Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிறைவேற்று அதிகாரத்தை வெல்லும் திறன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உண்டா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேற்று அதிகாரத்தை வெல்லும் திறன் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உண்டா?

-சிவபாலன்-

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை ஐ.தே.கவின் போராட்டம் தொடரும் என நீர்கொழும்பில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அவரது இறுதி இலக்கு சனாதிபதிப் பதவிதான் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அவரால் இப்போதைக்கு முயற்சி செய்யக்கூடியது பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவது மட்டுமே.

இந்த முயற்சியில் அண்மையில் ஐந்து இடைக்கால நிதிச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது வெற்றி பெறமுடியுமா? என்று பரீட்சித்துப்பார்த்தார். அதில் தோல்வியே கிடைத்தது. இப்போது வரவு-செலவுத் திட்டத்தை இலக்கு வைத்து அவரது முயற்சி கள் உள்ளன.

இதில் ஒன்று ஜே.வி.பியை வசப்படுத்துவது- அதாவது ஜே.வி.பியுடன் கூட்டு வைப்பது. இதற்காக ஜே.வி.பி விதிக்கும் நிபந்தனைக்கு உட்பட்டுச் செல்வது என்ற முடிவிற்கு ஐ.தே.க வந்துவிட்டது. ஜே.வி.பி இது குறித்து மாறுபட்ட கருத்தை வெளியிட்டாலும் அது மகிந்தவின் பாராளுமன்ற ஆட்சியைக் கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டாது எனக் கூறுவதற்கில்லை.

ஆனால் வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்க ஜே.வி. பி. உதவினாலும் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்குத் தேவைப்படுவர். அவர்களை ஆளும் கட்சியிலிருந்து இழுத்தெடுக்கும் பொறுப்பை மங்கள ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடித்து விட்டால் மகிந்த பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்துவாரா? அப்படிச் செய்ய வேண்டுமென சிறிலங்காவின் அரசியலமைப்பு வலியுறுத்தவில்லை. அதாவது வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிக்கு மட்டுமே உள்ளது.

இது ஆளும் கட்சியிலுள்ள பாராளுமன்ற அங்கத்தவர்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதால் ரணில்-மங்கள கூட்டு முயற்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை இழுத்தெடுப்பதில் முட்டுக்கட்டையாக இருக்கும். எனவே ரணில் விக்கிரமசிங்க உண்மையிலேயே மகிந்த ஆட்சியைக் கவிழ்க்க விரும்பினால் மகிந்தவின் சனாதிபதிப் பதவியைப் பறிக்க வேண்டும்.

2005 நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவிக்காலம் 2011 நவம்பர் வரை நீடிக்கின்றது. அதற்கு முன்னதாக மகிந்த ராஜபக்சவின் சனாதிபதிப் பதவியைப் பறிக்க சட்டபூர்வமான வழிமுறையை சிறிலங்காவின் அரசியலமைப்பு கொண்டிருக்கிறது.

அது சனாதிபதி மீதான குற்றவியல் விசாரணை மனு ஒன்றைப் பாராளுமன்றத்தினூடாகக் கொண்டு வந்து நிறைவேற்றுவதாகும். அரசியலமைப்பு ரீதியாக இவ்வாறு கூறப்பட்டிருக்கின்ற போதும் அதனைச் செயற்படுத்துவது என்பது மிகவும் கடினமானதாகும். அதாவது இதனை 'ஊசியின் துவாரத்திற்கூடாக ஒட்டகத்தை நுழைப்பது போன்றது" என வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

சிறிலங்காவின் குள்ள நரித்தனம் மிக்க இராஜதந்திரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டு வரப்பட்ட இந்த அரசியலமைப்பானது பல்வேறு முரண்பாடுகளின் மொத்த வடிவம் என இந்த அரசியலமைப்புடன் தொடர்புடையவரான பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் கூறியிருக்கின்றார். அதாவது ஒரு சரத்து வழங்குவதை மறுசரத்து பறிக்கின்றது என அவர் தெரிவித்திருக்கிறார்.

கம்யூனிசத்திற்கு எதிராக- அதனை முறியடிக்கச் சிறந்த வழி எனக் கூறி பிரான்சின் முன்னாள் பிரதமர் டீகோல் என்பவர் கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரப் பதவியைப் பின்பற்றி ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் கொண்டு வரப்பட்டது இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை.

இது சிறிலங்காவின் வளர்ச்சிக்கு உகந்தது எனக் கூறப்பட்ட போதும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்கவும் இதனைப்பயன்படுத்த ஜே.ஆர். திட்டமிட்டிருந்தார்.

தனது பதவிக்காலம் முழுவதும் பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கிற்கு மேல் பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றத்தைத் தக்க வைத்துக் கொண்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத பதவி விலகல் கடிதத்தையும் ஜே.ஆர் முன்கூட்டியே பெற்றுக்கொண்டிருந்ததால் அவரைப் பாராளுமன்றத்தால் எதுவும் செய்துவிட முடியவில்லை.

ஆனால் 1989 ஆம் ஆண்டு 12 பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் பெரும்பான்மையாகக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய முன்னாள் சனாதிபதி ஆர்.பிரேமதாச பாராளுமன்றத்தால் 1991 ஆம் ஆண்டு இறுதியில் நெருக்கடியைச் சந்தித்தார்.

அவருக்கு எதிராக 1991 ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 29 ஆம் திகதி சபாநாயகரிடம் குற்ற வியல் விசாரணை மனு சமர்ப்பிக்கப்பட்டது. சிறிலங்காவின் அரசியலமைப்பின் படி இவ்வாறு ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதென்றால் குறைந்தது 150 (அதாவது மூன்றில் இரண்டு) பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த மனுவில் கையொப்பமிட்டிருக்க வேண்டும் அல்லது குறைந்தது 112 (அதாவது அரைவாசிக்கு ஒன்று குறைவாக) பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருப்பதுடன் அந்த மனுவை ஏற்றுக்கொள்வதற்கு சபாநாயகர் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இங்கு சபாநாயகருக்கு 38 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சமனான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

1991 இல் ஆர்.பிரேமதாசவின் விரோதிகளாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த லலித் அத்துலத் முதலி, காமினி திசாநாயக்க போன்றோர் 116 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குற்றவியல் விசாரணை மனுவைக் கொண்டு வந்தனர். இதனை அப்போதைய சபாநாயகர் எம்.எச். முகம்மதுவும் ஏற்றுக் கொண்டார்.

எனினும் இதனைத் தெரிந்து கொண்ட பிரேமதாச இதற்கான விவாதத்திற்குரிய நாளை சபாநாயகர் அறிவிக்க முன்னர் சனாதிபதிக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஒரு மாத காலம் ஒத்திவைத்தார்.

இந்த ஒரு மாத காலத்திற்குள் பிரேமதாச மேற்கொண்ட பல காய் நகர்த்தல்கள் காரணமாக சபாநாயகர் பின்வாங்கி அதில் உள்ள கையொப்பங்களை உறுதிப்படுத்த முடியவில்லை அத்துடன் 116 உறுப்பினர்கள் தம்மை நேரில் சந்தித்து சனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து விட்டதால் மனுவை நிராகரிப்பதாகக் கூறிவிட்டார். உண்மையில் இந்த விவகாரத்தில் சபாநாயகர் முகம்மது பின்வாங்கி விட்டார் என்றே கூறுதல் வேண்டும்.

ஏனெனில் இந்தப் பின்வாங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னர் கூட சபாநாயகர் எம்.எச்.முகம்மது இந்த மனு மீதான விவாதம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அண்மையில் ராவய சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவன் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கையொப்பங்களை முழுமையாகப் பெறமுன்பே சபாநாயகர் பிரேரணையை ஏற்றுக்கொண்டு விட்டமை தெரிய வந்துள்ளது.

இந்தக் குற்றவியல் பிரேரணையின் மூலகர்த்தாவே சபாநாயகர்தான் என அப்போதைய எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறியது. சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சபாநாயகர் முகம்மதின் வீட்டில் வைத்தே மனுவில் கையொப்பமிட்டதாகவும் கூறப்பட்டது.

இதில் கையொப்பமிட மறுத்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரான்லி திலகரத்ன இவ் விடயத்தைப் பிரேமதாசவுக்கு அறிவித்ததையடுத்து பிரேமதாச காய்நகர்த்தலை ஆரம்பித்தார்.

அவர் வெளிப்படையாகச் செய்தவற்றை விட மறைமுகமாகச் செய்தவை அதிகம். அதாவது தமது கட்சியிலிருந்து எதிராகக் கிளர்ச்சி செய்தோரின் பாதுகாப்பை விலக்கினார். அவர்கள்; அனைவருமே பீதியிலே வாழ் நாளை ஓட்டிவந்தவர்களாயினும் அத்துலத்முதலி, காமினி போன்றோர் மிகவும் பீதியுடன் வாழ்ந்து வந்தனர்.

இதனைவிட மூலகர்த்தாவான சபாநாயகர் எம்.எச்.முகம்மதுவிற்கு சாம, பேத, தான, தண்டம் ஆகிய நான்கு வழிகளையும் கையாண்டதாகவே அப்போது செய்திகள் பரவின.

அவருக்கு 10 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதாக எதிரணியினர் குற்றம் சாட்டினர். அத்துடன் எம்.எச்.முகம்மதுவின் மகனின் மகன் (பேரன்) 24 மணி நேரத்திற்கு மேலாக காணாமற் போய் மீண்டும் கிடைத்தார் எனவும் ஒரு வதந்தி பரவியிருந்தது.

இறுதியில் எதிர்க்கட்சிகளால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டு வர மட்டுமே முடிந்தது. அதுவும் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

ஆனால் இப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்து நிறைவேற்றப்பட்டிருந்தாலும் நீதிமன்ற விசாரணைத் தீர்ப்பு சர்வசன வாக்கெடுப்பு என்ற நீண்ட செயன்முறைக்கூடாகவே சனாதிபதியொருவரைப் பதவி விலக்க முடியும்.

இந்நிலையில் மகிந்தவின் விவகாரத்திற்கு வந்தால் பிரேமதாசவின் காய் நகர்த்தல்களுக்கெல்லாம் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டவர் ரணில் விக்கிரமசிங்க. ஏறத்தாழ பிரேமதாசவின் பேச்சாளர் போலவே அவர் செயற்பட்டார். எனவே இவ்விவகாரத்திலுள்ள கடினத்தன்மை அவருக்குப்புரியும்.

இதேவேளை மறைமுகமான செயற்பாடுகளில் அதாவது ஆட்கடத்தல், மிரட்டல், பாதுகாப்பை விலக்கல் போன்ற செயற்பாடுகளில் மகிந்தவும் அவரது சகோதரர்களும் பிரேமதாசவை எத்தனையோ படி விஞ்சியவர்களாக இருப்பதும் அவருக்குத் தெரியும்.

1989 இல் சனாதிபதிப் பதவியிலிருந்து விலகியபின் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இவ்வாறு கூறினார். 'நடப்பு அரசியல் பற்றி ஒன்றும் பேசமாட்டேன். அப்படிப் பேசினால் அடுத்த நிமிடம் என்ன கதி ஏற்படும் என எனக்கே தெரியாது" என்றார்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் நீண்ட காலக்கனவாக இருந்தது இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை. 1966 ஆம் ஆண்டு அவர் கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞான மாணவர் ஒன்றியக்கூட்டத்தில் பேசும்போது இதுபற்றி முதன் முதலாகக் கூறியிருந்தார். எனினும் அப்போதிருந்த ஐ.தே.க. வின் தலைமை (டட்லி சேனநாயக்க) இதனை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது.

பின்னர் 1977 இல் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் 1978 இல் அதனைச் செயற்படுத்தினார். பின்னர் 1989 இல் பதவி பறி போனதும் அப்பதவிக்கே அஞ்சினார்.

இப்போது அவரது மருமகன் ரணில் விக்கிரமசிங்க இரண்டு முறை சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து விட்ட நிலையில் நிறைவேற்று அதிகாரத்துடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலையில் உள்ளார்.

சனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்தை விடவும் எவ்வளவு தூரம் சக்தி வாய்ந்தது என்பதும் பாராளுமன்றத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் எவ்வளவு போலித்தனமானவை என்பதும் கடந்த 29 வருடங்களாக நிரூபிக்கப்;பட்டிருக்கிறது.

இன்றும் கூட இந்த நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை நீக்கிவிட அப்பதவி கிட்டலாம் என எதிர்பார்ப்பவர்கள் எவரும் தயாராக இல்லை என்பதும் விநோதமானது தான்.

இந்நிலையில் பாராளுமன்றப் பதவியைக் கைப்பற்றவென ஜே.வி.பி.யுடன் சமரசம் செய்ய முயல்கின்றமையானது இவர்களுக்கு பலமற்ற பதவி இருப்பினும் போதுமா? என்ற கேள்வியை எழவைக்கிறது.

இவர்கள் இந்தப் பதவிகளுக்காக எவ்வளவு சாகசங்களையும் செய்யக்கூடியவர்களாகவே இருக்கின்றனர். 2001 ஆம் ஆண்டில் இப்பதவிக்காக சமாதானம் குறித்துக் கூவிய ரணில் இப்பொழுது யுத்தம் நோக்கிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்.

இன்று பொருளாதார நெருக்கடி, விலைவாசிக்கெதிராகப் போராட்டம்; நடத்துகிறோம் எனவும் யுத்தமே இவற்றுக்கெல்லாம் காரணம் எனக் கூறிக்கூக் குரலிட்ட இவர்கள் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தம்மை இனங்காட்டிக் கொள்ளவும் தயங்கவில்லை.

அதாவது சிறிலங்கா அரசியல்வாதிகளுக்கு நிரந்தரமாக எதுவித கொள்கை கோட்பாடுகளும் இல்லை. அவர்கள் அவ்வாறு கூறுவதெல்லாம் சந்தர்ப்பவாதமே என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.

நன்றி: ஈழநாதம் 01.10.07

http://www.tamilnaatham.com/articles/2007/...lan20071002.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.