Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உலகத் தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 ஆகஸ்ட் 2024

ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகத் தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகத் தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம், இந்த வாரத்தின் கருப்பொருள் ‘Closing the Gap - Support for All’. தாய்ப் பால் ஊட்டுதல் மற்றும் குழந்தையின் நலன் குறித்து உலகம் முழுக்க அனைவரும் அறிய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ஆகஸ்ட் 1 - 7 தேதி வரையில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில், தாய்ப்பால் ஊட்டும் போது தாய்மார்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிவை, பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள், தவிர்க்க வேண்டிய பழக்கங்கள், தாய்மார்கள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன ரீதியான சவால்கள் ஆகியவை குறித்து மகப்பேறு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

தாய்ப்பாலின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை பற்றி பேசிய மகப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி, பிறந்த முதல் நாளில் இருந்து 6 மாதம் வரை ஒரு குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் தாய்ப்பாலில் இருந்தே கிடைக்கிறது. இந்த காலகட்டத்தில் தாய்ப்பால் ஊட்டுதல் அத்தியாவசியம், என்கிறார்

6 முதல் 12 மாதங்களில் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தில் பாதியளவு தாய்ப்பாலில் இருக்கிறது. இச்சமயத்தில் தான் குழந்தைக்கு திட உணவுகள் அளிப்பது துவங்கப்படுகிறது.

1 வயதில் இருந்து 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தில் மூன்றில் ஒரு பங்கு தாய்ப்பாலில் இருந்து கிடைக்கிறது. சிலர், மார்பக அளவைப் பொறுத்து தாய்ப்பால் சுரப்பது வேறுபடும் என நினைக்கின்றனர். ஆனால், மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்பதற்கும் சம்மந்தம் இல்லை என கூறினார் மகப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி.

உலகத் தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாய்ப்பாலின் 3 நிலைகள்

குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில் 3 நிலைகள் உள்ளன. அவை:

  • கொலஸ்ட்ரம் (Colostrum) பால்: குழந்தை பிறந்த 2 - 5 நாட்களில் சுரப்பது
  • டிரான்சிஷனல் (Transitional) பால்: 5வது நாள் முதல் 2வது வாரம் வரை சுரப்பது
  • முதிர்ச்சியடைந்த (Mature) பால்: 2வது வாரத்திற்கு பிறகு சுரப்பது

கொலஸ்ட்ரம் பாலுக்கும், முதிர்ச்சியடைந்த பாலுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், சாதாரண தாய்ப்பாலுடன் ஒப்பிடுகையில் கொலஸ்ட்ரம் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இதில் கொழுப்பு, நியூக்ளியோசைடுகள் (Nucleosides), இம்யூனோகுளோபுலின் ஏ (immunoglobulin A - IgA) போன்ற பிறந்த குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்திகள் உள்ளன. இவை குழந்தைக்கு எந்த தொற்றும் ஏற்படாமல் காக்க உதவுகின்றன.

தாய்ப்பாலில் 80% நீர், 12% திடங்கள் (கார்போஹைட்ரேட் 2%, புரதம் 2% உட்பட) மற்றும் குழந்தைக்குத் தேவையான அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களும், தேவையான சதவீதத்தில், குழந்தைக்குச் செரிமானம் ஆகக்கூடிய அளவில் இருக்கின்றன.

எனவே, பிறந்த குழந்தைக்கு எக்ஸ்க்ளூஸிவ் ஃபீடிங் (Exclusive Feeding) எனும் காலகட்டமான முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதும், வேறு எந்த உணவும் தேவையில்லை.

சரியான முறையில் குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தில் தாய்ப்பால் அளிக்கப்படும் பட்சத்தில் நீர் போன்ற பிற ஆகாரங்கள் அளிக்க அவசியம் இருக்காது, என கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி.

குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

  • குழந்தை பிறந்த முதல் 6 மாதம் தாய்ப் பால் அளிப்பது அவசியம்
  • ஒரு வயது வரை தாய்ப் பால் அளிப்பது ஆரோக்கியமானது
  • 2 வயது வரை தாய்ப் பால் அளிப்பது மிகவும் ஆரோக்கியமானது

வேலைக்குச் செல்லும் பெண்கள், நேரமின்மை காரணத்தால் தாய்ப்பாலை பாட்டிலில் சேமித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, குழந்தைக்குப் பசிக்கும் போது ஊட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இது தவறில்லை, ஆனால் இந்த முறையினால் ஊட்டச்சத்தின் தரம் சிறிதளவு குறைய வாய்ப்புள்ளது.

ஆகவே, தாய்மார்கள், குழந்தைக்கு ஒரு வயது நிறைவடையும் வரை முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.

(குறிப்பு: தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் இருந்து அப்படியே குளிர்ச்சியான நிலையில் ஊட்டுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. அறை வெப்பநிலையில், சற்று வெதுவெதுப்பான தன்மையில் ஊட்ட வேண்டும்)

 
உலகத் தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாய்ப்பால் சுரப்பு குறைவது ஏன்?

மனச்சோர்வு காரணமாக தாய்ப்பால் சுரப்பது குறைய வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, மார்பகத் திசு குறைந்து இருத்தல், ஹார்மோன் சமநிலையின்மை, அல்லது தாயின் உடல் எடை மிகவும் குறைவாக, உதாரணமாக 35 கிலோவுக்கு கீழ் இருக்கும் பட்சத்தில் தாய்ப்பால் சுரப்பதில் குறைபாடு ஏற்படலாம்.

மற்றும் தைராய்டு, ஹார்மோனல் பிரச்னைகள் போன்றவற்றின் காரணமாகவும் தாய்ப்பால் குறைவாகச் சுரக்க வாய்ப்பு உள்ளது.

இதுபோக, குழந்தை பிறந்த நேரத்தில் தாய்க்கு மஞ்சள் காமாலை அல்லது வேறு ஏதேனும் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். ஆனால் இதற்கான சாத்தியங்கள் வெறும் 1% தான்.

தாய்ப்பால் ஊட்டும் போது, தாய் மற்றும் குழந்தை இடையே 'ஸ்கின் டூ ஸ்கின் பாண்டிங்' எனப்படும் பிணைப்பு உருவாகிறது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இந்த நேரத்தில் குழந்தை தாயிடம் பாதுகாப்பை உணர்கிறது. இது குழந்தையின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு பெருமளவு உதவும்.

தாய்ப்பால்
படக்குறிப்பு,மகப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி

தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

தாய்ப்பால் ஊட்டும் நிலையில் இருந்து, குழந்தையை எப்படிப் பிடித்திருக்க வேண்டும், தாய்ப்பால் ஊட்டிய பிறகு என்ன செய்ய வேண்டும், என்பவை பற்றி மகேப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி பகிர்ந்துகொண்டார்.

  • அமர்ந்த நிலையில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
  • குழந்தையை சரியான முறையில் கையில் பிடித்திருக்க வேண்டும்
  • படுத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்க கூடாது. இது குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்
  • தாய்ப்பால் கொடுத்தவுடன், குழந்தையைத் தூக்கித் தோளில் வைத்து தட்டிக் கொடுத்து ஏப்பம் வரச்செய்ய வேண்டும்

முதல் 6 மாதம் தாய்க்கு மிகவும் கடினமான காலம். சில குழந்தைகள் இரவு முழுக்க தூங்காமல் இருக்கும் பட்சத்தில், தாய்க்கு இரவு, பகல் என நாள் முழுதும் தூக்கமின்மை ஏற்படலாம்.

நல்ல தூக்கம் என்பது தாய்க்கான அடிப்படைத் தேவை. தூக்கமின்மை ஏற்படும் போது அவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மனச்சோர்வு போன்ற பிரச்னை ஏற்படலாம். இந்த காலக்கட்டத்தில் கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும், அரவணைப்பும் தாய்க்கு மிகவும் அவசியம்.

பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்

தாய்ப்பால் ஊட்டும் காலகட்டத்தில் தாய்மார் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

  • நடைப்பயிற்சி போன்ற எளிமையான உடற்பயிற்சிகளை ஒரு நாளுக்கு 30 நிமிடங்களாவது செய்ய வேண்டும்
  • நேரம் கிடைக்கும் போது உறங்க வேண்டும், ஓய்வெடுப்பது அவசியம்
  • குழந்தை தூங்கும் நேரத்தில் தாய் ஓய்வெடுக்க வேண்டும். வேறு வேலைகளில் ஈடுபட வேண்டாம்
  • Postpartum depression, Postpartum psychosis ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்
  • பிடித்த விஷயங்களை செய்யுங்கள்
  • இரண்டு மார்புகளிலும் தாய்ப் பால் ஊட்ட வேண்டும்

புகை மற்றும் மது பழக்கம் ஏற்படுத்தும் அபாயங்கள்

சில தாய்மார்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவது போன்ற தீய பழக்கங்கள் கொண்டிருக்கலாம். இந்தப் பழக்கம் இருப்பவர்கள் தாய்ப்பால் ஊட்டும் போது, குழந்தைக்கு எம்மாதிரியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது? அவர்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து மகப்பேறு மருத்துவர் அமிர்தா ஹரி கூறும் முக்கியமான விஷயங்கள்.

  • பிரசவ காலத்தில் இருந்து தாய்ப்பால் ஊட்டும் காலம் வரை புகைப் பழக்கத்தை முற்றிலும் கைவிடுவது நல்லது
  • புகைப் பழக்கம் இருந்தாலும் தாய்ப்பால் அளிக்கலாம். ஆனால், இதன் மூலம் குழந்தைக்கு வயிற்று வலி, மார்பு தொற்று, சுவாச கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன
  • புகைப்பழக்கம் உள்ளவர்கள், புகைப்பிடித்த பிறகு குறைந்தபட்சம் 2 மணிநேர இடைவேளை விட்டு தாய்ப்பால் ஊட்டலாம்
  • கர்ப்ப காலம் முதல் தாய்ப்பால் ஊட்டும் காலம் வரை மது பழக்கத்தையும் தவிர்க்க வேண்டியது அவசியம்
  • தாயின் மதுப்பழக்கம் தாய்ப்பாலில் தாக்கம் ஏற்படுத்தும் போது, குழந்தைக்கு உறக்கம் மற்றும் வளர்ச்சியில் பிரச்னை உண்டாகலாம்
  • மதுப்பழக்கம் கைவிட முடியாமல் தவிப்பவர்கள், குறைந்தபட்சம் 2 முதல் 3 மணிநேர இடைவெளிக்கு பிறகு தாய்ப் பால் ஊட்டும் வழக்கத்தை பின்பற்றலாம்

ஆனால், முடிந்த வரை புகை மற்றும் மது பழக்கத்தை முற்றிலும் கைவிடுவது சிறந்தது என பரிந்துரைக்கிறார் மகப்பேறு மருத்துவர்.

 
ஊட்டச்சத்து நிபுணர் பிரதீபா
படக்குறிப்பு,ஊட்டச்சத்து நிபுணர் பிரதீபா

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் என்ன சாப்பிட வேண்டும்?

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் எத்தகைய உணவுமுறை பின்பற்ற வேண்டும், தாய்ப்பால் திறன் மற்றும் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கப் பின்பற்ற வேண்டியவை குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பிரதீபா-விடம் பிபிசி தமிழ் பேசியது

"தேவையான அளவு புரதம் மற்றும் கொழுப்பு உணவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு என்கையில், அது தாவரங்களில் இருந்து எடுத்துக்கொள்வதாக இருக்க வேண்டும். அதை தான் நாம் கொழுப்பு என்று கூறுகிறோம். அசைவ உணவுகளின் மூலம் எடுத்துக் கொள்வது கொலஸ்ட்ரால்," என்கிறார் அவர்.

"அடுத்ததாக, மிக முக்கியமாக, குறைந்தபட்சம் ஒரு நாளில் 3 முறையாவது போதுமான அளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் 90% தாவரம் சார்ந்த உணவின் மூலமான புரதமும், 10% அசைவ உணவு மூலமான புரதமும் எடுத்துக்கொள்ளலாம்," என்கிறார்.

"இதைத் தவிர, பொதுவான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கிய சமச்சீரான உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். எல்லா வைட்டமின் மற்றும் கனிமச்சத்து நிறைந்த உணவுமுறை பின்பற்ற வேண்டும். நிறைய காய்கறிகள், பழங்கள் மற்றும் போதுமான அளவு பருப்பு உணவுகள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை தான் அடிப்படை தேவை," என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரதீபா.

தாய்ப்பாலின் ஊட்டச்சத்தும், குழந்தையின் ஆரோக்கியமும்

தாய்ப்பாலில் குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் கச்சிதமாக நிறைந்துள்ளது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரதீபா.

மேலும் இதுபற்றி அவர் கூறுகையில், ‘குழந்தைகளுக்கு குறுகிய அல்லது நீண்டகால நோய்த்தொற்று மற்றும் உடல்நலப் பிரச்னைக்கள் ஏற்படாமல் தடுக்கவும் தாய்ப்பால் மிகவும் அவசியம்.’

கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களிடமும் உணவு சார்ந்த மூடநம்பிக்கை பின்பற்றப்படுவது வழக்கத்தில் இருக்கின்றன. உதாரணமாக கீரைகள், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகை உணவுகள் சாப்பிடக் கூடாது, சூடாக உணவருந்த கூடாது என்ற கருதிகின்றனர். ஆனால், இவை அனைத்துமே மூடநம்பிக்கை தான்.

தாய்ப்பால் தரம் மற்றும் அடர்த்தியை அதிகரிக்க முக்கியானவற்றுள் கொழுப்பு முதலிடம் வகிக்கிறது. எனவே, போதுமான அளவு கொழுப்பு, புரதம் மற்றும் திரவ உணவுகள் சாப்பிட வேண்டியது அவசியம். இதை முறையாகப் பின்பற்றினாலே தாய்ப்பாலின் தரம் அதிகரிக்கும்.

தாய்ப் பால் சுரப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகள்

தாய்ப்பால் போதுமான அளவு சுரக்க மிகவும் முக்கியமானது தாய்ப் பால் ஊட்டும் பெண்ணின் மனநிலை. நீங்கள் லேக்ட்டோகாகஸ் (lactogogues) உணவுகள் எடுப்பது, மகப்பேறு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள், பவுடர்கள் எடுப்பது எல்லாமே இரண்டாம்பட்சம் தான். தாய்ப்பால் ஊட்டும் பெண்ணின் மனநிலையை பொறுத்து தான் ஹார்மோன் சுரக்கும், ஹார்மோன் சுரக்கும் அளவை பொறுத்து தான் தாய்ப்பால் சுரக்கும் அளவு மாறுபடும். எனவே, தாயின் மனநிலை என்பது மிக முக்கியம்.

இதற்கு அடுத்ததாக, நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், மற்றும் தாய்ப்பால் தரம் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை முறையாக பின்பற்றினாலே போதுமானது.

சில சமயம் போதுமான அளவு உணவு சாப்பிடாத தாய்மார்கள் கூட, குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் ஊட்டுவதை நாங்கள் அனுபவத்தில் பார்த்துள்ளோம்.

தாய்ப் பால் சுரப்பதற்கும் உணவுமுறைக்கும் சம்மந்தம் இல்லை. ஆனால், தாய்ப்பாலின் தரத்திற்கும் உணவுக்கும் இடையே சம்மந்தம் இருக்கிறது, என கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரதீபா.

மகப்பேறு மருத்துவர் நித்யா
படக்குறிப்பு,மகப்பேறு மருத்துவர் நித்யா

பொதுவாக நிலவும் பயம் மற்றும் மூடநம்பிக்கைகள்

முதல் முறை குழந்தை பெற்ற தாய்மார்கள் இடையே இருக்கும் மூடநம்பிக்கைகள் மற்றும் பிரச்னைகள் பற்றி பேசிய போது, தனது அனுபவத்தில் எதிர்கொண்ட இரண்டு முக்கிய நிகழ்வுகள் குறித்து மகப்பேறு மருத்துவர் நித்யா அவர்கள் பகிர்ந்த கொண்டதை கீழே காணலாம்.

முதல் நிகழ்வு: தாய்ப்பால் ஊட்டினாலே மார்பகம் தளர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இருந்தார் ஒரு தாய். குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். ஆரம்பத்தில் தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை என்று அந்த தாய் சாக்கு கூறினாலும், தொடர்ந்து ஆலோசனை அமர்வுகளில் கலந்துகொண்ட பிறகு, மெல்ல மெல்ல உண்மையை கூற துவங்கினார்.

அப்போது தான், ஆன்லைனில் படித்து தவறான புரிதலால் தாய்ப்பால் ஊட்டினால் மார்பகம் தளர்ந்துவிடும் என்ற அச்சத்தின் பேரில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட தவிர்த்ததை ஒப்புக்கொண்டார்.

பிறகு ஆலோசனை அமர்வுகளின் மூலம் தாய்ப் பால் ஊட்டுதலின் அவசியம், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள், இதனால் மார்பகம் தளர்ந்துவிடாது, உண்மையில் மார்பகம் தளர்வதற்கு வயதும், மரபணுவும் தான் காரணம் என அறிவுறுத்தினேன், என்கிறார் மகப்பேறு மருத்துவர் நித்யா.

 
தாய்ப்பால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரப்பது பிரச்னையா?

இரண்டாவது நிகழ்வு: "அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்கிறது என்ற பிரச்னையுடன் ஒரு பெண்மணி என்னை அணுகினார். தாய்ப்பால் ஊட்டிய உடனே மீண்டும் தாய்ப் பால் வேகமாகச் சுரந்துவிடும் மற்றும் தாய்ப்பால் வேகமாக வெளிவந்தது என கூறினார்.

"இரண்டாவது குழந்தை பிறந்த போது, தாய்ப்பால் சுரப்பதை நிறுத்திவிடுமாறும், முதல் குழந்தை பிறந்த போது மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாக அந்த தாய் கூறினார்.

"அவருக்கு, தாய்ப்பால் ஊட்டுதலில் உள்ள சில நுட்பங்களை எடுத்துரைத்து, குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் ஊட்ட வேண்டும், தாய்ப்பால் ஊட்டும் எந்த நிலையில் குழந்தையை தூக்கி வைத்திருக்க வேண்டும், தாய்ப்பால் வேகத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து அறிவுறுத்தினேன்.’

"ஏனெனில், குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம். எனவே, பிரச்னைகள் சந்திக்கும் தாய்மார்களுக்கு உத்திரவாதம் அளித்து, இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டியது முக்கியம்," என்கிறார் மகப்பேறு மருத்துவர் நித்யா.

மேலும், "உளவியல் அல்லது உணர்ச்சி ரீதியாக அவர்களுக்கு தாய்ப்பால் ஊட்டும் காலகட்டத்தில் ஆதரவு தேவைப்படும்," என்று குறிப்பிட்டார்.

தாய்ப்பால் ஊட்டும் போது எதிர்கொண்ட பிரச்னை பற்றி பிபிசி-யிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத வேலைக்குச் செல்லும் புதிய தாய் ஒருவர், மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு, அலுவலக நேரத்தில் குழந்தையைப் பற்றி நினைக்கும் போது தாய்ப் பால் கசிவு ஏற்பட்ட நிகழ்வு குறித்து பகிர்ந்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த மகப்பேறு மருத்துவர் நித்யா, "தாய்ப்பால் அதிகமாகச் சுரப்பது, கசிவது மிகவும் இயற்கையானது மற்றும் பொதுவானது. இதற்காக யாரும் வெட்கப்பட தேவையில்லை. இதனால், உடைகளில் கறைபடிவது, அல்லது மோசமான வாசம் வெளிப்படுவது ஏற்படலாம். இதை தவிர்க்க கூடுதல் உள்ளாடை அல்லது நர்சிங் பிரா (Nursing Bra) போன்றவற்றை பயன்படுத்தலாம்," என்கிறார்.

"சமூகத்தில் இதை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. யாராவது தவறாக பேசிவிடுவார்களோ என்று அச்சப்பட கூடாது," என்று கூறினார்.

மேலும், "தனிப்பட்ட ஒவ்வொரு தாய்க்கும் உடல் ரீதியான அல்லது மன ரீதியான மருத்துவ உதவிகள் வேறுபடலாம். எனவே, உதவி தேவைப்படும் பட்சத்தில் முறையான மருத்துவர் உடன் கலந்தாலோசித்து பயன்பெறுங்கள்," என்று கூறினார் மகப்பேறு மருத்துவர் நித்யா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.