Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"சைவ சித்தாந்தம்" [ஒரு விளக்கம் ] &“எரிச்சலை ஊட்டுகிறது” [ஒரு கவிதை]
 
 
சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப்"சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக, முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப் பட்டது என்று கூறியுள்ளார். என்றாலும் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டள விலேயே என்று கருதப்படுகின்றது.
 
நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன ? உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன ?ஒருவரால் கட்டுப் படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன ? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க, வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது.
 
மேலும் பழந்தமிழ்ப் பேரிலக்கணம், தொல்காப்பியம் தமிழ் தெய்வங்களுக்கு நிலப்பாகுபாடு காட்டுகிறது. மாயோன் [திருமால்], சேயோன் [முருகன்], வேந்தன் [இந்திரன்], வருணன், கொற்றவை ஆகிய தெய்வங்களை குறிப்பிடுகிறது.
 
ஆரம்பத்தில் முருகன் உருவமில்லாத மலை கடவுளாக இருந்ததுடன் அவரை ஆவியாகவே / சத்தியாகவே வழி பட்டார்கள். உதாரணமாக குலக்குழுக்களின் பூசாரியாகவும் மந்திரவாதியாகவும் கடமையாற்றும் வேலன் என்ற ஒருவன், பேயோ அணங்கோ தெய்வமோ ஒருவரில் ஆவேசிக்கும்போது, அங்கு வந்து வேலேந்தி வெறியாட்டு ஆடி அதை ஓட்டுகிறான். அவன் உடலில் முருகு என்னும் தெய்வம் ஆவியாக சன்னதமாகி குலங்களுக்கு நற்செய்தி சொல்கிறது என சங்கப்பாடல் வர்ணிக்கிறது.
 
பின் மரத்திலும் கல்லிலும், இறுதியாக மனித வடிவத்திலும் வழிபட்டார்கள். சிந்துவெளி நாகரிகத்தில், குறிப்பாக ஹரப்பா, மொகெஞ்சதாரோ நகரங்களில் இவர் 4000-5000 வருடங்களுக்கு முன்பே "ஆமுவான்" என்ற மரக் கடவுளாக வழிபடப்பட்டுள்ளார். எனினும் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல் காப்பியத்தில் காணமுடியவில்லை. எனினும் சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச் சங்க இலக்கிக்கியங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.
 
எப்படியாயினும் 4000-5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, சிந்து-சரஸ்வதி நாகரிகத்தின் [ஹரப்பா, மொகெஞ்சதாரோ] சுவடுகளாக நமக்குக் கிடைக்கும் அகழ்வுத் தடயங்களில் ஒன்றான தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு ஆகும் என்று இன்று கருதப்படுகிறது. எனினும் காலப்போக்கில், ஆரியக் கலப்புக்குப் பின்னர், கொற்றவை, முருகன், சிவன், திருமால் முதலான திராவிட தெய்வங்கள் புதிய உருவம் பெற்று விட்டது.
 
முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்!
 
திருமால்→ விஷ்ணு ஆனான்!
 
சிவன்→ ருத்திரன் ஆனான்!
 
கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்!
 
உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள்வாங்கப்பட்டது. உறவு முறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது.
 
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர்.
 
பல வகைப்பாடான கடவுள் தன்மையை [இறைமையை] புராண இலக்கியங்களில் ஒருவர் எதிர்கொள்ள / சந்திக்க நேர்ந்தாலும்,தேவாரங்களை மிக நுணுக்கமாக படிக்கும் போது, அவை அதற்கு எதிர் மாறானதே உண்மை என சுட்டிக் காட்டும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள் .
 
மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!" என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்? என கேள்வி கேட்கிறார்.
 
சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று.`குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும்.
 
சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை / இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக் கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர்,
 
‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார்.
 
எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது. சைவ சிந்தாந்தம் தந்த திருமூலர்
 
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் சமஸ்கிரதம் செய்யுமாறே" என்று இன்று கூறுவரோ?!
 
யாம் அறியோம் பரா பரமே!!
 
இனி எனக்கு எரிச்சல் ஊட்டியதை கவிதை வடிவில் கிழே தருகிறேன்
 
 
"எரிச்சலை ஊட்டுகிறது ........."
 
 
"எனக்கு மேல்- ஒரு சக்தி
உண்டு -அதை நம்புகிறேன்
மணக்கும் வாசனையில்- ஒரு கவர்ச்சி
உண்டு -அதை நம்புகிறேன்
உனக்கு மேல்- ஒரு மோகம்
உண்டு -அதை நம்புகிறேன்
பிணக்கும் பிரச்சனைகளுக்கு- ஒரு தீர்வு
உண்டு -அதை நம்புகிறேன்"
 
"நந்தியை விலத்தி- ஒரு அருள்
காட்டியவனை-எனக்கு புரியவில்லை
மந்தியின் துணைக்காக- ஒரு வாலியை
கொன்றவனை-எனக்கு புரியவில்லை
அந்தியில் வாடும்- ஒரு மலரை
மாட்டியவளை -எனக்கு புரியவில்லை
இந்திரலோககத்தில் இருந்து- ஒரு கலகம்
மூட்டியவனை -எனக்கு புரியவில்லை?"
 
"வருணத்தை காப்பற்ற- ஒரு பக்தனை
நீ அழைக்காதது -எரிச்சலை ஊட்டுகிறது
கருணைக்கு அகலிகை- ஒரு சீதைக்கு
நீ தீக்குளிப்பு -எரிச்சலை ஊட்டுகிறது
ஒருவனுக்கு ஒருத்தி- ஒரு பஞ்சபாண்டவருக்கும்
நீ ஒருத்தி-எரிச்சலை ஊட்டுகிறது
எருமையில் ஏறி- ஒரு சாவித்திரியை
நீ கலக்கியது -எரிச்சலை ஊட்டுகிறது!"
 
 
(கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்)
322262001_817018002929137_4586492266978967271_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=1RTSTL495toQ7kNvgHyqwsG&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=A4jox52jIiQWzjDHKbOzaFJ&oh=00_AYBkDX8xmPHppQPLDupoSrr4fA-9zCmbZUZf0Vjs8In7-Q&oe=67044227 322072674_720437936089508_4290328617790474316_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=nEYoWRCbTUIQ7kNvgHkozL_&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=A4jox52jIiQWzjDHKbOzaFJ&oh=00_AYBGLymEhVxgZIkvowE_qBhRF802xpd2gzQJ-mKrDSuf4g&oe=670449C6 322117618_6015060005180751_248101211702937117_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=uwlP3yEM0aoQ7kNvgFVT9f2&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=A4jox52jIiQWzjDHKbOzaFJ&oh=00_AYDlrafF_1bqaSHEIwCdqyJ0_l5UmInMJwz318AMZ-MUAA&oe=67042BD2
 


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.