Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தந்தையின் மதுப்பழக்கம் சிசுவை கருவிலேயே பாதிக்கும் ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அமண்டா ருகேரி
  • பதவி, பிபிசி
  • 11 ஆகஸ்ட் 2024, 05:56 GMT
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

பொதுவாக ஒரு பெண் கருவுறும்போது அவர் என்ன சாப்பிடுகிறார், அருந்துகிறார் என்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவது வழக்கம். எனவே கருவில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருந்தாலும் கவனிக்கப்படுவதில்லை.

ஆனால் ஒரு புதிய ஆராய்ச்சி, தந்தையின் மதுப்பழக்கமும் கருவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்னும் கருத்தை முன் வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

கருவுற்றிருக்கும் பெண் வாரம் ஒருமுறை மது அருந்தினாலும், அது குழந்தையின் மூளை வளர்ச்சி, அறிவாற்றல் செயல்பாடு, நடத்தை மற்றும் முக வடிவத்தைப் பாதிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. மேலும், பல ஆண்டுகளாக, பொது சுகாதார அதிகாரிகள், கர்ப்ப காலத்தில் பாதுகாப்பான அளவில் ஆல்கஹால் அருந்தலாம் என்னும் கூற்று தவறானது என்று பிரசாரம் செய்து வருகின்றனர். எனவே கர்ப்பமாக இருக்கும்போது பெண்கள் மது அருந்த வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கர்ப்ப காலத்தில் மது அருந்துவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்து என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், அதிக குடிப்பழக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்த அளவு மது உட்கொள்வது அபாயத்தைக் குறைக்குமா என்ற ரீதியில் சில கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கர்ப்பிணிப் பெண் மது அருந்துவதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் சாத்தியமான பிரச்னைகளில் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள், குறிப்பிட்ட முக அம்சங்களில் மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அவை மது அருந்துவதால் கருவில் ஏற்படும் கோளாறுடன் (foetal alcohol spectrum disorders - FASD) தொடர்புடையவை. அதே நேரம் நடத்தை, அறிவாற்றல் மற்றும் கற்றல் சிக்கல்களும் இதில் அடக்கம். எனவே FASD பிரச்னையின் கீழ் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தந்தையின் மதுப்பழக்கம் கண்டு கொள்ளப்படவில்லையா?

தாய் மது அருந்துவதால் குழந்தைக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றி சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், FASD பிரச்னைக்குப் பங்களிக்கும் மற்றொரு சாத்தியமான காரணி பெரும்பாலும் கவனிக்கப்படாமல் உள்ளது: `தந்தையின் மதுப்பழக்கம்’

ஆம், கருவில் இருக்கும் குழந்தையின் தந்தையுடைய குடிப்பழக்கம் பற்றிப் பெரிதாக யாரும் கண்டுகொள்வது இல்லை.

கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய ஆராய்ச்சி "பெண்களை மையமாகக் கொண்டது. தாய்வழிப் பிரச்னைகளை மையமாகக் கொண்டுள்ளது. உண்மையில் நாம் ஆண்கள் தரப்பில் கருவை பாதிக்கும் சாத்தியமான பிரச்னைகளை பற்றி இன்னும் அதிக ஆய்வுகளை நடத்தவில்லை” என்று டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் உடலியல் நிபுணர் மைக்கேல் கோல்டிங் கூறுகிறார்.

இருப்பினும் கோல்டிங் போன்ற ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக குழந்தையின் ஆரோக்கியத்தில் தந்தையின் பங்கை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

"பல ஆண்டுகளாகப் பெண்கள் பலர், 'கர்ப்ப காலத்தில் நான் ஒருபோதும் குடித்ததில்லை, ஆனால் என் குழந்தைக்கு மது அருந்துவதால் கருவில் ஏற்படும் கோளாறு (FAS) உள்ளது - மேலும் எனது கணவர் நாள்பட்ட மதுப்பழக்கம் கொண்டவர்’ என்று கூறும் கதைகளை நாங்கள் கேட்டு வருகிறோம்," என்று அவர் கூறுகிறார். ஆனால் இதுபோன்ற கதைகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படவில்லை.

இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சி, ஒரு சாத்தியத்தை முன்வைக்கிறது: "கணவருக்கு மதுப் பழக்கம் இருந்தது என்று சொன்ன இந்தத் தாய்மார்களின் கூற்றுக்கும் குழந்தைகளின் உடல்நலனுக்கும் சம்பந்தம் இருக்கலாம்."

 

சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை

தந்தையின் மதுப்பழக்கம் கருவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? : எச்சரிக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம்,SERENITY STRULL/GETTY IMAGES/BBC

படக்குறிப்பு,சமீபத்திய ஆய்வுகளில், மதுப்பழக்கம் இருக்கும் தந்தைகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்குப் பல்வேறு மோசமான உடல்நல பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்தரிப்பதற்கு முன் தந்தையின் மதுப்பழக்கம் அவரது சந்ததியினரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் அசாத்தியமாகத் தோன்றலாம்.

ஆனால் சமீபத்திய ஆய்வுகள், மதுப்பழக்கம் இருக்கும் தந்தைகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்குப் பல்வேறு மோசமான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, சீனாவில் 2021இல் 5 லட்சத்துக்கும் அதிகமான தம்பதிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் கருத்தரிப்பதற்கு முன் கணவருக்குக் குடிப்பழக்கம் இருந்ததால், பிறக்கும் குழந்தைக்கு மேல்வாய்ப் பிளவு (cleft palate), பிறவி இதய நோய், செரிமான மண்டலத்தில் கோளாறுகள் போன்ற பிறப்புக் குறைபாடுகளின் ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கருவை சுமக்கும் தாய் கர்ப்ப காலத்தில் மது அருந்தவில்லை என்றாலும் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.

சீனாவின் மற்றொரு மக்கள் தொகை ஆய்வில், பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள 5,000 குழந்தைகள், குறைபாடு இல்லாத 5,000 குழந்தைகளுடன் ஒப்பிடப்பட்டனர்.

ஒட்டுமொத்த ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. குடிப்பழக்கம் இல்லாத தந்தையை ஒப்பிடுகையில், மனைவி கருத்தரிப்பதற்கு முன் மூன்று மாதங்களில் கணவர் ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர்களுக்கு மேல் மது அருந்தி இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பிறவியிலேயே இதயக் கோளாறு ஏற்படும் அபாயம் தோராயமாக மூன்று மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.

தந்தையின் மதுப்பழக்கம் கருவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? : எச்சரிக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம்,SERENITY STRULL/GETTY IMAGES/BBC

படக்குறிப்பு,தந்தைவழி குடிப்பழக்கம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் சிக்கல்களுடன் தொடர்புடையது

பிறப்புக் குறைபாடுகளின் ஒட்டுமொத்த ஆபத்து இன்னும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 2021ஆம் ஆண்டு சீனாவில் பல்வேறு பிறப்புக் குறைபாடுகள் பற்றிய ஆய்வில், எடுத்துக்காட்டாக, தீவிர பிரச்னையான மேல்வாய்ப் பிளவு (cleft palate) கொண்ட 164,151 குழந்தைகளில் வெறும் 105 குழந்தைகளின் தந்தைகளுக்கு குடிப்பழக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

அதே நேரம் மதுப்பழக்கம் இல்லாத தந்தைகளை ஒப்பிடுகையில், மதுப்பழக்கம் இருக்கும் தந்தைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மேல்வாய்ப் பிளவு பிரச்னை ஏற்படும் அபாயம் 1.5 மடங்கு அதிகம்.

"எங்கள் ஆய்வு முடிவுகளின்படி, 31.0 சதவிகிதம் தந்தையின் குடிப் பழக்கம் பிறப்புக் குறைபாடுகள் தொடர்பான வாய்ப்பை கணிசமாக அதிகரித்திருப்பதால், எதிர்கால தந்தைகள் தங்கள் மது உட்கொள்ளலைக் குறைக்க அறிவுறுத்தப்பட வேண்டும்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

 

தந்தைவழி குடிப்பழக்கத்தின் தாக்கம் பற்றி ஆராய்வதில் என்ன சிக்கல்?

தந்தையின் மதுப்பழக்கம் கருவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? : எச்சரிக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம்,SERENITY STRULL/GETTY IMAGES/BBC

படக்குறிப்பு,தந்தையின் மதுப்பழக்கம் மட்டும்தான் இந்தப் பிரச்னைகளுக்குப் பங்களித்ததா அல்லது அதுவும் ஒரு காரணமாக இருந்ததா என்பதைத் தீர்மானிப்பது சவாலானது.

இதற்கிடையில், ஜூலை 2024இல், ஓர் ஆய்வில் மனைவி கருத்தரிப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் ஆண் மது அருந்தினால், கருவின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டது.

இருப்பினும், தந்தையின் மதுப்பழக்கம் மட்டும்தான் இந்தப் பிரச்னைகளுக்குப் பங்களித்ததா அல்லது அதுவும் ஒரு காரணமாக இருந்ததா என்பதைத் தீர்மானிப்பது சவாலானது. தந்தையின் புகைப்பழக்கம் போன்ற பிற பிரச்னைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனாலும், சாத்தியமான ஒவ்வொரு காரணத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வது சிரமம்."

"மனித ஆய்வுகள் மிகவும் குழப்பமானவை - ஒவ்வோர் ஆய்விலும் குழப்பமான காரணிகள் நிறைய உள்ளன" என்கிறார் கோல்டிங்.

"ஒவ்வொரு தனிநபரின் உணவுமுறை, உடற்பயிற்சி என கணக்கில் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன" என்கிறார் அவர்.

ஆல்கஹால் பயன்பாடு மற்றும் கர்ப்பம் என்று வரும்போது, அறிவியல் ஆய்வின் தங்கத் தரமான (gold standard), சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையை (randomised controlled trial RCT) நடத்துவது சாத்தியமில்லை.

ஆய்வுக்காகக் கருத்தரிப்பதற்கு முன் சில தந்தையர்களிடம் குடிக்கச் சொல்வது நெறிமுறையாக இருக்காது. அது அவர்களின் குழந்தைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே விலங்குகளுக்கு அத்தகைய ஆர்சிடி சோதனையை நடத்தலாம், குறிப்பாக எலிகள்.

எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு

அதைத்தான் கோல்டிங் செய்தார். முதலில், மனிதர்களில் மது அருந்துதலால் ஏற்படும் கோளாறுடன் (FASD) தொடர்புடைய சிறிய கண்கள் மற்றும் சிறிய தலை அளவு போன்ற பிரச்னைகளுடன் இணைக்கப்பட்ட உடற்கூறியல் குறைபாடுகளை அடையாளம் காண அவரது குழு ஒரு எலியின் மாதிரியைப் பயன்படுத்தியது.

பின்னர் அவர்கள் எலிகளை குழுக்களாகப் பிரித்தனர், அவற்றில் ஒரு குழுவுக்கு கர்ப்பமாக இருக்கும் பெண் எலிகளுக்கு மது வழங்கப்பட்டது; அடுத்ததாக பெண் எலிகள் கருத்தரிப்பதற்கு முன்பு தந்தை எலிகளுக்கு மது வழங்கப்பட்டது. அதன் பின்னர் பெண், ஆண் எலிகளுக்கு மது வழங்கப்பட்டது. அந்தக் குழுக்களின் சந்ததிகளின் அம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவர்கள் தெளிவான முடிவுகளைக் கண்டறிந்தனர்.

ஒரு தாய் எலி கர்ப்ப காலத்தில் மது அருந்தினால், அதன் குட்டிகளிடம் மது அருந்துதலால் ஏற்படும் கோளாறுகள் இருக்கும் சில உடலியல் அறிகுறிகள் இருந்தன. ஆனால் ஆண், பெண் எலிகள் மது அருந்திய குழுவில் பிறந்த குட்டிகளுக்கு மண்டையோடு-முக அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் சில மாற்றங்கள் மோசமாக இருந்தது.

தந்தை எலிகளுக்கு மது வழங்கப்பட்ட குழுவில், அதன் குட்டிகளுக்கு தாடை, பற்கள் இடைவெளி, கண் அளவு மற்றும் கண்களின் இடைவெளி ஆகியவற்றில் சில அசாதாரணத் தோற்றங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இவை மனிதர்களில் தோன்றும் மது அருந்துதலால் ஏற்படும் கோளாறுடன் ஒத்து போயின. இதில் அதிர்ச்சி தரும் முடிவுகள் என்னவெனில் மதுக் கொடுக்கப்பட்ட பெண் எலிகள் பிரசவித்த குட்டிகளைவிட, மது வழங்கப்பட்ட ஆண் எலிகளின் துணைகள் பிரசவித்த குட்டிகள் பல உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டிருந்தன. அவை FASDஇன் அறிகுறிகளோடு ஒத்துப்போனது.

 

அதிர்ச்சி தரும் முடிவுகள்

தந்தையின் மதுப்பழக்கம் சிசுவை கருவிலேயே பாதிக்கும் ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆய்வு முடிவுகளைப் பார்த்து கோல்டிங் அதிர்ச்சியடைந்தார். "எனது மாணவர்களை மீண்டும் இதே ஆய்வை செய்யச் சொன்னேன்," என்று சிரிப்புடன் கூறினார்.

ஒவ்வொரு முறை அவர்கள் ஆய்வை மீண்டும் செய்யும்போதும் அதே முடிவுகளைப் பெற்றனர். ஜூலை 2024இல், அவரது குழு மேலும் இரண்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டது, இது குட்டிகளின் தந்தை எலிகளின் வழியே ஏற்படும் மதுவின் விளைவுகளை அடிக்கோடிட்டுக் காட்டியது.

பெற்றோர் இருவருமே மது அருந்திய எலிகள் குழுவில் பிறந்த குட்டிகளின் மூளை மற்றும் கல்லீரலில் செல்லுலார் முதுமை அதிகரிப்பதற்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பதை ஓர் ஆய்வு வெளிப்படுத்தியது. பெற்றோர் இருவருமே மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் எனில் விளைவுகள் அதிகமாக இருக்கும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.

இது மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளைப் போலவே சில நுண்ணறிவை வழங்கலாம். இது மது அருந்துதலால் ஏற்படும் கோளாறுடன் (FASD) இருக்கும் நபர்கள் மற்றவர்களைவிட 42% குறைவான ஆயுட்காலம் கொண்டவர்கள் என்கிறது ஆய்வு. மேலும் அவர்கள் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

கூடுதலாக கோல்டிங்கின் குழு, எலியின் முக அமைப்பு அதன் தந்தை உட்கொண்ட மதுவின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது என்பதையும் கண்டறிந்தது. "மதுவின் அளவு அதிகமாகும்போது, குழந்தைகளில் மோசமான விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பதே இதன்மூலம் நாம் தெரிந்து கொண்ட தகவல்" என்று அவர் கூறுகிறார்.

 
தந்தையின் மதுப்பழக்கம் சிசுவை கருவிலேயே பாதிக்கும் ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோல்டிங்கின் ஆராய்ச்சிப்படி, தந்தையின் மது அருந்தும் பழக்கம் அவரது விந்தணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, எலிகளில் கருவின் வளர்ச்சியைப் பாதிக்கும். நீண்ட கால மது அருந்தும் பழக்கம் விந்தணுவில் உள்ள மரபுவழி ஆர்என்ஏ-களின் விகிதத்தைப் பாதிக்கிறது என்பதை அவரும் அவரது குழுவும் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்களை பொறுத்தவரையில், தந்தை ஆல்கஹால் உட்கொள்வதால் அவரின் குழந்தைக்கு ஏற்படும் எபிஜெனெடிக் தாக்கங்கள் (epigenetic effects) பற்றிய ஆராய்ச்சி இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது.

மனிதர்கள் மற்றும் விலங்குகள் இரண்டிலும் மரபணுப் பொருட்களில் (genetic material) புகைப் பிடித்தலின் தாக்கம் இருப்பதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, புகைப் பிடிக்கும் அப்பாக்களின் குழந்தைகளுக்கு பிறப்புக் குறைபாடுகள், லுகேமியா மற்றும் கூடுதல் உடல் கொழுப்பு ஆகிய பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். இது எபிஜெனெடிக் செயல்முறைகளின் விளைவாகவும் இருக்கலாம்.

குழந்தையின் ஆரோக்கியத்தில் ஆணின் குடிப்பழக்கம் எவ்வளவு பங்கு வகிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற போதிலும், பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் கரு வளர்ச்சியில் தாயின் மதுப்பழக்கம், தந்தைகளின் மதுப் பழக்கத்தைவிடப் பெரிய பங்கு வகிப்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

"கருவுற்ற பெண்ணின் ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் நஞ்சுக்கொடியின் வழியாக நேரடியாக கருவுக்குள் செலுத்தப்படுகிறது, எனவே இது வளர்ச்சியில் மிகவும் நேரடியான விளைவுகளை ஏற்படுத்துகிறது" என்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தின் குழந்தை மற்றும் இளம்பருவ சுகாதாரப் பேராசிரியரும் குழந்தை மருத்துவருமான எலிசபெத் எலியட் கூறுகிறார்.

அவர் நீண்ட காலமாக கருவில் மது அருந்துதலால் ஏற்படும் கோளாறுகள் (FASD) பற்றிய ஆராய்ச்சியாளராக இருந்து வருகிறார் மற்றும் FASDஇன் சமீபத்திய கல்வி மதிப்பாய்வின் மூத்த இணை ஆசிரியராக உள்ளார்.

"இது முகத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மூளைப் பகுதியை பாதிக்கிறது. மேலும் உறுப்பு அமைப்புகள், நுரையீரல், இதயம், காதுகள், கண்கள் மற்றும் பலவற்றின் வளர்ச்சியைப் பாதிக்கிறது."

 

பெற்றோர்களின் குடிப்பழக்கத்தால் மரபியல் பிரச்னைகள் வருமா?

தந்தையின் மதுப்பழக்கம் சிசுவை கருவிலேயே பாதிக்கும் ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் மனிதர்களுக்கு நிச்சயமாக முழுமையாகப் பொருந்தாது. எலிகளின் சோதனை மாதிரிகள் மனித செயல்முறைகளின் அடிப்படையில் என்ன நடக்கிறது என்பது பற்றிய சில யோசனைகளை மட்டுமே நமக்கு வழங்கக்கூடும். ஆனால் நிச்சயமாக என்ன நடக்கும் என்பதை அவை அர்த்தப்படுத்துவதில்லை.

மனிதர்களில் தந்தையின் மது அருந்தும் பழக்கம் பிறக்கும் குழந்தையை எப்படி பாதிக்கும் என்று நிச்சயத்தோடு தீர்மானிக்கும் முன் அதிக ஆராய்ச்சி தேவை.

இருப்பினும், ஒரு தந்தையின் குடிப்பழக்கம் கருவின் ஆரோக்கியத்தில் வகிக்கக்கூடிய பங்கை முற்றிலுமாகப் புறக்கணிக்கக் கூடாது என்று எலியட் மற்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பெண்கள் மீது சுமத்தப்படும் சுமை

ஆராய்ச்சிகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. ஆனாலும் பொது சுகாதார அமைப்புகள் இந்த விவகாரத்தில் தந்தையாகப் போகும் ஆணின் மதுப்பழக்கம் தீங்கு விளைவிக்கும் என்று பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும். நான் சொல்வது, தந்தையின் மதுப்பழக்கம் தீங்கு விளைவிக்கும் என்பதால் மட்டுமல்ல, கர்ப்ப காலத்தில் ஒரு பெண் குடிப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அவரது கணவரும் குடிப்பதுதான். எனவே இருவரும் குடிப்பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது" என்று அவர் கூறுகிறார்.

இதுவரை நடந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், குழந்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிடும் தம்பதியினரில் ஆண் எவ்வளவு மது அருந்துவது "பாதுகாப்பானது" என்பதற்கான தரவு நம்மிடம் இல்லை.

ஆனால் கோல்டிங், அவரது பங்கிற்குச் சொல்வதாக இருந்தால், "எப்போதாவது மிகவும் அரிதாக, மிகவும் குறைவாக மது அருந்துவது” பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது” என்று நம்புகிறார். குறிப்பாக ஒரு தந்தை தனது குடிப்பழக்கத்தைக் குறைத்துக்கொண்டால், உடற்பயிற்சி செய்தல் மற்றும் நன்றாகச் சாப்பிடுவது போன்றவற்றைப் பின்பற்றினால், அவரது சந்ததியினரில் ஆரோக்கிய விளைவுகளை மேம்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "என் மகன்களாக இருந்தால், குடிப்பதை முழுவதுமாக நிறுத்தச் சொல்வேன்" என்று கூறுகிறார். தந்தைவழி குடிப்பழக்கத்தின் சரியான தாக்கம் இன்னும் விளக்கப்படவில்லை என்றாலும், ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறார்கள்.

"பெண்கள் மீது மட்டும் பெரிய சுமை சுமத்தப்படுகிறது. ஆனால் கருவின் வளர்ச்சிக்கு ஆணின் ஆரோக்கியமும் முக்கியம். குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இரு தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது" என்கிறார் கோல்டிங்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.