Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"மே மாதத்தின் மத்தியில், அந்த சில நிமிடங்கள்" 
 
 
தேம்சு ஆற்றின் ஓரத்தில் ஒரு கல்லில் நான் இருந்தவண்ணம், இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் பிக் பென் (Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தின் நேரத்தை பார்த்தேன். அது மூன்று மணிக்கு இன்னும் அரை மணித்தியாலயம் என்று காட்டியது. சுமார் 100,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய லண்டனில் பாலஸ்தீனத்திற்கு தங்கள் ஆதரவைக் காட்டவும் காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சை நிறுத்தக் கோரவும் "இப்போதே போர்நிறுத்தம்" மற்றும் "காசா மீது குண்டு வீச்சை நிறுத்து" என்று எழுதப்பட்ட பலகைகளை எதிர்ப்பாளர்கள் கையில் ஏந்தியவண்ணம், பாராளுமன்ற சதுக்கத்துக்கு திரண்டு வந்துகொண்டு இருந்தனர்.  
 
எனக்கு அங்கு நடப்பதில் அக்கறையும் போதுமான அனுதாபமும் இருந்தாலும், என் மனதில் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்தது "அந்த சில நிமிடங்கள்" தான்! இரண்டாயிரத்து ஒன்பது, மே மாதம், முல்லைத்தீவு, இலங்கையில் நான் கண்ணால் பார்த்து அனுபவித்த "அந்த சில நிமிடங்கள்" தான்! 
 
இளம் தாய் ஒருவள், குண்டுத் தாக்குதலால் இறந்த தன் குழந்தையைக் கையில் ஏந்தியவண்ணம் சாலையோரம் நின்று கொண்டிருந்தாள். 
அவளைச் சுற்றி, ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் குறுக்கே சிதறிய உடல்களுக்கு இடையே, அவர்களைச் சுற்றியுள்ள சண்டையிலிருந்து தப்பிக்க, பாதுகாப்பான வழியைத் தேடிக்கொண்டு, அங்கும் இங்குமாக அலைந்து கொண்டு இருந்தனர். அந்த இளம் தாயால் இறந்த உடலைக் மேலும் கொண்டு போக முடியவில்லை, ஆனால் அதையும் விட்டுவிட அவளுக்கு மனம் இல்லை. அவள் குழந்தையைப் பிடித்துக் கொண்டு ஒரு சிலையாட்டம் அங்கு நின்று கொண்டிருந்தாள். 
 
அவள் கையில் கொல்லப்பட்ட பிஞ்சு குழந்தையை பார்க்கும் பொழுது, புறநானுறு ஒன்பது சாட்சி சொன்ன போர் ஒழுக்கம் அங்கு என்னால் காண முடியவில்லை. இன்று பல இடங்களில் போர் விதி முறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள். குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை, ஆலயங்கள், பாதுகாப்பு இல்லங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள். அதைத்தான் நான் இங்கு அவள் கையில் காண்கிறேன். 
 
"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!"
 
பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்" / "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. 
 
நான் ஒரு இளம் பொறியியலாளனாக முல்லைத்தீவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பதவி ஏற்றேன். அதன் பிறகு மெல்ல மெல்ல உள்நாட்டு போர் திவீரம் அடைந்து, இன்று அழிவின் விளிம்புக்கு போய்விட்டது. பல ஊழியர்கள் பாதுகாப்பு கருதி, வெளி மாவட்டங்களுக்கு நகர்ந்து விட்டார்கள். ஏனோ நான் அங்கேயே இருந்துவிட்டேன். நான் இளமையாக இருந்ததும், எல்லோரும் போல உடனடியாக வெளியே நகர மனம் இடம் தரவில்லை. ஆனால் திடீரென இப்ப நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இனி எவரும் வெளியே போவது முடியாத காரியமாகவும் அல்லது பாதுகாப்பற்ற ஆபத்து காரியமாகவும் இருந்தது. எனவே நான் அங்கேயே தங்கிவிட்டேன். நடப்பது நடக்கட்டும் என்று. 
 
நான் தற்செயலாக எனது துவிச்சக்கரவண்டியில் அப்பொழுது அவ்வழியால் போய்க்கொண்டு இருந்தேன், உடனடியாக துவிச்சக்கரவண்டியை ஒரு முறிந்த மரத்தின் அடியில் சாய்த்துவிட்டு அந்த இளம் தாயைப் பார்த்தேன். அவள் பிள்ளையும் கையுமாக கண்ணீருடன் சாலை ஓரத்தில் இருந்துவிட்டாள். ஷெல் குண்டுவீச்சு எந்த நேரமும் மீண்டும் வரலாம். ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே இருந்தனர், அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு அங்கு அண்மையில் இருந்த ஆலயம் ஒன்றுக்கு பாதுகாப்புக்காக விரைந்து கொண்டு இருந்தனர். அவள் தன் குழந்தையை, ஒரு நல்ல அடக்கம் செய்யாமல் அங்கிருந்து புறப்பட மனம் இல்லாமல், அதே நேரம் தூக்கிப்போகும் தைரியமும் இழந்து அங்கு நிலத்தில் இருந்துவிட்டாள்.
 
'மக்கள் என்ன தவறு செய்தார்கள்? ஏன் இப்படி கொல்கிறார்கள்?  , சர்வதேச அரசாங்கம் ஏன் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை?" நான் அப்பொழுது என் மனதில் நினைத்தேன், ஏன் நான் இன்றும் அதே கேள்வியைத்தான் இன்னும் கேட்கிறேன். அவளை அணுகி, அந்த அழகிய குழந்தையை என் கையில் ஏந்தி, அவளை ஒருவாறு சமாதானப்படுத்தி, எல்லோரும் போகும் அந்த ஆலயத்தை நோக்கி கூட்டிக்கொண்டு போனேன்.  
 
மே 2009 அங்கே குழப்பம், கொந்தளிப்பு மற்றும் மோதல்கள் நிறைந்த இடமாக, உண்மையில் பாதுகாப்பு என்று கூறக்கூடிய ஒரு இடமும் அங்கு இருக்கவில்லை. ஆலயம், பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் கூடினர். அவ்வளவுதான்! அது ஒரு அழிவுகரமான இறுதித் தாக்குதலுக்குள்ளான போர்க்களம். பீரங்கிகளின் இடைவிடாத கர்ஜனை மற்றும் புகையின் கடுமையான வாசனைக்கு மத்தியில்,நெகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அங்கு கூடியவர்கள் முகத்தில் தான் காணக்கூடியதாக இருந்தது. மற்றும் படி மக்களை தாக்கும் படைகளிடமோ, அதை வழிநடத்தும் தலைவர்களிடமோ அதைக் காணவில்லை. 
 
ஆலயத்தின் ஒரு சிறிய, பகுதியளவு இடிந்த கட்டிடத்தில், பொதுமக்கள் குழு கூடத் தொடங்கியது. இடைவிடாத சரமாரியான குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இருந்து ஒரு நம்பிக்கையில் தஞ்சம் தேடிக்கொண்டது. அவர்களில் குடும்பங்கள் மோதலால் சிதைந்தன, அவர்களின் முகங்கள் பயத்தாலும் சோர்வாலும் பொறிக்கப்பட்டன, ஆனால் அங்கு ஆண்டவனின் ஆலயத்தில் நம்பிக்கையின் சுடரைக் அவர்களின் முகத்தில் காணக்கூடியதாக இருந்தது. அந்த இளம் தாய் கூட, தன் பிள்ளையை அங்கு ஆண்டவனுக்கு முன்னால் வைத்து ஏதேதோ முணுமுணுத்தாள். அதன் பின் அங்கு கூடி இருத்த சிலரின் உதவியுடன் ஆலயத்தின் ஒரு அரச மரத்தின் கீழ், மரியாதையுடன், கண்ணீர் துளிகளுடன் அடக்கம் செய்தேன். அது அவளுக்கு ஆறுதலாகவும் இருந்தது. 
 
இந்த இடம்பெயர்ந்த ஆத்மாக்களில் மெல்லினி என்ற இளம் பெண்ணும் இருந்தாள். அவளது அகன்ற கண்கள் அவளைச் சூழ்ந்திருந்த போரால் சிதைந்த நிலப்பரப்பின் பயங்கரத்தை பிரதிபலித்ததுக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவளுக்குள் அமைதியான பலம் இருந்தது தெரிந்தது. தன் குடும்பத்தின் மங்கலான புகைப்படத்தைப் பற்றிக் கொண்டு அங்கு அவள் ஒரு மூலையில் தூணுடன் சாய்ந்துகொண்டு நின்றாள். நான் குழந்தையை அடக்கம் செய்தபின் "அந்த சில நிமிடங்களில்" தான் அவளையும் கவனித்தேன். என்றாலும் போரின் தொலைதூர ஒலிகள் நெருங்க நெருங்க, ஒரு பயங்கரமான மௌனம் அந்த ஆலய முன்றல் முழுவதும் கவ்வியது. ஒரு சாதாரண நாள் என்றால், அந்த கவலையிலும், அதை மீறி வெளிக்காட்டும் அவளின் அழகில், பெண்மையின் வனப்பில் கட்டாயம் நான் விழுந்து இருப்பேன். அப்படி ஒரு தோற்றம். என்ன நடந்ததோ, அடக்கம் செய்து ஒரு சில நிமிடங்களில், இயற்கையே எதிர்பார்த்து மூச்சு விடுவது போல துப்பாக்கிச் சூடு, ஷெல் அடிகள் நின்றது. அந்த அமைதியில், நிச்சயமற்ற நிலை மற்றும் விரக்திக்கு இடையே, அசைக்க முடியாத இரக்கத்தின் செயல் ஒன்று வெளிப்பட்டதை நான் கண்டேன். 
 
அந்த கூடத்தில், ஒரு முதியவர், நடுங்கும் கையுடன் எழுந்து நின்று, பயந்துபோன, களைத்துப்போன,  கூட்டத்தினருக்குத் தன்னிடம் இருந்த சிறிய உணவை பிரித்து வழங்கினார். துன்பங்களை எதிர்கொண்ட அவரது தன்னலமற்ற தன்மை, வேறுபட்ட உள்ளங்களுக்கு இடையே ஒற்றுமையின் மினுமினுப்பைத் தூண்டியது. மற்றவர்கள் விரைவில் இதைப் பின்பற்றினர், தங்கள் அற்ப பொருட்களைப் உடனடியாக பகிர்ந்து கொண்டனர் மற்றும் மௌனமாக இதுவரை இருந்த அவர்கள் ஆறுதல் வார்த்தைகளை ஒருவருக்கு ஒருவர் வழங்கினர், மதம் மற்றும் கலாச்சாரத்தின் தடைகளைத் தாண்டினர்.
 
அந்த விரைந்த தருணங்களில், போரின் அழிவுகளுக்கு மத்தியில், மனிதநேயம் மேலோங்கியது. அந்த இளம் தாய், மெல்லினி மற்றும் மற்றவர்களின் பார்வையில் தெரிந்த குழப்பம் மற்றும் அழிவுகளுக்கு மத்தியில், மனித உள்ளங்கள் ஓரளவு அதை சகித்துக்கொண்டடு - ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் பிணைப்புகளை அங்கு  உருவாக்கியது என்பதை என் மனம் "அந்த சில நிமிடங்கள்" அனுபவத்தில் சுவீகரித்துக் கொண்டது. ஆனால் அது தொடர்ந்ததா என்பது, இன்றைய தமிழர்களின் நிலையைக் காணும் பொழுது, கேள்விக்குறியாகவே உள்ளது?  
 
"மரணித்தவர் வணக்கத்திலும் பிரிந்து நிற்கும் 
ஒற்றுமை இல்லா தமிழர் இங்கே?  
யுத்தத்தை வெறுத்த புத்தனைப் போற்றி 
சிறுபான்மையினரை மதிக்காத அரசியல் ங்கே?"
 
"ஈன்றவன் இல்லை இணைந்தவன் இல்லை
இருந்ததும் இல்லை நிலமும் இல்லை
சிதைந்து போராடி வெற்றியும் இல்லை
புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!"
 
"கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம்
நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம்
நீதி வேண்டி சிலம்பை உடைத்தாள்
நியாயம் வேண்டி உண்மையைக் கேட்கிறோம்?"

நடந்தவை நடந்தவையே! அதை அலசுவதால் வருங்காலத்துக்கு ஒரு பாடமாக, அனுபவமாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த பாடத்தை உண்மையில் நாம் பின்பற்றுகிறோமா? இன்றும் இலங்கைத் தமிழருக்கிடையில் எத்தனை அரசியல் காட்சிகள், எத்தனைக் குழுக்கள்?  மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி விட்டது என்பதே உண்மை?

 

என் மனம் எனக்குள் பேசிக்கொண்டது. நானும் தேம்சு ஆற்றின் ஓரத்தை விட்டு மெல்ல பாராளுமன்ற சதுக்கம் நோக்கி போவதா அல்லது வீடு போவதா என்ற குழப்பத்துடன் குந்தி இருந்த கல்லில் இருந்து எலும்பினேன், பிக் பென் மணிக்கூடு மூன்று அரை எனக் காட்டியது. ஆர்ப்பாட்டக்காரர்களின் சத்தம் இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. ' நீதி வேண்டும், விசாரணை வேண்டும், சமாதானம் எங்கே?' , அதே கேள்வியைத்தான் என் மனமும் சிந்தித்தது, ஒரே ஒரு வித்தியாசமே, அது இலங்கையை நோக்கி!!


"இருஇனம் வாழும் ஒரு நாட்டில்
இருக்கையை தனதாக்கி பெரும்பான்மை அதிகாரத்தில்
இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி
இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "

"இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி
இணக்கம் கண்டு இதயம் பரிமாறி
இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு
இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! "

இரக்கமின்றி வாழும் காட்டுமிராண்டிகள் அவர்களல்ல
இந்தநாட்டின் பூர்வீககுடிகளில் அவர்களும் ஒருவர்
இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள்
இன்பமாக வாழ அவர்களை சமனாகமதி! "

"இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி
இழிவு செய்த வெட்கமற்ற மனமே
இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து
இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' "

"இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது
இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது
இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல
இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! 

நன்றி   
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
442405495_10225165832635691_5762822946507355245_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=j6IxNXldff8Q7kNvgE9aJjs&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC_7En6Knu19HZxHvSFcmMV7GqI0jd9j6aYalgIQn0TKA&oe=664806FA    421587724_10224609218800693_8576699771704107995_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jRkAb3LVoyYQ7kNvgGwCGqf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDiK4MEvDo9AOMZS2ft6d1tQBLbf1Kdp15YpVFcfVRK5g&oe=6647FD87 421586971_10224609219200703_2966278048668689435_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=HR_dxKRpBiYQ7kNvgHbZx1j&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC6WxZvvjMb8jan32WsmmigdqhYopIUfWoJ_fIQdwPjdA&oe=6647FF8C
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.