Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 MAY, 2024 | 10:19 AM
image

'முக்கால் நூற்றாண்டு போராட்டமும் எமது தேசத்தின் எதிர்காலமும்' என்ற தொனியில் முள்ளிவாய்க்காலின் 15ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சுமந்திரன் அறைகூவலொன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2009 மே மாதம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இந்த வாரம் நாம் நினைவுகூருகிறோம். யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே எந்தத் திசையிலும் தப்பியோட முடியாமல், தொடர்ச்சியாக அன்பானவர்களை இழந்தவண்ணமாக வெறுங்கையர்களாக எமது மக்கள், உணவில்லாமல், கஞ்சி மட்டும் குடித்தபடி, பாரிய நெருக்கடியிலும் துயரத்திலும் கழித்த நாட்கள் இவை. 

துப்பாக்கி, வெடிகுண்டு சத்தங்கள் மௌனித்த பின்பு, தாம் அகப்பட்டிருந்த இடத்திலிருந்து மக்கள் வெளியேறியபோது, பலர் அரச படைகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதும், மற்றவர்கள் பல விதங்களில் துன்புறுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்த உண்மை. 

குறித்த வயதெல்லைக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் அரச படைகளிடம் சரணடைய வேண்டுமென வற்புறுத்தப்பட்டு தங்கள் உறவினர்களால் அப்படியாகக் கையளிக்கப்பட்டவர்கள் இன்று வரை காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். எஞ்சியவர்கள் முட்கம்பி வேலிகளுக்குள் கைதிகளைப் போல அடைக்கப்பட்டு, ஒன்றரை வருடத்திற்கு மேல் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இத்தனை கொடூரங்களும் உலகமே பார்த்திருக்க அரங்கேற்றப்பட்டு 15 வருடங்கள் இன்று நிறைவடைகின்றன. இன்று வரை இந்த சர்வதேச குற்றங்களுக்காக ஒருவருக்கெதிராகத் தானும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஒருவரும் குற்றவாளியாக காணப்படவுமில்லை. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2014ஆம் ஆண்டு OISL என்ற முழுமையான சர்வதேச விசாரணை ஒன்றை நடாத்தி, அதன் அறிக்கையை 2015 செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையிலும் அதற்கு முன்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கொடுக்கப்பட்ட  2012 மார்ச் 31 திகதியிட்ட நிபுணர் குழுவின் அறிக்கையிலும் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பல சர்வதேச குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

2015 அக்டோபர் 1ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரச அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தில் சர்வதேச விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள், வழக்கு தொடுநர்கள் மற்றும் நீதிபதிகளினுடைய பங்கேற்புடன் நீதிமன்ற பொறிமுறையொன்றை  ஏற்படுத்துவதாக உறுதி கூறப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கா அரசு பின்னர் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டது. 

ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர் கடந்த 15 ஆண்டு காலத்தில் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலைப்பாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் சம்பந்தமாக சிந்தித்து செயலாற்றுவதற்கான பொருத்தமானதொரு தருணம் இதுவென்று நான் நினைக்கின்றேன். 

எமது அரசியல் விடுதலைக்கென்றே கால் நூற்றாண்டுக்கு கூடுதலாக ஆயுதப் போராட்டமொன்று நிகழ்த்தப்பட்டது. ஆயுத முனையில் அறம் சார்ந்த அரசியல் விடுதலையை பெற முடியாது என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாக இருந்தபோதிலும், தம் மீது மோசமான அடக்கு முறைகளையும் வன்முறையையும் இலங்கை அரசு பிரயோகித்த பின்னணியில் வேறு வழியின்றி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அன்று எடுத்த தீர்மானத்தை இன்று வேறொரு சூழ்நிலையிலிருந்து நாம் மதிப்பிடவோ, குறை கூறவோ முடியாதென்பதை தொடர்ச்சியாக கூறி வந்துள்ளேன். 

அத்தோடு, அத்தகைய ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வித சுயநல சிந்தனையும் இன்றி எமக்காக செய்த அர்ப்பணிப்புகளும் உயிர்த் தியாகங்களும் எக்காலத்திலும் எமது சமூகத்தில் மிக உயர்ந்த பங்களிப்பாக கருதப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி இருக்கிறேன்.    

ஆனால் அத்தகைய தியாகம் மிக்க ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு,  எத்தனையோ பேரிழப்புகளை சந்தித்த பின்பு, மற்றுமொரு முறை ஆயுதம் ஏந்திப் போராடுவதை இலங்கையில் வாழும் எந்தத் தமிழ் மகளும் தமிழ் மகனும் ஒரு தெரிவாக நினைத்துப் பார்ப்பதே இல்லை.

அப்படியான பின்புலத்தில் கடந்த 15 வருட காலத்தில் எங்களுடைய அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக நாம் மேற்கொண்ட அணுகுமுறைகள் வெற்றியளித்துள்ளனவா என்ற கேள்வியின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வது அத்தியாவசியமானது என்று கருதுகிறேன்.

ஒரு கணம் எமது அரசியல் உரிமைப் போராட்டத்தை ஒரு புறம் வைத்துவிட்டு இக்காலகட்டத்தில் எமது சமூக மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளை நோக்குவோமாயின், நாம் பாரிய பின்னடைவுகளை தொடர்ச்சியாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புலனாகும். இளையவர்கள் மத்தியிலே பரவலாகி இருக்கின்ற வாள்வெட்டுக்குழுக்கள் போன்ற வன்முறைக் கலாசாரமும், போதைவஸ்து பாவனையும் இதற்கான சான்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவை எமது இளைஞர், யுவதிகளை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சிகளாகும். ஆட்சியாளர்களே இவற்றை ஊக்குவிக்கிறார்கள் என்பதில் உண்மை இருக்கும்போதிலும், இவற்றைக் கட்டுப்படுத்தும் முதலாவது பொறுப்பு எமது அரசியல் மற்றும் சமூக தலைவர்களிடம் தான் இருக்கின்றது. 

வன்முறைக்கும் போதைப் பாவனைக்கும் சினிமா போன்ற வெளிசக்திகள் பெரும் செல்வாக்கை செலுத்தினாலும் கூட, அந்த தாக்கங்களை மழுங்கடிக்கின்ற விதமான செயற்பாடொன்றையும் முன்னெடுக்காதது எமது தவறேயாகும். இந்தப் பின்னடைவுகள் தொடருமாக இருந்தால், அரசியல் விடுதலை ஒன்று எமக்கு கிடைத்தாலும் கூட அதைப் பொறுப்போடு நிர்வகிக்கின்ற திறன் அற்றவர்களாக எமது இளைய சமுதாயத்தினர் மாறியிருப்பார்கள். 

எமது இளையவர்கள் கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டுத்துறைகளில் தங்களது அபரிமிதமான திறனை உள்நாட்டிலும் பிராந்தியத்திலும், சர்வதேச மட்டத்திலும் கூட அண்மைய காலங்களில் வெளிப்படுத்தியிருப்பது எமக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய விடயம். இது இளைய சமுதாயத்தின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு நாம் மூலதனங்களை செய்ய வேண்டும் என்பதை அழுத்திச் சொல்கின்றன.

இதைப் போலவே பொருளாதார ரீதியில் மிக மோசமாக நலிவடைந்திருக்கும் எமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு புலம்பெயர்ந்திருக்கின்ற எமது உறவுகளின் முயற்சிகளின் பயனாக பல செயற்றிட்டங்கள் ஆங்காங்கே செய்யப்பட்டாலும் பாரியளவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே கண்ணியமாக சுய கௌரவத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இளைஞர்கள் வாக்களித்த முறை இதனை அம்பலப்படுத்தியது. 

மேற்சொன்ன இரண்டு காரணிகளும் எமது அரசியல் உரிமைகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. மாறாக, எமது அரசியல் உரிமைகளிலிருந்து பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்தவை. எமது மக்களுக்கான விடுதலை பாதை என்பது இப்படியான முழுமையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். அப்படியானதொரு அணுகுமுறையை கடந்த 15 ஆண்டுகளாக நாம் பின்பற்ற தவறிவிட்டோம் என்பதே கசப்பான உண்மை. 

சென்ற பாராளுமன்ற காலம் 2015 - 2019 மட்டும் இதற்கு சற்று விதிவிலக்கானது. அந்த காலகட்டத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான நிலங்கள் விடுவிக்கப்பட்டதும், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டிருந்த எமது பிரதேசங்களில் அபிவிருத்திக்கும் பொருளாதார மீளெழுச்சிக்குமென முக்கியமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதை நாம் மறந்துவிடலாகாது. ஆனால் அதற்குப் பின்னர் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து மிக வேகமாக நடைபெறுவதையும் பல்வேறு அடக்குமுறைகள் எம்மீது பிரயோகிக்கப்படுவதையும் நாம் நன்கு அறிவோம். இவற்றை தடுப்பதென்பது, நாம் ஒரு தேசமாக இத்தீவிலே தொடர்ந்து வாழக்கூடிய எமது இருப்பை தக்கவைக்கின்ற, "தமிழ்த் தேசியத்தை" பாதுகாக்கின்ற பிரதானமான செயற்பாடாகும். வெற்றுக் கோஷங்களையும், போராட்ட மனநிலையை தூண்டுகின்ற பேச்சுக்களையும் நடைமுறை சாத்தியமற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டும் எமது மக்களுக்கான விடுதலைப் பயணத்தை ஒரு அங்குலம் கூட முன்நோக்கி நகர்த்த முடியாது. நாம் ஒரு தனி தேசமென்பதை உரக்கச் சொல்லுகிற அதேவேளையில் ஒரு தேசமாக வாழ்வதற்கு வேண்டிய அணுகுமுறைகளை நாம் கைவிடக்கூடாது. 

தந்தை செல்வாவின் அடிச்சுவட்டில் பயணிக்கும் நாங்கள் வன்முறையையோ அதன் வெவ்வேறு பிரதிபலிப்புக்களையோ முற்றாக தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். எமது இளைஞர் யுவதிகளினதும், போரிலே மடிந்தவர்களினதும் உயிர்த்தியாகங்கள் வீணாக போகாதிருக்க வேண்டுமேயானால் வன்முறைக்கு தூண்டாத எமது அணுகுமுறை தொடர்பாக எமது சிந்தனையிலும் பேச்சிலும் தெளிவு இருத்தல் வேண்டும். 

1957ஆம் ஆண்டு வன்முறையில் ஈடுபடத் தொடங்கியிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியினருக்கு தந்தை செல்வா கூறிய எச்சரிக்கை: "தமிழ் மக்களுக்கு நல்லது கொண்டுவரப் புறப்பட்ட நாங்கள், நாசம் கொண்டுவந்த கதையாக மாறிவிடும்" என்பது  இன்றைய சூழ்நிலைக்கும் சாலப்பொருந்தும். 

எமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக நிலைத்திருந்து எமது தன்மானத்துக்கும் சுய கெளரவத்துக்கும் ஏற்ற விதமான ஆட்சி மாற்றத்துக்கு சாத்வீக வழியில் போராடுகின்ற அதேவேளையில், தேர்தல் நேரங்களிலும் மற்ற தருணங்களிலும் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை உன்னிப்பான இராஜதந்திர நோக்கோடு நாம் கையாள வேண்டும். 

ஒரு ஜனநாயக அமைப்பிலே, எண்ணிக்கையிலே குறைவானவர்களாக இருக்கின்ற ஒரு தேசம் கைக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய அணுகுமுறை அது. நாம் வலியுறுத்துகின்ற தமிழ் தேசிய பிரச்சினை, இலங்கையின் பிரதானமான தேசிய பிரச்சினை என்பதை இலங்கையில் வாழும் மற்றைய சமூகத்தினருக்கும் நாம் பொருத்தமான முறைகளில் விளங்கப்படுத்த வேண்டும். எம்மை ஒரு தேசமாக அங்கீகரிப்பது தமக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கின்ற உண்மையை அவர்களும் உணரச்செய்தல் வேண்டும். 

எமது போராட்டம் நீதிக்கான போராட்டம்; நியாயமான அரசியல் உரிமைகளுக்கான போராட்டம். அநீதி, அநியாயம் ஒருபோதும் வென்றதில்லை. எமது போராட்டம் நீண்ட நெடியதானதாக இருந்தாலும், அற வழியில் சாத்வீக முறைகளைக் கைக்கொண்டு அதிலிருந்து அணுவளவும் பிசகாமல் போராடுவோமானால் எமக்கான நீதி கிடைத்தேயாக வேண்டும். அப்படியானதொரு தூய்மையான அறவழிப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன். எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு சேர்ந்து பயணிப்போம்!

https://www.virakesari.lk/article/183290

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.