Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி 01
 
 
இனப்படுகொலை [Genocide] பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட , முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில் , பொதுவாக நடை பெறுகிறது.
 
ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது ,அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்து விடுகின்றன. இப்ப இனப்படு கொலை என்றால் என்ன என பார்ப்போம்.
 
இனப்படு கொலை என்பது ஒரு இனம் மற்ற இனத்தை ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என கொன்று குவிப்பதோ, அழிப்பதோ மட்டும் அல்ல.  அதற்கு மேலாக ஒரு இனத்தின் அடையாளமான மொழி, பண்பாடு, பரம்பரை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் , அழிப்பதும் அத்துடன் அதன் வாழ்வை, வளர்ச்சியை, வளத்தை முடக்குவதும் ஒரு இனப்படு கொலையே!
 
போர் குற்றங்கள், இனப்படுகொலைகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவை உலக சமூகத்தில் மனித வரலாறு முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. என்றாலும் அத்தகைய குற்றங்களைத் தண்டிப்பது அல்லது அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் வெளிவரத் தொடங்கின. இரண்டாவது உலகப் போரில் [1939–1945 ] ஜெர்மனியரும் ஜப்பானியரும் செய்த கொடுமைகள், குற்றங்கள் போன்றவை மக்கள் வெறுப்பை சம்பாத்தித்து அவைகளுக்கு எதிராக ஒரு பொது சீற்றம் அல்லது கொந்தளிப்பு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும்.
 
செப்டம்பர் 1, 1939-இல் துவங்கிய அந்த போர் 1945 ஆகஸ்டு பதினைந்தாம் தேதி முடிவடைந்த போது மொத்தம் ஐந்து முதல் ஏழு கோடி உயிர்களை பலி வாங்கி இருந்தது. இதில், இராணுவத்தோடு சம்பந்தப்பட்ட வர்கள் இரண்டிலிருந்து இரண்டரை கோடியாகவும் (இதில் போருக்கு பின் பிடிபட்டு தண்டிக்கப்பட்ட இராணுவ வீரர்களும் அடங்குவர்) அப்பாவி பொதுமக்கள் நான்கிலிருந்து ஐந்து கோடியாகவும் இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டது.
 
போருக்கு பின், போரினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வியாதியால் 1.3 கோடியிலிருந்து இரண்டு கோடிவரை மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இனச் சுத்திகரிப்பு என்ற பெயரில் ஜெர்மனி நடத்திய 'யூத' இனப்படு கொலைகள் மட்டும் அறுபது லட்சத்திற்கு மேல் ஆகும். இந்தப் போருக்கு காரணமான பெரும்பாலானோர்கள் போரின் முடிவுக்குள்ளாகவே கொல்லப்பட்டு விட்டார்கள். அடால்ஃப் இட்லர் (Adolf Hitler) தற்கொலை செய்துக்கொண்டான். இத்தாலிய நாட்டின் சர்வாதிகாரி பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (Benito Amilcare Andrea Mussolini) அவன் மக்களாலே கொல்லப்பட்டான். ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகிக்கு பிறகு சரணடைந்தது. போர் முடிந்து போயிற்று. இதை அடுத்து பல பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அக்டோபர் 18, 1945-இல் 'சர்வதேச இராணுவ தீர்ப்பாயம்' [INTERNATIONAL MILITARY TRIBUNAL] தொடங்கப்பட்டது. 'அமைதிக்கு எதிரான செயல்களில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குபெற்றிருப்பது', 'அமைதியை குலைக்கும் செயல்களை வடிவமைத்தல், துவக்குதல் மற்றும் வழிநடத்தல்', 'போர் குற்றங்கள்' மற்றும் 'மனித குலத்திற்கு எதிரான குற்றம் செய்தல்' ஆகியவை குற்றச் சாட்டுகளாக அங்கு முன் வைக்கப்பட்டன.
 
இன்று உலக முழுவதும் இது உருவாக்கிய இரண்டு பெரிய குற்றங்களை பரவலாக தொடர்ந்து கடை பிடிக்கப் படுகின்றன. ஒன்று 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' மற்றொன்று 'இனப்படுகொலை' ஆகும். இவை இரண்டும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மனிதகுலம் சுதந்திரத்தோடு வாழமுடியும்.
 
போர் குற்றம் எனப்படுவது போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாகும் என்பதை அதிகமாக எல்லா நாடு களும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளும்.
 
உதாரணமாக ,போர் கைதிகளை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல் அல்லது கொடுமைப் படுத்துதல் ஒரு போர் குற்றம் ஆகும்.
அது போல, எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் [act of Perfidy] ஒரு போர் குற்றம் ஆகும்.
 
மேலும் ஒரு போர்க்கால சூழலில், சித்திரைவதை, இனப்படு கொலை, பெரும் திரளான மக்களை தம் சொந்த இடங்களில் இருந்து துரத்தல், மற்றும் பல வழிகளில் அவர்களைத் துன்புறுத்துதல் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்தல் ஒரு போர் குற்றம் ஆகும்.
 
எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் என்பதற்கு இன்றைய கால கட்டத்தில், மே மாதம் , 2009 ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற "வெள்ளைக் கொடி சம்பவத்தை" ஒரு உதாரணமாக கூறலாம். அதே போல,பண்டைய காவியத்திலும் (இதிகாசம்) ஒரு சம்பவத்தை கூறலாம்.
 
உதாரணமாக, கிருஷ்ணர் பாண்டவர்களின் வெற்றியை பல தடவைகளில் நம்பிக்கை மோசம் அல்லது கௌரவர்களை வேண்டும் என்றே ஏமாற்றுதல் மூலமே பெற்றுக் கொடுத்துள்ளார். இவரின் செயல்கள் தர்மத்தின் நேரடி மீறலாக காணப் படுகின்றன. கண்ணனின் போர்த் தந்திர ஏமாற்று ஆலோசனையின் பேரில், குருச்சேத்திரப் போரில் வீழ்த்த முடியாத பீஷ்மர், துரோணர், ஜயத்திரதன், கர்ணன், சல்லியன் மற்றும் துரியோதனாதிகளை, அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் பாண்டவர் அணி வெற்றி கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.
 
உதாரணமாக, பெண்களிடமும், திருநங்கைகளிடமும் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை வீழ்த்த, சிகண்டியை [துருபதனின் மகளான சிகண்டினி என்ற திருநங்கை] முன்னிருத்தி, பின்புறத்தில் அருச்சுனன் நின்று பீஷ்மர் மீது அம்புகளை எய்யுமாறு ஆலோசனை கூறினார் கண்ணன். அதே போல, துரோணர் உயிருக்கு உயிரான தன் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணன், பதினைந்தாம் நாள் போரின் போது, போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் எனும் பொய்ச் செய்தியை தருமன் மூலம் துரோணரிடம் கூறும் படி ஆலோசனை வழங்கினான் கண்ணன். அதன் படியே தருமனும், அஸ்வத்தாமன் என்ற யாணை இறந்து விட்டது, என்ற சொல்லில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற சொற்களை அதிக ஒலியுடனும், யானை என்ற சொல்லை மிக மெலிதாக துரோணரிடம் கூறினார். அதனால், துரோணர் தனது மகன் அஸ்வத்தாமன் போரில் இறந்து விட்டான் என்று நம்பி மனமுடைந்த துரோணர், தன் கையில் இருந்த போர்க்கருவிகளை விட்டு விட்டு, போர்க்களத்தில் தேரில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்து விட்டார். அப்பொழுது துரோணரின் தலையை திருட்டத்துயும்னன் தன் வாளால் வெட்டினான்.
 
எங்கே கிருஷ்ணன்?, எங்கே தருமன்?, எங்கே தருமம்?
 
அப்படியே, கர்ணனை பல சூழ்ச்சிகளால் கொன்றான் கிருஷ்ணன்! உதாரணமாக, எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல், சேற்றில் மாட்டிக் கொண்ட தன் தேர் சக்கரங்களை தூக்கி எடுக்க கர்ணன் முயற்சித்த போது, இப்படிப்பட்ட சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது என்ற காரணத்தினால், கர்ணனை கொல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். அதன் படி தேர்ச்சக்கரம் தரையில் அழுந்தியதை, கர்ணன் மீண்டும் தூக்கி நிலைநிறுத்தும் நேரத்திற்குள், அருச்சுனன் கர்ணனின் மீது கனைகளை ஏவிக் கொன்றான்!! தன் இலக்குகளை அடைய ஒன்றுக்கு பல முறை, இப்படி கிருஷ்ணன் விதிமுறைகளை மீறியுள்ளார். மகா பாரதத்தை மேலோட்டமாக படித்தவர்களும் சரி, மதிநுட்பமாக படித்தவர்களும் சரி, கர்ணனை கொன்றது அர்ஜுனன் தான் என நினைப்பார்கள். அர்ஜுனன் என்பவர் தன் கையில் கருவியே என மகாபாரதம் முழுவதும் கிருஷ்ணர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போது தான் வதைக்கப்பட்டனர். இவை எல்லாம் பகவத் கீதையில் தர்மத்தை பாதுகாப்பதற்காக தான் அவதாரம் செய்தான், அதை ஒரு புறத்தில் தள்ளிவைக்க அல்ல என்ற கிருஷ்ணனின் கூற்றிற்கு, இது முற்றிலும் வேறுபட்டே காணப்படுகிறது. அத்துடன் வஞ்சனை மூலம் வெற்றி கொள்ளுதல், மகாபாரதத்திற்கு முன்பே பிராமண புராணங்களில் காணலாம். இங்கு ஆண்டவன் அடிக்கடி ஏமாற்றும் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி அரக்கர்களுடன் அல்லது அசுரர்களுடன் போரிட்ட கதைகளைக் காணலாம்?
 
மனிதாபிமானத்திற்கு எதிரான அல்லது மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற பதம் முதல் முதலாக 1915 இல், பெரிய பிரித்தானியா [கிரேட் பிரிட்டன்], பிரான்ஸ் மற்றும் ரஷ்யா [Great Britain, France and Russia] , துருக்கிய அரசாங்கம் [Turkish government], ஆர்மேனியர்களுக்கு [Armenians] எதிராக செய்த படுகொலையை கண்டிக்கும் பொழுது பாவிக்கப் பட்டது. போர் குற்றம் மாதிரி அல்லாமல், இது சமாதான காலத்திலும் போர் காலத்திலும் செய்ய முடியும். இந்த பதம் 1915 இல் இருந்து பாவிக்கப் பட்டாலும், உண்மையில் இரண்டாவது உலகப் போருக்கு பின் 1945 இல் தான் முதலாவது வழக்கு இந்த குற்றச் சாட்டின் கீழ் நடை பெற்றது.
 
திட்டமிட்ட ரீதியில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களைக் கொல்கின்ற செயலானது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை என்பது தனிப்பட்ட மக்களைக் கொல்வதோடு மட்டுமல்லாது, ஒரு சமுதாயத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகும். வேறுவகையில் கூறினால், தனியொரு குழுவைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதையே மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் குறிக்கின்றது. பொதுவாக இது, கொலை, முழுமையாக அழித்தொழித்தல், சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, அரசியல், சமய, அல்லது இன முறையிலான அடக்கு முறைகள் மற்றும் பிற மனிதம் அற்ற செயற்பாடுகள் போன்றவற்றை குறிக்கும்.
 
ஆகவே, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படு கொலை ஆகிய இரண்டும் வேறுபட்ட இரு வேறு எண்ணக் கருக்களாகும். அமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடியேற்றத்தில் [European Colonization of the Americas] அழித்து ஒழிக்கப் பட்ட கணக்கில் அடங்கா பெரு வாரியான உள்ளூர் குடிகள், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட பெரும் இன அழிப்பு [Holocaust], 1932- 1933 ம் ஆண்டுக் காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படு கொலை கோலதடமோர் (The Holodomor, உக்ரேனியம்), நைஜீரிய உள்நாட்டுப் போர் [Nigerian Civil War], மற்றும் கம்போடியா இனப்படுகொலை (Cambodia Genocide) ஆகியன மிகப் பெரிய முதல் ஐந்து மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என இன்று கருதப் படுபவை ஆகும்.
 
இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து - யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)]என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல் வடிவம் கொடுத்தவராவார். இனத்தை குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து இந்த சொல்லை உருவாக்கினார். ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும்.
 
அதாவது கிழே தரப்பட்டவைகளை, முழுமையாகவோ பகுதியாகவோ ஒரு தேசிய,குடிமக்களை, இனத்தை, சாதியை அல்லது ஒரு மதம் சார்ந்த குழுவை அழிக்கும் நோக்குடன் ஈடுபடுதலை குறிக்கிறது . அதாவது ஒரு குழுவின் உறுப்பினர்களை
 
 
* கொல்லுதல்,
 
*உடலிற்கு அல்லது மனதிற்கு கடும் தீங்கு ஏற்படுத்துதல் / விளைவித்தல்,
 
* வேண்டும் என்று பகுதியாகவோ முழுமையாகவோ ஒரு உடல் அழிவை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துதல்,
 
*அந்த குழுவிற்குள் இனப்பெருக்கத்தை அல்லது பிறப்புகளை தடுப்பதற்கான வழி முறைகளை சுமத்துதல்,
 
*அந்த குழுவின் சீரார்களை கட்டாயப் படுத்தி மற்ற குழுக்குள் மாற்றுதல்,
 
 
ஆகியவை இனப்படு கொலையாகும்! . இனப்படு கொலை என்ற சொல் 1944 ற்கு பின்பு வந்த படியால் அதற்கு முன் அப்படி ஒன்றும் நிகழவில்லை என்று பொருள் அல்ல . பல சாட்சிகள் எமது பண்டைய சரித்திரத்திலும் இதிகாசத்திலும் புராணத்திலும் மற்றைய சமய இலக்கியங்களிலும் காணப்படுகின்றது . ஆனால் இனப்படுகொலை என்ற சொல்லை நேரடியாக பாவிக்காமல். அவ்வளவுதான் !
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
 
பகுதி 02 தொடரும்
18301849_10209219961718884_9156249077645893026_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=44PM0GuVyWIQ7kNvgHwyMtE&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBv1EaBHEPr9U_K9xvjwyQnh_o8CrlJmdDWoRhifGeiyQ&oe=666AD4A3 18358945_10209219978879313_3740445982388601717_o.jpg?stp=dst-jpg_p261x260&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jGYIgLzcRKIQ7kNvgFQ87Qo&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAl-rNF-Ne-5ckkNYdTvTApW_GbO3F_K-hOOf0fkUV9pw&oe=666ADFB1 18301681_10209219981759385_5104028580379620160_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nyWcjiV0s50Q7kNvgGq_2UR&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDIKkitRk5EApdtE7lFUIYJi4kmL8bTpUY56FEPCm8HTg&oe=666AED6D
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி: 02
 
 
மனித சரித்திரத்தில், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப் படு கொலைகள் எவை எவை என்று பார்க்கும் பொழுது, மாயன் நாகரிகம் எம் கண் முன் வருகின்றன. கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு [Spanish] பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது. அத்துடன் நிறுத்தி விடவில்லை.
 
'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள்.
அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'.
 
வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத் தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
 
யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழு ப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார் என்பதும் குறிப் பிடத்தக்கது . இப்படி ஒன்றையே மாயாக்களுக்கு உதவி செய்யும் அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார்!
 
இச் சின்னஞ் சிறிய இலங்கை தீவு சில இனக் கலவரங்களைக் கண்டு மனித வளம், பொருளாதார வளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், இவற்றிற் கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது. அதனால் தான் 1983 ஜூலை மாதம் "கறுப்பு ஜூலை' என்று இன்னும் அழைக்கப்படுகிறது. இது 40 / 41 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 24 தொடக்கம் ஜூலை 30, 1983 வரை அரங்கேறியது. இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000 தமிழர் படுகொலை செய்யப்பட்டு முப்பது கோடி டாலர்கள் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல இலட்சம் தமிழர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பாதுகாப்புக்காக சென்றனர். நானும் என் குடும்பமும் உட்பட கப்பலில் யாழ் சென்றோம்.
 
இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது . ஏன் என்றால் லட்சக் கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார்.
 
வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக் கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப் பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற , மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? .
 
இது போலவே இந்தியாவிற்குள் 1700 கி மு,  ஆடு மாடு மேய்த்து வந்த, நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் இங்கே வாழ்ந்த பழங்குடியினரை  திட்டி , கேவலபடுத்தி, பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் என "ரோமேஷ் மஜும்தார்" தமது "பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்" என்ற புத்தாகத்தில் 22 ஆம் பக்கத்தில் கூறுகிறார் . மேலும் ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள் , அசுரர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன என Dr ராதாகுமுத முகர்ஜி Phd "இந்து நாகரீகம்" பக்கம் 69 இல் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு மாதிரி எடுத்துக்காட்டாக ஒரு பாடலைக் கிழே தருகிறோம்.
 
 
"இந்திரா! ஆந்தையைப் போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் கொல்லவும். நாயைப் போலும் கழுகைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் நசுக்கி ஒழிக்கவும்."
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22
 
 
மேலும் இதில் ஒருவர் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், மாயனும் இந்த பழங்குடியினருக்கும் மற்றும் தமிழருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக அறிஞர்கள் இப்ப சான்றுகளுடன் கூறுகிறார்கள்.  ஆகவே இந்த இரு முதன்மை இனப்படு கொலைகளைத் தாண்டித்தான் நாம் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அது மட்டும் அல்ல இக் கொலைகளை /அழிவுகளை புரிந்தோர் இருவரும் ஒரே இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மொழி குடும்பத்திற்குள் உள்ள இந்திய - ஈரானிய மொழி குடும்பத்தில் தான் பல வட இந்தியா மொழியும் உள்ளன என்பதும் கவனிக்கதக்கது.
 
மேலும் ஒரு கடைசி உதாரணமாக எமது பார்வையை மகாபாரதம் அல்லது விஸ்ணு புராணம் பக்கம் திருப்புவோம். விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என கருதப்படும் பரசுராமரை இங்கு சந்திக்கிறோம். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார்.
 
ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன் [சத்திரியன் / க்ஷத்ரியர்] ஜமதக்கினி முனிவரின் காமதேனு பசுவை கடத்தி சென்று விட்டான், இதை அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார். ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தார்கள். அங்கு பரசுராமர் இல்லாததால், அவனின் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை பலிக்கு பலி வெட்டினர். தாயின் அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அப்பொழுதே இந்தக் க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார் பரசுராமர். அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். இரத்த ஆறு ஓடியது. குருக்ஷேத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. இதை அடுத்து கொடிய கொலைக்காரனாக மாறி பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் இல்லாமல் போகும்படி இருபத் தொரு திக்விஜயம் செய்து, இருபத் தொரு தலை முறையை வேரறுத்தார் என கூறுகிறது. இவர் தனி மனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான் [mongolian king genghis khan], ஹிட்லர் [Adolf Hitler], ஸ்டாலின் [Joseph Stalin], முசோலினி [Benito Amilcare Andrea Mussolini], மாசேதுங் [Mao Zedong ] இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளை விட மிக மிக அதிகம். சத்திரியர் குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர் போலும்.
 
என்றாலும் க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பும் அந்த வம்சத்தை தழைக்கச் செய்தான் மூலகன். சூர்ய குலத்தில் பிறந்தவன் இந்த அரசன். இராமாயண ராமன் இவனது எட்டாவது தலை முறையாகும். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.
 
ஆகவே பொதுவாக விவேகமும் வீரமும் ஆற்றலும் கொண்ட ஒரு இனத்தை முழுமையாக தடை செய்யவோ அழிக்கவோ முடியாது என்பது கண்கூடு எப்படி என்றாலும் ஒரு இனப்படு கொலை நடை பெறும் போது ஒரு தற்காலிக பின்னடைவு நிகழ்கிறது. அதனால் தான் பொதுவாக எல்லோரும் அறிய விரும்புவது :
 
*உண்மையில் என்ன நடந்தது ?
*இது ஏன் நடந்தது ?
*இதற்கு யார் பொறுப்பு ?
*இந்த அட்டூழியத்திற்கு யார் யார் உடந்தையாக பின் புறத்தில் இருந்தவர்கள் ?
*நாம் யாரை குற்றம் சுமத்த வேண்டும் ?
இதனால் தான் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவரும் ,தனது திருக்குறள் 548 இல்:
 
"எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்."
 
என்று கூறுகிறார். அதாவது, நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பல வகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான் என்கிறார்.
 
இப்படியான கேள்விகளுக்கான உண்மையான, ஆக்கபூர்வமான, பக்க சார்பு அற்ற, பதில்களையே இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆகவே இந்த நேர்மையான கோரிக்கைகள் சிக்கலான ஒன்று அல்ல. மிக மிக இலகுவான ஒன்றே !!
 
*"உண்மைகளை வெளிபடுத்துவது"
*"நேரடியாகவோ மறைமுகமாவோ இதில் ஈடு பட்டவர்களை அல்லது குழுக்களை பகிரங்கமாக தண்டிப்பது"
*"இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கும் உணர்த்துவது"
 
அப்படி என்றால் இவை மேலும் தொடராமல் தடுக்கலாம். அடுத்த பரம்பரைக்கும் தொடராமல் இருக்க. அது மட்டும் அல்ல பரசுராமர் போல் பரம்பரை பரம்பரையாக அழிப்பதை நேரத்துடன் தடுக்கலாம் என்பதாலும். இன்னும் ஒரு மூலகன் வரும்வரை இருபத்தி ஒரு தலை முறைக்கு காத்திருக்க தேவை இல்லை என்பதாலும் ஆகும் .
 
 
"வாருங்கள், வந்து கை கொடுங்கள்-
இமைகள் மூடி பல நாளாச்சு
மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்-
 
வரிசையாய் வருங்கள் பல சடலங்கள்
தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்-
 
கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன
நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்-
 
நங்கை இவள் உண்மை உரைத்ததால்
முலையை சீவினான் கொடூர படையோன்-
 
வஞ்சி இவள் காமம் சுரக்காததால்
கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்-
 
அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க
வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்-
 
இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம்
முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்-
 
விசாரணை எடு- உண்மையை நிறுத்து
கூடுங்கள்,ஒன்றாய் உண்மையை உரையுங்கள்-
 
படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
முடிவுற்றது
18486131_10209272242665875_7982333387260024550_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vPm6yB6dyeYQ7kNvgFTe-Ws&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCpGrW6Upnjyb3DP4DeJvFwqayNVRkD1rFHJQkU2TQOqw&oe=666C74E5 18425523_10209272237665750_1189571409726911361_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=yuGDi9WRBjAQ7kNvgE6Klid&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAIuQlyqII-53XcLexKKRkFLIwJEjhAuuVZs7kRVUjAEQ&oe=666C5ADA
 
 
 
  • நியானி changed the title to "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.