Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
 
 
மூத்த பிரஜைகள் என்று அழைக்க ப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் மேலும் அதிக அளவு உயர உள்ளதுடன், சராசரி ஆயுட் காலமும் 75 -ஐ தாண்டுகிறது. எது எப்படியாகினும், அவர்கள் மகிழ்வாக வாழ்கிறார்களா என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது?
 
பிசிராந்தையர் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய புறநானூறு பாடல் 191 எனக்கு ஞாபகம் வருகிறது:
 
‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே"
 
“தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். “சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.” எனவே, கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான் அந்த புலவன்.
 
ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. இன்று பொதுவாக மூன்று விதமாக இந்த முதியோர்கள் வாழ்கிறார்கள். உதாரணமாக, சிலர் பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிக்கிறார்கள், சிலர் கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிக்கிறார்கள், மற்றும் சிலர் ஆணோ அல்லது பெண்ணோ ஒருவராக தனியாக வசிக்கிறார்கள். இங்கு ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப்பட்டு விடும் என ஏங்கத் தொடங்குவதும் அவர்களின் உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை அதற்குச் சற்றும் குறைந்ததல்ல முதுமையில் தனிமை!
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம். அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா?
 
"இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே"
 
இங்கே முதல் பதினொரு அடிகளில் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்விட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில் ... "பூண் சூட்டிய நுனியை யுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும், முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார்.
 
மேலும் உடம்பின் வெவ்வேறு மாற்ற நிலையை குண்டலகேசிப் பாடல் ஒன்று இப்படிக் எடுத்து உரைக்கிறது;
 
"பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் வியல்பும் இன்னே
மேல்வரும் மூப்பும் ஆகி
நாளுநாள் சாகின் றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ?"
 
அதாவது, பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. பின் குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் பிறக்கிறது. அந்த காளைப் பருவம் செத்து, காதலுக்கு உரிய இளமைப் பருவம் ஏற்படுகிறது. அதுவும் பின் மாறி முதுமை உண்டாகிறது என்கிறது. ஆனால்,பொதுவாக இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது. முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் "முதுமையில் தனிமை" மிகவும் கொடியது.
 
முதுமையில் தனிமைக்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் நேரத்துடன் ஓரளவு விபரமாக நாம் அறிவதன் மூலம் அதை இலகுவாக தடுக்கலாம். மனிதர்களுக்கு வயது போகப் போக, தனிமையில் வசிக்கும் நிலையின் வாய்ப்பும் அதிகமாக அதிகரித்து செல்கிறது. தனிமையில் வாழ்வது, அவர் சமூகத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்டார் என்பதை குறிக்காது எனினும், கட்டாயம் ஒரு நோய் தாக்க நிலைக்கு அடிகோலக் கூடிய காரணிகளில் ஒன்றாகும். தனிமைக்கான காரணங்கள் ஒருபுறம் இருக்க, அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானதும் ஆகும். இந்த முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்து விடுவதில்லை. எனவே முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொண்டால் அதை அவரால் தன்பாட்டில் தவிர்க்கவும் முடியும்.
 
பொதுவாக இவர்கள் இரண்டு விதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். முதலாவது, அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுதலும் அதன் காரணமாக, வெளியில் தனிமையில் போக முடியாததால், ஓர் இடத்தில் முடங்கிப் போதல், அதனால் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறரைச் சார்ந்திருத்தல், சமூகத் தொடர்பு குறைந்து போதல் போன்றவையாகும். மற்றது மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களால் உதாசீனப்படுவது, நிந்திக்கப்படுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுது போக்கின்மை மற்றும் வாழ்வில் ஆர்வ மின்மை போன்றவை ஏற்படுத்தும் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும். இவர்களது மிக முக்கிய தேவை என்பது அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவையாகும். ஆனால், அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளில் மிக்க கொடுமையானது அவர்கள் அனுபவிக்கும் முதுமையில் தனிமைதான். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர் முதுமையில் தனிமையில் பேச்சுத் துணை இன்றி சிலவேளை இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது சில வேளை இருப்பது, தனது சுகதுக்கங்களை மனம் விட்டுப் பேச முடியாது சிலவேளை இருப்பது, போன்ற நிலைமைகள், அவர்களை கட்டாயம் துன்பப்படுத்தும். மேலும் இவர்கள் தங்கள் பிரச்சினைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாத போது, அவற்றுக்குத் தீர்வு என எதுவும் அவர்கள் கண்ணில் படுவதும் இல்லை. நாளை நமக்கு முதுமை வரும் போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோமோ, அப்படியே இன்று நம் முன் நடமாடும் தாய் தந்தையரை, மற்றும் முதியோரை, நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை, நாம் அனைவரும் எமது மனதில் ஏற்றுக் கொண்டாலே இதற்கு விடை இலகுவாகி விடுகிறது எனலாம்.
 
பொதுவாக நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக பல மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இது கிராமப் பகுதியில் குறைவு. வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடுமையை அனுபவிக்கும் நிலையில் யார் யார் என்று பொதுவாக பார்த்தால், குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள், சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனைக்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் என நாம் வகைப்படுத்தலாம். இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் கிராமப்புறப் பகுதிகளை விட பொதுவாக, மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர். பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே பெற்றோரை முதியோர் இல்லங்களில் தள்ளுவதைப் பற்றிய செய்திகளைப் பார்த்து வருந்தியிருப்போம். செய்தியாகப் படிக்கும் போதே நமக்கு வலிக்கிறது என்றால், முதியோர் இல்லங்களில் நடைப் பிணங்களாக வாழும் வயது முதிர்ந்த பெற்றோர்களது மனம் என்ன பாடுபடும்? குறிப்பாக ஒரு வெளி நாட்டிற்கு குடிவரவாளர்களாக தமது முதுமைப் பருவத்தில் வந்தவர்கள் தம்மைக் அந்த நாட்டின் வாழ்வுச் சூழலுக்குள் பொருத்திக்கொள்வதற்கு எதிர்கொள்ளும் தடைகள் ஒரு புறம் இருக்க, புதிய நாடு, புதிய கலாசாரம், பழக்கமில்லாத காலநிலை, பரிச்சயம் இல்லாத மொழி என்கிற சூழலில் தெரிந்தவர்கள் அதிகம் இல்லாமல் தமது பிள்ளைகளை நம்பியே இங்குவரும் பெற்றோர், தமது பிள்ளைகளால் தனித்து விடப்படும் போது மிகப்பெரும் மனநெருக்கடிக்கு உள்ளாகின்றார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒரு புறம் நோய்களும் இன்னொரு புறம் ஆதரவற்ற தனிமையும் மனதை வாட்டி முதியவர்களைப் பாடாய்படுத்திவிடும். சமீபத்தில் அமெரிக்காவின் அறிவியல் நிறுவனம் முதியவர்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘சமூகத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், தனிமையின் வேதனை மனதை வாட்டுவதால் பெரும்பாலான முதியவர்கள் பிரச்சினைக்கு ஆளாவதாகவும், இந்த மனரீதியான பிரச்சினையால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதாகவும்’ அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. எனவே முதியோர்களை வாட்டும் தனிமையை விரட்டியடிக்கும் வகையில் முதியவர்களுக்கு உணவு பரிமாறுவது, இசையைச் கற்றுக்கொடுப்பது, ஃபேஸ்புக்கை [Facebook] இயக்கச் சொல்லிக் கொடுப்பது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒன்றுகூடல் நிகழ்வுகள், முதியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் முதியவர்களை, தனிமையை மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என நான் நம்புகிறேன்.
 
இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை, பல்கலைக் கழகம், இடையில் கொண்டாட்டங்கள், விடுமுறைகள் ... கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையருக்கு ஒரு பாது காப்பாக முதியோர் இல்லம் சேர்ப்பவர்கள் இன்று பலர். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்... ஒருக்கா எம்மை நினைக்க... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அது தவிக்கிறது. மேலும் வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோர்களை தனிமை வாட்டுகிறது. மனம் விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
322298871_1214007925905368_1652367895267081190_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=2WWO7JATvp8Q7kNvgHqVgZs&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCLV9X1bGN8fXCSmFN0sV9FpowKmSnnGateQspRlHodrA&oe=66A46497  322122907_723816319399423_2162111451480558864_n.jpg?stp=dst-jpg_p320x320&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=gqNBlacMGngQ7kNvgEK-9Mz&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCMtZQvs3Vp_nEDSDwh7HNabsl16WUMD4tReVSvw5IOjA&oe=66A49341  
 
 
 
 
  • Like 2


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.