Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

மார்க்சின் கம்யூனிசம், கற்பனை அல்ல! - என்.குணசேகரன்

மே 5: கார்ல் மார்க்ஸ் பிறந்ததினம்
 

spacer.png

மனித சமூக வளர்ச்சி பற்றிய காரல் மார்க்சின் பார்வை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. சமத்துவம் நிலைப்பெற்று, மனிதம் மாபெரும் வளர்ச்சி கண்டு சிகரம் தொடும் நிலையை காரல் மார்க்ஸ் சிந்தித்தார். மற்ற ஞானிகள் மேலான சமூகம் பற்றி மாபெரும் கனவுகள் கண்டனர். ஆனால், மார்க்ஸ் அறிவியல் நடைமுறையுடன் இணைத்து தனது சிந்தனைகளை பதிவு செய்தார். ஒரு தனிநபரின் சுதந்திரமான வளர்ச்சி மட்டுமல்ல; சமூக மாந்தர்கள் அனைவரின் சுதந்திரமான வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் மார்க்ஸ் எழுதினார்.சோசலிச சமூகத்தின் கோட்பாடாக  மார்க்ஸ் இதனை கருதினார்.

மார்க்ஸின் சமூக சித்திரம்

“கோதா திட்ட விமர்சனம்” நூலில் கம்யூனிஸ்ட் சமுதாயம் எனும் உயர்ந்த கட்டத்தைப் பற்றி கீழ்க்கண்ட வகையில் வரையறுத்தார் மார்க்ஸ்.

 தனிநபரை அடிமையாக்கும்  வேலைப் பிரிவினை ஒழிய வேண்டும்.

 மூளை உழைப்புக்கும், உடலுழைப்புக்குமான முரண்கள் அனைத்தும் ஒழிய வேண்டும். எந்த உழைப்பாக இருந்தாலும் அதன் உண்மையான மதிப்பின் பலன் உழைப்பவர்களுக்கு கிட்ட ேண்டும்.

உழைப்பு என்பது தனது வாழ்க்கைத் தேவைக்காக கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய, சலிப்பான ஒன்று எனும் நிலை மாறி, உழைப்பது, மனிதர்களின் முதன்மை விருப்பமாக மாற வேண்டும்.

தனி மனிதரின் பன்முக வளர்ச்சியால் உற்பத்தி சக்திகள் மாபெரும் வளர்ச்சி கண்டு, பொதுவான  செல்வம் வெள்ளமாக பெருகி வரும் நிலை ஏற்படும்.

இந்த நிலையில்தான் முதலாளித்துவ சமூக உரிமைகள் அமைத்து வைத்திருந்த குறுகிய எல்லைகளை முற்றாக கடந்து, சமூகம் மகத்தான ஒரு பதாகையைத் தாங்கி நடைபோடும். ‘ஒவ்வொருவர் சக்திக்கேற்ற வேலை; ஒவ்வொருவரின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்தும் அனைவருக்கும் கிட்டும்’ என்ற பதாகை உயரும்.  

மேற்கண்ட மார்க்சின் மகத்தான சமூகச் சித்திரம், மார்க்சின் கற்பனையில் உதித்தது அல்ல. இன்றைய முதலாளித்துவத்தில் உள்ளடங்கிய முரண்பாடுகளின் இயக்கம், அவை எங்கு சென்று முடிவடையும் என்பதைக் கண்டறிந்து, மார்க்ஸ் வந்தடைந்த அறிவியல் முடிவு தான் கம்யூனிசம்.

முதலாளித்துவம் கருணை காட்டுமா? 

முதலாளித்துவத்தை அகற்றுவது பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமை என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். முதலாளித்துவத்தின் சில குறைகளை சரி செய்தால் போதும்; அது மனிதாபிமான முதலாளித்துவமாக மாறிடும் என்று பலர் திசை திருப்ப முயற்சித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சர்வதேச நிதி நிறுவனம் உலக அளவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வை புள்ளி விவரங்களோடு விளக்கியது. ஏழை நாடுகள் முன்னேறிய நாடுகளை விட மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன என்பதை ஐ.எம்.எப் எடுத்துக்காட்டியது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று ஐ.எம்.எப் நிறுவனமும் உலக வங்கியும் “அறிவுரை”வழங்கின. இது சாத்தியமானதா? 

ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை ஒட்டச் சுரண்டி வரும் அமெரிக்காவும்,மற்ற  ஏகாதிபத்திய நாடுகளும் கருணையுடன் நடந்து கொள்வார்களா?  இது ஒரு புறமிருக்க, சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் வழங்கல் கொள்கை எப்படிப்பட்டது? நாடுகள் தங்களது நலத்திட்டங்களை குறைத்து வெட்ட வேண்டும்; பணக்காரர்களுக்கு வரியை குறைக்க வேண்டும்; சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கடும் நிபந்தனைகள் விதித்து வளரும் நாடுகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்தது இந்த நிறுவனங்கள் தான்.  முதலாளித்துவம் இரக்க குணத்தோடு நடந்து கொள்ளும் சமூக அமைப்பாக எக்காலத்திலும் இருக்க முடியாது. இதையும் அன்றே மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதியுள்ளனர். ஏங்கல்ஸ் தனது 24 வயதில் எழுதிய “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்க நிலை” என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்: “……….. ஒரு மையமான உண்மை மேலும் மேலும் தெளிவாகி வருகின்றது. தொழிலாளி வர்க்கத்தின் மோசமான நிலைமைக்கான காரணங்களை சிறிய குறைபாடுகளில் தேடுவது சரியல்ல; முதலாளித்துவ முறைதான் அடிப்படையான  காரணம்”.

மார்க்சின் கண்டுபிடிப்பு 

அன்றைய இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் வாழ்நிலையை ஆராய்ந்து மேற்கண்ட முடிவுக்கு ஏங்கல்ஸ் வருகிறார். ஏங்கல்ஸ் தொடர்கிறார்: “… ஒரு தொழிலாளி தனது உழைப்புச் சக்தியை குறிப்பிட்ட தினக்கூலித் தொகைக்கு முதலாளியிடம் விற்கின்றார். ஒரு சில மணி நேர உழைப்பில் அந்த ஊதியத்தின் மதிப்பை அவர் உற்பத்தி செய்து விடுகிறார். ஆனால் அவர் முதலாளியோடு செய்து கொண்ட ஒப்பந்தம் என்பது, மேலும் குறிப்பிட்ட மணி நேரம் வேலை செய்து தனது வேலை நாளை அவர் முடிக்க வேண்டும்.” “இவ்வாறு தொழிலாளி உழைக்கும் கூடுதல் மணி நேர உழைப்பு, உண்மையில் தொழிலாளியின் உபரி உழைப்பு. இதற்கான மதிப்பிற்கு,- அதாவது உபரி மதிப்பிற்கு,-முதலாளி எதுவும் செலவு செய்வதில்லை; எனினும் இந்த உபரி மதிப்பு அவருடைய பாக்கெ ட்டிற்கு செல்கி றது…” இதுவே முதலாளி த்துவ சுரண்டலின் அடிப்படை என்று மார்க்ஸ் கண்டுபிடித்தார். இதுதான் உற்பத்தி சாதனங்களை உடைமையாகக் கொண்ட முதலாளிகள் ஒருபுறம்; தனது உழைப்புச் சக்தியை விற்றுப் பிழைக்கும் நிலையில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான உழைப்பாளிகள் மறுபுறம் என சமூகம் பிளவுபடக் காரணம். இந்த உபரி மதிப்புக் கோட்பாடு, மார்க்சின் மகத்தான கண்டுபிடிப்பு. ஒரு சமூகத்தில் பல்வேறு மக்கள் பிரிவுகள் இருக்கலாம். பொருளுற்பத்தி மீதான கட்டுப்பாடு எந்த வர்க்கங்களிடம் உள்ளது என்பதே முக்கிய பிரச்சனை. உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டும் உடைமை வர்க்கங்களுக்கும், சுரண்டப்படும் வர்க்கங்களுக்கான முரண்பாடே சமூகத்தின் பிரதான முரண்பாடு. இதனால் எழுவதுதான் வர்க்கப் போராட்டம். மார்க்ஸ் தனது “தத்துவத்தின் வறுமை’ நூலில் தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்கிறார். இந்த மாற்றத்தோடு இணைந்ததாக தொழிலாளர்களின் சிந்தனையில் ஏற்படும் மாற்றங்களை விவாதிக்கிறார்.

ஒரே வேலைத்தளங்களில் கூடி, உழைப்பைச் செலுத்துவதால், தொழிலாளர்கள் ஒரே மாதிரியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் முதலாளிகளிடம் ஒரே மாதிரியான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, தொழிலாளர் ஒற்றுமை பலம் பெறுவதும், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் உருவாவதும் நிகழ்கின்றன. இந்த போராட்டங்களும் கூட்டான நடவடிக்கைகளும் தொழிலாளர்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துகின்றன.இந்தக் கட்டத்தில்தான் தொழிலாளர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய அரசியல் பாத்திரத்தை உணர்கின்றனர். பாட்டாளி மக்கள் வர்க்க உணர்வு பெறுவது ஏக காலத்தில் இரண்டு நிகழ்வுகளைக் கொண்டது. ஒன்று, தாங்கள் உழைப்பை செலுத்தினாலும், உற்பத்தியில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்கிற உண்மை அவர்களிடம் “அந்நியமயமாதல்” உணர்வினை ஏற்படுத்துகிறது. அதனோடு இணைந்தாக, அந்நியமயமாதலை முறியடிப்பதற்கு, முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற சிந்தனைக்கு தொழிலாளர்கள் வந்து சேருகின்றனர். இதுவே வர்க்க உணர்வு (Class consciousness). இந்த வர்க்க உணர்வு வலுப்பெறுவது சமூகப் புரட்சிக்கு அடிப்படை.  இதுவே மார்க்சின் வரலாற்று தத்துவப் பார்வை; சமூக மாற்றத்திற்கான மார்க்சின் தத்துவம்.

அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிர்ப்பு

மார்க்சின் சமூக மாற்றப் பார்வையின் மையமான கருத்தாக்கம் வர்க்கப் போராட்டம். சமூக உற்பத்தியில் வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் காரணமாக வேறுபட்ட நலன்கள் கொண்ட வர்க்கங்களுக்குள் மோதல் உருவாகிறது. இந்த வர்க்கப் பகைமையும் முரண்பாடுகளும்தான் ஒரு சமூகத்தில் சமூக பொருளாதார மாற்றங்களுக்கு இட்டுச் செல்கிறது. மனிதர்களிடையே வர்க்க வேறுபாடுகள் மட்டுமல்லாது வேறு பல வேறுபாடுகள் இருக்கலாம். இவற்றில் மோதல்களும் எழலாம். குறிப்பிட்ட மதம், சாதி, இனம், மொழி சார்ந்த பிரிவினர் இதர பிரிவினர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அதற்கு எதிராகப் போராட்டம் எழலாம். மேலாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களும் அவசியமானவை. ஆனால் இத்தகைய போராட்டங்கள் முதலாளித்துவ முறையை ஒழிக்கும் போராட்டத்துடன் இணையவில்லை என்றால் மேலாதிக்கமும் ஒடுக்குமுறையும் நிரந்தரமான முடிவுக்கு வராது. அத்துடன், வர்க்க அடிப்படையிலான ஒற்றுமையும் ஏற்படாது; சமூக மாற்றமும் நிகழ்ந்திடாது.  அனைத்து ஒடுக்குமுறைகளும் ஒழிய வேண்டுமெனப் போராடுவது மார்க்சியம்.ஆனால், ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான செயல்பாடுகள் முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கான நடைமுறையுடன் இணைந்ததாக முன்னெடுத்துச் செல்வதுதான் மார்க்சியத்தின் சிறப்பு. எனவேதான், சுரண்டப்படும் வர்க்கங்களை பொருளாதாரம்,அரசியல், சித்தாந்தம், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் திரட்டும் பணியை கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிய மூலவர்கள் வலியுறுத்துகின்றனர். இதுவே வர்க்க உணர்வை வலுப்படுத்தி புரட்சிகர மாற்றத்திற்கு வழிவகுக்கும். “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் “வர்க்கப் போராட்டம்சாரம்சத்தில் ஒரு அரசியல் போராட்டமே” என மார்க்சும், ஏங்கெல்சும் குறிப்பிடுகின்றனர்.

‘சமூக இயக்கத்தில் வர்க்கத்தின் பங்கு உள்ளது என்பது சரிதான்.. அதே நேரத்தில் மற்ற காரணிகளும் சமமாக பங்கு வகிக்கின்றன’ என்ற பாணியில் பலர் வாதிடுவதுண்டு. வர்க்கத்தின் பாத்திரத்தை அங்கீகரிப்பது அவரவர் விருப்பம் சார்ந்ததல்ல. சமூக மாற்றங்களின் அச்சாணியாக வர்க்க உறவுகளும் வர்க்கப் போராட்டங்களும் இருந்து வந்துள்ளன என்பது எதார்த்தமான வரலாற்று உண்மை. அதேபோன்று சோசலிச மாற்றம் என்ற இலட்சியத்தை நோக்கி பயணப்பட வேண்டுமெனில் வர்க்க கருத்தியல் மிக முக்கியமானதும், அடிப்படையானதும் ஆகும். சமூக மாற்றத்தில் தொழிலாளி வர்க்கத்தின் முக்கியமான பங்கினை மார்க்ஸ் வலியுறுத்துவதற்கு காரணம் என்ன? அந்த வர்க்கம் அதிக அளவில் ஒடுக்கப்பட்டும் சுரண்டலுக்கு ஆளாகியும் வருவதால் மட்டுமல்ல; தொழிலாளி வர்க்கம் மூலதனக் குவியலை வலுப்படுத்துவதில் முக்கியமான பங்கினை வகிக்கிறது. உபரி மதிப்பை ஏற்படுத்தி முதலாளிகளுக்கு மூலதனக் குவியலுக்கு வழிவகுப்பது தொழிலாளர்களின் உபரி உழைப்பு. இதனை அந்த வர்க்கம் உணர்ந்து வர்க்க உணர்வு பெறுகிறபோது அது புரட்சிகர ஆற்றல் கொண்ட வர்க்கமாக மாறுகிறது. ஆனால், தொழிலாளி வர்க்கம் மட்டுமே புரட்சியை முன்னெடுப்பது இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியமில்லை; இதர சுரண்டப்படும் வர்க்கங்களையும் அணி திரட்ட வேண்டும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம், இந்திய சமூகத்தின் வர்க்கக் கட்டமைப்பை துல்லியமாக ஆய்வு செய்கிறது. மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் வழிகாட்டிய ஆய்வுத் தடத்தில் நின்று, இந்திய வர்க்கங்களை கட்சித் திட்டம் ஆராய்ந்து நிர்ணயிப்புக்களை வரையறுத்துள்ளது. தொழிலாளி -விவசாயி வர்க்கக் கூட்டணியை மையமாகக் கொண்டு, இதர சுரண்டப்படும் வர்க்கங்களையும் திரட்டி, மக்கள் ஜனநாயக முன்னணியை கட்டியமைக்க கட்சித் திட்டம் வழிகாட்டுகிறது. வர்க்கங்களைத் திரட்டுவதே அன்றாடப் பணியாக இருக்க வேண்டும் என்பது மார்க்சின் போதனை. அதற்கு அவரது வாழ்க்கையே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அவரின் பிறந்த தினத்தில் “வர்க்கங்களை அணி திரட்டுவோம்” என்று மீண்டும் உறுதி மேற்கொள்வதே பொருத்தமானது!

 

https://theekkathir.in/News/tamilnadu/மதுரை/marx's-communism-is-not-fiction

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.