Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

ஆர்.பி.என்.

இலங்கை மக்கள் மாத்திரமன்றி சர்வதேசம் எங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களும் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அன்று தான் ஈவிரக்கமற்ற குண்டுத்தாரிகளால் அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டன.    

கிறிஸ்தவ மக்கள் அன்று ஈஸ்டர் ஞாயிறை நினைவுகூரும் வகையில் காலை வேளை   தங்கள் பங்கு தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில், குண்டுகள் வெடித்துச் சிதறின. 

வழிபாட்டிலிருந்த பலரும் அடுத்த கணம் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் பரிதாபகரமாக   மரணித்தனர். முதலில் இந்த சம்பவத்தை நம்பவோ, ஜீரணிக்கவோ முடியவில்லை. தேவாலயத்துக்குள் குண்டு வெடிக்குமா? என்று எண்ணிப்பார்க்க ஒரு கணம் மனம் தயங்கியது. ஆனாலும், தற்கொலைதாரிகள் இந்த ஈனச் செயலில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் எழுப்பியது.  எதற்காக இந்த படுபாதகச் செயலில் ஈடுபட்டார்கள்? இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? அவர்கள் ஏன் தேவாலயத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற கேள்விக்கு ஐந்து வருடங்கள் கடந்தும் இன்னும் சரியான விடை காண முடியாமல் உள்ளது.

நடந்தது என்ன?

உயிர்த்த ஞாயிறு தினமான 21 ஏப்ரல் 2019 அன்று நாடு முழுவதும் ஆறு இடங்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் சரியாக காலை 8.45 மணிக்கு ஏக நேரத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர். 

இதில் மூன்று பிரதான தேவாலயங்களான கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோவில், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மட்டக்களப்பு தேவாலயம் என்பன அடங்கும். மற்றும் கொழும்பில் உள்ள மூன்று சொகுசு நட்சத்திர விடுதிகளான ஷங்க்ரி லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி மற்றும் டிராபிகல் இன் ஆகியவற்றிலேயே குண்டுகள் வெடித்தன.  

குறித்த குண்டுவெடிப்பில் குறைந்தது 45 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர். 500 பேரளவில் காயமடைந்தனர். மூன்று பொலிஸ் அதிகாரிகள்  இதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, மட்டக்களப்பு குண்டுவெடிப்பு இடம்பெற்ற குறித்த தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு பண்டிகையைக் கொண்டாட வந்த  குழந்தைகளால் தேவாலயம் நிரம்பி வழிந்திருந்தது. அந்தப் பச்சிளம் குழந்தைகளும் பலியானமை குறிப்பிடத்தக்கது. 

தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார்?

தாக்குதல்கள் நடந்த சிறிது நேரத்திலேயே,  உள்ளூர் தீவிரவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) தான் காரணம் என்று கூறினர். மேலும், அதன் முக்கிய உறுப்பினரான சஹ்ரான் ஹாஷிம், குண்டு தாக்குதல்களின் தலைவனாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்து. பின்னர் கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சஹ்ரான் தன்னைத்தானே குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

நிலைமை இவ்வாறிருக்க, நாட்டில் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பானவர்கள் பதில் கூறவேண்டும் என்று குரல்கள் பலமாக ஒலித்தன. அந்த சமயம், ஜனாதிபதியாக விளங்கிய மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் இருந்தார். 

மேலும், இந்திய அரசாங்கம் குறித்த சம்பவம் தொடர்பில், இலங்கைக்கு உளவுத் தகவல்களை வழங்கி இருந்ததாகவும், இருந்தும் இலங்கை  அதைக் கணக்கில் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்தநிலையில் தான் நாட்டில் பல்வேறு ஊகங்கள் வெளிவரத் தொடங்கின. நாட்டில் பாதுகாப்பான சூழல் இல்லை என்பதைக் காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்ற இவர்களை கூலிப்படையாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் துணிந்து எவரையும் விரல் நீட்ட எவருக்கும் திராணி இருக்கவில்லை.

ஆயினும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் ஒரு சிறிய கோட்டுக்கு அருகே பெரிய  கோட்டை போட வேண்டிய தேவை  ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஆண்டவன் தீர்ப்பு!

இதேவேளை, மக்களின் குருதியால் தேவாலயத்தின் சிலைகளையும் சுவர்களையும் நனைத்து அவர்களின் உயிரை நொடிப்  பொழுதில் குடிக்க காரணமானவர்களை நிச்சயம் ஆண்டவன் தண்டித்தே தீருவான். பாவம் செய்பவர்களுக்கும் சதி செய்பவர்களுக்கும் நிச்சயமாக ஆண்டவன் தீர்ப்பிலிருந்து ஒருபோதும் தப்பிவிட முடியாது என பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வேதனையை கொட்டித்தீர்த்து கண்ணீர் வடித்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என்பதே இன்றைய ஒரே நம்பிக்கையாகும்.

இந்த விதமான பின்னணியில், உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் நடைபெற்று ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை நினைவுகூரும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களிலும் காலை 8. 30 மணிக்கு 2 நிமிட மௌன அஞ்சலி  செலுத்தப்பட்டது. முன்னதாக உரையாற்றிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, 5 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் முன்னைய  அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் உண்மையை தொடர்ந்து மூடி மறைத்து வருவதாக தெரிவித்தார். அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய சிலரைப் பாதுகாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் தாக்குதல் தொடர்பான உண்மை நிலையை வெளியிடக் கோரி பல கடிதங்கள் அனுப்பிய போதிலும் அவற்றுக்கு  இதுவரை  பதில் கிடைக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டார். 

தாக்குதல் தொடர்பில் இதுவரை நடந்தது என்ன? 

போதுமான புலனாய்வு தகவல்கள் கிட்டியும் முன்னாள் ஜனாதிபதி தாக்குதலை தடுக்க தவறிவிட்டார் என்று மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது  உயர் நீதி மற்றம் குற்றம் சாட்டியது. முன்னாள் ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து  குரல் எழுப்பி வரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 12க்கும் மேற்பட்ட தடவைகள் விவாதிக்கப்பட்டும் எதுவும் நடக்கவில்லை.

எதிர்வரும் காலங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் நடை பெற்றாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

சரத் வீரசேகர கூறுவது என்ன?

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பது அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  சரத் வீரசேகர குண்டுத்தாக்கல் சூத்திரதாரிகளை ஜே.வி.பி.க்கு தெரியும் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கொழும்பில் கடந்த ஞாயிறு   நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், குண்டுத்தாக்குதல் தொடர்பில் தமது ஆட்சியில் நீதியைப்  பெற்றுக்கொடுப்பதாக கூறுகின்றனர். இது வேடிக்கையானது அவர்களின் தேசிய பட்டியல் உறுப்பினராகப் பெயரிடப்பட்டிருந்தவரின் இரு புதல்வர்கள் தற்கொலை குண்டுதாரியாக  செயல்பட்டவர்கள் மற்றும் அவரது மருமகள் தெமட்டகொட வீட்டில் வைத்து குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார். 

மேலும் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக  நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை  பலவீனப்படுத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.  

தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 23 ஆயிரம் குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவ்விவகாரத்தில் அரசாங்கத் தரப்பில் எந்த தாமதமும் இல்லை. நீதிமன்ற கட்டமைப்பில் தாமதம் உள்ளது. தாக்குதல்  தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே புதிய தகவல்  தெரிந்தவர்கள் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், விசாரணைகள் அடுத்த நூறாண்டுக்கு தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும் இவர்கள் கூறுவதைப் பார்த்தால் தாக்குதல் தொடர்பில் குறித்து மக்களுக்கு மாத்திரமே தெரியாதுள்ளது. 

பாலித ரங்கே என்ன கூறுகிறார்!

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிந்தோ, தெரியாமலோ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்ற குழுவினருக்காக செயற்பட்டுள்ளார். இனியும் அவரிடம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று ஐக்கிய தேசிய கட்சி பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 

கோத்தாபய ராஜபக்ஷவை நம்பி தாம் ஏமாந்து போனதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலேயே பாலித ரங்கே பண்டார தமது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

நம்பிக்கை இழந்தவர்களாக மக்கள்

இறுதி முயற்சியாக கத்தோலிக்க திருச்சபை, குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஏதுவாக, வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்மொழிவை சமர்ப்பிக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேசம் எந்தளவு தூரம் கரிசனை கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. உலகின் பல்வேறு மனித உரிமை மீறல்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சந்தேகிக்கப் பட்டவர்கள் என எவருக்கும் தாக்குதலின் போதும் அதனைத் தொடர்ந்தும் பதவிக்கு வந்த அரசுகள் உரிய தண்டனை வழங்க முன்வரவில்லை.

மாறாக மௌனம் காத்து வந்ததுடன் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்துவிட்டன என்ற விரக்தி ஒன்றே பாதிக்கப்பட்ட மக்களின்  மனதில் ஆழமான  வடுவாக உள்ளது. இருந்தும் இறைவனின் தீர்ப்பு கால தாமதமானாலும்  நிச்சயம் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் என்ற ஒற்றை நம்பிக்கையில் அவர்கள் உள்ளார்கள். 

 

https://www.virakesari.lk/article/181975

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.