக்கு முன் எடுத்திருக்க வேண்டும் என நாம் கருதலாம்.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட , பண்டைய சங்க இலக்கியத்திலும் நாம் வழக்குகள் வாதடப்பட்ட தையும் , தண்டனை வழங்க்கப்பட்டதையும், வழக்கு முறைகளையும் அறியக் கூடியதாக உள்ளது. இவை அறம் கூறு அவையம், “ஊர் சபைகள்” போன்றவற்றில் நடைபெற்று உள்ளது. அறம் கூறு அவையம் -  வழக்குகளை ஆராய்ந்து நீதி சொல்லும் மன்றம் ஆகும். அங்கு ஒருவர் மகிழ்ச்சி அடையும் படியும் இன்னொருவர் துயரம் படும் படியும் ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்புச் சொல்லும் வழக்கம் இல்லை என்பதையும் அது நடு நிலையில் நின்று சரியான நியாயத்தைச் சொல்லும் மன்றம் என்பதையும் நாம் மதுரைக் காஞ்சி (வரிகள் 489 முதல் 492வரை) மூலம் அறிய முடிகிறது. இதோ அந்த வரிகள்:
 
"அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்…"
 
ஒரு பிரச்னையோடு இங்கே வருகிறவர்கள் ‘தமக்கு நீதி கிடைக்குமா?’ என்ற அச்சத்தோடு இருப்பார்கள், ‘ஒருவேளை நீதி கிடைக்காமல் போய்விடுமோ’ என்று சந்தேகம் அல்லது வருத்தம் கொள்வார்கள், ’ஒருவேளை தமக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்து விட்டால் தாம் ஆனந்தமாக இருக்கலாம்’ என்று ஆசைப்படுவார்கள், இப்படிப் பல விதமான உணர்வுகள் அவர்களுக்குள் எழும். ஆனால், இந்த நீதிமன்றத்துக்குள் நுழைந்து விட்டால் அந்த உணர்வுகள் எல்லாம் நீக்கப்பட்டு விடும். காரணம் இங்கே ஒருவர் மகிழவோ அல்லது இன்னொருவர் வருத்தப்படுவோ ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்புச் சொல்லும் வழக்கம் கிடையாது. தராசுக்கோல் போல் நடு நிலையில் நின்று சிறப்பான, சரியான நியாயத்தைச் சொல்லும் மன்றம் இது என்கிறது.
 
நாம் முன்பு எடுத்து காட்டிய மெசொப்பொத்தேமியா வழக்கு மாதிரி ஒரு நீதிமன்ற காட்சி ஒன்றை சிலப்பதிகரத்திலும் காணலாம். அங்கு கண்ணகியின் கணவன், கோவலன், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் தவறுதலான தீர்ப்பால் மரண தண்டனை வழங்கப்பட்டு அவனின் கழுத்து வெட்டப்படுகிறது. இதை கேட்ட கண்ணகி புயலாக பாண்டிய மன்னனின் அவைக்கு வந்து அங்கு நின்ற காவலாளியிடம் தன் வருகையை மன்னனிடம் அறிவிக்கும் படி
 
"வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
“இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!"
 
என கூறினாள். காவலாளி அரசன் முன் வணங்கி" ‘வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி! தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!" என வாழ்த்தி கண்ணகியின் வருகையை கூறினான்.
 
அப்பொழுது அரசன் காவலாளிக்கு அவளை உள்ளே கூட்டிக் கொண்டு வருமாறு கூறினான். அவள் அரசனுக்கு கிட்ட நெருங்கும் போது, அரசன் பெண்ணே ஏன் உன் முகம் அழுது வாடி உள்ளது? இளம் பெண்ணே நீ யார்? என்ன துக்கம் உன்னை எம்முன் வரவழைத்தது? என வினாவினான். அதற்கு கண்ணகி:
 
"தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே"
 
என கூறினாள். அரசன் கண்ணகியிடம்:
 
"கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை,"
 
என கூறினான். அதற்கு கண்ணகி தன் சிலம்பின் தன்மையை மன்னனுக்கு அறிவித்தாள்:
 
"நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என-
‘தேமொழி! உரைத்தது செவ்வை நல் மொழி;
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;
தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப"
 
அதை தொடர்ந்து கண்ணகி சிலம்பை உடைத்தாள்
 
"கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே- மணி கண்டு,"
 
மன்னவன் உண்மை உணர்ந்து,மயங்கி வீழ்ந்து இறந்தான்.
 
[கண்ணகி அரண்மனை வாயிலை அடைந்தாள்; அங்கிருந்த காவலனை நோக்கி, “வாயில் காவலனே! வாயில் காவலனே! ஒரு சிலம்பினை ஏந்திய கையை உடையவளாய், தன் கணவனை இழந்தாள் ஒருத்தி அரண்மனை வாயிலில் உள்ளாள் என்பதை உன் மன்னனிடம் சென்று அறிவிப்பாய்” என்று கூறினாள். தனது ஆணைப்படி, தன்முன் வந்து நின்ற கண்ணகியை நோக்கி அரசன் “நீர் ஒழுகும் கண்களுடன் எம்முன் வந்திருப்பவளே! இளையவளே! நீ யார்?” எனக் கேட்டான். “உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். புகார் நகரில் மிக்க புகழுடன் விளங்கும் பெருங்குடி வணிகனான மாசாத்துவான் என்னும் வணிகனது மகனாய்ப் பிறந்து, வாணிகம் செய்து வாழ்தலை விரும்பி, ஊழ்வினை காரணமாக உனது பெரிய நகரமாகிய மதுரையிலே புகுந்து, இங்கு அத்தொழிலுக்கு முதலாக என்னுடைய காற்சிலம்புகளுள் ஒன்றினை விற்பதற்கு வந்து, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் என்பான் மனைவி ஆவேன். என்னுடைய பெயர் கண்ணகி” என்றாள்.
 
“பெண் அணங்கே ! கள்வனைக் கொல்வது செங்கோல் முறைமைக்கு ஏற்றது ஆகும். முறை தவறாத அரச நீதியே ஆகும்,” என்று மன்னன் விளக்கினான். அது கேட்ட கண்ணகி, “நல்ல முறையில் ஆராய்ந்து பார்த்துச் செயல்படாத கொற்கை வேந்தனே! என்காற் பொற்சிலம்பு மாணிக்கக் கற்களை உள்ளிடு பரல்களாக உடையது” என்றாள். மன்னனது ஆணைப்படி கோவலனிடமிருந்து பெற்ற காற்சிலம்பினை ஏவலர் கொண்டு வந்து தர, கண்ணகி விரைந்து அச்சிலம்பினைக் கையில் எடுத்து மன்னன் முன்னிலையில் உடைத்தாள். அச்சிலம்பு உடைந்து அதனுள் இருந்த மாணிக்கக் கற்கள் சிதறுண்டு அரசனுடைய முகத்திலும் பட்டுக் கீழே விழுந்தன. குடிமக்களைப் பேணிக் காத்து வருகின்ற இத்தென்னாட்டின் பாண்டியர் ஆட்சிச் சிறப்பு என்னால் பிழைபட்டு விட்டதே;  ஆதலால் என் ஆயுள் அழிவதாக” என்று கூறி மயங்கி அரசு கட்டிலினின்றும் வீழ்ந்தான்.]
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available.
 
 
 
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.